Sunday, November 12, 2017

எலி

'Hey! there is a rat in my room' கத்தியபடி ஓடி வந்தான் பெரியவன். மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் எலும்பு முறிவுடன் அதிர்ஷ்ட வசமாக தப்பி, ஓய்வெடுக்க பெங்களூரிலிருந்து பஹ்ரைன் வந்திருக்கிறான்.
'கரெக்ட்! நேத்திக்கி ஏதோ குறுக்கே ஓடுன மாதிரி இருந்தது. அப்ப நம்ம வீட்ல எலி இருக்கு போல'- மனைவி உஷாவும் சொல்ல..
வாட்ச்மேன் சஹதேவ்வை அழைத்தோம். பகல் வாட்ச்மேன் அவன். ஆபத்பாந்தவன் மாதிரி எல்லாவற்றுக்கும் பதட்டமில்லாமல் ஓடி வருவான். காஸ் சிலிண்டர் வாங்கி வைப்பது, பூ பறித்து கொடுப்பது, டியூப்லைட், ஷவர் மாற்றுவது போக மற்ற நேரங்களில் கைப்பேசி, கைராலி, ஏசியாநெட் தான்.
நேரே உள்ளே வந்து வந்து கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்தான். 'ஒந்நும் காணுந்நில்லா! ராத்திரி பொறத்தே வரும்.. பின்னே நோக்காம்' என நகர்ந்தான்.
பெரியவன் அதற்குள் ஒரு அட்டை டப்பாவை கொண்டு வந்து கட்டிலுக்கு கீழே வைத்தான். டப்பாவின் மூடியை இரண்டு பக்கமும் உட்பக்கம் சரிந்த மாதிரி மடக்கி வைத்து, உள்ளே ஏதோ பதார்த்தத்தை வைத்து, எலி டப்பாவின் மேற்பரப்பில் ஏறினால் சரிந்து உள்ளே விழும் ஆனால் வெளியே வர முடியாது என விளக்கமும் அளிக்க அவனை 'அடப்போடா!' என எ(ல்)லி.. சாரி.. எள்ளி நகையாடினோம்.
பொதுவாக எலியை மசால்வடை வைத்து தானே எலிப்பொறியில் பிடிப்பார்கள்!. 70 களில் திருச்சி தென்னூர் பென்ஷனர் கார தெருவில் எங்கள் வீட்டில் எலிகள் நடமாட்டம் அதிகம். அதுவும் பெருச்சாளிகள். கம்பளி மாதிரி தோல். கிச்சன் கதவை மூடிக்கொண்டு கையில் கம்புடன் அப்பா உள்ளே எலியை டமார் டமார் என அடிக்க அண்டா குண்டா தேக்சா எல்லாம் உருளும் சத்தம். பெரிய அடுக்களை அது. பத்து பெண்கள் வட்டமாக கும்மியடித்து ஆடலாம். அதனால் எலி அப்பாவை கபடி ஆட வைக்கும். கதவை லேசாக திறந்து நானும் என் தம்பியும் உள்ளே புகுந்த சில நிமிடங்களில் மறுபடியும் டமார் டமார் சத்தம். அது எலிக்கல்ல. எங்களுக்கு. அடி வாங்கிய படி வெளியே ஓடி வருவோம்.
மூலக்கொல்லை தெரு மளிகைக்கடை கணேசன் எலியை தேங்கா சில்லு வைத்து பொறியில் பிடிப்பான். உடனே கவனமாக கோணிப்பையின் வாயில் எலிப்பொறியை நுழைத்து சாக்கிரதையாக எலியை கொட்டி, பட்டாபிராம பிள்ளை தெருவே அதிர ரோட்டில் சாத்தி, பின் செத்த எலியை கடாசுவான். உண்மையிலே அவன் கில்லாடி! ரிஎலி!
பொதுவாக எல்லா எலிகளும் நைட் டூட்டி தான் பார்க்கும். அதனால் எலிதாக... ச்சீ... எளிதாக நம் கண்ணில் படுவதில்லை. வயல்வெளிகளில் எலிகள் வளை கட்டிக்கொண்டு குடியிருக்கும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வளையை திறக்காமல் மண்ணால் அடைத்து வைத்திருக்குமாம். எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக மண்ணை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளுமாம். (தகவல்: வளையிலிருந்து.. மன்னிக்க.. வலையில் இருந்து!)
மாலை எங்கள் ஆபிஸ்பாய் லத்தீஃப் எலிப்பொறி கொண்டு வர, பெரியவன் அதை எடுத்து பார்த்தான். இரும்புப்பொறி. கூர்மையான முட்களால் மாட்டும் எலி உடனே இரத்தம் சிந்தி செத்துப்போகும். எலியைக்கொன்று விடும் எலிப்பொறியெல்லாம் வேண்டாமென அவன் சொல்லிவிட, லத்தீஃப் உடனே மரப்பெட்டி பொறியை கொண்டு வந்து வைத்துவிட்டுப்போனான். பிடித்தவுடன் அதை உயிருடன் வெளியே விட்டுவிட வேண்டுமாம். பெரியவன் தீர்க்கமாக சொன்னான்.
அடுத்ததாக வாட்ச்மேன் சஹதேவ் மனாமாவிலிருத்து ஏதோ பசை உருண்டை கொண்டு வந்தான். அது தான் எலியை பிடிக்குமாம். ஒரு பிளாஸ்டிக் தட்டில் அந்த பசையை வைக்க, திரும்ப அதை பிய்த்து எடுக்க முடியவில்லை. கட்டிலுக்கடியில் அதை தள்ளினான். குனிந்து கட்டிலின் அடிப்பாகம் பார்த்தேன். பெரியவன் வைத்த அட்டை டப்பா, லத்தீஃப் வைத்த எலிப்பொறி மற்றும் சஹதேவ்வின் பசை உருண்டை என அந்த இடமே திருச்சி சத்திரம் பஸ்டாண்டு மாதிரி இருந்தது.
அந்த பசை எலியை ஈர்க்குமாம். எலி வந்து அந்த வஸ்துவை ருசி பார்க்கும்போது அதன் காலோ உடலோ பசையில் பச்சக்கென ஒட்டிக்கொள்ளுமாம். ஆனால் எலி சாகாதாம்.
பொதுவாக எலி சுவற்றை ஒட்டி தான் ஓடுமாம். அறையின் குறுக்கே ஓடாதாம். அங்கங்கே துணி வைத்து தடுத்திருந்தான் பையன்.
ஆச்சு.. டெய்(எ)லி பையன் ரூமுக்கு போகும்போதெல்லாம் நானோ, மனைவி உஷாவோ குனிந்து கட்டிலுக்கடியில் பார்ப்போம். இரண்டு நாட்களாகியும் எலி வந்த பாடில்லை. இரவில் மட்டும் கரக் கரக் சத்தம் வருவதாக பெரியவன் சொல்லிக்கொண்டிருந்தான். மரப்பொறியிலும் அட்டை டப்பாவிலும் எலிக்கான பண்டத்தையும் மாற்றினான்.
நேற்று ஆபிஸ் முடிந்து வீட்டின் வாசலில் காரை நிறுத்தும்போது சஹதேவ் அந்த பசைத்தட்டுடன் 'எலி'கன்ட்டாக வெளியே வந்தான். பசையுடன் ஒட்டி படுத்தவாக்கில் எலி.
'எலி கிட்டி...' முகம் நிறைய சந்தோஷம் அவனுக்கு.
'அய்யய்யோ செத்து கித்து போய்டலையே'- பயம் எனக்கு. பெரியவன் வேறு கண்டிப்பாக சொல்லியிருந்தான் எலியை உயிரோடு தான் பிடிக்க வேண்டுமென.
'அல்ல.. மரிச்சிட்டில்லா.. ஜீவனுண்டு'- சஹதேவ் எலியை விரலால் தட்டினான்.
மிகவும் சின்ன எலி..பார்க்க அழகாக துறுதுறுவென இருந்தது. அழகான உருண்டை கண்கள். பிங்க் நிற குட்டிக்கால்கள். வயிற்றுப்பகுதியும் பிங்க் நிறம். கொஞ்சம் சோர்ந்திருந்தது. ஆனால் இன்ட்(எ)லிஜென்ட்! . உடம்பில் மொசமொசவென அதிகம் அடர்த்தியில்லாத ரோமம்.
பெரியவன் ஆசையாக அதை தொட்டுப்பார்க்க, எலி பயத்துடன் துள்ளியது லேசாக கீச் கீச் சத்தத்துடன். பசையை தட்டிலிருந்து எடுப்பதே கஷ்டமாக இருந்தது. பசை உருண்டையை கட்டிப்பிடித்தபடி எலி பரிதாபமாக படுத்துக்கிடந்தது.
'என்னப்பா சஹதேவ்? இப்ப எப்பிடி எலியை பசையிலிருந்து பிரிச்சி எடுப்பே?' என கேட்டேன். பெரியவன் முகத்திலும் கவலை.
'ஒந்நுந்செய்யாம் பற்றில்லா சாரே'- சஹதேவ் ரூமில் சென்ற வாரம் எட்டு இடத்தில் பசையுடன் எலிகளை பிடித்தானாம். 'ஈ எலிய தூக்கிக்களையனும்' என்றவனை தடுத்து..
'ஐயோ! பாவம்பா! வேணாம். பசையை அப்பிடியே எலி உடம்புல இருந்து பிச்சு எடுக்க முடியாதா' - பெரியவன் சோகத்துடன் கேட்டான்.
'அல்ல.. எலியிண்ட தோலும் வரும்'- கேட்கவே பகீரென்றது.
அந்த சின்ன எலி கண்களை பெரிதாக திறந்துகொண்டு ஒருக்களித்து படுத்து கிடக்க வயிறு மட்டும் சீராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.
'பேடிச்சுப்போயி!'- சொல்லிக்கொண்டே எலியுடன் கிளம்பிப்போன சஹதேவ் நேராக குப்பைத்தொட்டியில் அந்த குட்டி எலியை உயிரோடு தூக்கியெறிந்தான்.
எலிப்பொறி மரப்பெட்டியை லத்தீஃப் திரும்ப எடுத்துக்கொண்டு போனான்.
சட்டென வீட்டில் ஒரு வித மௌனம் நிலவியது. எலியின் அழகான முகம் அப்பப்ப வந்து போனது.
பி.கு 1: இன்று காலை பெரியவன் அறையில் அவன் வைத்திருந்த அட்டை டப்பா அப்படியே இருந்தது. ஆனால் கவிழ்த்து வைத்திருந்தான். எலி வந்தாலும் இனி மாட்டாதாம்.
பி.கு 2: அநியாயமாக சின்ன எலி ஒன்றை கொன்றதற்கு பிராயச்சித்தமாக, ஓரிரு மணி நேரம் உட்கார்ந்து எலியின் பென்சில் ஓவியம் ஒன்று இதோ!..

RBI மாமி மெஸ்...


