ஹகூன மட்டாட்டா!
கொடிய விலங்குகள் வசிக்கும் கென்யா காடுகளில் 8 நாட்கள் நாம் தங்கியிருக்க முடியுமா? ‘ஒரு தபா போய்ப்பாருங்க.. அப்பறம் அடுத்த வருஷமும் போவீங்க!’ என நண்பர் ஒருவர் உசுப்பேத்த நாங்கள் 6 குடும்பங்கள் (15 பேர்) கிளம்பினோம்.
நண்பர் Muthukumaran தான் எங்கள் குழுத்தலைவர். உடனே அவர் நைரோபியில் 40 வருடங்களுக்கு மேல் வசிக்கும் திருமதி கீதா சத்யமூர்த்தி அவர்களை (டூர் ஆபரேட்டர்) தொடர்பு கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
ஒரு சுபயோக தினம் குறிப்பிட்ட நேரத்தில் நண்பர்கள் தத்தம் வீட்டில் மடிக்கணினியுடன் கான்ஃப்ரன்ஸ் கால் பேசிக்கொண்டே கென்யா-ஏர் விமான டிக்கெட் புக் செய்து ஆன்லைன் விசாவும் அப்ளை செய்தாயிற்று.
பகலில் 16 டிகிரி இரவில் 8 டிகிரி குளிர் என்பதால் தெர்மல் வேர், மஃப்ளர், ஸ்வெட்டர்கள், குளிர் கண்ணாடி, தொப்பி, காலணிகள், கென்யன் ஷில்லிங், இது தவிர வாந்தி, வயற்றுவலி, அலர்ஜி, அஜீரனம் போன்ற உபாதைகளுக்கு மாத்திரைகள் என எல்லாம் பேக் செய்தாயிற்று. முக்கியமாக yellow fever க்காக தடுப்பூசியும் போட்டுக்கொண்டோம். கென்ய கொசுக்கள் ஈக்கள் சைஸாம். முட்ட முட்ட ரத்தத்தை குடிக்குமாம்.
‘பயமா இருக்காதா! புலி நம்ம மேல பாஞ்சு வந்தா என்ன செய்றது’ என மனைவி
Usharani Sridhar கேட்க, உடனே யூடியூபில் கென்யா பற்றிய வீடியோவை தேடினோம். நாலைந்து பேர் திறந்தவெளி ஜீப்பில் போகும்போது மூன்று நான்கு சிறுத்தைகள் மேற்கூரையில் தாவிக்குதிக்க,
அதிலொன்று சரட்டென உள்பக்கம் இறங்கி எல்லோரையும் உற்று பார்க்கிறது. வெள்ளைக்காரனுக்கு தெகிரியம் ஜாஸ்தி. சத்தம் எழுப்பாமல் அப்படியே காமெராவில் படமெடுக்க, சற்று நேரத்தில் சிறுத்தைகள் சட்டென ஜீப்பிலிருந்து வெளியே தாவிக்குதித்து ஓடிவிடுகின்றன. பயந்தால் நம் வியர்வை நாற்றம் அவைகளின் மூக்குக்கு சுலபமாக போய்ச்சேர்ந்து அதன் கோபம் அதிகமாகுமாம். ஹும்! நம் வீட்டில் உள்ளுக்குள்ளார பயப்படனும், ஆனா பயத்த காமிக்கக்கூடாதுங்கறது ஒவ்வொரு ஆம்பிளைக்கும் தெரியாதா என்ன!
துபாயிலிருந்து நான்கு மணி நேரத்தில் நைரோபியில் இறங்க, விமானதளத்தில் இரண்டு லேண்ட் க்ரூஸர்கள் தயாராக இருந்தன. பெரியவனும் சின்னவனும் பம்பாயிலிருந்து வந்திறங்கினார்கள். காலை உணவை திருமதி. கீதா 4 Points by Sheraton இல் ஏற்பாடு செய்திருந்தார்கள். கென்ய மாம்பழம் உலக பிரசித்தி பெற்றது. படு ருசி. எத்தனை வகை ஐரோப்பிய பதார்த்தங்கள் இருந்தாலும் காலை உணவுக்கு ஊத்தப்பம், பரோட்டா என இந்திய உணவை பார்த்தால் நம்மவர்கள் புலகாங்கிதமடைகிறார்கள்.
