பஹ்ரைனில் நகரின் மையப்பகுதியில் மாஹூஸ் என்ற இடத்தில் மொத்தம் ஆறு வீடுகளே கொண்ட சிறிய காம்பௌண்டில் எங்களுக்கு ஜாகை. எங்களுடன் ஒரு இராக்கிய, மங்களூர், கன்னட, பம்பாய், மார்வாடி குடும்பங்கள். நாங்கள் ஓவராக ஈஷிக்கொண்டோ அல்லது முகத்தை திருப்பிக்கொண்டோ இல்லாமல் அப்பப்ப லட்சுமி போல ‘நீ நல்லா இருக்கியா.. நா நல்லா இருக்கேன்’ தான். என்றாவது ஒருநாள் பக்கத்து வீட்டில் காலை நாஷ்டா மங்களூர் பன்ஸ், மார்வாடி தம்பதிக்கு எங்க வீட்டு பில்டர் காபி என உண்டு. பம்பாய்காரர்களிடமிருந்து ரமதானுக்கு ரவையில் செய்த இனிப்பு வகைகள் பிளாஸ்டிக் தட்டில் வரும். நாங்களும் பொங்கலன்று வெண், சக்கரை பொங்கலை அலுமினியம் ஃபாய்ல்/ கண்டெய்னரில் கொடுத்தனுப்புவோம். எவர்சில்வர் கின்னத்துல கொடுத்தனுப்பிச்சா பாத்திரம் திரும்பி வருமா என்கிற பயம் தான் தலைமுறை தலைமுறையா நமக்கு உண்டே!
காம்பௌண்டின் குத்தகைதார கம்பெனி நன்றாக பராமரிக்கிறார்கள். நீச்சல் குளம், டென்னீஸ், ஜிம் என ஒரு கேட்டட் கம்யூனிட்டிக்குறிய சர்வ லட்சணங்களும் இங்கு உள. இரவு பகலுக்கென பங்களாதேஷி வாட்ச்மேன் இருந்தான். எப்ப தூங்கினான் எப்ப எழுந்தான் என கண்டு புடிக்க முடியாத சத்ருகன் சின்ஹா மூஞ்சி. பங்களாதேஷிகள் விடுமுறைக்கு டாக்கா போனால் திரும்பி வருவதற்கு சாத்தியக்கூறுகள் வெகு சொற்பமே. லுங்கி மாற்றுவது போல விசாவை மாற்றி விடுவார்கள். தற்போது சந்திரன், சகதேவ் என இரண்டு வாட்ச்மேன்கள். புள்ளி ரண்டும் மலையாளியானு. ஆரம்பத்தில் யார் பகல், யார் இரவு வாட்ச்மேன் என தெரியவில்லை. ‘பகலிலே சந்திரனை பார்க்க போனேன், அவன் இரவிலே வருவதாக சகதேவ் சொன்னான்’ கதை தான்.
இரவில் மெயின் கேட்டை பூட்டி செக்யூரிட்டி கேபினுக்குள் புகுந்துகொள்வான் வா.மேன். அந்த கேபின் அந்தமான் செல்லுலர் ஜெயில் போல ஒரு ஆள் அட்டென்ஷனில் மட்டுமே நிற்க ஏதுவானது. ஆச்சர்யம் என்னவென்றால் அதிலும் ஒரு சிங்கிள் சீட் குஷன் சோபா போட்டு எதிரே கைராலி டிவி. சுருட்டிய ஹிந்து பேப்பரில் அடி வாங்கிய கரப்பான் பூச்சி போல கை காலை மேலே தூக்கிக்கொண்டு எசகுபிசகாக உட்கார்ந்தபடி வார்த்தகள் (செய்தி) பார்ப்பான். தவிர ஓரிரண்டு ஆந்திர மெய்டுகள், இஸ்திரி கடை உ.பி பையா, ஏசி சர்வீஸ் டீம், ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன் என ஆறு வீடுகளைச்சுற்றி சட்டசபை கூட்டத்தொடர் போல ஜன நடமாட்டம் எப்போதும் உண்டு. ‘பாத்ரூம்ல தண்ணி நின்னு போச்சு’ என நாம் போனில் சொன்னால் போதும், அடுத்த அரை அவரில் டூல் பாக்ஸை ப்ரீஃப் கேஸ் போல தூக்கிக்கொண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வரும் பி.சிதம்பரம் போல நளினமாக அசைந்து நடந்து வருவார் ப்ளம்பர். ‘தண்ணி ஏம்ப்பா வரலை’ என ஒரு கேள்வி தான் கேட்டு வைப்போம். அதற்கு அவர் ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி’ ரேஞ்சுக்கு தண்ணீர் எங்கு உற்பத்தி ஆகிறது, அதன் பண்புகள் யாவை, வழியில் குழாய் ரிப்பேர் என ஒரு சுவிசேஷ சொற்பொழிவே ஆற்றி, அதற்குள் தண்ணி தானாகவே வந்து விடும்.
காம்பௌண்ட் என்றாலே இவ்வூரில் பூனைகள் உண்டு. எங்கள் காம்பௌண்டிலும் பூனைப்படை. ஆட்சி மாற்றத்திற்குப்பின் அடுத்த கட்சி வருவது போல மூன்று நான்கு வருடத்திற்கொரு முறை பழைய பூனைகள் வெளிநடப்பு செய்ய, புதிய பூனைகள் வருவதும், குட்டிகள் போடுவதும், குட்டிப்பூனைகள் ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ போல புஷ்டியாகி பக்கத்து காம்பௌண்ட் கள்ளக்காதல் பூனையுடன் ஓடிப்போவதோ அல்லது ரோட்டில் கார் ஏறி இறந்து போவதோ சகஜம். எல்லா வீடுகளிலும் மாதாந்திர மளிகை லிஸ்ட்டில் அரிசி பருப்பு உண்டோ இல்லையோ, அவசியம் பூனை உணவு (cat food) உண்டு. மதியம் இரண்டுக்கு எங்கள் வீட்டு வாசலில் மியாவ் என அழைப்பது, மாலை ஆறரை மணிக்கு கன்னட வீடு என ஷிஃப்ட் போட்டு போஜனம் பண்ண வருகின்றன.
பொதுவாக, அரேபிய பூனைகள் மிகவும் அன்பான மனநிலையைக் கொண்டுள்ளவை. இவைகளின் முக்கிய அம்சமே உரிமையாளரின் மீதான பக்தி, அன்பு மற்றும் பாசம் தான். எப்போதும் அவற்றை நேசிக்கும் நபருக்கு நம்பகமான தோழனாக இருக்கும்.
பாலைவன வாழ்க்கை முறைக்கு ஏற்றவையாக இரவில் கண் விழிக்கும் nocturnal வகை பிராணிகள் இவை. பூச்சி, மீன், தவளை, பல்லி, சிட்டுக்குருவி இவை விரும்பி உண்ணும் துரித உணவுகளாகும். எளிதில் குதித்து உயரம் தாண்டுவதும், உயரமான சுவற்றிலிருந்து அசாத்தியமாக தரையில் குதிக்க வல்லவை. நல்ல ஆரோக்கியமுடன் வலுவாகவும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொண்டு பிறக்கின்றன.
பம்பாயிலிருந்து வந்திருக்கும் பெரியவனுக்கு ஆறேழு மாதமாக இங்கே ‘வீட்டிலிருந்து வேலை’. விலங்குகளிடத்தில் மிக்க அன்பு செலுத்துபவன். பிராணி மற்றும் பிரியாணி இரண்டுமே அவனுக்கு உயிர். தானுண்டு தன் வேலையுண்டென இருப்பவன். அதே சமயம் மனதிற்கு சரியென பட்டதை தயங்காமல் செய்பவன். உண்டியலையும் உடைக்க மாட்டான். அப்படியே உடைத்தாலும் ‘உங்களோட பர்த்டேக்கு உங்க கிட்டயே காசு கேக்கலாமா’ போன்ற விளக்கங்களும் கொடுக்க மாட்டான். சின்னவனும் இங்கே தான் இருக்கிறான். பெரியவன் அளவிற்கு பிராணிகளுடன் அதிக பற்றில்லாத அப்பிராணி். என்றோ ஒரு நாள் ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் போல பூனைகளிடத்திலிருந்து தள்ளியே இருப்பான். எதற்கும் தயங்காமல் மனதிலுள்ளதை பட்டென சொல்பவன் சின்னவன். மதில் மேல் பூனை போல் அல்ல.
பூனைகளுக்கு அசாத்திய மூளை. கேட்டில் யார் வீட்டு கார் நுழையுமோ அதைப்பார்த்து விட்டு சரியாக அவர்கள் வீட்டிற்கு ஓடுகின்றன திண்டிக்காக. அவைகளுக்கு அல்வேரோ என அழகான நாமகரணம் வேறு. நம்மை பார்த்ததும் ஆசையாக கிட்ட வந்து நம் கால்களை தம் உடலால் உரசும். நாம் உடனே குனிந்து அவைகளை தடவிக்கொடுக்க, முகத்தை தூக்கி காட்டுவான் அல்வேரோ. ஜெஸ்ஸி மல்லாக்க படுத்து நம்மை உற்று பார்த்தால் நாம் உடனே வயிற்றையும் கழுத்தையும் நீவி விட வேண்டுமென அர்த்தம். ஜெஸ்ஸி என்பது பெண்ணல்ல! இன்னொரு பூனை.. ஆமா! 
