Tuesday, June 2, 2015

தன்னு மன்னுவை மணக்கிறார்(ஹிந்தி).. (Tannu weds Mannu- returns)


கடந்த பத்து நாட்களாக இந்த படத்தை பார்த்துவிடவேண்டுமென மனைவி உஷா சொல்லிக்கொண்டே இருந்தாலும், நேற்று தான் நேரம் கிடைத்தது. க்வின் படத்திற்குப்பிறகு அவள் கங்கனா ரனவத்தின் விசிறி. மதிய சாப்பாட்டிற்குப்பிறகு சின்னவனை சல்மானியா பகுதியில் டியூஷனுக்கு இறக்கிவிட்டபின் நாங்கள் 'தனா மால்' சினிப்ளெக்ஸ் உள்ளே போனபோது தியேட்டரில் எங்களையும் சேர்த்து மொத்தமே பத்து பேர் தான். இனி படம்...
லண்டனில் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னு(கங்கனா)வும் மன்னு(மாதவன்)வும் நான்கே வருடங்களில் தங்கள் உறவில் விரிசல் ஏற்பட உள்ளூர் மனநோய் மருத்துவரிடம் போய் முறையிட்டு, அங்கேயும் சத்தமாக சண்டையும் போட்டு, கங்கனா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, முடிவில் மாதவன் காச்மூச்சென கத்த, அவருக்குத்தான் பிரச்னையென குண்டுக்கட்டாக அவரை தூக்கிக்கொண்டுபோய் அங்கேயே அனுமதிக்கப்படுகிறார். உடனே கங்கனா இந்தியா வந்து விவாகரத்து நோட்டீஸ் கொடுக்க வழக்கறிஞரை நாடுகிறார்.
ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் இவ்வளவு களேபரமும் நடக்க, படம் சூடு பிடிக்கிறது. கணவன் மனைவி சண்டையென்றால் அப்படியே ஒன்றிப்போய் தான் படம் பார்க்கிறார்கள் ஜனங்கள். படம் பார்ப்பவர்கள் முகத்தில் தான் என்னவொரு மலர்ச்சி! படம் முழுவதும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை.. அவ்வளவு காமெடி.
கதையின் சம்பவங்கள் பெரும்பாலும் லக்னௌ, கான்பூர் மற்றும் டெல்லி போன்ற இடங்களில். குறுகிய சந்துக்குள் மிகப்பெரிய வீடுகள். சைக்கிள், டோங்கா மற்றும் சேத்தக் ஸ்கூட்டர்கள், மொட்டை மாடியில் சார்ப்பாய்(கயிற்றுக்கட்டில்), மோடா வகையராக்கள், சுடிதார் அணிந்து மாடியில் பட்டம் விடும் இளம் பெண்கள், முக்காடிட்ட வயதான தாதி மற்றும் மௌசிகள், பழைய கங்கா ஜமுனா படம் திலிப் குமார், கண்ஹையா லால் போல சைடு பாக்கெட், வி-கட் பனியன் முன்ஷி மற்றும் பெருசுகள். திரையில் நம் கண் முன் அப்படியே வட இந்தியா...
1977 முதல் 80 வரை பட்டப்படிப்புக்காக நான் அலகாபாத்தில் என் மூத்த சகோதரி வீட்டிலிருந்தேன். அலகாபாத்திலிருந்து வாரனாசி, லக்னௌ, கான்பூர் நாங்கள் அடிக்கடி போகுமிடங்கள். கங்கனா விவாகரத்துக்காக கச்சேரி (கோர்ட்) பகுதி சென்றபோது அந்த சீனில் நான் படத்தோடு ஒன்றி அப்படியே 1979க்குப்போய்விட்டேன் என்பது உண்மை.
அலகாபாத் கச்சேரி வளாகத்திற்குள் நான் நிறைய முறை போனதுண்டு. நிறைய வக்கீல்கள் க்ளையன்ட்டுகளுக்காக திறந்தவெளியில் உட்கார்ந்திருக்க..பான்வாலாக்கள், சாய்வாலாக்கள் சுற்றி வர வியாபாரம் களைகட்டும். ப்ரெட்டை கடலைமாவில் முக்கியெடுத்து சுடச்சுட பஜியா ஒரு பக்கம், மீட்டா திக்கா சட்னியுடன் சமோசா கச்சோரி, காலா நமக் தண்ணீர் கலந்த பானி பூரி, கட்டித்தயிருடன் ஜிலேபி, இந்தப்பக்கம் பன்னீர் தெளித்த டன்டா பெனாரஸ் லஸ்ஸி, வேகவைத்த உ.கிழங்கை மசித்து சூடான கல்லில் தட்டி வஞ்சனையில்லாமல் நெய்யை கொட்டி வறுத்த ஆலு டிக்கியாவை ஆல இலையில் வைத்து பிசைந்து அதன் மேலே இம்லி கா ரஸ், தஹி, சாட் பொடிகளை தூவி மரக்குச்சி ஸ்பூனை நட்டு அவன் கொடுப்பதை வாங்க கூட்டமோ கூட்டம்..
இங்கும் அங்கும் ஓடும் நோட்டரி பப்ளிக்குகள்..உள்ளே நடக்கும் நீதிபதியின் விசாரனையோ வேடிக்கையாக இருக்கும். ஒருமுறை கோர்ட்டுக்கு ஏதோ ஒரு ஜோலியாக வந்து நானும் என் மாமாவும் உள்ளே போய் நீதி விசாரணையை வேடிக்கை பார்த்தோம். 'கணம் கோர்ட்டார் அவர்களே' போன்ற சினிமா டைப் வசனங்களோ, நடந்துகொண்டே சரட்டென செந்தாமரை மாதிரி ஸ்டைலாக திரும்பி 'ஆகவே மை லார்ட்' என முடிக்கும் லாயர்களோ கிடையாது. அதெல்லாம் சினிமாவில் மட்டுமே..பப்ளிக் பிராசிகியூட்டர் வாய் கொள்ளாத அளவு பான் போட்டுக்கொண்டு எச்சில் வழியாமலிருக்க தலையை கொஞ்சம் உயர்த்தியபடி பேசி, விசாரனையின் நடுவே அந்தப்பக்கம் போய் சுவற்று மூலையில் துப்பி விட்டு வருவார். சில லாயர்கள் விசாரனையின் நடுவே பொட்டலத்தை திறந்து 'பான்'ஐ ஆசையுடன் வாய்க்குள் தினிப்பதுடன் எதிரே உள்ள நீதிபதிக்கே கொடுப்பதுமுண்டு. நீதிபதியும் அங்கே அவ்வளவு உயரத்திலெல்லாம் உட்கார்ந்திருந்திருக்க மாட்டார்..ஆமாம்.
மன்னிக்கவும்.. அலகாபாத் கோர்ட் வளாகம் மாதிரியே இப்படத்திலும் இருப்பதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நம் கதையையும் புகுத்தி விட்டேன்.
சரி..,படத்துக்கு வருவோம். இதற்குள் மாதவனும் லண்டனிலிருந்து வருகிறார். கணவன் மனைவி தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒருநாள்
மாதவன் அசப்பில் கங்கனா சாயலில் (இரட்டை வேடம்) இருக்கும் ஒரு விளையாட்டு வீராங்கனையை (குஸும்) சந்திக்கிறார். காதல் கொண்டு இருவரும் மணந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். பாப் முடி மற்றும் லேசாக தெற்றுப்பல்லுடன் வரும் குஸும் (கங்கனா-2) பஞ்சாபி போன்ற ஹரியான்வி மொழியில் பேசி அசத்துகிறார். ஆண் போல அசைந்து நடந்து கலக்குகிறார். கொஞ்சம் முரட்டு சுபாவமும் கூட. 'வோ தேக் கபூத்தர்...' ( அங்க பார் புறா..) என அவர் சொல்ல, எதிரே இருப்பவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பியதும் ஒரே அப்பு...இந்த 'வோ தேக் கபூத்தர்' காலர் டியூனாகி வட இந்தியாவை கலக்குகிறதாம்.
