Tuesday, October 1, 2019

பாபு..பாபு

நாங்கள் சகோதரர்கள் 3 பேர். பெரியவன் பாபு பரமசாது, கூச்ச சுபாவமுள்ளவன். சின்ன வயதில் ரொம்ப கண்டிப்பானவனா இருப்பான். இப்ப செம்ம கூல். தம்பி ரவி என்னைப்போல அராத்து. பெரியவன் ஏவியெம் ராஜன் மாதிரியென்றால் சின்னவன் ஆனந்தராஜ்.
பள்ளி நாட்களில் எங்கள் இருவருக்கும் பாபுவிடம் கொஞ்சம் பயம். ரெண்டு தடவை தான் திட்டுவான். மூன்றாவது தடவை பொளிச்சென அறைவான். திருச்சி செஞ்சோசப்ஸில் ஃபாதர் சீ.கே. சாமியிடமும் வாழப்பள்ளியிடமும் படித்தவன். என்னை கூட்டிக்கொண்டு போய் க்ளைவ்ஸ் ஹாஸ்டல் அடிதடியையும், மாணவர்கள் பஸ்ஸில் கல்லை விட்டெறிந்ததையும் நேரில் காட்டி, வீட்டில் செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டான்.
70 களில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் தெருவில் இருந்தோம். ஏதாவது கலியாணமென்றால் லௌட் ஸ்பீக்கரில் 'ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் (மாணிக்கத்தொட்டில்)... கேட்டுக்கோடி உறுமி மேளம்..(ப.காடா பட்...)... ' என பாடல்களும் முழு சினிமாப்பட வசனமும் ஓடிக்கொண்டிருக்கும். படம் பார்க்காமலேயே வசனங்கள் எங்களுக்கு அத்துப்படி. அதிலும் ‘தத்திச்செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு’ எந்த இடத்தில் வரும், நடுவே வீச் வீச்சென வீகே ராமசாமி வசனம் (த.பதக்கம்) என எல்லாமே அத்துப்படி.
அடிக்கடி சினிமாவும் போகும் குடும்பம் ஐம்பது பைசா டிக்கட் எங்களுடையது. பேலஸ் தியேட்டரில் 'கோமாதா என் குலமாதா', அருணா தியேட்டரில் 'பாபி', ராமகிருஷ்ணாவில் 'சிரித்து வாழ வேண்டும்', பத்மாமணியில் 'தீபம்', ஜுபிடரில் 'நீதிக்குத்தலை வணங்கு'.. என எக்கச்சக்கமான படங்கள்.
ராக்ஸி வெலிங்டனில் பட்டிக்காடா பட்டனமா படத்துக்கு ஒரு நாள் எங்களை கூட்டிப்போனான் பாபு. சரியான கூட்டம். ஐம்பது பைசா டிக்கட் கியூவில் நாங்கள் முன்னால் நின்றாலும் கவுன்ட்டர் திறந்தவுடன் திடீரென வரிசை கடைசியிலிருப்பவர்கள் மேலே ஏறி தலைக்கு மேல் இருக்கும் கூண்டின் இரும்புக்கம்பியை பிடித்துக்கொண்டு பல்லி மாதிரி தலைகீழாய் ஊர்ந்து முன்னால் வர, "டாய்.. எறங்குடா.." வென கூச்சல். கசகசவென கூட்டம், பீடி நாற்றம் எல்லாம் சேர்ந்துகொள்ள பாபுவுக்கு திடீரென மூச்சு முட்டி கண்கள் சொறுகி.. மயக்கம் வர, "
பாபு..பாபு.." என நானும் ரவியும் கத்தினோம். " டேய்.. இவனுக்கு மயக்கம்டா என ஏக காலத்தில் சத்தங்கள் வர..அடுத்த நிமிடம் வரிசையிலிருந்து மூவரும் வெளியேற்றப்பட்டோம். 'ச்சே..படம் பார்க்க வந்த சமயத்திலயா இவனுக்கு மயக்கம் வந்துத்தொலையனும்?...சில நிமிடங்களில் அவனுக்கு குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்ததும் எழுந்து உட்கார்ந்தான். 'அப்பாடா.. ஒரு வழியா எந்திரிச்சுட்டான்..திரும்பவும் கியூவில் நிற்கலா'மென நாங்கள் நினைக்கும்போது ' வாங்கடா.. வீட்டுக்கு போலாம்' என எங்களை வெறுப்பேற்றி வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனபோது ஈஸ்வரியின் 'ஓ..மை ஸ்வீட்டி.. ஓ குடுமி அங்கிள்..' பாட்டு தூரத்தில் கேட்கும். மாலை 6 மணிக்கு ராக்ஸி தியேட்டர்காரன் கதவுகளை பாஆஆவென திறந்து வைத்து விட மூத்திர நாத்தத்துடன் படம் ஓடும்.
பாபு படிப்பில் எப்போதும் பயங்கர புலி. காலை 4 மணிக்கு படக்கென எழுந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பான். தீபாவளியன்று நானும் ரவியும் பாம்பு மாத்திரை விடும்போது இவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு எங்களை கடுப்பேத்துவான்.
அலகாபாத்தில் நானும் அவனும் படித்தோம். குல்பூஷண் ஆஷ்ரம் டிகிரி கல்லூரியில் (கான்பூர் யுனிவர்சிட்டி) அவன் இளங்கலை பாட்டனி மற்றும் எம்.ஏ படித்தான். இலங்கை பொப்பிசை பாடகர்கள் (நித்தி கனகரத்தினம் நண்பர்கள்) இவனது நண்பர்
கள் நாலைந்து பேர் அங்கே படித்து வந்தார்கள். அவர்களது அறைக்கு போனால் அலுமினிய தட்டில் மணக்க மணக்க சூடான கொட்டை புழுங்கல் அரிசி சாம்பார் சோறு கிடைக்கும்.
குடும்ப சூழ்நிலையால் பாங்க் எக்ஸாம் எழுதி சீக்கிரம் பாங்க் வேலைக்குப்போனாலும், உடனே அலகாபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றிக்கொண்டு, ராவ்ஸ் கோச்சிங்கில் சேர்ந்து சிவில் சர்வீஸ் (IAS & IPS) தேர்வுக்கு கடுமையாக உழைத்து, ப்ரிலிமினரி மற்றும் மெயின் பரிட்சைகள் பாஸ் செய்து டெல்லி இன்டர்வியூ வரை போய், சுமார் 15 ராங்க்குகள் பின் தங்கியதால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் அருமையான வாய்ப்பை இழந்தான். கட் ஆஃப்க்கு அடுத்த லிஸ்டில் வந்த கஸ்டம்ஸ் இலாகா பதவிகளை வேண்டாமென ஒதுக்கியவன்.
எந்த படிப்பாக இருந்தாலும் லட்டு லட்டாக நோட்ஸ் எழுதி புத்தகங்களை கடாசி விட்டு அந்த நோட்ஸை படித்து அதிக மார்க்குகள் வாங்குவான். நானும் ரவியும் முக்கியமான இருபது கொஸ்டின் தேர்வு செய்து கடைசி நேரத்தில் புஸ்தகத்தை தொட்டு சான்ஸ் எடுப்போம்.
பின் பம்பாயில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்து கொண்டு ICWA, CFA போன்ற படிப்புகளை அசால்ட்டாக பாஸ் செய்து MBAவும் முடித்து பம்பாய் பங்கு மார்க்கெட்டுக்குத்தாவி, Head of Compliance என நல்ல பதவிகளில் இருந்து விட்டு, தற்போது கொயட்டாக Practicing Cost Accountant, Cost Audit என அமைதியான வாழ்க்கை, டைம்ஸ் ஆஃப் இந்தியா Crossword puzzleஐ பொறுமையாக உட்கார்ந்து பூர்த்தி செய்து, இன்னபிற Quiz contest களில் கலந்துகொண்டு கார் பரிசு பெற்று, வளைகுடாவில் ஜல்லியடிக்கும் என்னை பொறாமைப்பட வைப்பவன் என் அண்ணன் பாபு.
கடின உழைப்பு, பொறுமை, அடக்கம், அபரிதமான அறிவு, நேர்மை, நிறைகுடம் என சொல்வதற்கு நிறைய உள இவனிடம்.. இவனைப்போலவே அண்ணி Latha Sureshஉம் பெண்கள் Mrinalini Suresh மற்றும் Yashika Suresh மூவரும் அதிகம் பேசாத சுபாவமுள்ள எளிமையானவர்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Suresh Babu ..
துபாய்..இரவு மணி 12.45.. போக்குவரத்து அதிகமில்லாத சாலை. பளீரென விளக்குகள். எங்கள் காரைச்சுற்றிலும் மூன்று ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வண்டிகள். முன்னிருக்கையிலிருந்த நான் சட்டென கண் விழிக்க ஒன்றுமே புரியவில்லை. சில நிமிடங்கள் முன் டமாலென சத்தம் கேட்டது லேசாக நினைவுக்கு வர, நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைத்த மாதிரி பயங்கர வலி. மூச்சு விட ஸ்ரமமாக இருக்க, இறக்கப்போகும் கடைசி சில நிமிடங்கள் போல இருந்தது!
எதிரே புகையோ புழுதியோ.. என்னை முழுவதும் மறைத்தபடி ஏதோ ஒரு சாக்கு மூட்டை மாதிரி. சற்று நேரம் முன் தான் airbag 'டமால்' என்ற பெருஞ்சப்தத்துடன் கார் டேஷ்போர்டை உடைத்துக்கொண்டு என் நெஞ்சில் மோதி.. சுற்றிலும் புகை மூட்டம் மற்றும் கண்ணாடித்துகள். டிரைவர் இருக்கையிலிருந்த என் மைத்துனர் சதீஷும் மற்றொரு airbag இல் புதைந்திருக்க அவரெதிரே ஸ்டியரிங்கை கிழித்து ஊதி வெளியேறியிருந்தது airbag.
பின் இருக்கையில் 75 வயதைத்தாண்டிய என் மாமனார் (சதீஷின் அப்பா) மற்றும் சதீஷின் மாமனார் இருவரும் தம் இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, முழங்கால் பகுதியில் பேண்ட் கிழிந்து, இரத்தக்கசிவுடன் பொட்டலங்களாக கிடந்தனர்.
இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பெரிய சாலை விபத்தில் சிக்கிக்கொண்டோம் என்பது புரிய ஆரம்பித்தது. இது நடந்தது இரண்டு வருடங்கள் முன்பு. ஒரு ஃபிப்ரவரி மாதம் அலுவல் நிமித்தம் நான் ஒருவாரகாலம் துபாயில் இருந்த போது நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து. அதுவும் எனது பிறந்த நாளன்று.
சரேலென சதீஷ் எழுந்து என்னை தட்டியெழிப்பி Are you ok எனக்கேட்க, உடலை அசைக்க முடியவில்லை. பின்புறம் திரும்பி தன் தந்தையை அவர் எழுப்ப, அவரும் கலவரத்துடன் எழ முயற்சித்தார். சட்டென கார்கள் அருகில் வந்து நிற்க, அரபிக்காரர்கள் சிலர் ஓடி வந்து 'hey.. get down first.. there is smoke in the engine!' என கத்த அடுத்த நொடி நாங்கள் நால்வரும் காரிலிருந்து அவசரமாக தள்ளாடியபடி இறங்கினோம். நல்ல வேளை கார் தீப்பிடிக்கவில்லை.
நிற்க முடியாமல் மயக்கம் வர ஆரம்பித்தது. பதட்டமான சூழ்நிலையில் எப்போதும் நான் செய்யும் முதல் காரியம் காயத்ரி மந்திரம் உச்சரிப்பது தான். பலன் அடுத்த சில நொடிகளில் தெரிவது சத்தியம். உதடுகள் 'ஓம் பூர்புவஸ்ஸுவஹ.. தத்சவிதுர் வரேண்யஹம்' முனுமுனுத்து மயக்கம் வருவதை வெற்றிகரமாக தடுத்து, சாலையை கடந்து ப்ளாட்ஃபாரத்தில் கால்களை நீட்டி சயன நிலையிலிருந்த என்னை துபாய் போலீஸ்காரர் ஒருவர் ஓடி வந்து 'ஹேய்.. இது இரண்டு ரோடுகளுக்கு நடுவே உள்ள மீடியன் பகுதி.. இங்கு இன்னும் ஆபத்து.. அபீட் உட்ருவே!' என கைத்தாங்கலாக அழைத்துச்சென்று சாலையின் ஓரத்தில் அமர வைத்தார்.
யாரோ என்னிடம் வந்து ஏதோ கேட்பது மங்கலாக தெரிய வாய் குளறி ஏதோ சொல்கிறேன்.. நெஞ்சுவலி தாங்க முடியவில்லை என. சுற்றி பதினைந்துக்கும் மேற்ப்பட்ட ஆட்கள். ஆம்புலன்சிலிருந்து இறங்கி வந்த மலையாளி இளைஞர் என்னை வண்டியினுள்ளே அமர வைத்தார். இதற்குள் மனைவி உஷா தகவல் கிடைத்து அங்கே வந்து சேர்ந்தார்.
'சார்.. 6 வருடங்களுக்கு முன் எனக்கு angioplasty செய்யப்பட்டுள்ளது. தற்போது நெஞ்சில் அடிபட்டதில் தாங்க முடியாத வலி. Please உடனே என்னை பரிசோதியுங்கள்' என நாக்குளற நான் சொன்னதும், ஆம்புலன்ஸ் மலையாளி பெண் 'சார்..உங்க நெஞ்சுவலி அந்த airbag அடித்ததனால் தானே தவிர உங்க இதயம் அடிபட்டிருக்க வாய்ப்பே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம்' என சொல்லியவாறே தன் கைப்பேசியில் ' I have 2 persons with me.. one is Green and the other is Yellow.. no Red here..' என்றார். Yellow என்றால் critical என குறிப்பிடப்படும் என் மைத்துனரின் மாமனாருக்கு முதலில் கழுத்தில் வலி இருக்கிறதாவென கேட்டு உடனே அவரை அள்ளிக்கொண்டு விரைந்தது ஆம்புலன்ஸ். என்னை Green என குறிப்பிட்டது ஆபத்தில்லை என்பதற்காக போலும். Red என்றால் ‘மூக்கில் பஞ்சு கேஸ்’ எனக்கொள்க.
அல்நாஹ்தா தாண்டி க்வெஸேஸ் பகுதியில் வீட்டை நெருங்க சில நிமிடங்களே இருந்த நேரத்தில் நடந்த விபத்து இது. மைத்துனர் சதீஷ், மனைவி உஷா மற்றும் நான்..மூவரின் பிறந்த நாள் ஒரே வாரத்தில் இருந்ததால் துபாய் இந்தியா க்ளப்பில் சுமார் இருபது நண்பர்களுடன் இரவு உணவை முடித்து கேக் வெட்டி கொண்டாடி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். சதீஷின் மனைவி Pramila S Raj பெண்களுடன் GMC Envoy எனும் பெரிய 4 சக்கர வாகனத்தில் முன்னால் போக ஆண்கள் நாங்கள் நாலு பேர் காரில் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தோம்.
சிக்னலில் சிவப்பு விளக்கு மாறி பச்சை வந்தவுடன் இடது பக்கம் நாங்கள் திரும்பும் போது எதிர் பக்கமிருந்து மிக அதிக வேகத்துடன் சிவப்பு விளக்கில் நிற்காமல் சவுதி வண்டியில் வந்த எமராட்டி இளைஞன் எங்கள் காரை நேருக்கு நேர் மோத, மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது பிறகு தான் எங்களுக்கு புரிந்தது. பணக்கார இளஞர்கள் எப்போதும் விலை உயர்ந்த கார்களான மாசெரட்டி, லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களில் காதை கிழிக்கும் சத்தத்துடன் நள்ளிரவில் நண்பர்களுடன் பறப்பதும் டமாலென எங்காவது இடித்து சடுதியில் இறப்பதும் அரபு நாடுகளில் சகஜம்.
விபத்துக்கு வருவோம். எனது முதல் ஆம்புலன்ஸ் பயணம் அது (ஆமா! ஏதோ ஏரோப்ளேன் பயணம் மாதிரி ரொம்ப முக்கியம் இப்ப!) பக்கத்தில் என் கையை பிடித்துக்கொண்டபடி மனைவி. வண்டி ஊய்.. ஊய் என சைரன் ஒலியுடன் போகும்போது தான் நினைத்தேன் 'எத்தனை முறை ரோட்டில் சைரன் ஒலியுடன் செல்லும் ஆம்புலன்ஸை பார்த்திருக்கிறோம். இன்று நாமே அந்த வண்டியில். ஆம்புலன்ஸில் மூன்று பேர் கொண்ட குழு (மலையாளிகள்) பதட்டமேதுமில்லாமல் சூழ்நிலையை கையாண்டு, எங்களை ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு புன்முறுவலுடன் விடை பெற்றுக்கொண்டிருக்கும் போதே அடுத்த விபத்துக்கான அலார ஒலி கேட்டு ஓடினார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.
அடுத்த சில நிமிடங்களில் எமெர்சஜென்சி வார்டில் படுக்கையில் என்னை கிடத்தி ஆக்ஸிஜன் மாஸ்க்கை முகத்தில் பொருத்தி, இஞ்செக்‌ஷன், மற்றும் என்னைச்சுற்றி வயர்கள், மானிட்டர் வகையறா. சுடானிய டாக்டர் ஒருவர் வந்து சோதித்து 'கழுத்தில் வலி இருக்கிறதா' என கேட்டு ஈசிஜி மற்றும் கார்டியாக் என்சைம் டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு, கை காலை மேலே கீழே ஆட்டச்சொல்லி எலும்பு முறிவு ஏதுமில்லை, எல்லாமே நார்மலாக இருப்பதாக சில நிமிடங்களில் சொன்னதும் எனக்கு நிம்மதி.
அடுத்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர். 60 வயது மதிக்கத்தக்க மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் முன் அமர்ந்தேன். அக்கரையுடன் 'உன்னால் உட்கார்ந்து பேச முடியுமா?.. உன்னை இங்கு வரவழைத்து தான் பேச வேண்டுமென்பது நியதி. மன்னிக்கவும்' என பரிவாக பேசினார். 'காரை ஓட்டியது யார்.. எப்படி விபத்து நடந்தது என நீ பார்த்தாயா.. கார் ஓட்டியவர் ( என் மைத்துனர்) மீது குற்றமிருக்குமென நீ நினைக்கிறாயா.. இல்லை அவரை விடுவிப்பதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே!.. போன்ற கேள்விகள். ஆட்சேபணை உண்டென்றால் உடனே அவர் கம்பிகளுக்கு பின்னேவாம். பின், மைத்துனரின் கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு (அடுத்த ஒரு மாதத்திற்கு நாட்டை விட்டு போகாமலிருக்க), ஒரு மாதத்திற்குள் கோர்ட் வரும்படியும் அதற்குள் டிராஃபிக் காமிரா footage பார்த்து அவர் மேல் தப்பா அல்லது அந்த எம(ன்)ராட்டி இளைஞன் மேல் தப்பா என தெரிந்து கொள்வார்கள் என விளக்கினார்.
காலை நான்கு மணிக்கு மைத்துனரின் நண்பர்கள் சுகுனா ரமேஷ் தம்பதியின் இல்லத்தில் டீ, காபியுடன் வட்டமாக அமர்ந்து விபத்தைப்பற்றி விவாதித்து ட்ரேயில் பெரிய கேக் ஒன்றை கொண்டு வந்தார்கள். எனது பிறந்தநாளை சிம்பிளாக, இடது கையை நெஞ்சில் பிடித்துக்கொண்டு, வலியால் முனகிக்கொண்டே வலது கையால் கேக்கை வெட்டினேன்.
வாகனத்தில் போகும்போது சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவமும், முன் பக்க வாகன ஓட்டியின் அருகில் இருப்பவருக்கும் airbag தேவை என்பதும் இந்த விபத்தில் நான் தெரிந்து கொண்டவை. ஒரு சிறு சிராய்ப்பு இல்லாமல் உயிர் பிழைத்தது அதிசயமே. சமயபுரம் மாரியம்மன், மலைக்கோட்டை பிள்ளையார், சீரங்கம் பெருமாளுக்கு நன்றி.
Airbag அடித்த வலி நெஞ்சில் ஒரிரு மாதங்களிருக்குமாம். சிலருக்கு அதனால் எலும்பு முறிவே ஏற்படுமாம். தலை சீவ கையை உயர்த்தினாலோ, கையை நீட்டி தண்ணீர் க்ளாஸ் எடுக்க முனைந்தாலோ, கழிவறையில் இடது கையை.... ஜிவ்வென உயிர் போற சுகமான வலி..
இவ்விபத்திற்குப்பிறகு மனைவி உஷாவின் (Usharani Sridhar) ஹ்யுண்டாய் டுஸ்ஸான் (Tucsan) காரில் முன் பக்கம் airbag இல்லையென்பதால் உடனே வண்டியை விற்றுவிட்டு Jeep Cherokee வாங்கியாகி விட்டது.
கார் வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்கள் பார்த்து வாங்குதல் அவசியம். Sun roof, DVD, alloy wheel, leather seat, Navigation போன்றவை இரண்டாம் பட்சமாக இருக்கட்டும். குறிப்பாக பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும் airbag உள்ள வண்டிகள் பார்த்து வாங்குதல் உத்தமம்.
வளைகுடா நாடுகளில் அமெரிக்க கார்களுக்கு ரீசேல் மதிப்பு குறைவென்பதால் எல்லோரும் ஜப்பானிய டொயோட்டா காம்ரி, கரோல்லா, லெக்சஸ் கார் வாங்குவார்கள். ஆனால் அமெரிக்க வண்டிகளில் safety features நன்றாக இருக்கும்.
முன்பெல்லாம் ஃபோர்ட் க்ரௌன் விக்டோரியா காரை பஹ்ரைனில் சீந்துவாரில்லை. ஆனால் அமெரிக்காவில் அதே காரைத்தான் போலிசார் அதிவேகமாக ஓட்டிச்சென்று திருடர்களை பிடிப்பார்கள். ப்ளைமூத் மாதிரி ரொம்ப பெரிய்ய்ய கார். முன்னிருக்கையில் நலங்கு வைக்க ஏதுவாக பரந்த இடம். பின்னிருக்கையில் சாந்தி முகூர்த்தமே நடத்தலாம்.
2019 ஒரு ஆரோக்யமான வருடமாகவும், விபத்து ஏதுமின்றி பாதுகாப்பான வருடமாக அமைய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..

