Wednesday, July 22, 2015

மார்ட்டின் ஜெரோம்

பெயர் மார்ட்டின் ஜெரோம். திருச்சி அருகே குலமாணிக்கம் சொந்த ஊர். சட்டென கோபம் வந்த கையோடு கன்னங்குழி விழ சிரிக்கவும் செய்வார்.
80களில் திருச்சி மன்னார்புரம் பவானி லாட்ஜில் தங்கிக்கொண்டு ICWA படித்துக்கொண்டிருந்தார் மார்ட்டின். அவரது அப்பா குலமாணிக்கத்தில் நிலபுலன்கள் வைத்துக்கொண்டு மாதாமாதம் பணம் அனுப்ப, இவர் திருச்சியில் சொகுசாக படித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பாக்யராஜ் கண்ணாடி மற்றும் தலைமுடி ஸ்டைல்.
ஆருயிர் நண்பன் கணபதி Ganapathi Subramanian தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தினான். 'ஶ்ரீதர்..நம்ம ரூமுக்கு வந்தீங்கன்னா நாம சேந்து படிக்கலாமே' என அவர் கேட்க கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்ய முடிவு செய்தோம்.
ஒருநாள் சைக்கிள் காரியரில் கனமான புத்தகங்கள் எடுத்துக்கொண்டு அவரது லாட்ஜ் ரூமுக்கு போனேன். 'ஶ்ரீதர்.. எதையுமே ஒழுங்கா ப்ளான் பண்ணி செய்யனும்.. இல்லன்னா ஒன்னும் செய்யக்கூடாது.. புரிஞ்சுதா?' என அவர் முதல் நாள் கேட்டதும் நான் 'ஆஹா..வடிவேலு மாதிரி வில்லங்கம் புடிச்சவர் மாதிரீல்ல இருக்காரு' என இவரைப்பார்த்தேன்.( 80களில் வடிவேலுவெல்லாம் இல்லீங்க..அத இப்ப யோசிக்கிறேன்) 'சொல்லுங்க மார்ட்டின்.. என்ன செய்யலாம்? அக்கவுன்ட்ஸ் புக் கொணாந்திருக்கேனே' என அப்பாவியாக கேட்ட என்னிடம், 'அக்கவுன்ட்ஸ் புக்கெ ஓரமா வைங்க புள்ள...மொதல்ல முந்தின அஞ்சு வருச கொஸ்டீன் ஆன்ஸர் எடுத்துப்பாப்பம்' என சொல்லி அலமாரியிலிருந்து சரட்டென பழைய சஜ்ஜஸ்டட் ஆன்சர் புத்தகங்களை வெளியே எடுத்தார். மணி காலை பதினொன்று.
'ஶ்ரீதர்.. ICWAவை சாதாரணமா நெனைச்சுடாதீங்க.. அந்த காஸ்டிங் பேப்பர் இருக்கே.. எப்பிடி படிச்சாலும் கடசீல ஊத்தீரும்' என சொல்லி அஹ்ஹஹ்ஹாவென அவர் எகத்தாளமாக சிரிக்க நான் உள்ளுக்குள்..'ஏது ஆரம்பமே சரியில்லியே....'.
அடுத்து ' டேய் கிட்டா! காபி கொண்டாடா' என அவர் சத்தம் கொடுக்க சில நிமிடங்களில் டபரா செட்டில் ஒன் பை டூ காபி..'ஶ்ரீதர் காபி சாப்டவுடன நீங்க மார்ஜினல் காஸ்டிங் இதுக்கு முந்தி எந்தெந்த வருஷம்(...கெட்ட வார்த்தை) கேட்டுத்தொலைச்சிருக்கான்னு ஒரு பேப்பர்ல குறிங்க.. நான் ஒரு தம்ம முடிச்சிக்கறேன்னு சொல்லி மேசை டிராயரிலிருந்து பிளேடை எடுத்து வில்ஸ் ஃபில்டரை இரண்டாக வெட்டி ஒன்றை பத்த வைத்து காலை நீட்டி மேசை மேல் வைத்து மூக்கு வழியாக புகையை விட்டார். ' ம்ஹூம்.. இவுரு விவகாரம் புடிச்சவர் தான்.. மணி இப்பவே பன்னிரண்டு.
' ஶ்ரீதர்.. தல கொஞ்சம் கணக்குது.. நான் அப்படியே சரிஞ்சி ஒக்காந்து ஒரு பத்து நிமிசம் தூங்கிட்டு வந்துரவா? இல்ல நீங்க சாப்டு ஒரேடியா சாய்ங்காலம் வரீங்களா? என கேட்டு என் பதிலுக்கு காத்திராமல் இடுப்பிலிருக்கும் லுங்கியை தளர்த்தி மீண்டும் இழுத்து சொறுகிக்கொண்டு அவர் தூங்க ஆரம்பிக்க, நான்... (கிழிஞ்சது போ..).
மாலை மார்ட்டின் ரூமுக்கு போனால் ஆளைக்காணோம். வெளியே வந்து பார்த்தால் தூரத்தில் ஆட்டோ ஸ்டான்டில் இருந்தார், ஒரு ஆட்டோ பின் சீட்டில் அமர்ந்தவன்னம் ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டு. 'வாங்க ஶ்ரீதர்.. பாத்திங்களா..நம்ம எபிநேசர் புது வண்டி எடுத்திருக்காப்ள.. இப்பத்தான் மாலை போட்டு ரெண்டு நாளா ஓடுது.'
' சரி மார்ட்டின்.. நாம படிக்க அந்த பளய கொஸ்டீன்ஸ்... என இழுத்தேன். '
'அதுவா.. இப்ப கொஞ்ச நேரத்துல கரூர் தான்தோன்றிமலையில இருந்து நம்ம ஒறவுக்காரப்பையன் வர்ரான். அவனோட டின்னர முடிச்சிகிட்டு நாம நைட்டு ஒரு ஒம்பது மணிக்கி ஆரம்பிக்கலாமா'வென கேட்ட கையோடு அவரே ' வேணாம் ஶ்ரீதர்..படிக்க ஒக்காந்தா சும்மா மூனு நாலு மணி நேரம் கிடு..கிடுகிடு ன்னு ஒடனும் இல்ல? இல்லன்னா வேஸ்ட்டு. நாம ஒரேடியா நாளைக்கி காலைல பத்து மணிக்கே ஒக்காரலாம். இன்னிக்கி மாத்திரம் ஃப்ரெண்டு கூட நைட்ஷோ 'கோழி கூவுது' பாத்துடறேன்' என இழுத்தார். எனக்கு மகா எரிச்சல்..'கோழி கூவுதா?எக்ஸாம்ல கூவிடும்டி' என உள்ளுக்குள் சலித்துக்கொண்டு வீடு திரும்பினேன்..
அடுத்த நாள் படிக்க போனால் லாட்ஜ் ரூம் பூட்டியிருந்தது. எங்க போயிருப்பாரென யோசித்தபடி வெளியே வந்து பக்கத்து ரோட்டோரமாக டீக்கடையில் ஒரு வாழைக்கா பஜ்ஜி,போன்விடா டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான் கவனித்தேன். தூரத்தில் ஒரு அம்பாசடர் கார்... கிட்ட வரும்போது அதில் முன் பக்கம் பயில்வான் போன்ற டிரைவர் பக்கத்தில் குட்டியூண்டாக மார்ட்டீன். பஜ்ஜி சுற்றிய பேப்பரை கசக்கியெறிந்துவிட்டு உற்று பார்த்தேன். பின் சீட்டில் முரட்டு உருவத்துடன் மூன்று பேர். வண்டி நிற்கவில்லை. சிறிது நேரத்திலே மறுபடியும் அதே வண்டி.. மேலும் ரெண்டு முறை அந்த ஏரியாவில் ரவுண்டடிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றைய படிப்பும் கோவிந்தா..
மறுநாள் லாட்ஜ் ரூமில் மார்ட்டீன் இருந்தார்.'என்னங்க மார்ட்டீன் நேத்திக்கி என்னாச்சு,நம்ப ஏரியா பக்கம் கார்ல சுத்திக்கிட்டுருந்தீங்க?'
அதுவா ஶ்ரீதர்.. கார்ல எங்கூட இருந்தவங்க எல்லாரும் மஃப்டி போலீஸ்காரங்க.. முந்தாநாளு மெஸ்ஸுல சாப்ட்டு வெளில வற்ரேன்.. இந்த ஏரியா ரவுடிபசங்க மூனு பேரு என்னைய நிறுத்தி 'யார்ரா நீயி நம்ப ஏரியாவுல?ன்னு விஜாரிச்சதுமில்லாமெ பளார்னு ஒருத்தன் அறைஞ்சுட்டான்'
'ஐயய்யோ .. அப்பறம்?'