அடுத்து நான்கு மணி நேர சாலைப்பயணம். வழியெங்கும் சின்ன சின்ன ஊர்கள். நம்மூர் கிராமங்களை விட மோசம். பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கிறார்கள். சாலையின் இருபுறமும் சோளம், கோதுமை பயிர்கள். எல்லா கிராமங்களிலும், உபயோகப்படுத்திய பேண்ட், கோட், சட்டைகளை ஏராளமாக ரோட்டோரத்தில் விற்கிறார்கள்.
கென்ய மக்களைப்பற்றி.. ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து மீண்டு இத்தனை வருடங்கள் கழித்தும் கென்யர்கள் இன்னமும் அகதிகள் போலத்தான் வாழ்கிறார்கள். ஆரவாரமில்லாத அமைதியான பேச்சு, இனிமையாக பழகுவது, ரொம்ப submissiveஆக பணிந்து போவது. பழங்குடியினர் இன்னும் அதே வாழ்வாதாரத்தில். நல்ல கல்விச்சாலைகள் இல்லை, பாலங்கள், ஆசுபத்திரிகள், கட்டமைப்பு எதுவுமில்லாமல் இன்னும் பழைய நகரமாகவே உள்ளது தலைநகர் நைரோபி. காரணம், தங்கள் சுயலாபத்திற்காக நாட்டை முன்னேறவிடாமல் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தான் என டிரைவர் சொன்னவுடன் நம்பியார் வசனம் ஞாபகத்திற்கு வந்தது ( டேய்! இவன் மிருகமா இருக்கற வரைக்கும் தான் நாம மனுஷனா இருக்க முடியும். இவன் மனுஷனாயிட்டா நாம மண்ணாயிடுவோம்!).
இதோ.. மசாய்மாரா வனப்பிரதேசம்... கரடுமுரடான கற்கள் நிறைந்த 1 மணி நேர சாலை பயணத்திற்கு பிறகு.
எதியோப்பியா, தென் சூடான், தன்சானியா, உகாண்டா, சோமாலியா நாடுகள் சூழ்ந்த கென்யாவில் 6 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுள்ள காடுகளின் ஏதோ ஒரு மூலையில் நாங்கள். காடுகளா! புற்கள் நிறைந்த savannah எனப்படும் வனாந்தரம் தான். அங்கங்கே கொஞ்சம் மரங்கள்.
மலைத்தொடர்களிலிருந்து நீரோடையாக கீழிறங்கும் தண்ணீர் நிலத்தடியில் சென்றடைந்து, அங்கங்கே அடர்ந்த புற்களுடன் பெரும் குளங்களாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் யானைகள் கொட்டமடிக்கின்றன. காட்டு யானைகள் ஒவ்வொன்றும் 15,16 அடி உயரம் இருக்கும். குடும்பத்தில் 15,20 யானைகளை வழிநடத்தி முன் நடந்து செல்வது பெண் யானைகளாம். ஆண் யானைகளுக்கு அதிகாரம் இல்லையாம். பொறுப்பும் கம்மியாம். அயிய்ய! அங்கயுமா!
அவ்வளவு பெரிய அத்துவான காட்டின் நடுவே மாரா சிம்பா ஐந்து நட்சத்திர ஹோட்டல். ஓட்டலைச்சுற்றி மின் வேலிகள், இரவில் மிருகங்கள் நடமாட்டம் விடுதியைச்சுற்றி அதிகம் இருப்பதால். பெட்டியை போட்டுவிட்டு உடனே ஜீப்பில் ஏறி காட்டுப் பகுதிக்கு சென்றோம். சிறுத்தை புலியை பார்க்க போகிறோம் என்று டிரைவர் டிமோத்தி சொல்ல, கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரவில் நடமாடும் கொடிய விலங்கு. மற்ற விலங்குகளுடன் சேராமல் தனித்தே இருக்குமாம். பெரும்பாலும் மர கிளைகளின் உச்சியில் வசிப்பவை, வரிக்குதிரையோ காட்டெருமையோ அந்த பக்கம் வந்தால் வாயில் எச்சில் ஊற மரத்திலிருந்து கீழே ஒரே பாய்ச்சல் தான். வண்டியை ஒரு மரத்தின் அருகே நிறுத்த மரத்தடியில் 2 சிறுத்தை புலிகள். என்ன ஆச்சரியம் எங்களை பார்த்தும் முகத்தை திருப்பிக் கொண்டது. திறந்தவெளி ஜீப்பில் சீட்டின் மேல் ஏறி நின்றுகொண்டு மேற்கூரை வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். டிமோத்தி சென்னான்.. பொதுவாக அவை மனிதர்களை துன்புறுத்துவது இல்லையாம். ‘ஹகூன மட்டாட்டா’ என்றான். Lion King படத்தில் அடிக்கடி வரும் வசனம் ‘ஹகூன மட்டாட்டா’. அதாவது No worries என அர்த்தம். அதேசமயம் கொஞ்சம் கிட்ட போய் மிருகத்தை சீண்டினால் ‘லபக்’ தான். அதன் கண்களை நாம் நேருக்கு நேர் பார்ப்பதும் அதற்கு பிடிக்காதாம். இரு.. இரு.. தம்பி டிமோத்தி! நேருக்கு நேரா பாத்தா மத்தவங்களுக்கு கோபம் வரும்ங்கறது எல்லோர் வீட்டுலயும் நடக்கற சமாச்சாரமாச்சேய்யா.. வெள்ளந்தியா இருக்கியேப்பா!
