(கதை சொல்லும் புகைப்படம் . இந்தப் படத்துக்கு குறுங்கதை எழுத Anand Raghav Tiruchendurai Ramamurthy Sankar Venkatasubramanian Ramamurthy Sridhar TrafcoJayaraman RaghunathanVallabha SrinivasanAnanya Mahadevanஅனைவரும் வருக கதைகளைத் தருக- Ganesh Srinivasan).
'அடப்பாவி மனுசா.. வீட்டுக்குச்சாப்ட வராமெ இங்கென என்ன செய்றீய? சோலி ஒன்னுங்காங்கல?'
மீன்பாடி வண்டியில் உட்கார்ந்திருந்தவாறு ரோட்டையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த இசக்கி, அவசரமாக ஒடி வந்த மனைவியை வெறும் பார்வை பார்த்தான்...
'திரும்பவும் விசாரிக்காங்க புள்ள'
'யாரு... போலீசா?'
'ஆமாம்.... சுயம்புலிங்கம் பய இங்ஙன வந்துட்டுப்போனாங்கென்'
'என்ன சொல்லுதாம்ல?'
சொன்னான்..
சற்று நேரம் முன் ஓடி வந்த சுயம்புலிங்கம் தன் மீன்பாடி வண்டியின் மீது சாய்ந்து அவசரமாக மூச்சு விட்டபடி ' எலே இசக்கி! புதுசா இன்ஸ்பெக்டர் வந்திருக்காம்ல... பய திரும்ப ஒன்னொன்னா நோண்டி எடுக்கான்..'
'என்ன சொல்லுதீரு'
' அன்னிக்கு ராத்திரி உன் மீன்பாடி வண்டிய பயபுள்ள ஒருத்தன் நம்ம வீட்டு பொறத்தால பாத்திருக்காம்லே'
' மூனு வருசங்கழிச்சா? அது யார்லெ கோட்டிப்பய இப்ப வாயத்தொறக்கான்'
'அத வுடு.. போலீஸ் உன்னெ கூப்புடும்..எனக்கொன்னுந்தெரியாது சாமி.. ஏதோ செத்த கன்னுக்குட்டிய அந்த மூட்டு (மரத்தடி) கிட்ட பொதைக்க சுயம்புலிங்கத்துக்கு ஒத்தாசையா இருந்தேன்னு மட்டும் சொல்லுலே'
'எலே ஆக்கங்கெட்ட கூவே.. போலீஸ் நம்புங்கே?'
' நம்ப மாட்டாங்கலே... நாஞ்சொல்லுதேன்...மொதல்ல ரெண்டு தட்டு தட்டுவாங்கலே... நீ சொன்னத மட்டும் வுடாமெ கெட்டியா புடிச்சுக்க..'
' ஆமா... அந்த பெருமாள் எம்மூஞ்சியில குத்தறப்ப உன்னெ மாதிரி காமெராவெ மொறச்சி மொறச்சி பாக்கனூங்கெ?...கொண்டேபுடுவாங்கடி'
வீட்டு வாசலில் டிவிஎஸ்ஸை நிறுத்திவிட்டு அவிழ்ந்த சாரத்தை இழுத்துக்கட்டியபடி ' ஏட்டி ராணி!' என கத்தியபடி உள்ளே ஓடிய சுயம்புலிங்கம் எதிரே வந்து நின்ற மனைவியிடம் விபரம் சொல்ல...
' அடப்பாவி.. திரும்பவுமா? அடி வாங்கியே குண்டாயிட்டேன்யா..இப்ப என்ன பண்ணுதீய? திரும்பவும் அடிப்பாங்களா?'
' பாக்கலாம்... ரெண்டு நாள் யோசிக்கேன்'
' எதுக்கு.... பக்கத்தூரு போயி பிரியாணி வாங்குன பில்லு, சினிமா- பஸ் டிக்கெட் எல்லாம் பய்யி நெறைய கொண்டாரவா? மூனு வருசமா அந்த ரூம்பு பூரா மளிகை பில்லும் பேப்பருந்தாங்கெடக்கு..காங்கல?'
' அடி.. யார்ரி இவ.. பின்ன குறுக்கெ சாஞ்சு கெடக்கச்சொல்லுதியா?... போலீஸ் இசக்கிய கூப்புடும்..அதான் யோசிக்கேன்'
' எல்லாஞ்சரி... ஏற்கனவே அந்த மஞ்சக்கார் கதவ தொறக்கறப்ப அக்கம்பக்கம் பாக்கக்காமெ கோட்ட விட்டீக... இப்ப மீன்பாடி வண்டி.... ஹும்...ஒங்களுக்கு வண்டியில தான் கண்டம்' முனுமுனுத்தாள் ராணி..