மாதவன் இந்த மாதிரி ரோல்கள் எப்போதுமே அட்டகாசமாக நடிப்பார். படத்தில் நடுநடுவே தான் வருகிறார். நடிக்கிறார். அழுகிறார். இன்னமும் இளமையுடன் அழகாக இருக்கிறார். சொல்வதற்கும் இதற்கு மேல் ஒன்றுமில்லை.
படம் முழுக்க கங்கனா.. கங்கனா...கங்கனா தான்.நடிப்பில் அம்மனி பிச்சு உதறுகிறார். படு ஸ்டைலாக டான்ஸ் ஆடுகிறார். அசால்ட்டாக வசனம் பேசுகிறார். முனுக்கென்றால் மூக்கை சிந்தி அழகாக நடிக்கிறார். நண்பனின் கையிலிருந்து மாஞ்சா நூலை சடக்கென பறித்து மேலே இன்னொரு பத்தங்கை( பட்டம்) அறுத்து விடுகிறார். நேரம் கிடைக்கும்போது தண்ணியும் அடிக்கிறார். உரித்துப்போட்ட வாழை மட்டை மாதிரி படு ஒல்லி.. சைஸ் ஜீரோவில் புடவையுடனும், அத்லெட்டாக ஜீன்ஸ் டி-ஷர்ட்டுடனும் அசத்துகிறார். ஜெயம் ரவியுடன் தமிழில் தாம்தூம் படத்தில் பனங்கிழங்கு மாதிரி ஒல்லி பிச்சானாக வந்த இவரா இப்படி பட்டையை கிளப்புகிறார்?
படம் சக்கை போடு போடுகிறது. சுனிதி சௌஹானின் 'மூவ் ஆன்' பாடல் பஹ்ரைன் ரேடியோ எஃப். எம்.இல் தினம் இரண்டு முறை. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறந்த வசனங்கள். வட இந்தியாவின் சுத்தமான ஹிந்தியில் நிறைய நகைச்சுவை வசனங்கள். நடுநடுவே ஹிந்தி கெட்ட வார்த்தைகளையும் கங்கனா சொல்லத்தவறவில்லை.
30 கோடி பட்ஜெட் படம் முதல் வாரத்திலேயே 90 கோடி வசூலை தாண்டி, இன்றோடு ஒன்பது நாட்களில் 100 கோடியையும் தாண்டியதாம்.
கடைசி சீன் மிகவும் அருமை. தன்னுவும் மன்னுவும் ஒன்று சேர்கிறார்களா என்பது நீங்களே தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியது. அவசரமாக டி.வி.டி வாங்க கடைக்கு ஓடாமல் தியேட்டரில் இரண்டரை மணி நேரம் சிரித்துக்கொண்டே பார்த்தால் மனசு லேசாவது நிச்சயம்...
கங்கனாவுக்கு இதிலும் அவார்டு கிட்டுமாம்...

திருசெந்துரை ராமமூர்த்தி சங்கர்

காலை சுமார் பன்னிரெண்டு மணிக்கு Ramakrishnan Venkataraman(முரளி) யிடமிருந்து குறுஞ்செய்தி.. 'அல் கோபாரிலிருந்து பஹ்ரைன் வந்திருக்கிறேன்.. லஞ்சுக்கு போலாமே'யென. கூடவே நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar உம் தொலைபேசியில் லஞ்ச் சாப்பிட அழைத்தார். முரளி சங்கரின் மைத்துனர். ஆப்பிரிக்காவிலிருந்து சமீபத்தில் சவுதிக்கு மாற்றிக்கொண்டு வந்தவர்.சங்கருக்கு பிடித்த சரவணபவனில் மதியம் சந்திப்பதாக முடிவானது.
அவரது குடும்பம் மற்றும் நண்பர் சங்கர் குடும்பத்துடன் சென்ற வெள்ளியன்று ஒரு நாள் முழுவதும் இனிமையாக கழித்தது மறக்க முடியாத அனுபவம்.
சரவணபவன் க்விக் லஞ்ச், பாயசம், ஐஸ்க்ரீம் முடித்து, நேராக சங்கர் வீட்டுக்கு போய் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அரட்டையடித்தபின் சங்கரின் மனைவி கல்பனா கொடுத்த அருமையான ஃபில்டர் காபி குடித்தபின், மாலை ப்ராம்கோ கோவிலுக்கு போவதாக முடிவானது.
ப்ராம்கோ எனப்படும் கற்பாறை உடைக்கும் தொழிற்சாலையில் தான் அந்த அம்மன் கோவில் உள்ளது. சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வசிக்கும் லேபர் குவார்ட்டர்ஸ் நடுவே உள்ள கோவிலை தினமும் பராமரிப்பது கம்பெனி தொழிலாளர்கள் தான். நகரத்திலிருந்து 20 கிமீ தள்ளி எண்ணெய்க்கிணறுகள் உள்ள பாலைவனப்பகுதியில் கோவில் இருந்தாலும், செவ்வாய், வெள்ளியன்று அங்கே போனால் குர்த்தா பைஜாமாவுடன் பாதி பஹ்ரைன்வாசிகளை பார்க்கலாம்.
ஹார்மோனியம், தபலா, டோலக் சகிதம் அமர்க்களமாக ஹனுமான் சாலிஸா மற்றும் ராம், ஷிவ் சங்கர் பஜன்கள் பாடுவார்கள். கணேஷ், சாய்பாபா, ஷிவ், காளி மாதா, தேவி, ராம் லக்ஷ்மன், ஐயப்பா, பஜ்ரங் விக்கிரகங்கள், சிவலிங்கம் என களை கட்டும் கோவில். நெற்றியில் செங்குத்தாக திலகமிட்டு, கையில் பூஜாரி கட்டிவிடும் கயிறுடன் கப்பர்சிங் மாதிரி வெளியே வருவோம்.
கோவிலுக்கு வெளியே வந்ததும் சீக்கியர்களின் குருத்வாரா. அங்கு குரு க்ரந்த் சாஹிப் மற்றும் தசம் க்ரந்த் படித்து பஜன் நடக்கும். தலையை மறைக்க நமக்கு சிறு துண்டும் நெய் வாசனையுடன் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள்.
கோவிலுக்கு வெளியே தரையில் சுமார் 600, 700 பக்தர்களை உட்கார வைத்து சப்பாத்தி, சன்னா, கீ சாவல் (நெய் அரிசி) , மசாலா சாய் என வயிறு முட்ட மகா பிரசாதம் சாப்பிட்டு திரும்ப 20 கிமீ. தொலைவிற்கு வண்டி ஒட்டி வரும்போது தூக்கம் சொழட்டியடிக்கும்.
அன்று எங்களுக்கு மினி பிரசாதம் (சன்னா, ரோஸ்மில்க்) தான் கிடைத்தது. கோவிலை முடித்துவிட்டு எல்லோரும் எங்கள் இல்லத்திற்கு போனோம். சங்கரின் சுவாரசியமான இளம்பிராய தகவல்களை அவரது சகோதரி மாதங்கி பகிர்ந்துகொண்டார்.
நண்பர் முரளி மாதங்கி தம்பதிகளுக்கு அன்று திருமணநாள் என்பதால் கேக் வெட்டி, செல்ஃபி எடுத்து இரவு உணவு முடித்து எங்கள் அரட்டை கச்சேரி ஆரம்பம்..
சங்கருடன் அரட்டையென்றால் வேறென்ன! திருச்சி பற்றிய பேச்சு தான்....
மைக்கேல் ஐஸ்க்ரீம் கடையிலிருந்து நான்கு கடை தள்ளி ஜகந்நாதன் புக் டெப்போ வீட்டாரின் பையன் (எனது சி.ஏ. நண்பன்) அலாஷியஸ்,Aloysius James
அவனது பெரியம்மா( செல்லா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்) சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி பிரின்சிபாலாக இருந்தது,
வக்கீல் விருத்தாசலம் ரெட்டியார் பையன் பரணி (குப்புசாமி டீச்சரிடம் டியூஷன்),
என்னுடன் கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்திட்ட ஶ்ரீரங்கம் ராகவேந்திரா நகர் காமாட்சிநாதன்,
ஆடிட்டர்கள் சந்தானம், செல்வராஜ், கிருஷ்ணசாமி ஜகந்நாதன், ஜி.பி(GB), குமார்ராஜ்...