வண்டி நகர நகர நூற்றுக்கணக்கில் வரிக்குதிரைகள், யானைகள், Gazel, இம்பாலா எனப்படும் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், அழகான ஒட்டகச்சிவிங்கிகள் பார்த்து விட்டு விடுதிக்கு திரும்பினோம்.
இரவு 8 மணி. ஹோட்டலின் உணவகப்பகுதி. சுற்றிலும் ஏராளமான ஐரோப்பியர்களும் சீனர்களும் தென்னாப்பிரிக்க வெள்ளையர்களும். செம்பட்டை முடி பெண்கள், தோல் சுறுக்கங்களுடன் வயதான பெருசுகள், தொப்பி கால்சராய் அணிந்த நடுத்தர வயது தொப்பை ஃபெல்லோஸ், தலையில் மெழுகு ஜெல் தடவிய அழகான லெபனீய இளைஞர்கள்.. எல்லோர் கையிலும் ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற டஸ்கர் பியர். குடி தண்ணீரை விட பியர் விலை குறைவாம். உயர் ரக கென்ய சாராய வகைகள் கொண்ட போத்தல் கார்க்குகள் ப்ளக்கென திறந்து கடகடவென கோப்பையில் கவிழ்க்கும் சத்தம், சுறுசுறுப்பாக இயங்கும் பதவிசான ஆப்பிரிக்க இளம் பெண்கள். Bob Marleyயின் Jamaican reggae பாடல் (no woman no cry) மனதிற்கு இதமாக தவழ்ந்து மயிலிறகு போல நம் காதுகளை வருட, சிவப்பு வொய்ன், ஃப்ளர்ட் வோட்கா, கேப்டன் மார்கன் ரம், டேகிலா (Tequila) எனப்படும் உள்ளூர் பட்டை சாராயம் என வயது வித்தியாசமில்லாமல் ஃபுல் ‘ஸ்பிரிட்’டுடன் எல்லோரும் ஆனந்தசாகரத்தில் மூழ்கியிருக்க, அவர்களுக்கு நடுவே நாங்கள் இரண்டு மேசைகளில் ‘காலைல பரோட்டா குருமா, பொஹா(அவல்) உப்புமா நல்லா இருந்துச்சில்ல!’ என சத்தமாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென பழங்குடியினர் 10,15 பேர் ஈட்டிகளுடன் ஏ..ஊ.. ஆ என பாடியபடியே ஒவ்வொரு மேசைக்கும் வந்து பாடி மகிழ்வித்தார்கள். How are you என நாம் கேட்டவுடன் வந்த பதில் ‘ஹகூன மட்டாட்டா’. பொதுவாக கென்யர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை. கவலையே பட மாட்டார்களாம். நளைப்பொழுதை நினைத்து வருந்துவதை விட இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பவர்கள். அதனால் நொடிக்கொரு தடவை ‘ஹகூன மட்டாட்டா’ சொல்கிறார்கள்.
காலை 6 மணிக்கே பல்லை மட்டும் தேய்த்து வரக்காப்பி குடித்துவிட்டு கிளம்பினோம். பேசிக்கொண்டே வண்டி ஓட்டினாலும் டிரைவர் டிமோத்தி கண்களை காட்டுப்பகுதியில் மேயவிட்டு விலங்குகளை தேடினான். ஓரிடத்தில் சுமார் 20,30 வண்டிகள் நின்றிருக்க அருகே சென்றோம். இரண்டு மான்கள் தூரத்தில் புல் மேய்ந்துகொண்டிருக்க சிறுத்தையொன்று பாயத்தயாராக நின்றுகொண்டிருந்தது. சீமைக்காரர்கள் கேமராவை செட் செய்து தயாராக இருக்க, ஶ்ரீகாந்த் பிரமிளாவை பலாத்காரம் செய்வதை சிம்பாலிக்காக திரையில் காட்டப்படும் புலி மானை துறத்தும் காட்சி நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடம் காத்திருந்தோம். ம்ஹூம். நாலைந்து அடி முன்னே வைத்து விரட்டத்தயாராக சிறுத்தை இருக்க, எல்லோருக்கும் படபடப்பு. வீடியோ காமிரா தயாராக வைத்திருந்தோம். அடுத்த நிமிடம் சிறுத்தை மேலும் முன்னேற, ஆச்சு! இதோ வேட்டையாடப்போகிறது என மக்கள் ஆவலுடனிருக்க, மான்கள் திடீரென மின்னல் வேகத்தில் ஓட்டமெடுத்தன. என்னவொரு வேகம்! கூட்டம் ஆர்ப்பரித்தது. டிரைவர் ஹகூன மட்டாட்டா சொல்ல, கூட வந்திருந்த குஜராத்தி நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!’ என கத்திக்கொண்டே விடுதிக்கு திரும்பினோம். Animal kill பார்க்க எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.
மதிய உணவிற்கு பிறகு மறுபடியும் game drive ஆரம்பம். பசியெடுத்தால் தான் சிங்கமோ சிறுத்தையோ வேட்டையாடுமாம். மற்ற நேரங்களில் மான்கள் சர்வ சாதாரணமாக சிறுத்தைக்கு மிக சமீபத்தில் புல் மேய்ந்துகொண்டிருக்குமாம்.
சட்டென வண்டியை நிறுத்தி அந்தப்பக்கம் கை காட்டினான். கெட்டிமேளம், முகூர்த்தம் முடிந்து நாதஸ்வரம் தவில் பார்ட்டி வட்டமாக உட்கார்ந்திருப்பதைப்போல நாலைந்து சோம்பேறி சிங்கங்கள் தரையில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தன. ‘ரெண்டு நாளா வயிறு கொஞ்சம் உப்புசமா இருக்கு சிங்க முத்து!. முந்தாநாள் டின்னர்க்கு கொஞ்சம் ஜாஸ்தியா எருமை சாப்ட்டுட்டேன்’ என அவை பேசிக்கொண்டிருக்கலாம். குறைந்தது 750 கிலோ எடையுள்ள சிங்கம் மிகவும் சக்திவாய்ந்தது. 4 மீட்டர் உயரத்தையும் 8 மீட்டர் அகல கால்வாயையும் எளிதில் தாவி கடக்கக்கூடியதாம். தூரத்தில் எந்த மிருகத்தையும் சுலபமாக பார்க்கக்கூடிய கூரிய வட்டமான கண்கள். மற்ற விலங்குகள் கூட்டமாக இருக்கும்போது தான் சிங்கம் பாய்ந்து தாக்குமாம். சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு விரட்டி ஓடக்கூடியது. போஜனத்திற்கு பொதுவாக மாடு, வரிக்குதிரை போன்ற சதைப்பற்றுள்ள பெரிய விலங்குகளை தான் குறிவைக்குமாம். காரணம் மாமிசம் வெகு நேரம் வயிற்றில் தங்க வேண்டுமே. அதுவும் ஓரிரு நாட்கள் வரை. எந்த மிருகமானாலும் முதலில் அதன் கழுத்து மற்றும் குரல்வளையை தன் கூரிய பற்களால் கவ்வி ஒருசில நிமிடங்களில் மூச்சு திணறி இறக்க வைத்து, பின் சாவகாசமாக உண்ணுமாம். பத்து நிமிடங்கள் வண்டியிலிருந்தே சிங்கங்களை வேடிக்கை பார்த்துவிட்டு பசி வருவதற்குள்(அதற்கு) கிளம்பினோம். (சிங்கத்தின் ஓவியம் பார்க்க!)
வழியில் எங்கு பார்த்தாலும் Wilder beast எனப்படும் ஆப்பிரிக்க எருதுகள். லட்சக்கணக்கில் அவை இடம் பெயர்ந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் animal migration பார்ப்பது தான் பயணத்தின் விசேஷமே. ‘ந்தா வரேம்ப்பா..பக்கத்து ஊர்ல கொளுந்தியா கல்யாணம். போய்ட்டு வாரேன்’ என அவைகள் சாதாரணமாக கிளம்பி போவதில்லையாம். பக்கத்து நாட்டில் இன்ன காட்டில் நல்ல ருசியான பசுமையான புல் இன்ன மாதத்திலிருந்து விளையும் என்பது அவைகளுக்கு தெரியும். ஆனால் மாதக்கணக்கில் இந்த நடை பயணம் உண்டு என்பதால் கிளம்புவதற்கு சில மாதங்கள் முன்பே நல்ல போஷாக்கான உணவுகளை உண்டு தங்கள் உடலை பலப்படுத்தி தயாராகின்றன. ஒருநாள் கூட்டமாக... அதாவது ஆயிரக்கணக்கில் அல்ல... லட்சக்கணக்கில் கூட்டமாக கிளம்பிச்செல்கின்றன. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதை பார்க்க முடியும். குறிப்பாக ஆறுகளை அவை கடப்பதை பார்க்கத்தான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆற்றை கடக்கும்போது சில கன்றுகள் ஆற்றிலிருக்கும் முதலைகளுக்கு பானிப்பூரியாகின்றன.
மாரா ஆற்றின் கரையில் கொஞ்சம் நிறுத்தி பார்த்தோம். நிறைய முதலைகளும் நீர் யானைகளும் உரிமைக்குரல் எம்ஜியார்-லதா போல களிப்புடன் தண்ணீரில் கையை காலை ஆட்டி விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால் இந்த மிருகங்கள் ஈஷிக்கொண்டில்லாமல் தள்ளியே இருந்தன. 4 டன் எடையுள்ள நீர்யானை தரையில் வசிக்கும் மூன்றாவது பெரிய விலங்காகும். தண்ணீரில் மூழ்கி சுமார் மூன்று நான்கு நிமிடங்கள் மூச்சுப் பிடித்து வெளியே வந்து சாவகாசமாக சுவாசிக்கக் கூடியவை. பகல் முழுக்க சாப்பிடுவது, புணர்வது, குட்டி இடுவது எல்லாம் தண்ணீரில் தானாம். மாலையிலருந்து இரவு முழுவதும் வெளியே தான். (ஓ... ஆனா மனிதர்கள் இரவில் தண்ணீரில் இருப்பார்கள்!). சுமார் 60 கிலோ எடையுள்ள புல் பூண்டுகளை ஒரே இரவில் சாப்பிடுமாம். Ruminants எனப்படும் அசை போட்டு உண்ணக்கூடிய விலங்குகள் அவை. பலம் வாய்ந்த அதன் பற்கள் கூர்மை. பக்கத்தில் போவது ஆபத்து. லபக்கென நம் கையை கரும்பு போல கடித்து துப்பி விடுமாம்.
சுமார் 4 மணிநேர பிரயாணத்திற்கு பேர் நைவாஷா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். நைவாஷா ஏரி பிரபலமானது. நாங்கள் 15 பேரும் சுமார் ஒரு மணிநேரம் படகு சவாரி பயணம் செய்தோம். சில நீர்யானைகள் மற்ற பெண் யானைகளின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து விளையாடிக்கொண்டிக்க, படகோட்டி அவைகளை நோக்கி துடுப்பை போட்டான். ‘ஐயா! அதுங்க கடலை போட்டுட்டிருக்கு. ஏற்கனவே அது நம்ம கையை கடிச்சி துப்பிடும்னு சொல்றாங்க! ரூட்ட மாத்து!’ என வேறு பக்கம் போய் விட்டோம். ஓட்டலுக்கு போய் இரவு உணவை முடித்து விட்டு குளிருக்கு இதமான Bon fire இல் ஒரு மணி நேர அரட்டைக்கு பிறகு ரூமுக்கு திரும்பினோம்.