1987.. செம்பூர் ரயிலடியிலிருந்து பத்தே கட்டிடங்கள் தள்ளி ரோட்டோர கேலா, சிக்கூ வண்டிகள் கடந்து கொவாண்டி ரோட்டில் பெயின்ட் உதிர்ந்த கொஞ்சம் பழைய 'திருமூர்த்தி பில்டிங்'கில் தான் எனக்கு ஜாகை. சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். ஆனால் கிச்சன் நமக்கு இல்லை. வீட்டு ஓனர் மாமி தன் வீட்டு சாமான்களை கிச்சனில் வைத்து பூட்டி வைத்திருந்ததால் சமைக்க முடியாது. முதன்முதலில் வேலைக்கு பம்பாய் வந்த புதிது. சொற்ப சம்பளம். சிக்கனமாக இருக்க வேண்டி மெஸ்ஸில் தான் சாப்பிட முடியும்.
காலை செம்பூரில் ரயில் பிடித்து குர்லா மற்றும் தாதரில் ரயில் மாறி மாடுங்கா கன்செர்னில் எட்டு மணி வாக்கில் நுழைந்து என்னைப்போல ஏழெட்டு பேருடன் வாழை இலை முன் அமர்ந்தால் சுடச்சுட சாதத்தில் சேனை விழுது-தேங்காய்-மிளகு அறச்சு விட்ட திக்கான குழம்பும் ஒரு கூட்டும், சற்றே புளித்த மோரும்.. திவ்யமான சாப்பாடு. அப்பத்திக்கி வயிறு நிரம்பி விடும். ஆனால் அங்கிருந்து வெஸ்டர்ன் ரயில்வே வந்து பாம்பே சென்ட்ரல், கிராண்ட் ரோடு அடுத்து சர்னி ரோட்டில் இறங்கி ஆபிஸ் போய்ச்சேரும்போது லேசாக பசி எடுக்க ஆரம்பிக்கும். சாப்பாட்டு விஷயத்தில் என்னை 'பக்கி.. பக்கி' என அம்மா திட்டுவது அவ்வப்போது நினைவுக்கு வரும்.
ஞாயிறன்று சயான் மணிஸில் உ.கி கறி, வெ.சாம்பார் சாப்பாட்டுக்காக மெஸ் வாசலில் வரிசையில் அரை மணி நேரம் தேவுடு காக்க தயங்கியதேயில்லை. சில சமயம் அவசரத்திற்கு செம்பூர் ஜீவன் மெஸ்ஸே உத்தமம். நெய் தெளித்த ரெண்டு சுக்கா சப்பாத்தி, சின்ன தட்டில் அரிசி, சற்றும் அலுக்காத (மெஸ் நடத்தும் ஷெட்டிக்கு) குந்துரு சப்ஜி (கோவைக்காய் பொறியல்), லேசா கிருஷ்ணாயில் வாசனையோடு தால் எல்லாம் சேர்த்து வெறும் நாலு ரூபாய்க்கு. சினிமா பார்த்து விட்டு லேட்டாக வந்தால் திருநெல்வேலி அண்ணாச்சி ரோட்டுக்கடை இட்லி தோசை பரோட்டா தான்.
அப்போது தான் RBI மாமி மெஸ் பற்றி கேள்விப்பட்டோம். சக நண்பன், பார்க்(BARC)கில் வேலை செய்யும் தக்கலை பத்மநாபன் மற்றும் கம்பெனி செக்ரடரி சந்துரு (Balasubramaniam Chandrasekaran) மூலம் மாமி மெஸ்ஸில் சேர்ந்தேன். அதென்ன RBI மாமி? கொஞ்சம் இருங்க..
காலை 8 மணிக்கு கிளம்பி, ரயிலை பிடிக்க எதிரே கூட்டமாக வரும் தேவ்ளேக்கர், ஜோஷி, தேஷ்பாண்டேக்களை தாண்டி, கட்டிங் சாய் கடைகள், உ.பி பை(h)ய்யாக்களின் மாருதி சைஸ் இஸ்திரி (பெட்டி) கடை, தேவி மந்திர், தொளதொள காக்கி ட்ரவுசர் வெள்ளை சட்டை RSS தாத்தாக்களை கடந்து தெருக்கோடியில் RBI குவார்ட்டர்ஸுக்குள் நுழைவோம். எல்லாம் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்கள். அங்கே தான் மாமி மெஸ் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதான் RBI மெஸ் மாமியென நாமகரணம்.
முதல் மாடியில் ஒரு ஃப்ளாட். சிறிய ஹால். பத்து பதினைந்து பிரம்மச்சாரிகள் சாப்பிட்டுக்கொட்டிருக்க, கிச்சனிலிருந்து எங்கள் தட்டுக்களை எடுத்து அலம்பி ஹாலில் வந்து அமர்வோம். பெரிய பாத்திரத்தில் இட்லி, பக்கத்தில் சாம்பார், சட்னி இருக்க, சர்.. சர் என பாத்திரங்களை தங்கள் பக்கம் இழுத்து இட்லி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.
மாமாவுக்கு ஃபோர்ட் பகுதியில் ரிசர்வ் வங்கியில் சீனியர் ஸ்டெனோக்ராஃபர் ஜோலி. பாலக்காட்டுக்காரர். சிகரெட் வலித்த தடித்த சுண்டு (உதடு). டிட்வாலா ட்ரெயினில் தினமும் 'பத்தா' (சீட்டு) விளையாடும் பார்ட்டி. வீடு வந்து சேர இரவு பத்து மணியாகும். மாதா மாதம் சம்பளம் அவர் கைக்கு வந்தாலும் ஒரு காசு வீட்டிற்கு வராது. அதனால் தான் மாமி மெஸ் நடத்தும் நிலை.மாமி மற்றும் கல்லூரியில் படிக்கும் அவரது பெண் ராஜி அடுக்களையில் தான் இருப்பார்கள். CA படிக்கும் ஒரே பையன் விக்னேஷ் உள்ளே படுக்கையறையில் படித்துக்கொண்டிக்க அந்த வீட்டில் சதா கூட்டமாக இருக்கும்.
சிலர் ஆர்.பி.ஐ. குடியிருப்பு வளாகத்தில் அந்த மெஸ் நடத்தவதை எதிர்த்து புகார் அளித்தும், மாமி வங்கி மேலிடத்தில் போய் அழுது, மாமாவின் செய்கையால் அவர்கள் இரக்கப்பட்டு மெஸ் நடத்த எழுத்தப்படாத அனுமதி கிடைத்தது.
அங்கே சாப்பிடும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை. பாலக்காடு கொடுந்திரபள்ளி வெங்கடேசன் லோயர் பரேலில் சிந்தி கம்பெனியில் கிரெடிட் கொண்ட்ரோலராக்கும். 'நம்மட அப்ரூவல் இல்லெயெங்கில்.. (இட்லியை சாவகாசமாக முழுங்கி).. சாதனம் ஒந்நும் டெலிவரி செய்யாம்பற்றில்லா.. அறியோ!'.. என அவன் பேச ஆரம்பித்தால் எல்லோரும் தலை தெறிக்க கை அலம்ப ஓடுவார்கள்.
சாத்தபுரம் ராமேந்திரன்(ராமச்சந்திரன்), கவில வாழப்பில் பாலஷ்ணன்(பால கிருஷ்ணன்), சோமட்டா (சோமன் அண்ணா) என விதவிதமான பெயர்கள். கழுத்து எலும்பு துறுத்திக்கொண்டு படு ஒல்லியான பசங்கள். அத்தற ஆள்கார்ரும் ஸ்டெனோ அல்லது அக்கவுண்டன்ட்டுகள். செட்டாநகர் முருகன் கோவிலில் தினமும் நாராயணீயம் படிப்பவர்கள். அதில் ஒருவன் ரொம்ப பயந்த சுபாவம். ஆயாளு வயசுப்பெண்கள் எதிரில் வந்தால், புள்ளி.. வெட்கத்துடன் பட்டந்நு ரோட்டை க்ராஸ் ச்செய்யும்.
புதிதாக வந்த கிருஷ்ண குமார் நம்பூதிரி சாம்பாரை கரண்டியால் கலக்கி கலக்கி பார்க்க, குறும்புக்கார தஞ்சாவூர் பையன்களுக்கு ஒரே சிரிப்பு. 'தம்பி நம்பூதிரி! உன்னோட நம்பிக்கைய பாராட்ரோம். ஆனா நீ எவ்ளோ கலக்குனாலும் சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்' என வெடிச்சிரிப்பு சிரிக்க, 'ஆமான்டா! நாளைலேர்ந்து பாண்டி பசங்களுக்கு அதுவும் கிடையாது' என மாமியின் சத்தம் கிச்சனிலிருந்து கேட்கும். எப்போதும் கிண்டல், சிரிப்பு தான் அங்கே. இரவு எவ்வளவு லேட்டாக வந்தாலும் மாமி சாப்பாடு வைத்திருப்பார்கள். முகம் சுளிக்காமல் எல்லோரையைம் பார்த்துக்கொள்வார்கள். பேயிங் கெஸ்ட் என நாலு பேர் அங்கேயே தங்கியிருந்தார்கள்.
எல்லோரும் எட்டரை மணிக்குள் அவசரம் அவசரமாக சுவர் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். காரணம் எட்டரை மணிக்கு பிரேமன் வந்து சாப்பிட உட்கார்ந்தால் அப்புறம் மற்றவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது. சிவந்த மேனி, நெடுநெடுவென உயரம், திடகார்த்தமாக ஜிம் பாடியுடன் அடர்த்தியான மீசையுடன் மலையாள நாயகன் போல வருவான் பிரேமன். இட்லி பாத்திரத்தை அப்படியே தட்டில் கவிழ்த்து, அட்ய டயத்தில் பத்து பன்னிரண்டு இட்லிகளை கொட்டி, சாம்பார் சட்னியை பாத்திரத்துடன் தட்டில் சாய்த்து, முழு இட்லியை சாம்பாரில் முக்கி, மாயாபஜார் ரங்காராவ் மாதிரி லபக்கென வாயில் போட்டு விழுங்குவான். சி.சி. சோக்ஸி ஆடிட் ஃபர்மில் வேலை செய்யும் இளம் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் அவன். யாரிடமும் அதிகம் பேசாமல் சாப்பிட்டவுடன் இடத்தை காலி செய்பவன்.
மதியத்துக்கும் டப்பா கட்டிக்கொண்டு போகும் பேச்சுலர்கள் உண்டு. இரவு சாப்பாடு ஏழு மணியிலிருந்து ஆரம்பம். அறைச்சு விட்ட சாம்பார், ஒரு கூட்டோ பொறியலோ, ரசம், மோரென முழு சாப்பாட்டிற்கு மாத இறுதியில் மாமி வாங்கும் பணம் ரொம்ப சொற்பம். பண்டிகையன்று முளகூட்டல், எரிசேரி, புளிசேரி, ஓலன், மோர்க்குழம்பு, அடப்பிரதமன், பால் பிரதமன் என வெரைட்டியான சாப்பாடு. தனியாக அதற்கு காசெல்லாம் கிடையாது.
இளம் வயசுப்பையன்கள் அங்கேயே உட்கார்ந்து அரட்டை அடிப்பதால் பையன் விக்னேஷுக்கு இதெல்லாம் இஷ்டமில்லை. மாமியின் பெண் ராஜி அடுக்களையிலேயே கிடப்பள். 'இந்த மெஸ்ஸை நீ எப்ப நிறுத்தப்போறாய்?' என அம்மாவிடம் சண்டை போடுவள்.
அடுத்த வருடம் வேலை மாற்றம், தங்குமிடத்தை செட்டாநகருக்கு மாற்றியதால் நாங்கள் மெஸ்ஸில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். நாரிமன் பாயின்ட் ஆபிசிலிருந்து கிளம்ப லேட்டானால் சில சமயம் நேராக கால்பாதேவியில் பெருமாளை சேவித்து விட்டு பக்கத்தில் குஜராத்தி மெஸ் போவோம். கையிலும் கொஞ்சம் காசு புழங்க ஆரம்பித்த நேரமது. சுடச்சுட ஃபுல்கா ரொட்டிகளை நம் எதிரே பெரிய்ய்ய்ய தட்டில் ஒருவன் போட.. தட்டா அது? சைக்கிளே நிறுத்தலாம். பின்னாலேயே இன்னொருத்தன் வஞ்சனையில்லாமல் நெய்யை சுழட்டி சுழட்டி ஊற்றுவான். அடுத்து எண்ணெய் சொட்ட உந்தியா, பிந்தியா என சப்ஜிகள், பாசுமதி அரிசி வகையரா.. வயிறு முட்டி மூச்சு வாங்க சிரமப்பட்டு எழும்போது ஜீரா சொட்டச்சொட்ட ஜிலேபியை வைப்பான்கள் படுபாவிகள்.
RBI மாமி மெஸ்ஸை சுத்தமாக மறந்து போனோம். ஒருநாள் மாமிக்கு உடம்பு முடியாமல் சீரியசாகி மெஸ்ஸை தற்காலிகமாக நிறுத்தி ஒரு மாதம் பைகுல்லா ஆஸ்பத்திரியில் இருந்ததாக கேள்விப்பட்டோம். அதைக்கேட்டு அத்தற கேரளா பையன்களும் ரொம்ப வருத்தமாம் (மெஸ் இல்லாததால்). ராமேந்திரன், சோமட்டா எல்லோரும் ஜீவன் மெஸ்ஸுக்கு மாற, பிரேமன் ஓரிரு கிலோ குறைந்து விட்டானாம்.
சில வருடங்கள் கழித்து ஒருநாள் செம்பூர் அகோபில மடம் அருகே மாமியின் பையன் விக்னேஷை தற்செயலாக பார்த்தேன்.
' அண்ணா! சௌக்கியமா' என விஜாரித்தான். சி.ஏ பாஸ் செய்து ஜே.எம். பக்‌ஷி கப்பல் சேவை கம்பெனியில் பணியாம்.
அவனுக்கு பின்னால் கைக்குழந்தையுடன் இளம் பெண். அட! அவன் தங்கை ராஜியா இது? மாமி கஷ்டப்பட்டு பெண்ணுக்கும் கலியாணம் செய்து வைத்து விட்டாளே!
'அம்மா அப்பா எப்பிடி இருக்காங்க? மெஸ் எப்பிடி போகுதுப்பா?'
'மெஸ்ஸெல்லாம் பந்து பண்ணியாச்சுண்ணா. அப்பாவால நிக்க முடியல. கழிஞ்ஞ ஆழ்ச்சி அவருக்கு அப்பென்டிசிட்டிஸ் ஓப்பரேஷன். 'பத்தா' வெளையாட்டையும் விட்டூட்டு ரிடையர்மென்ட் வாங்கிண்டாச்சு'
'நின்னுகிட்டே தானே டிரெய்ன்ல பத்தா வெளையாண்டார்! அதான் விதி ஒரேயடியா வெளையாடி அவரை ஒக்கார வச்சிருச்சு. சரி.. பென்ஷன் வர்தா?'
'உம்.. இப்பல்லாம் பென்ஷனையும் அம்மா கிட்ட கொடுத்துடறார்'
கேட்க சந்தோஷமாக இருந்தது. மாமியின் உழைப்பும் நல்ல மனதும் அந்த குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டது.
ராஜி அநியாயத்துக்கு ஒடிசலாக இருந்தாள். ஆனால் குழந்தை நல்ல புஷ்டி.. என்னை பார்த்து கிக்கி என அழகாக சிரித்தது. சட்டென ப்ரீஃப்கேசை திறந்து மாரி பிஸ்கட் ஒன்றை எடுத்து குழந்தையிடம் நீட்....
வெடுக்கென என் கையிலிருந்து பிடுங்கி முழு பிஸ்கட்டையும் லபக்கென வாயில் போட்டுக்கொண்டது.
'பிராந்து.. பிராந்து! மெல்ல சாப்பிடு.. முழு பிஸ்கட்டையும் அப்பிடியே வாயில போட்டுண்டுட்டாய் நீ..!'
செல்லமாக Delhi Ganesh போல குழந்தையை அதட்டினாள் ராஜி.
'குழந்தை பேரென்னம்மா?'
'அஷ்வின்.. அஷ்வின் பிரேமன்'

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இரவு பத்து மணிக்கு மேல் திருச்சி தெப்பகுளம் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டிலிருந்து அப்பா வாங்கி வந்த துப்பாக்கி, கேப், பட்டாசையெல்லாம் தம்பியுடன் பிரித்துக்கொண்டு, படுக்கப்போகும் முன் இன்னொரு முறை சரி பார்க்கும் சுகம் எங்கே?
வெடிக்காம புஸ்ஸான பட்டாசையெல்லாம் ரோட்லர்ந்து பொறுக்கி அத பிய்ச்சி மருந்தையெல்லாம் சேர்த்து போட்டு பத்த வச்சி ஒரே செக்கண்டுல எறிஞ்சி போறத பாக்கற சுகம் எங்கே?
பக்கத்து வீட்டு பையன் அனுகுண்டு திரி நுனிய பிச்சி, பயந்துகிட்டே கைய நல்லா நீட்டி ஊதுபத்தியால பத்த வைக்கறப்ப, தூரத்துல இருந்து நாம 'டமார்'னு சத்தம் போட்டு அவனை தலை தெறிக்க ஓட வைக்கிற சுகம் எங்கே?
வெள்ளாட போறப்ப வர்றப்பல்லாம் சாமி ரூம்ல தூக்குச்சட்டிலர்ந்து அதிரசத்த எடுத்து சாப்ட்டு சாப்ட்டு வயித்த கலக்கி மறுநா பிச்சுகிட்டு போற சுகம் எங்கே?
'தரைல இருந்து பாம்பு எப்பிடி வருது'ன்னு ஆச்சரியப்பட வைத்த பாம்பு மாத்திரையெல்லாம் எங்கே?
'லக்ஷ்மி வெடிய பத்த வச்சு கைல வெடிச்சிக்கிட்டு ஊதுபத்திய தூக்கி போட்டுட்டேன்'னு கையெல்லாம் புண்ணாகி கட்டோட ஸ்கூலுக்கு வரும் யாராவது ஒரு ஃப்ரெண்டு எங்கே?
சூடான கம்பி மத்தாப்பு கம்பிய தண்ணில வுட்டு 'சொய்ங்' சத்தத்த ரசிக்கற சுகம் எங்கே?
ரோட்ல பசங்க வெடி வெக்கறத பாத்து நாம சைக்கிள நிறுத்திட்டு காத்திருக்கறப்ப, வெடி வெடிக்காம இருந்ததால 'சரி போயிடலாம்னு' பெடலை அழுத்தி தாண்டி போறப்ப 'டமார்'னு வெடிச்சி கீழ விழுந்து முழங்கால் காயத்துக்கு மஞ்சத்தூள் போடற சுகம் எங்கே?
சங்கு சக்கரத்த நாம பத்த வச்சி அது சர்ர்ருன்னு சுத்திகிட்டே எதிர்ல வேடிக்கை பாத்துகிட்டிருந்த பக்கத்து வீட்டு தாத்தா கால் ஊடால போய், அடுத்த நிமிசம் நின்னவாக்குலயே அவரு டக்கரா ஒரு டான்ஸ் ஸ்டெப்பு போடறத பாக்கற சுகம் எங்கே?
நோம்புக்கு செஞ்சி தாம்பாளத்துல அடுக்கி வச்சிருந்த அதிரசத்த அவசரமா எடுத்து சாப்ட்டு, தொபேல் தொபேல்னு முதுகுல அடி வாங்கற சுகம் எங்கே?
காலைல 4 மணிக்கு காலி பாட்டில்ல ராக்கெட்ட வச்சு பத்த வெச்சவுடனே அது வரைக்கும் நின்னுகிட்டிருந்த ராக்கெட் சரிஞ்சி திடீர்னு எதிர் வீட்டு திண்ணைக்குள்ளாற ஓடி, போத்திகிட்டு தூங்கிக்கிட்டிருந்த அந்த வீட்டுக்காரர் அந்நேரத்துக்கு உதிர்த்த கெட்ட வார்த்தைகள் எங்கே?
தீபாவளி முடிஞ்சி ரோட்ல இருந்து வெடிக்காத கேப் எல்லாம் எடுத்து திண்ணைல ஒன்னுக்கு மேல ஒன்னா நாலைஞ்சு கேப்பை அடுக்கி வச்சி, கரெக்ட்டா பாட்டி வெளிய வர்றப்ப சுத்தியால படார்னு அடிச்சி 'கடங்காரா! போய்த்தொல அந்தப்பக்கம்'னு திட்டு வாங்கற சுகம் எங்கே?
கடைசியில் 'இது வரைக்கும் வெடிச்ச பட்டாசு போதும். மீதிய கார்த்திகைக்கு வச்சுக்கலாம்' என பிடுங்கி அம்மா பரணியில் வைக்கும் போது ஏற்படும் துக்கம் எங்கே?
நடுத்தர வர்க்கத்தினரின் பழைய தீபாவளி நினைவுகளை கிளறி எழுதியிருந்த நண்பர் Ganesan Ramamoorthy அவர்களின் பதிவை பார்த்தவுடன் எனக்கும் ஏற்பட்ட தாக்கம் தான் மேற்படி பதிவு..
அந்த நாட்கள் இனி வருமா!.
இன்று?
சாலமன் பாப்பையா மற்றும் ராஜா பட்டி மன்றங்கள் ரசித்து முடித்து, டீவியில் வன்முறை படம் ஒன்றை பார்த்து, மனாமா ஜுமா ஸ்வீட்ஸில் அரை அரை கிலோவாய் வாங்கிய ஏழெட்டு ஸ்வீட்டு டப்பாக்களையும் சான்ட்விச் பைகளில் கொட்டிய மிக்சரையும் பக்கத்து வீட்டு வடநாட்டவர்களுக்கு கொடுத்த கையோடு 'ஆப்கோ கல் தீவாலி ஹெனா?' என கேள்வியையும் இயந்திரமாக கேட்டு, மாலை சீஃப் மாலில் நாச்சோ மற்றும் பனானா ஸ்மூதியுடன் பாடாவதியான 'மெர்சல்' படத்தை மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு, இரவு சாம்பார் சாதத்திற்கு முறுக்கும் தயிர் சாதத்திற்கு மிக்சரும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு ஜெலுசில் போட்டுக்கொண்டு தூங்கப்போவதோடு தீபாவளி முடிந்துவிடும்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

புத்தூர் அக்ரஹாரம்...