அன்னையர் தினம்

1. தென்னூர் ராஜா டாக்கிஸான்ட ரைட்டெடுத்து ஜாபர்ஷா தெரு வழியா வைர நகை கடைங்கள தாண்டி, படக்குன்னு ஒரு சந்துல திரும்புனாக்க ராஜா Rajaseharan Subramanian வீடு. பனியன் போட்டு ஈசிச்சேர்ல உக்காந்திருக்கற அவிங்கப்பாக்கு வணக்கம் போட்டு நேரா மொட்ட மாடியில போய் சி.ஏ பரிட்சைக்கு ஃப்ரெண்ட்ஸ் சேந்து படிக்ககறச்ச அப்பப்ப டீ போட்டு மேல அனுப்புன அவிங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
2. மன்னார்புரத்துல இருந்து வேகாத வெய்யில்ல காரியர்ல புக்ஸ் வச்சிக்கிட்டு, காத்துல பறக்கற லுங்கிய இழுத்து காலுக்குள்ள தள்ளி, பெடலை அழுத்தி காஜாமலை காலனி ஸ்பீட் ப்ரேக்கரை தாண்டி, ப்ளஸ்டூ பொண்ணுங்கள சைட்ல லுக் வுட்டு A ப்ளாக்ல குமார் வூட்ல போய் ‘பூங்காற்று திரும்புமா’ன்னு பாடிக்கிட்டே அக்கவுண்ட்ஸ் பரிட்சைக்கு படிச்சா எப்பிடிப்பா சி.ஏ. பாஸ் ஆவீங்கன்னு கேட்டுக்கிட்டே தட்ல சோறு போட்ட அவிங்கம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
3. பாம்பேலர்ந்து லீவுக்கு திருச்சி போறச்ச செம்பூர் ரூம்மேட் ரெங்குவோட அம்மா மண்டபம் வீட்ல வச்சி அவிங்கப்பா பாஷ்யம் சார் காலை தொட்டு வணங்கி, சீடையும் காபியும் சாப்ட்டுகிட்டே ரெங்குவ ஓவரா புகழ்ந்து தள்ளி, அந்த பில்டப்புல இம்ப்ரஸ் ஆகி தட்டுல எக்ஸ்ட்ரா சீடை வச்ச அவிங்கம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
4. புதுசா கல்யாணம் ஆன ஃப்ரெண்டு அலாஷியஸ் வீட்டுக்கு செம்பூர் ரூம்மேட்ஸோட அவிங்க கோலிவாடா கவர்மென்ட் குவாட்டர்ஸ் போறச்ச, தட்டுல இருந்த கல்யாண பூந்தி லட்ட சிந்தாமெ ஆசையா கடிக்கறப்ப ‘இந்த தபா அவசியம் சி.ஏ பாஸ் பண்ணிடுப்பா!’ ன்னு அட்வைஸ் கொடுத்து பொறையேத்தி தலைல தட்டி தண்ணி கொடுத்த அவிங்கம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்! (அந்த வருசமே நா பாஸ்..😀)
5. வருஷப்பொறப்பன்னிக்கி காலைல ஏழு மணிலர்ந்து பதினோறு மணிவரை ருத்ரம், சமகம், ஹோமம்னு பூஜை முடிச்சி, நா செஞ்ச புள்ளையாரை நடு ஹால்ல வச்சி போட்டோல்லாம் எடுத்து Venkat Ramanathஐ வச்சி சாமவேதம் ஓதி ஐந்நூறு பேருக்கு இட்லி பொங்கல் கேசரியோட மஹா பிரசாதம் கொடுக்கும் நண்பர் Shyam Krishnan வீட்டுல, கடசீல எல்லோருக்கும் ஆசிர்வாதம் கொடுத்து கைல நாணயம் கொடுக்கும் ஷ்யாமோட அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
6. ‘ஶ்ரீதரா! இன்னிக்கி அக்கவுண்ட்ஸ் படிக்கலாம். வந்துடறயா?’ன்னு அட்வைஸ் கொடுத்து அப்பாவியான என்னைய பொன்மலை இழுத்தடிச்சி நைட் ஸ்டடீஸ்ங்கற பேர்ல எம்.சி. ஷுக்லா அக்கவுண்ட்ஸ் புத்தகத்த தெறந்து வஞ்சிக்கினு, அம்மா குடுத்த ஆர்லிக்ஸை ஆத்தி ஆத்தி குடிச்சிகினு, ‘ஶ்ரீதேவிய விட தீபாவுக்கு (மீண்டும் கோகிலா) மடிசார் சிக்குனு நன்னா இருக்கு இல்லியாப்பா’ன்னு அர்த்த ராத்திரில அடல்ட்ஸ் ஒன்லி கமென்ட் கொடுத்து ‘சரிடா.. ரொம்ப பேசிட்டோம். நாளைக்கி ரத்னம்ஸ் காஸ்டிங் அட்வைசர் கொணாந்துரு’ என்ற ஆருயிர் பால்ய நண்பன் கணபதி Ganapathi Subramanian னின் மயிலாப்பூர் வீட்ல பக்கத்துல ஒக்கார வச்சி இப்பவும் ‘புள்ளைங்கள்ளாம் நல்லா இருக்காங்களாப்பா? சின்னவன் சி.ஏ பாஸ் பண்ணிட்டானா? யார் தான் இந்த சி.ஏ படிப்ப கண்டுபிடிச்சாங்களோ ?’ என வாஞ்சையுடன் விஜாரிக்கும் கணபதியின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
86ல முதமுதல்ல பம்பாய்ல வேலை கிடைச்சு போயி சரியா ஒரு வருஷங்கழிச்சு முன்கூட்டி சொல்லாமெ திடீர்னு திருச்சி போய் நின்னப்ப கதவ தொறந்து ‘ஏமிபா! ஒச்சேஸ்திவா!’ என அழுது கையை பிடிச்சிக்கிட்ட என் அம்மாவோட அன்பு...
80 வயதிற்கு மேல் ப்ளேன் புடிச்சி பஹ்ரைன் வந்திருக்கறப்ப கை கால் குடைச்சலுக்கு கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலாவுல பத்து நாள் மசாஜ் செஞ்சப்பறம் மலையாளி சேச்சிக்கு குரோஷே நூலுல மெபைல் கவர் பண்ணி கொடுத்த அம்மாவோட கரிசனம்...
‘ஶ்ரீதர்! உன்னோட ஆபிஸ் நா பாத்ததில்லியே!’ ன்னு கேட்டு பஹ்ரைன்ல எங்க ஆபிஸ் வந்து என்னய சீட்ல உக்கார வச்சு கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்ட அம்மாவோட குழந்தை மனசு...(படம் பார்க்க!)
தனியாவே 82 வயசுல பஹ்ரைன்ல இருந்து கிளம்பி கொழும்புல வேற ஃப்ளைட்ல மாறி திருச்சி போகும் அம்மாவோட தெகிரிய
ம்...
எங்கியோ (2013) ஸ்விஸ்,மிலன், வெனிஸ்னு பத்து நாள் சுத்திக்கிட்டு இருந்த நான் அகஸ்மாத்தா ரோம் ஹோட்டல்ல இருந்து போன் பண்றப்ப ‘ஶ்ரீதர்! கடுப்பு நொப்பி (வயத்து வலி) ஒச்சேசிந்தி’ என அழுது, கூட இருக்கும் என் அக்கா துணையால் ஆசுபத்திரியில் சேர்ந்து அடுத்த ஒரே வாரத்துல....அப்பிடி என்ன அவசரம்...
அம்மா போனப்பறம் எங்களுக்கு அம்மா ஸ்தானத்தில் இருக்கும்.. அம்மா போலவே அக்கரை, கரிசனம் மற்றும் அன்புடன் குடும்பத்தை வழிநடத்தும் என் சகோதரி Hemalatha Manohar க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
பி.கு: மேலே குறிப்பிடாத ஏராளமான என் நண்பர்களின் அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அப்பா இருந்திருந்தால்...

 
அப்பா இருந்திருந்தால் இன்றோடு 90 வயது பூர்த்தியாகியிருக்கும். சுறுசுறுப்பாக சைக்கிள், ஹீரோ மெஜஸ்டிக் மொபெட் என திருச்சி சுந்தர் நகர், கேகே நகர் பக்கம் தைலா முதலி மஞ்சள் பையுடன் சுற்றிக்கொண்டிருப்பார்.
பஹ்ரைனிலிருத்து நானோ அல்லது தம்பி ரவி Vijay Raghavan (மஸ்கட்) திருச்சிக்கு விடுமுறைக்கு போனால் சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு சப்போட்டா வாங்க பழமுதிர்ச்சோலை பக்கம் ஓடுவார். அல்லது எங்களையும் கூட்டிக்கொண்டு குமுதா ஸ்டோர் வாசலில் டீ வாங்கி கொடுப்பார். அதில் ஒரு சந்தோஷம் அவருக்கு. உஷாவுக்கு Usharani Sridhar எதுனா வாங்கிக்கனுமா என மறக்காமல் கேட்பார். பாட்டா செருப்பு தனக்கு வாங்கிக்கொள்வார். ரிடையர் ஆகியிருந்தாலும் பல வருடங்கள் பாண்ட் தான் போடுவார். பெல்ட்டில் எக்ஸ்ட்ரா ஓட்டை போடனும்பார். அப்போது தான் நாங்களும் கவனித்து ஏன் சரியா சாப்புடறது இல்லியா என கேட்போம்.
சப் ரெஜிஸ்ட்ராராக ரிடையர் ஆனவர். SSLC படிப்புடன் நிறுத்திக்கொண்டாலும் அவரது ஆங்கில எழுத்தாற்றல் வியக்க வைக்கும். இருபது வயதில் உடுமலைப்பேட்டை முன்சீப் கோர்ட் பெஞ்ச் கிளார்க்காக அவரை தாத்தா ராமசாமி சேர்த்து விட்டவுடன், புத்தகங்கள் வாசிப்பது என ஆரம்பித்து ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், அகதா கிறிஸ்டி என நிறைய நாவல்கள் படிப்பதுடன் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பார். க்ரிகாரி பெக், யூல் ப்ரின்னர், க்ளின்ட் ஈஸ்ட்வுட் என ஆங்கில கதாநாயகர்களைப்பற்றி பேசி சிலாகிப்பார். கடைசி சில வருடங்கள் ரஜினி ரசிகராக்கும். கூட்டுறவு, வீட்டு வாரியம், பஞ்சாயத்து யூனியன் என டெபுடேஷனில் இருந்து 87இல் ரிடையரானார்.
என் வெஞ்சமடை சித்தப்பா அந்த காலத்தில் தன் பஞ்சாயத்து யூனியன் மேலதிகாரி ஏதோ கோபமாக சொல்லிவிட்டாரென அவர் முன் ஆபிஸ் கடிதமொன்றை கசக்கி எறிய, உடனே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தென்னூரில் காலை வீட்டு வாசல் படியில் பாண்ட்ஸ் பவுடர் டப்பா மேல் கண்ணாடியை சாய்த்து வைத்து முகச்சவரம் செய்துவிட்டு படிகாரக்கல்லை முகத்தில் தேய்த்துக்கொண்டிருந்த அப்பா முன் ‘நாக்கு பணி போயிந்திண்ணா!’ என பதறியடித்து ஓடிவந்து நின்றார் சித்தப்பா. உடனே அப்பா வெள்ளைத்தாளை எடுத்து ‘அப்ரபோ’ (apropos) என எழுத ஆரம்பித்து அடுத்த மூன்று மாதத்தில் நிறைய விளக்கங்களுடன் சென்னை மேலிடத்திற்கு பல கடிதங்கள் எழுதி ஒரு வழியாக சித்தப்பா மீண்டும் பணியிலமர்த்தப்பட்டார்.
மாதாமாதம் நாம் அனுப்பும் பணத்தை சிக்கனமாக சேமித்து 25, 30 ஆயிரமென மொத்தம் சுமார் மூன்று லட்சத்திற்குள் ஏழெட்டு வைப்பு நிதி ரசீதுகளை ஜிப் வைத்த ஜியார்டி நகை மாளிகை பையில் வைத்து பத்திரமாக கோத்ரேஜ் பீரோவில் வைத்திருப்பார். அம்மாவுடன் ஜாயின்ட் அக்கவுன்ட் அல்லது தன் பெயரில் உள்ள டெபாசிட்களுக்கு அம்மா பெயரில் நாமினி என சகலமும் திருத்தமாக செய்துவிட்டு அசால்ட்டாக போய்ச்சேர்ந்தார்.
அவரது பழைய சிட்டி கோஆபரேடிவ் பாங்க் டைரியை புரட்டினால்.. பசங்க அனுப்பிய பண விபரங்கள், யார் யார் கலியாணத்திற்கு எவ்வளவு மொய், வீட்டு வரி, மாடி வீடு கட்ட மேஸ்திரிக்கு கொடுத்தது (டீ வடை உள்பட) என ஏகப்பட்ட குறிப்புகள்.
‘என்னடா இது! வாக்கிங் போனவர் இன்னும் வரக்காணோமே!’ என கவலையுடன் அம்மா என் அக்கா Hemalatha Manohar வீட்டுக்கு போன் செய்தால் அங்கே டீ குடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். மகள் மீது ரொம்ப பாசம். கடைசி சில வருடங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அக்கா வீட்டிற்கு கீழேயே குடியிருந்தார்.
8 வருடம் முன் வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து, பல்ஸ் ரேட் இறங்கி, ஒரு நாள் மட்டும் ஆசுபத்திரியிலிருந்து விட்டு அதிகம் சிரமப்படாமல், வழக்கம்போல சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்புவது போல போய்ச்சேர்ந்தார். கூட இருந்த பெரியவன் Prashanth Sridhar அலாக்காக அவரை தூக்கி காரில் உட்கார வைத்தது, கைத்தாங்கலாக அவரை கழிப்பறையில் உட்கார வைத்தது என பார்த்துக்கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
‘ஶ்ரீதர்! வென்டிலேட்டரை எடுத்து வுடப்போறாங்களாம்.. நீ கெளம்பு!’ என தகவல் கிடைத்து சிறிலங்கன் விமானம் பிடித்து கொழும்பு வழியாக திருச்சி அக்கா வீடு போய் அவரை ஐஸ் பெட்டியில் பார்த்தேன்.
ஐஸ் பெட்டிக்கு அந்தப்பக்கம் மேசை மேல் எக்ஸ்ட்ரா ஓட்டை போட்ட அந்த பெல்ட்...
இன்று அப்பாவுக்கு பிறந்த நாள்..

மூர்த்தி

95இல் பஹ்ரைனில் பிரபலமான சிவகுமார் மாமாவின் சென்டாஃப் பார்ட்டியில் அவரது உருவப்படத்தை வரைந்து மேடையில் நான் அவரிடம் அளிப்பதாக ஏற்பாடாகியிருத்தது. வெறுமனே படத்தை கொடுப்பதற்கு பதிலாக இரண்டு நிமிடம் ஏதாவது பேச வேண்டுமென நினைத்த எனக்கு ஆபத்பாந்தவனாக வந்தது இந்த லக்ஷ்மி மூர்த்தி தான். கடைசி நிமிடத்தில் சிவகுமார் மாமா பற்றிய கவிதையை மேடைக்கு பின்னால் சட்டென மூர்த்தி எழுதி உடனே என்னுடன் மேடை ஏறி கவிதையை வாசிக்க, ஓவியத்தை நான் அளித்து கைத்தட்டல் பெற்றது மறக்க முடியாத அனுபவம்.
சிலர்த்து நிற்கும் தலைமுடியை அழகாக படிய வாரி வந்து நிற்கும் மூர்த்தியிடம் யாராவது ‘ஏம்ப்பா ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கே’ எனக்கேட்டால் மூர்த்தியிடமிருந்து வரும் பதில் ‘அது மட்டும் தான் நம்ம கன்ட்ரோல்ல இருக்கு’.
வெள்ளியன்று Ganapathi Subramanian என்னை Gopala Sundaram மாமா வீட்டிற்கு கூட்டிப்போவான். இசை மற்றும் ராகங்களைப்பற்றி மாமா விளக்குவார். மூர்த்தியையும் தவறாமல் அங்கே பார்க்கலாம். ‘இது வரைக்கும் சா பா சா படிச்சோம்.. அடுத்து ச மோ சா சாப்பிடலாம் என மூர்த்தி உட்பட சிலர் குரல் கொடுக்க சுடச்சுட சமோசா கொண்டு வந்து வைப்பார் ருக்கு மாமி. பஹ்ரைனில் மறக்க முடியாத தருணங்கள்.
மூர்த்தி திருச்சி நங்கவரம் ஸ்டோர்ஸ் அல்லது இரட்டை மால் தெரு என ஞாபகம். சி.ஏ. படிக்கும்போது கணபதிக்கு ஜூனியர். Tiruchendurai Ramamurthy Sankar இன் கிளாஸ் மேட் (திருச்சி ஈஆர் ஹைஸ்கூல்). பஹ்ரைனில் டிராமா போடுவது, இசை வகுப்பு என எல்லாவற்றிலும் மூர்த்தியை பார்க்கலாம்.
பஹ்ரைன் விட்டு
அக்குழந்தை கீதையை அழகாக சொல்லவும் ஆச்சரியமாக கேட்ட என்னிடம் நண்பர் ‘பகவத்கீதையை துபாயில் ரொம்ப அழகாக உரையாற்ற மூர்த்தியை அடிச்சுக்க ஆளே இல்லை’ என சொல்லி அவர் காட்டிய போட்டோவை பார்த்தால் நம்ம மூர்த்தி தான் அது என தெரிந்து கொண்டேன். மூர்த்தி துபாயில் ரொம்ப பிரபலமாம்.
மூர்த்தி துபாய் பக்கம் போய் பல வருடங்களாகிறது. ஒரு நாள் துபாய் நண்பர் ஒருவர் தன் குழந்தையை பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது
அப்புறம் துபாயில் மூர்த்தியை பல வருடங்கள் கழித்து சந்தித்தது, மூர்த்தி மற்றும் நண்பர்கள் Ganesh Subramanian மற்றும் Rangesh Embar உடன் IPL மாட்ச் பார்த்தது, கராமா பகுதி சரவணபவனில் சாப்பிட்டது, சென்ற மாதம் க்வசேய்ஸ் பகுதி அம்ருதா உணவு விடுதியில் சந்தித்தது என மூர்த்தியுடனான என் தொடர்பு இப்பொழுதும்...
Fonterra எனும் உலகப்புகழ் பெற்ற நிறுவனமொன்றில் CFOவாக இருந்த மூர்த்தி இப்பொழுதும் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் அமைதியாக மலர்ந்த முகத்துடன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று பிறந்த நாளாம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மூர்த்தி...

மோகன்

1995இல் ஃபேமிலி விசா கிடைத்து குழந்தையுடன் மனைவி Usharani Sridhar பஹ்ரைன் வந்திறங்கினாள். மூவருக்கும் ஹூரா பகுதியின் குறுகலான தெரு ஒன்றில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட் எடுத்தோம். பெரியவன் பிரஷாந்த்துக்கு அப்போது இரண்டரை வயது. சின்னவன் அஜென்டாவில் இருந்தான். பிரஷாந்த் பயங்கர வால். எதிர்வீட்டு கண்ணன் ஐயங்கார் பையன் முகுந்த்தை(3) கட்டில் மேலே இருந்து தயவு தாட்சண்யம் இல்லாமல் தள்ளிவிட புருவத்துக்கும் கண்ணுக்கும் நடுவே ஆழமான வெட்டுக்காயம். குரலை உயர்த்தி ‘he only pushed me first' என நம்மாள் சாதித்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹூரா ஹெல்த் சென்டரில் நாலைந்து தையல் போட்டு திரும்பி வரும்போது வாசலில் வைத்தே can you play with me என கேட்டான்.
பக்கத்து ஃப்ளாட் அப்பன் மாமா காமர்ஸ் மினிஸ்டரின் செகரட்டரி. நிறைய பத்திரிக்கைகள் காலை வாங்கி வந்து ஜூனியர் விகடனை சுந்தர காண்டம் போல் வரிக்கு வரி வாசித்து, மாலை குங்குமம் வாங்க கிளம்புவார்.
அடுத்த கட்டிடத்தில் புதிதாக குடி வந்தவர்கள் Mohan Gopal krishnan Lakshmi Mohan தம்பதி. வேற யாரு நம்ம Ganapathi Subramanian மூலம் தான் அறிமுகம். ICWA படித்துவிட்டு நாக்பூர் சந்திராபூர் என அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு இங்கு முகமது ஜலால் குழுமத்தில் வேலைக்கு சேர்ந்தவர். ஒன்றரை வயது பையன் அரவிந்தை pram இல் வைத்து அல்முந்தஜா சூப்பர் மார்க்கெட் போய் 10 கிலோ அரிசி முட்டையை பையன் காலடியில் கிடத்தி தள்ளிக் கொண்டு வருவார். எங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். பாதி நேரம் பஹ்ரைன் சுற்றிப் பார்ப்பது அவர்களுடன் தான்.
மோகன் லக்ஷ்மியுடன் மனாமா கிருஷ்ணன் கோவில் தரிசனம் முடித்து நடுரோட்டில் ப்ளான் செய்து ஸ்வாகத்தில் நுழைந்து பாவ்பாஜி, ஆனந்த் பவன் ரவா மசாலா அல்லது குஜராத்தி ரெஸ்ட்ருவன்ட்டில் தாலி சாப்பிட்டு நகரைச் சுற்றி வலம் வந்த நாட்கள் பல. சிறிலங்கன் சமர் வீடியோவில் காசெட் வாங்கி படம் நிறைய பார்ப்போம்.
என்னுடைய பழைய டாட்சன் கார் எப்போது நின்றாலும் மோகன் லக்ஷ்மி மற்றும் உஷா உதவியுடன் வண்டியை தள்ளிக் கொண்டே வீடு வந்து சேருவோம். அவரையும் செக்கன்ட் ஹான்ட் டொயோட்டா கரோனா வாங்க வைத்தது வசதியாக இருந்தது. இருவரும் சேர்ந்தே குதேபியாவில் கராஜ் ஒன்றில் கார் ரிப்பேர் செய்ய கொடுப்போம். இரண்டு கார்களையும் பார்த்த மாத்திரத்திலேயே அந்த மெக்கானிக் மதுரைக்கு போன் போட்டு நல்ல விலைக்கு நிலம் பார்க்கச்சொல்லி வைத்திருக்க வேண்டும். மாதாமாதம் ரேடியேட்டர், பேட்டரி, கியர் லீவர், இஞ்சின் பிஸ்டல் என மொய் வாங்கிக்கொண்டான்.
இரவு 8 மணிக்கு சும்மா பார்க்கலாம்னு வந்தோம் என அவர்கள் வீட்டிற்கு போனால் சற்று நேரத்தில் கிச்சனில் குக்கர் சத்தம் கேட்கும். புளிப்பொங்கல் சாப்பிட்டு இரவு 12 மணி வரை அரட்டை போகும். நிறைய ஹிந்தி படங்கள் பார்ப்பவர் மோகன். அடிக்கடி ‘சாலா’ என்ற வார்த்தை பிரயோகப்பபடுத்துவார். அஸ்ரானி மற்றும் ஜானி லிவர் நகைச்சுவை காட்சிகள் பற்றி பேசி சிலாகிப்பார். ‘சல்த்தே.. சல்த்தே.. மெரே யே கீத் யாத் ரக்னா’ என மோகன் பாட நான் தபலா வாசித்த நாட்கள் பல.
வார இறுதியில் தமிழ் மன்றம் போவோம். நண்பர் அப்துல் கையூம் மேடையில் நகைச்சுவையாக பேசி அசத்துவார். அப்போது அவர் கேளிக்கை செயலாளர் என நினைக்கிறேன். மாறுவேட போட்டியின்போது மைக்கை கையில் எடுத்து ‘மாறுவேடம் போடாமலேயே பரிசு கிடைத்தால் அதற்கு மன்றம் பொறுப்பல்ல’ என அறிவிக்க நானும் மோகனும் இடி விழுந்தது போல சிரிப்போம். வீடு திரும்பும் முன் மைசூர் ரெஸ்டாரண்டில் நீரு தோசா சாப்பிட்டு அங்கும் இரண்டு மணி நேரம் அரட்டை.
அமெரிக்காவில் படிக்கும் பையன், கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டிலான பெண் Shyamala Ram என தன் இரண்டு தலையாய கடமைகளை முடித்து அகவை அறுபதை எட்டும் நண்பர் மோகனுக்கு சற்று முன் வரைந்த கரிக்கட்டி ஓவியத்துடன்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோகன்!

