கென்யா மசாய் மாரா காடுகளுக்கு நடுவே பழங்குடியினர் குடியிருப்பு பகுதி...
பிரம்மாண்டமான யானைகள் வசிக்கும் அடர்ந்த காடுகள் அங்கங்கே தென்பட்டாலும் பெரும்பாலும் திறந்தவெளி, புல்பூண்டுகள் நிறைந்த நிலம். ஏழெட்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி ஓடி மான்களையும், எருதுகளையும் வேட்டையாடும் சிறுத்தைகள் நிறைந்த பகுதி. ஆங்காங்கே மரத்தடியில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போல உட்கார்ந்தருக்கும் ஏழெட்டு சோம்பேறி சிங்கங்கள். அழகான பின்புறங்கள் கொண்ட ஏராளமான வரிக்குதிரைகள்,
அருவருப்பான முரட்டு தோற்றம் கொண்ட கழுதைப்புலிகள் (hyena), ஆயிரக்கணக்கில் கூட்டமாக ஆற்றை கடந்து செல்லும் காட்டெருமைகள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், பாறாங்கல் போல தண்ணீரில் மூழ்கியிருக்கும் நீர் யானைகள், பக்கத்திலேயே அசையாமல் கிடக்கும் பெருமுதலைகள்.
அருவருப்பான முரட்டு தோற்றம் கொண்ட கழுதைப்புலிகள் (hyena), ஆயிரக்கணக்கில் கூட்டமாக ஆற்றை கடந்து செல்லும் காட்டெருமைகள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், பாறாங்கல் போல தண்ணீரில் மூழ்கியிருக்கும் நீர் யானைகள், பக்கத்திலேயே அசையாமல் கிடக்கும் பெருமுதலைகள்.
இத்தனை விலங்குகளுக்கு நடுவே அந்த பழங்குடியினர் வசிக்கிறார்கள்.
ஆறரை அடிக்கு மேல் உயரம், மெலிந்த ஜிம் பாடி கொண்ட அந்த இளைஞன் பெயர் இவான். ஐம்பது அறுபது கிலோ எடையை சர்வசாதரணமாக தூக்கிவிடுவானாம். கீழே முழங்கால் வரை பழங்குடியினர் அணியும் சிகப்பு வண்ண உடை. வெற்றுடம்பிலும் கழுத்திலும் நிறைய அணிகலன்கள், பாசி மணிகள். கையில் ஈட்டி.
ஆறரை அடிக்கு மேல் உயரம், மெலிந்த ஜிம் பாடி கொண்ட அந்த இளைஞன் பெயர் இவான். ஐம்பது அறுபது கிலோ எடையை சர்வசாதரணமாக தூக்கிவிடுவானாம். கீழே முழங்கால் வரை பழங்குடியினர் அணியும் சிகப்பு வண்ண உடை. வெற்றுடம்பிலும் கழுத்திலும் நிறைய அணிகலன்கள், பாசி மணிகள். கையில் ஈட்டி.
‘கொடிய மிருகங்களுக்கு மத்தியிலேயே வசிக்கிறீங்களே! பயம் கிடையாதா?’
‘சார்! இந்த காடுகளில் தான் பிறந்து, விளையாடி வளர்ந்தோம். கையில கூர்மையான ஈட்டி இருக்கே! எதுக்கு பயப்படனும்?’
‘அப்ப சிங்கம், புலி உங்களை தாக்கினா நீங்களும் சண்டை போடுவீங்களா?’
‘ஹலோ! எங்க வழக்கப்படி பையன்கள் ஒரு தடவையாவது சிங்கத்தை கொன்னிருந்தா தான் கலியாணமே.’
