இரண்டு மூன்று நாட்கள் முன்பு திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டரை இடித்து விட்டார்கள் என செய்தி படிக்க மனசு லேசாக வலித்தது. இன்று Tiruchendurai Ramamurthy Sankar பதிவு படித்ததும் எனக்கும் எழுதி மன பாரத்தை கொஞ்சம் குறைக்க அவா.
என்றாவது ஒருநாள் ஸ்கூலுக்கு சைக்கிளில் போவதில் மகிழ்ச்சி. பெரும்பாலும் ராமகிருஷ்ணா தியேட்டருக்கு முன்னர் ரயில்வே கேட் போட்டு விடுவார்கள். சைக்கிளோடு கேட்டின் அடியில் நுழைந்து, தூரத்தில் பாலக்கரையிலிருந்து வரும் டிரெயினை பாத்தவாறு அவசரமாக லெவல் கிராஸை கடப்போம்.
ராமகிருஷ்ணா தியேட்டர்!
லெவல்கிராஸ் தாண்டி, வலது பக்கம் சாராயக்கடை மீன் வறுவல், பக்கத்து கடையில் முட்டை பரோட்டா, தியேட்டரின் முக்கோன சமோசா மற்றும் மூச்சா வாசனை எல்லாம் ஒரே விகிதாச்சாரத்தில் கலந்த மணம் காற்றில் மிதக்கும். நெ.1 TST (திருச்சி-ஶ்ரீரங்கம்-திருச்சி) டவுன் பஸ் தியேட்டர் வாசலில் நிற்க, மரக்கடை... மரக்கடை என கத்தும் கண்டக்டரை தள்ளிக்கொண்டு கொத்து கொத்தாக மக்கள் பஸ்ஸில் இருந்து வெளியே குதிப்பார்கள்.
‘சிரித்து வாழ வேண்டும்’ அங்கு நன்றாக ஓடியது. சர்தார்ஜியோ அல்லது பட்டான் வேட எம்ஜியாரின் இரு புருவங்களையும் இனைத்து பிரம்மாண்டமான போஸ்டர் கண்ணை பறிக்கும். பக்கத்தில் இன்னொரு எம்ஜியார் தன் இடது கையால் லதாவின் இடுப்பை பற்றி, அவரை அப்பிடியே அந்தப்பக்கம் சாய்த்து, அவர் கீழே விழாமல் இருக்க அவரின் தொடையை தன் வலது கையால் இழுத்து பிடிப்பார். தியேட்டர் உள்ளே இருந்து ‘பொன்மனச்செம்மலை புண்படச்செய்தது யாரோ’ வெளியே கேட்கும். ஐம்பது பைசா பெஞ்சு டிக்கட், 75 பைசா சேர், பின் முதல் வகுப்பு பெயிண்டால் எழுதியிருப்பார்கள்.
‘அன்னக்கிளி’ ஒரே நேரத்தில் உறையூர் பத்மாமணி மற்றும் ராமகிருஷ்ணாவில் ரிலீசானதாக ஞாபகம். புது படம் ரிலீஸ் என்றால் ராமகிருஷ்ணாவில் கூட்டம் அம்மும் (கவிக்குயில், மதனமாளிகை தவிர). மற்ற நாட்களில் பெரிய தியேட்டரிலிருந்து படங்கள் சில நாட்கள் கழித்து இங்கே வந்து விடும். தியேட்டரும் பொதுவாக காலியாக இருக்கும். பெரிய மார்க்கெட்டில் வண்டி இழுப்பவர்கள், குதிரை வண்டிக்காரர்கள், தொழிலாளிகள் இவர்களுக்கெனவே அந்த தியேட்டர் இயங்கியது. வெள்ளிக்கிழமை விரதம் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மையறியாமல் சீட்டிலிருந்து கால்களை தூக்கிக்கொள்வோம். படத்தில் பாம்பு மின் விளக்கிலிருந்து எட்டிப்பார்த்து கீழே குதிக்கும். பாம்பை விட சிவகுமாரை பார்த்து பயந்தவர்களும் சிலர். ‘ஜிலு ஜிலு.. ஹோ.. குளு குளு.. சார்மிங் பியூட்டிஃபுல் புல் புல்’ பாடலை கொஞ்சநாள் விவிதபாரதியில் போட்டார்கள். அப்புறம் பாடலையே காணோம்.
பெஞ்சு டிக்கெட்டிலிருந்து முதல் வகுப்பு வரை மூட்டைப்பூச்சி உத்திரவாதம். இடைவேளையின் போது வெளியே வந்து அப்படியே தரையில் உட்கார்த்து தாராளமாக உச்சா போவார்கள். டிரிங்.. டிரிங் .. சோடாலேர் (சோடா கலர்) என சாவியால் காளிமார்க் பாட்டிலில் உரசி சப்தமெழுப்பி கடலை மிட்டாய், தேங்காப்பூ தூவிய பீடா, 6 ட்ராக் முறுக்கு விற்கும் பையன்கள்.
முறுக்கை மட்டும் ரசித்து சாப்பிட்டுக்கொண்டே ‘போலிஸ்காரன் மகள்’ அழுதுகொண்டே பார்த்து வீடு திரும்பும் பெண்களை மன்னிக்கவே கூடாது. காதல் வாகனம், பணத்தோட்டம் போன்ற படங்கள் சந்தடியின்றி வந்து போவதும், எம்ஜியார் படங்களால் ஈர்க்கப்பட்டு தவறாமல் ராமகிருஷ்ணாவில் நாம் படம் பார்ப்பதும் சகஜம்.
பாலக்கரை பிரபாத்தில் ‘முரட்டுக்காளை’ படத்திற்கு ஹவுஸ்ஃபுல் போர்ட் போட்டு விட, அப்படியே பேலஸ் தியேட்டர் அல்லது ராமகிருஷ்ணா ஓடுவோம். எதாவது படத்திற்கு அங்கே டிக்கட் கிடைத்து விடும். ‘ஹவுஸ்ஃபுல்’ போட்டுட்டான். அதனால திரும்பி வந்துட்டோம்’ என வீட்டிற்கு திரும்பியதாக சரித்திரம் இல்லை.
87 வருடங்கள் ஓடிய தியேட்டரை சென்ற வாரம் மூடி விட்டார்களாம். கரோனாவினால் தியேட்டர்களில் கூட்டத்தை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க, வருமானமின்றி, நம் இதயத்திற்கு நெருக்கமான ராமகிருஷ்ணா தியேட்டரை இழக்க வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment