Wednesday, July 22, 2015

கல்லுக்குழி ராமநாதன்..


திருச்சி டிவியெஸ் டோல்கேட் பகுதி..மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் அரசு குடியிருப்பு காலனி...சுமார் ஏழெட்டு வருடங்கள் அங்கே குடியிருந்தோம். இரண்டு தளங்கள் உள்ள கட்டிடம் ஓவ்வொன்றிலும் விசாலமான 6 ஃப்ளாட்கள். மிகவும் சுவாரசியமான காலனி வாழ்க்கை. அடுத்த ஃப்ளாட்டில் தொபேல் தொபேல் என அப்பாவிடம் அடி வாங்கும் பசங்க சத்தம் இங்கே கேட்கும். பின்புற பால்கனி போனால் 'இந்த வீட்ல என்னை யாரு மதிக்கறாங்க' போன்ற கணவன் மனைவி சண்டை காதில் விழும். பால்கனியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டினால் மேல் தளத்திலிருந்து சப்பிய மாங்கொட்டை நம் தலையில் விழுவது நிச்சயம்.
பக்கத்தில் செங்குளம் காலனி..அப்புறம் காய்கறி கடைகள், மட்டன் ஸ்டால், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், அரிசிக்கடை தாண்டினால் கல்லுக்குழி மாரியம்மன் கோவில். கோவிலுக்கு எதிரே ரயில்வே காலனி வீடுகளில் ஒன்று தான் 'கல்லுக்குழி ராமநாதன்' வீடு.
ஓவியர் வினு வரைந்த மாதிரி அழகான முகம் ராமநாதனுக்கு . நெற்றியில் விபூதி..முகத்தில் மீசையில்லாமல் தாடையில் மட்டும் தேவையில்லாமல் வளர்ந்த தாடி. அவனது பெற்றோர் நாமக்கல்லில் இருக்க, திருச்சியில் அத்தை மாமாவுடன் அந்த ரயில்வே குவார்ட்டர்ஸ் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான்.
நான், ராமநாதன் மற்றும் ஶ்ரீரங்கம் காமாட்சிநாதன்) Venkat Kamatchinathan ) மூவரும் ICWA பரிட்சைக்கு கணிதம் சேர்ந்து படித்தோம்.CA மற்றும் ICWA படிப்புகளில் கணிதம் மிகவும் கஷ்டமான பேப்பர். 'நானெல்லாம் B.Sc வரைக்கும் மேத்ஸ்ல எப்பவுமே சென்ட்டம் தான்' என பீற்றிக் கொண்டு, CA கணிதத்தில் 30க்கும் குறைவாக வாங்கி சில நாள் பேயறைந்த மாதிரி திரிந்தவர்கள் பலர்.
வீட்டு வாசல் வேப்ப மர நிழலில் நாற்காலி போட்டு அத்தையும் மாமாவும் உட்காந்துகொண்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நங்கள் உள்ளே முன் கூடத்தில் தரையில் புத்தகங்களை பரப்பிக்கொண்டு படிப்போம்.
ஒரு ட்ரெப்பீசிய வடிவ தொட்டியின் நீள அகல ஆழம் இவ்வளவு..அதில் நிரம்பியுள்ள தண்ணீர் முழுவதையும் இன்ன அளவுள்ள சொம்பால் மொண்டு வெளியே கொட்ட மொத்தம் எத்தனை சொம்பு தேவை? ராமநாதன் பேப்பர் எதுவும் இல்லாமல் சிமென்டு தரையிலேயே சிலேட்டு குச்சியில் எழுதி கணக்கு போடுவான். அந்த கணக்கு முடிந்ததும் பலப்பத்துடன் பச்சக்கென அந்தப்பக்கம் தாவி தரையில் அடுத்த கணக்கை ஆரம்பிப்பான். 'ஒரு செவ்வக வடிவ கூண்டின் மூலையில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள குருவி அக்கூண்டின் எல்லா பகுதிகளுக்கும் பறக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் எவ்வளவு நீளமான கயிறு தேவை?'....அடுத்த இரண்டு மூன்று கணக்குகள் முடிக்கும்போது தரை முழுக்க கிறுக்கல்கள். 'பாவம்... கஷ்டப்பட்டு படிக்கறான். தரைல எழுதி கணக்கு போட்டுத்தான் அவனுக்கு பழக்கம். எனக்குத்தான் அதை அழிச்சு அலம்ப மனசே இல்லை' யென அத்தை சொல்வார்கள்.
