Sunday, April 2, 2017

கல்லுக்குழி ராமநாதன்


80களில் திருச்சி டிவியெஸ் டோல்கேட் பகுதி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் அரசு குடியிருப்பு காலனியில் சுமார் ஏழெட்டு வருடங்கள் குடியிருந்தோம். இரண்டு தளங்கள் உள்ள கட்டிடம் ஓவ்வொன்றிலும் விசாலமான 6 ஃப்ளாட்கள். சுவாரசியமான காலனி வாழ்க்கை. அங்கு பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தினர்.
அடுத்த ஃப்ளாட்டில் தொபேல் தொபேலென பசங்க அடி வாங்கும் சத்தம் இங்கே கேட்கும். பின்புற பால்கனி போனால் 'இந்த வீட்ல என்னை யாரு மதிக்கறாங்க' போன்ற கணவன் மனைவி சண்டை வசனங்கள் அப்பட்டமாக காதில் விழும். பால்கனியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டினால் மேல் தளத்திலிருந்து சப்பிய மாங்கொட்டை நம் தலையில் விழுவது நிச்சயம். பனியனுடன் பின்பக்க பால்கனியில் அந்த வீட்டுக்காரர் ரொம்ப நேரம் நின்றுகொண்டிருந்தால் வீட்டுக்காரம்மாவுடன் சண்டையென அர்த்தம். அப்படி அவர் நின்றதை ரொம்ப நேரம் பால்கனியில் நின்று கவனித்தது எங்க நைனா என்பது கூடுதல் தகவல்.
பக்கத்தில் செங்குளம் காலனி தாண்டி கல்லுக்குழி. ராகவா காஃபி வொர்க்ஸ், காய்கறி கடைகள், அடுத்து மட்டன் ஸ்டால். மட்டன் ஸ்டால் கொட்டகை மூங்கிலில்தான் ஆங்கிலோ இந்தியன் ஒருவனை ஜட்டியுடன் கட்டிவைத்து மூன்று பேர் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பகுதி மாணவி ஒருத்தியை பொன்மலையிலிருந்து சைட் அடிக்க வந்து மாட்டிக்கிட்டானாம். மடப்பய! சாமர்த்தியம் பத்தாது! அடித்து முடித்த பிறகு அவனை எச்சரித்து, கயிற்றை அவிழ்த்து விட்டதும் சர்வசாதரணமாக பக்கத்து கடையில் தம்மடித்துக்கொண்டு (அதே ஜட்டியுடன்) நின்றுகொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்ப்போம். அடுத்த வாரம் பொன்மலைப்பட்டி கல்கண்டார் கோட்டையில் அதே பெண்ணுடன் சைக்கிளில் டபுள்ஸ் போய்க்கொண்டிருந்தவனை மனதார வாழ்த்தத்தான் முதலில் நினைத்தோம். ஆனால் சைக்கிளுக்கு காரியர் இல்லாததைக்கண்டு வயிறெரிந்து போன கதை இப்ப எதுக்கு!
இப்ப கல்லுக்குழி ரெயில்வே காலனி... டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், அரிசிக்கடை, கல்லுக்குழி மாரியம்மன் கோவில் அடுத்து ரெயில்வே காலனி ஆரம்பம். காலனி நடுவே அனுமார் கோவிலை ஒட்டி இரும்பு தடுப்புக்கப்பால் தூரத்தில் ஜங்ஷன் தெரியும். 'பாஆஆஆம்..' என்ற சத்தத்துடன் தடக்..தடக் கென ஓடி மறையும் டீசல்/எலெக்ட்ரிக் இஞ்சின்களுக்கு நடுவே, ஒரு ஓரமாக ஈனஸ்வரத்தில் 'ஊ..உஸ்ஸ்ஸ்க்'கென ஷன்ட்டிங் அடிக்கும் பழைய நீராவி இஞ்சின்களை இனி பச்சை விளக்கு படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
விஷயத்துக்கு வருவோம். கோவிலுக்கு எதிரே ரயில்வே காலனி வீடுகளில் ஒன்று தான் 'கல்லுக்குழி ராமநாதன்' வீடு. ஓவியர் வினு வரைந்த மாதிரி அழகான முகம். கொஞ்சம் சொறுகுன மாதிரி கண்கள். பரந்த நெற்றிக்குப்பின் இளம் வழுக்கை வர ஏக சாத்தியங்கள் உள. நெற்றியில் விபூதி..முகத்தில் மீசையில்லாமல் தாடையில் மட்டும் தேவையில்லாமல் வளர்ந்த தாடி. அவனது பெற்றோர் நாமக்கல்லில் இருக்க, திருச்சியில் அத்தை மாமாவுடன் ரயில்வே குவார்ட்டர்ஸ் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். ரயில்வே காலனியில் வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள். தட்டி போட்ட முன் அறை. மழை நீர் பாசம் பிடித்த ஈர சுவர்கள். சுவற்றில் காரை உதிர்ந்து அங்கங்கே பல்லிளிக்கும் செங்கல். மஞ்சள் சுண்ணாம்படித்து அலிபாபா படம் போல வீட்டுக்கதவில் எண்கள்.
நான், ராமநாதன் மற்றும் ஶ்ரீரங்கம் காமாட்சி ( Venkat Kamatchinathan) மூவரும் ICWA பரிட்சைக்கு கணிதம் சேர்ந்து படித்தோம். அப்போதெல்லாம் CA மற்றும் ICWA படிப்புகளில் கணிதம் தான் மிகவும் கஷ்டமான பேப்பர். CA கும்பல் பூரா அந்த பேப்பருக்கு ஆண்டாதெரு குப்புசாமி சாரிடம் டியூஷன் போவார்கள். 'நானெல்லாம் B.Sc வரைக்கும் மேத்ஸ்ல எப்பவுமே சென்ட்டம் தான்' என பீற்றிக் கொண்டு, CA கணிதத்தில் 30க்கும் குறைவாக வாங்கி சில நாள் பேயறைந்த மாதிரி திரிந்தவர்கள் பலர்.
வீட்டு வாசல் வேப்ப மர நிழலில் வொயர் நாற்காலி போட்டு சாயங்கால வேளையில் அத்தையும் மாமாவும் உட்காந்துகொண்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நங்கள் உள்ளே முன் கூடத்தில் தரையில் பொஸ்தகங்களை பரப்பிக்கொண்டு படிப்போம்.
விதவிதமான கணக்குகள் போட சுவாரசியமாக இருக்கும். ஒரு ட்ரெப்பீசிய வடிவ தொட்டியின் நீள அகல ஆழம் இவ்வளவு..அதில் நிரம்பியுள்ள தண்ணீர் முழுவதையும் இன்ன அளவுள்ள போவினியால் (சொம்பால்) மொண்டு வெளியே கொட்ட மொத்தம் எத்தனை சொம்புகள் தேவை? (ஒரே சொம்பு போதுமே என கமென்ட் போடுபவர்களுக்கு, அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்படும் 😁😁).
ராமநாதன் பேப்பர் எதுவும் இல்லாமல் சிமென்டு தரையிலேயே சிலேட்டு குச்சியில் எழுதி கணக்கு போடுவான். அந்த கணக்கு முடிந்ததும் பலப்பத்துடன் பச்சக்கென அந்தப்பக்கம் தாவி, குனிந்து தரையில் அடுத்த கணக்கை ஆரம்பிப்பான். 'ஒரு செவ்வக வடிவ மூடப்பட்ட கூண்டின் ஒரு மூலையில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள குருவி அக்கூண்டின் எல்லா பகுதிகளுக்கும் பறக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் எவ்வளவு நீளமான கயிறு தேவை?' இது மாதிரி அடுத்த இரண்டு மூன்று கணக்குகள் முடிக்கும்போது ராமநாதன் பச்சக் பச்சக்கென இங்கும் அங்கும் குதித்து தரை முழுக்க கிறுக்கல்கள்.
'பாவம்... கஷ்டப்பட்டு படிக்கறான். தரைல எழுதி கணக்கு போட்டுத்தான் அவனுக்கு பழக்கம். அந்த பழக்கம் அவன வுட்டு போகமாட்டேங்குது. எனக்குத்தான் அதை அழிச்சு அலம்ப மனசே இல்லை' யென அத்தை சொல்வார்கள். அடுத்த சில மாதங்களில் நான் பம்பாய் போய்விட்டதும் ராமநாதனுடன் தொடர்பில்லாமல் போய்விட்டது.
அடுத்த லீவில் ஊருக்கு வரும்போது அவசரமாக கல்லுக்குழி போய் ராமநாதனின் வீட்டுக்கதவை தட்டினேன். 'பழைய பேப்பரா? ரெண்டு மாசங்கழிச்சு வா!' என வேறு ஒருத்தர் முறைத்தார். ராமநாதனின் மாமா ஜாகை இப்போ அங்கே இல்லை போல. அப்ப ராமநாதன்? குனிந்து பார்த்தேன். வீட்டுத்தரை சுத்தமாக இருந்தது.
பம்பாயில் நான் செம்பூரில் தங்கியிருந்தேன். CA படிப்புக்கு ஓரளவு நல்ல வேலை. பழைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. காமாட்சிநாதன் மற்றும் ராமநாதனைப்பற்றி தகவல் ஏதுமில்லை. நான் அடிக்கடி மாடுங்கா பகுதியில் சங்கர மடம் அருகே சிவன் கோவிலுக்கு போவதுண்டு. போதுபோகாமல் கோவில் வாசலில் நின்றுகொண்டிருப்போம். ஒருவர் தினமும் புல்லாங்குழல் வாசிப்பதை(யும்)வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
அப்போது தான் கல்லுக்குழி ராமநாதன் கண்ணில் பட்டான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து...அழகான மீசை. சீராக வளர்ந்த இரண்டு நாள் தாடி. ஒடிசலாக இருந்த ராமநாதனா இது! இப்ப சட்டை பட்டன்களுக்கிடையே பனியன் தெரியுதே!. அவனும் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலிருந்து பம்பாயில் புதிய வேலைக்கு வந்திருந்தான். பக்கத்தில் கன்செர்ன் அல்லது சொசைட்டியில் பாஞ்சு நிமிஷம் வரிசையில் காத்திருந்து நாலரை ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி (அவந்தான் கொடுத்தான்) இரவு சாப்பாடு சாப்பிட்டோம். 'வா.. வா.. பக்கத்துல தான் வீடு' என என்னை இழுத்துக்கொண்டு 'ஏவ்' என ஏப்பமிட்டபடி (புளித்த மோர்) நடந்தான்.
கிங்ஸ் சர்க்கிள் சமீபம் 'ஓகே கண்மணி' படத்தில் வருவது மாதிரி பழைய கட்டிடம். பெரிய உயர்ந்த கதவுகள். அங்கே தான் அவன் பேயிங் கெஸ்ட்டாம். வயதான பார்ஸி பெண்மணி நைட்டியுடன் கதவைத்திறக்க உள்ளே தன் ரூமுக்கு அழைத்துக்கொண்டு போனான். அவனுக்கு நாரிமன் பாயின்ட் ரஹேஜா சென்டரில் ஆபிஸ். எனக்கு ரீஜென்ட் சேம்பர்ஸ். ரொம்ப பக்கம் தான். நிறைய நேரம் பேசிவிட்டு, மறுநாள் மதிய உணவு இடைவேளையில் சந்திப்பதாக முடிவு செய்து, விடை பெற்றுக்கொண்டு '8 லிமிடெட்' பிடித்து செம்பூர் வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மதியம் 1 மணிக்கு அவனது ஆபிஸ் போனேன். 'பெஸ்ட் அன்டு க்ராம்ப்டன்' நிறுவனம். அதில் டெபுடி அக்கவுன்ட்ஸ் மானேஜராம். 'கஷ்டப்பட்டு படிச்சதனால நல்ல வேலைல நீ இருக்கறது ரொம்ப சந்தோஷம்பா' என அவனை வாழ்த்தி, அவனது ஆபிஸ் நம்பரை என் பாக்கெட் டைரியில் குறித்துக்கொண்டேன்.
'உன்னோட ஆபிஸ் நம்பரை சொல்லு' என பேனாவை எடுத்தவன் பேப்பர் ஏதுமில்லாத கிறுக்கல்கள் நிறைந்த சொறசொறப்பான மர மேசையின் மேற் பரப்பில் பச்சக்கென குனிந்து நம்பரை குறித்துக்கொண்டான். நல்ல வேளை தரையில் கார்பெட் போட்டிருந்தார்கள்...

