Wednesday, July 22, 2015

Jayaraman Raghunathan

பஹ்ரைன் ஏர்போர்ட்டிலிருத்து கிளம்பி ரன்வேக்கு விமானம் ஊர்ந்து வரும்போது கூட நம்மாட்கள் சிலருக்கு தண்ணி தாகம் எடுக்கும்... பணிப்பெண் பாவம்.. அவங்கவங்க சீட்ல உட்காருங்க... விமானம் மேலே பறக்க ஆரம்பிச்சவுடன எழுந்திருக்கலாம்னு சொல்லியும் சிலர் டாய்லெட் பக்கம் போவதும், பட்டனை அழுத்தி குடிக்க தண்ணி வேணுமென கேட்பதும்..
எங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்ட அந்த ஃபிலிப்பினோ மற்றும் பல்கேரிய பணிப்பெண்கள் இருவரும் படு சூட்டிகை. பொறுமையாக எல்லோரையும் கேட்டு பணிவிடை செய்தார்கள். என்னைச்சுற்றிலும் வெறும் ஆந்திராக்காரர்கள். எனக்கு பின்னாலிருந்து ஒரு பெண்மணி முன்னால் பகுதியிலிருந்த தன் சகோதரரை 'ஒ! பாபு..சீட்டு தொருக்கிந்தா... கூஸ்குன்னாவா?' என ராகமாக கேட்க, முன் பகுதியிலிருந்து ஏக காலத்தில் மூன்று பாபுக்கள் 'சிக்கிந்தி... நேனு இக்கடே' என பாலகிருஷ்ணா மாதிரி கத்தினார்கள்.
விமானம் இன்னும் ரன்வே நோக்கி போய்க்கொண்டிருக்க, நான் கைப்பேசியை ஆஃப் செய்யும்போது மனைவி Usharani Sridharஇடமிருந்து போன். 'போர்டிங் அயிந்தி... தரவாத்த போன் சேஸ்தானு' என நான் பதில் சொன்னதும், பக்கத்தில் 'சார்! தெலுகு ஒஸ்துந்தா? மீரு தெலுகு வாளா?' என ஒருவர் வாஞ்சையுடன் கேட்க, மற்றொரு பாபு 'நேனு நலகொண்டா.. மீரு சித்தூரா?' என விஜாரிக்க, 'ஐயோ..நேனு சித்தூருமில்ல புத்தூருமில்ல.. திருச்சி தென்னூரு' என கத்த வேண்டும்போலிருந்தது..
சற்று நேரத்திற்கு முன் 'என் பெயர் ஆமிர்.. நான் தான் இன்றைய ஃப்லைட் க்ரூவின் மேலாளர்.. விமானம் சில நிமிடங்களில் பறக்க இருக்கிறது' என அரபி மற்றும் ஆங்கிலத்தில் விளம்பிய அவர் டொக். டொக்கென மைக்கை மறுபடியும் தட்டி.. நாம் இப்போ ரன்வே வந்துவிட்டோம்.. ஆனால் இஞ்சினில் ஏதோ பழுது.. திரும்ப ஷெட்டுக்கு போகிறோம் என சொல்லும்போது பாதி பாபுக்கள் 'கத்தி' படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக ஒன்னறை மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்ப திடீரென குருமா வாசனை.. சாப்பாட்டுக்கச்சேரி ஆரம்பமானது. மணி இரவு 12(இந்திய நேரப்படி 2.30). நல்ல பசி .. ஏஷியன் ஹிண்டு விஜிடேரியன் மீல் என சொல்லி கொஞ்சூன்டு சோற்றுக்கு எக்கச்சக்கமான பட்டானி பனீர் மசாலா.. இரண்டே கவளத்தில் சாப்பிடும் சாப்பாட்டை பத்து முறை ஸ்பூனால் சாப்பிட்டு, ஒரு டேட் பிஸ்கட், சிக்பீஸ் சாலட்.. ஓரளவு வயிறு நிரம்பிவிட்டமாதிரி இருந்தபோது விஜய் வரிசையாக தன் சகாக்களுடன் ஏதோ குழாய்க்குள் உட்கார்ந்திருந்தார்..அந்தப்பக்கம் தம்பி ராமையா யாரிடமோ அழுது கொண்டிருந்தார்.. கை கால் குடைச்சலுடன் தூங்கிப்போனேன்..
காலை 7.30 க்கு இளையராஜா பாடல் ஒலிக்க ஃபாஸ்ட் ட்ராக் டாக்சிக்காரர் தி.நகர் உஸ்மான் ரோடு தாண்டி முதலாம் பாரதி தெருவில் பெரியவன் பிரஷாந்த் தங்கியிருக்கும் ஃப்ளாட் முன் வண்டியை நிறுத்தினார். ஃப்ளாட்டுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை.. நண்பர் Tiruchendurai Ramamurthy Sankarஅவர்களின் மனைவி Kalpana Sankar தான்.
ஒரு மணி நேர தூக்கத்திற்குப்பின் 10.30க்கு மயிலை மாடவீதி கற்பகாம்பா மெஸ்ஸுக்கு பெரியவன் கூட்டிப்போனபோது பாதி ஐட்டம் காலி. எண்ணெய் இல்லா வெ.உத்தப்பம் சாப்பிடும்போது ஒரு கணவன் மனைவி ஜோடி எதிரே அமர்ந்தார்கள். ஆஹா... ரொம்ப பரிச்சயமான முகமா இருக்கேயென பார்த்தால் நம் முகநூல் நண்பர் Subasree Mohan. சீனாவில் குடியிருந்தவர்கள். அவர் ஒரு எழுத்தாளர். ஆகஸ்ட் மாதம் இருக்கும் எனது சீன பயணத்தைப்பற்றி அவரிடம் சொன்னதும் நிறைய தகவல்கள் கொடுத்தார். சீனா பற்றிய புத்தகம் ( 'சைனா.. அண்ணன் தேசம்' என்ற தலைப்பாம்) தான் வெளியிட்டிருப்பதாகவும், ஆனந்த விகடன் அலுவலகத்தில் கிடைப்பதாகவும் சொன்னார்.
அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நண்பர் Jayaraman Raghunathan தன் மனைவி Latha Raghu வுடன் நுழைந்தார். ஆஹா... என்ன அருமையான நாள் இன்று! சென்ற வாரம் தான் 3 நாள் பஹ்ரைன் வந்து செமினார் உரை, பத்திரிக்கைகளில் போட்டோ என கலக்கிய JRஐ மறுபடியும் சந்திக்கிறேன். எனது படத்தை ஓவியமாக வரைந்து JR மூலம் கொடுத்தனுப்பிய லதா அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.
கையலம்பிவிட்டு வந்த சுபஶ்ரீ அவர்களும் எங்களுடன் கணவரோடு சேர்ந்து கொள்ள சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்த இனிய காலை வேளைக்கு இறைவனுக்கும் முகநூல் 'மார்க்'குக்கும் நன்றிகள் பல. விடை பெற்றுக்கொண்டோம்.
ஒரு சின்ன ஏமாற்றம். லேட்டானதால தோசை தான் இருக்கு.. மத்ததெல்லாம் தீர்ந்து போச்சென என்னிடம் சொல்லிவிட்டு, JR இலையில் மட்டும் வழுக்கியபடி சூடா ரவா கிச்சடி எப்படி விழுந்து?

No comments:

Post a Comment