சி.ஏ. ராங்க் வாங்கிய சதாசிவம், அவன் தங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுரேஷ், (திருமணத்திற்கு முன் அமெரிக்கா போகும்போதும் வரும்போதும் பம்பாயில் எங்கள் செட்டாநகர் ஃப்ளாட்டில் தங்கும் சுரேஷ் எங்களுக்கு அமெரிக்க சாக்ஸ் வாங்கி வருவான்)
எனது ரூம்மேட் ரங்கு என்கிற பாஷ்யம் ரங்கநாதன்(அம்மா மண்டபம்),
ரங்குவிற்கு தெரியாமலேயே அவனது பெரியம்மா பெண்ணை சி.ஏ. படிக்கும்போதே காதலித்த ஶ்ரீரங்கம் முரளி,
க்ராஃபோர்ட் (கிராப்பட்டி) லிருந்து தினமும் ஸ்கூல் ( St. Joseph's) வரும் என் க்ளாஸ்மேட் ரங்க பிரசாத்,
கூடவே வரும் குட்டி குட்டியாக அவனது சகோதரர்கள் பார்த்தசாரதி Ananthasayanam Thiruvenkatachary (இவர் தற்போது திருச்சி BHEL இல் பொது மேளாளர்),
 மற்றும்
மறந்து போன சிலபல பழைய அக்ரஹாரம் நண்பர்கள்,
'உங்களுக்கு இவனைத்தெரியுமா.. அவனைத்தெரியுமா'வென விசாரிக்கப்பட்ட மதுரா லாட்ஜ் பக்கம், பட்டர்வொர்த் ரோடு, ஆண்டா ஸ்ட்ரீட் நண்பர்கள்,
காசு வாங்காமல் ஊசி போடும் கிலேதார் தெருவில் ஆசுபத்திரி நடத்தும் எனது மைத்துனர் டாக்டர் மனோகர்,
ஒரு நாளைக்கு மூன்று படம் பார்க்கும் சங்கர் நண்பர்கள்,
நந்திகோவில் தெரு ஆடிட்டர் முகுந்தன் ஆபிஸ் நண்பர்கள்,
ஆடிட்டர் முத்துகிருஷ்ணன் (செல்வம் ஹோட்டல் அதிபர்) அலுவலக நண்பர்கள்,
மன்னார்புரம் நால்ரோடு லாட்ஜில் தங்கி வில்ஸ் ஃபில்டரை மூன்றாக வெட்டி (சிக்கனமாம்) புகைத்தபடி ஐ.சி.டபுள்யு.ஏ பாடம் சொல்லிக்கொடுத்த மார்ட்டின்,
வெறும் முந்தைய வருட விடைத்தாள்கள் கொண்டு அவர் என்னை இன்டர் பாஸ் செய்ய வைத்தது,
அக்கவுன்ட்ஸ் டியூஷன் எடுத்த ஜமால் முகமது பேராசிரியர் சுபான்கான்,
செயின்ட் ஜோசப்ஸ், நேஷனல், இ.ஆர். மேநிலைல்பள்ளி நண்பர்கள்,
சுந்தர் நகர் மற்றும் திருச்செந்துரை அக்ரஹார நாட்கள்,
நண்பர் Thiagarajan Arumugam உம் Saravanan Natarajanஉம் உறவினர்கள் போன்ற தகவல்கள்,
நண்பர்கள் Rajagopalan Trichy (கோபுலி) மற்றும் Ranganathan Kothandaraman பற்றி கொஞ்சம்,
வளைகுடா நாடுகளிலேயே ப்ளஸ் 2 வரை படித்து திடீரென சென்னை வந்திறங்கி சமாளிக்கும் எனது மற்றும் சங்கரின் பையன்கள்,
முரளியின் ERHS மற்றும் புட்டபர்த்தி கல்லூரி நாட்கள்,
எனது அலகாபாத் பல்கலைக்கழக பட்டப்படிப்பு நாட்கள், வருடம் முழுவதும் ஸ்ட்ரைக் நடத்தும் அலகாபாத் மாணவர்கள்,
பம்பாயில் சி.ஏ ஃபைனல் பரிட்சை படித்து ஃபெயிலாகி பாஸ் ஆன அனுபவங்கள்....
இரவு சுமார் 11.30 மணியளவில் வேறுவழியின்றி விடைபெற்றுக்கொண்ட முரளி, சங்கர் குடும்பத்தினரை அனுப்ப மனமில்லாமல் அனுப்பிவிட்டு திருச்சி நினைவுகளை அசைபோட்டவாறே சுஜாதாவின் 'ஶ்ரீரங்கத்து தேவதைகள்' ( பெண் வேஷம், திண்ணா, பேப்பரில் பேர்) படித்துக்கொண்டே 12.30 க்கு மேல் அப்படியே உறங்கிப்போனேன்....

ஓவியர் நடனம்

கல்கி, சாவி பத்திரிக்கையென்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ஓவியர் நடனம் அவர்களின் கார்ட்டூன்கள் தான். வாராவாரம் தி.ம.கதிர், சாவி, குங்குமம், குமுதம் மற்றும் விகடன் படிக்கும் குடும்பம் எங்களுடையது. 60 களிலிருந்து படித்து வருகிறோம்.
ஸிம்ஹா, ஶ்ரீதர், கோபுலு, லதா, உமாபதி, மாயா போ
ன்ற பழம்பெரும் ஓவியர்கள் வரிசையில் இருப்பவர்...
இவரது வண்ண ஓவியங்களையோ, ம்யூரல் எனப்படும் சுவர் ஓவியங்களையோ நான் பார்த்ததே இல்லை.
கல்கியிலும் சாவியிலும் கோடுகளினால் வரையப்பட்ட இவரது கார்ட்டூன்கள் அக்காலத்தில் மிக பிரபலம். 'கடுகு'வின் நகைச்சுவை கட்டுரைகளுக்கும், ஜோக் துணுக்குகளுக்கும் இவர் வரைந்த படங்கள் ஏராளம்.
குறும்புக்கார வாண்டுகள், வயதான தாத்தாக்கள், மாமிகள் என் இவர் தனித்துவம் வாய்ந்த ஓவியங்கள் இவருடையது. மூக்கில் சரிந்திருக்கும் கண்ணாடி, காது மடல்களில் உள்ள முடி, வயதானவர்களின் தூக்கி வாரிய பாதி வழுக்கை முடி, கால்சராய் போட்ட சின்ன பசங்கள், பொடி போட்டே விடைத்துப்போன மூக்குடன் உள்ள முகங்கள், கைகளில் உள்ள மயிர்... என மிக நுனுக்கமான சமாசாரங்களையும் விடாமல் வரைந்தவர்.
கோபுலு அவர்கள் கார்ட்டூன்களில் பொதுவாக தனது காரெக்டர்களை தலை முதல் கால் முழுமையாக வரைந்திருப்பாரெனில், நடனம் அவர்கள் அப்படியல்ல.. ஓரிரண்டு கோடுகளை சுண்டியிழுத்து பாதியில் விட்டுவிட்டாலும் ஓவியம் உயிரோட்டத்துடன் ப்ரமாதமாக இருக்கும்.
உதாரணமாக:
தவழும் வேட்டி(இரண்டே கோடுகள்)...
சின்ன பையன்களின் டயர் வண்டி& குச்சி..
வெட்கப்படும் மருமகள்(நெற்றியில் சுருள்முடியுடன்)...
வெற்றுடம்பு மாப்பிள்ளை(பனியனுக்குப்பின்னால் நெஞ்சில் ரோமம்)...
ஈசி சேரில் பேப்பர் படிக்கும் தாத்தா( தலைக்குப்பின்னால் ஓரிரண்டு கோடுகளில் ஈசி சேர்)...
