Monday, March 16, 2020

நாலு பேரன்களும் ஒரு தாத்தாவும்..



Image may contain: 4 people, people smiling
80 வயது பூர்த்தியாக இன்னும் 3 மாதங்கள் இருக்கையில் சட்டென இறந்து விட்டேன். அதுவும் தூக்கத்தில். பெங்களூரில் இளைய மகள் Vandhana Gokul வீட்டில். ஆம்புலன்ஸ் ஐஸ்பெட்டிக்குள் சொந்த ஊரான காரைக்குடி போய்க்கொண்டிருக்கிறேன். அங்கே தானே இறக்க ஆசைப்பட்டேன்! நன்றி குழந்தைகளே! ஆம்புலன்ஸை தொடர்ந்து சின்ன மாப்பிள்ளை Gokul Doraibabu மற்றும் மகள் வந்தனா, குழந்தைகளுடன் பின்தொடர, என் தலைமாட்டில் மனைவி Suryakumari மற்றும் மூத்த மகள் Usharani Sridhar டிரைவருக்கு பக்கத்தில் மூத்த மாப்பிள்ளை Sridhar Trafco
யப்பா! 110 கி.மீக்கு குறையாமல் ஆக்சிலேட்டர் மீது ஏறி நின்றுகொண்டே ஆம்புலென்ஸை ஓட்டினான் 22 வயது கன்னட இளைஞன். இனி என்னப்பா அவசரம்! என் பையன் Satish Raj துபாய்ல இருந்து வரனும். நாளைக்கி தானே என்னை எரிக்கப்போறீங்க! செக்போஸ்ட்களில் ராஜமரியாதை. ஃபாஸ்ட்டாக் திறந்துவிட்டு உடனே அனுப்பிவிட்டார்கள். நாமக்கல் அருகே வண்டியை நிறுத்தி டிரைவருக்கு மட்டும் டீ வாங்கி கொடுத்தார் மாப்பிள்ளை. என்னை கேட்கவில்லை. மனைவி நடுவில் வண்டியை விட்டு எங்குமே இறங்க மறுத்துவிட்டார். அவள் விரும்பாத என் கடைசி பயணம். யார் யாருக்கோ போன் போட்டுக்கொண்டிருந்தார்கள். நடுநடுவே அழுகை சத்தம். வண்டி குலுங்கியது. எனக்கு வலி எதுவும் தெரியவில்லை. எப்படி தெரியும்! திருச்சி தாண்டி புதுக்கோட்டை அருகே இருந்தோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரைக்குடி..
காலை 6 மணிக்கு எழுந்துவிடும் நான் வெறும் வயிற்றில் ஒன்னறை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு மனைவியுடன் கிளம்பி அழகப்பா யுனிவெர்சிடி வரை ஒரு மணி நேரம் தினமும் நடக்க வேண்டும். பின் ஸ்நானஞ்செய்து 8.30 மணிக்கு இரண்டு வகை சட்னியுடன் இட்லி மற்றும் காபி குடித்து விட்டு மெ.மெ. வீதியில் கடையை திறப்பேன். தலைமுறை குடும்பத்தொழிலான நகை(வைர) வியாபாரத்திற்குப்பிறகு 80 வருடங்களுக்கு மேலாக அடகு வியாபாரம். அதே கடை இப்போதும். மதியம் 1 மணிக்கு கூட்டு பொறியல் என மூன்று வகை காய்களுடன் மதிய சாப்பாடு.. அதுவும் சுர்ரென காரத்துடன் (ஜீரனத்திற்கு நல்லது). மாலை காபி. டானென 8 மணிக்கு இரவு உணவு. பத்து மணிக்கு தூக்கம். இதில் சிறு மாற்றமும் இருப்பதை விரும்ப மாட்டேன். நடுவே நொறுக்குத்தீனி ஒருபோதும் கிடையாது. ஒரு வேளை செய்த அதே பண்டம் மறு வேளை சாப்பிடுவது கிடையாது. ஃப்ரிட்ஜில் வைத்த பண்டங்கள்.. ம்ஹூம். நாக்கு ஒத்து. சனியன்று அரிசி பூண்டு காய்ச்சிய எண்ணெய் குளியல். சிவில் இஞ்சினீயரிங் டிப்ளமோ படித்த நான் எப்பவும் கதர் சட்டை வேட்டி தான்.
இது தான் நான் கடைசி வரை கடைபிடித்த செட்டிநாட்டு வாழ்க்கை முறை. இதுவரை ஆசுபத்திரியே போனது கிடையாது. ஒரே முறை தான் போயிருக்கிறேன். அதுவும் சற்று முன் இறந்த உடலாக.. இறந்துவிட்டேன் என சர்டிபிகேட் வாங்கவாம். என்னை கேட்டிருந்தால் நானே இறந்துவிட்டதாக சொல்லியிருப்பேனே, உயிரோடு இருந்திருந்தால்! இது தான் வாழ்க்கை.
ஜோதிடம், ஜாதகம் கணிப்பது என் பொழுதுபோக்கு. அதன்படி பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு நல்ல நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து படிப்பு, வேலை என எல்லா முடிவுகளிலும் என் பங்கு இருக்கும். இனி இருக்காது.