ஜியார்ஜியா

'
ஜியார்ஜியா போறீங்களா?அங்கே அப்பிடி என்ன விசேஷம் !' என கேட்கும் நண்பர்களுக்கு...
குறைந்தது பத்து பேர் சேர்ந்தால் அதிக செலவில்லாமல் ஜியார்ஜியாவை சுற்றிப்பார்க்கலாமென எங்கள் பஹ்ரைன் சி.ஏ சாப்டர் அங்கத்தினர்களுக்கு அழைப்பு விடுத்தும் குழந்தைகள் பரிட்சை நேரமென்பதால் யாரும் முன் வரவில்லை. நானும் நண்பன் விவேக் கபூரும் குடும்பத்துடன் போக முடிவு செய்தோம். ஃப்ளைதுபாய் விமானத்தின் ஆஃபர் கட்டனம் தெரிந்தால் மலைத்துப்போவீர்கள்.
கிரெடிட் கார்டு சகிதம் உட்கார்ந்து அவசரமாக டிக்கெட் புக் செய்து, சட்டென சகாயமான விலையில் நான்கு நட்சத்திர நோவோடெல் விடுதியில் அறையும் கிடைத்தது. அறை வாடகையை கேட்டால் மயக்கமே வந்துவிடும் அளவிற்கு குறைவு. ஜியார்ஜிய செலாவணி 'லேரி' நிறைய பஹ்ரைனிலேயே வாங்கிக்கொண்டோம்.
முக்கா பேண்ட், டிஷர்ட், கருப்பு கண்ணாடி, தொப்பி என் பெட்டியை நிரப்பி நண்பன் கபூர் குடும்பத்தை ஜுஃபேர் பகுதியிலிருந்து பிக்கப் செய்துகொண்டு பஹ்ரைன் விமானதளத்தில் ஏகத்துக்கும் செல்ஃபி எடுத்துக்கொண்டு சீட் பெல்ட் மாட்டிக்கொண்டு துபாய் பறந்தோம்.
துபாய் லவுஞ்சில் அரேபிய ஹம்மூஸ், மற்றும் முத்தாபில் சாப்பிட்டு மூன்று மணி நேரம் கைப்பேசியை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அதென்ன ஹம்மூஸ்.. முத்தாபில்? வேகவைத்த காபூலி சன்னா மற்றும் வெள்ளை எள்ளை விழுதாக அரைத்து ஆலிவ் எண்ணையை அள்ளித்தெளித்து பூண்டு தொகையல் மாதிரி ஸ்பூனால் அள்ளி சாப்பிட ஹம்மூஸ் ருசியாக இருக்கும். ஆனால் ஜாக்கிரதை! இரவில் வாயுத்தொல்லையுடன் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நிச்சயம் உண்டு. எண்ணெய் கத்தரிக்காயில் செய்யப்படும் பைங்கன் பர்த்தாவின் தூரத்து சொந்தம் தான் முத்தாபில். சாலட் வகைகள் இவை. நம்மூர் கூட்டு பொறியல் போல அரேபியர்கள் விரும்பி உண்ணும் ஸ்டார்ட்டர்கள். விமானம் பிடிக்கும் முன் கொஞ்சம் ஜியார்ஜியாவைப்பற்றி...
மேற்காசியாவும் கிழக்கு ஐரோப்பாவும் உரசிக்கொள்ளுமிடத்தில் உள்ள ஜியார்ஜியா ஒரு அழகிய நாடு. துருக்கி, ரஷ்யா, அர்மேனியா, அசர்பெய்ஜான் மற்றும் கருங்கடல் சூழ, 50 சதவீதம் மலைகள், காடுகள் மற்றும் இயற்கை மற்றும் கணிம வளங்கள் நிறைந்த நாடு. 91இல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனியாட்சி பெற்ற குடியரசானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த அந்நாடு நிறைய பொருளாதார சீர்திருத்தங்களுடன் ஐரோப்பாவுடன் நல்லுரவு வைத்துக்கொள்ள ஆரம்பித்ததும் அவ்வப்போது ரஷ்யா சீண்ட ஆரம்பித்து போர் தொடுத்தது.
பழங்கதை பேசிக்கொண்டிருந்தால் விமானம் போய்விடும். குட்டி விமானம் அது. உள்ளே நுழைந்ததும் அங்கங்கே நமக்கு தெரிந்த நண்பர்களை பார்த்ததும் குதூகலம். சளசளவென பேச ஆரம்பித்து விட்டோம். சுமார் 3 மணி நேரத்தில் ஜியார்ஜியாவின் தலைநகரான டிப்லிஸி வந்திறங்கினோம். 'முதல் தடவை வறீங்களா?' என மிகப்பணிவுடன் கேட்டு ஸ்டாம்ப் அடித்து கொடுத்தார் பாஸ்போர்ட் கண்ட்ரோல் பெண் அதிகாரி.
நாம் கொண்டு வந்திருந்த சுமார் 40 தண்ணீர் பாட்டில்கள் கொண்ட பெட்டி சிவப்பு மையினால் X குறியிடப்பட்டு கன்வேயர் பெல்ட்டில் வந்தது. ‘இது தண்ணி தானே! இதுல என்ன இருக்குன்னு கஸ்டம்ஸ் செக் பண்றான்!’ என நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆன்ட்ரியா சாயலில் சுங்கத்துறை பெண் அதிகாரி ஓடி வந்து ‘இது குடி தண்ணீர் தானே! குடி(😃) தண்ணீர் இல்லியே?’ என விஜாரித்து அனுப்பினார்.
வெளியே கூஜா (Guja) என்ற இளைஞன் தயாராக தன் 13-சீட்டர் பென்ஸ் வேனுடன் காத்திருந்தான். பஹ்ரைனில் நண்பர்கள் நிறைய பேருக்கு
பரிச்சயமானவன் கூஜா. முன்கூட்டியே போன் செய்து சொல்லிவிட்டால் விமான தளத்தில் உங்களை வரவேற்று நாலைந்து நாட்கள் ஊர் சுற்றிக்காட்டி திரும்ப ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு சொற்ப தொகையே வாங்கும் நம்பகமான ஆர்மேனிய இளைஞன்.
கூஜா எங்களை ஹோட்டலில் இறக்கிவிட்டு கிளம்ப, அறையில் பெட்டியை போட்டுவிட்டு வெளியே வந்தோம். ரோட்டில் அதிகம் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை மட்டும் பார்க்க முடிந்தது. ரஷ்யாவிலிருந்தும், துருக்கியிலிருந்தும் அதிகம் பாவிக்கப்பட்ட பழைய பென்ஸ் கார்களை ஜியார்ஜியாவில் இறக்கி நல்ல விலைக்கு விற்கிறார்களாம். டாக்ஸி ஓட்டி அந்த வண்டியை 12ஆயிரம் லேரிக்கு (ரூபாய் மூன்றரை லட்சம்) வாங்கினாராம். பக்கத்தில் டிப்லிசி மால் போய் கொஞ்சம் பக்ஷ்ணங்கள் வாங்கிக்கொண்டு அறைக்கு திரும்பினோம். விவேக்கின் மனைவி ஜானு, பனீர் பட்டர் மசாலா டெட்ராபேக் பொட்டலத்தை பிரிக்காமல் கெட்டில் கொதிநீரில் போட அடுத்த 5 நிமிடத்தில் மணக்கும் கறி ரெடி. குஜராத்தி மேத்தி தாப்லாவுடன் அருமையான இரவு உணவு.
மறுநாள் காலை டிப்லிசி நகரிலிருந்து ஒரு மணிநேர மலைப்பிரதேசம் நோக்கி பயணம். சுற்றிலும் மலை, அடர்ந்த மரங்கள், பள்ளத்தாக்கு, சாலையை ஒட்டி சலசலக்கும் நதி, மலைச்சரிவில் மேயும் கொழுத்த ஆடுகள். மலை உச்சியிலிருந்து டிப்லிசி நகரை பார்க்க ரம்மியமாக இருந்தது. ஜியார்ஜிய தேன் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த பெண் ஸ்பூனால் தேனை எடுத்து கொடுக்க ருசி பார்த்து சிறிய பாட்டில்களில் வாங்கிக்கொண்டோம்.
பசி எடுக்க ஆரம்பிக்கவே மலை உச்சியிலேயே சிறிய கடை ஒன்றில் நுழைந்தோம். ஜியார்ஜிய பாரம்பரிய உணவான கச்சாபூரி அங்கு கிடைத்தது. இளம் பெண்ணொருத்தி கச்சாபூரி செய்வதை வேடிக்கை பார்த்தோம். கை கொள்ளாத அளவிற்கு ஆல் பர்பஸ் ஃப்ளோர் (நம்மூர் மைதா) உருண்டைக்குள் டென்னிஸ் பந்து சைஸ் சீஸ் உருண்டையை பூரணமாக வைத்து சப்பாத்தி கல்லில் தேய்த்து சூடான தவாவில் போட்டு தாராளமாக பெரிய வெண்ணைக்கட்டியை அவள் வெட்டிப்போட்டதும் ரஜினி, பிரமீளா (மதனோர்ச்சவம் ரதியோடு தான்... ரதி தேவியோ பதியோடு தான்) போல ரொட்டியும் வெண்ணையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து, உருகி, சுடச்சுட பொன்னிறமான கச்சாபூரி தயாராகும் வரை கண்கொட்டாமல் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.. அவளை😄.
ஜியார்ஜிய பெண்கள் பெரும்பாலும் ஆலியா பட் போல அழகு. செம்பட்டை முடி, கூர்மையான நாசி, கொஞ்சம் தாட்டியான உருவம். அசரி, (Azerbeijan), ஆர்மேனிய மற்றும் ரஷ்ய பெண்களும் நிறைய ஜியார்ஜியாவில் வசிக்கிறார்கள். 90களுக்கு பிறகு கம்யூனிஸ்ட்களின் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப்பொருளாதாரத்திற்கு மெதுவாக ஜியார்ஜியா மாற, சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிக்க ஆரம்பித்தார்கள். மருத்துவம், ராணுவம், கல்வி என எல்லா துறைகளிலும் விமான பைலட் வரை பெண்கள். விவசாயம் செய்யும் பெண்களும் உணவுக்கடை கச்சாபூரி விற்கும் பெண்களும் நிறைய. இப்ப எதுக்கு ஜியார்ஜிய பெண்கள் பற்றி இவ்வளவு தகவல்? ஹாங்... அந்த கச்சாபூரி பெண்! ஒரு கச்சாபூரி நாலைந்து பூரண்போளிக்கு சமம். சாப்பிட்டதும் வயிறு நிரம்பியது. டிரைகிளிசரைடு எகிற ஏகப்பட்ட சாத்தியக்கூறுகள் உள.
மறுநாள் காலை டிப்லிசி நகரிலிருந்து மலைகளுக்கு நடுவே நான்கு மணி நேர பயணம். பச்சை கம்பளம் போர்த்திய மாதிரி கஸ்பேகி மலைத்தொடர் பார்க்க மிக அழகு. அங்கங்கே அருவிகள். ஒவ்வொரு 20 கி.மீ தொலைவிலும் ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்து மக்கள் மற்ற கிராமங்களுக்கோ நகரங்களுக்கோ போக வேண்டிய அவசியமில்லாமல் பள்ளி, மருத்துவமனை, கடைகள், விளையாட்டு மைதானம் என சகல வசதிகளும் கூடிய கிராமங்கள். மதியம் ரஷ்ய எல்லையை கடும் பாதுகாப்பு சோதனை கடந்து அடைந்தோம். தூரத்தில் ரஷ்ய வீரர்கள் துப்பாக்கி ஏந்தி நிற்பது தெரிந்தது. நிறைய சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
திரும்பவும் தலைநகர் டிப்லிசி நெருங்கும் முன் கூஜா தனது பெரியப்பாவின் பண்ணை வீட்டுக்கு எங்களை அழைத்துச்சென்றான். வெளியே பெயிண்ட் இல்லாமல் சிமென்ட் பூச்சு மட்டுமே. வீட்டின் உள்ளே அழகிய வண்ணங்களுடன் சுவர்கள். வீட்டைச்சுற்றி ஆப்பிள், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி மரங்கள். வாசலில் திராட்சைக்கொடி. வயதான பெரியம்மா தயாரித்த ஜியார்ஜிய தேநீர் அருமை. தேநீர் செய்வதெப்படி என்பதையும் அவர் விளக்க, தங்கபாலு போல அழகாக மொழிபெயர்த்து விளக்கினான் கூஜா. இந்திய ரூபாய் சுமார் 25-50 லட்சத்திற்குள் பண்ணை வீட்டுடன் கூடிய ஒரு கிரவுண்டு நிலம் கிடைக்கிறதாம். ஜியார்ஜியாவில் முதலீடு செய்தால் குடியுரிமை கிடைக்கிறதாம். நிறைய பஹ்ரைனிகள் ஜியார்ஜியாவில்.
மறுநாள் மறுபடியும் ஐந்து மணி நேர பயணத்திற்குப்பின் துறைமுக நகரம்
பதூமி. ஜியார்ஜிய ஆட்டிறைச்சி மற்றும் மதுபானங்கள், பாலாடைக்கட்டி என கப்பல்களில் மற்ற அன்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாம். வழி நெடுக சாலைகளில் வேனில் சிவப்பு ஒய்ன் விற்கிறார்கள். Wine tasting... free என கூவி அழைத்தார்கள். மதியம் துருக்கி எல்லையை அடைந்தோம். நம் பாஸ்போர்ட்டில் அமெரிக்க விசா ஸ்டாம்ப் இருந்தால் துருக்கியில் நுழையலாமாம். மதிய சாப்பாடு அங்க வச்சுக்கலாமாவென கூஜா கேட்க, ‘தம்பி நாங்க பத்திரமா ஊர் போகனும்! ’ என அவனை இழுத்துக்கொண்டு திரும்பினோம். போனவாரம் தான் துருக்கியில் உள்ளூர் கலவரம், கன்னிவெடி என செய்தி. Martvili Canyan எனப்படும் பிரம்மாண்டமான மலை பள்ளத்தாக்கு, 150 அடி ஆழ நதியில் படகு சவாரி முடிந்து பாகிநிதி எனும் கிராமத்திற்கு இரவு வந்து சேர்ந்தோம்.
பழங்கால வீட்டைப்போல விடுதி (Inn). கீழ்த்தளத்தில் சமையலறை, சின்ன அலுவலகம் மற்றும் இரு அறைகள். மேல் தளத்தில் நான்கு அறைகள். வயதான தம்பதி தான் அந்த விடுதியை நடத்துபவர்கள். புழக்கடைப்பக்கம் ஓரிரண்டு வீடுகளில் அவர்களது மகன், மகள், பேரன், பேத்தி என குடும்பங்கள். எல்லோருமே ஊத்துக்குளி வெண்ணெய் போல புஷ்டி.
‘அதென்னப்பா உங்க ஊர்ல எல்லா பெண்களும் அந்தக்கால குஷ்பு மாதிரி குண்டா இருக்காங்களே! என கூஜாவை கேட்டேன். ‘கொழுப்பு நீக்காத பால், தயிர், வெண்ணெய், சீஸ் (பாலாடைக்கட்டி), ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றியிறைச்சின்னு எல்லாத்தையும் வஞ்சனையில்லாமெ சாப்பிடறோமே! அதான்..’ என விளக்கிய ரோஸ் நிற கூஜாவே சுமார் 110 கிலோ எடையாம். வயது முப்பதுக்கும் குறைவாம். கைப்பேசியில் தன் ஆறு மாத குழந்தை போட்டோவை காட்டினான். ஒரு முழு உருண்டை தான் தெரிந்தது. ஜியார்ஜியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறதாம்.
‘சீக்கிரம் தூங்க போங்க! வெள்ளன எழும்பி எங்கூட வாங்க!’ என அந்த அங்கிள் சொல்ல அவசரமாக மாடிக்கு விரைந்து கம்பளிக்குள் புகுந்ததும் சட்டென தூக்கம். மறுநாள் காலை 6 மணிக்கு ஸ்வெட்டர் குல்லாயுடன் அங்கிள் (70) தயாராக இருந்தார். ஆங்கிலம் தெரியாது. எல்லாம் சைகையில் தான். அருகே சிறிய மலையுச்சி தேவாலயம் வரை போய் திரும்பினோம். ஆளரவமற்ற கிராமத்து வீதிகளில் நடந்தோம். மக்கள் மெல்ல எழ ஆரம்பிக்கிற நேரம். எதிரே வந்த கிராமத்து மேயர் ‘நீங்க இந்தியாவா? மேரா ஜூத்தா ஹெ ஜப்பானி’ என ஹிந்தி பாட்டை பாடினார். அந்தக்கால ரஷ்யர்களுக்கு ராஜ்கபூர் பிடிக்குமாம். இப்போது ஷாருக்கான் படங்கள் பார்க்கிறார்களாம். அருகே பூங்கா ஒன்றில் அந்த அங்கிள் பைப் தண்ணீரை திறந்து விட்டு நாய் ஒன்றுக்கு வர்க்கி போட, அது வாலை ஆட்டியபடியே தின்று விட்டு, ஓடிப்போய் பக்கத்து மின் கம்பம் அருகே போய் காலைத்தூக்கி.... அட! எல்லா நாட்டிலும் நாய்கள் ஒரே மாதிரியா!
திரும்ப விடுதிக்கு திரும்பியதும் குளித்துவிட்டு கீழே வந்தோம். எதிரே பேக்கரியிலிருந்து சூடான ரஷ்யன் ப்ரெட் வாங்கி வந்தார் அங்கிள். கிட்டத்தட்ட புடலங்காய் அளவு நீளம் கொண்டது. நீளமாகவோ உருண்டையாகவோ இல்லாமல் வைரக்கட்டிகள் போன்ற ஜியார்ஜியன் அரிசியை வடித்து எங்கள் எதிரே வைத்து, ஃப்ரிட்ஜை திறந்து ஊறுகாய் பாட்டில் போல நாலைந்து பாட்டில்களில் கட்டித்தயிரை வெளியே எடுத்தார். ரப்பரால் டைட்டாக மூடப்பட்ட பாட்டில்களிலிருந்து கரண்டியால் எடுத்து.. ஆஹா! ஜியார்ஜிய அரிசி தயிர் சாதம் செம்ம ருசி. வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி போன்ற உபாதைகளுக்கு அந்த அரிசி மிக நல்லதாம். ஃபுல் கட்டு கட்டினோம்.
கடைசி நாள் முழுவதும் டிப்லிசி நகரம் தான். கேபிள் காரில் நகரை ஒரு மணி நேரம் சுற்றி, கார்னிவல் ஒன்றில் நுழைந்தது இரண்டு மணி நேரம் கடைகளை வேடிக்கை பார்த்து, கச்சாபூரி சாப்பிட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த குட்டி வின்ட்டேஜ் கார்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, ஹோட்டல்காரன் கட்டிக்கொடுத்த உணவு பொட்டலத்துடன் விமான தளத்திற்கு விரைந்தோம்.

