Wednesday, July 22, 2015

அனந்தசயனம்

தென்னூரிலிருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பி வண்டி ஸ்டாண்டு, ஹிந்தி பிரச்சார சபா தாண்டி இடது பக்கம் சாஸ்திரி ரோடு திரும்பி வாமடம் உள்ளே புகுந்து கோட்டை ஸ்டேஷன் வழியாக வெளியே வந்து, நிர்மலா லாட்ஜ் பால்கனியில் நிற்கும் வாத்தியார்களுக்கு சல்யூட் அடித்து ஸ்கூல் உள்ளே எட்டேமுக்காலுக்கு நுழையும்போது அந்த சிகப்பு கலர் ஸ்கூல் பஸ் உள்ளே வரும். புதுக்கோட்டை குடுமியான்மலை மற்றும் நெய்வேலி ஸ்கூல் டூர் எல்லாம் அந்த பஸ்ஸில் தான் போவோம்.
கிராப்பட்டியிலிருந்து ரங்க பிரசாத் மற்றும் வால்டர், புத்தூர் சாமு சுந்தர சுகதிர், உறையூர் கண்ணன் எல்லோரும் பஸ்ஸில் வந்திறங்குவார்கள். எனக்கு நெறுங்கிய நண்பர்கள் சிலரில் ரங்க பிரசாத் ஒருவன். நன்றாக படிப்பான். ரீசஸில் அவனுடன் நான் ஸ்கூலுக்கு வெளியே விற்கும் மாங்கா பத்தை, ஆரஞ்சு ஜூஸ், ஐஸ்க்ரீம் வாங்கித்தின்ற நாட்கள் பல.
ஒரு நாள் ரங்க பிரசாத்தின் குட்டித்தம்பிகள் இருவரும் ஸ்கூலில் சேர, தினமும் அவர்களும் ஸ்கூல் பஸ்ஸில் வர ஆரம்பித்தார்கள். எங்களை விட நாலைந்து வயது சின்ன பையன்கள். சகோதரர்கள் மூன்று பேரும் படிப்பில் கெட்டி.
பியூசி வரை என்னுடன் படித்த ரங்க பிரசாத் REC சீட் கிடைத்து போய்விட, நான் அலகாபாத் பக்கம்....அடுத்த நாற்பது வருடங்கள் அவர்கள் தொடர்பே இல்லை. சென்ற வருடம் லிங்க்டின்னில் ரங்க பிரசாத்தை தேடினேன். கிடைக்கவில்லை. வேறு நண்பர்கள் மூலமும் ரங்க பிரசாத்தை தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை.
நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar மூலம் Ananthasayanam Thiruvenkatachary மற்றம் Parthasarathy Thiruvenkatachary இருவரும் முகநூலில் எனக்கு நண்பர்களான பின் சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ரங்க பிரசாத்தின் அந்த குட்டி சகோதரர்கள் என்று (சங்கர் சொல்லி) தெரிந்தது. மூத்தவர்கள் இருவரும் REC... கடைக்குட்டியான அனந்தசயனம் சீ.ஏ...
சில வாரங்களுக்கு முன் நான் திருச்சி போயிருந்த போது அ.சயனம் போன் செய்தார். ('செய்தான்'னு எழுத பயங்க). மறுநாள் ஆபிஸ் முடிந்து அட்ரஸ் விஜாரித்து எங்க ஏரியாவே கரன்ட் கட்டாகி, அந்த இருட்டிலும் வீடு தேடி
வந்துவிட்டார், சின்னவன் ப்ரணவ்வுடன். ( என் சின்னவனும் ப்ரணவ்).
நாற்பது வருடங்களுக்கு முன் பார்த்த அதே குழந்தை முகம் தான் அந்த இருட்டிலும் அ.சயனத்திடம் தெரிந்தது.
சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சன்னமான குரலில் மிகவும் அடக்கமாக பேசும் அ.சயனத்திடம் நான் அந்த சில நிமிடங்களில் கவனித்தது, மற்றவர்கள் பேசும்போது பொறுமையாக கவனித்து பிறகு தான் பேசுவது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவனிடத்தில் என்னைப்பற்றி சில வார்த்தைகளை சொல்லி, நடுநடுவே அவனுக்கும் பதில் சொல்லி...என்ன ஒரு பதவிசு!
இவருக்கு இரண்டு வருடங்கள் சீனியரான என் தம்பி Jani Vijay Raghavanஉம் என்னுடன் இருந்ததால் எங்களது பள்ளி வாழ்க்கை பற்றிய பேச்சு படு சுவாரசியமாக இருந்தது.
ஒன்பது மணிக்கு நான் திருச்சி ஏர்போர்ட் கிளம்ப வேண்டுமென்பதால் எட்டு மணிக்கு கிளம்பிவிட்டதுடன், எனது பிரயாணம் அவரது வரவால் தாமதமாகவில்லையேயென கேட்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு விடை பெற்றுக் கொண்டார்.
அவரது சகோதரன் அந்த இன்னொரு குட்டிப்பையன் 😄பார்த்தசாரதி மற்றும் இவர்களது மூத்த சகோதரனும் எனது க்ளாஸ் மேட்டுமான ரங்க பிரசாத்தையும் அடுத்த விடுமுறையில் சந்திக்க வேண்டும்..
சீ.ஏ ஃபைனல் பரிட்சைக்கு சங்கர் மற்றும் நிறைய மாணவர்களுக்கு க்ளாஸ் எடுத்த அ.சயனம் சீ.ஏ பரிட்சையில் அகில இந்திய அளவில் ராங்க் வாங்கியவர்.
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக BHELல் வேலை செய்யும் 'கூடுதல் பொது மேலாளர்' ( Addnl GM) ஆன இவர், கூடிய விரைவில் அந்த நிறுவனத்தின் GM ஆக வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment