'குரோம்பேட் சரவணா ஸ்டோர்ஸ் தாண்டிட்டேன்.. உங்க வீடு எந்தப்பக்கம்?'
போனில் கேட்ட என்னிடம் 'அடடா.. நீங்க ஏர்போர்ட்ல இருந்து கிளம்பறச்சயே போன் பண்றதா இல்ல சொன்னீங்க?.. பரவால்ல.. சுத்திகிட்டு வாங்க' என தன் வீட்டுக்கு சரியான வழித்தடங்களை சொன்னார்.
போனில் கேட்ட என்னிடம் 'அடடா.. நீங்க ஏர்போர்ட்ல இருந்து கிளம்பறச்சயே போன் பண்றதா இல்ல சொன்னீங்க?.. பரவால்ல.. சுத்திகிட்டு வாங்க' என தன் வீட்டுக்கு சரியான வழித்தடங்களை சொன்னார்.
ராதா நகர் புகுந்து டிரைவர் அறக்க பறக்க மேலும் கீழும் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, மெல்ல அவர் தோளை தட்டி 'ஒருத்தர் வீட்டு அட்ரஸ் விஜாரிக்க இப்பிடி தலை தெறிக்க நீங்க வண்டிய ஓட்டுனா அவங்க வீட்ட கண்டே பிடிக்க முடியாது ' என சொன்ன ஓரிரண்டு நிமிடங்களில் நிதானமாக ஸ்கூல் ரோடை பிடித்து அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினார் அந்த ரோஷக்கார டிரைவர்.
திரு. பாமா கோபாலன் அவர்களே வாசல் வரை வந்து நின்றுகொண்டு வரவேற்க, மிகுந்த சங்கோஜத்துடன் வீட்டில் நுழைந்த என்னை திருமதி. வேதா கோபாலன் வரவேற்றார்.
'வேதா கோபாலனா? ரொம்ப பரிச்சயமான பேரா இருக்கே'யென நினைப்பவர்களுக்கு.... என்பதுகளில் நீங்கள் கவனித்திருக்கலாம்.. வாராவாரம் குமுதம் பத்திரிக்கையை திறந்தால் வேதா கோபாலன் அவர்களது ஒரு பக்க கதை நிச்சயம் இருக்கும். அநேகமாக எல்லா பெண்களுக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர்.
அம்மா, பெண், பையன், பேரன், பேத்தி, மாமியார், மருமகள், நாத்தனார், கொழுந்தனார் என எல்லா உறவுக்காரர்களும் அவரது கதைகளின் காரெக்டர்கள். பெரும்பாலும் நடுத்தர குடும்பங்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான சப்ஜெக்ட்டில் கதைகள் எழுதுவார். ஒரே பக்கத்தில் ஓராயிரம் சமாசாரங்களை நச்சென்று சொல்லியிருப்பார். கதையின் முடிவில் நல்ல நீதி அல்லது தகவல்(message) இருக்கும். கதைகள் பெரும்பாலும் ராமுவின் ஓவியங்களுடன்...
கதைகள் எழுதுவது மட்டுமல்லாமல் புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமா! குமுதம் பத்திரிக்கையின் வளர்ச்சியில் இவரது பணி பெரும் பங்கு வகித்திருக்கிறது. பல வருடங்கள் கணவர் திரு. பாமா கோபாலன் அவர்களுடன் குமுதத்தில் பணியாற்றியிருக்கிறார். ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களின் வலது கரமாக இருந்திருக்கிறார் என சொல்லலாம்.
முக்தா ஶ்ரீனிவாசன், ராகி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி ஜராசு, சுஜாதா, லா.ச.ரா, மாலன், ராஜேஷ்குமார், ப.கோ.பிரபாகர், லேனா தமிழ்வாணன், தலைமை நிருபர் பால்யூ, க்ரேஸி மோகன், ஓவியர் மாருதி, ஓவியர் ஷ்யாம், காந்தி கண்ணதாசன், பத்திரிக்கைகள் ஜோக்ஸ் மன்னன் கீழை.அ.கதிர்வேல் Keezhai A Kathirvel சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள்.... என இவரது நண்பர்கள் பட்டியல் மிக நீளம்.
இவர்கள் வீட்டிற்கு போனதும் என்ன பேசலாம் என ஏற்கனவே யோசித்த போது ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் சுமார் ஒன்னறை மணி நேரம் போனதே தெரியவில்லை.