என் தம்பி ரவி

எங்கள் வீட்டில் கடைக்குட்டி இவன். என்னை விட இரண்டே வயது இளையவன். என்னுடன் சேர்ந்து பயங்கரமாக லூட்டியடிப்பான். எப்போதும் துருதுருவென ஏதாவது கலாட்டா செய்துகொண்டு வீட்டில் அடி வாங்குவது எங்களுக்கு வழக்கம்.
அதிலும் எனக்கு மூத்தவள் லத்துவை ( Hemalatha Manohar ) சீண்டிக்கொண்டே இருப்பதில் எனக்கு எப்போதும் கம்பெனி கொடுப்பான். மார்கழி மாதம் காலை 4 மணிக்கு அம்மா எங்களை எழுப்பியவுடன் குளித்து விட்டு திருப்பாவையில் அன்றைய பாசுரம் படித்துவிட்டு, பட்டாபிராம் பிள்ளைத்தெரு பெருமாள் கோவில் சக்கரைப்பொங்கல் வாங்க ஓடுவோம். வந்தவுடன் படிக்க உட்கார வேண்டும் என்பது நியதி. அக்கா லதா படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கமுள்ளவள். நடுவே அப்படியே தூங்கிப்போய் விடுவாள். அதற்காகத்தானே நானும் ரவியும் காத்திருப்போம். மெதுவாக சத்தம் போடாமல் அவள் பக்கம் நகர்ந்து அவளது புத்தகத்தையெல்லாம் மூடிவைத்து விட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் அவளையும் பெட்சீட்டால் தலை வரை போத்தி விட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி படித்துக்கொண்டிருப்போம். அடுத்த சில நிமிடங்களில், எழுந்து வரும் அம்மாவிடம்'ரெய்யே...சதுவ்வே! (எழுந்திருடி...படிடி)' என அடி விழும்.
இரண்டு தெரு தள்ளி பாப்புச்செட்டி தெருவில் எங்கள் பாட்டி வீடு. தாத்தா, பாட்டி, சின்ன பாட்டியின், கல்யாணமாகாத துவாரகா மாமா அங்கே வசித்து வர, தினமும் நானோ ரவியோ வீட்டு வேலை செய்ய அங்கே போகவேண்டும். போக இஷ்டமே இருக்காது. ரோட்டு குழாயில் தேக்சாவில் தண்ணீர் பிடித்து தவலை, அண்டா, தண்ணி தொட்டியில் ஊற்றும் வேலை எங்களுடையது. சலிப்போடு போவோம். 'ஏன்டா உங்கம்மா என்னா பண்ணிட்ருக்காங்க' என பாட்டி கேட்டால் 'ம்ம்.. லட்டு.. முறுக்கு.. அதிரசம்' என சொல்லிவிட்டு ஓடி விடுவோம்.
தென்னூர் அமிருதீன் ஆஸ்பத்திரி எதிரே உள்ள பரோட்டா கடையில் சாப்பிட எங்களுக்கு ரொம்ப நாள் ஆசை. கையில் காசு இருக்காது. ஒரு நாள் கொஞ்சம் காசு சேர்த்து இருவரும் புரோட்டா சாப்பிடப்போனோம். ஒரு புரோட்டா 15 காசு. சர்வர் ஆளுக்கு 2 புரோட்டா வைத்து மேலே குருமாவை ஊற்ற, புரோட்டாவை நன்றாக பிசைந்து ரசித்து சாப்பிட்டோம். 'இன்னங்கொஞ்சம் குருமா உத்துப்பா' என ஆர்டர் வேறு. 60 காசு பத்திரமாக இருக்கிறதாவென கால்சராய் பாக்கெட்டையும் அப்பப்ப தொட்டுப்பார்த்துக்கொண்டோம். சாப்பிட்டவுடன் கையலம்ப எழும்போது தான் கவனித்தோம், கல்லாவின் அருகே ..'ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பரோட்டா ஒன்றின் விலை 20 காசு.’ என எழுதியிருக்க, 'ஆஹா.. மாட்னா அடிப்பானுங்களே!' ஒரே பயம்... ரவி சொன்னான் ' கெஞ்சல்லாம் வேண்டாம்டா... சண்டை போடற மாதிரி ட்ரை பண்ணுவோம்'. உடனே குரலை உயர்த்தி ..'என்னங்க இது? வெலைய ஏத்திட்டு...முன் கூட்டியே சொல்லலாம்ல? போர்டும் சரியா தெரீலயே!' என சத்தம் போட்டோம்(உள்ளுக்குள் உதறல்..)… ‘ டேய்.. பசங்களா! வெலயெல்லாம் ஏத்தி ஒரு வாரமாவுது..சரி.. இருக்கறத குடுத்துட்டு ஓடுங்கடா' என அவன் விரட்டியும் ' 'அதெப்பிடிங்க?...' என சும்மாவே கத்துவது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தது மறக்க முடியாது.
80 வயதான தாத்தா எங்கள் வீட்டு தின்னையில் படுத்துக்கொள்வார். இரவு 9 மணிக்கு விசிறியையும், சொம்பு தண்ணீரையும் தள்ளி வைத்துவிட்டு, படுக்கையை விரித்து, மெத்தைக்கு மேல் கொசுவலையை கட்டி, உள்ளே புகுந்து, நலாபுறமும் மெத்தைக்கு கீழே கொசுவலையை சொருகிவிட்டு, ஜாக்கிரதையாக கால் பகுதி வழியாக வெளியே வந்து அவர் கொல்லைப்புறம் பாத்ரூம் போகும் வரை நாங்கள் சத்தமாக படித்துக்கொண்டிருப்பதுபோல பாவலா காட்டுவோம். தாத்தா அந்தப்பக்கம் போன உடனே சடாரென எழுந்து ஓடி வருவோம். நான் கொசுவலையை மடிக்க, ரவி மெத்தையை சுருட்டுவான். அடுத்த இரண்டே நிமிடத்தில் தாத்தா வரும்போது அங்கே விசிறி, தண்ணீர் சொம்பு மட்டுமே இருக்க, நாங்கள் 'அசோகர் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார், தனது மகள் சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பினார்' என சத்தமாக படித்துக்கோண்டே கடைக்கண்ணால் தாத்தாவை பார்க்க, அவர் 'படுக்கைய நேத்து விரிச்சேனா.. இன்னிக்கு விரிச்சேனா' என குழம்பி எங்களை பார்ப்பார். அவ்வளவு தான். ஹே...ஹே... என பெருங்குரலெடுத்து நாங்கள் சிரிக்க..ஒரே தாமாஷ் தான்.
இருவரும் சில வருடங்கள் பம்பாயிலும் சேர்ந்து வேலையிலிருந்தோம். மதிய உணவு இடைவேளையில் மிட்டல் கோர்ட் வாசலில்பாவ் பாஜி, திருநெல்வேலி அண்ணாச்சி கடையின் மசால் தோசை சாப்பிட்ட நாட்கள் பல. நான் பஹ்ரைன் வந்த ஓரிரு வருடங்களில் அவனும் இந்தப்பக்கம் வந்துவிட்டான். தற்போது மஸ்கட்டில் வங்கியொன்றில் வேலை. நடுவே பஹ்ரைன் வங்கியொன்றில் 5 வருடங்கள் இருந்து மறுபடியும் பழைய நினைவுகளை என்னுடன் அசை போட்டது மறக்க முடியாது. எங்களை மாதிரி எங்கள் பையன்களும் சேர்த்து செஸ், ஃபுட்பால் என சேர்ந்து விளையாடினாலும், நாங்கள் கலக்கிய மாதிரி லூட்டியெல்லாம் அடிக்கவில்லை.
இன்று 54 ஆவது பிறந்த நாள் காணும் Vijay Raghavan )க்கு இந்த பென்சில் ஓவியத்துடன் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Jaishankar Srinivasan

சினிமா நடிகர் ARS அவர்களது மகன். சுமார் 15 வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் பால்ய நண்பன் Ganapathi Subramanian மூலம் எனக்கு அறிமுகமான CA இவர்.
நம்மிடமெல்லாம் பேசுவாரா என தயங்கி நின்ற என்னிடம் மிக சகஜமாக பேச ஆரம்பித்தவர். செம்ம அரட்டை பேர்வழி. படு சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர்.
கணபதி வீட்டில் நண்பர்கள் குடும்பத்துடன் சந்திக்கும்போது இவரும் மற்றொரு நண்பர் கோபியும் சேர்ந்து சிறு நகைச்சுவை நாடகம் போடுவார்கள். தேங்காய் ஶ்ரீனிவாசன் போன்ற நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்து எல்லோரையும் அசத்துவார்.
பஹ்ரைனில் பெரிய நிறுவனமொன்றில் Head of Finance ஆக இருந்தவர். சாய் பஜன்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொள்பவர். வேறு பணி கிடைத்து பஹ்ரைனை விட்டு இவர் கிளம்பிப்போகவும் எங்களது தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டாலும், சில வருடங்களுக்கு முன் கத்தார் நாட்டிலிருக்கும் இவருடன் முகநூல் மூலம் மீண்டும் தொடர்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக்கு.
Desi Army என்ற பெயரில் நண்பர்கள் புடைசூழ மற்ற நாடுகளுக்கு சென்று வண்ண உடைகள் மற்றும் டர்பன்களுடன் கிரிக்கெட் மாட்ச் பார்ப்பது, நல்ல சினிமாப்படங்கள் பார்ப்பது , வார இறுதிகளில் கிரிக்கெட், கால்ஃப் விளையாடுவது, நீச்சல் குளத்தில் கொட்டமடிப்பது..நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள் தான் இவரது உலகம்.
ஜெய் சினிமா பேரவை என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதி அவ்வப்போது அசத்துபவர்..
இறைவன் அளித்த இந்த வாழ்க்கையை இனிமையான பொழுதுகளுடன் நண்பர்களுடன் மகிழ்ந்து கொண்டாடி, நற்பணிகள் செய்தும், நமது சனாதன தர்மங்கள் மற்றும் பூஜை புணஸ்காரங்களை மறவாமல் அனுஷ்டித்து, நமது பண்டிகைகள் அனைத்தையுமே பாரம்பரியத்துடன் கொண்டாடி, தமிழர் பெருமையை கத்தாரில் நிலைநாட்டும் நண்பர் Jaishankar Srinivasanஐ அவரது பிறந்தநாளான இன்று பென்சிலில் வரைந்த அவரது உருவப்பட ஓவியத்துடன் வாழ்த்தும்..
சீதாபதி ஶ்ரீதர்

'பாத்துப்பா! ஜாக்கிரதை'