கருப்பு கோட்டு வக்கீல்கள், நீதிபதி...எதிரே ஓரிரண்டு கட்டங்களுக்குள் (கூண்டு) கைகட்டிய குற்றவாளி...
மடிசார் கட்டிய பாட்டியின் ஒரு தோள்பக்கம் முந்தானை வரைவதில்லாமல் மறு தோளில் பின்பக்கமிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் புடவைத்தலைப்பை ஒரே வரியில் வரைந்து அசத்துவார்...
முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பாவாக நடித்தாரென்பதும், முதன்முதலில் இவரை பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியது எழுத்தாளர் தி.ஜா. அவர்கள் என்பதும் இன்று தான் நான் தெரிந்துகொண்ட கூடுதல் தகவல்கள்.
நேற்று அமரரானார்....
முன்பொருமுறை தானே வரைந்த இவரது படத்தை இன்று கரிக்கட்டியால் வரைந்து ஆழ்ந்த இரங்கலுடன்....

கெய்ரோ (எகிப்து)...


'கல்யாண செலவப்பத்தி கவலையே படாதீங்க.. பையன் வீட்டுங்காரங்க நாங்க நல்லா நடத்தி தர்றோம்.. பொண்ணுக்கு வேண்டிய சீர் செனத்தி எல்லாம் நல்லாவே செய்வோம். பையனுக்கு சொந்த ஃப்ளாட் இருக்கு' என பையனின் அப்பா அடுக்கிக்கொண்டே போக அந்த வரனை அமுக்கிப்போட பெண் வீட்டார்களுக்குள் கடும் போட்டி. இதெல்லாம் இந்தியாவிலா என மலைக்க வேண்டாம். இது எகிப்து நாட்டில் சார்!. பையன்களுக்கு அங்கு பயங்கர டிமாண்டு. கலியாணமாகாத சௌந்தர்ய ஸ்த்ரீகள் அங்கே நிறையவாம்.
சென்ற வாரம் எங்கள் விற்பனை மேலாளர் ஆஸாமுடன் நான்கு நாட்கள் கெய்ரோ போகும்போது அந்நாட்டவர்களின் திருமணம் பற்றி அவன் சொன்ன தகவல் இது. பொதுவாக அலுவல் நிமித்தம் அவனுடன் நான் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்நாட்டின் கலாச்சார பழக்க வழக்கங்களை அழகாக எனக்கு விளக்குவான். லெபனீஸ் நாட்டவன். கோபத்தை இம்மியளவும் காட்டாமல் புன்முறுவலுடன் எதிரிகளை கையாண்டு தடயமில்லாமல் அவர்களை அப்புறப்படுத்தி வெற்றிகாணும் சாதுர்யமிக்கவன். வேலையில் திறமைசாலி. பெய்ரூட் மற்றும் பாரிஸில் வளர்ந்து, படித்து 25 வருடங்கள் வளைகுடா நாடுகளில்( என்னுடன் 8 வருடங்களாக) இருக்கிறான். நேரில் பார்த்த மாதிரியே எல்லா சமாசாரத்தையும் சொல்வான். உங்கிட்ட அப்பிடி சொன்னாங்களா என கேட்டால் வைத்தி நாகேஷ் மாதிரி 'சொல்லலை.. சொல்லுவா' என இழுப்பான்.
கெய்ரோ விமான நிலையத்தில் எங்கள் பெயர்கள் எழுதிய அட்டையுடன் நின்றிருந்த படு உயரமான சுருட்டை முடி அன்பர் எங்களை வரவேற்று வரிசையில் நிற்க விடாமல் பாஸ்போர்ட் கன்ட்ரோல் வேலையை லகுவில் முடித்து காரில் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார். அந்த சில நிமிட நேரத்தில் மழை பெய்து ஓய்ந்த மாதிரி சடசடவென பேசித்தீர்த்துவிட்டார் மனுஷன்.
அந்த நாட்டுக்காரர்களே அப்படித்தானாம். வளவளவென்று மூச்சு முட்ட எச்சில் தெறிக்க பேசக்கூடியவர்கள். ஆண் பெண் எல்லோருக்கும் சொல்ல வந்ததை சுறுக்க சொல்லவே முடியாதாம். பஹ்ரைனில் எங்கள் ஆபிசில் விசா சம்மந்தப்பட்ட வேலைகளனைத்தும் செய்பவன் ஒரு இஜிப்ஷியன். விசா கிடைக்க ஏன் தாமதம் என்பதை நாம் கேட்டு அவன் பதில் சொல்லும்போது நாம் ஸ்பஷ்டமாக சகஸ்ரநாமம் சொல்ல ஆரம்பிக்கலாம். அவன் பேசும்போது நாம் குறுக்கே பேசினால் தொலைந்தோம். பாதியில் விட்டு விட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து நம் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைப்பான்.
எங்க விட்டேன்? ஹாங்... டாக்சியில் உட்கார வைத்தார்களல்லவா! பெரிய்ய்ய ஊர் கெய்ரோ. வட ஆப்பிரிக்காவில் உள்ள அரபு நாடுகளிலேயே மிகவும் பழமையான நகரம். உயர உயரமான எல்லா கட்டிடங்களும் புழுதி படிந்து...ரோட்டில் எங்கும் டிராஃபிக் சிக்னல்களே இல்லாதது ஆச்சரியம் தான். அதனால் நிறைய மேம்பாலங்கள். பழைய மாடல் கார்கள் ஏராளமாக ஓடிக்கொண்டிருந்தன. ரோடெல்லாம் ஒரே குப்பை. 20 அடுக்கு மாடியிலிருந்து ஜனங்கள் குப்பை மூட்டையை ஜன்னல் வழியாக வீசியெறய சொத்தென நெடுஞ்சாலையில் விழுந்து தெறித்து..ச்சே..முனிசிபாலிடிகாரர்கள் வேலை செய்வதேயில்லையாம்.
ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு அருகே ஸ்டோர் ஒன்றில் நான்கு நாட்களுக்கு தேவையான பேசும் நேரம் மற்றும் இன்டர்நெட் வசதிகளுடன் உள்ளூர் டெலிபோன் சிம் கார்டு வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் சிப்பந்திகள் நம்மை நெருங்கி 'ஊர் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து தருகிறோம்' என கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களுக்கு கமிஷன் உண்டே. அஸாம் அவர்களில் பாஸம் என்பவன் கையில் ஓரு இருபது பவுண்டை தினித்து அரபியில் 'நான் தரும் இப்பணத்தில் எங்களை விற்காதே..எங்களுக்கு சேவை செய்... ' ( take this tip and don't sell us.. serve us ) என சொன்னதுதான் தாமதம், உடனே அவன் கிட்டத்தட்ட ஏழெட்டு டாக்ஸிக்காரர்களிடம் பேரம் பேசி அன்று மாலை முழுவதும் மற்றும் மறுநாள் காலை 6 முதல் 11 மணி வரை பிரமிடுகள் மற்றும் ஸ்ஃபிங்ஸ் போன்ற முக்கிய ஸ்தலங்களை சுற்றிப்பார்க்க சிரமமெடுத்து டாக்ஸி ஏற்பாடு செய்தான் (அதாவது மீட்டருக்கு மேல் ஒரு பவுண்டு கூட வாங்காமல் இருக்க)
டாக்சிக்காரர் கமால்(Gamal) உண்டியல் குலுக்கும் பெருஞ்சப்தத்துடன் ஒரு கொலை இருமல் இருமி வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுகணம் க்ளக்கென்று தொண்டையிலிருந்து சளியை அப்படியே ரோட்டில் துப்பியதும் என் திருஷ்டியில் பட்டது. இந்தப்பக்கம் சிகரெட் சாம்பலை தட்டி வண்டியை விரட்டினார். ஜென்மத்துக்கும் சீட் பெல்ட் போடுவதில்லையென சங்கல்பம் எடுத்துக்கொண்டவர் போலும். நிமிடத்துக்கொரு முறை சிணுங்கும் கைப்பேசியை அள்ளி எடுத்து ஆசையாய் உச்ச ஸ்தாயியில் பேசிக்கொண்டும், இடது வலது இன்டிகேட்டர் எதுவும் பாவிக்காமல் முழு சாலையும் தன்னுடையதாக கருதி, உரத்த குரலில் ஆஸாமுடன் சம்வாதம் செய்தபடி தலைதெறிக்க வண்டியை ஓட்ட, நான் சீட் நுனியில் சஷ்டி கவசம் முனுமுனுக்க ஆரம்பித்தேன்.