‘வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும்.. மரணம் என்பது செலவாகும்’ எனப்பாடிய கண்ணதாசனுக்கு மரணம் ஞானத்தை கொடுத்தது. அதனால் தான் அவன் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு இரங்கற்பா பாடிக்கொண்டான். என் வீட்டிலிருந்து கூப்பிடுதூரத்தில் வசித்த கண்ணதாசன் கொள்கைகளின் தாக்கம் எனக்கு உண்டு.
19 டிசம்பர் 2018 உடன் எனது ஆயுள் முடிந்துவிடுமென நானே கணித்து ‘இப்ப போனஸ்ல ஓடிக் கிட்டிருக்கு’ என பிள்ளைகளிடம் இத்தனை நாளும் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு வருடம் போனஸ் காலம் முடிந்து, நேற்று மாலை டிவி சீரியல் பார்த்து, இரவு உணவை உண்டபின் பேரன் பேத்திகளுடன் அரட்டை அடித்துவிட்டு படுக்கப்போனவன் தான். காலை 6 மணிக்கு மனைவியும் மகள்களும் ‘நைனா..நைனா’ என கதறி, என்னை தட்டி எழுப்ப முயற்சி செய்த போது வேட்டி ஈரமாகி என் உடலும் சில்லிட்டு போயிருந்தது. பல் டாக்டர் பேரன் கண்ணில் டார்ச் அடித்து, நீல நிறமாகிப்போன என் விரல் நகங்களை பார்த்து சட்டென முடிவு செய்துவிட்டான், சமர்த்து! இருந்தும் அம்மாவை பயமுறுத்தாமல், ஆம்புலன்ஸை அழைக்க அவன் அப்பாவை விரட்ட, நான் எப்போதோ போய்விட்டிருந்தேன். பின் டாக்டர் வந்து நான் தூக்கத்தில் இறந்து சுமார் இரண்டு மணி நேரமானதாக அறிவித்து ‘காஸ் ஆஃப் டெத்’ சர்டிபிகேட்டை கையில் திணிக்க, சுற்றிலும் மரண ஓலம். ஹூம்..
இதோ ஜம்மென கிளம்பிவிட்டேன்.
சொந்த ஊரான காரைக்குடிக்கு என் உடல் போய்ச்சேரும்முன் என் மீது உயிரையே வைத்திருந்த நண்பர்கள் செய்திருந்த ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. பக்கத்து வீட்டு Malar Vel (சென்னை வேலம்மாள் கல்விக்குழுமம் இல்லத்து மருமகள்) மற்றும் அவரது சகோதரி Annalakshmi Ponrajan (திமுக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் அவர்களது மருமகள்), மற்றொரு சகோதரி Umamaheswari Premkumar , அவரது கணவர் காண்டிராக்டர் Durairaja Premkumar, தம்பி Raja Manickam (Karaikudi Leaders Matriculation பள்ளி அதிபர்) இவர்கள் அனைவரும் காரைக்குடி விரைந்து வந்து வாசலில் பந்தல், தோரணம், விளக்கு, ஜஸ் பெட்டி என தயார் நிலையில் வைத்து, மறுநாள் ஈம காரியங்களுக்கான பொருட்கள் மற்றும் மாலைகளுக்கு ஆர்டர் செய்து என் கடைசி பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளுகளையும் செய்து வைத்திருந்தார்கள். நன்றி குழத்தைகளே!
22 வயதில் 18 வயதான பெங்களூர் பெண்ணை கரம் பிடித்தவன். காரைக்குடியில் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றான ‘சிங்கம் வச்ச வீடு’ என்னுடையது. பூர்வீக சொத்து. சிமென்ட்டில் செய்த இரண்டு பெரிய சிங்கங்கள் வைத்த இரும்பு கேட்டில் இருந்து 15 படி மேலே ஏறினால் வாசல் கதவு. பிறகு மோப்பு(முற்றம்), ஹால், கல்யாண கொட்டகை. பின் கட்டில் 20 பிராமண குடித்தனங்கள் கொண்ட அக்ரஹாரத்தை (நாயக்கர் ஸ்டோர்) வாடகைக்கு விட்டிருந்தேன். வீட்டின் நடுவே கல்யாண கொட்டகையில் சைக்கிள் விட்ட என் மூன்று குழந்தைகள் தான் தற்போது பஹ்ரைன் துபாய் பெங்களூரில். லண்டன், பம்பாய், பெங்களூர், சென்னையிலிருந்து பறந்து வந்த பேரன் பேத்திகளை அம்மாக்களும் மனைவியும் கட்டிக்கொண்டு அழுவதை பார்க்கவா சட்டென இறந்தேன்!
‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என பிரபந்தத்தையும் ஆழ்வார் பாசுரங்களையும் உரக்க ஓதி, சமய கிரியைகளை செய்து, ஏன் இதையெல்லாம் வர்ணாசிரம அடிப்படையில் செய்கிறோமென தெலுங்கில் விளக்கினார் ஶ்ரீரங்கத்திலிருந்து வந்து காரியம் பண்ணி வைக்கிற எங்கள் குடும்ப புரோகிதர்.