'பாத்துப்பா! ஜாக்கிரதை' என்று சாஹுலின் கையை பிடித்து சாலையை கடந்தபோது கவனித்தேன், முழங்கைக்கு கீழே மணிக்கட்டு வரை சருமம் அவ்வளவு மிருது. இன்னும் அதே 4 வயது குழந்தை முகம்.
arrival பகுதியிலிருந்து விமான தளத்தின் வெளியே கார் பார்க் வந்து அவனிடமிருந்த ஒரே பெட்டியை ட்ரங்க்கில் போட்டு விட்டு வண்டியை எடுத்து நெடுஞ்சாலை வந்தவுடன்...
'சொல்லுப்பா.. திருச்சியெல்லாம் எப்பிடியிருக்கு?'
'நல்லா போய்ட்டிருக்குண்ணே! வேலை வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. அம்மா சந்தோசப்பட்டாங்க. ஐம்பது வயசுல கல்ஃப் ஜாப்.. சந்தோசமா இருக்கு'.
'நீ படிச்ச ICWA படிப்புக்கு இங்க அவ்ளோ ஸ்கோப் இல்லப்பா. ஏதோ உனக்கு நல்ல நேரம். இங்க வேலை கெடச்சது. சரி.. திருச்சில என்ன விசேஷம்?'
'திருச்சிக்கென்னண்ணே! சூப்பரா இருக்கு. மாமு இன்னமும் கடைக்கி போறாங்க. அம்மாக்கு வயசாச்சு. வீடு வாங்கின கடன் கொஞ்சம் பாக்கி. நம்ம ஏரியா தர்கா, தோப்பு எல்லாம் இன்னம் அப்பிடியே இருக்கு'
திருச்சி பற்றி யாராவது பேசினாலே மனம் குதூகலமாகும். கருப்பு வெள்ளையில் ஃப்ளாஷ்பாக் மாதிரி பழைய நாட்கள் மனத்திரையில் ஓடும். வெளியே லேசான மழை. சாலையின் ஈரத்தில் வண்டி வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு பஹ்ரைன் ஏர்போர்ட் சர்வீஸ் கம்பெனி தாண்டி ரவுன்டபௌட் வந்து நின்றபோதும் மனம் இன்னும் திருச்சியில்..
1970களில்.. தென்னூர் அமிருதீன் ஆசுபத்திரி தாண்டி ஜெனரல் பஜார் தெருவில் நுழைந்து இருபது முப்பது வீடுகள் தள்ளி இடது புறம் பெரிய மோரியை தாண்டினால் நாங்கள் வசித்த பென்ஷனர் காரத்தெருவு. சுமார் இருபது குடும்பங்களே உள்ள அந்த தெருவில் எங்களைத்தவிர எல்லோருமே இஸ்லாமியர்கள். நான் அப்போது ஏழாம் வகுப்பு. செஞ்சோசப்ஸ். என் தம்பி ரவி( Vijay Raghavan ) யுடன் பாதி நேரம் ஏதாவது ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பேன்.
மற்ற பசங்களுடன் சேர்ந்து நானும் ரவியும் உருது சரளமாக பேசுவோம். 'இதாகே! உதர் ஜாகே!' (இந்தாடி! அங்க போடி!) ... 'ஆப்பா! வக்கத் ஹோகயா.. மை ஜாத்தாவூன்' ( அக்கா! நேரமாச்சு நான் போறேன்) என கூட விளையாடும் சிறுவர் சிறுமிகளிடம் சகஜமாக பேசிக்கொண்டிருப்போம்.
தெருமுகனையில் சைக்கிள் கடை பாஷா கடையை திறக்க பெரிய காக்கி ட்ரௌசர் அணிந்தபடி விடிகாலை கிளம்புவார். இரண்டுநாள் தாடி.. பச்சை கண்கள். அவரது வீட்டு பாபு, பர்வின், ஃபரிதா, சீரின், நஸ்ரின் மற்றும் பக்கத்து வீட்டு கௌஹர், ஃபாரூக், அஃப்ரோஸ், ரஹமத்தி எல்லோரும் நண்ப/நண்பிகள். மாலை குர்ஆன் சொல்லிக்கொடுக்கும் நானி வரும்வரை சிறுமிகள் எங்களோடு விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
தினமும் எங்களுடன் விளையாடும் பர்வின் திடீரென வராமல் வீட்டு ஜன்னல் வழியாக நாங்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், 'ஏய் பர்வின்! இதர் ஆகே' என நாங்கள் கூப்பிட சட்டென உள்ளே மறையும்போது தான் கவனிப்போம், அவள் தாவணிக்கு மாறியிருப்பதை. அவள் ஏன் வரவில்லையென தெரியாமல் 'ஆனேகா தோ ஆவ்.. நைதோ ஜாவ்' என உடனே மறந்துவிடுவோம்.
கார் ஹாரன் ரிப்பேர் செய்யும் தாவூத்பாய் மெதுவாக இரண்டு கட்டைகுச்சிகளை கக்கத்தில் வைத்தபடி மடித்துக்கட்டிய வேட்டிக்கு நடுவில் விளங்காத இரண்டு கால்களை தள்ளியபடி வெளியே வருவார். பாசிடிவ் நெகடிவ் ஒயரை இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு கீ.. கீ என அவர் ஹாரன் ரிப்பேர் செய்வதில் யாருக்கும் தொந்தரவு இருக்காது.
முதலியார் சத்திரம் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் ஹஃபீஸ் பாய் சைக்கிளை வெளியே இறக்கிய பின் வாயிலிருந்து சிறிது எச்சிலை விரலில் எடுத்து சக்கரத்தில் வைத்து காற்று வெளியே வருகிறதா என்று பார்ப்பார்.
தெருவில் நடக்கும் எல்லா முஸ்லிம் திருமணங்களுக்கும் அழையா விருந்தாளி நாங்கள். காலை ஸ்கூல் கிளம்பும்போது லௌட் ஸ்பீக்கரில் 'மெ ஷாயர் தோ நஹி' பாட்டு ஒலித்தால் ஏதோ ஒரு வீட்டில் கல்யாணம் எனத்தெரிந்துகொள்வோம். சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேராக அங்கே ஓடிப்போய் பந்தலில் விளையாடிக்கொண்டிருப்போம், உதடுகளில் 'ஜூட்டு போலே கவ்வா காட்டே' பாடலை முனுமுனுத்தபடி.
என் அக்கா மற்றும் பக்கத்து வீட்டு பாத்திமா, மும்தாஜக்காவுடன் புத்தூர் அருணா அல்லது கெயிட்டி தேட்டரில் பாபி, அன்ஹோனி, ஜன்ஜீர் படங்கள் பார்ப்போம். பம்பரம் விளையாடும்போது கூட 'ஜூம்பரபர ஜூம்பரபர ஜூம்ஷரபி ஜூம்' என ஏதோ ஒரு ஹிந்தி சினிமாப்பாட்டை வாய் முனுமுனுக்கும்.
பாத்திமாக்கா வீட்டில் அவரது அண்ணன்கள், பெல்லுல வேல செய்யும் காதர்மாமு (BHEL) மற்றும் தினமும் ஆணழகு மையம் போகும் மஹ்பூப் மாமு இருவரும் எங்களுக்கு மாமா மாதிரி. மஹ்பூப் மாமு எப்போதும் ஜலதோஷம் வந்த மாதிரியான குரலில் 'ஏ துனியா.. ஏ மெஹ்ஃபில்... மேரே காம் கி நஹி..' என ரஃபி பாட்டை பாடுவார். அவர்கள் வீட்டில் எப்பவும் குஸ்கா வாசனை. ரவா பாயசம் கொடுப்பார்கள். முன்னறையில் ஈரத்துணியுடன் நடிகை ரேகா அல்லது மும்தாஜ் படமிட்ட காலண்டர் தொங்கும்.
தெருவில் மற்ற பையன்களுடன் கட்டிப்புரண்டு புழுதியில் சண்டை போட்டு தோற்றுவிட்டால் 'ஜாரே டோலா!' என கத்திவிட்டு வீட்டுக்கு ஓடுவது..
வீட்டின் பின்பக்கம் தோப்பில் விளையாடும்போது மோரியில் விழுந்த கோலிகுண்டை இடது கையால் எடுத்து சட்டென பின் பக்கம் துடைத்துக்கொண்டு கையை மோந்து பார்ப்பது..(தனியாக அதற்கு அடி விழும்)
தோப்பில் உள்ள பழைய தர்காவை சுத்தம் செய்து சந்தனக்கூடு நிகழ்ச்சி. நாகூர் ஹனிஃபாவின் 'மக்கத்து மலரே மாணிக்கச்சுடரே யாரசூலல்லா' பாடிக்கொண்டிருக்கும். அஸ்கா பொட்டுக்கடலை அல்லது ரவா கேசரி மாதிரி அவர்கள் கொடுக்கும் திண்பண்டத்தை அடித்துபிடித்து வாங்கி திண்பது..
பள்ளிவாசலில் கொடுக்கும் நோம்புக்கஞ்சிக்கு நாங்களும் வரிசையில் நிற்பது..
மாலை 7 மணிக்கு பள்ளி வாசலுக்கு வெளியே மந்திரித்து அவர்கள் நம் தலையில் ஸ்ஸ்ஸூ என ஊதுவதை இரண்டாம் தடவையும் வாங்க வரிசையில் நிற்பது...
ரோட்டின் நடுவே மேடை போட்டு நடக்கும் பர்வீன் சுல்தானா மற்றும் பம்பாய்க்காரர் கவ்வாலி கச்சேயில் முன் வரிசையில் மத்த பையன்களுடன் உட்கார்ந்து நாங்களும் கவ்வாலி (மாதிரி) பாடிக்கொண்டிருப்பது..
சந்தோஷமான தருணங்கள் பல..
அந்த தெருவில் அப்போது புதிதாக குடி வந்தவன் அஷ்ரஃப். அப்பா இல்லாமல் குடும்ப பாரம் முழுவதும் அவன் மேல். அம்மா, தம்பி, தங்கை மற்றும் திருமணமான அக்கா, அக்காவின் நான்கு வயது பையன் மற்றும் 6 மாதக்குழந்தை.. ஓட்டு வீடுகளுக்கு நடுவே ஒரு வெற்றிடத்தில் குடிசை போட்டு தன் பெரிய குடும்பத்துடன் இருந்தான். பாலக்கரை எடத்தெருவில் கடிகார ரிப்பேர் கடை வைத்திருந்தான்.
கடை விடுமுறையான ஞாயிறன்று பக்கத்தில் பாத்திமாக்கா வீட்டில் கடிகார பாகங்களை தரையில் பரத்திப்போட்டு ரிப்பேர் செய்வான். காதர் மாமு அதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. அப்பா இல்லாத குறையாய் தன் குடும்பத்தையும் தன் அக்காள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டான் அஷ்ரஃப். சைக்கிளில் விசுக் விசுக்கென அலைந்து தினமும் ஓடியாடி உழைப்பவன். தலையில் சிலுப்பி நிற்கும் வணங்காமுடி மற்றும் காவி பற்கள். கண்களில் லட்சியம் தெரியும்..
ஒருநாள் ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தூரத்தில் புகை. ஒரே சத்தம். கூட்டம். ஓடிப்போய் பார்த்தால் அஷ்ரஃப்பின் குடிசை எரிந்துகொண்டிருந்தது. அவன் கடைக்கு போயிருந்தான். எல்லோரும் பக்கெட் தண்ணீருடன் ஓட, தீயணைக்கும் வண்டி வந்து தண்ணீர் அடித்தது. பாதி தீயை அணைக்க, உள்ளே இருந்து அஷ்ரஃபின் அம்மா, தங்கை, தம்பி என எல்லோரையும் வெளியே கொண்டு வந்தார்கள். சைக்கிளை போட்டுவிட்டு ஓடி வந்த அஷ்ரப் ஓவென அலறினான். எங்கும் பெண்களின் மரண ஓலம். அக்காவின் ஆறுமாத குழந்தை உட்பட குடும்பத்தில் பாதி பேரின் இறந்த உடல்களை வெளியே கொண்டுவந்தார்கள்.
அஷ்ரஃபை கட்டுப்படுத்த முடியவில்லை. இருவர் அவனை பிடித்துக்கொள்ள, திடீரென குடிசையின் பக்கவாட்டில் சிறிய ஓட்டையிலிருந்து அக்காவின் நான்கு வயதுப்பையன் வெளியே ஓடி வந்தான். எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி, பாதி பேர் இறந்தும் இவன் எங்கே ஒளிந்திருந்தான் என.
பாதி தலைமுடி எரிந்து தலையில் நெறுப்புக்கங்குகள், முழு அம்மணமாக சதையும் தோலுமாக வெளியே ஓடி வந்தவனை காதர்மாமு ஓடிப்போய் கைகளை பிடித்து தூக்க, அவன் 'ப்ளக்'கென வழுக்கிக்கொண்டு விழுந்தான். அடுத்த நொடி காதர்மாமு கையில் அரை ஜான் அகலத்தில் சிறுவனின் கைப்பகுதியின் தோல்.. தரையில் கிடந்த குட்டிப்பையன் கையில் முழங்கைக்கு கீழே மணிக்கட்டு வரை வெள்ளையும் சிகப்பும் கலந்த நிறத்தில் வெறும் சதை..
இனி பதிவின் முதல் வரிக்கு போகலாம்.

வெங்கட் & சுகன்யா

'ஶ்ரீதர்! சாயங்காலம் வீட்டுக்கு சாப்பிட வத்துடுங்க..' என் இவர் என் ஆபிசுக்கு போன் செய்ததும் மனம் குதூகலிக்கும். மாலை நண்பன் சந்துரு Balasubramaniam Chandrasekaranனுடன் செம்பூரிலிருந்து கிளம்புவேன். இவரை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே சந்துரு தான். நாங்கள் எல்லோரும் குடும்ப சூழ்நிலை காரணமாக CA, ACS போன்ற படிப்புகள் முடிக்கும் முன்பே பம்பாய்க்கு வேலை தேடி வந்தவர்கள். வீட்டிற்கு பணம் அனுப்பி வேலையிலிருந்துகொண்டே கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்தோம். தக்கலை பத்மநாபன் மற்றும் ஶ்ரீரங்கம் ரங்குவும் கூட இருப்பவர்கள். திடீரென ஒருநாள் இவரோ சந்துருவோ 'டேய்.. நா ACS முடிச்சுட்டேன்' என வந்து நிற்பார்கள். அடுத்து ஹோட்டலில் ட்ரீட், ஆபிசில் பதவி உயர்வு.. திருமணம் என நல்ல பல மாற்றங்கள்.
கம்பெனி செக்ரட்டரி என பெருமையுடன் கையில் சிறிய ப்ரீஃப் கேசுடன் பம்பாய் VT ஸ்டேஷனிலிருந்து ஹோமி மோடி தெரு வழியாக இவர் தினமும் நடந்து போவார்.
JM Bakxi எனப்படும் கப்பல் நிறுவனத்தில் இவருக்கு வேலை. ஃபோர்ட் பகுதியில் மிகப்பழைய கட்டிடத்தில் இவரது ஆபிஸ். இந்தியாவில் துறைமுகங்கள் உள்ள பல நகரங்களில் உள்ள இவர்களது கிளை அலுவலகங்களுக்கு இவர் ஆடிட் செய்ய அடிக்கடி விமானப்பயணம் செய்வார். இவரைச்சுற்றிலும் நிறைய நண்பர்கள். 'வேலை மாறனுமா! உங்க சீவியை குடுங்க.. நம்ப ஃப்ரெண்டு ஒருத்தன் இன்ன கம்பெனியில வைஸ் பிரெசிடென்ட்.. அவன்ட்ட சொல்லி அடுத்த வாரம் ஆஃபர் லெட்டர் வாங்கித்தறேன்' என அடித்துச்சொல்வார்.
மாலை சந்துருவும் நானும் செம்பூரிலிருந்து ரயில் பிடித்து மான்குர்ட் ஸ்டேஷனில் இறங்கி பஸ் பிடிப்போம். அடுத்த அரை மணி நேரம் கடல் தாண்டி பம்பாய் நகரை விட்டு சுமார் 15 கிமீ.ல் வாஷி நகரம். வாஷி பிரம்மச்சாரிகளின் வாஷிங்டன். பழைய அழுக்கு கட்டிடங்கள், கூட்டம் நிறைந்த காந்தா பட்டாட்டா காய்கறி மார்க்கெட், இட்லி தோசை புரோட்டா நெல்லை அண்ணாச்சி கடைகள். காலை 7 மணிக்கு தலைகுளித்த ஈரம் சொட்ட சுடிதார் அணிந்த தமிழ்ப்பெண்கள் வாஷியில் பஸ் பிடித்து நாரிமன் பாயின்ட்டில் ஏதோ ஒரு ரஹேஜா அடுக்குமாடி கட்டிடத்தின் 25ஆம் தளத்தில் எலெக்ட்ரானிக் டைப்ரைட்டர் முன் வேலை செய்து இரவு 8 மணிக்கு வாஷியில் இறங்கி ஷேர் ஆட்டோ பிடித்து ஓடும்போதும் அதே பளிச்சென்ற முகம். 'டேய்! இவ பன்னீர் புஷ்பங்கள் சாந்தி மாதிரி இருக்கால்ல!' பஸ் பிடிக்கும் அவசரத்திலும் நாங்கள் ஜொள் விடும் சந்தர்ப்பங்கள்.
வாஷியிலிருந்து அடுத்த அரை மணி நேரப்பயணம்.. நாம் வந்து சேரும் இடம் CBD பேலாப்பூர். பம்பாயிலிருந்து 40 கிமீ தூரம். காலனி மாதிரி அழகான ஒரே மாதிரியான கட்டிடங்கள். பாதி பஞ்சாபி..மீதி தமிழ்/மலையாள குடும்பங்கள். ஒரு/இரு படுக்கையறை ஃப்ளாட்டுகள். டர்பனில்லாத சர்தார்ஜி அப்பாக்கள் தலைமுடியை விரித்துப்போட்டு அழகிய மகள்களுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி இரவு பத்து மணிக்கு ரோட்டில் உலாத்துவதை நாங்கள் அதிசயமாக பார்ப்போம். 'டேய்.. அப்பிடியே லட்டு மாதிரி இருக்கா பாரு அவம்பொண்ணு!' சந்துருவின் கமென்ட்..என்னுடையதல்ல..
சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் ஒன்றில் இவர், இவரது தம்பி குமார், இவரது மனைவி, அவரது தங்கை சுஜாதா மற்றும் கணவர் பாஸ்கர் Bhaskaran Krishnamoorthy , பேச்சலர் நண்பர்கள் என எல்லோரும் வட்டமாக உட்காரந்து பத்து மணிக்கு மேல் இரவு உணவு. எக்கச்சக்கமாக தேங்காய் துருவிப்போட்ட கோசுப்பொறியல், மிளகு வாசனையுடன் ஒரு கூட்டு, மணக்கும் சாம்பார், பருப்பு ரசம், ஆரே பாலில் தோய்த்த கட்டித்தயிர், ஏரோப்ளேன் ஊறுகாய். 'ஶ்ரீதர்! மிச்சம் வைக்காதீங்க.. அந்த சாம்பாரை நன்னா தயிர் சாதத்தில் விட்டுக்கோங்கோ என சொன்ன கையோடு கடாயோடு சாம்பாரை நம் தட்டில் கவிழ்ப்பார் இவர். திவ்யமான சாப்பாடு முடிந்து 'கோரா ஔர் காலா' என ஏதோ ஒரு பாடாவதி ஹிந்திப்படத்தை டெக்கில் போட்டு 'தீரே தீரே போல் கொய் சுன்னா லே' பாடும் ராஜேந்திர குமாரை செம்மையாக கலாய்த்து, ஏகத்தும் சிரித்து அரட்டையடித்து நள்ளிரவில் பஸ் பிடித்து நானும் சந்துருவும் செம்பூர் வந்து சேர்வோம்.
இவர் வெங்கட்.. மனைவி Sukanya Venkataraman. 30 வருடங்கள் கழித்தும் இன்னும் அதே இளம் தம்பதியாகத்தான் என் கண்களுக்குத்தெரிகிறார்கள். சுகன்யாவும் அவரது சகோதரி சுஜாதாவும் Sujatha Bhaskaran சிறப்புக்குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தில் அறப்பணி செய்பவர்கள்.
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வெங்கட் & சுகன்யா..

Tiruchendurai Ramamurthy Sankar

1999/2000 ல் இவர் முதன்முதலாக எங்கள் 'பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்'பிற்கு அறிமுகம் ஆனார். பிறகு மற்ற வளைகுடா நாடுகளில் வேலை செய்துவிட்டு கடந்த 3 வருடங்களாக மறுபடியும் பஹ்ரைன்/சவுதி....
பழக இனிய நண்பர். . எங்கூர்க்காரர்(திருச்சி)...சி.ஏ. மட்டுமல்லாது அது சம்மந்தப்பட்ட உயர் படிப்புகள் படித்தும் படாடோபமில்லாமல் ரொம்ப அடக்கம்.. எப்போதும் முகத்தில் அணிந்திருக்கும் புன்னகை..சவுதியிலிருந்து பஹ்ரைன் வரும்போது தவறாமல் வீட்டுக்கு வருவார்..சாப்பிட ஹோட்டலுக்கு கூட்டிப்போவார். மணிக்கணக்கில் சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்பார்..
தயக்கமில்லாமல் சொல்ல வந்த கருத்தை தாழ்மையுடனும் அழுத்தமாகவும் சொல்பவர்.
பம்பாய் சர்னி ரோடு மரைன் ட்ரைவ் பகுதியில் தினமும் அன்றைய நிகழ்வுகளை சம்மந்தப்படுத்தி வெளியிடப்படும் மிகப்பிரபலமான 'அமுல் வெண்ணெய் விளம்பரம்' போல தனது அரசியல் பதிவுகளை நாலைந்து வரிகளில் நையாண்டி/நகைச்சுவை கலந்து நச்சென எழுதுபவர்..
கதை, கட்டுரை, கவிதை, இந்திய/உலக அரசியல், தமிழ்/ஆங்கில இலக்கியம் என எல்லா துறைகளிலும் கலக்குபவர்...
'மோட்டுவளைச்சிந்தனைகள்' மற்றும் 'காதல் தஸ்தாவேஜுக்கள்' தொடர்கள் எழுதி முகநூல்
உலகையை அசத்தியவர்...
நகைச்சுவை தான் இவரது பலம் என்பதற்கு இவரது பதிவுகளில் நிறைய சான்றுகள். சாம்பிளுக்கு சில இதோ...
பெட்டிக்கடியில் வைத்து கை வைத்த வெள்ளை பனியனை தேடுவதைப்பற்றி எழுதி அப்படியே நவநீத கிருஷ்ணனை(விஜய லக்ஷ்மி) கலாய்ப்பது...
ராஜேஷ் 'காக்கா' இறந்தபோது அவருக்கு விருது வழங்கியிருக்கலாமென அங்கலாய்க்காமல் 'காக்கா' ராதாகிருஷ்ணனுக்கு விருது வழங்க 'பரிந்துரை' செய்தவர்..
இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்ததும் 'டெசோ, சீமாசோ, வைகோசோ, நெடுசோ' என இவர்களை சாடியவர்...
'தி'றந்த 'ம'டல் கிருஷ்ணா' வாம்.
'சிறு குழந்தை போல நடந்துகொண்ட அத்வானியை 'LK'ji என்பதற்கு பதிலாக இனி LKG என அழைக்கலா'மாம்,..
'என்ன சங்கர்...ஃப்ரெஞ்ச் ஓப்பன் ஜிம் குரியர்.. வயது 21 ன்னு போடறான்.. சட்டைய கழட்னா பூணூலே இல்ல' என கேட்கும் மாமா புள்ள நந்து...
'பிராண்டு அம்பாசிடரா? ஏண்ணே அம்பாசிடரத்தான் மூடிட்டாங்களாமில்லே!'
'மோடி காவி(ய)த்தலைவன்... ராகுல் காலித்தலைய'னாம்...
'மனைவி சொல்லுக்கு எதிர்வாதம் செய்யாமல் 'ஆம்' சொல்லும் அனைவரும் 'ஆம் ஆத்மி' தான்..'
"பெண்ணின் அப்பா: பையனோட நடத்தை எப்பிடி?
தரகர்: என்ன இப்பிடி கேட்டுட்டீங்க..அவனோட நன்னடத்தைக்காக ஆறு மாசம் முன்னேயே ரிலீஸ் பண்ணிட்டாங்க..
பழைய ஜோக்.. ஆனா சஞ்சய் தத்துக்காக எழுதியதல்ல"வாம்...
இவரது மனைவி Kalpana Sankar என் மனைவி Usharani Sridharஉடன் போனில் அரட்டை அடிப்பதைப்பற்றி குறிப்பிடும்போது 'கல்பனா ராங் நம்பர்க்கே அரை மணி நேரம் பேசிட்டு தான் ஃபோனை வைப்பா' என்றது இவரது குறும்பின் ஹலைட்..
ரணகளம் பண்றீங்க சங்கர்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ...

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ...


தாய்லாந்து செல்ல முடிவு செய்ததும் மனைவி Usharani Sridhar பஹ்ரைனிலிருந்தே Durga Ganapathi Subramanian உதவியுடன் சென்னையைச்சேர்ந்த டிராவல்ஸ் கம்பெனியுடன் தொடர்பு கொண்டு எங்கள் பிரயாணத்தை பிளான் செய்து பணத்தை முன்கூட்டியே அனுப்பிவிட, அழகான ஐடினெரரி அனுப்பி அதில் இன்னார் தான் உங்கள் கைடு, ஏர்போர்ட்டில் வரவேற்பார், இன்ன விடுதிகளில் உங்களுக்கு ஜாகை, காலை சிற்றுண்டி உண்டு, இன்னென்ன ஸ்தலங்கள் சுற்றிப்பார்ப்பீர்கள்.. இத்தினி மணிக்கு ஏர்போர்ட் ட்ராப் என அழகாக விபரங்கள்.
நாட்டின் மொத்த வருவாயில் பாதிக்கு மேல் ஏற்றுமதி மூலமும் பத்து சதவீதம் சுற்றுலா மூலமும் தானாம். அதிலும் சமீபத்திய ராணுவ ஆட்சி கலவரங்கள் மற்றும் மன்னரது இறப்பும் சுற்றுலா வருமானத்தை சற்றே பின்னுக்குத்தள்ளியது உண்மை. உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் சுற்றுலாவிற்காக மக்கள் குவிந்தவன்னம் இருக்கிறார்கள்.
நாங்கள் பாங்க்காக் சுவர்ணபூமி ஏர்போர்ட் விட்டு வெளியே வரும்போது 'சீதாபதி ஶ்ரீதர்' பெயர் பொறித்த பதாகையுடன் நடுத்தர வயது பெண்மணி வரவேற்றார். 300 'தாய் பாட்' க்கு (ரூ 600) பேசும் நேரம் மற்றும் ஒரு மாத கால இன்டர்நெட் வசதியுடன் உள்ளூர் சிம் கார்டு ஒன்றையும் கையில் திணித்தார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் டொயோட்டா வேனில் பட்டாயா நகரின் ஹோட்டல் சென்றடைந்தோம். அங்கேயும் 'சீதாபதி ஶ்ரீதர்' பலகைப்பெண். அவளுக்கு ஆங்கில 'r' வரவில்லை...'ல' தான். 'டுமாலோ 10 ஓ க்ளாக்.. பீ லெடி' என்று சொல்லிவிட்டுக்கிளம்ப எத்தனித்தவளை நிறுத்தி 'இப்ப அஞ்சு மணி தானே! ராத்திரி வரைக்கும் சுத்தி பாக்க எதாவது 'ப்லொக்லாம்' கொடும்மா' என்றதும் டக்டக்கென போன் செய்து அடுத்த ஒரு மணி நேரத்தில் வேன் வரும் என்றாள்.
வேன் வருவதற்குள் ஹோட்டலை விட்டு கடை வீதிக்கு வந்தோம். ரோடெங்கும் ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள். நான், மனைவி உஷா, அவரது தங்கை மற்றும் கணவர். வீதியின் இரு பக்கமும் ஏராளமான மசாஜ் பார்லர்கள், கடைகள், உணவகங்கள், விடுதிகள். பெண்கள் கடை வாசலில் மசாஜ் விலை அட்டையுடன் நின்றபடி கஸ்டமர்களை அழைத்துக்கொண்டிருந்தார்கள். செறுப்பு, கண்ணாடி, பைகள், துணி வகைகள், பெல்ட், எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்போர்ட்ஸ் உடைகள் என வியாபாரம். விலையோ கொள்ளை மலிவு. அதிகம் பேரம் பேச அவசியமில்லாமல் நியாயமான விலை. பைகளில் நிரப்பிக்கொண்டு திரும்பி வரும்போது வண்டி காத்திருந்தது.
சுமார் ஒரு மணி நேர Alcazar show-தாய் நடனம் பார்த்தோம். எம்ஜியார் தாய்லாந்தில் மெட்டா ரூன்க்ரேட்டுடன் ஆடிக்களித்தபோது எம்எஸ்வி போட்ட அதே ட்யூன் பேக்ரௌண்டில் ஒலிக்க, சுற்றி சுற்றி வந்து அழகாக ஆடினார்கள் பொம்மை மாதிரியான தாய்ப்பெண்கள். ஆடிட்டொரியம் முழுக்க வட இந்தியர்கள் தான். நடன சத்தத்தையும் மீறி நம்மாட்கள் பேச்சு சத்தம்.
அது முடிந்து ஹோட்டலுக்கு பக்கத்திலேயே மதராஸ் தர்பாரில் அருமையான பொங்கல், தோசை இட்லி ஆயிற்று. இரவு பத்து மணி வாக்கில் புகழ்பெற்ற வாக்கிங் ஸ்ட்ரீட் நுழைந்தோம்...
'வாக்கிங் ஸ்ட்ரீட்'டில் வாகனங்கள் அனுமதி இல்லை. தீபாவளிக்கு முதல்நாள் திருச்சி பெரியக்கடை வீதி போல ஜனத்திறள். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கடைகள். எல்லாமே திறந்தவெளி சாராய (pub) விடுதிகள். எல்லா விடுதிகளிலும் பாடல்கள் (live band) ஒலித்துக்கொண்டிருக்க எங்கு பார்த்தாலும் மேற்கத்தியர்கள். 'ஹோட்டல் கலிஃபோர்னியா', 'ஐ ஷாட் தி ஷெரீஃப்', 'வாக் ஆஃப் லைஃப்', பீஜீஸின் 'சாட்டர்டே நைட் ஃபீவர்' போன்ற 90களின் பிரபல பாடல்களை பாண்ட் காரர்கள் பாட, மேற்கத்திய முதியவர்கள் ரசித்தபடி மொந்தை மொந்தையாய் கள்ளை நுரையுடன் வாயில் கவிழ்க்க, பெண்கள் ஓடிவந்து கின்னங்களை சீமைச்சாராயத்தால் நிரப்பினார்கள். தேவலோகம் போல புகை மண்டலம். ஏகத்துக்கும் சிகரெட், மது வாடை.
எல்லா கடை வாசலிலும் ஏழெட்டு பெண்கள். கையில் விலைப்பட்டில், காலில் அரை நிக்கர். 'சாரி.. வேண்டாங்க' என அவர்களைக்கடந்து சற்றே தலை நிமிர்த்தி பார்த்தால்..நாராயணா!. கடை பால்கனிகளில் ஆங்காங்கே 'பப்பி ஷேம்' பெண்கள். கண்களில் 'ரா..ரா.சரசுக்கு ரா..ரா'. தேகத்தில் உடை இருக்கிறதாவென சந்'தேகம். நல்ல வேளை.. இருந்தது.. ஆனால் சொச்சமாக. கூட்டம் அதிகம் என்பதால் உஷா என் கையை கெட்டியாக பிடித்து இழுத்துக்கொண்டு ரோட்டோரக்கடை ஒன்றில் நிலக்கடலை வாங்கினாள் (இப்ப ரொம்ப அவசியம்!).
சில பார்லர்களில் பெரிய மேசையைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கைகளில் மதுக்கோப்பைகளுடன் சம்பாஷனையிலிருக்க மேசையின் நடுவே நின்றபடி யுவதியொருத்தி களிநடம் புரியக்கண்டேன்.. சாரி.. டோம். நல்ல வேளை உடை அணிந்திருந்தாள். நாம் கழுத்தில் சுற்றிக்கொள்ளும் மஃப்ளரைக்கொண்டு இரண்டே சுற்றில் தன்னை மறைத்துக்கொண்டு ஷேமமாக இருந்தாள் அந்த ஏகவஸ்திரதாரினி (ஒரே பீஸ்). எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டு அப்பப்ப படக்கென ரோட்டில் கல் இடறி கீழே விழ இருந்த என்னை உஷா கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.(ரோடுனி பாக சூசி நடுவண்டி!) இரவு பன்னிரண்டு மணி வாக்கில் ஹோட்டல் அறைக்கு திரும்பினோம்.
மறுநாள் குளித்துவிட்டு விசைப்படகுச்சவாரி. சுமார் 80 கி.மீக்கும் சற்றே அதிக வேகம். ஆக்ரோஷமான அலைகளின் மேலே படகு ஓரடி உயரம் பறந்தபோது இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டோம். ஊவென எல்லோரும் அலறல். பத்து நிமிடத்தில் கடலின் நடுவே மிதக்கும் தளம் ஒன்று வந்து சேர்ந்தோம். 'பாரா க்ளைடர்' என நம்மை பாராசூட்டில் கட்டி விசைப்படகு இழுத்துச்செல்ல ஜிவ்வென வானில் பறப்போம். நாம் பறக்கும் பாராசூட்டின் கயிறு அறுந்து, அல்லது மற்றொரு பாராசூட்டுடனோ படகுடனோ மோதி, தலை நொறுங்கி, ஊருக்கு தகவல் அனுப்பி... போன்ற விபரீத எண்ணங்கள் எல்லாம் நமக்கு அப்பத்தானே வரும்! 'இருக்கட்டுங்க! அடுத்த வாட்டி பாத்துப்பம்' என ஒதுங்கிவிட்டேன். அடுத்து அன்டர் வாட்டர் வாக். ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டி நம்மை கடலுக்கடியில் தரையில் நடக்க வைப்பார்களாம். தண்ணீர் மட்டத்துக்கு மேலேயே ஒழுங்காக நடக்கும் ஆட்களா நாம்! மறுபடியும் சுரா மீன் கடித்தல், ஆக்ஜிஜன் தீர்த்து மூச்சுத்திணறி.. போன்ற நெகடிவ் தாட்ஸ்! 'விட்ருங்க சார்.. திரும்பிப்போக மறுபடியும் ஸ்பீட் போட்டா?' என பயந்துகொண்டே கேட்டோம். மதிய உணவு வாங்கிக்கொடுத்தார்கள். உள்ளூர் 'டுக் டுக்' எனப்படும் டெம்போவில் நின்றுகொண்டே பயணம் செய்தது நல்ல அனுபவம்.
மாலை மிதக்கும் சந்தை (floating market) அழைத்துச்சென்றார்கள். படகில் சவாரி செய்தபடியே சந்தையை சுற்றுவது, மீன் தொட்டியில் காலை விட்டு ஃபிஷ் ஸ்பாவாம்.. சீன அன்பர் ஒருவர் தட்டில் மோர் மிளகாய், வடாம் மாதிரி ஏதோ ஒரு வஸ்துவை வாயில் போட்டு மொறமொறவென ரசித்து சாப்பிட யாரோ அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். 'அவனுக்கு பிடிச்ச வடாம், வத்தல் சாப்பிடறான். இதுல வீடியோ எடுக்க என்ன இருக்கு! வெட்டிப்பசங்க! என்று சலித்துக்கொண்டே எட்டிப்பார்த்த எனக்கு வயிற்றை புரட்டியது. தேள், கரப்பான், வெட்டுக்கிளி, பட்டுப்புழு என மினி டிபன் கோம்போ பண்ணிக்கொண்டிருந்தார் அவர். சற்று தள்ளி ஒரு பெண் வாணலியில் எதையோ..அது முதலைக்கறி வறுவலாம். குமட்டிக்கொண்டு ஓடி வந்துவிட்டோம். மதராஸ் தர்பாரில் இரவு உணவு முடித்து நால்வரும் ரோட்டோர மசாஜ் பார்லரில் நுழைந்தோம்.
ஃபுட் மசாஜ், ஹெட் மசாஜ், ஃபேஸ் மசாஜ் மற்றும் ஃபுல் பாடி மசாஜ்.. என எல்லாவற்றிற்கும் ஒரு ரேட். நமக்கு ஃபுட் மசாஜ் போதுமென உஷா முடிவெடுக்க (நர நர..) சகலையும் நானும் கப்சிப். நால்வரையும் வரிசையாக ஈசி சேரில் அமர வைத்து எதிரே நான்கு பெண்கள். சுமார் ஒரு மணி நேரம் காலில் சொடக்கு, முழங்கால் வரை எண்ணெய் மசாஜ், ஏதோ குச்சியால் பாதங்களை குத்தி.. ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. ஆச்சு என சொன்னவளிடம் 'சரிம்மா! இந்த தோள் பட்டை கொஞ்சம் வலிக்குதே!' என்ற என்னை மட்டும் சேரிலேயே அவள் இருக்கச்சொல்ல 'ஆ..மீக்கு மாத்ரம் ஸ்பெஷலா!' என உஷா அலறிவிட்டாள். அடுத்த நொடி அந்தப்பெண் என்னை ஒரு ஸ்டூலில் உட்காரச்சொல்லி குனியவைத்து பின் பக்கம் வந்து என் முதுகில் தன் முழங்காலை வைத்து ஒரே அழுத்து அழுத்தி, என் இரு தோள் பட்டையை இழுக்க 'படக்...படக்'கென எலும்பு அங்கங்கே நொறுங்கிய மாதிரி ஐந்தாறு சொடக்கு.. 'அடிப்பாவி! என்னா ஸ்ட்ரெந்த் உனக்கு!' என வியந்து அந்த பெண்ணை திரும்பிப்பார்த்தேன். மம்தா பாணர்ஜி மாதிரியே இருந்தாள். அதானே!. ஹோட்டல் அறைக்கு வந்தது படுத்தது தான்.. மறுநாள் காலை 9 மணிக்குத்தான் எழுந்தோம். அவ்வளவு அசதி.. உலகப்புகழ் பெற்ற தாய்லாந்து மசாஜ் என்பது பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சென்று வரலாம் குறைந்த செலவில். மற்றபடி தப்புத்தண்டாவெல்லாம் கிடையாது.
சில சுவாரசியமான தகவல்கள்:
1.ரோட்டோர டீக்கடையில் தாய்ப்பெண் ஒருத்தி நம் ஊர் தேநீர் போலவே தாய் டீ போட்டுக்கொடுத்தாள். அத்துடன் நம்மூர் டீ சாப்பிடும் ஆசையும் போய்விடும்.
2.தாய் இளநீர் பதநீர் போலவே நல்ல ருசி.
3.மாடம் டுஸார் மியூசியத்தில் லண்டனைப்போலவே மெழுகுச்சிலைகள். மோதி, டயானா, மைக்கேல் ஜாக்சன் என எல்லா பிரபலங்களின் சிலைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டது அருமையான அனுபவம்.
4.மாலை என் அண்ணன் மகள் deepa Deepa Magesh வீட்டில் அருமையான இரவு சாப்பாடு. (அது பற்றி ஒரு வியாசமே எழுதியாயிற்று)
5.சிறிலங்கா போலவே இங்கும் புத்தர் கோயில், படுத்திருக்கும் புத்தர், மொட்டையடித்த (நம் மீது தண்ணீர் தெளித்து ஆசிர்வதிக்கும்) புத்த பிட்சுக்கள், மன்னர் அரண்மனை, விரைப்பான ராணுவ வீரர்கள், தரையின் கீழ் ரகசிய அறை..இத்யாதி.. விசேஷமாக எழுத ஒன்றுமில்லை.
6.சூட் தைக்க விரும்புபவர்களுக்கு: உலகத்தரம் வாய்ந்த சூட் பாங்க்காக்கில் 24 மணி நேரத்தில் தைத்து கொடுக்கிறார்கள். Custom suit-24 hours-120 dollars (get 1 free) என நிறைய விளம்பரங்கள். சுமார் 360 டாலர்களுக்கு 2 சூட் தைக்க காரில் வந்து அழைத்துச்சென்று அளவு எடுத்து, மறுநாள் ஏதோ ஒரு மாலில் இருந்த என்னிடம் நேரில் வந்து, ரெஸ்ட் ரூம் தள்ளிக் கொண்டு போய் அங்கேயே ட்ரையல் பார்த்து, அடுத்த ஒரு மணியில் எனது ஹோட்டல் லாபிக்கே அனுப்பி வைத்தார்கள்.
7.ரிவர் க்ரூஸ் எனப்படும் மிதக்கும் டின்னர் இங்கும் பிரபலம். மேற்கத்திய நாடுகள் போலவே இங்கும் பெரிய கப்பல் சைஸ் படகில் 600,700 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊரை சுற்றிக் காட்டியபடியே இரவு உணவு, 'ஷீலா கி ஜவானி' என ஆடல் பாடல்கள். வட இந்தியர்கள் 'போதும்மா..போதும்டாப்பா! தூங்க நேரமாச்சு.. ஆடறத நிறுத்திக்கோ!' என சொல்லும் வரை ஆடித்தீர்த்தார்கள்.
8.கடைசி நாள் வாங்கிய பொருட்களை அடைக்க புதிய பெட்டி வாங்க வேண்டியதாகிவிட்டது.
ஐடினெரரியில் சொன்ன மாதிரி டான் என ஆறு மணிக்கு டிரைவர் வந்து எங்களை விமான தளத்தில் இறக்கிவிட்டான். கொடுத்த டிப்ஸையும் தலையை சொறியாமல் வாங்கிக்கொண்டான்.
போர்டிங் பாஸ் வாங்கி பாஸ்போர்ட் கண்ட்ரோல் முடிந்து விமானம் ஏறும் முன் ஏர்போர்ட் லவுஞ்ச் போகும் வழியில் அந்த கடைசி சில நிமிடங்களில் ஏர்போர்ட் உள்ளேயும் 'தாய் மசாஜ் 600 பாட்' போர்ட் மாட்டியிருந்தார்கள்.

Deepa Magesh...


எனக்கு அண்ணன் மகள்.. இஞ்சினியரிங் படித்து இந்தியாவில் HCLலில் வேலையில் இருந்துவிட்டு தற்போது பாங்க்காக்கில் வேலைக்கு போகிறாள்.
கணவர் Magesh Mohan Ericsson னில் mobile communication technology துறையின் இஞ்சினீயர். வெறும் ஆறு மாத டெபுடேஷனில் பாங்க்காக் வந்தவரின் அசாத்திய திறமையும், trouble shooting பாங்கையும் பார்த்து மலைத்துப்போன கம்பெனிக்காரர்கள் அவரை 'ராசா! கொஞ்ச நாள் கழிச்சிப்போயேன்.. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு' என சொல்லியே நாலைந்து வருடங்கள் கடத்தி தற்போது நிரந்தரமாக இருக்கச்சொல்லி வற்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரில் போஸ்டிங் கிடைக்கலாமென காத்திருக்கிறார் மகேஷ்.
பட்டாயா, பாங்க்காக் எல்லா இடத்திலும் கவிச்சு வாசனை.. ரோட்டோரத்தில் கண்டதையும் வறுத்து விற்கும் வறுவல் கடைகள். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலும் காலை உணவு சுமார் தான். நம்மூர் சாப்பாடு சாப்பிட மனம் ஏங்கியது.
'அங்கிள்! எப்ப வீட்டுக்கு சாப்பிட வறீங்க?' என தீபாவின் மெசேஜும் போனும் வர, நான்காம் நாள் மாலை அவர்கள் வீட்டிற்கு போவதாக முடிவு செய்து வீட்டு விலாசம் வாங்கிக்கொண்டேன்.
சுகும்விட் ஏரியாவில் சோய்-36 பகுதி, இன்ன சாலை எண், இன்ன பில்டிங்கில் இருக்கிறோமென விலாசத்தை தீபா எனக்கு அனுப்ப, ப்ரூஸ்லீ சாயலில் இருந்த டிரைவர் 'ஷாசா' டொயோட்டோ ஹை-ஏஸ் வண்டியை விரட்டி சரியாக அவர்கள் பில்டிங் வாசலில் எங்களை இறக்கி விட்டான்.
26வது தளத்தில் இருந்த அவர்கள் ஃப்ளாட்டின் வாசலில் நின்று எங்களை வரவேற்றார்கள் தீபாவும் 'நீயா நானா' கோபி சாயலில் படு ஸ்மார்ட்டாக இருந்த கணவர் கோபி. விசாலமான அந்த ஃப்ளாட் கொள்ளை அழகு. தாய்லாந்து நாட்டில் இடத்தட்டுப்பாடு அதிகம். அதனால் வீட்டு வாடகை அதிகமாம்.
space managementஉடன் நேர்த்தியுடன் இருந்த அந்த வீட்டின் ஹாலில் அலமாரி கதவுகள் இரண்டில் ஒன்றை திறந்தால் உள்ளே சிறிய அறை. குழந்தைகள் பொம்மை, சைக்கிள் போன்றவை அந்த அறையில் அடைத்திருந்தார்கள். அடுத்த கபோர்ட் கதவுக்கு பின்னால் ஏதாவது துணிமணிகள் இருக்கலாமென நினைத்து கதவை திறந்தால் அப்படியே அசந்துவிட்டோம். அது ஒரு சிறிய கழிவறை. விருந்தினர்களுக்காக வரவேற்பறையில் அந்த கழிப்பறை இருப்பதே தெரியவில்லை.
பால்கனி வழியாக பாங்க்காக் நகர கட்டிடங்கள் அழகாக தெரிந்தது. அதுவும் இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முழு நகரத்தை பால்கனி வழியாக மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
சுடச்சுட சாதம், பனீர் காப்ஸிகம் கறி, பீன்ஸ் காரட் பொறுயல், உ.கிழங்கு கறி, பாலக், சாம்பார், வத்த குழம்பு, ரசம், கட்டித்தயிர், அப்பளம், குலோப்ஜாமுன்.. இதெல்லாம் தீபா தானே சமைத்த ஐட்டங்கள். ஃபுல் கட்டு கட்டினோம்..
செல்ஃபி எடுத்துக்கொண்டோம். மேலும் ஒரு மணி நேரம் அரட்டை. பிறகு தனது டொயோட்டா ஃபார்ச்சூனரில் நாங்கள் தங்கியிருந்த பாங்க்காக் பாலஸ் ஹோட்டலில் இரவு பதினோறு மணிவாக்கில் இறக்கிவிட்டு விடை பெற்றுக் கொண்டார் மகேஷ்..
தாய்லாந்து ஷாப்பிங் பற்றி நச்சென் அவர் கொடுத்த டிப்ஸ் இதோ:
*எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் இங்கே எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க வேண்டாம்.
*எக்கச்சக்கமாக துணிமணிகள் கிடைக்கும். வெறும் 200, 300 தாய் பாட் (Baht) தான் ( சுமார் நானூறு, அறுநூறு இந்திய ரூபாய்கள்)
*ஒன்றுக்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு ஹோல்சேல் ரேட் உண்டு. ஆகவே 3 டீ-ஷர்ட், 3 ஜீன்ஸ் என உறவினர்களுக்கு வாங்கலாம்.
*அதிகம் பேரம் பேசவேண்டிய அவசியமில்லை. சகாயமான விலை தான் சொல்வார்கள்.
அருமையான வீட்டு சாப்பாடு, அன்பான உபசரிப்பு, அழகான இரு பெண் குழந்தைகள்..இனிமையான தம்பதி தீபா, மகேஷுக்கு நன்றி..
மேலும் தாய்லாந்து பற்றிய சுவாரசியமான தகவல்கள் ஏராளம்.. தனிப்பதிவு விரைவில்....

துபாய்-சென்னை மூன்று மணி நேர பிரயாண கிறுக்கல்களிலிருந்து...

வருடாந்திர விடுமுறைக்கு பத்து பதினைந்து நாள் சென்னை, திருச்சி மற்றும் தாய்லாந்து போய் வரலாம் என முடிவு செய்தவுடனே பரபரவென இயங்க ஆரம்பித்தேன்.
ஆபிஸ்பாய் லதீஃப் படு சமர்த்தன். தாய்லாந்து கரன்சி 'பாத்'தை அரை மணியில் வாங்கிக்கொண்டு வந்து எதிரே வைத்துவிட்டான். காலை பஹ்ரைன் இந்தியா எக்ஸ்சேஞ்சு கம்பெனி பொது மேலாளர் லக்ஷ்மி நரசிம்மன் போன் செய்து புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பஹ்ரைன் வந்துவிட்டதாக தகவல் கொடுக்க, உடனே லதீஃப் ஓடினான். மனாமாவிலிருந்து போன் செய்து 'சார்.. இங்க ரெண்டாயிரம் ரூபா நோட்டு இல்லியாம். ஏர்போர்ட் பிராஞ்ச்சுல இருக்காம்' என சொல்லி ஏர்போர்ட் விரைந்து புதிய ரூபாய் நோட்டுகளையும், கொஞ்சம் டாலர்களையும் கொண்டு வந்தான்.
மேசையின் மீது எதிரே இருந்த பச்சைச்தேநீர் ஆறிப்போக, சுலைமானி (சிகப்பு தேநீர்) கொண்டு வந்து வைத்த ஃபிலிப்பினோப்பெண் 'ஆறிப்போறதுக்குள்ள இதையாவது சாப்பிடுங்க' என சொல்லிவிட்டும் போனாள்.
எமிரேட்ஸ் விமான டிக்கெட்டை மெயில் பாக்ஸில் சேர்ச் செய்து பிரிண்ட் எடுத்து முடியும்போது 'do you have anything?' எனக்கேட்டு எதிரே நின்றார் எங்கள் சேர்மன் திரு. ஜெய்னல். மரியாதை நிமித்தம் நாம் எழுந்து நின்றால் அவருக்கு பிடிக்காது. 'sit down' என சொல்லி எதிரே நின்றவாரே ஐந்தாறு நிமிடங்கள் பேசிவிட்டு கடைசி வாய் டர்க்கிஷ் காபியை மடக்கென குடித்து விட்டு நகைச்சுவையாக ஏதோ சொல்லி 'மாசல்லாமா' என விடைபெற்றார்.
ஊருக்கு போகும் செக்லிஸ்ட் எதிரே திரையில். கரன்சி நோட்டுக்கள்- ஆச்சு.
ஷேவிங் ரேசர்-ஆச்சு. மருந்து மாத்திரை- ஆச்சு. கைப்பேசியின் பவர் பேங்க்- எடுத்துக்கனும். ரவுண்டு சீப்பு, கூலிங் கிளாஸ், ஹேர்டை, பல்துலக்க ப்ரஷ், பதஞ்சலி பேஸ்ட்- இதெல்லாம் பாக்கி. ஜட்டி பனியன்(ச்சீ.. இதை எழுதனுமா), சாக்ஸ், டவல், செறுப்பு, நேற்றே மடித்து வைத்திருந்த பாண்ட் சட்டை மற்றும் டீ-சர்ட்கள், பாங்க் பாஸ்புக், செக்புக், பான் கார்ட், ஏடிஎம் கார்டு, சென்ட்டு, இந்திய டிரைவிங் லைசென்ஸ்.. எல்லாம் ஆச்சு.
மதிய உணவிற்குப்பிறகு ஆபிஸ் வந்து இன்னும் மிச்சமிருந்த வேலைகள், நடுவே வாட்ஸப்புகள், ஃபேஸ்புக் கமென்ட்டுகள், லைக்குகள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு நான் ஆபிசில் இல்லையென்பதால் பட்ஜெட், MIS ரிப்போர்ட் என ஏராளமான பேப்பர்களுடன் எதிரே வந்தமர்ந்த CFO சோமனுடன் ஒரு மணிநேரம்.. இம்மாதக்கடைசியில் நான்கு துணை நிறுவனங்களின் போர்டு மீட்டிங்குகள் இருப்பதால் அது சார்ந்த அஜென்டா மற்றும் ரிப்போர்ட்டுகள் பார்த்து முடிக்க மணி மூன்று ஆனது.
க்ரெடிட் கார்டு பணத்தை ஆன்லைனில் கட்டி, இம்மாத டெலிபோன் பில்லையும் நெட்டில் கட்டி, நாளை செக்கின் செய்யப்போகும் தி.நகர் ஜியார்டி க்ராண்டு ஹோட்டலின் லொக்கேஷனை கூகிள் மேப் ஆஃப்லைனில் காப்பாற்றி, பாங்க்காக் மற்றும் பட்டாயா ஐடினெரரி பிரின்ட் எடுத்து... ஸ்ஸப்பாடா! மணி ஐந்து..
'நா கெளம்பறேன்.. உங்களுக்கு எதுனா வேணுமா?' எனக்கேட்ட ஃபிலிப்பினோ பெண்ணிடம் ஒரு சுலைமானி சொல்லியாயிற்று. மேசை டிராயரை திறந்து ரஸ்க் (மனக்கு அசிடிட்டி உந்தி காதா!)
கடந்த மே மாதம் அனுப்பிய மெயில்களை அவுட்பாக்ஸில் ப்ரௌசி 'Sridhar-vacation' தலைப்பிட்ட மெயிலை வெளியே இழுத்து அதையே 'ரிப்ளை ஆல்' செய்து தேதிகளை மாற்றி 'நா.. இந்தா ரெண்டு வாரம்
ஊருக்கு போய்ட்டு வந்துடறேங்க.. அதுவரைக்கும் துணை பொது மேலாளர் சமீர் (அரபிக்காரர்) பாத்துப்பார்..ஹௌஎவர் இன் கேஸ் ஆஃப் அர்ஜன்ட்டுன்னா என்னை மொபைல் போனில் தொடர்பு கொள்ள இன்ன பஹ்ரைன்/இந்திய நம்பர்களுக்கு விளிக்கவும்' என பத்து இயக்குநர்கள் மற்றும் துணை நிறுவன மேலாளர்களுக்கு தட்டிவிட்ட மறு நிமிடம் 'சுகமான பத்திரமான பயணத்திற்கு வாழ்த்துக்கள்' என சில பதில்கள்.
ஐந்து மணிக்கு வீட்டிற்கு கிளம்பி வந்து அவசரமாக சில சட்டைகளை அயர்ன் செய்து உள் அறைக்கு வந்தால் எனது பெட்டியின் மேல் மனைவி வைத்த குட்டி பவுச்சில் வாந்தி, வயித்த வலி, பேதி, தலைவலி , காவிஸ்கான், பான்டாப்ரொசல் மாத்திரைகள்.. மற்றும் 'மூவ்' ( ராத்திரில கால் கொடைச்சல் இருக்கில்ல!)
கப் நூடுல்ஸ், ஜூஸ் பாக்கெட்டுகள், ஸ்மோக்டு பாதாம் முந்திரி, கெட்டில், சின்ன டீ கப்புகள், டீ பைகள், சர்க்கரை, தி.நகரில் சின்னவனுடன் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று வந்து கொடுத்தனுப்பிய ட்யோட்ரன்ட், சாக்லேட், ப்ரிங்கில்ஸ், வேஃபர்ஸ், கேக்.. எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு கட்டி முடிக்க.. மணி ஆறு..
செக்யூரிடி சகாதேவை கூப்பிட்டு வீட்டுச்சாவியை கொடுத்து இரண்டு நாளைக்கொருமுறை செடிகளுக்கு தண்ணீர் விட கேட்டுக்கொண்டார் மனைவி. சிறிலங்கன் மெய்டு பெண்மணிக்கு வீட்டை இரு நாளைக்கொருமுறை வந்து மாப் செய்ய உத்தரவிட்டு, கேஸ் அடுப்பின் குழாயை மூடி, வைஃபை, கீசர், டெலிபோன் ஸ்விட்சை அனைத்து, எல்லா அறைகளையும் பூட்டி, சாமான்களை காரில் சகாதேவ் எடுத்து வைக்க, கமகம் சென்ட் மணத்துடன் லதீஃப் வந்து சேர்ந்தான்.
அடுத்த இருபது நிமிடத்தில் விமான நிலையத்தில் சாமான்களோடு எங்களை இறங்கி விட்டு, அன்பளிப்பை வெட்கத்துடன் வாங்கிக்கொண்டு விடை பெற்றுக்கொண்டான் லதீஃப்.
இருபத்து நான்கு மணி நேரமும் என்னைப்போல், செக்யூரிட்டி சகாதேவ், மற்றும் லதீஃபைப்போல் நாம் எல்லோரும் இயங்கிக்கொண்டே இருக்கிறோம். இரண்டே வாரங்கள் பிரயாணம் செய்ய நாம் செய்யும் ப்ரிப்பரேஷன்கள், செக் லிஸ்ட்கள், அளப்பறைகள் ஏராளம்.
ஆனால் 68 வருடங்கள் நிரம்பிய ஒரு முதல்வரும் 82 வயது முடித்த ஒரு மூத்த பத்திரிக்கையாளரும் சட்டென இந்த மண்ணுலகை விட்டு மறையும்
போது எவ்வளவு பணிகளையும் கடமைகளையும் விட்டுச்செல்கிறார்கள்! இவர்களது செக்லிஸ்ட் எவ்வளவு பெரியது? நான் இல்லாத இந்த இரண்டு வாரத்தில் கம்பெனியை சமீர் பார்த்துக்கொள்வார் என நான் சொல்லிவிட்டுப்போவதைப்போல் இவர்களும் சொல்லிவிட்டுப்போக முடியாதே! ஜெ மற்றும் சோ போன்ற ஓரெழுத்துப்பிரபலங்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யார் நிரப்புவது! அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனிதர்கள் என்கின்ற முறையில் இருவருமே நம்மை மலைக்க வைத்தவர்கள்... ஹரே கிருஷ்ணா!
பி.கு: துபாய்-சென்னை மூன்று மணி நேர பிரயாண கிறுக்கல்களிலிருந்து...

Gopala Sundaram மாமா...

சுமார் 20 வருடங்களுக்கு முன்...பஹ்ரைனுக்கு இவர் முதன்முதலில் வந்த புதிது. ஒரு பெரிய வங்கியில் சீனியர் வைஸ் பிரெசிடென்ட்.கல்யாணமாகி சில வருடங்களேயான 15, 20 இளைஞர்களை ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்தார். மனைவி, கைக்குழத்தைகளோடு சினிமா, பார்க் என உல்லாசமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளம் குடும்பங்களை எதற்காக வீட்டிற்கு அழைத்தார்?
வீட்டில் சுமார் 1000 காஸ்ஸெட்டுகள் வைத்திருந்தார். வாராவாரம் வெள்ளியன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு 'இசை' குறித்து தனக்குத்தெரிந்த எல்லாவற்றையும் எல்லோருக்கும் விளக்க ஆரம்பித்தார். வாராவாரம் கூட்டம் இன்னும் அதிகரிக்கத்தொடங்கியது.
மேளகர்த்தா ராகங்கள், ஆரோகணம், ஆவரோகணம், தமிழ்ப்பாடல்கள், செய்யுள், இலக்கணம், திருக்குறள், உரைநடை, நாடகம், சினிமா..... பாடல்களின் ராகங்களை கண்டுபிடிப்பது என இவரது இலவச வகுப்புகள் களைகட்டின. எல்லா வாரங்களும் இவரது வீட்டை நோக்கி ஏராளமான நணபர்கள் படையெடுப்பு. சுடசுட பூரி, சமோசா காபி டிபனும் உண்டு.. ('ச..ப..ச..வுக்கப்பறம் சமோசாவா!' என யாரோ ஓரு குறும்புக்கார இளைஞன் பின்னாலிருந்து சொல்ல ஒரே சிரிப்பு).
காசெட்டில் பானுமதி ராமகிருஷ்ணா (தமிழ்ப்பாட்டல்ல.. தெலுங்கு), கிட்டப்பா, பி. லீலா போன்றவர்கள் பாடல்களை போட்டு குரல் யாருடையது என கண்டுபிடிக்க வேண்டும். கணிதத்துக்கும் (prime numbers) ராகங்களுக்கும் தொடர்பு இருப்பதை அழகாக விளக்கினார் மாமா. சாவேரிக்கு சாவே 'ரி' தான் என நடுநடுவே பிரவாகமெடுக்கும் நகைச்சுவை..
ருக்கு மாமிக்கு தனி ரசிகர் மன்றமே ஆரம்பிக்கும் அளவிற்கு ஜனங்கள். அடுத்த சில மாதங்களில் பஹ்ரைனில் இவரைப்பற்றி தெரியாதவர்களே இல்லை..
சுமார் 30 பேரை வைத்து RS. மனோகர் ஸ்டைலில் ப்ரம்மாண்டமான 'தியாகய்யர்' நாடகம், ராகங்களின் அடிப்படையில் சங்கீத நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கதாகாலட்சேபம்,ராமர் பட்டாபிஷேக ஆண்மிக சொற்பொழிவு என பஹ்ரைனில் இதுவரை பார்த்திராத நிகழ்ச்சிகளை இவர் நடத்திக்காட்டினார்.
தெலுங்கு பேசுபவர் என்பதால் என்னைப்போன்ற நிறைய பேர் அவருடன் பழக வாய்ப்பு.. அறிமுகப்படுத்திய பால்ய நண்பன் Ganapathi Subramanian க்கு நன்றி..
அடுத்த ஒரிரு வருடங்களில் மறுபடியும் தன் பையன் மற்றும் பெண் பிள்ளைகளுடன் இருக்க இவர் அமெரிக்கா திரும்ப வேண்டிய கட்டாயத்தால் பஹ்ரைனை விட்டுப்போனபோது சுமார் 500 பேருக்கு மேல் சேர்ந்து அவருக்கும் ருக்கு மாமிக்கும் பிரியா விடை கொடுத்தோம். பஹ்ரைனில் 20 வருடங்கள் முன் நடந்த பிரம்மாண்டமாக நடந்த விழா அது. அதிலும் டிராமா, பாடல்கள்,சிவகுமார் ( Sivakumar Nilakantan ) மாமாவின் நகைச்சுவைத்துணுக்கு.. நடுவே மாமா அவர்கள் உருவப்படம் வரைந்து அவருக்கு அளிக்கும் அதிர்ஷ்டமும் எனக்குக்கிடைத்தது.
தற்போது கோவையில் வசிக்கும் மாமாவின் சதாபிஷேகம் சமீபத்தில் விமரிசையாக நடந்தது. அதற்கு சில மாதங்கள் முன் மாமா உரையாற்றிய 'ராமர் பட்டாபிஷேகம்' வெகுவாக பாராட்டப்பட்டது.
சென்ற வருடம் கோவை சென்ற என் குடும்பத்துடன் மாமா மாமி ஒரு நாள் முழுவதும் எங்களுடன் கழித்து மாலை தன் காரிலேயே ஹோட்டலில் இறக்கி விட்டு மனதை நெகிழச்செய்தார்.
20 வருடங்களுக்கு முன் வரைந்து கொடுத்த படத்தை அப்படியே பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறார் மாமா.. அதனுடன் இரண்டு மணி நேரத்திற்கு முன் வரைந்த இந்த படத்துடன், மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும்...
(சீதாபதி ஶ்ரீதர்)
Image may contain: 3 people

நேத்து ராத்திரி.. யம்மா!