திருச்சி புத்தூர் ஸ்ரீனிவாசன் எனது தம்பி விஜயராகவனின் (Vijay Raghavan) பள்ளித்தோழன் (நேஷனல் ஹை ஸ்கூல்).. பாதி நேரம் என் தம்பி அவன் வீட்டிலோ அல்லது அவனுடன் பக்கத்தில் இருக்கும் அருணா தியேட்டரில் இருப்பான்.
புத்தூர் போஸ்ட் ஆபிசை ஒட்டி இடதுபுறம் வாழை இலை, வா.தண்டு, கொடிக்கா வெத்திலை விற்பவர்களுக்கு நடுவே குறுகலான ரோட்டில் நுழைந்தால் சிறிது தூரத்தில் இருபுறம் சுமார் 50 குடித்தனங்களே கொண்ட சின்ன அக்ரஹாரத்தில் 17ஆம் நெம்பர் வீட்டில் ஶ்ரீனிக்கு ஜாகை. எல்லாமே அகண்ட பட்டாசாலை கொண்ட வீடுகள். ஈரமான வாசலை அடுத்து கருங்கல்லால் கட்டப்பட்ட விசாலமான தின்னை, தூண்கள், ரேழி மற்றும் பெரிய கதவுகள் கொண்ட வீடு. கீற்றுப்பந்தல் அல்லது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி காரை பூசப்பட்டு சீராக வேயப்பட்ட மண் ஓடுகள் கொண்ட கூரைகள். கூரைக்குப்பின்னால் இரண்டு அடுக்கு மாடி (படம் பார்க்க)
70 களில் என நினைக்கிறேன்... காலை 6 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு போனால் வாசலில் அங்கங்கே ராலே, ஹெல்குலிஸ் சைக்கிள்கள். வேட்டி, கைலி சகிதம் கையில் காகிதங்களுடன் பத்து பதினைந்து பேர் காத்திருப்பர்.
டானென்று மணி 7 அடிக்க, உதவியாளர் வாசலிலிருக்கும் கருப்பு பெஞ்சை துடைத்து வீட்டினுள்ளே பார்வையை செலுத்த...
"கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்....".
ஓங்கிய குரலில் பாடியபடி நெற்றியில் பெரிய திருமண்ணுடன் ஶ்ரீனிவாசனின் தாத்தா வெளியே வருவார். கிராம முன்சீப்பு அல்லது கர்ணம் என்று ஞாபகம். அப்போதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) போன்ற பதவிகள் இல்லை.
சிறுகாலைப்பொழுதில் ஸ்நானஞ்செய்து பூசை முடித்து வரும் அவரின் மாலியக் கோலமும், மனத்தைப் புத்துணர்வு ஏற்படுத்திப் பொலிவுறச் செய்து அவர் தினம் பாடும் ஆழ்வார்தம் பாசுரங்களும் கேட்க இனிமை. பாசுரங்களை பாடிப் பரப்பும் பசனைக் குழுக்களிலிலும் அவர் இருப்பதால் கீர்த்தி பெற்ற குரல் அவருடையது.
உதவியாளர் நம்மை ஒவ்வொருவராக அழைத்து நாம் கேட்கும் ஜாதி சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழ்களை வித்தியாசமான தமிழில் எழுதுவார். பெருவாரியாக ஹ, ஶ்ரீ,க்ஷ ௺, ௲ போன்ற எழுத்துக்கள்.. 'ஹ'வை சர்ரென இடது பக்கம் இழுப்பார். 'ட'னாவை சர்ரென வலது பக்கம் நீட்டி இழுத்து அதன் முனையில் சுழி போட்டு 'டி' ஆக்குவார்.
மேற்படி சான்றிதழ்களில் ஶ்ரீனியின் தாத்தா நீண்ட நிப் கொண்ட பேனாவை மைப்புட்டியில் தொட்டு அவரும் சர்ர்ரென ரெண்டிழுப்பு இழுத்து கையொப்பமிடுவார். அதற்கு நாம் கொடுக்கும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கு அவரே ரெவன்யூ ஸ்டாம்ப் கொடுத்து விடுவார். எக்ஸ்ட்ரா எதுவும் வெட்டவேண்டியதில்லை.
கூட்டம் கலைந்ததும் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டு குதிரை வண்டியிலோ அல்லது கன்றுக்குட்டிக்கு சற்றே மூத்த இளம் மாடு பூட்டிய ரேக்ளா வண்டியில் வெளியே கிளம்பி போய் விடுவார். வண்டி சென்ற சில நிமிடங்கள் கழித்து கூட சாணமும் புல்லும் கலந்த இனிய மணம் காற்றில் வீசும்.
அமைதியான, சாணம் தெளித்து கோலமிட்ட, பனி விழும் மார்கழி மாத காலை வேளை. ரம்மியமான சூழல். மனசே லேசாகுங்க! ஆனால் தலை நிமிர்ந்து சுவர்களை மட்டும் பார்க்கக்கூடாது. காரணம்.. அந்த தெருவின் இரு புற சுவர்களிலும் எப்போதும் கரிய வண்ணத்தில் கிறுக்கல்கள். 'கடவுள் இல்லை.. இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் முட்டாள்' போன்ற வாசகங்கள்.
'பக்கத்துல உறையூர் பாண்ட மங்கலத்துல இருந்து 7, 8 பேரோட ஒருத்தன் வருவான். எப்ப வருவானுங்கன்னே தெரியாது. ராத்திரி 12 மணிக்கு மேல நாம அசந்து தூங்கரச்சே, இல்லன்னா வெள்ளன 4 மணிக்கு முன்ன வந்து கண்டத எழுதிட்டு ஒடீடுவானுங்க. நாம போய் தட்டி கேட்டா அடிக்க வருவான்.. ஆயி அம்மாவ திட்டுவான்'. ஶ்ரீனிவாசன் சலித்துக்கொண்டான்.
'அவனுங்களுக்கு ஒரு நாள் வச்சிருக்கம்!' சொல்லும்போதே ஸ்ரீநிவாசன் முகத்தில் கோபம். அந்த 'ஒரு நாளும்' வந்தது. திடகார்த்தமான அக்ராஹாரத்து இளைஞர்கள் 7, 8 பேர் மொட்டை மாடியில் முதல் நாள் இரவு மறைந்து கொண்டார்கள். சிலர் திண்ணையை ஒட்டியுள்ள சந்தில் ஒளிந்து கொள்ள, எதிர்பார்த்தபடியே அன்று இரவு 2 மணிக்கு அந்த கூட்டம் வந்து மீண்டும் சுவர்களில் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்த நிமிடம் மாடியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கூட்டம் நிலை குலைந்தது. சந்தில் ஒளிந்திருந்த இளைஞர்கள் வெளியே ஓடி வந்து அவர்களை நையப்புடைத்தார்கள். கல்லடி பட்டு அடி வாங்கிய கூட்டம் அலறிக்கொண்டு ஓடியது.
அதற்குப்பின் அந்த சுவர்களில் எந்த இழிவு வாசகங்களும் இல்லாமல் வெறும் 'நாமிருவர்.. நமக்கிருவர்' மற்றும் 'அளவான குடும்பம்..வளமான வாழ்வு' மட்டும் தான்.
'இந்த அக்ரஹாரத்துல இருக்கறவாள்ளாம் நெறைய நிலம் வச்சிருக்கறவங்க. இந்த எளம் வயசுப்பசங்க வயலு வரப்புல எறங்குனா கிட்டத்தட்ட 12 மணி நேரம் அலுக்காமெ வேல செய்வானுங்க. அடிதடின்னு எறங்குனா ஆளையே அலாக்கா தூக்கி வீசீடுவானுங்க. நாங்க பயந்துக்கிட்டு இருந்ததெல்லாம் அந்தக்காலம்..' சொல்லும்போதே ஸ்ரீனிவாசனின் முகத்தில் பெருமிதம்.
நேஷனல் கல்லூரியில் தம்பி விஜயராகவனுடன் B.comமுடித்தவுடன் ஸ்ரீனிவாசன் சிறிதுகாலம் வேலை தேடிக்கொண்டிருந்தான். தம்பி MBA முடித்து டாட்டா குழுமத்தில் சில வருடங்கள் இருந்து பின் மஸ்கட்டில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறான். அவ்வப்போது ஸ்ரீனிவாசனைப்பற்றி நிறைய பேசுவோம். வருடமொருமுறை திருச்சி போகும்போது ஸ்ரீனிவாசனை தம்பி பார்க்கத்தவறுவதில்லை.
2 வருடங்கள் முன்பு நானும் ஸ்ரீனிவாசனை திருச்சியில் பார்த்தேன். எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து கிடைத்த மத்திய அரசுப்பணி. கண்டோன்மென்ட் அருகில் அகில இந்திய வானொலியில் 25 வருடங்களாக இருக்கிறான். மழிக்கப்படாத 2 நாள் தாடி, சிகப்புக்கரை ஜரிகை வேட்டியுடன் அதே மலர்ந்த முகம். முன் வழுக்கை லேசாக ஆரம்பம். A.I.R கான்டீன் கூட்டிப்போனான்.
காபியை ஓரம் வைத்துவிட்டு பட்னம் பக்கடாவை புட்டு வாயில் போட்டுக்கொண்டு.. 'மாசம் அம்பத்தஞ்சாயிரம் பக்கம் சம்பளம் வர்றது. வயலூர் போற வழீல சீனிவாசா நகர் தாண்டி இருந்த ஒன்ற க்ரவுண்டு நெலத்தில பெருசா வீடு கட்டிண்டேன். அல்லித்துரை நெலத்துலர்ந்து அரிசி, பருப்பு, வருஷ சாமான் போக்குவரத்து எல்லாம் வந்துடறது. பொண்ணையும் கட்டிக்குடுத்தாச்சு. நாங்க ரெண்டு பேர் தான். இப்பசத்திக்கி இந்த ஸ்கூட்டில தான் சுத்தறேன்.' குடுமியை அவிழ்த்து பின் தலையை லேசாக சொறிந்துகொண்டு, கீழ்த்தாடையை முன்னுக்கிழுத்து ஆ(ற்)றிய காப்பியை கவிழ்த்தான்.
மத்தியக்கிழக்கு நாட்டில் அல்லாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஸ்ரீனிவாசனை பார்க்க கொஞ்சம் பொறாமை தான். நமக்கு மிகவும் வேண்டிய நண்பன் என்பதால் சந்தோசம் கூட. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போகுமுன் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு போன் செய்து விட்டு போனால் போதும். அவனது சகோதரர் ரமேஷ் குருக்கள் நம்மை பெருமாள் கிட்டக்க தரிசனம் கிடைக்க வைப்பார். சாமிக்கு சார்த்திய பெரிய மாலை மற்றும் பிரசாதம் எல்லாம் கொடுத்து கூட இருந்து வழியனுப்பி வைப்பார்.
விஷயத்துக்கு வருகிறேன்.. சென்ற வருடம் இறந்து போன என் அப்பாவின் பேரிலிருந்து BSNL டெலிபோன் லைனை அம்மா பேருக்கு மாற்ற முயற்சி செய்தேன். ஹெட் போஸ்டாபிஸ் பின்னால் BSNL அலுவலகத்தில் பெண் மேலாளர் ஒருவரை பார்த்தேன். கூட என் 81 வயது அம்மா. Legal heir certificate அது இது என்று ஒரு லிஸ்ட்டே கேட்டார். அப்பாவின் death certificate , ரேஷன் கார்டு எல்லாம் காண்பித்தும் அதன் நகல்களை உடனே அட்டெஸ்ட் செய்து கொண்டுவரும்படி சொன்னார். மணி மாலை நாலு அப்போதே. ஆபிஸ் மூடுமுன் உடனே எங்கே அட்டெஸ்ட் செய்வது?
சட்டென ஸ்ரீனிவாசன் நினைவுக்கு வந்தான். அடுத்த 15 நிமிடங்களில் நான் அம்மாவுடன் ஆட்டோவில் கன்டோன்மென்ட் அகில இந்திய வானொலி வளாகம் போய் சேர்ந்தேன். அதே மலர்ந்த முகத்துடன் ஸ்ரீனிவாசன் வரவேற்றான். 'மாடில ஸ்டேஷன் டைரக்டர்ட்ட போலாம். அவர் அட்டஸ்ட் பண்ணிடுவார்' என கூட்டிப்போனான்.
நிலைய இயக்குனர் பனிவான மனிதர். எங்களை வரவேற்று இருக்கையில் அமரச்சொல்லி, நாம் கொண்டு வந்த தஸ்தாவேஜுக்களை பார்க்க குனிந்தார். தலை முடியும் மீசையும் கடந்த வாரம் பெற்ற கருப்பு வர்ணத்தை லேசாக இழக்க ஆரம்பித்திருந்தன.
'சார்... நான் சொன்னேனில்ல.. பஹ்ரைன்.. என் ப்ரெண்டு.. ' என்ற ஸ்ரீனிவாசனை பேச விடாமல் எல்லா பேப்பர்களிலும் கையொப்பமிட்டார் நி.இ. ஸ்ரீநிவாசனுக்கு அங்கே நல்ல மரியாதை என்பது தெரிந்தது. அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். வந்த வேலை சுருக்க முடிந்த திருப்தி எனக்கு.
மிகவும் நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது லேசாக எமோஷனல் ஆகி விடும் நான் அதன் வெளிப்பாடாக அவர்கள் தோளில் கை வைத்தோ, கைகளை பிடித்துக்கொண்டோ பேசுவது வழக்கம்.
'விஜைய்ய கேட்டதா சொல்லுங்க ஸ்ரீதர்' என்ற ஸ்ரீனிவாசனிடம் 'ரொம்ப சந்தோஷம் ஸ்ரீனி... உங்க வேலை, அலுவலகம், உங்க பாஸ், உள்ளூர் செல்வாக்கு எல்லாம் பார்க்க சந்தோஷமா இருக்கு... இன்னம் அப்பிடியே இருக்கீங்க.. தலைல கூட ஜாஸ்தி நரை இல்ல' என்றேன்.. மிக அடக்கத்துடன் ஸ்ரீனிவாசன் வெட்கம் கலந்து முறுவலித்தான்.
விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது 'ஞாபகம் இருக்கா.. ஸ்ரீனி.? புத்தூர்ல உங்க அக்ரஹாரம் சுவத்தில கிறுக்கினவங்கள கல்லால் அடிச்சி விரட்டுனது இன்னம் நா மறக்கல..' சத்தமாக சிரித்தபடியே அவன் தோளை தட்டிவிட்டு நடக்க எத்தனித்த என்னை இழுத்து நிறுத்திய ஸ்ரீனிவாசன்....
முகத்துக்கு மிக அருகில் வந்து... 'சத்தம் போட்டு சொல்லாதீங்க ஸ்ரீதர்..கல்லடி வாங்கிட்டு ஒடுனவர்(ன்) தான் அந்த ஸ்டேஷன் டைரக்டர் செங்'கல்'வராயன்..!' குறும்புடன் கண்ணடித்தபடி நகர்ந்தான் ஶ்ரீனிவாசன்.

பிச்சை சார்....