திருமதி Usha Seturaman

பஹ்ரைன் வந்த புதிது. ஹூரா பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் அங்கே. சிறுக சிறுக காசு சேர்த்து செக்கன்ட்-ஹேண்ட் கார் வாங்கினாலே மைசூர் ரெஸ்ட்ரோன்ட்டில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுப்போம். தாழ்வு மணப்பானமையுடன் யாரைப்பார்த்தாலும் வணக்கம் சொல்லத்தோன்றும். பிரதி வெள்ளியன்று சின்மயா மிஷன் சத்சங்கிற்கு போவது வழக்கம்.
நான், நண்பன் Ganapathi Subramanian, மாமாஜி (கணபதியின் மாமா) மற்றும் எங்கள் பில்டிங்கில் வசிக்கும் 2 பிரம்மச்சாரி நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போவோம். காலை 6 மணிக்கு எழுந்து குளித்து அரக்க பறக்க கிளம்பி, கணபதி என்னை பிக்கப் செய்து 7 மணிக்குள் மனாமா குஜராத்தி சமாஜ் வளாகத்திற்கு ஓடுவோம்.
நிறைய தொழிலாளர்கள் வருவார்கள்.சத்சங் முடிந்து இட்லி, வடை சாம்பார், கேசரி, பூரி என மஹா பிரசாதம். வெள்ளிக்கிழமை சத்சங் என்றால் மஹாபிரசாதம் தான் நினைவுக்கு வரும். 6 மணிக்கு தானாகவே முழிப்பு வரும். ரமதான் நோன்பு மாதத்தில் மஹாபிரசாதம் கிடையாது. வெறும் முந்திரி கிஸ்மிஸ் மினி பிரசாதம் தான். அந்த மாதம் கூட்டம் குறைவாக இருக்கும்😃. படுக்கையில் இருந்து நமக்கும் எழ மனசு வராது. டான் என கணபதி வந்து இழுத்துக்கொண்டு போவான்.
சத்சங் முடிவில் சமாஜின் தலைவர் கிஷோர் அசர்போட்டா உரையாற்றுவார். வயதில் மூத்தவர். ஏதோ கம்பெனியில் அக்கவுண்டன்ட். அவர் காலை தொட்டு வணங்குவோம். அங்கத்தினர் யாராவது வேலையை விட்டு இந்தியா திரும்ப போவதாக இருந்தால் சத்சங் நடுவே மேடைக்கு அழைத்து பாராட்டி பரிசு (சின்மயா புத்தகம்) கொடுப்பார். மறக்காமல் ‘நீயே போறியா.. இல்ல அவங்க உன்னை அனுப்பறாங்களா?’ என கேட்டு வைப்பார். வேலை போன ஆட்கள் சத்சங் வராமல் சத்தம் போடாமல் மஹாபிரசாத்தில் கலந்து கொண்டு அவரை பார்க்காமல் ஓடிவிடுவாரகள்.
‘அகண்ட மண்டலாகாரம்.. வியாப்தம் யேன ச்சராச்சரம்.. தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ..’ என கணீரென குரு ஸ்தோத்ரம் சொல்வோம். மத்தவங்களை விட நம்ம சத்தம் ஜாஸ்தியா கேக்கனும்’ என்ற முனைப்போடு எல்லோரும் கத்தி பாடுவோம்.
சுமார் ஒரு மணி நேரம் கீதா ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் பங்களாதேஷி இளைஞன் தபலாவை வெளியே எடுக்க, பன்வாரி லால் என்பவர் ஹார்மோனிய பெட்டியை திறந்து ‘மது சூதனா.. ஹே மாதவா’ என ஆரம்பிக்க மெய் மறந்து கண்களை மூடி கூட சேர்ந்து பாடுவோம். பங்காளா தேஷிக்கு பின்னால் நானும் சில நாட்கள் தபலாவுடன். சுமாராக வாசிப்பேன். பங்களாதேஷி சத்தத்திற்குள் நான் அமுக்கி வாசிப்பேன். என்றைக்காவது அந்த பங்களாதேஷிக்கு கை வலித்து நடுவே நிறுத்தி விடக்கூடாது என வேண்டிக்கொள்வேன்.
சத்சங்கின் நடுவே சின்ன இடம் கிடைத்தாலும் ஜனங்கள் முன்னேறி துள்ளி குதித்து யாரோ மடியில் உட்காராத குறை. வெங்கோப ராவ் என்பவர் ‘விட்டலா... விட்டலா.. பாண்டுரங்க விட்டலா.. பண்டரிநாதா விட்டலா..’ என பாட ஆரம்பித்தால் புல்லறிக்கும்.... அவருக்கு. கணீர் குரல். மைக்கை பின் பக்கமிருந்து அவரிடம் அனுப்புவதற்குள் மைக்கே வேண்டாமென பாட ஆரம்பித்து விடுவார். பெரிய சரீரம் கொண்ட அவருக்கு பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து நின்றாலும் சுவாமி சின்மயானந்தா போட்டோ மறைக்கும். மாமாஜி (60) எப்பவும் அவரை கிண்டல் செய்வார். ‘ஈயாளு ராவ் ஒரு மாசம் ச்சுட்டி எடுத்து ஊருக்கு போனேங்கில் மனாமாவுல அத்தற அரிசிக்கடையும் அடைச்சுடுவான்கள்’ என மாமாஜி மெதுவாக சொல்ல, கணபதி மற்றும் நண்பர்கள் சத்சங் நடுவில் சிரிப்பை அடக்க கடும் முயற்சி செய்வோம்.
சத்சங்கில் கடைசியாக திருமதி Usha Seturaman அவர்களின் பஜன் கேட்பதற்கே நிறைய பேர் தவறாமல் வருவார்கள். அந்த பஜனுக்கு முன் 4 வரிகள் அவர் பாடும் ஸ்லோகத்தில் மெய் மறந்து கண்களை மூடி ரசிப்போம். சுமார் ஏழெட்டு நிமிடம் சாய் பஜன் அல்லது ஶ்ரீராமர் பஜன் என வாரா வாரம் அவர் பாட, அந்த சூழலே தெய்வீகம் தான்.
பஹ்ரைனில் இந்திரன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் முக்கிய உறுப்பினர். நிறைய கச்சேரிகள் செய்வார். வருடா வருடம் தியாகராஜ ஆராதனையன்று சுமார் பத்து இருபது பாடகர்கள் சூழ அவர் பாடும் அழகே தனி. தீவிர சாய் பக்தை. அவரது வீட்டில் வியாழனன்று சாய் பஜன் உண்டு. பையன்களையும் புட்டபர்த்தியில் படிக்க வைத்தார். கணவர் சேதுராமன் சிஏ. உயர் பதவியில் இருக்கிறார். பஹ்ரைனில் எல்லோருக்கும்
பரிச்சயமானவர். எங்கள் சிஏ சாப்டரின் அங்கத்தினர். கணபதிக்கு மிகவும் நெருக்கமான தம்பதி..
உஷா அவர்கள் நிறைய பாடல்கள் பாடி காசெட், சிடி வெளியிட்டிருக்கிறார். அவ்வப்போது பஹ்ரைன் இந்தியன் க்ளப் மேடையில் ‘முல்லை மலர் மேலே’ என சினிமா பாடல்களும் அருமையாக பாடுவார்.
இன்று பிறந்த நாள் காணும் உஷாஜி அவர்களுக்கு எனது ஓவியத்துடன் வாழ்த்துக்கள்.

நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!

பம்பாய் செட்டாநகர் இருப்பது ஒரு ரெண்டுங்கெட்டான் இடம். செம்பூர் என சொல்லிக்கலாம் ஆனால் இருப்பது காட்கோபர் பெஸ்டம் சாகர் சமீபம். ‘செம்பூர் ஆலி!’ என பஸ்ஸில் யாரோ பேசிக்கொள்ள, அவசரமாக நாம் செட்டாநகரில் இறங்கினால் மறுபடியும் ஆட்டோ பிடித்து தான் செம்பூர்
செல்ல வேண்டியிருக்கும்.
ரயிலை விட்டிறங்கி மேலே பாலம் வழியாக ஸ்டேஷனுக்கு வெளியே வரும் வழக்கம் நிறைய பேருக்கு கிடையாது. ப்ளாட்ஃபார்மிலிருந்து தொப்.. தொப்பென குதித்து தண்டவாளங்களை தாண்டி வெளியே வந்து காந்தா பஜியா, ‘கன்னே கா ரஸ்’ (கரும்புச்சாறு) கடைகளை தாண்டி மேம்பாலத்துக்கு கீழே ‘சௌதாகர்’ சினிமா போஸ்டர்களை பார்த்துக்கொண்டே கோழிமுட்டை கடைகளை மூக்கை பிடித்துக்கொண்டே கடந்து முலுண்டு ஹைவேயை ஒட்டிய ரோட்டில் விடுவிடுவென கால்களை வீசி ஆறேழு நிமிடங்கள் நடந்தால் செட்டாநகர்...
சுமார் 50,60 கட்டிடங்கள், காசெட் கடை, ராஜ் ரெஸ்ட்ரோன்ட் எனும் திருநெல்வேலி அன்னாச்சி மெஸ், பக்கத்திலேயே அவர்களது மளிகைக்கடை, வெங்சர்க்காரின் அண்ணா வீடு, நடுவே பெரிய முருகன் கோவில். இது தான் செட்டாநகர். கோவிலைச்சுற்றி ராதா, விஜயா என்ற பெயர்களில் பழங்கால இரண்டு அல்லது மூன்றடுக்கு குடியிருப்புகள். வாசல் கேட் அருகே கைலியை மடித்துக்கட்டி, ஸ்கேல் வைத்து ட்ரிம் செய்தது போல சன்ன மீசையுடன் சிகரெட் வலித்துக்கொண்டிருக்கும் பாலக்காட்டு அப்பாக்கள்.
அந்த விஜயா பில்டிங்கில் தான் நாலைந்து சி.ஏ பிரம்மச்சாரிகளுடன் நான் தங்கியிருந்தேன். ரெங்கு, முரளி இருவருக்கும் ஶ்ரீரங்கம். சந்துருவும் (Balasubramaniam Chandrasekaran) இருந்தான். காலை நாஷ்டா கிடையாது. வெறும் காபியை குடித்துவிட்டு எல்லோரும் ஆபிசுக்கு ஓடிவோம். சாவகாசமாக 9 மணிக்கு பைக்கில் கிளம்பும் ஶ்ரீராமுக்கு ஆபிஸ் ஒர்லி பக்கம். ஶ்ரீராம் எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல உயரத்திற்கேற்ற பருமனுடன் ஆஜானுபாகுவான் தோற்றம். கபீர்பேடி தாடிக்கு பின்னால் அழகான சிரிப்பு.
நெடுநெடுவென உயரம் கொண்ட முரளி ப்ரீஃப்கேசுடன் அந்தேரி சாக்கிநாகாவுக்கு ரிக்ஷா பிடிப்பான். கோலிவாடா பக்கம் அவன் ஒருமுறை ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது சிக்னல் ஒன்றில் திருநங்கை ஒருவர் ஆட்டோவில் உட்கார்ந்திருந்த முரளியை அணுகி டப் டப்பென கைகொட்டி ‘காசு குடு ஐய்ரே!’ என கேட்டார். கேட்டுக்கொண்டருக்கும் போதே ஆட்டோ கிளம்ப, சடாரென அவன் சட்டைப்பையில் கையை விட்டு ரூபாய் நோட்டுக்கற்றையை எடுத்துக்கொண்டு ஓட, ‘ஏய்! என் பணம்.. பணம்’ என கத்தியபடியே பின்னால் முரளி ஓட, அடுத்த சில நிமிடங்களில் திருநங்கையை பிடித்து விட்டார்கள். நேராக போலிஸ் ஸ்டேஷன். ஆனால் அதற்குள் பணம் கைமாறி எங்கோ மறைந்து போக, ‘எங்க அப்பா அம்மாவுக்கு அனுப்ப வச்சிருந்த பணம் சார் அது’ என பரிதாபமாக முரளி சொல்ல திருநங்கையை அடி பிண்ணி எடுத்துவிட்டார்கள். அடி வாங்குவதை பார்க்க பரிதாபமாக இருக்கவே, ‘பணம் போனா பரவால்ல.. அடிச்சது போறும்.. அலியை விட்ருங்க!’ என முரளி கேட்டுக்கொண்டதும் விட்டுவிட்டார்கள். கோபம் என்பதே சிறிதளவும் முரளிக்கு கிடையாது. நண்பர்களுக்காக காசுபணம் செலவு செய்ய தயங்க மாட்டான்.
மாலை 7 மணியிலிருந்து வீட்டில் நண்பர்கள் கும்மாளம் தான். அமெரிக்கா விசா கிடைத்து சென்னையிலிருந்து ஶ்ரீரங்கத்து பையன்கள் நேராக எங்கள் அறையில் ஒரு வாரம் தங்கி அமெரிக்காவிற்கு விமானம் பிடிப்பான்கள். நடுவே திரும்ப இந்தியா வரும்போதும் பம்பாய் வழியாகத்தான் பயணம். அமெரிக்க சாக்ஸ், காசெட், சென்ட் என எங்களுக்கு கிடைக்கும். சிடி வந்த புதிது. ‘மீண்டும் மீண்டும் வா!’.... ‘வனிதா மணி’ பாடல்கள் சிடியில் எங்கள் ஹாலில் உரக்க ஒலிக்கும்.
பால்கனில் ஜீன்ஸ் பேண்ட்கள் உலர, பாத்ரூமில் கொழகொழ ரின் சோப், பெர்மனென்டாக ஒரு மூலையில் ஊறிக்கிடக்கும் ஜட்டி, பழுப்பு கலரில் கப்படிக்கும் ஈரத்துவாலை, தரையில் சுட்கேஸ்கள், இறைந்து கிடக்கும் புத்தகங்கள், ஆங்காங்கே காபி தம்ளர்கள்.. இது தான் எங்கள் வீடு.
ஒரு முறை ரெங்குவுக்கு வந்த இன்லேன்ட் லெட்டரை தவறி பிரித்து விட்டேன். (படிக்கவில்லை). ‘இப்ப என்ன பண்றது ஶ்ரீராம்?’ என கேட்டேன். மாலை ரெங்கு அறைக்கதவை திறக்க, தூரத்தில் ஶ்ரீராம் அந்த இன்லேண்ட் லெட்டருடன் ‘டேய்! உனக்கு லெட்டர்டா! பிரிக்கட்டுமா?’ எனக்கேட்டு விரலை விட்டு சரட்டென பிரிப்பது போல செய்ய ரெங்கு ஓடிவந்து லெட்டரை பிடுங்கிக்கொண்டான்.
8 மணிக்கு மேல் சுடச்சுட சாம்பார், தேங்காய் துருவிப்போட்ட கொத்தவரை பொறியல், கட்டித்தயிர் என திவ்யமான சாப்பாடு. சமையலில் பிரதான இடம் எனக்கு. ஞாயிரன்று ரவா தோசையே உண்டு. துபே எனும் வட இந்தியன் ஒரு காலை மட்டும் கிச்சன் மேடையில் வைத்து சப்பாத்தி போடுவான். காபி மற்றும் பத்து பாத்திரம் தேய்ப்பது ரெங்குவின் வேலை. இரவு பத்து மணிக்கு மேல் நடந்து போய் உ.பி பையா கடையில் மசாலா பால் வாங்கித்தருவான் சந்துரு.
பால்கனியில் நின்றுகொண்டு அக்கம்பக்கத்து மாடிகளில் இளம்பெண்களை சைட் அடிக்கும் வழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. காரணம் எந்த பெண்ணும் வெளியே வந்து நிற்க மாட்டார்கள். அப்படியே ஏதாவது பால்கனி கதவு திறந்தால் பாலக்காட்டு அப்பா தான் துணி உலர்ந்திக்கொண்டு நம்மை முறைப்பார்.
சென்னையில் ஆடிட்டர் அலுவலகம் புதிய கிளை திறந்து பம்பாயிலிருந்து முரளியை அனுப்பினார்கள். அப்போது தான் தன் காதல் மேட்டரை முரளி மெதுவாக எடுத்தான். பொறாமையுடன் கை குலுக்கினோம். அடுத்து ஶ்ரீராமுக்கு திருமணம் நிச்சயமானது. ரெங்கு அப்ப இன்னும் சின்னப்பையன். அமுக்கமாக அவனும் காதலித்துக்கொண்டிருந்தான். அவள் எங்களது நண்பன் Sridharan Rajaraman இன் தங்கை தான் எனத்தெரியாமல் நானும் ரெங்குவுடன் அவர்கள் வீட்டிற்கு போய் அப்பாவியாக மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ரெங்கு அவளுக்கு ACS படிக்கலாமா என உபதேசம் செய்துகொண்டிருந்தான். (ACS பண்ணினாளோ இல்லியோ அடுத்த சில வருடங்களில் ரெங்கு அவளை கல்யாணம் பண்ணினான்). எனக்கு 92இல். அடுத்தடுத்து திருமணமாகி எல்லோரும் சட்டென பறந்தோம். அத்துடன் செம்பூர் வாசம் முடிந்தது.
சென்ற மாதம் முரளியிடமிருந்து குறுஞ்செய்தி. எப்படியோ 28 வருடங்கள்
கழித்து என்னையும் ஶ்ரீராமையும் கண்டுபிடித்து விட்டான். பெண்ணுக்கு கல்யாணமாம். அடுத்த சில நாட்களில் மதராஸ் உட்லண்ட்ஸில் இரண்டு நாள் தங்கியிருந்தபோது மூவரும் சந்தித்தோம். நரைமுடி, வழுக்கை, ஹேர்டை போன்ற சில சாமாச்சாரங்களை தவிர எந்தவித மாற்றமுமில்லாமல் அதே முக்கா பேண்ட்டுடன் 28 வருடங்கள் கழித்து சந்தித்தோம். ஶ்ரீகிருஷ்ணாவில் காபியுடன் அரட்டை.. ‘அவன் என்ன பண்றான்.. இவன் என்ன பண்றான்’ என பழைய நண்பர்களைப்பற்றிய விசாரிப்புகள், மறந்து போன கெட்ட வார்த்தைகள்.. அந்த காலத்தில் அடித்த சைட்கள், விட்ட ஜொள்கள், கிச்சன் மேடையில் ஒரு காலை தூக்கி வைத்து சப்பாத்தி இட்ட துபேயின் துர்மரணம், மறக்க முடியாத பழைய சம்பவங்கள்.. தோளுக்கு மேல் வளர்ந்த பையன்களிடம் நண்பர்களை அறிமுகப்படுத்தி.. ஒரு மணி நேரத்திற்கும் மேல் அரட்டை...
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
சீதாபதி ஶ்ரீதர்

