Wednesday, July 22, 2015

சந்துரு

86இல் நான் பாம்பே வந்தவுடன் என்னுடன் தங்கியிருந்தவன் Balasubramaniam Chandrasekaran . திருச்சி ஐயப்பா நகரில் எங்கள் பக்கத்து வீடு. அவனது அப்பா அந்தக்கால 'சேலம் பாங்க்' மானேஜர். மிகவும் சகஜமாக பேசுவார். ஶ்ரீரங்கம் பாய்ஸ் ஹை ஸ்கூல், ஜமால் முகமது காலேஜில் பி.காம், பிறகு கம்பெனி செக்ரெடரி கோர்ஸ் (ACS) பாஸ் செய்து விக்ரோலி பகுதியில் ஒரு மார்வாடி கம்பெனியில் வேலை சந்துருவுக்கு.
சந்துரு என்கிற
துருதுருவென இருப்பான். கிட்டத்தட்ட நாகேஷ் மாதிரியான ஒடிசலான உடலமைப்பு. 'தெய்வத்தாய்'( 'வந்து சுடுவேன்...'), 'அன்பே வா' ( 'வாழ்க்கைல நொண்டியா இருக்கலாம்.. ஆனா ஒண்டியாக இருக்கக்கூடாது !').. சோப்பு சீப்பு கண்ணாடி ( அய்! அந்த போர்டுல எம்பேர் இருக்கு! .. டேய்.. அது கரீம் இல்லடா.. க்ரீம்..) போன்ற நாகேஷ் பட ஜோக்குகள் நிறைய சொல்வான். சரியான லூட்டி..குறும்பு..அரட்டைப்பேர்வழி...
கத்தார் வேலையை விட்டு விட்டு எங்களுடன் சேர்ந்து கொண்ட மகாதேவன் கொண்டு வந்திருந்த சந்திரபாபு கேசட்கள் நிறைய கேட்பான். 'காத்தவராயன்' இல் ஜிக்கியுடன் பாடும் 'ஜிகு ஜிகு...ஜியாலங்கடி ஜியாலோ' மற்றும் 'மகாதேவி'யின் 'தடுக்காதே என்னெ தடுக்காதே'
சந்திரபாபு பாடல்களை முனுமுனுப்பான்.
இரவில் தூங்கும் முன் படுத்துக் கொண்டே 'இதய கமலம்' PB ஶ்ரீனிவாஸ் (நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்), 'மன்னவனே அழலாமா'(கற்பகம்) பாடல்கள் கேட்கத்தவறுவதில்லை.
செம்பூர் ஸ்டேஷனை தாண்டி தண்டவாளத்தை ஒட்டிய ஜோப்பர்பட்டி பகுதிகளில் திருட்டு வீடியோ பார்லர்களில் ஊட்டி வரை உறவு போன்ற நிறைய தமிழ் படங்கள் பார்ப்போம். அந்தப்பக்கம் தனியே தமிழில் 'பீப்பி...பீப்பி (BPயாம்) என சத்தம் போட்டு டிக்கெட் விற்பார்கள். அதற்கு கூட்டம் இன்னும் அதிகம். பார்த்திபனின் 'புதிய பாதை' பார்த்த பின் திருட்டு வீடுயோ பார்லர் போவதை (பார்த்திபன் படங்களையும் சேர்த்து) விட்டு விட்டோம்
மாலை ஜீவன் மெஸ்ஸில் தாலி, ஞாயிரு காலை செம்பூர் கீதா பவனில் பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா, சரோஜ் ஹோட்டலில் காரா பாத், சில சமயம் ரோட்டுக்கடை அண்ணாச்சியிடம் இட்லி, பரோட்டா.. என நினைத்த இடத்தில் என்னுடன் சாப்பிடுவான்.
செம்பூர் அகோபில மடம் பகுதி ரிசர்வ் பாங்க் மாமி வீட்டில் ஒரு கொல்லம் சாப்பிட்டோம். அங்கே காலை டிபனுக்கு உட்காரும்போது பிரேமன் என்கிற பாலக்காட்டுப்பையன் மட்டும் பேசினில் இருக்கும் 12 இட்லிகளையும் தன் தட்டில் கவிழ்த்து அதன் மேலே சட்னி சாம்பாரை கொட்டி பிசைவதை பார்த்து ஸ்தலத்திலேயே விழுந்து விழுந்து சத்தம் போட்டு சிரிப்பான் சந்துரு. பிரேமனை மாமி அடுத்த மாதமே கழட்டி விட்டார்கள். செம்பூரிலிருந்து பஸ் பிடித்து 30 நிமிடம் சயான் மணீஸில் வரிசையில் நின்று உ.கி கறி & வெ.சாம்பார் சாப்பாடு வாங்கித்தருவான்.
தன் மார்வாடி பாஸ் எப்படி இயந்திரத்தின் உதிரி பாகங்களை கஸ்டம்ஸ் டூட்டி கட்டாமல் இறக்குமதி செய்தார் என்பதை விலாவாரியாக விளக்குவான். அடுத்த சில வருடங்களில் மாட்டிக்கொண்டு அவரே ஒர் இரவு ஜெயிலில் கழித்ததையும் பூரிப்புடன் சிலாகிப்பான். சக மானேஜர் சுரானா, மாதாமாதம் இன்கம் டாக்ஸ் ஆபிஸில் 'அவர்களுக்கு' கொடுப்பதற்கென என்று சொல்லி கொண்டு செல்லும் பத்தாயிரம் ரூபாயில் சுமார் எட்டாயிரத்தை தனியாக லவட்டி, கஞ்சூர் மார்க் பாரில் பீர் குடிக்கும் கதையை சந்துரு கண்டுபிடித்து புட்டு புட்டு வைப்பான்.
எவ்வளவு சிரித்து அரட்டையடித்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு சோகம். தன் குடும்பத்தின் பெர்சனலான நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வான். வடக்கே வேலையிலிருந்த அண்ணனிடமிருந்து கொஞ்ச நாள் தகவல் ஏதும் வராமல் திடீரென அவர் இறந்துவிட்டதாக வந்த தந்தியை படிக்கும்போதே அதிர்ச்சியில் அப்பா கண் பார்வையை இழந்ததை
மெதுவாக சொல்வான். பின் சில நிமிடங்கள் மௌனம்...அடுத்த நொடியே ' டேய்.. கிளம்பு.. மாடுங்கா உடுப்பி கிருஷ்ண பவன்ல பூரி தாலி சாப்பிடலாம்' என மூடு மாறி சட்டென பிரகாசமடைவான்.
என்னுடன் பஹ்ரைனில் கொஞ்ச நாள் இருந்தான் ( இந்த ஊர்ல ஜூனியர் விகடன் படிக்கறதைத்தவிர வேற வேலை யாருக்கும் இல்லப்பா) .. பின் ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூ கினியாவில் பயந்து கொண்டே ஒரு வருடம் ( தெனமும் பாண்ட் போடறப்ப பயமா இருக்குப்பா! ரோட்ல போறப்ப வண்டிய நிறுத்தி இறங்கச்சொல்லி கீழே சுடுவானாம்)...
பெங்களூரில் செட்டிலான சந்துருவை விடுமுறையில் சந்திக்கும் போது இன்றும் அதே கலகலப்பு, சிரிப்பு, லூட்டி.. இப்போதும் சந்துருவிடம் நம் பம்பாய் கதையை ஆரம்பித்தால்.. 'தெரியுமே..,' என மீதிக்கதையை சொல்வது அவனது மனைவி..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்துரு...

No comments:

Post a Comment