90களில் பம்பாயில் பங்குச்சந்தை பற்றி தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் அதைப்பற்றி பேசிக்கொண்டும் பங்கு வர்த்தகம் செய்துகொண்டும் இருந்த நேரம். செம்பூரில் இருந்து காலை 8.11 லோக்கலில் ஏறினால் 'சங்கம் அலுமினியம் படுத்துடுச்சாமே.. நீ வித்துட்டியா' போன்ற சம்பாஷனைகளை சகஜமாக கேட்கலாம்.
ஒரு நிதி நிறுவனத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு பம்பாயின் மிகப்பெரிய கப்பல் சேவை நிறுவனத்தில் அப்போது சேர்ந்திருந்திருந்தேன். இரண்டு கப்பல்கள் சொந்தமாக வைத்துக்கொண்டு பங்கு வர்த்தகமும் செய்யும் பம்பாய்த்தமிழர்களுக்கு சொந்தமான கம்பெனி அது. பூர்வீகம் நாகர்கோவில்/திருநெல்வேலி அவர்களுக்கு. அனைத்து துறைமுக நகரங்களிலும் கிளைகள் அவர்களுக்கு. எம்.டி முதல் பியூன் வரை தமிழும் மலையாளமும் தான். 70 வயதான பிச்சை சார் தான் எனக்கு பாஸ். எம்.டி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சித்தப்பாவாம். கனரா வங்கியில் பொது மேலாளராக ரிடையராகி இங்கே அட்வைசராக இருக்கிறார். சரளமான மலையாளமும் நெல்லைத்தமிழும் கலந்து பேசுவார். எப்போது கோபம் வருமென்று கணிக்க முடியாது. கோபம் வந்தால் அவருக்கு முகம் கை எல்லாம் நடுங்கி கொலவெறி தான்.
'எலே.. ரமணி! இன்னிக்கி காபால் வரக்காங்கலியே. மங்களூர்ல என்ன மயித்துக்கு உக்காந்துண்டிருக்கே?' போனை எடுத்து அவர் உச்ச ஸ்தாயியில் கத்தும்போது பக்கத்திலிருந்த பாலக்காட்டுப்பையன் 'புள்ளி.. ச்சூடாயி' என யாருக்கோ விளக்கிக்கொண்டிருந்தான். எல்லா கிளை அலுவலகங்களிலிருந்து CABAL (cash bank balance) தினமும் காலை அவரது மேசைக்கு வந்துவிடவேண்டும். தாமதமானால் ரணகளம் தான்.
சில வேலைகளை எனக்குக்கொடுத்துவிட்டு அவர் வெளியூர் போயிருந்தார். தாய் மற்றும் துணை நிறுவனங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நான் கணக்கில் எழுதி அவர் திரும்பி வந்ததும் காண்பித்தபோது மனுஷன் அகாசத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்தார்.
' உங்கள நா இந்த ஜோலிய செய்யச்சொல்லலியே.. யாரக்கேட்டு செய்தீரு?'
' இல்ல சார்.. பாங்க் ரிகன்சிலியேஷன் செய்யிறப்போ இந்த என்ட்ரியெல்லாம் போட்டாத்தான் டேலியாகும். அப்பறம் ஆடிட்டு பண்றப்போ ப்ராப்ளம் இல்லிங்களா?' (இப்ப என்னை பாராட்டுவார் என நினைக்க)
' நீங்க ஆடிகிட்டோ ஆடாமலோ ஒன்னத்தயும் சறைக்க வேணாம்.. மொதல்ல பேப்பர எடுத்துகிட்டு இங்கேர்ந்து போங்கேன்' என விரட்டினார். மனுஷனுக்கு BP எகிறிவிட்டது.
அங்கிருந்து கிளம்பும்போது 'ராமசாமி சார் தான் செய்யச்சொன்னார்' என நான் லேசாக முனுமுனுத்து தான் தாமதம்... அவர் உடனே போனை எடுத்து ' ராமசாமி எங்கடே.. வரச்சொல்லு அந்த தா..ளிப்புள்ளய'. தன் சிறிய இடுப்பிலிருந்து நழுவும் பாண்ட்டை மேலே இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு ஓடிய ராமசாமி அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வரும்போது தெப்பலாக நனைந்திருந்தான். என்னைப்பார்த்த பார்வையிலேயே கெட்டவார்த்தைகள் தெரிந்தன. படுகுள்ளமான அவன் தான் ஃபைனான்ஸ் மானேஜர் அங்கே. டோம்பிவிலியிலிருந்து வருபவன். சிறிய சரீரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத அளவில் மிகப்பெரிய மண்டை. ஹிண்டு பேப்பரும் டிபன் டப்பாவும் கொண்ட சின்ன ப்ரீஃப்கேஸுடன் ஸ்டேஷனில் ட்ரெயின் வந்து நிற்கும் முன் ஓடி, ச்சாடி ஏறி இடம் பிடிப்பவன்.
மறுநாள் கோபத்தையெல்லாம் மறந்து பிச்சை சார் சகஜமாக பேசிக்கொண்டு காபியும் கொடுத்தார். சாதாரணமாக நல்ல மூடில்தான் இருப்பார். ஆனால் இன்கம் டாக்ஸ், ஆடிட்டர், சி.ஏ, அல்லது ஆடிட் சம்மந்தமான அலர்ஜி வார்த்தைகளை கேட்டாலே கெட்ட கோவம் வந்துவிடும். அதை சரியாக கவனிக்காமல் நானும் 'என் ஃப்ரெண்டு ஒருத்தன் சார் இப்பிடித்தான்.. அவனும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ' என ஆரம்பிக்க.. " சரி சரி.. சீட்டுக்கு போங்கேன்.. ச்சார்ட்டர்ட் அக்கவுன்டு.. சானி திங்கிற அக்கவுட்டு... " என முனுமுனுத்தார்.
நிறுவனத்தின் நிதி நிலை நன்றாக இருந்ததால் பங்கு வர்த்தகத்தில் நல்ல முதலீடு அவர்களுக்கு. பிச்சை சார் ஒரு நாள் பங்குத்தரகர் ஒருவரிடம் என்னை அனுப்பி....
'அவங்க உங்களுக்கு short selling சம்மந்தமான சில ட்ரான்சாக்‌ஷன் சொல்லித்தருவாங்க.. போய் கத்துகிட்டு வாங்க.. நல்லா கவனிங்க.. ஊட ஊட கேள்வி கேக்காதீரும்.. வெளங்கா?'
' ஓகே சார்.. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..ராமசாமியையும் கூட்டிகிட்டு போட்டுமா சார்.. அவருக்கும் வரனும்னு...' என இழுத்தேன்.
' ராமசாமியப்பத்தி உங்களாண்ட நாங்கேட்டனாவே? உள்ளூர்லயே அவன் ஓணான் புடிக்கல. உடையார்பாளையத்துலயா உடும்பு புடிக்கான்?'
எது கேட்டாலும் திட்டு தான். தலைதெறிக்க பங்குத்தரகர் ஆபிசுக்கு ஓடினேன். அந்த புரோக்கருக்கு பெருத்த சரீரம். முதல் இரண்டு மூன்று நாட்கள் தனது பெண் சோனாலி சொல்லிக்கொடுப்பாளென அவர் என்னை அடுத்த அறைக்கு அனுப்ப, ஓரிரண்டு பணியாளர்களுக்கு மத்தியில் பளிச்சென இருந்த அவரது மகள் சோனாலியை கண்டு நான் பிரகாசமடைந்தேன். ரோஸ் நிறம், அழகான விழிகள் மற்றும் உதடுகள், சுருள் இல்லாத நேரான கேசம். குஜராத்திப்பெண். பூனம் தில்லோன் சாயல். ஆனா செம்ம குண்டு.
பங்குச்சந்தையில் short selling பற்றி சோனாலி விளக்க ஆரம்பிக்க, அவளது அழகு என்னை சித்ரவதை செய்துகொண்டிருந்தது. தலையை மட்டும் புரிந்தமாதிரி அவ்வப்போது ஆட்டி வைத்தேன்.
ஷார்ட் செல் செய்ய பங்குச்சந்தை இறங்குமுகமாக இருத்தல் அவசியம். குறிப்பிட்ட அளவு பங்குகளை (இறுப்பில் அப்பங்குகள் இல்லையென்றாலும்) அன்றைய விலையில் விற்க ஆர்டர் செய்து, செட்டில்மென்ட் திகதிக்குள் அதே அளவு பங்குகளை மேலும் குறைந்த விலையில் வாங்கி நமது கணக்கை நிகர் செய்ய வேண்டும். மார்க்கெட் இறங்கினால் தான் இதில் லாபம். நிகர லாபத்தில் தரகர்களது வட்டி மற்றும் கமிஷனை கழித்துக்கொள்வார்கள். இதற்கு மார்ஜின் மணி என முன்பணம் கட்டவேண்டும். ஷார்ட் சேல் செய்தவுடன் பங்குகளை திரும்ப வாங்கும் முன் மார்க்கெட் திடீரென உயர்ந்தால் தலையில் துண்டு தான்.
சோனாலி படு சீரியஸாக எனக்கு விளக்கிக்கொண்டிருக்க, அவளது அருகாமை.. கமகம வாசனை. மிருதுவான கேசம், சீரான நகங்கள், அது நெயில் பாலிஷா..நெய்யில் இட்ட பாலிஷா! என்னா வாசனை!. திருச்சிக்கார பிரம்மச்சாரிக்கு ரசிக்க சொல்லியா தரவேண்டும்.
கனவில் அவளுடன் 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும்' டூயட் பாடிக்கொண்டிருந்த எனக்கு திடீரென 'சமஜ்கயானா?' என நடுவே அவள் கேட்டபோதுதான் பிரக்ஞையே வந்து...ஆ!.. ம்.. பில்குல்' என நான் தலையை ஆட்டியதிலேயே அவளுக்கு தெரிந்துவிட்டது, பையன் செம்ம ஜொள்ளென்று. தவிர நமக்குத்தான் ஜொள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதே!
அடுத்த நொடி 'பப்பா...தமே ஹ்யா ஆவ்னெ' என அவள் கத்த, குஜ்ஜு கடோத்கஜன் அப்பாக்காரர் தேர் மாதிரி அசைந்து அருகாமைக்கு வந்தார். ஐய்யய்யோ! அப்போதைக்கு ஏதாவது சந்தேகம் அந்தாளிடம் கேட்க வேண்டுமே! எச்சிலை முழுங்கி 'அது சரி சார்.. இறுப்பிலில்லாத பங்குகளை ஷார்ட் சேல் செய்தபின் செட்டில்மென்ட்டுக்குள் ஆண்டிறுதி நாள் வந்துவிட்டால் எப்படி அதை கணக்கில் காட்டுவது?' என நான் அலட்சியமாக (அது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு) கேட்க அவர் உடனே காட்டமானார். அதை கூட கவனிக்காமல் நான் 'ஆடிட்டுக்கு இது முக்கியமாச்சே! ஹ்ஹெ...என்ன நாஞ்சொல்றது?' என பாக்யராஜ் பாணியில் தொடர, அவர் சுட்டெறிப்பது போல என்னை முறைத்து, மகள் பக்கம் திரும்பி குஜராத்தியில் ஏதோ கத்த, அவள் என்னை கனிவான பார்வை பார்த்து, கண்களால் கெஞ்சி, அவரையும் சமதானப்படுத்தி அனுப்பினாள்.
கடோத்கஜன் போனபிறகு 'ஹையா! சோனாலி எனக்கு சப்போர்ட் பண்ணிட்டா! ' என புளகாங்கிதமடைந்து மர்மப்புன்னகையுடன் இவள் பக்கம் திரும்பினால், 'புத்தூ!.. எல்லா டவுட்டும் உனக்கு ஒரே நாள்ல..அதுவும் அவர் கிட்டத்தான் கேக்கனுமா... நா இல்லியா?' என கன்னம் சிவக்க செல்லமாக கோபித்துக்கொண்டபோது.. குட்டி! இன்னும் பல மடங்கு அழகாக தெரிந்தாள். 'தேமேன்னு குட்கா மென்றுகொண்டிருந்த பப்பாவை நீ எதுக்குடி செல்லம் அவசரமா கூப்ட்டே' ன்னு நான் கேட்பேனா!
'அவருக்கு ஏற்கனவே ஹார்ட் ப்ராபரளம், BP வேற அதிகம். அதான் உங்ககிட்டே கோவிச்சுக்கிட்டேன்.. நீங்க நாளைக்கும் வாங்களேன் சொல்லித்தர்றேன்'.. படபடவென சிமிட்டிய பட்டாம்பூச்சி கண்களை அகலத்திறந்து தலையை சிலுப்பி தலைமுடியை பின்னுக்குத்தள்ளி அவள் கேட்ட மறுநிமிடம் மானசீகமாக 'நினைவோ ஒரு பறவை..' ஸ்டார்ட் ஆனது.
மறுநாள் திரும்ப ஆபீஸ் போகும் வரை ஒரே கனவு மயம் தான். சரியான தூக்கமில்லை. போதாகுறைக்கு குளிக்கறச்சே 'தோட்டத்திலே பல பூக்களுண்டு.. நீ தானே என் சிகப்பு ரோஜா' பாட்டு வேற.. தலை முடியெல்லாம் ஒழுங்காக சீவி ஆபிஸ் போனால் அதிர்ச்சி. எதிரே பிச்சை சார். மூக்குப்பொடி வாசனை கிட்டக்க.
' நீங்க அபய்பாய் ஆபிஸுக்கு இனி போகண்டா..நம்ம ராமசாமிக்கு அவன் போன் பண்ணியிருக்காப்ள.. ஆமா! அதென்ன..அந்த புரோக்கருக்கே நீங்க க்ளாஸ் எடுத்தீயளாமே!... அவன் பம்பாய்ல நேமிஷ் ஷாவுக்கு அடுத்தபடியா பெரிய புரோக்கர் தெரியுமோல்லியோ?'
'இல்ல சார்... சும்மா டவுட்டு கேட்டேன்..'
' என்னவே பெரிய டவுட்டு... எலே ராமசாமி! உனக்குத்தானே போன் வந்துச்சி... என்னாங்கான் அவன்?' (ராமசாமி போட்டுக்கொடுத்து விட்டானென நினைக்கிறேன்)
ராமசாமி ஏதோ ஆரம்பித்து பெரியதாக விளக்க பிச்சை சார் உஷ்ணமாகிக்கொண்டே போனார் கிடுகிடுவென முகம் நடுங்க...அப்படியும் நிறுத்தாமல் ராமசாமி நீட்டி முழக்கி ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, 'எலே.. சுறுக்க சொல்லுலே! காளமாட்டு மூத்தரம் மாதிரி நீண்டுகிட்டே போவாத' என கோபத்துடன் என் பக்கம் திரும்ப,
' இல்ல சார்..ஆடிட் சம்மந்தமா டவுட்டு கேட்டேன்' என சொல்லி முடிக்கும் முன் பிலுபிலுவென என்னை உலுப்பியெடுத்துவிட்டார். ஆடிட் என்கிற வார்த்தையெல்லாம் அவருக்கு பிடிக்காதென்பது.. சனியன்.. எனக்கும் அப்பப்போ மறந்து போகிறது.
அடுத்த சில மாதங்களில் நான் வேறிடத்தில் வேலைக்கு சேர்த்தேன். சட்டென சோனாலி கனவும் நின்றுபோனது..வயசு அப்பிடி!
நேற்று ஹோட்டல் அறையில் கிறுக்கிய படத்துடன்...
சீதாபதி ஶ்ரீதர்-2015 மீள்
(மாஸ்கோ/புனித பீட்டர்ஸ்பர்க்-ரஷ்யாவிலிருந்து)