‘கல்யாணமா! அதுக்கு சிங்கத்து கிட்ட சாகறதே மேல்னு நீங்க நினைச்சதுண்டா? அந்த மாதிரி விஷப்பரிட்சை எங்க நாட்ல இல்லாம தான் நாங்கள்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்’
‘கல்யாணம் பண்ணிக்கனும்னு தீவிரமா எங்க இளைஞர்கள் நிறைய சிங்கங்களை அழிச்சிட்டாங்க. அதனால அரசாங்கம் இப்ப மிருகங்களை கொல்ல தடை விதிச்சாச்சு’
சுமார் 100 பழங்குடியினர் குடியிருக்கும் அந்த பகுதிக்குள் நுழைந்தோம். சுற்றிலும் அடர்த்தியான முள் வேலி.. முள் தட்டியாலான கேட்டை திறந்து உள்ளே போனால் நிறைய மண் குடிசைகள். குடிசைகள் கட்டுவது பெண்கள் தானாம். மண்ணையும், மாட்டு சாணத்தையும் குழைத்து மரக்கம்பங்கள் நட்டு கட்டப்படும் வீடுகள் சுலபமாக 70, 80 வருடங்கள் தாங்குமாம். ஒரு சொட்டு மழை நீர் உள்ளே வராதாம். வெளிச்சம் மற்றும் காற்று புக அங்கங்கே சிறிய ஓட்டைகள்.
பக்கத்தில் ஆடுமாடுகள் வசிக்க திறந்த கொட்டகை. இரவில் சிங்கங்கள் உள்ளே நுழைய முடியாத படி சுற்றிலும் முள் வேலி. ஏராளமான கோழிகள் வளர்க்கிறார்கள்.
‘வேலைக்கு போகாமெ எப்பிடி! சாப்பாட்டுக்கு ?’
‘ஹ...ஹ..ஹா. காலைல 5 மணிக்கு எழுந்து ஒரொரு இளைஞனும் 100 மாடுங்களோட சுமார் 15 கி.மீ தூரத்துக்கு மேய்க்க கிளம்பிடுவோம்.
‘காலை நாஷ்டா?’
‘அதோ அந்த மாட்டுத்தோல் குடுவை நிறைய எறுமைப்பால் குடிச்சிட்டு கிளம்புவோம்’
‘ தினமும் அதான் நாஷ்டாவா?’
‘ இல்ல.. பச்சை மாட்டு ரத்தமும் கூட’
‘என்னய்யா இது! பாயசம் குடிக்கற மாதிரி சொல்ற! அந்த மாடு சாவாதா?
‘இல்ல.. கூர்மையான மூங்கில் குச்சியை மாட்டோட கழுத்து பகுதியில் லேசா குத்தி ரத்தத்த தோல் குடுவையில வடிச்சி எடுத்துக்குவோம். மாட்டுக்கு ஒன்னும் ஆகாது. அதான் தினமும் புல் திங்கிதே! பாலும் ரத்தமும் ஒரே நாள்ல சுரந்துக்கும்’
‘சரி.. திரும்ப எப்ப வீடு வருவே. மதியம் கட்டு சாதமா? கூடவே தூக்குச்சட்டியில ரத்தமா?’
‘மதிய சாப்பாடா? ஸ்ட்ரெய்ட்டா இரவு சாப்பாடு தான். ஓடை அல்லது ஆத்துல பல் தேச்சு குளிச்சு மாடுங்கள நல்லா மேயவிட்டு, சாயரச்ச கிளம்புனாக்க இருட்டறதுக்குள்ள வீடு வந்து சேர்ந்துடுவோம்.
‘ராத்திரி என்ன சாப்பாடு? மளிகை, பருப்பு, எண்ணெய் எல்லாம் எப்பிடி?’
‘அதெல்லாம் உங்களுக்கு தான். வாரத்துக்கு ஒருக்கா மாடு அல்லது செம்மறி ஆடுங்கள வெட்டி மாமிசத்தை எல்லா குடும்பங்களோட பகிர்ந்துக்குவோம். பச்சை மாமிசமாகவே சாப்பிடுவோம். சோளம் பயிர் செய்றோம். சோள மாவில் செய்த ‘உகாலி’ (களி) எங்கள் தினசரி உணவு’
‘சமைக்காம சாப்பிட்டா உடம்புக்கு ஒன்னும் பண்ணாதா?’
‘பால், ரத்தம், மாமிசம் மூன்றையும் பச்சையா சாப்பிடுவது ரொம்ப நல்லது. இது வரைக்கும் எங்கள் குடும்பத்தில் யாருக்குமே இதயநோய் வந்தது கிடையாது? நேட்ஜியோ காரங்க அப்பப்ப வந்து படமெடுப்பான். அவன் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும் இருதயத்துல நோயெல்லாம் வரும்னு.’