டைம்பாஸ் கதைகள்-3

ஷார்ஜா நகரம். விடியற்காலை 5 மணி. ‘ஸ்கிப் ரிமூவல்’ எனப்படும் குப்பை அள்ளும் கனரக எந்திர லாரிகள் சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் நேரம். அல்வாஹ்தா சாலை காலிகட் கஃப்டீரியாவின் பரோட்டா மாஸ்டர் எண்ணெய் தெளித்து ஈரத்துணியில் மூடி வைத்திருந்த மைதா மாவு உருண்டைகளை காற்றில் சுழற்றி வீசி தேய்த்து ச்சொத்தென சூடான கல்லில் போட சட்டென 20,30 பரோட்டாக்கள் ரெடி.
சமோவர் ச்சாய் எனப்படும் பாய்லர் டீ அருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக கடைக்குள் நுழைந்தார்கள். ஷார்ஜா மற்றும் துபாயில் பெரும்பாலும் அரபிகள் விரும்பும் ஜாஃப்ரா (குங்குமப்பூ) மற்றும் கரக் டீக்கடைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே நம்மூர் பாய்லர் டீக்கடைகள் மிக பிரசித்தி பெற்றவை. அல்ரவாபி பால் லாரியிலிருந்து லபான்(தயிர்) மற்றும் யோகர்ட்(கட்டித்தயிர்) ட்ரேக்களை இறக்கி வைத்த மலையாளி டிரைவர் ஒரு கட்டாஞ்சாய் அடித்தான். சோள எண்ணெய் டின்கள் இறக்கிய பாகிஸ்தானிய சேல்ஸ்மேன் சூடான பரோட்டாவை சுருட்டி டீயில் முக்கி சாப்பிட்டு கல்லாவில் 6 திர்ஹாமை வைத்துவிட்டு மால்ப்ரோ பத்தவைத்தபடி மிட்சுபிஷி வேனில் கிளம்பினான்.
உளுந்நு வடா, உல்லி வடா, உண்டாம் பொறி, பழம்பொறி, எல அடா, சுகியன் என மஞ்சள் மஞ்சளாக சுடச்சுட பக்ஷ்ணங்கள் தயாராகி கடை வாசல் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட அடுத்த ஓரிரு மணி நேரத்தில் எண்ணை ஊறிய செய்தித்தாள் மட்டுமே மிஞ்சும். பாசுமதி அரிசி, ரெயின்போ பால் டின், டிஷ்யூ டப்பா, தக்காளி விழுது, மினரல் தண்ணீர் பாட்டில், ஈஸ்டர்ன் காரப்பொடி என மளிகை சாமான்கள் சப்ளை செய்யும் கம்பெனி சேல்ஸ்மேன்கள் மற்றும் கட்டுமான தொழிலாளிகளை நம்பி இயங்கும் உணவகம் அது. இட்லி, தோசை, பரோட்டா, ஆட்டா சப்பாத்தி, பாலப்பம், பத்திரி, புட்டு கடலகறி, பிரியாணி,குஸ்கா என இரவு 11 மணி வரை வியாபாரம் ஓடும்.
காலை 9 மணிக்கு கடைக்கு வந்து இன்றைய ஸ்பெஷல் போர்டில் ‘கேமல் பிரியாணி, மரவள்ளி கப்பா-மத்தி மீன் கறி, போ(B)ட்டி, ஆட்டின் தல’ என எழுதினான் ஷிபு, கடையின் முதலாளி. முப்பது வயதை எட்டியிருந்தாலும் சின்ன பையன் போல தெரிந்தான். சிவந்த ஒடிசலான தேகம். 20X 20 அடிக்கு சிறிய உணவகம், தடுப்பிற்க்கப்பால் அடுக்களையில் மூன்று ஃப்ரீ விசா லேபரர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தினான் ஷிபு.
12ஆம் வகுப்பிற்குப்பின் மேற்படிப்பு இல்லாமல் ஐக்கிய அரபு குடியரசு (UAE) வந்த ஷிபு அங்குமிங்கும் வேன் சேல்ஸ் மேனாக இருந்து விட்டு இந்த உணவகத்தை ஆரம்பித்து கடந்த ஆறேழு வருடத்தில் ஓரளவு முன்னுக்கு வந்தவன். கலியாணம் செய்துகொள்ள அம்மா வற்புறுத்தியும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தான் சாபுவை சந்திக்கும் வரை.
யார் இந்த சாபு!
துபாய் ஜுமேய்ரா கடற்கரை பகுதியில் 20 வருடங்களுக்கு முன் சின்ன கீத்துக்கொட்டாயில் அவன் வறுத்து விற்கும் மீன்களை கடைக்கு எதிரே டொயோட்டோ கிரெசிடாவில் உட்கார்ந்தபடியே சாப்பிடும் அரபி வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி, இன்று சுமார் 40 வாகனங்கள் அடைத்துக்கொண்டு நிற்க, உள்ளே 50 மற்றும் வெளியே 70 ஆள்கார் இருந்நு கழிக்க விசாலமான உணவகத்திற்கு அர்பாப் (முதலாளி) ஆனான் சாபு.
கஸ்டமர்கள் வரிசையில் இடித்துக்கொண்டு முன்னேறி கவுன்ட்டருக்கு அப்பால் பெரிய தாம்பாளத்திலிருக்கும் மீன்களை தேர்வு செய்து பணம் கொடுத்து விட்டு டிவி திரையில் தெரியும் டோக்கன் நம்பருக்காக இருக்கையில் காத்திருக்க, கத்தியால் அங்கங்கே கோடு கிழித்து மசாலை தடவிய, குறைந்தது இரண்டு முழ நீளம் கொண்ட ஹமூர், ஷாரி, சாஃபி மீன்கள் உடனடியாக நீச்சல் குளம் போன்ற ராட்சத கடாயில் கொதிக்கும் எண்ணெயில் செல்லமாக இறக்கப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் நீர்மூழ்கி கப்பல் போல வெளியே எடுக்கப்பட்டு, எலுமிச்சை மற்றும் கிரீன் சாலட் படுக்கையில் கிடத்தி மேசைகளுக்கு போக, ஷார்ஜா, உம்அல் குய்ன், அல் அய்ன், ராசல் கைமா, அபுதாபி பக்கமிருந்து லெக்சஸ் மற்றும் லாண்ட் க்ரூசரில் வரும் எமராட்டிகள், துருக்கிய, சிரிய, லெபனீய அரேபியர்கள், இந்தியர்கள் மற்றும் நெஞ்சுக்கு மேல் இறுக்கிக்கட்டிய குட்டை பாவாடையுடன் வரும் வெள்ளைக்கார யுவதிகள் எல்லோரும் டிஷ்யூ பேப்பரில் மூக்கை துடைத்துக்கொண்டு, பெப்சி கோக்குடன் முள் கரண்டியால் குத்தி எடுத்து கார மீனை சுவைப்பார்கள். கூடவே கேரள மைதா பரோட்டா மற்றும் மீன் குழம்பு. மாரினேட் செய்யப்பட்ட இறால் மீன்களை இரண்டு ஜல்லிக்கரண்டிகளால் அள்ளி எண்ணெயில் வீசி வறுத்து கிலோ 150 திர்ஹாமுக்கு (சுமார் ரூ 3000) விற்க, மலையாளி சாபுவின் கல்லா அரபிகளாலும் ஐரோப்பியர்களாலும் நிரம்பி வழிந்தது.
கேரள வடகராவில் பெரிய நவீன மங்களூர் ஓடுகள் கொண்ட வீடுகளையும் நிலங்களையும் வளைத்துப்போட்டு பெரும்புள்ளியான சாபு வீட்டு வாசலில் தேர்தல் நிதி கேட்டு அனைத்து கட்சிகளும் நில்குந்நது தாங்ஙள் அறியோ?
காலிகட் கஃப்டீரியா ஷிபுவும் ஃபிஷ் ஃப்ரை சாபுவும் சந்தித்தது தற்செயலாக. பத்தனம்திட்டாவில் ஒரு கலியாண வைபவத்தில் சந்தித்த போது இருவரும் ஷார்ஜா/துபாயில் இருப்பது தெரிந்து கொண்டார்கள். தத்தம் வியாபாரத்தைப்பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது ‘சேட்டா! ஈ போட்டோவில் யாரானு... ஓர்மையுண்டோ?’ என பழைய ஆல்பத்தை சாபுவிடம் ஓடி வந்து காட்டிய அந்த பெண்ணை ஷிபு பார்த்த மாத்திரத்தில் சட்டென வியர்த்தான்.
வாளை மீன் போல சீராக வளைத்து த்ரெட்டிங் செய்யப்பட்ட புருவங்கள். இயற்கையிலேயே அடர்த்தியான கண் இமை முடிகள், ஓரளவு தடித்த சுண்டுகளால் (அதரங்கள்) கழுத்திலிருக்கும் டாலரை அவள் கடித்துக்கொண்டே பேச எச்சிலை விழுங்கினான் ஷிபு. அந்தக்கால வனிதாவை நினைவுபடுத்தும் பொதக்கென உருவம். அவள் கட்டியிருந்த புசுபுசு புடவை அவளை மேலும் குண்டாக்கி காட்டியது. டங்ங்...கென அண்ணன் சாபு பக்கத்தில் பெஞ்ச்சில் உட்கார்ந்து ஷிபுவின் மனத்தையும் சேர்ந்து அதிர வைத்தாள். அந்த நொடியே ‘ஈ பெண்குட்டி எனிக்கானு!’ என முடிவு செய்தான் ஷிபு. சாபுவின் தங்கையாம். பெயர் ஷைனி. பெயரைப்போலவே மின்னித்தொலைத்து ஷிபுவை ஏகத்துக்கும் சித்ரவதை செய்தாள்.
பரோட்டாவுக்கு ஊறவைத்த மைதா போல மிருதுவான சருமம். ஆவியில் வேகமாக வைத்த மரவள்ளி கால்கள். விரல் நகங்களுக்கு சர்வ ஜாக்கிரதையாக பிசிறில்லாமல் லேசான பிங்க் கலர் பாலிஷ் இட்டிருந்ததை கவனித்த ஷிபு, இவளை இரு கைகளால் அப்படியே அலேக்காக தூக்கினால் எப்படியிருக்குமென கற்பனை செய்து தன்னையுமறியாமல் சிரிப்பதை ஷைனி மட்டுமல்ல அவளது அண்ணன் சாபுவும் பார்த்தான்.
கலியாணமே வேண்டாமென தள்ளிப்போட்ட ஷிபுவா உடனே திருமணம் வேண்டுமென்கிறானென அம்மை வியந்தாள். கிறுஸ்துவப்பெண்ணாயிற்றே..ஏற்றுக்கொள்வார்களா என இவர்கள் யோசிக்க, இந்துவா! வேணாம்ப்பா! என்றது மற்ற தரப்பு. முடிவு எடுக்கத்தெரியாத சேஃபர் சைட் உறவினர்கள் சிலர் ‘பாத்து யோசிச்சு முடிவு எடுங்க’ என அட்வைஸ் (?) கொடுத்து ஒதுங்கிக்கொண்டார்கள்.
ஷைனி படித்தவள், கொல்லஞ்சேரி செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் உதவி பேராசிரியை. தன் ஒரே தங்கைக்கு படித்த பையன் தான் வேண்டுமென்று சாபு கட்டன்ரைட்டாக சொன்னது ஷிபுவிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும் துபாயில் அவனை சந்திக்கும்போதெல்லாம் பெண் கேட்டு ஷிபு நச்சரிக்க ஆரம்பித்தான். ‘ஏம்ப்பா! அவனும் உன்னை மாதிரி ஹோட்டல் வச்சி நடத்தறான். நல்லா போய்ட்டிருக்கு! உந்தங்கைய அவனுக்கு கொடுத்தா என்ன?’ என மற்ற நண்பர்கள் சொல்லியும் சாபு மறுத்தான்.
‘வளைகுடாவுல ஹோட்டல் தொழில் ஓரளவு லாபகரமாக இருந்தாலும் நிரந்தர வருமானம் என சொல்ல முடியாது ரவியட்டா! .. தவிர அரசு விதிமுறைகள் அதிக கெடுபிடி.. வியாபாரத்தில் போட்டி.. திடீரென உணவு சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் சிறிய குறைகளிருந்தாலும் உரிமம் ரத்து.. நெறைய பிரச்னைகள் உண்டு.’ இந்த தொழில் செய்யும் பையனே வேண்டாமென தீர்க்கமாக சொல்லிவிட்டான் சாபு.
ஞாயிறன்று தேவாலயத்திற்கு வரும் படித்த இளம் ஜோடிகளை பார்க்கும் போதும், மாலை 6 மணிக்கு மேல் துபாய் பாலைவனம், ஜுமெய்ரா பீச், சினிமா என சுற்றும் குடும்பங்களின் சந்தோஷம், இரவு பன்னிரண்டு வரை உழைக்கும் ஹோட்டல்காரர்களுக்கு இல்லையென்பதை சாபு உணர்ந்தாலும், தானும் படிக்காததால் இத்தொழிலை விட்டுவிட முடியாமல் இருந்தான். வருமானம் குறைவாக இருந்தாலும் படித்த மாப்பிள்ளையே தங்கைக்கு பார்க்க வேண்டுமென்பதில் கறாராக இருந்தான். ஷிபு பொறுமை இழக்க ஆரம்பித்தான்.
முகநூலில் ஷிபுவின் நடவடிக்கைகள், போட்டோக்கள் என அவனைப்பற்றிய விபரங்களனைத்தும் கண்டறிந்த ஷைனியின் தோழிகள் ‘புள்ளி ஓக்கேயானு.. கொள்ளாம்’ என சிபாரிசு செய்ய, ஷைனியும் அவனை ஏற்றுக்கொள்ள இசைந்து, ஷிபுவின் அம்மா முயற்சி செய்தும் பயனில்லை. சாபு மட்டுமே இந்த கலியாணத்திற்கு குறுக்கே இருந்தான்.
சாபுவை காண ஒருநாள் இரவு 9 மணிக்கு உணவகத்திற்கு வந்த ஷிபு நேராக பின்கட்டிற்கு விரைந்தான். மீன்களை வெட்டிக்கொண்டிருந்த சாபுவிடம் மறுபடியும் கலியாண விஷயத்தைப் பற்றி பேச, சாபு வழக்கம்போல மறுக்க, வார்த்தை முற்றி சட்டென சாபுவிடமிருந்து கத்தியை பிடுங்கினான். நல்லவேளை கடை ஊழியர்கள் வந்து இருவரையும் விலக்கி, ஷிபு அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
பின் குறிப்பு:
சாபு எதிர்பார்த்தபடியே ஒருநாள் சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையில் விதிமுறைக்கு மாறாக இருந்த ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக ஷிபுவின் கடை உரிமம் இரத்தானது. சாபுவிற்கு பெருத்த சந்தோஷம். இதை காரணம் காட்டி கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லிவிடலாம் என நிம்மதியாக சரிந்து உட்கார்ந்த மறு நிமிடம் தொலைபேசி.. உரிமம் ரத்தான மறுநாளே ஷிபுவும் ஷைனியும் திருமணம் செய்துகொண்டார்களாம்.