சங்கர் நாராயணன்

பெங்களூர் MG ரோடு ட்ரினிடி சர்க்கிள் விவான்டா தாஜ் ஹோட்டலை அடுத்து பத்து தளங்கள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் விஜயா பாங்க்கின் தலைமையகம்.
செக்யூரிடி அலுவலரிடம் இன்னாரை பார்க்க வேண்டுமென சொன்னதுதான் தாமதம், உடனே லிஃப்ட் வரும்வரை என்னை இருக்கையில் அமரச்சொல்லி, பின் லிஃப்ட் கதவை திறந்து என்னுடன் முதல் தளம் வரை வந்து விட்டுப்போனதிலிருந்தே தெரிந்தது இவருக்கு அங்கே என்னவொரு மரியாதை மற்றும் செல்வாக்கு என. முதல் தளத்தில் பார்வையாளருக்கான பிரத்யேக அறையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.
சில நிமிடங்களில் இரண்டு உதவியாளர்களுடன் நேரே பார்வையாளர் அறை நோக்கி என்னிடம் வந்து 'வாங்க ஶ்ரீதர்!' என வரவேற்று ஆரத்தழுவி, என் தோளில் கரமிட்டு தன் அறைக்கு அழைத்துச்சென்ற, ரானா டக்குபடி உயரம் கொண்ட ஆஜானுபாகு அழகன் இவர்.
இவர் Sankara Narayanan R A ). செப்டம்பர் 1 முதல் விஜயா பாங்க்கின் MD & CEO யாக பதவியேற்று திருச்சிக்கு பெருமை சேர்த்திருப்பவர். நான் படித்த புனித சூசையப்பர் கல்லூரி (St Joseph's) சக மாணவர். நண்பர்கள் கணபதி, ஜோசப் செபாஸ்டியன், சிவகுமார் மற்றும் பல்லடம் ஶ்ரீதரன் போன்ற நண்பர்களுடன் பி.எஸ்ஸி பௌதிகம், பின் மேலும் உயர் படிப்புகள் படித்தவர்.
சங்கர் நாராயணன் (
அவரது அகலமான மேசையின் ஒருபுறம் மூன்றடி உயர விநாயகர் சிலை. மறுபுறம் நான்கடி வெங்கடாசலபதி பெருமாள். முதல் நாள் தான் பெங்களூர் அலுவலகம் வந்தாராம். வந்தவுடனே தனக்கு பிடித்த அம்மன் படத்தை விநாயகர் அருகே வைத்து ஒரு விளக்கையும் ஏற்றியிருந்தார். எதிரே பெரிய டீவியில் ஓடிக்கொண்டிருக்கும் நிதி சார்ந்த செய்திகள்.
பாங்க் ஆஃப் இந்தியாவின் (BOI) எக்ஸிக்யூடிவ் டைரக்டராக இருந்து பதவி உயர்வு பெற்று விஜயா பாங்க்கின் MD & CEO வாக பொறுப்பேற்றுள்ள அவர் 34 வருடங்கள் BOI வில் இருந்தவர். டோக்யோ, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருந்தவர்.
'சொல்லுங்க ஶ்ரீதர்! பசங்க எப்பிடி இருக்காங்க?' என படு சகஜமாக பேசும் சங்கர் என்னுடைய முகநூல் பதிவுகளனைத்தையும் தவறாமல் படிப்பதல்லாது, எல்லா மேம்படுத்தல்களையும் நினைவில் கொண்டு விசாரிக்கவும் செய்பவர். திருச்சி பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார். எதிரே அருமையான மசாலாச்சாய் மற்றும் தட்டில் hide & seek சாக்லேட் பிஸ்கட்.
சங்கரின் அருமை பெருமைகளை இவரது சக வகுப்பு மாணவனான கணபதி நிறைய சொல்லியிருக்கிறான். வங்கியில் நிறைய சாதனைகள் செய்தவர். திருச்சி ஶ்ரீரங்கத்தில் எங்களிருவருக்கும் பொதுவான நிறைய நண்பர்கள்.
ஜெயலலிதா அவர்களின் பதவியேற்பு விழா முதல் வரிசையில் அமர்ந்திருந்த இவருடன், பஹ்ரைன் டிவியில் இவரை பார்த்துக்கொண்டே என்னால் chat செய்யும் அளவிற்கு சிறிதும் தலைக்கனமேதுமில்லாத எளிமையானவர்.
விஜயா வங்கியின் வளர்ச்சிக்கென நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். தினமும் 14 மணி நேரத்திற்கு மேல் உழைப்பவர். பாங்க் ஆஃப் இந்தியாவின் NPA( non performing assets) உள்ளிட்டவைகளை மிகவும் திறமையாக கையாண்டு Chief General Manager பதவியிலிருந்து Executive Directorஆக குறுகிய காலத்தில் உயர்ந்து தற்போது விஜயா பாங்க்கின் மிக உயர்வான MD & CEO பதவிக்கு வந்தவர். அடுத்து ரிசர்வ் வங்கியின் Deputy Governor ஆக உயர இவருக்கு ஏற்கனவே வாழ்த்துச்செயதிகள் வந்துவிட்டன.
Consultant bankerஆன Sridharan Srinivasan (எங்களுக்கு 'பல்லடம் ஶ்ரீதர்'😃) அண்ணா பல்கலைக்கழகத்தின் Science & Humanities facultyயின் சேர்மனான Sivakumar Kandasamy மற்றும் தணிக்கை, தகவல் தொழில்நுட்ப வல்லுனரான Ganapathi Subramanian, தங்களின் ஆசானான கணிதத்துறை பேராசிரியர் முனைவர் Jayasankaran Natesan Mailrangam எல்லோரைப்பற்றியும் வெகுஉயர்வாக பேசிக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. இரவு மணி ஏழைத்தாண்டியது. பெங்களூரில் பணியிலிருக்கும் அவரது மகள்
அறைக்குள் நுழைய, அவரை அறிமுகம் செய்து வைத்தார். MA பொருளாதாரம் முடித்து MA-Education படித்துக்கொண்டு, இதழியல் மற்றும் கல்வி சார்ந்த துறையில் பணியிலிருக்கும் அவரது மகள் அப்பாவைப்போல இந்திய பொருளாதாரத்தை கரைத்து குடித்திருக்கிறார். அந்த சில நிமிடங்களில் இந்திய பொருளாதாரம், வளர்ச்சி விகிதம், ரிசர்வ் வங்கி, பணவீக்கம், ரகுராம்ராஜன் என தந்தையுடன் அவர் பேச ஆரம்பிக்க, நான் மடக்கென தேநீரை குடித்துவிட்டு அவரை வாழ்த்திவிட்டு கிளம்ப ஆயத்தமானேன்.
'Get him a nice corporate gift' என தொலைபேசியில் சொல்லி அன்பளிப்பு வரவழைத்ததும் அடுத்த நிமிடம் மகளை விட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு லிஃப்ட் வரை வந்து வழியனுப்பி வைத்த சங்கரை நினைத்தவாறே ஓலாவில் அமர்ந்ததும் நான் முனுமுனுத்தது.. 'திருச்சிடா'!

செம்பூர் ஆலி.. பூடே ச்சலா!...