சென்ற வாரம் அல்வேரோ சாப்பிட வந்தபோது தான் கவனித்தோம், அவனது வயிற்றில் பெரிய ஓட்டை. தோல் கிழிந்து தொங்கிக்கொண்டு பாதி சதையை காணோம், இரத்தப்போக்கு நின்று உள்ளே சிறுநீர்ப்பை தெரிந்தது. பார்க்கவே பகீர். நாய் ஏதும் கடித்ததா அல்லது காம்பௌண்ட் சுவற்றின் முள்கம்பி கிழித்து விட்டதா தெரியவில்லை. சிறிய கூண்டில் அவனை தூக்கிக்கொண்டு பக்கத்தில் வெட்ரினரி கிளினிக் போக பிலிப்பினோ பெண் போன் செய்து டாக்டரை வரவழைத்தாள்.
அல்வேரோவை மேசையில் கிடத்தி பின்புறம் மெல்லிய ஊசியை குத்த, வீல் என கத்தியபடியே அரை மயக்கத்துக்கு அவன் போக, வெட்டுண்ட பகுதியில் புசு புசுவென உரோமத்தை ட்ரிம்மரால் வெட்டி, காயத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்த பின் இரண்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் சிறுநீர்ப்பைக்கு வெளியே தான் சேதமாம். மருந்து கொடுத்தார்.
அடுத்து அவர் வயிற்றுப்பகுதியில் கிழிந்திருந்த தோலை இழுத்து சேர்த்து வைத்து வயிற்றை முழுவதும் மூடி படக் படக் என பெரிய ஸ்டேப்லர் கொண்டு ஒட்ட வைத்த காட்சி நம் ரத்தத்தை உறைய வைத்தது. (படம் பார்க்க) அது முடியவும் அல்வேரோ மயக்கம் தெளிந்து வலியால் மியாவ் மியாவ் என கத்தினான். அடுத்த 5 நாட்கள் வெளியே விளையாட விடாமல் ஒரு அறையில் பூட்டினான் பெரியவன். சூப்பர் மார்க்கெட்டுகளில் பூனைகளுக்கென litter(மண் போன்ற வஸ்து) கிடைக்கிறது. அதை ஒரு அகன்ற உயரம் குறைவான டப்பாவில் கொட்டி வீட்டிற்கு வெளியே தனியாக வைத்து விட்டால் போதும். அதில் மலஜலம் கழித்து தானே கால்களால் மண்ணைத்தள்ளி மூடி விடுவான். பிறகு நாம் அதை சுலபமாக மண்ணோடு வெளியே கொட்டி விடலாம்.
இரு முறை மேலே ஏறி ஜன்னல் கதவை எப்படியோ தள்ளிக்கொண்டு வெளியே ஓடி விட்டான். பிறகு அவனை பிடித்து ஜிம்முக்குள் வைத்து பூட்டினோம். கத்தி தீர்த்து விட்டான். அந்த கத்தலுக்கு அர்த்தம் வேறு, பயபுள்ளைக்கி பெண் துணை வேண்டுமாம் என டாக்டர் சொன்னதன் பேரில் தற்போதைக்கு ஜெஸ்ஸியும் துணைக்கு இருக்க ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’தான்.
அடுத்த சில நாட்கள் போக, ஒருநாள் மாலை ஜிம் சென்று பார்த்தோம். புண் காய ஆரம்பித்து புத்துணர்ச்சி பெற்று, எங்களை பார்த்ததும் காலை இரு முறை உரசி முகத்தை தூக்கி காண்பித்தான். நாம் அவனது முகத்தை தடவி கொஞ்சியபோது கவனித்தோம், வெட்டுப்பட்ட இடத்தில் சதை வளர்ந்து தோல் மூடிக்கொண்டது பார்க்க எங்களுக்கு நிம்மதி. (படம் பார்க்க).
பிராணிகளுக்கு கரோனா தொற்று வருவதில்லை என சொல்ல முடியாது. நாய் பூனை போன்ற வீட்டுப்பிராணிகளுக்கு வர சாத்தியம் உள்ளதாம். ஆனால் அவைகளிடமிருந்து நமக்கு தொற்று பரவுவது குறைவாம்.
No comments:
Post a Comment