' ஏட்டி.. மூதி..,அங்கென்ன முனுமுனுக்கே.. சாதாரணமாவே பல்லு வெளக்கீட்டே பேசறமாதிரி தான் இருக்கும் நீ பேசறது.. இதுல முனுமுனுத்தா வெளங்கீரும்'
' பின்ன என்னவாம்.. அவஞ்செஞ்சது தப்பு...ஆமா நாந்தா அவன கொன்னேன்னு சொல்லிட்டு.. ஏதோ நம்ம கெரகம்...ஆறேழு வருசம் செயிலுக்கு போய்ட்டு வந்துட்டா நிம்மதியா தூங்கலாம்ல!'
' பொறுத்துக்க புள்ள.. கொஞ்ச நாளைக்கி..இத்தினி நாளு சமாளிச்சிட்டோம்.. சரி..சரி.. அவிய ரெண்டும் எத்தினி மணிக்கு வரும்... இப்ப நீ என்ன செய்யுத' என விஷமப்புன்னகையுடன் நெருங்கிய சுயம்புலிங்கத்தை நெட்டித்தள்ளினாள் ராணி...
' போய்யா... உருப்படியா எங்கள காப்பாத்தற வழியப்பாரும்... மொதல்ல மீசைய சரியா ஒட்டு.. உளுந்துறப்போகுது'
இரவு இசக்கி வீட்டில் அவன் மனைவி...
' இதப்பாரும்... இப்ப என்னா சொல்லுதீரு? அவிய இழுத்து நாலு சாத்து சாத்துனா நா வாயத்தொறந்து சொல்லிடுதேன்... வேணாம்யா.. எதையும் மறைக்காத. குத்தம் குத்தம் தாம்ங்கென்... சட்டப்படி தண்டன கெடச்சாலும் பரவால்ல...
நம்ம பக்கத்து தெரு செவந்திய கெடுத்தவனெ போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு கேஸ் போடாமெ விட்டாலும் செவந்தி புருசன் அவனை நடு ரோட்ல வெட்டி, தன்னோட மீன்பாடி வண்டியிலயே அவந்தலைய எடுத்துட்டுப்போயி போலீஸ்ல சரணடைச்சான். 7 வருசம்னு சொல்லி உள்ள போனாலும் ரெமிசன் அது இதுன்னு 4 வருசத்துலயே வெளிய வந்துட்டான்.. இப்ப பாரு அவனும் உன்னெ மாதிரி வண்டியிழுக்கான். செவந்தி வயித்த தள்ளிட்டா...அவங்க சந்தோசமா இல்ல? நீ ஆயுசு முளுக்க முட்டு சந்துல வண்டிய நிறுத்தீட்டு, பயந்துகிட்டே எல்லாரையும் வெறிக்க பாத்துட்டா இருப்பே?
போய்யா.. போய்ச்சொல்லு.. அய்யா கேட்டுக்கிடுங்க! கன்னுக்குட்டிய இங்க பொதைச்சிட்டு, அந்த எறப்பாளி நாயெ அங்கதாம்பொதைச்சோம்னு'
நம்ம பக்கத்து தெரு செவந்திய கெடுத்தவனெ போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு கேஸ் போடாமெ விட்டாலும் செவந்தி புருசன் அவனை நடு ரோட்ல வெட்டி, தன்னோட மீன்பாடி வண்டியிலயே அவந்தலைய எடுத்துட்டுப்போயி போலீஸ்ல சரணடைச்சான். 7 வருசம்னு சொல்லி உள்ள போனாலும் ரெமிசன் அது இதுன்னு 4 வருசத்துலயே வெளிய வந்துட்டான்.. இப்ப பாரு அவனும் உன்னெ மாதிரி வண்டியிழுக்கான். செவந்தி வயித்த தள்ளிட்டா...அவங்க சந்தோசமா இல்ல? நீ ஆயுசு முளுக்க முட்டு சந்துல வண்டிய நிறுத்தீட்டு, பயந்துகிட்டே எல்லாரையும் வெறிக்க பாத்துட்டா இருப்பே?
போய்யா.. போய்ச்சொல்லு.. அய்யா கேட்டுக்கிடுங்க! கன்னுக்குட்டிய இங்க பொதைச்சிட்டு, அந்த எறப்பாளி நாயெ அங்கதாம்பொதைச்சோம்னு'
ஹும்.. என பெருமூச்சு விட்டபடி படுத்த இசக்கி அன்று இரவு தூங்கவில்லை...
அடுத்த சில நாட்களில் அந்த போலீஸ் ஸ்டேஷனை புல்டோசர் இடித்துக்கொண்டிருந்தது...
(சீதாபதி ஶ்ரீதர்)