டைம் பாஸ் கதைகள்- 2

அலகாபாத் சிவில் லைன்ஸ்.. மேட்டுக்குடி மக்கள் நடமாடும் பகுதி. ஃபியட், ப்ளைமௌத், அம்பாசிடர் கார்களுக்கு நடுவே கோஹ்லி போட்டோ ஸ்டுடியோ முன் தன் பிரிமியர் பத்மினியிலிருந்து இறங்கிய ஷ்யாம் லால் ஆனந்த்துக்கு எழுபது வயதுக்குள் இருக்கும். சட்டைக்கு மேலே கையில்லா ஸ்வெட்டர் மற்றும் குளிருக்கான கம்பளி கோட் அவரை சற்று பெருத்து காட்டியது.
நகரில் புகழ் பெற்ற போட்டோ ஸ்டுடியோ அது. குறுகலான மரப்படிகளில் தும் தும் என சத்தத்துடன் மேலேறி வரும் வாடிக்கையாளர்கள். அங்கே வேலை செய்பவர்கள் ஏழெட்டு சிப்பந்திகள். எல்லா நாட்களிலும் கூட்டம் இருக்கும். லாகூரில் பிறந்து வளர்ந்த ஆனந்த் பிரிவினையின் போது கையில் சொற்பமான காசுடன் மனைவி கவுர் மற்றும் குட்டிப்பையன் கோவர்தன் லாலுடன் தில்லி ஓடிவந்தவர். பின் அலகாபாத் வந்து உழைத்து முன்னுக்கு வந்து ‘கோஹ்லி ஸ்டுடியோ’ துவங்கி கடந்த பதினைந்து வருடங்களில் நிறைய பணம் பார்த்தவர். மகன் கோவர்தன் லால் ஆனந்த் (36) கடை நிர்வாகம் பார்த்துக்கொள்பவர். அப்பா அருகே வந்தால் எழுந்து நிற்கும் அளவிற்கு மரியாதை.
நகரின் சற்று ஒதுக்குப்புறமான கம்பெனி கார்டன் அருகே தர்பாங்கா காலோனியில் ஆனந்த் குடும்பத்தாருக்கு பெரிய பங்களா. சிந்தி, பஞ்சாபி, பெங்காலி மற்றும் சீக்கியர்கள் வாழும் பகுதி. இரவு 9 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் குறைந்து பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் சாலையில் நிற்பார்கள். டப்டப் என புல்லெட்டில் வரும் பக்கத்து கிராமத்து டாக்கூர்கள் சால்வைக்குள் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியால் பட்பட் என யாரோ ஒரு எதிரியை சுட்டுத்தள்ளி விட்டு போகும் வழியில் கர்னல் கஞ்சில் பனார்ஸி பான் சாவகாசமாக வாங்கி சாப்பிட்டு விட்டு போவதும் அலகாபாத்தில் சகஜம்.
காலோனி மிட்டாய் கா துக்கான் வாசலில் எப்போதும் கூட்டம். மண்சட்டியிலிருந்து சாதக்கரண்டியால் கட்டித்தயிரை வெட்டி மட்காவில் வைத்து சூடான ஜிலேபியுடன் சேர்த்து கொடுப்பார்கள். சமோசா ச்சாய்யுடன் அது தான் காலை நாஷ்டா.
ஞாயிரன்று காலை 9 மணிக்கு ஆங்காங்கே பங்களா கேட்டுக்கு வெளியே மேலாடை இல்லா வெற்றுடம்புடன் விரித்துப்போட்ட நீண்ட கூந்தலில் கட்டித்தயிரை பூசி ஒரு மணி நேரம் சுள்ளென்ற வெயிலில் காய வைக்கும் சீக்கிய இளைஞர்களை பார்க்கலாம் (யப்பா! வேர்த்திருச்சா!). அடுத்த ஞாயிறு தலைக்குளியலுக்கு முன் அவர்கள் கிட்டப்போனால் கப்பு தான். டர்பனிலிருந்து வெளியே தொங்கும் முடியை கூரிய ஊசியால் சரட்டென உள்ளே தள்ளி ஊசியை டர்பனில் சொறுகிக்கொள்வார்கள் சீக்கிய ஆண்களுக்கு கூந்தல் பராமரிப்பு முக்கியம். நீண்ட தாடியை கழுத்தின் கீழ் சுருட்டி முடிச்சு போட்டு பசையை தடவி வைக்கும் இளைஞர்கள்.
மாலை ஏழு மணிக்கு பத்து எருமைகளை ஓட்டி வருவான் பால்காரன் லல்லன். ஆனந்த் வீட்டு வாசலில் வைத்து துணைக்கு ஒரு பையனுடன் பால் கறக்க ஆரம்பிக்க, அக்கம்பக்கத்தார் ஓவ்வொருவராக வந்து பால் வாங்கிக்கொண்டு போவார்கள். எருமை, பாலை கறக்க விடாமல் மடியை இறுக்கி பிடித்துக்கொள்ள, லல்லன் அதன் வாயை குறி பார்த்து மற்றொரு எருமையின் காம்பிலிருந்து பாலை சர்ரென பீய்ச்சி அடிக்க, ஆசையாக ஒரு வாய் பாலை குடித்ததும் எருமை தனது பாலை கறக்க விடும். எருமைகளுக்குள் அப்படியொரு அன்டர்ஸ்டான்டிங்.
அந்த பகுதியில் கோஹ்லி ஸ்டுடியொ ஆனந்த் குடும்பத்தார் வீடு மிகப்பிரபலம். அக்காள் மற்றும் மைத்துனருடன் தங்கிக்கொண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்ஸி படிப்பு எனக்கு. ஆனந்த் குடும்பத்தாரின் பங்களாவின் மாடியில் ஒரு போர்ஷனில் வாடகைக்கு இருந்தோம்.
68 வயது வெள்ளை சல்வார் அம்மா கவுர் தான் குடும்ப நிர்வாகம் எல்லாமே. பாதி நேரம் பஞ்சாபி கலந்த ஹிந்தியில் ‘மாடியில் தொட்டி தண்ணி காலியாயிடுச்சு.. மோட்டரை போடு’ என அவர் கத்துவது மேலே எங்களுக்கு கேட்கும். ( ) போல வளைந்த கால்களுடன் அவர் ஆடி நடந்தாலும் ஓயாமல் வேலை செய்யக்கூடியவர். ஏலம் கலந்த தேநீர் மற்றும் கோதுமை பிஸ்கோத்து தட்டுகளை கொண்டு போய் தோட்டத்தில் வைத்து ‘ஆஜாவ் சப்லோக்’ என குரல் கொடுப்பார்.
நேபாளி சமையல்காரன் பகதூர் சப்பாத்தி மாவு பிசைந்து வைத்திருக்க, மதியம் பன்னிரண்டு மணி வாக்கில் சமையலறையில் நுழையும் மருமகள், மாவை உருட்டி நடுவே ஆலு, லசூ(ன்) பூரணத்தை வைத்து மூடி தாராளமாக நெய் விட்டு சுட்ட கமகம வாசனை பராத்தாவை படுக்கை அறைக்கு கொண்டு செல்ல அங்கே தான் கட்டிலில் அந்த 7 வயது பையன் படுத்திருப்பான். அந்த வீட்டின் கடைக்குட்டி பிட்டூ. ஸ்டுடியோ விட்டு வந்ததும் தாத்தா ஆனந்த் நேராக பேரன் அருகில் கட்டிலில் உட்கார்ந்து தான் ஃபர்சான் (கார வகைகள்) மற்றும் சாய் சாப்பிடுவார். அப்பாவும் அப்படியே.
முதல் நாள் தான் பிட்டுவை கல்கத்தாவிலருந்து டிரெயினில் கூட்டி வந்தார்கள். கடந்த ஒரு வருடமாக அவனது சிறுநீரக கோளாறு சிகிச்சையால் இடிந்து போன குடும்பம் அது. மாதமொரு முறை டயாலிசிஸ் செய்து நோய் முற்றிலும் குணமடைய, தயாராக அடுத்த அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. ரீனல் ஆன்சைகோடோமா (renal oncycotoma) எனப்படும் சிறிய கட்டி திடீரென முளைத்து ஆனந்த் குடும்பத்தையே ஸ்தம்பிக்கச்செய்தது.
ஸ்டுடியோவில் பெரிய சைஸில் இருந்து சின்ன சைஸ் வரை மாடல் போட்டோக்கள் எல்லாமே குட்டிப்பையன் பிட்டூவின் போட்டோக்கள் தான். வெள்ளை வெளேரென வெண்ணைக்கட்டி மாதிரி இருக்கும் பிட்டூவின் உடல் நிலை எப்போதும் கவலைக்கிடம் தான். பிட்டூவின் அம்மா எப்போதோ முகத்தில் சிரிப்பை இழந்திருந்தாள்.
பிட்டூவிற்கு திடீரென முளைத்த சிறுநீரக கட்டிக்கான சோதனைகள் செய்ய மறுபடியும் கல்கத்தா பிரயாணம். புற்று நோயாக இருக்கக்கூடாதென ராம்பாக் ஹனுமான்ஜி மத்திரில் வேண்டிக்கொண்டார்கள். கால்கா அல்லது தின்சுக்கியா மெயிலில் பையனுடன் அம்மா கிளம்பிப்போக, அப்பா,தாத்தா பாட்டி மூவரும் தினமும் கல்கத்தாவுக்கு டிரங்க்கால் போட்டு விசாரிப்பது தொடர்ந்தது.
அன்று காலையிலிருந்தே மகன் ஆனந்த் நிலைகொள்ளாமல் தவித்தார். கல்கத்தாவிலிருந்து போன் வரவில்லை. ஸ்டுடியோ கிளம்பி போகும்போது ஹனுமான் ச்சாலிஸா சொல்லியவாறே காரை செலுத்த அப்பா அமைதியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பிட்டூவின் எல்லா மருத்துவ சோதனைகளிலும் பாசிடிவ்... பாசிடிவ் என்ற முடிவுகளை படித்து படித்து ‘பாசிடிவ்’ என்ற வார்த்தையே ஆனந்த் குடும்பத்தை கலவரப்படுத்தியிருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு அப்பாவும் மகனும் ஸ்டுடியோவை நெருங்க தூரத்தில் கடைப்பையன் வெளியே வந்துகொண்டிருந்தான். கையில் சின்ன மூட்டை நிறைய போட்டோ ஃப்ளிம் சுருள்கள். ஏதோ நினைவுடன் ‘என்னப்பா அது!’ என ஆனந்த் கேட்க, பையன் ‘நெகடிவ்.. பாபுஜி!’ என கத்தினான்.
ஆனந்த்தின் முகம் மலர, மேலே போன் அடிக்கும் சத்தம்.