அடுத்த சில மாதங்களில் நான் பம்பாய்... ராமநாதன் சென்னை பக்கம் என போய்விட்டோம். அடுத்த லீவில் ஊருக்கு வரும்போது கல்லுக்குழி போய் ராமநாதனின் வீட்டுக்கதவை தட்டினேன். 'பழைய பேப்பர்க்காரனா நீ' என கேட்டபடி வேறு ஒருத்தர் கதவைத்திறந்து முறைத்தார். ராமநாதனின் மாமா அங்கே இல்லையென தெரிந்தது.
பம்பாயில் நான் செம்பூரில் தங்கியிருந்தேன். CA படிப்புக்கு ஓரளவு நல்ல வேலை. பழைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. காமாட்சிநாதன் மற்றும் ராமநாதனைப்பற்றி தகவல் ஏதுமில்லை. நான் அடிக்கடி மாடுங்கா பகுதியில் சங்கர மடம் அருகே சிவன் கோவிலுக்கு போவதுண்டு. கோவில் வாசலில் ஒருவர் தினமும் புல்லாங்குழல் வாசிப்பதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
அப்போது தான் கல்லுக்குழி ராமநாதனை அங்கே பார்த்தேன், கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து...அழகான மீசை. சீராக வளர்ந்த இரண்டு நாள் தாடி. கட்டையாக கொஞ்சம் குண்டடித்திருந்தான். அவனும் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலிருந்து பம்பாயில் புதிய வேலைக்கு வந்திருந்தான். பக்கத்தில் கன்செர்ன் அல்லது சொசைட்டியில் இரவு சாப்பாடு நாலரை ரூபாய்க்கு சாப்பிட்டோம். 'வா.. வா.. பக்கத்துல தான் வீடு' என இழுத்துக்கொண்டு போனான்.
கிங்ஸ் சர்க்கிள் சமீபம் 'ஓகே கண்மணி' படத்தில் வருவது மாதிரி பழைய கட்டிடம். பெரிய உயர்ந்த கதவுகள். அங்கே தான் அவன் பேயிங் கெஸ்ட். வயதான பார்ஸி பெண்மணி கதவைத்திறக்க உள்ளே தன் ரூமுக்கு அழைத்துக்கொண்டு போனான். அவனுக்கு நாரிமன் பாயின்ட் மித்தல் கோர்ட்டில் ஆபிஸ். எனக்கு ரீஜென்ட் சேம்பர்ஸ். ரொம்ப பக்கம் தான். நிறைய நேரம் பேசிவிட்டு, மறுநாள் மதிய உணவு இடைவேளையில் சந்திப்பதாக முடிவு செய்து, விடை பெற்றுக்கொண்டு '8 லிமிடெட்' பிடித்து செம்பூர் வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மதியம் 1 மணிக்கு அவனது ஆபிஸ் போனேன். 'பெஸ்ட் அன்டு க்ராம்ப்டன்' நிறுவனம். அதில் டெபுடி அக்கவுன்ட்ஸ் மானேஜராம். 'கஷ்டப்பட்டு படிச்சதனால நல்ல வேலைல நீ இருக்கறது ரொம்ப சந்தோஷம்பா' என அவனை வாழ்த்தி, அவனது ஆபிஸ் நம்பரை என் பாக்கெட் டைரியில் குறித்துக்கொண்டேன்.
'உன்னோட ஆபிஸ் நம்பரை சொல்லு' என அவன் தன் முன்னேயிருந்த காகிதங்களை விலக்கி, பேப்பர் ஏதுமில்லாத கிறுக்கல்கள் நிறைந்த மேசையின் மேல் பரப்பில் குறித்துக்கொண்டான்.நல்ல வேளை தரையில் கார்பெட் போட்டிருந்தார்கள்...

No comments:

Post a Comment