பழங்கால எகிப்திய பொருட்கள் விற்கும் கான்-அல்-கலிலி மார்க்கெட் பகுதிக்குப்போய் 'நோ பார்க்கிங்' பகுதியில் வண்டியை நிறுத்தவும் நேராக எங்களை நோக்கி வந்த போலீஸ்காரர் டாக்சி டிரைவரை குசலம் விசாரித்துவிட்டு 10 பவுண்டுகள் வாங்கிக்கொண்டு நகர்ந்தார். எல்லாமே இயந்திர கதியில் ஒரு மார்க்கமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது அங்கே...லஞ்சம் தலைவிரித்தல்ல.. குத்தாட்டமே போடுகிறதாம்.
குறுகிய சந்துகளில் ஏராளமான கடைகள். பாப்பிரஸ் எனப்படும் எம்பிராய்டரி போன்ற படங்கள், காபி கோப்பைகள், பாசி மாலைகள், கண்ணாடி சிலைகள், பழைய டைப்ரைட்டர்கள், உபயோகித்த டெலிபோன்கள்...கூவி கூவி நம்மை அழைத்தார்கள்.. விலையைப்பற்றி கேட்டால் மாட்டினோம். நடுவே ஒரு தேநீர் விடுதி... வெளியே சின்ன நாற்காலியில் நாங்கள் அமர, எங்கள் முன் சிறிய சுலைமானி கோப்பையில் கருப்பு டீ.. அதில் ஒரு சிறிய கொத்து புதினா....அருமை.
மற்றபடி சொல்லிக்கறமாதிரி வேறு ஒன்றும் விசேஷமில்லை அந்த மார்க்கெட்டில்.
குஷாரி ரைஸ் எனப்படும் எகிப்திய மஞ்சள் அரிசி, காபூலி சன்னா, தக்காளி விழுது, எள்ளு மற்றும் வறுத்த வெங்காயம் தூவிய அரிசி உணவு சாப்பிட்டு திரும்ப விடுதி வந்து சேர்ந்தோம். சாதாரண வீட்டு உணவுக்கே வாயு உபாதை உள்ள எனக்கு எகிப்திய மஞ்சள் அரிசியும் காபூலிச்சன்னாவும் சேர்த்து வயிற்றில் 'மானாட மயிலாட' நடத்தின.
சில வருடங்களுக்கு முன் எழுந்த புரட்சி, கலவரங்கள், சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றங்கள் அங்கு அமைதியை பறித்துக்கொண்டதற்கு அடையாளமாக அங்கங்கே பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் நம்மை நிற்க வைத்து கையை தூக்கச்சொல்லி கிச்சு கிச்சு மீட்டினார்கள். சுற்றுலாத்துறை முடங்கி, வெளிநாட்டவர்களே வருவது குறைந்து தங்கும் விடுதிகள் பாதி காலியாம்.
மறு நாள் காலை 6.30 க்கு டானென்று கமால் வரவே, டாக்ஸியில் பிரமிடுகள் பார்க்க போனோம். அரபி மற்றும் ஆங்கிலம் பேசும் ஒரு இளைஞனின் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தோம். அவனே கைடு. மொத்தம் ஏழெட்டு பிரமிடுகள், ஒன்று ராஜா தனக்கு கட்டிக்கொண்டது, ஒன்று அவர் மனைவிக்கு, ஒன்று இரண்டாம் மனைவிக்கு என ஏக காலத்தில் பெண்களையும் பிரமிடுகளையும் கட்டிக்கொண்ட அரச கதையை சுவாரசியமில்லாமல் கேட்டோம்.
பிரமிடுகள் கட்டப்பட்ட சுண்ணாம்பு கற்கள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று டன் எடையாம். வெளிநாடுகளிலிருந்து கற்கள், நைல் நதி மூலம் மரங்கள், குதிரைகள் மூலம் பாலை வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அவ்வளவு உயர்த்திற்கு கயறுகளால் உயர்த்தப்பட்டு, முப்பத்தைந்தாயிரம் தொழிலாளிகள் மற்றும் பதினைந்தே பொறியாளர்களுடன் இருபது வருடங்களில் கட்டப்பட்ட பிரமிடுகளாம். உயரம் சுமார் 150 அடி. கொஞ்சம் நகர்ந்து அடுத்த பிரமிடுக்கும் அதே மாதிரி கற்கள், மரங்கள், நைல் நதி...என ஆரம்பித்தவனை ' போதுண்டா ராசா.. மொத்தம் ஒம்பது பிரமிடையும் அப்பிடித்தான் கட்டினாங்க இல்லியா' என கேட்டு அவனுக்கும் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுத்தேன்.
அடுத்து கொஞ்ச தூரத்தில் மிக பிரம்மாண்டமான ஒரே கல்லில் செதுக்கிய மனிதத்தலை மற்றும் சிங்க உடலுடன் கூடிய ஸ்ஃபிங்ஸ். மினி ஃப்ராக்குடன் கமல் பாடும் 'பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்' காக்கிச்சட்டை பாடல் ஞாபகத்துக்கு வந்தது.
சாதாரணமாகவே எகிப்தியர்கள் வளவளவென பேசும்போது, அந்த கைடு கடைசியில் எங்களிடம் பணம் கறக்கும்போது சுறுக்கவா பேசுவான்? அவன் என்னென்னவோ அரபியில் விடாமல் பேசினாலும் ஆஸாம் சாந்தமாக ஓரிரு வார்த்தைகளே சொல்லி அவனை அன்போடு அனுப்பி வைத்தான். 'அப்பிடி என்னதான் அவன் கிட்ட சொன்னே?' என கேட்டேன்..'தொலைச்சுப்புடுவேன் படவா' என்றான். கைடை..
காலை பதினோரு மணிக்கு விடுதி வந்து சேர்ந்தோம். எங்கள் குழுமத்தின் கம்பெனி ஒன்றிற்கு எகிப்திய கால்நடை மருத்துவர் ஒருவரை சமீபத்தில் எங்கள் சேர்மன் பஹ்ரைனில் நேர்க்காணல் செய்து, பிறகு கெய்ரோவில் நான் தங்கியிருந்த விடுதிக்கு அவர் வந்து offer letter வாங்கிக்கொள்வதாக ஏற்பாடு. அந்த vet என்னை போனில் அழைத்தார். சுத்தமாக ஆங்கிலம் தெரியாது அவருக்கு. 'அய்யா.. நான் ஆபிஸ் வேலையா வெளியே போகனும்.. நீங்கள் சாயங்காலம் தானே வருவதாக இருந்தது?' என்பதை நானும் ஓரிரு அரபி வார்த்தைகள் கலந்து முழுக்க ஆங்கிலத்தில் பேச, பதிலுக்கு அவர் ஓரிரு ஆங்கில வார்த்தைகள் கலந்து முழுக்க அரபியில் பேசினார். வீ.பா. கட்டபொம்மன் மற்றும் பராசக்தி வசனங்களை அரபியில் பேசினால் அப்படித்தான் இருக்கும். Lobby, reception போன்ற வார்த்தைகளை அவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் எனக்கு தொண்டை வற்றி கண்ணில் நீர் முட்டி, அடுத்த அரை மணிக்குள் அவரே என் முன் வந்து நின்றார்.