ஓலா பிடித்து செம்பூர் வந்திறங்கிய எனக்கு ஒரே ஆச்சரியம். அப்படியே இருக்கிறது செம்பூர். அதே கடைகள் மட்டுமல்ல.. அதே கடை முதலாளிகள். 9 வருடங்கள் பம்பாயில் இருந்துவிட்டு பஹ்ரைன் சென்றவுடன் அவ்வப்போது பம்பாய் வந்தாலும் இம்முறை செம்பூர் செல்ல விரும்பினேன்.
80களில் பிரம்மச்சாரி நண்பர்களுடன் செம்பூரில் மாலை மற்றும் ஞாயிறன்று சுற்றாத தெருக்களே இல்லை. ஞாயிறு காலை கீதா பவனில் பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா, ஃபில்டர் காபி முடித்து, எதிரே ரோட்டோரத்தில் வரிசையாக இருக்கும் பெட்டிக்கடைகள் ஒன்றில் காலி காசெட் கொடுத்துவிட்டால் மறுநாள் ஜியார்ஜ் மைக்கேல்(wham), எரிக் கிளாப்டன்( I shot the sheriff), ஸ்டீவி வொன்டர் ( I just called to say I love you) மற்றும் ஜியார்ஜ் பென்சன்(nothing gonna change my love for you) பாடல்களை ரெகார்ட் செய்து கொடுத்து விடுவார் இளம் தமிழ்க்காரர் ஒருவர். ஆசிஷ் தியேட்டரில் இணைந்த கைகள் படம் பார்த்துவிட்டு ரோட்டுக்கடையில் பாவ் பாஜி சாப்பிட்டு அந்த கடைகள் வழியாக வருவோம்.
அதே கடைகள் இன்றும் அதே இடத்தில் இருப்பதை மனைவியிடம் காட்டினேன். அந்த கடைகளின் பின் புறம் இன்னும் அதே பழைய குடியிருப்பு சொசைட்டி.
கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்:
முன்பு அங்கே ரிடையர்டு கம்பெனி செக்ரடரி ஒருவர் (பெயர் ராமநாதன் என ஞாபகம்) எங்கள் கம்பெனியிலிருந்து பார்ட் டைம் அசைன்மெனட் வாங்கி செய்வார். அவ்வப்போது ஃபைல்களை கொடுக்க அவரது ஃப்ளாட்டிற்கு போவேன். ஒரேயடியாக எல்லா ஃபைல்களையும் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் கொடுப்பேன். புஷ்டியான அவரது பெண்ணை அப்பத்தானே அடிக்கடி பார்க்க முடியும்! (நிற்க! இது 88இல்). சோகம் என்னவென்றால் கதவை திறந்து என்னை முறைப்பது அவரது மனைவி தான். பெண்ணின் வாய்ப்பாட்டு சத்தம் மட்டும் உள்ளேயிருந்து கேட்கும். மறுநாள் செம்பூர் ஸ்டேஷனில் அவளை கடக்கும்போது நம்மை யாரென்றே தெரியாத மாதிரி ப்ளாங்க் லுக் விடுவாள் அந்த யுவதி. பிறகுதான் ஒருநாள் நாரிமன் பாய்ன்ட்டில் மாவா ஐஸ்க்ரீம் கோனை மற்றொரு பார்சி இளைஞனுடன் சுவைத்துக்கொண்டிருந்தாள். அடுத்த முறை ஃபல்களை கொடுக்க சென்றபோது பெண்ணுக்கு கல்யாணமாகி பூனேயில் செட்டிலாகி விட்டதாக மலர்ந்த முகத்துடன் மாமி காபி கலந்து கொடுத்தாள். நல்ல கவனிப்பு எனக்கு. ஏன் இருக்காது!
கீதா பவன் தாண்டியதும் முழங்காலில் டர்க்கி டவல் போட்டு இளநீரை கத்தியால் சரக் சரக்கென சீவும் மலையாளி பையன் இப்போது நெடுமுடி வேணு மாதிரி வெண்தாடியிலிருந்தான்(ர்).
அடுத்து பான் பீடா கடை நாயக்.. கடைக்கு வெளியே சிகரெட் பத்தவைக்க நெறுப்பு கங்குடன் தொங்கும் கயிற்றைக்காணோம். கடை அப்படியே இருக்க, நாயக்கின் சாயலில் இளம் வாலிபன்... கடையை சுற்றி ஏராளமான கார்கள்.. அமோக விற்பனை இப்போதும்.
20th road திரும்பும் முன் ஒரு வட்ட வடிவ ஜங்ஷன் தற்போது புதுப்பிக்கப்பட்டு நடுவில் செடிகளுடன்.. 91இல் ஜீவன் மெஸ்ஸில் சாப்பிட்டு அந்த ரவுண்டபௌட் கடக்கும் போது கூட நடந்து வந்துகொண்டிருந்த ரூம்மேட் 'தக்கலை அக்ரக்ஹாரம்' பத்துவை(பத்மநாபன்) ஒரு ஆட்டோ நேரே வந்து மோத, பின் பக்கம் கரனமடித்து விழுந்து எழுந்த கையோடு ஆட்டோவை விரட்டியபடி அவன் ஓட, மராட்டி ஆட்டோ டிரைவர் நேராக புலி படம் போட்ட சிவசேனா அலுவலகம் முன் வண்டியை நிறுத்திவிட்டு பயந்தபடி அலுவலகத்தினுள் ஓட முற்பட, பத்தன் ஒரே எட்டில் அவன் காலரை பிடித்து, தன் முஷ்டியால் அவனது முகத்தில் குத்த, சேனா ப்ரமுக்குகள் நால்வர் 'ஏய்! ச்சோடோ உஸ்கோ' என பத்தனை இழுக்க, தலைவர் போல இருந்த ஒருவர் வந்து தடுத்து, டிரைவரை மன்னிப்பு கேட்கச்சொன்னதும் பத்தன் அவனை விட்டான். 'இடித்தது கூட பரவாயில்லை.ஆனால் வண்டியை நிறுத்தாமல் ஓடியது தப்பு! சாலா..சம்ஜே?' என உருமியபடி நடந்த பத்தனை பெருமையுடன் பார்ப்போம் (உள்ளுக்குள் பயத்துடன்). சிவசேனைக்காரர்கள் நியாயமானவர்கள்.. அப்போது! அதே ரவண்டபௌட்.. அதே ஆட்டோ ஸ்டாண்டு.. சிவசேனா அலுவலகத்தை இப்போது காணோம்.
சற்று தள்ளி 8 லிமிடெட் பஸ்ஸின் கடைசி நிறுத்தம். 'செம்பூர் ஆலி.. பூடே ச்சலா!' என்ற கண்டக்டரின் குரல் இப்போதும் ஒலிப்பது போன்ற பிரமை..
20th Roadஇல் நாங்கள் தங்கியிருந்த ரமேஷ்நிவாஸ் தற்போது புதுப்பிக்கப்பட்டு மேலே இரண்டடுக்கு மாடிகளுடன். ஓனர் திரு. மோக்ரே எங்கேயென விஜாரித்தேன். அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்டுவிட்டு அடுத்த தெரு போய் விட்டாராம். 'இருபத்தைந்து வருடங்களாக என் பாஸ்போர்ட்டில் அதே அட்ரஸ் இருப்பதால், இந்த முறை எனது டிரைவிங் லைசென்ஸ் ரென்யூ ஆகி அதே அட்ரஸுக்கு வரும். வந்தவுடன் என் பையன் நம்பருக்கு போன் அடியுங்கள்' என நான் கேட்டுக்கொண்டதை ஆச்சரியத்துடன் பார்த்தார் கீழ் தளத்தில் குடியிருப்பவர்.
ஆர்.கே ஸ்டுடியோவிலிருந்து ரோஸ் கலரில் ராஜ் கபூர் வந்து 'ரவிஸ்' வாசலில் தன் அம்பாசடர் காரில் இருந்தபடியே டீ குடிப்பதை முன்பு பார்த்திருக்கிறோம். தற்போது அங்கே கிராண்ட் சென்ட்ரல் எனும் ஹோட்டல்.
செம்பூர் ஸ்டேஷன் அருகே சத்குரு ஜூஸ் சென்டரில் இரவு பத்து மணிக்கு மேல் கூட்டம் அம்மும். ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு பெரிய பியர் மக்கில் ஜூஸ் கொடுப்பார்கள். கார் பானெட்டில் அமர்ந்தபடி ஜூஸ் குடிப்பார்கள். அந்த கடையை இப்போது சத்குரு டிபன் சென்டர் ஆக்கி விட்டார்கள். இரவு ஒரு மணி வரை வியாபாரம். அந்நேரத்திற்கும் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கும். அரவிந்த் இனாம்தார் எனும் உதவி போலிஸ் கமிஷனர் அப்போது பம்பாய் நகரத்தையே தன் கன்ட்ரோலில் வைத்திருப்பார். எங்கேயும் தப்பு தண்டாவே கிடையாது. இரவு ரோந்து சென்று 'அழகி'களை அடிக்கடி கைது செய்வார்.
நேராக கஃபே உடுப்பியில் நுழைந்தோம். ஒரு காலத்தில் மசால் தோசை, வடா பாவ், மிசல் பாவ் அங்கே பிரசித்தம். வெறும் கல்லூரி மாணவர்களும், பேச்சுலர்ஸும் கூடி கட்டிங் சாய் குடித்து கும்மாளமடிக்கும் இடம் அது. கடை முதலாளி இல்லாத நேரத்தில் அவரது மகன் விஜய் தன் சகாக்களுடன் கல்லாவில் உட்கார்ந்திருப்பான். படு ஸ்மார்ட்டாக, நெற்றியில் புரளும் முடி, பம்பாய்க்கே உரித்தான நுனிநாக்கு ஆங்கிலம், பாகி பாண்ட், பாண்ட் போட்ட இளம்பெண்கள் சூழ..
இன்றும் ஹோட்டலில் அதே மாதிரி நல்ல கூட்டம். கடை சிப்பந்திகள் அநேகம் பேர் அதே ஆட்கள். கல்லாவில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்.. அட. நம்ம விஜய் மாதிரியே.. விஜய்யே தான்!. மெல்ல அவரை நெருங்கினேன். 'ஹலோ விஜய்! அடையாளம் தெரிகிறதா.. 25 வருடங்கள் முன்.. ' என நான் நினைவுபடுத்த அவர் முகத்தில் மலர்ச்சி. 'சாரி.. உங்கள் முகம் நினைவுக்கு வரவில்லை. ஆனால் பரிச்சயமான முகம். மறக்காமல் இங்கு வந்ததற்கு நன்றி' என அதே நுனிநாக்கு ஆங்கிலம்.
'சரி விஜய்.. உங்கள் நண்பர்களெல்லாம் எங்கே! ஒரு பட்டாளத்துடன் இருப்பீர்களே!' என்ற கேள்விக்கு கொஞ்சம் சோகமாக 'இப்பல்லாம் யாருமில்லை.. எல்லோரும் அவரவர் வேலையில் பிசி' என்றார்.
'அது சரி.. இந்த இடத்துல ஒரு sign board வைத்திருப்பீர்களே.. அது இப்ப இல்லியா' என்றேன்.
சற்றே குழப்பத்துடன் 'என்ன சைன் போர்டு? நினைவில் இல்லையே!' என்றார்.
'என்ன விஜய்!.. free meals for persons of 75 and above' போர்டு வைத்திருப்பீர்களே!' என்ற என்னை ஆச்சரியத்துடன் பார்த்து உடனே கலகலவென சிரித்தார்.
'ஓ.. ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே! those young days are gone now. இப்ப அந்த போர்டெல்லாம் வைக்கறதில்லை' என லேசான சோகத்துடன் சொன்னார்.
free meals for persons of 75 and above என்ற அந்த வாசகத்தின் கீழ் அடுத்த வரி... 'if accompanied by'
............
அதற்கும் அடுத்த வரி.. 'both parents'
பி.கு: போகும்போது இருந்த குதூகலமும் சந்தோஷமும் செம்பூரிலிருந்து பாண்டுப் திரும்ப வரும்போது அறவே இல்லை..

என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!