மறுநாள் காலை மறுபடியும் மூன்றரை மணி நேர பிரயாணத்திற்குப்பிறகு அம்போசிலி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கென்யாவின் பிரபல செரினா லாட்ஜ் எனும் விடுதி. பால்கனியுடண் கூடிய தனித்தனி காட்டேஜ்கள். சுற்றிலும் காடுகள். Night Safari க்கு முன்பதிவு செய்யவேண்டுமாம். சரியாக இரவு 8 மணியளவில் 6 அடிக்கு மேல் உயரமுள்ள இளைஞன் காக்கி யூனிபார்மில் தொப்பி மற்றும் ஸ்டென்-கன்னுடன் வந்தான். துப்பாக்கி எல்லாம் எதுக்குங்க என கேட்டேன். ஹகூன மட்டாட்டா! எல்லாம் ஒரு தற்காப்பு தானே! நைட் சபாரி கொஞ்சம் ஆபத்து, காரணம் கார்ல கூட்டிகிட்டு மெயின் ரோட்டிலிருந்து பிரிஞ்சு அடர்ந்த காட்டுக்குள் போவோம். இரவில் நிறைய மிருகங்கள் வேட்டையாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரம். பசியுடன் இருப்பதால் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே இருக்குமாம். Nocturnal animals என்று சொல்லப்படும் இரவில் நடமாடும் விலங்குகளை நிறைய காட்டிக் கொண்டே வந்தான். பெரிய ஆந்தை, வில்லச்சிரிப்பு சிரிக்கும் ஹைனாக்கள், காட்டெருமைகள், யானைகள். ஜன்னல் வழியாக கொஞ்சம் எட்டி கையை நீட்டினால் சிங்கத்தை தொடும் அளவுக்கு பக்கத்தில் போய் வண்டியை நிறுத்தி டார்ச் லைட்டை அதன் முகத்தில் அடித்தான். ‘அட போய்யா! சும்மா இருப்பியா!’ என்கிற பாணியில் சிங்கம் முகத்தை திருப்பி கொண்டது. டார்ச் வெளிச்சம் அதற்கு பிடிக்காதாம். பயமாம். அதே சமயம் ஓரிரண்டு தடவைக்கு மேல் டார்ச் அடித்தால் மறுநாள் நமக்கு பால் நிச்சயம்.
இரவு உணவை முடித்துவிட்டு காட்டேஜுக்கு திரும்பும் முன் காரிடாரில் உட்கார்ந்துகொண்டு ‘கரோக்கி’யில் கிஷோர் குமார் பாட்டு பாடிக்கொண்டிருந்தோம். மணி இரவு 11.30. செக்யூரிட்டி ஓடி வந்து ‘சிங்கம் பாக்கனுமா?’ என கேட்க அடிச்சு பிடுச்சு வெளியே ஓடி வந்தோம். விடுதியின் பின்புறம் காஃபி ஷாப் இருக்கைகளில் நாங்கள் அமர, சற்று தூரத்தில் ( 20 மீட்டர் தூரமே) மின் வேலிக்கு அந்தப்பக்கம் 4 பெண் சிங்கங்கள் ‘மகளிர் மட்டும்’ பானுப்ரியா, ஜோதிகா, ஊர்வசி, சரண்யா போல சேர்ந்து மெல்ல நடந்து போனதை டக்டக்கென க்ளிக்கி, வீடியோ எடுத்தோம். அமோகமாக டீ, காபி விற்பனை வேறு. மறக்க முடியாத அனுபவம்.
நாள் முழுக்க safari செய்த களைப்பில் எல்லோருக்கும் சட்டென தூக்கம். பால்கனி கதவு பூட்டை பலமுறை ஆட்டிப்பார்த்து தூங்கப்போனோம். இரவு முழுவதும் கழுதைப்புலி, காட்டு யானை, சிங்கங்களின் உருமல் சத்தம். மின் வேலி இருப்பதால் பயமில்லை என அந்த செக்யூரிட்டி சொன்னானே! ஆனா நம்மூர் மாதிரி இரவில் கரண்ட் போச்சுன்னா அவ்ளதான். 4 மீட்டர் உயரத்தை தாண்டக்கூடிய சிங்கத்திற்கு மிட்நைட்டில் பாவ்பாஜி கிடைத்த மாதிரி. பயந்துகொண்டே தூங்கினேன். கனவில் புலி ஒன்று என் காலை கவ்வி இழுக்க, நான் கத்த முயற்சி செய்தும், ம்.ம்..என தொண்டைக்கு மேல் சத்தம் வராமல்... ‘ஏமைந்தி?’ என மனைவி உஷா தட்டியெழுப்ப, வெடுக்கென பயந்து எழுந்து உட்கார்ந்தேன். கால் பக்கம் பெட்ஷீட்டை இழுத்தது நம்ம வீட்டுப்புலி தான்.