அந்த சிறிய குடிசை ஒன்றில் நுழைந்தோம். 5 பேருக்கு மேல் உள்ளே செல்ல முடியாது. நுழைந்ததும் சிறிய அறையில் (தட்டி தடுப்பு தான்) வெறும் கன்றுக்குட்டிகள் தான். கன்றுக்குட்டிகளை மட்டும் இரவில் வெளியே தங்க விடுவதல்லையாம். சிங்கங்கள் லாலிபாப் மாதிரி சாப்பிட்டு விடுமாம்.
அடுத்து ஒரு பெரிய அடுப்பில் பால் பாத்திரம். அதில் கிடக்கும் ஏராளமான ஈக்களை ஃபூ என ஊதி பாலை குடிப்பவர்கள். அடுப்பிற்கு இரண்டு புறமும் ரயில்வே சைட் பெர்த் போல கட்டில் மற்றும் திரை.. மேலே போர்த்திக்க மாட்டுத்தோல். வீடே அவ்வளவு தான். நோ ஃபேன்.. நோ லைட்.. நோ கீசர்..
கட்டிலில் வயதான உருவம் சுருண்டு படுத்து நீண்ட கால்களுடன் தாயக்கட்டை மாதிரி கிடந்தது. அவங்க அப்பாவாம். வயது 111 என்றதும் அதிர்ந்தோம். எதையோ சொல்லி இரண்டு முறை இவான் ஒலியெழுப்ப ‘ம்ம்ம்’ என அவர் முனகல் சத்தம் கேட்டது. மொத்தம் 12 மனைவியாம் அவருக்கு. 48 குழந்தைகளில் அந்த இவானும் ஒருவனாம். இவனுக்கு 21 வயசு. இவங்கம்மாவுக்கு இப்ப 52ஆம். சட்டென 52-21=31 என மனசு கணக்கு போட்டது. ஆஆஆஆ என ஏக காலத்தில் எல்லோரும் அலறினோம். தெரியுமே..நீங்களும் அவங்கப்பா வயசுலர்ந்து 21ஐ கழிச்சி பார்ப்பீங்கன்னு.. இப்ப அப்பா எழுந்து நிக்க முடியாதாம். (எப்பிடிய்யா முடியும்! 🙅🏻♂️)
வீட்டுப்பெண்கள் பாசிமணி, இரும்பு, மரக்கட்டை கொண்டு நிறைய கைவினை பொருட்கள் செய்து காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்று சம்பாதிக்கிறார்கள். மாடு மேய்த்தாலும் ஆண்களும் பெண்களும் படித்தவர்களாம். தாய்மொழி ‘ஸ்வாஹிலி’யில் பேசினாலும் பிரிட்டிஷ் கென்யாவின் தாக்கத்தினால் அருமையாக ஆங்கிலம் பேசுகிறார்கள். சில இளைஞர்கள் அருகிலிருக்கும் விடுதிகளில் வேலை செய்து ஓரளவு சம்பாதிக்கிறார்கள்.
கென்ய பழங்குடி திருமணங்களில் வரதட்சனை உண்டாம். பையன் வீட்டுக்காரர்கள் தான் வரதட்சனை கொடுக்க வேண்டுமாம். சீர்.. செனத்தி? ம்.. எல்லாம் உண்டு. ரொக்க பணம், கட்டில் மெத்தையெல்லாம் கிடையாது 50,100 மாடுகள் அல்லது கொழுத்த பன்றிகள் தான் வரதட்சனையே. கூட்டமாக பெண் வீட்டிற்கு வந்து பையன் வீட்டார் மரக்கன்றுகளை நட்டால் நம்மூர் தட்டு மாற்றி நிச்சயம் செய்து கொள்வது போலவாம். ‘வாம்மா மின்னல்’ சமாச்சாரமெல்லாம் கிடையாது.
‘சரி தம்பி கிளம்பறோம். இப்பிடி காட்டுக்குள்ளேயே இருந்தா வெளி உலகத்துல நடக்கறது எல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும் இவான்?’
படாரென பாக்கெட்டிலிழுந்து கைப்பேசியை வெளியே எடுத்தான் இவான்.
‘வெளி உலகமா? டிவிட்டர், இன்ஸ்டாக்ராம், ஃபேஸ் புக் எல்லாத்துலயும் நாங்க இருக்கோம்’
No comments:
Post a Comment