என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!
கைல ஒரு பைசா இல்லாமெ சாயங்காலம் சைக்கிள்ள திருச்சி மெயின்கார்டு கேட் பக்கம் போனா நந்தி கோயில் தெரு ஐயங்கார் பேக்கரில விஜிடபிள் பஃப்ஸ், நேசே காஃபி பாரில் டீ வாங்கிக்கொடுக்கும் டவுன் நண்பர்கள்.. Ayyampillai Ponnusamy
அப்பா கையில் காசில்லாத நேரத்தில் புத்தகங்கள் வாங்க பணம் கொடுக்கும், அவசர ஆத்திரத்திற்கு உதவும் ஆத்ம ஆடிட்டர் நண்பர்கள்.. Navendan Natesan
ஃபைனல் பரிட்சைக்கு முன் இன்டர்னல் ஆடிட்டர் போன்ற வேலைகளுக்கு பெங்களூர் இன்டர்வியூ போகும்போது, சிக்பேட் பஸ் ஸ்டாண்டு வந்து நம்மை கூட்டிச்சென்று தம் பாச்சிலர்ஸ் லாட்ஜில் தங்க வைத்து, மெஸ் சாப்பாட்டுடன், பிரிகேடியர் ரோட்டில் 'ஸ்டோன் வாஷ்' சட்டை வாங்கித்தந்து திரும்ப அண்ணா பேருந்தில் உட்கார வைத்து திருச்சி அனுப்பும் 'ஆமாவா' நண்பர்கள்.. ஆடிட்டர் அருண்மொழி
அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் (AAO) பதவிக்கு இன்ஷூரன்ஸ் பரிட்சை எழுத மதுரை போனால் மாலை சினிமா கூட்டிப்போய், நைட்டுக்கடை பரோட்டா குருமா வாங்கி கொடுத்து, 'மாப்ள! இது திருச்சி இல்ல.. மதுர..அவள அப்பிடி பாக்காத..கொண்டேபுடுவாங்கடி' என என்னை எச்சரித்து விட்டு , தான் மட்டும் பக்கவாட்டில் சைட் அடிக்கும் மதுர லோக்கல் நண்பர்கள்...
தன் குஜிலித்தெரு வீட்டு மாடியில் கீத்துக்கொட்டாய் போட்டு, சி.ஏ. பரிட்சைக்கு கம்பைண்ட் ஸ்டடீஸ் படிக்க அழைத்து, பாதி நேரம் சிம்லா ஸ்பெஷல், கைதியின் டயரி பற்றி பேசி, 'டேய் என் பேண்ட் ஒன்னு டைட்டாயிடுச்சு.. போட்டுப்பாரு மாப்ள!' என அர்த்தராத்திரியில் 'ட்ரயல்' பார்த்து மறுநாள் காலை டீயும் டிபனும் கொடுத்தனுப்பும் ஃபாமிலி டைப் நண்பர்கள்.. Subramanian Rajaseharan
காஜாமலை காலனி வீட்டில் 'ஹோல்டிங் கம்பெனி அக்கவுன்ட்ஸ்' படிக்க நாம் போகும்போது, நம் அவசர தேவை கடனுக்கு பணம் கொடுக்க, ஈவியார் காலேஜ் பொருளாதார பேராசிரியரான அப்பாவிடம் புக்கு வாங்குவதாக பணம் கேட்டு வாங்கி நம்மிடம் ரொட்டேஷன் விடும் ஃபைனான்சியர் நண்பர்கள். ஆடிட்டர் Kumar Kalimuthu
'ஜெர்மணியா போறீங்க..டஸ்ஸெல்டார்ஃபா? அங்கதான் என் அக்கா ராஜி இருக்கா.. ஏர்போர்ட் வருவா.. அவாளோடயே நீங்க தங்கிக்கலாம்' என சொன்ன கையோடு தங்கைக்கு வாட்ஸப்பும் அடிபொளி தம்பதி பத்மா & Shyam Krishnan
'உஷா! ரெண்டாவதும் பையனா? எங்க! ஜிதாஹ்வ்ஸ் மெடர்னிடி வார்டா? நேனு அன்னம், சாறு, ரசம் பம்பிஸ்தானு! ' என கரிசனமுடன் போன் செய்த பஹ்ரைன் 'மனவாளு' நண்பர்கள்.. Meena Ramachandran & Sk Ramachandran
'ஶ்ரீதரா! அது நெஞ்சுவலி இல்லப்பா.. ஆசிட் ரிஃப்ளக்ஸ் தான். சாயங்காலம் ஹமாத் டவுன் ஷேக் கலிஃபா ஹெல்த் சென்டர் வா! 'நெக்ஸியம்' மும் 'காவிஸ்கான்'னும் தற்ரேன்.. பாபாவ வேண்டிக்கோ' என ஆறுதல் சொல்லும் பஹ்ரைன் டாக்டர் நண்பர்கள்.. Mala Muralitharan
'நங்கநல்லூர் நம்மாழ்வார் கெஸ்ட் ஹவுஸ்ல ரூம் போட்டாச்சு! ஏர்போர்ட்டுக்கு கார் வந்துரும்.. நீங்க கல்யாணத்துக்கு ரெண்டுநா முன்னயே வந்து வ்ரதம் ஜாதகாதியில இருந்து பாணிக்ரஹனம் வரை இருக்கனும்' என அழைப்பு விடும் கரிசனமான கத்தார் நண்பர்கள்.. Sampath Vijaykumar and Anuradha Vijaykumar
காலையோ மாலையோ எப்ப இவரது ஶ்ரீரங்கம் வீட்டிற்கு போனாலும் எவர்சில்வர் தட்டில் இட்லி, சட்னி, மினி ஜாங்கிரி ( கிச்சனில் காப்பி டிகாக்‌ஷன் வாசனை), 'இருக்கட்டும்.. தட்ட அப்படியே வச்சிடுங்க' என உபசரிக்கும் நண்பர்கள்.. Tiruchendurai Ramamurthy Sankar & Kalpana Sankar
'வாங்க! திருச்சில உங்களுக்கு தெரியாத விசயம் நெறையா இருக்கு' என சொல்லி, மெயின் கார்ட்கேட் சென்னை சில்க்ஸில் மனைவியுடன் புடவை வாங்கிக்கொண்டிருந்த என்னை தனியாக தள்ளிக் கொண்டு போய் சிங்காரதோப்பு வழியாக டவுன் ஹால் பக்கம் போய் 'சந்தாசாகிப் புள்ள இங்க தான் ஆபிஸ் வச்சிருந்தான்.. இப்ப பாருங்க பழைய ட்ங்கிள் புக் விக்கிறானுங்க' என சொன்ன கையோடு 'சார் நீங்க சவுதியா? அந்நிய செலாவணி நல்ல ரேட்ல இருக்கு. வாங்கிக்கிறீங்களா?' என நெருங்கிய எஜென்ட்டிடம் ' அந்நிய செலாவணியா! போய்யா உள்நாட்டு செலாவணிக்கே அவனவன் சிங்கியடிக்கறான்' என அவனையே கலாய்த்து, திரும்பவும் ஸ்கூட்டியில் நம்மை இறக்கி விடும் நண்பர்கள் Vijayaraghavan Krishnan
'ஶ்ரீதர்.. பஹ்ரைன்ல இருந்து சென்னை வந்திருக்கீங்களா? இப்ப எங்க ஓயெம்மார் ரோடா? வர்றச்ச டின்னருக்கு வந்துடுங்கோ! Krishnamurthy Krishnaiyer நம்ம கூட இருக்கார்' என வீட்டிற்கு அழைத்து தன் 80 வயது தந்தையை எனக்கு உணவு பரிமாற வைத்த நண்பர்கள் Jayaraman Raghunathan
'நீங்க சென்னைல எங்க சுத்துனாலும், டயம் இல்லன்னா கூட ஏர்போர்ட் போறப்பயோ அங்கர்ந்து வர்றப்பயோ ஆலத்தூர் வழியா தான் போகனும். வீட்டுக்கு வந்துடுங்கோ என அழைப்பு விடுத்து பஜ்ஜி காபி கொடுத்து உபசரிக்கும் நண்பர்கள் Ranganathan Ganesh
ஒலா பிடித்து எக்ஸ்பிரஸ் அவென்யூ ஓடிவந்து நம்மை பார்த்து, பத்து பாகங்களுமடங்கிய அர்த்தமுள்ள இந்து மதத்தை நம் கையில் அன்புடன் திணித்து செல்ஃபி எடுத்துக்கொண்டு உபேரில் ஏறும் உயிர் நண்பர்கள் Suresh Narainan
பஹ்ரைனில் எந்த ஹோட்டல் போனாலும் மினி டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும், ரோட்டில் பார்த்தவுடன் தொப்பை (என்னோட) நோவ நம்மை கட்டி பிடிக்கும் சவுதி சி.ஏ நண்பர்கள்..Suresh Seenu
துபாய் கான்ஃபரஸில் அட்லான்டிஸ் ஹோட்டலில் தங்கியிருந்த என்னை லஞ்ச் ப்ரேக்கில் சந்தித்ததுடன் அடுத்த முறை கார் அனுப்பி தன் ஷார்ஜா வீட்டிற்க்கழைத்து பிசியான நேரத்திலும் பிசிபேளே பாத் பரிமாறி, திரும்பவும் அதே மலையாளி கள்ள டாக்சியில் ட்ராப் செய்வித்த நண்பர்கள் Saravanan Natarajan
சவுதியிலிருந்து ஹோண்டா சீயார்வியில் வந்து அர்த்த ஜாமம் வரை நம் வீட்டில் கரோக்கி பாடி கவிழ்ந்து படுத்து உறங்கிவிட்டுப்போகும் நண்பர்கள்.. Ramakrishnan Venkataramanமற்றும் Rama Ramki
நல்ல மழையில் பன்னர்கட்டா ரோட்டில் காரில் வந்திறங்கிய என்னை, குடையுடன் ஓடிவந்து தன் காரில் ஏற்றிக்கொண்டு பெரியவா அனுஷ பூஜைக்கு கூட்டிச்சென்று இரவு பதினோறு மணிக்கு சில்க் போர்டில் இறக்கி விட்டு, ஆட்டோ பிடித்து என்னை உட்கார வைத்து, மடித்து கட்டிய மல்லு வேட்டியுடன் தத்தக்கா புத்தக்காவென திரும்ப ஓடிய கோபிலி aka Rajagopalan Trichy..
பல வருடங்கள் கழித்து சந்தித்தபோது பெங்களூர் பல்லால் ரெசிடென்சியில் ரவா தோசை கூர்க் காபியுடன் அளவலாவி தன் BMWவில் ட்ராப் செய்த பென்மலை சி.ஏ நண்பர்கள் Vaidya Rishi
உரிமையுடன் 'உங்க வீட்டுக்கு இப்ப கிளம்பி வர்றோம்.. டின்னர் அங்க தான் ' என போன் செய்து நாங்கள் செல்லும் Jayasri Narayanan & Anantha Narayanan
'உங்க பையனுக்கு சி.ஏ பரிட்சை டிப்ஸ் கொடுக்க வர்றேன்' என வாஞ்சையுடன் இரவு பத்து மணிக்கு வரும் Venkatachairi ChellappaJayalakshmi Chellappa
சொற்ப காலம் பஹ்ரைனில் இருந்துவிட்டு 'பஹ்ரைன்ல ஒன்னுமே இல்லப்பா.. எல்லோரும் ஜூனியர் விகடன் தான் படிக்கிறாங்க' என கலாய்க்கும் ஆருயிர் நண்பர்கள்.. Balasubramaniam Chandrasekaran
86இல் பாம்பாயில் வேலை வாங்கி கொடுத்து, தன் அறையிலும் தங்க வைத்து, கைச்செலவுக்கும் அப்பப்போ பணம் கொடுத்து 'ஶ்ரீதரா! சேவ் பண்ண கத்துக்கோ.. என உரிமையோடு உபதேசம் செய்து, ஶ்ரீதரா! இத்தோர் மஹேஸ்வரி புரோட்டின்ஸ்ல வேலை கெடச்சிருக்கு. போறேன். நீயும் வந்துடேன்' என என்னை இழுத்துக்கொண்டு, ஒரே வருடத்தில் 'ஶ்ரீதரா! nothing like working in Bombay.. எனக்கு பாம்பே ஜெயந்த் விட்டமின்ஸ்ல வேல கெடச்சாச்சு.. என்னோட லூனாவ நீ வச்சுக்கோ.. அதுக்கு தர வேண்டிய ரெண்டாயிர்ரூவாய எங்க முலுண்டு அத்திம்பேர்ட்ட குடுத்துடு.. கடனை திருப்பித்தரனும்னு ஞாபகம் வச்சுக்கோ.. அசர்டிவ்னஸ் பத்தாதுடா உனக்கு' என சொன்ன கையோடு 'நீயும் பாம்பே வந்துடேன்!' என மெல்ல இழுத்து கொக்கி போட்டு அன்போடு அலைக்கழித்து, அடுத்தடுத்த வேலை எல்லாம் வாங்கித்தந்து (பஹ்ரைன் உட்பட), சென்ற வருடம் ஒருநாள் விடியற்காலை 6 மணிக்கு தோளில் கை போட்டு 'ஶ்ரீதரா! பாத்துக்க இது தான் வீணை பாலச்சந்தர் வீடு' என காட்டியபடியே இந்திராணியம்மாள் தெரு வழியாக 'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் காண்டீன்' கூட்டிப்போய் நெய்ப்பொங்கல், காசி அல்வா வாங்கித்தரும் 36 வருட பால்ய நண்பன்.. வேற யாரு! Ganapathi Subramanian
பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப் மற்றும் கிரியா க்ரூப் நண்பர்கள் Mohan Gopal Krishnan Lakshmi Mohan சின்னத்திரை நடிகர் Subramaniam Ganesh Vaidyanathan Rajagopalan Ganapathy Radha Shivakumar Krishna Bharadwaj Mythili Subramanian Durga Ganapathi Subramanian Charanath Sivakumar Neelkant Koundinya PriyaDarshini Narayanan Bragadesh Balasubraanian Chinnu Mahendiran
இன்னும் எழுதிக்கொண்டே போக ஏராளமான நண்பர்கள், இந்தியா வரும்போதெல்லாம் வரவேற்று உபசரிக்கும்Ravindran Seetharaman Ravi Shankar A Nagarajan Vedha Gopalan Ramanan VsvSridharan Srinivasan KM Sundar Suresh Kumar S Venkatasubramanian Ramamurthy Vallabha Srinivasan Ananya Mahadevan மற்றும் பெயர் குறிப்பிடாத ஏராளமான முகநூல், அலுவலக, சீ.ஏ. நண்பர்கள்...மேலே tag செய்ய முடியாத மீதி 1950 நண்பர்கள் (50 தான் லிமிட்டாம்)
இப்படி நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள்..
என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!