சென்ற விடுமுறையின் போது ஒரு நாள் மதியம் மூன்று மணிக்கு காரில் என் சகோதரி குடும்பத்தாருடன் விராலிமலை கிளம்பினோம். சுப்ரமணியபுரத்திலிருந்து கிளம்பி டோல்கேட்டில் பெட்ரோல் போட்டு சர்க்யூட் ஹவுஸ் காலனி கடந்தபோது மனம் குதூகலமானது. 80களில் பல வருடங்கள் அந்த காலனியில் குடியிருந்தவர்கள் நாங்கள்.
உடனே சடாரென வண்டியை காலனிக்குள் திருப்பினேன். 'டேய் ஶ்ரீதர்! என்னாச்சு!' என என் சகோதரி கேட்க, '35 வருஷம் கழிச்சு இங்க வர்றோமே.. நாம இருந்த ஃப்ளாட்ட பாக்கலாம்' என அந்த பழைய கட்டிடம் முன் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினேன். நாளை நமதே எம்ஜியார் மாதிரி அந்த இடிந்த கட்டிடத்தை அப்படியே சுற்றிப்பார்க்க, உடனே ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்....
1981... நான் சி.ஏ சேர்ந்த புதிது. தென்னூரிலிருந்து அப்போது தான் அங்கே குடிபெயர்ந்தோம். அரசு குடியிருப்பு காலனி அது. பெரும்பாலும் தாலுகா ஆபிஸ், மாவட்ட கருவூலம், கமர்ஷியல் டாக்ஸ் போன்ற துறைகளின் அலுவலர்கள். நான், என் தம்பி ரவி ( Vijay Raghavan ), கீழ் வீட்டில் BE படித்துக்கொண்டிருந்த 2 பையன்கள், ACTO பையன் ஶ்ரீனிவாசன் என எங்கள் நண்பர் குழாம். லுங்கியை கனுக்காலுக்கு சற்று மேலே உயர்த்திக்கட்டி காலனியைச்சுற்றி வலம் வருவோம்.
அன்றாட பிரச்சனைகளை தீர்க்க காலனி குடியிருப்போர் நலச்சங்கம் இருந்தது. அதன் தலைவர் ரெவென்யூ இஸ்பெக்டர் குமாரசாமி. செயலாளர் புத்தூர் பெரியாஸ்பத்திரி கம்பௌண்டர் தணிகாசலம். அடுத்த வருடம் தலைவராவதற்கு துடித்தவர். பொருளாளர், விளையாட்டு செயலாளர் போன்ற இன்னபிற பதவிகளுடன் சங்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
தினமும் மாடியில் தொட்டிகளில் தண்ணீர் திறந்து விடுவது, பன்றிகளை விரட்டுவது, பூங்கா பராமரிப்பு, ரோடு ரிப்பேர், இரவில் திருட்டு போன்ற பிரச்சனைகளை விவாதிக்க சங்கத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு போவோம். பாதி நேரம் வாக்குவாதம்.. கூச்சல் தான்.
'நல்ல தண்ணியே வர்றதில்ல.. இதுக்கு ஒரு வழி பண்ணனும்' என செக்ரடரி எடுத்துறைக்க, உடனே தலைவர் 'குடி தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்பார்.
'கழிவுநீர் பைப் ஒடஞ்சி பில்டிங்கை சுத்தி தண்ணி தேங்கிக்கெடக்குது' என தாலுகா ஆபிஸ் கண்ணபிரான் சொன்னதும் தலைவர் உடனே 'கழிவு நீர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்பார்.
'அடிக்கடி பவர்கட் ஆகுதே'- குடிநீர் வாரியம் பக்தவத்சலம்
'மின் வெட்டை சரிசெய்ய ஒரு கரண்ட் கட் குழு அமைத்து நடவடிக்கை எடுப்போம்.'
செக்ரடரி சூடானார்.. 'எல்லாத்துக்கும் குழு அமைச்சிட்டா பிரச்னை தீர்த்துடுமா? இனி குழு அமைக்க பக்கத்து செங்குளம் காலனில இருந்து தான் ஆளுங்கள கூட்டிக்கிட்டு வரனும்'
'இத்தனை குழு தேவையா இல்லயானு முடிவு செய்ய ஒரு தனி குழு அமைக்கனும் தலிவரே!' என யாரோ அங்கலாய்த்து, கூட்டம் கொல்லென சிரிக்க, கோபத்தில் தலைவர் முகம் நடுங்கியது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
ஒருநாள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்து காலனியில் எங்கே நடந்தது எனத்தெரியவில்லை. அன்று மதியம் பாலக்கரை வழியாக போய்க்கொண்டிருந்த போது, கொளத்தூர் பிரியாணி ஹோட்டலிலிருந்து சங்க நிர்வாகிகள் சீரகம் மென்றபடி வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
அடுத்தடுத்த மாதங்களில் இரவில் திருட்டு போன்ற பிரச்னைகள் அதிகமாகி குடியிருப்பவர்கள் அந்த சங்க நிர்வாகிகளை கூப்பிட்டு 'என்ன தான் பண்றீங்க' எனக்கேட்க, தலைவர் 'அப்பிரச்னைக்கு உடனே 'திருட்டு'க்குழு அமைக்கப்படும்' என அறிவிக்க கரகாட்டக்காரன் செந்தில் மேல் பாயும் கவுண்டமணி ( அது தாண்ணே இது!) மாதிரி மக்கள் பொங்கியெழுந்தார்கள்.
அடுத்த வாரம் தலைவர் அமைத்த இரவு ரோந்துக்குழு கையில் டார்ச் மற்றும் தடிகளுடன் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் காலனியை சுற்றி வந்தார்கள். தூரத்தில் வேப்பமரத்தின் பின்னால் புதர் அருகே ஒரு உருவம் தரையில் உட்கார்ந்திருந்தது. 'மாட்னான்டா திருடன்!' என ரோந்துக்குழு சட்டென சுதாரித்து சத்தமில்லாமல் தடியுடன் புதர்ப்பக்கம் பார்த்து உட்கார்ந்திருந்த உருவத்தை மெல்ல நெருங்கி தடியால் படீரென பின் பக்கம் பார்த்து சாத்த, 'ஐயோ டேய்! நான் செக்ரட்டரிடா கபோதி! பாத்ரூம்ல தண்ணி வராமெ வெளிய போய்க்கிட்ருக்கேன்!' என அலற, ஒரே கலாட்டா. 'நா அப்பவே அடிச்சிக்கிட்டேன்.. இத்தினி குழு அமைச்சா ஒரு எழவும் புரியமாட்டேங்குது!' என பின்பக்கம் தேய்த்தபடி செக்ரடரி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
உலகநாதபுரத்தைச்சேர்ந்தவர்கள் தான் அந்த திருட்டு கும்பல் என்றும், ஒருநாள் அவர்கள் ரோந்துக்குழுவை தாக்க முற்படலாமென்றும் பேசிக்கொண்டார்கள்.
அடுத்த வாரம் இரவு ரோந்துக்குழுவை ஊக்குவிக்க தலைவர், செக்ரடரி போன்றோர் ஃப்ளாஸ்க்கில் டீ மற்றும் பிஸ்கட்டுடன் இரவு இரண்டு மணிக்கு வெளியே கிளம்பி ரோந்துக்குழுவை நெருங்க, எதிர் திசையிலிருந்து ஆட்டோவில் தடிகளுடன் மற்றொரு 'குழு' வந்திறங்கியது.
மறுநாள் காலை தலைவர் வீட்டில் ஒரே அமளி. காலனி மக்கள் அங்கே கூடினார்கள். ஹாலில் மூன்று நாற்காலிகளில் தலைவர், செக்ரடரி போன்றோர் வலியால் முனகியபடி உட்கார்ந்திருக்க, அவர்களது மனைவிமார்கள் பின்னால் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.. முதுகில்.
யாரோ 'நேத்து ராத்திரி...' என சொல்ல ஆரம்பிக்க 'யம்மா..!' என அந்த மூன்று பேரும் வலியால் கத்தினார்கள்..
'கொஞ்சம் தள்ளுங்கப்பா.. அந்த ஃபேனைப்போடுங்க!' என சத்தங்கள். தலைவரை அடையாளமே தெரியவில்லை. முகம் அங்கங்கே உருண்டையாக வீங்கி சில கோணத்தில் நாகையா, பக்கவாட்டில் பாலையா மாதிரி தெரிந்தார். உருட்டுக்கட்டை பதிவு தாயக்கட்டம் போல அழகாக முதுகில் தெரிந்தது.
திடீரென 'கு$ப்ள்#உ*€' என ஏதோ சத்தம்.
'தலைவர் என்னமோ சொல்றார்' என யாரோ சொல்ல... 'என்ன சொல்றீங்க தலைவரே?' ...
தலைவர் 'இ@$ள்ப்ஓ.. கள்&@%€ஃ'...' என மறுபடியும் சொல்ல, .. 'அட சரியாகத்தான் சொல்லித்தொலைங்களேன்' என அவரது மனைவி சலித்துக்கொண்டார்.
'கு$ள்$&@.. கி@ட்05?@#%'..
'குளுரடிக்கிதே கிட்ட வா..கிட்ட வா' பாட்டு மாதிரியே இருக்கே'
'அட.. காமெடி பண்ணாம கொஞ்சம் அவர் என்ன சொல்றாருன்னு கேளுங்கையா!'
கஷ்டப்பட்டு நிறுத்தி நிதானமாக சொன்னார் தலைவர்: 'இந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க ஒரு தனி குழு அமைக்கப்படும்'
பாதி பேர் அங்கேயே உருட்டுக்கட்டை தேடினார்கள்..

இல்லே.. இல்லே.. இல்லெல்லே...


பஹ்ரைன் கேரளா வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர் முன்பு காரை நிறுத்தி விட்டு மனைவியுடன் உள்ளே சென்றேன். நாலு நாளாக முதுகும் இடுப்பும் ஒரே வலி. 'இதெல்லாம் வேஸ்ட்.. எல்லா வலிக்கும் மசாஜ் தான் செய்வாங்க அவங்க. வலி ஜாஸ்தி தான் ஆகும். தவிர டிரெஸ்ஸையெல்லாம் கழட்டனும். தேவையா உங்களுக்கு!' என்ற மனைவியின் ஆலோசனையை உதாசீனம் செய்து ரிஸப்ஷன் பகுதி சென்றேன்.
நல்ல கூட்டம். என்னைப்போல் எல்லா ஆண்களும் தத்தம் மனைவியருடன் வந்திருந்தனர். எதிரே கிடந்த புத்தகத்தை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்க, சில ஆண்கள் போனில் 'சாதனம் கிட்டியோ.. ஞான் இப்ப விளிச்சி பறையாம்' என ஆபீஸ் வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். எதிரே தலைக்கு மேலே கைராலி டி.வி. ஒரு நோயாளி கிட்டத்தட்ட டீவி சீரியல் ஆரம்பிக்கும்போது டாக்டரை பார்க்க உள்ளே போனால் அந்த சீரியல் முடியும்போது தான் வெளியே வருவார். வடஇந்தியர், ஆந்திராக்காரர் என யார் வந்தாலும் ரிஸப்ஷன் பெண் மலையாளத்தில் மட்டுமே விசாரிக்க, அந்தப்பக்கம் பாட்டிலில் மருந்து கொடுத்துக்கொண்டிருந்த மற்றொரு சேட்டன் அப்பெண்ணுக்கு உதவிக்கொண்டிருந்தார்.
அடுத்து ரிஸப்ஷன் பெண் என்னை அழைக்க மனைவியுடன் உள்ளே போனேன். சலவை செய்த வெள்ளைக்கோட்டுடன் ஆண் டாக்டர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தலையில் hair plant செய்திருந்தார். Former Head of the Dept of Ayurvedic Science என ஏதோ கேரள ஆசுபத்திரி பெயர் அவர் தலைக்கு மேல். பக்கத்தில் மதன்மித்ரா ஸ்டைலில் ஆண் படத்தில் உடம்பு முழுக்க சிவப்புக்கலர் நரம்புகள் நம்மை பயமுறுத்த, கொஞ்சம் தள்ளி மனித மூளை படம். அவரது டேபிளில் வெள்ளைத்தாளில் மனித முதுகெலும்பு படம் வரைந்து நடுவே அம்புக்குறி.. அங்க தான் ப்ரஷ்ணம் என யாருக்கோ விளக்கியிருப்பார் போலும். அந்த தாளின் மேலே ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்ட மனித முழங்கால் மூட்டு தான் டேபிள் வெய்ட். அவருக்குப்பின்னால் லைட் போட்டு ஏதோ எக்ஸ்-ரே ரிப்போர்ட் தொங்கிக்கொண்டிருந்தது. அதிலும் பெல்ட் மாதிரி முதுகெலும்பு படம். அந்த சூழலுக்கே இடுப்பு வலி மெல்ல ஆரம்பித்தது எனக்கு.
'ஏதானு?' என பரிவுடன் என்னை விசாரித்தார் டாக்டர். I have back pain என ஆங்கிலத்தில் நான் சொன்னதும் இவன் பாண்டி தான் என புரிந்துகொண்டு, ok! you have back pain! என அவரும் விஜாரித்தார். அடுத்து How many days என்ற அவரது கேள்விக்கு நான் for the last 10 days என்றதும் oh! for the last 10 days! என அவரும் கேட்டார். The pain is only during night என்ற என்னிடம் அவரும் oh! the pain is only during night! என்றார்.. கவனிக்கவும்.. நாம் எதைச்சொன்னாலும் அதை நம்மிடம் அப்படியே திருப்பிச்சொல்லும வழக்கம் சிலபேரிடம் இருந்தால் போச்சு. தொலைந்தோம். இவர் அந்த டைப். அதனால் தான் ஒவ்வொரு நோயாளிக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். கைராலி டீவி சீரியல் முடிந்து வார்த்தகள் (news) ஓட ஆரம்பித்தது.
எதிரே கட்டிலில் குப்புறப்படுக்கச்சொன்னார். முதுகு, இடுப்புப்பகுதியை அங்கங்கே அழுத்தி அழுத்தி 'வலிக்குதா.. வலிக்குதா.. எனக்கேட்டார். வலி இருக்கும் இடம் தவிர மற்ற எல்லா இடத்திலும் அழுத்தி அழுத்தி அவர் கேட்க, நான் இல்லே..இல்லே..இல்லல்லே.. என சொல்ல அவரும் கூடவே இல்லே..இல்லே..இல்லல்லே! என திருப்பி சொன்னார். எப்பிடித்தான் இந்தப்பழக்கம் வந்ததோ அவருக்கு..தெரியவில்லை!. இப்படி திருப்பிச்சொல்லியே வாழ்நாளில் பாதியை கழித்துவிட்டார். வெளியே கூட்டம் அம்மியது.
ஒரு வழியாக எங்கேயோ எனக்கு வலி வந்து 'ஸ்ஸ்..' என லேசாக கத்தினேன். நல்லவேளை..பதிலுக்கு அவரும் கத்தவில்லை. ஆனால் முகத்தில் திருப்தி. ஒந்நும் கொழப்பம் இல்லா. 'பத்து சிட்டிங் மஸாஜ் செய்யனும்' என்று சொல்லி பேப்பரில் 'பொடிகிழி மசாஜ்' என எழுதினார். அதென்னாங்க 'பொடிகிழி' என்ற கேள்விக்கு 'ஓயல் (oil) மசாஜ்' என்றார். 8 தினாருக்கு பகுதி மசாஜ்ஜாம். ( 'பகுதி' என்றால் 'பாதி' என அர்த்தமாம்). முதுகு மற்றும் இடுப்பு மட்டுமாம். ஃபுல் மசாஜ் 15 தினார் கால் வரையாம்.
சாஜன் என்ற நபரைக்கூப்பிட்டு உள்ளே ஒரு ரூமுக்குள் கூட்டிப்போய், அவர்கள் கொடுத்த கோவணத்தை சுற்றிக்கொண்டு சப்பாணி மாதிரி தயங்கி தயங்கி வந்து நின்றேன். கோமணம் கொஞ்சம் அகலமாகவாவது இருந்திருக்கலாம். ரிப்பன் மாதிரி இருந்தது. காலை அகட்டாமல் சர்வ ஜாக்கிறதையாக நடந்து வந்த என்னை நடு ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் மேல் குப்புறப்படுக்க சொன்னார் சாஜன். இதற்கு அவ்ளோ பெரிய ஹால் தேவையா? கிட்டத்தட்ட 50 பேரை வைத்து சீமந்தமே நடத்தலாம்.
வெறும் கோமணத்துடன் குப்புறப்படுத்திருந்த என்னை 'நாட்ல எவ்டே?' என்று பரிவுடன் விசாரித்தார் சாஜன். 'அடப்பாதகா! இடுப்புல வலி எவ்வடேன்னு கேக்காம நாட்ல எவ்டேயென ஊரைப்பத்தி விசாரிக்க இதுதானாடா நேரம்!' என்று அவரை சபித்துக்கொண்டு 'திருச்சி' என்று சொன்னேன். உடனே மறுபடியும் அவர் 'நாட்ல எவ்வடே' என்று கேட்டார். எனக்கு காது சூடானது. இப்பத்தானே 'திருச்சி' என பதில் சொன்னேன்! அப்புறம் தான் புரிந்தது மலையாளத்தில் 'திருச்சி' என்றால் 'திரும்பவும்' என்று அர்த்தமாம்.
ஒருவழியாக சம்பாஷனை முடிந்து பணியை ஆரம்பித்தார். தேநீர் போடும் கெட்டிலை எடுத்தார். பரவாயில்லையே குடிக்க டீயெல்லாம் கொடுப்பார்கள் போல என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டார். கற்பூராதி தைலம் கலந்த எண்ணையை கெட்டிலில் விட்டு ஸ்டவ்வில் சூடாக்கி இடுப்பில் மிக தாராளமாக கொட்டி ஒத்தடம் என்கிற பேரில் முதுகையும் இடுப்பையும் துவம்சம் செய்யத்துவங்கினார். பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்தவர் போலிருக்கும். நிமிடத்திற்கொரு தரம் பொடிகிழியை சூடான எண்ணெயில் தொட்டு இடுப்பிற்கு கீழே வைத்து ''ஆ'வென அலற வைத்தார். குப்புறத்தான் படுத்திருந்தேன்.
அடுத்தடுத்த ரூம்களில் இதே மாதிரி இஷ்டமித்திர பந்துக்களுடன் மசாஜ் வைபவங்கள்..கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் கழித்து 'கழிஞ்ஞு' என்றார். துவண்ட ஆடையுடன் (ஆடை எங்க! கோமணந்தான்!) ஒருவழியாக உடை மாற்றிக்கொள்ள வேறு அறைக்கு போனால் எங்கெங்கு காணினும் ஜட்டியடா!
எல்லாம் முடிந்து ரிஷப்ஷனுக்கு வந்து பணத்தை கட்டும்போது அந்த பெண் சொன்னார் ' சாரே ஈ மாசம் offer இண்டு ' என்றார். மசாஜுல என்னம்மா offer ? என்று கேட்டேன். 'இந்நு மசாஜ் செய்யுங்கில் 10 தெவசம் கழிஞ்ஞு 50% சார்ஜிலே மற்றொரு மசாஜ் கிட்டும்' என்றாரே பார்க்கலாம். இந்த ஒரு 'தெவசம்' போதும் என்று சொல்லி வெளியே வந்தேன்...
டாக்டரின் ரூமிலிருந்து 'இங்க வலிக்கிதா.. இங்க வலிக்குதா?' சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நிறைய 'இல்லே.. இல்லெல்லே' சத்தங்கள் டாக்டரின் குரலுடன் எதிரொலித்தது. வெளியே காத்திருந்த சில நோயாளிகள் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே எறிச்சலுடன் தூங்கிக்கொண்டிருக்க, மேலே மோகன்லால் ஷோபணா பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.
பி.கு: காரை ஓட்டிக்கொண்டே 'எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டார் டாக்டர்!' என உஷா சொல்ல நானும் 'எவ்ளோ டைம் எடுத்துக்கிட்டார் டாக்டர்!' என்றேன். 'வீட்டுக்கு போனவுடனே சப்பாத்தி செய்யனும்' என அவள் சொல்ல, நானும் 'வீட்டுக்கு போனவுடனே சப்பாத்தி செய்யனும்' என்றுதும் தலையில் அடித்துக்கொண்டாள்.

Shyam Krishnan

இரவு சுமார் 12 மணிக்கும் இவரது வீட்டுக்கதவை தைரியமாக தட்டினால் மலர்ந்த முகத்துடன் கதவைத்திறப்பார். சின்மயா சொசைட்டி ப்ரோக்ராம் நடத்தறதுக்கு ஸ்பான்சர்ஸ் லிஸ்ட் ரெடி பண்ணிண்டிருக்கேன் என்பார். அல்லது ஏதாவது பூஜைக்கு இந்தியாவிலிருந்து வரவழைக்க சாமான்கள் லிஸ்ட் போட்டுக்கொண்டிருப்பார்.
பஹ்ரைன் மனாமாவிலிருந்து வெகு தூரம் தள்ளி புதைய்யா பகுதியில் அழகிய வில்லா.. நாம் உள்ளே நுழைந்ததும் ச்சாய் அல்லது பெருங்காயம் கலந்த மோர் கொண்டு வந்து வைப்பார் முத்து (இவர் வீட்டில் வேலை செய்யும் இனிய மலையாளி அன்பர்). இன்னொரு ஆந்திராக்காரர் கிச்சனில் தயிர் சாதம் கலந்து கொண்டிருப்பார். அந்தப்பக்கம் ஹாலில் பஹ்ரைனிலேயே மிகப்பெரிய கொலு வைக்க வேலைகள் நடந்துகொண்டிருக்கும். கூரை வரை படிக்கட்டுகளில் வைக்கப்படும் இவரது வீட்டு கொலுவுக்கு ஆறேழு நிமிடங்கள் கைராலி டிவியில் ஸ்லாட் உண்டு.
பஹ்ரைனில் ரஜினி படம் ரிலீஸ் ஆகுமென்றால் போதும், ஊர் முழுக்க ரஜினி ஃபீவர் பரப்பி விடுவது இவர் தான். கிட்டத்தட்ட ஆயிரம் டிக்கெட்டுகளை முதல் ஷோவுக்காக முன்பதிவு செய்து ( கையிலிருந்து செலவு செய்து), சில தியேட்டர்களையே முழுவதுமாக புக் செய்தும், ரஜினி படம் போட்ட டி. ஷர்ட்களை ஆர்டர் செய்து, எல்லா நண்பர்களுக்கும் போன் செய்து டி.ஷர்ட் மற்றும் டிக்கெட்டுகளை விநியோகம் செய்து, படம் பார்க்க வந்த நண்பர்களுடன் போட்டோ எடுத்து, ரஜினிக்கு வாழ்த்து சொல்லும் வீடியோ எடுத்து, மறுநாள் கைராலி டிவி 'டெசர்ட் டைமி'ல் ஓலிபரப்ப வைத்து.. மனுஷனுக்கு ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது...அதுசரி.. செலவு செய்து வாங்கிய ஆயிரம் டிக்கெட்டுக்கான காசை நண்பர்களிடமிருந்து முழுவதும் வசூலிக்காமல், அநேகமாக நாமாகவே போய் அவர் சட்டைப்பையில் போடவேண்டும்.
புத்தகம், மருந்து, சர்ட்டிஃபிகேட் இப்படி எதாவது ஒன்றை இந்தியாவிலிருந்து வரவழைக்கவோ கொடுத்தனுப்பவோ இவரை அனுகினால் போதும். அடுத்த இரண்டு நாட்களில் வேலை நடந்துவிடும். லாப்டாப்பையே ரிப்பேருக்கு சென்னைக்கு அனுப்பி திரும்ப வரவழைப்பவர். இனிய முகத்துடன் நண்பர்களுக்கு உதவுவதிலேயே பெருவாரியான நேரம் செலவளிப்பவர் இவர்.
தனது வீட்டில் வேலை செய்யும் ஆட்களின் உறவினர் யாருக்காவது தானே விசா எடுத்து இந்தியாவிலிருந்து வரவழைத்து தன் வீட்டில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கிக்கொடுப்பார்.
வருடாவருடம் ஜனவரி முதல் தேதியன்று இவர் வீட்டில் நடக்கும் பூஜை மற்றும் ஹோமம் பஹ்ரைனிலேயே மிகப்பெரிய பூஜையாகும். தமிழர்கள் அனைவரையும் அன்று இவரது வீட்டில் பார்க்கலாம். அந்த பூஜையின் போது பிள்ளையார் உருவத்தை விதவிதமான பொருட்களினால் செய்யும் வேலை என்னுடையது. கடந்த 15 வருடங்களாக இத்திருப்பணியை செய்யும் பாக்கியம் எனக்கும் மனைவி Usharani Sridharக்கும் கிடைத்துள்ளது. இது வரை பிஸ்கட், பேரிட்சை, காய்கறிகள், பஞ்சு, சாக்லேட், கொட்டாங்கச்சி மற்றும் இதர பொருட்களினால் கணேஷா அவதரித்திருக்கிறார். பூஜையன்று இவரது வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் சுமார் 250 பேருக்கு காலை டிபன், பின் New Year Ganeshaவுடன் தம்பதிகள் ஒவ்வொருவராக புகைப்படம் எடுப்பது போன்றவை வருடம் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சிகள்..
இவரது வெற்றி மற்றும் புகழுக்கு காரணமானவர் இவரது மனைவி பத்மா தான் என்பதை மறுக்க முடியாது. பத்மாவின் பாலக்காட்டுத்தமிழ் கேட்க மிகவும் இனிமை. ஜெர்மனியில் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தவர், திருமணத்திற்குப்பின் கணவரின் வெற்றிக்கு உருதுணையாக இருக்கிறார்.
CA, ICWA, CFA, CISA போன்ற நிதி சார்ந்த மேற்படிப்புகள் படித்து, பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் CFOவாக இருக்கும், தயாள குணம் படைத்த, எப்போதுமே மலர்ந்த முகத்துடன் இருக்கும், எனது நெருங்கிய நண்பருமானShyam Krishnan இன் பிறந்த நாளான இன்று, பல்லாண்டு வாழ்கவென இவரை இக்கரிக்கட்டி ஓவியத்துடன் வாழ்த்தும்..

சீதாபதி ஶ்ரீதர்
(ஜியார்ஜியாவிலிருந்து..😄)