வைணவ முறைப்படி ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்தது என் தங்கை மகனும் திருச்சி BG நாயுடு ஸ்வீட்ஸ் அதிபருமான Bg Balaji தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் மாமா.. மாமா என மாதமொரு என்னை பார்க்க வந்துவிடுவதும், புதிய கிளைகள் திறக்கும்போது தவறாமல் என்னை அழைத்துச்செல்ல கார் அனுப்புவதையும் பாலாஜி தவறாமல் செய்வது வழக்கம். அவரது தங்கை, தம்பிகள் Badhri Nath , Amarnath Baktavatchalam , Ketharath Baktavatchalam , மனைவிகள் மற்றும் குழந்தைகள் எல்லோரும் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
எனது 85 வயது மூத்த சகோதரி, இளைய சகோதரி மற்றும் சகோதரனின் குழந்தைகள் அனைவரும் கதறி அழுது கடைசி மரியாதை செய்துவிட்டுப்போனது கண்டு நெகிழ்ச்சியடைந்தேன்.
துபாயிலிருந்து என் மகனுடன் 4 மணி நேரம் பறந்து வந்த மருமகள் Pramila S Raj பெங்களூரிலிருந்து 9 மணி நேர சாலைப்பயண களைப்பை பொருட்படுத்தாது உறக்கமேதுமின்றி எல்லா உறவினர்களையும் கவனித்து உணவு பரிமாறி எனக்கு அஞ்சல் செலுத்தினார்.
தாசரி (இடுகாடு) , சாங்க்கல வாரு (சலவை) மற்றும் மங்களவாரு (நாவிதர்) மூவர் உதவியுடன் எண்ணெய் சீயக்காய் நன்னீரில் என்னை குளிப்பாட்டி, நெற்றியில் திருநாமம் தரித்து, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது மணத்துடன் அலங்கரித்ததை பார்த்து பீறிட்டு அழுதார் மனைவி. யாருக்காக இனி எனக்கு இந்த அலங்காரம்! அறுபதாண்டு காலம் ஒரு குறையுமில்லாமல் என்னை பார்த்துக்கொண்டவர் மனைவி! எனக்கு எது பிடிக்குமென்பது என்னை விட என் மனைவிக்கு அதிகம் தெரியும். உறவினர்களும் கடைவீதி சக வியாபார நண்பர்களும் வரிசையாக அஞ்சலி செலுத்தி என் நெஞ்சில் மலர் மாலைகளை சார்த்த சார்த்த எப்போதோ போய்விட்டிருந்த மூச்சு மறுபடியும் முட்டியது.
‘தாத்தா.. தாத்ஸ்’ என என்னை சுற்றி வந்த இரு பேத்திகளும் கண்ணீருடன் வழியனுப்ப, நான் தூக்கி கொஞ்சி மகிழ்ந்த நான்கு பேரன்களும் இப்போது என்னை தூக்கிக்கொண்டு சங்கு வாத்தியம் முழங்க மயானம் நோக்கி நடந்தபோது பரவசமடைந்தேன். மின்தகன மையம் எதிரே கடைசி காரியங்கள் செய்த என் தனயன் மொட்டை வழித்து, நீரில் தோய்ந்து, தோளில் மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு மூன்று முறை சுற்றி வருவதை கடைசியாக பார்த்தேன். எனக்குப்பின் குடும்பத்தை வழிநடத்துபவன் இனி. என் கடமை அனைத்தையும் செவ்வனே யாருக்கும் குறை வைக்காமல் முடித்து அவனிடம் ஒப்படைத்துவிட்டு இதோ கிளம்பி விட்டேன்.
மாப்பிள்ளைகள், பேரன்கள் ஆண் உறவினர்கள் மயானத்தில் விடை கொடுக்க, வஸ்திரத்தால் மூடிய என் பூத உடலை இரும்பு பலகையின் மேல் மர உருளைக்கட்டைகளில் கிடத்தி அப்படியே எரியூட்டு சூளைக்குள் மெல்ல உருட்டி விட அக்கினியுடன் சங்கமித்தேன்.
சற்று நேரம் கழித்து பேரன்கள் யாரிடமோ விவாதிப்பது லேசாக கேட்டது. As per rule they should show us the body burning, to ensure that it is not illegally sold for dissection’ என பேசிக்கொண்டு அடுத்த சில நிமிடங்களில் எரியும் நிலையில் என்னை பார்க்க வலியுறுத்தியதும், மயான சிப்பந்தி ஒருவர் சற்ற்றென ஷட்டரை உயர்த்த, சூளையின் வெளியேயிருந்து நான்கு பேரன்களும் கடைசியாக இன்னொரு முறை புகை மூட்டத்தின் நடுவே இரு(ற)ந்த என்னை பார்த்து ‘Dude! there he is !’ என திருப்தியுடன் நகர, மெதுவாக சிதையத்தொடங்கினேன்.
ஹரி ஓம்..
(நாராயணசாமி)

No comments:

Post a Comment