என்ன ஆச்சரியம்! சுமார் முப்பதே வயது மதிக்கத்தக்க இளைஞர். ஆங்கிலேயரைப்போன்று சிவந்த நிறம், தூக்கி படிய வாரிய தலைக்கு மெழுகு ஜெல், முழு சவரம் செய்த பச்சை முகத்துடன் சுகந்தம் வீச, ஜியார்ஜியோஅர்மானி சூட்டில் படு ஸ்மார்ட்டாக வந்த அவரா அரபியில் கட்டபொம்மன் வசனம் பேசியவரென வியந்தேன். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு, லெட்டரை வாங்கிக்கொண்ட அவர் மிகவும் சௌஜன்யமாக பேசினார். என்னை தனது விருந்தினராக ஒரு நாள் முழுவதும் கெய்ரோவை சுற்றிக்காட்டி மாலை காசினோ (சூதாட்டம்) மற்றும் பப்புக்கு(pub) அழைத்துப்போவதாக அன்போடு கேட்டுக்கொண்டதை நானும் அன்போடு மறுத்தேன்.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும்போதே எனது காரியதரிசி, 'ஶ்ரீதர்.. அங்கே லைஃப் ஸ்டைல் கொஞ்சம் வேற மாதிரி... பஹ்ரைன் மாதிரியில்ல... சினிமா தயாரிப்பு ரொம்ப பிரபலம்.. பாப்பிசை கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், மாடலிங், சூதாட்ட காசினோக்கள் போன்ற இரவு வாழ்க்கை க்ஷஏத்ரங்கள் அதிகமென சொல்லியனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது.
90களில் பஹ்ரைன் வந்த புதிதில் சில பிரம்மச்சாரிகளுடன் தங்கியிருந்த போது தினமும் டீவியில் நாங்கள் எகிப்திய அரபிப்படங்கள் பார்ப்பதுண்டு. கிட்டத்தட்ட யதார்த்தமான இந்தியப்படங்கள் மாதிரி தான். முக்காவாசி படங்களில் நம்மூர் அனுமந்து சாயல் ஹீரோ. அம்மா அப்பா,குழந்தைகள், டூயட், கௌரவம் பட 'அதிசய உலகம் ரகசிய இதயம்' போன்ற க்ளப் டான்ஸ், வில்லன் அடிதடிகளுடன் படம் சுபமாக முடியும். ஆண்கள் பாடும் எல்லா பாப்பிசை பாடல்களும் கிட்டத்தட்ட'அழகிய லைலா..இது அவளது ஸ்டைலா' டைப் .... பெண் பாடகர்கள் பிரசவ வலி வந்தது போல பாடுவார்கள்.
பண்டைய எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடு பிரமிடுகள் தான். ரோமப்பேரரசு போன்ற வெளிச்சக்திகளால் ஆளப்பட்ட நாடு. நைல் ஆற்றுப்பள்ளத்தாக்கு பல அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. கணிமவளம், கட்டுமானம், எகிப்திய முறை கணிதம், மருத்துவ முறை, வேளாண்மை, நீர்ப்பாசன முறைகள், முதல் கப்பல்கள், தோல் மற்றும் கண்ணாடித் தொழினுட்பம், வங்கிகள், இலக்கிய வகைகள்... இதெல்லாம் இந்த நான்காயிரம் வருடங்களில் உருவாகி சமூக வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் வழிவகுத்தது.
அடுத்த மூன்று நாட்கள் ஆபிஸ் வேலையாக வெளியே சுற்றியதால் நேரம் போனதே தெரியவில்லை. மாலையில் சில மால்கள் சென்று பார்த்தேன்.. விசேஷமாக ஒன்றுமில்லை. இந்திய ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஸ்கூட்டர்கள் சாலைகளில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
உலகிலேயே நீளமான நதியான நைல் நதியின் கார்னிஷ் பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. மக்களின் பயமே காரணமாம். படகு சவாரிக்காக காத்திருந்த 'நைல் க்ரூஸ்' படகு, திருச்சி பஸ் ஸ்டான்டில் விராலி மலை போகும் பஸ் மாதிரி பரிதாபமாக காலி...GPS மூலம் நைல் நதிக்கரை ஓரத்திலேயே ஒரு லெபனீஸ் உணவகத்தை கண்டுபிடித்து அருமையான உணவு சாப்பிட்டு ஹோட்டலுக்கு திரும்பி வந்தோம்.
நாங்கள் பல நாடுகளிலிருந்து நிறைய உணவு சம்மந்தப்பட்ட பொருட்களை பஹ்ரைனுக்கு இறக்குமதி செய்து உள்ளூர் சந்தையில் விற்கிறோம். நாலைந்து நாட்கள் எகிப்திய பயணத்தில் வெற்றிகரமாக நிறுவனத்திற்கு தேவையான பாலாடைக்கட்டி(சீஸ்), போன்ற சில உணவுப்பொருட்களின் விநியோக உரிமை கிடைத்தது.
கடந்த ஐந்து வருடங்களில் நிறைய அரசியல் நிகழ்வுகள். பல ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து மக்களின் புரட்சி வெடித்து, ஆட்சி கவிழ்ந்து, பிறகு சிறிது காலமேயிருந்த முஸ்ரி ஆட்சியும் அகற்றப்பட்டு தற்போது சிசியின் அரசாங்கம்...அமைதியை இழந்து கொஞ்சம் பீதியில் இருக்கிறார்கள் மக்கள். ஏர்போர்ட், மால்கள், விடுதிகள் என எங்கு போனாலும் பாதுகாப்பு சோதனை. ஹமாஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் வேறு.
பஹ்ரைனிலிருந்து கிளம்பும்போதே எங்கள் அலுவலகத்தில் ஜாக்கிரதையாக போய்ட்டு வாவென எச்சரித்து, பொது இடங்களில் நான்கு விரல்களை உயர்த்தி இப்படி🏿 காட்டாதே என சொல்லியனுப்பினார்கள். காட்டினால் என்னாகும்?. கம்பிகளுக்குப்பின்னால் கட்டம்போட்ட சட்டையுடன் நிற்க வேண்டிவருமாம். 'நான்கு விரல்கள்' எதிர்கட்சி சின்னமாம். கெய்ரோ ஏர்போர்ட்டில் தூரத்தில் நிற்கும் ஆஸாமை பார்த்து 'ஹையா! நமக்கு கேட் நம்பர் 4' என ஜாலியாக நான் கையை தூக்கியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படித்திருக்க முடியாது. முனுக்கென்றால் கோபம் வருகிறது இவர்களுக்கு...
பின்னே இருக்காதா! இராணுவ அணிவகுப்பிலேயே தங்கள் அதிபர் அன்வர் சதாத்தை போட்டுத்தள்ளியவர்களாயிற்றே!

இவளே எங்கள் அன்னை



கிளினிக்கிலிருந்து இரவு பத்து மணிக்கு மேல் வரும் மூத்த பெண்ணுக்காக கவலையுடன் காத்திருப்பாள்.
அடுத்து, கணவன் தனது ஆஸ்பத்திரி மற்றும் கிளினிக்கில் கடைசி நோயாளியை பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு மேல் வரும் வரை அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்து விழித்திருப்பாள்.
காலை ஐந்தரை மணிக்கு எழுந்து டிக்காஷனை போட்டு,குளித்து, அவசரம் அவசரமாக சமையலை முடித்து, கணவன் மற்றும் பெண்களை எழுப்பி காபி சப்ளை செய்து, Ellebee(நாய்)க்கு தயிரசாதம் வைத்து, காலை டிபன் எல்லோருக்கும் தயார் செய்து, டப்பாக்கள் கட்டி, அரைகுறையாக தானும் சாப்பிட்டு, காத்திருக்கும் ஆட்டோவில் ஏறி அவசரமாக ஸ்கூலுக்கு ஒடுவாள்.
ஸ்கூலுக்கு ஓடும் முன் மறக்காமல் கீழ் போர்ஷனில் இருக்கும் தன்(என்) அம்மாவிற்கு டிபன் கொண்டு போய் கொடுத்து, அம்மா தரும் டீயையும் அவசரமாக குடித்துவிட்டு ஒடுவாள்.