'திருக்குறள் படிக்கற மாதிரி...மேடம்...உங்க கதைகள் படிக்கறது' என சொன்னபோது அடக்கத்துடன் மறுத்தார். பரஸ்பர விசாரிப்புக்களுக்குப்பிறகு முதலில் முகநூல் நண்பர்கள் பற்றிய பேச்சு ஆரம்பமானது. எங்களது முகநூல் நண்பர் திரு. சீராளன் ஜெயந்தனைப்பற்றி Seeralan Jeyanthan பேச ஆரம்பித்தோம். இவரது குடும்பத்திற்கு மிக நெறுக்கமானவராம். அவரை மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் திருமதி.வேதா. சீராளன் தமிழக ஆளுநரின் உதவியாளர், சிறந்த ஓவியர் மற்றும் எழுத்தாளர், பிரபல எழுத்தாளர் ஜெயந்தனின் மகன். சீராளன் வரைந்த திரு. பாமா கோபாலன் திருமதி. வேதா இருவரது படம் தத்ரூபம்.. அந்த இல்லத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தது.
பேச்சின் நடுவே கணவர் உள்ளே போய் 5 நிமிடம் கழித்து எங்களுடன் சேர்ந்துகொள்ள, பிறகு இவர் உள்ளே போய் காபி கலந்து கொண்டு வந்தார், தட்டில் பலகாரங்களுடன். அப்புறம் தான் தெரிந்தது.. கணவர் முதலில் போனது காபிக்கு டிகாக்ஷன் போட என்பது. என்ன ஒரு கோ-ஆர்டினேஷன்! அதையும் என்னிடம் வெளிப்படையாக சொல்கிறார்களே!
ஷ்யாம், கரோ, ம.செ, அரஸ் போன்ற ஓவியர்களைப்பற்றி நிறைய பேசினோம். ஷ்யாமின் ஓவியங்களை வெகுவாக புகழ்ந்தார். ஸ்கூலில் மற்ற பையன்கள் அனில், ஆடு.. சொல்லும்போது, ஷ்யாம் மட்டும் அனில் ஆடு படங்களை வரைந்து காட்டுவாராம். ஷ்யாமின் ஓவியங்களின் uniqueness பற்றி நான் குறிப்பிடும்போது ஒரு இளம் பெண்ணின் கழுத்தில் ஆரம்பித்து நளினமான தோள், முழங்கை மற்றும் விரல் வரை ஒரே கோட்டை அழகாக வளைத்து ஷ்யாம் வரைந்திருப்பார் என்றேன். பதிலுக்கு வேதா அவர்கள் 'ஷ்யாம் வரையும் பெண் கையில் காபி கோப்பை இருந்தால் அந்த கோப்பையில் உள்ள மலரின் படத்தையும் வரைந்திருப்பார்' என்று சொன்னபோது ஒரு எழுத்தாளர் எப்படி எதையும் நுட்பமாக கவனிப்பாரென தெரிந்தது. ஷ்யாம் வரைந்த இவர்களிருவரது ஓவியத்தையும் ரசித்தேன்.
எழுத்தாற்றல் மட்டுமல்ல..ஜோதிடம் பயின்றவர் இவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஜோதிடம் பயிற்சி செய்கிறாரென்றால் நம்ப முடிகிறதா!
என்னுடையது பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறாராம் திருமதி.வேதா. குறிப்பாக நான் எழுதிய 'கத்தார் பெண் கல்யாண வைபோகமே' கட்டுரை மற்றும் ஓவியம், என்னுடைய மற்ற ஓவியங்களையும் ரசித்து பாராட்டினார்.
திரு.பாமா கோபாலன் 60களிலிருந்து எழுதுகிறாராம். ஏராளமான கதைகள், கட்டுரைகளாம். மிகவும் மென்மையாகவும் நட்புணர்வோடு பேசுகிறார்.
தாங்கள் 2013இல் பஹ்ரைன் வந்திருந்தது பற்றியும், தங்களது எழுத்துலக வாழ்க்கை மற்றும் அமெரிக்காவிலிருக்கும் தனது மகன் மருமகள் பற்றி மட்டுமல்லாது எனது குடும்பம், பஹ்ரைன் வாழ்க்கை பற்றியும் நிறைய விசாரித்தார்கள். இவர்களா பிரபலங்கள்? ஏதோ எனக்கு பெரியம்மா பெண் போல ஒரு அன்னியோன்யம்.
வரவேற்பறையில் இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது கேட் வரை வந்து வழியனுப்பி வைத்த இந்த பிரபல தம்பதியின் எளிமையை பற்றி என்ன சொல்வது!
இறைவா! என்ன தவம் செய்தோம்! நெகிழ்கிறேன் (நீங்க் நினைக்கற உயரமெல்லாம் இல்ல ஸ்ரீ!!
ReplyDeleteமிக்க நன்றி.. 🙏 உங்க புகழ் மேலும் பரவ வாழ்த்துக்கள்
ReplyDelete