' அப்பபறமென்ன.. ஊருக்கு தகவல் சொல்லியனுப்ச்சேன்..எங்கப்பாரு உடனே இவங்கள காரோட அனுப்பிட்டாரு..'
' மஃப்டில அவங்கள பாக்க பயம்மா இருந்துச்சே! என்னா பண்ணாங்க?'
' கார்ல ரெண்டு ரவுண்டு சுத்தி வந்து கனகா வீட்டான்ட முச்சந்தியல அந்த ரவுடிங்கள புடிச்சிட்டோம். கார்ல ஏத்திகிட்டு அண்ணா ஸ்டேடியம் பக்கம் போயிட்டோம். அதுல என்னைய அறைஞ்சவன மத்தரம் ஓன்னு அழுது கெஞ்சுனான். டோல்கேட்ல நிறுத்தி மெரட்டிட்டு எறக்கி வுட்டுட்டோம்'
' சரி.. கூட்டிக்கிட்டு போயிருந்தா என்னா பண்ணியிருப்பீங்க?'
' அதுவா.. ஸ்டேஷன்ல அவனுங்கள ஜட்டியோட நாலு நாள் வச்சிருந்து சுளுக்கெடுத்து மன்னார்புரத்துல எறக்கி விட்ருப்பாங்க..செத்த நேரம் முன்னே அந்த முக்குல அவனுங்க நின்னிட்டிருந்தாய்ங்க.. என்னிய பாத்தவுன்னே சலாம் வெக்கிறான்' என சிரித்த மார்ட்டினை பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது. நல்ல மனுஷன் தான். ஆனால் அவர் கூட சேர்ந்து உருப்படியா இன்னும் படிக்க ஆரம்பிக்கவே இல்லியேயென கவலை.
அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே.. ஓரிரு நாள் படித்தால் அடுத்த நான்கு நாட்களுக்கு நிறைய காரணங்கள் சொல்லி லாட்ஜுக்கு போன என்னை திருப்பி அனுப்பி விடுவார். அல்லது ரூம் பூட்டியிருக்கும். அப்பத்தாவுக்கு பேதி, அண்ணன் பையனுக்கு கட்டி ஒடைஞ்சிடுச்சு, ஒன்னுக்கு போனா எரியுது... என பல காரணங்கள். முக்காவாசி நேரம் நானே தனியாக படிக்க வேண்டியதாகிவிட்டது.
நடுவே அவ்வப்போது மார்ட்டீனை பார்க்கும்போது ' மாஞ்சு மாஞ்சு புஸ்தகத்தை படிக்காதீங்க ஶ்ரீதர். அஞ்சு வருசம் பழைய கொஸ்டின் பேப்பர் படிங்க போதும்' என அட்வைஸ்...இருந்தாலும் பயந்துகொண்டு புத்தகங்களையும் படித்தேன்.
பரிட்சை ஒரு வாரம் தினமும் நேஷனல் காலேஜில். ஒரளவு சுமாராகவே எழுதினேன். தினம் பரிட்சைக்கு வரும் மார்ட்டீன் கையில் சிகரெட் வாசனையுடன் பழைய விடைத்தாள்கள்.. சிகப்பு பேனாவில் அன்டர்லைன் செய்யப்பட்ட பக்கங்கள். அவர் சட்டை பாக்கெட்டில் அரை துண்டு வில்ஸ் சிகரெட் வழக்கம்போல.
ரிசல்ட் வரும் முன் மார்ட்டீனுக்கு என். டி. பி. சி. கம்பெனி நாக்பூர் தொழிற்சாலையில் வேலைக்கான கடிதம் வந்தது. ட்ரெய்னீ அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசராம். ICWA இன்டர் முடித்தால் அடுத்த க்ரேடு கிடைக்குமாம்.
ரிசல்ட் வந்தது. இருவரும் இன்டர் பாசானோம்...ஆனால் மார்ட்டின்.. நிறைய மார்க்குகளுடன்..

No comments:

Post a Comment