நடுவே நான் (பஹ்ரைன்), என் தம்பி (மஸ்கட்) அண்ணன் பாம்பேயிலிருந்தும் குடும்ப சகிதம் லீவுக்கு திருச்சி போயிருக்கும்போது எட்டரை மணிக்கு ஸ்கூல் கிளம்பும் முன் எல்லோருக்கும் இரண்டு வகை டிபன், மதிய உணவுக்கு சூப்பர் மோர் குழம்பு, ரைஸ் புலாவ் என வெரைட்டியாக எங்களுக்கு சமைத்து வைத்துவிட்டு ஸ்கூலுக்கு ஓடுவாள் (இரண்டாவது காபியும் கொடுத்துவிட்டு).
எங்கள் மூத்த சகோதரி புற்றுநோயால் சில வருடங்கள் முன் இறக்க, பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவளது பெண்ணை தன் மூன்றாவது பெண்ணாக வளர்த்து எம்.பி.ஏ படிக்க வைத்து, கல்யாணம் செய்து வைத்து( அவளும் பஹ்ரைன்) , அவளது பிரசவத்தையும் பஹ்ரைன் வந்து பார்த்துக்கெண்டவள்.
மாலை ஐந்து மணிக்கு வீடு வந்ததும் மூத்த பெண் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து பணிக்கர் ஜோஸியர் மற்றும் செகண்டு ஒபீனியனுக்கு இன்னொரு ஜோசிரியரிடமும் ஓடி, வரும் வழியே உறையூர் வெக்காளியம்மன் கோவில், அவ்வப்போது மெமோக்ராஃபி, பாப்ஸ்மியர் என பெண்களுக்கே உள்ள பிரச்சினைகளுடன் தனது டாக்டர் கணவரை கூட தொந்திரவு செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு ஒடுவாள்.
' என்னடா ஶ்ரீதர்! இவளுக்கு ஸ்கூட்டி வேணுமாமே... பயமாயிருக்கே' என போனில் என்னிடம் கேட்பாள், சென்னையில் தனியாக தங்கிக்கொண்டு ஃபைனல் சி.ஏ. படித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது பெண் பற்றி பேசும்போது..
கிடைத்த கல்லூரி உதவி பேராசிரியர் பணியை உதறித்தள்ளிவிட்டு எம்.காம்., எம்.எட்., எம். ஃபில் படிப்புடன் ஸ்கூல் உத்தியோகத்தில் உள்ளூரிலேயே இருந்தாள்.(சீதா லட்சுமி ராமசாமி பள்ளி/கல்லூரி)
இவ்வளவு வேலைகளுக்கும் நடுவிலும் பேப்பர் திருத்த பதினைந்து நாட்கள் தஞ்சாவூர் தினமும் போய் வருவாள்..
அம்மாவுக்கு சோடியம் imbalance ஆகி மேலும் சிறுநீர் குழாய் இன்ஃபெக்‌ஷன் (UTI) வந்து உடம்பு முடியாமல் போக, தன்னுடன் வைத்துக்கொண்டு, பாத்ரூமில் மயங்கி விழுந்தவரை தனியாகவே ஹாலுக்கு இழுத்து வந்து பிறகு கணவருக்கு போன் செய்து ரொம்ப கஷ்டப்பட்டவள்....
82 வயதில் கர்ப்பப்பை புற்றுநோயால் வாடிய அம்மாவின் ஆபரேஷனுக்கு கணவரின் உதவியுடன் டாக்டர் ரவி அய்யங்கார், டாக்டர் பூங்கோதை போன்றவர்களிடம் ஓடி அடுத்த ஒரு மாதம் ரேடியேஷன் தெரபி இத்யாதிகளுக்கு தினமும் அலைந்து சிரமப்பட்டு அம்மாவை காப்பாற்றியவள்.
ரேடியேஷன் தெரபி முடிந்ததும் கொல்லுப்பேரன் பிறப்பதை பாட்டி பார்த்துவிட வேண்டுமென அம்மாவை தனியாக பஹ்ரைன் கூட்டி வந்து என் மூத்த சகோதரி மகள் பிரசவத்திற்கு நான்கு மாதங்கள் இருந்து பார்த்தவள்.
திரும்ப ஊருக்கு போய் மறுபடியும் தனியாக வலியால் அம்மா துடிக்க, சத்தம் கேட்டு யாரோ இவள் ஸ்கூலுக்கு போன் செய்து, வீட்டுக்கு ஓடி வந்து அம்மாவை அள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரி ஒடி, இரவு 2 மணிக்கு எங்களுக்கு போன் செய்து 'எல்லாம் வேஸ்ட்டுடா.. வயிறு, லிவரெல்லாம் பரவீடுச்சாம்' என மெதுவாக விசும்பல்...
தன்னை இவ்வளவு அருமையாக பார்த்துக்கொண்ட இவள் மீது உயிரையே வைத்திருந்த எங்கள் அம்மா, ஆஸ்பத்திரியில் இறக்கும் முன் அந்த ஒரு சில நிமிடங்கள் லேசாக புத்தி சுவாதீனமிழந்து
இவளையே கன்னா பின்னாவென திட்டியபடியே கண்ணை மூடியதை அழுதுகொண்டே பொறுமையாக ஏற்றுக்கொண்டவள்..
கோபமென்பது துளிகூட அறியாதவள். பொறுமையா பொறுமை...அவரும் அப்படியே. இரண்டு பெண்களையும் ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லாவற்றையும் செய்யக்கூடியவள். டீவி சீரியல், சினிமா என எதுவுமே அறியாதவள்...
கடந்த ஆறேழு வருடங்களில் குடும்பத்திலேற்பட்ட நான்கு இறப்புக்களால் இவள் பட்ட கஷ்டங்கள் சொல்லிலடங்கா.
என்னை விட இரண்டே வயது மூத்த 56 வயதான இவள்( hemalatha ma) , சகோதரர்கள் எங்கள் மூவருக்கும் தாயானவள்..
இனி வாழ்க்கையில் ஒருபோதும் கஷ்டப்படாமல்
இவளை காக்க இறைவனை வேண்டி, அன்னையர் தினமான இன்று எங்கள் அன்னையாக இவளை நினைத்து போற்றுகிறேன்....

அப்பாவின் பிறந்த நாள்



கரூர்,காரைக்குடி,புதுக்கோட்டை,சேத்தியாத்தோப்பு போன்ற ஊர்களுக்கு பாங்க் ஆடிட் போகும்போது காலை 4 மணிக்கு திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் சக CA நண்பர்கள்Ayyampillai Ponnusamy , Subramaniam ChidhambaramArunmozhi MurugesanSubramanian Rajaseharan எல்லோரும் கூடுவோம். அந்த விடிகாலை தனது ஹீரோ மெஜஸ்டிக் மொப்பெட்டில் என்னை ட்ராப் செய்ய அப்பா வருவார்.
'பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் முன்னாலேயே ட்ராப் பண்ணுங்க'என அப்பாவிடம் சொல்வேன், நண்பர்கள் அப்பாவை பார்ப்பது பிடிக்காமல்...
'இருக்கட்டும்டா... அங்கல்லாம் ஒரே இருட்டு'என அக்கரையுடன் சொல்பவரை அதட்டி வண்டியை நிறுத்தி செலவுக்கு அவரிடமிருந்து பணத்தையும் பிடுங்கிக்கொண்டு நண்பர்களை பார்க்க பஸ்ஸ்டாண்டுக்குள்ளே ஓடுவேன், திரும்ப அதே இருட்டில் அவர் பத்திரமாக வீடு போய்ச்சேருவாரா என கவலைப்படாமல். வயது அப்படி..