மறுநாள் மதிய உணவை முடித்துவிட்டு பெட்டி படுக்கைகளுடன் கிளம்பி நைரோபி நோக்கி பயணம். செல்லும் வழியில் பழங்குடியினரிடமிருந்து கைவினைப்பொருட்கள், கென்யா சென்றதன் நினைவாக souvenirகள் வாங்கிக்கொண்டு மாலை நைரோபிக்குள் நுழைந்தோம். உலகிலேயே அதிக டிராபிக் ஜாம் ஆகும் நாடுகளில் ஒன்று நைரோபியாம். மயிலாப்பூர்- நுங்கம்பாக்கம் தூரத்தை அங்கு கடக்க இரண்டரை மணி நேரம் ஆனது. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிறைய பொருட்களை டிராபிக் சிக்னலில் விற்கிறார்கள். தொப்பி, கைப்பைகள், பாத்திரங்கள், மொபைல் கவர், பெல்ட், ஜீன்ஸ் பேண்ட், பக்கெட், மளிகை, பழங்கள், புத்தகங்கள் என சகலமும் டிராபிக்கின் நடுவே விற்கிறார்கள். விட்டா கட்டில் மெத்தை பீரோ கூட விப்பான் போல என நாங்கள் விளையாட்டாக பேசிக்கொண்டிருக்க, நிசமாகவே பெரிய மர பீரோ தூக்கிக்கொண்டு வந்தான் ஒருவன். பேரம் பேசி அப்படியே வண்டிக்கு மேலே போட்டு விடுவானாம்.
மறுநாள் காலை David Sheldrik Baby elephant orphanage க்கு சென்றோம். காட்டில் வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் அனாதை குட்டிகளுக்கு ஆதரவளிக்குமிடம் அது. 2 மாதம் முதல் 1 வருட வயது குட்டி யானைகளை அங்கு வளர்த்து அன்பு செலுத்துகிறார்கள். சிலவைக்கு குளிர் தாங்க முடியாதென்பதால் திக்கான போர்வையால் போர்த்தி கூட்டி வருகிறார்கள். அந்தந்த யானைக்குட்டிகளின் பெயரை சொன்னதும் அவை முன்னே வர, மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்க, அது பெரிய்ய பாட்டிலில் பால் குடிக்கிறது. சின்ன குழந்தைகள் போல துறுதுறு. நம்மை பார்த்து துதிக்கை ஆட்டி, பக்கத்தில் செம்மண்ணில் புரண்டு மற்ற குட்டிகளின் மேல் குதிக்கிறது. சிலர் கண்களை துடைத்துக்கொண்டே படமெடுத்தார்கள். நாமும் தத்து எடுத்துக்கொண்டு பணம் கட்டிவிட்டால் நம் பெயரில் அதை வளர்க்கிறார்களாம். ஓரளவு பெரிய யானையாக வளர்ந்த பின் மறுபடியும் காட்டில் விட்டுவிடுகிறார்கள். அவ்வப்போது காட்டிற்கு போய் சத்தமாக அதன் பெயர் சொல்லி அழைத்தால் அழகாக வந்து பார்க்குமாம்.
பாலாஜி, சுவாமி நாராயன் மந்திர் கூட்டிப்போனார்கள். பிரம்மாண்டமான கோவில்கள். ஆசியானா உணவகத்தில் அருமையான குஜராத்தி தாலி. தால் கிச்சடி+கடி சூப்பர். அங்கு வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலோர் குஜராத்திகள்.
மசாய் மாரா பயணத்திற்கு கூடுதலாக ஒரு வண்டி, முதல் நாள் காலை உணவு, கடைசி நாள் இரவு உணவு என நிறைய இலவசங்கள் மற்றும் விமானம் பிடிக்க கிளம்பும் முன் எல்லோருக்கும் பரிசு பொருட்கள் அளித்த கீதா சத்தியமூர்த்தி தம்பதிகளின் விருந்தோம்பல் மறக்க முடியாது.
ஹகூன மட்டாட்டா (no worries!)