அடுத்த அரை மணியோ ஒரு மணியோ மற்ற எல்லா நண்பர்களுக்காகவும் காத்திருந்து டீ, பிஸ்கட்டெல்லம் சாப்பிட்டு, ஓஹோவென சப்தமாக சிரித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து, 'ஹலோ...உயிருள்ளவரை உஷா' போடுங்க என கண்டக்டரிடம் சொல்லி, பஸ் ஸ்டாண்டை விட்டு மெதுவாக வெளியே வரும் பஸ்ஸிலிருந்து பார்த்தால், தூரத்தில் எனக்குத்தெரியாமல் இன்னமும் தனது வண்டியுடன் அப்பா ஒரு மணி நேரத்துக்கு மேல் இருட்டில் காத்திருப்பது தெரியும். பஸ் போன பின் அவர் கிளம்புவார். 'ச்சே... அவருக்கும் ஒரு டீ வாங்கி கொடுத்து அனுப்பியிருக்கலாம்' என குற்ற உணர்ச்சி மெல்ல எழுந்தாலும் 'இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ' பாடல் சத்தத்தில் அப்பா என்பவர் சடுதியில் மறக்கப்படுவார்..
சில வருடங்கள் முன் திருச்சியில் எங்கள் வீட்டின் அருகேயுள்ள சலூனுக்கு போய் ' வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து அவருக்கு சவரம், மாசமொரு முறை தலைமுடி வெட்டனும்.. ஒரு வருஷத்துக்கான பணம் இப்பவே கொடுக்கறேன். நாங்க ஊருக்கு போயிட்டா அம்மாவைத்தவிர கூட பாத்துக்க யாருமில்ல' என கெஞ்சாத குறையுடன் கேட்டும் கடைக்காரர் ' வீட்டுக்கெல்லாம் வர மாட்டோம்.. அவரை மெதுவா யாராவது கடைக்கு கூட்டிக்கிட்டு வர்றதா இருந்தா பண்ணுவேன்' என பிடிவாதமாக சொல்லிவிட்டார். கடை எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே..
பார்க்கின்சன்ஸ் நோயால் கடைசி ஐந்து வருடம் அவதிப்பட்டு, வாயிலிருந்து சதா எச்சில் ஒழுகி முன் பக்கம் சட்டையைல்லாம் நனைந்து,பேச்சு குளறி, அவர் பேசுவது யாருக்கும் புரியாமல், 'சொல்றத கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன்' என சில முறை சலித்துக்கொண்ட எனக்கு இப்போதும் குற்ற உணர்ச்சியே..
கோ ஆபரேடிவ் சப் ரிஜிஸ்ட்ராராக இருந்த அவரது நேர்மையே நிறைய பேருக்கு சங்கடத்தை கொடுக்க வாழ்நாள் முழுவதும் சோதனை தான். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பந்தாடப்படுவார்..வாடகை வீட்டிலேயே ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில் ரிடையர் ஆன அதே நாளில் தன் பெண்ணின் (என் அக்கா) திருமணத்தை நடத்த, கோ ஆபரேடிவ் துறை அலுவலர்கள் நிறைய பேர் கோபத்தில் திருமணத்திற்கு வரவில்லை...(மனுஷன் தானும் சம்பாரிக்காம நம்பளையும் சம்பாரிக்க வுடல..)
கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஓடி விட்டது. கடைசி இரண்டு வருடங்கள் பேசுவதற்கு முயற்சிப்பதை விட்டு விட்டு மௌனமாகவே இருந்தார்.ரிடையர் ஆகும் வரை எங்களுக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்தவர் அடுத்த 20 வருடங்கள் எளிமையாகவே இருந்து நாங்கள் மாதாமாதம் அனுப்பும் பணத்தையும் சேர்த்து திரும்ப எங்களுக்கே வைத்துவிட்டுப்போனார்.
அவருக்கு பலமே அம்மா தான்.. அவர் சட்டையில் ஒழுகும் எச்சிலையும், வாயையும் நொடிக்கொருமுறை முகம் கோணாமல் துடைக்கும் அம்மா....
இறைவனுக்கு நன்றி... அவர் 2011இல் இறக்கும் வரை அம்மாவுக்கு எந்த உடல் உபாதை இல்லாமல் அடுத்த இரண்டு வருடங்கள் கழித்தே அழைத்துக்கொண்டதற்கு...
அப்பாவின் பிறந்த நாள் மற்றும் பெற்றோரின் மண நாள் இரண்டும் சேர்ந்து வரும் இந்நாளில் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருப்பினும்.. எகிப்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு அப்பா அம்மாவின் அறிய புகைப்படம் அனுப்பிய என் சகோதரி மகள் Srikamya Badrinath க்கு நன்றி....

நாராயணமூர்த்தி

80களில் ஒரு நாள் தன் சகாக்களுடன் அமெரிக்க நியூயார்க் நகர் வோல் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு நிறுவனத்தின் அதிபர் முன்னால் இவர் அமர்ந்திருந்தார்.
'எங்க நிறுவனத்தின் ப்ராஜெக்ட்டை முடிச்சுக்குடுக்க முன் வந்ததுக்கு நன்றி..போய்ட்டு வாங்க.. பதில் போடறோம்' நக்கலாக சிரித்தவன்னம் கை கொடுத்தார் அந்த அமெரிக்கர்.ஆறு மாதமாகியும் பதிலில்லை.
மறுபடியும் அமெரிக்க பயணம்... மிகக் குறைந்த எகானமி கட்டனத்தில் பயணம் செய்து, ஒர் இரவுக்கு சுமார் 100 டாலர்கள் விடுதியில் தங்கி, மறுபடியும் அந்த நிறுவனத்துக்கு போனார் இவர்.
" ஆமா.. நீங்க இந்தியாவுல எங்க ப்ராஜெக்ட பண்றப்ப நாங்க தூங்கிகிட்டிருப்போம். மறு நாள் இது விஷயமா நாங்க உங்க கூட பேசனும்னா நீங்க தூங்கிக்கிட்டு இருப்பீங்க.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா" மறுபடியும் எகத்தாளமாக கேட்ட அந்த அதிபரிடம் இவர் பொறுமையாக விளக்கினார்.
"கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பு...எங்க ஆட்கள் 24 மணி நேரம் வேலை செய்வாங்க...ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட தகவல்களை வீட்டுக்கு போறதுக்கு முந்தி எங்களுக்கு அனுப்பிட்டு நீங்க நிம்மதியா குறட்டை விட்டு தூங்கப்போங்க.. மறுநாள் காலைல நீங்க ஆபிஸ் வர்றப்ப உங்க டெஸ்க் டாப்புல எங்க ரிப்போர்ட் ரெடியா இருக்கும். அது விஷயமா பேசனும்னா எங்க டீம் லீடர்ஸ் முழுச்சிக்கிட்டிருப்பாங்க.. எப்பூடீ...?"
இவர் கண்களில் தெரியும் ஒளி, அந்த பதிலில் காட்டிய நம்பிக்கை, சேவையின் தரத்தின் மேலுள்ள அக்கறை, கவனத்தையும் உழைப்பையும், அறிவுத்திறனையும் முதலீடாகக்கொண்ட நிறுவனம்.. சில நொடிகளில் அமெரிக்கரின் மனம் மாற, ஒப்பந்தம் கையொப்பமானது.
அடுத்த சில வருடங்களில் அடுக்கடுக்காக நிறைய ப்ராஜெக்ட்டுகள், காளான்கள் போல் முளைத்த கால் சென்ட்டர்கள்.. ஜட்டி தெரியும் ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள், காதில் வயரை சொறுகிக்கொண்டு, புடைத்த மணி பர்ஸுடன், முதுகில் மடிக்கணினி மூட்டை அல்லது முதுகோடு அப்பிக்கொண்டு இளம் பெண்ணுடன் பல்ஸரில் உறுமியவன்னம், கப் கார்னுக்கு மாறி, பட்டர் நான் மஞ்சூரியன் சுவைத்து, மால்களில் உலவி, சினிப்ளெக்ஸில் உரசி.... அப்பப்பா... இளைஞர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புக்கள்...'ஓ கே கண்மணி' வரை போய் விட்டோம்...
தகவல் தொழில் நுட்பம் ஜினோ மாதிரி பண்மடங்கு உயர்ந்து இந்தியப்பொருளாதாரம் வளர்த்தது இவரது உபயத்தால்..
இவர்..பத்ம விபூஷன் திரு. நாராயணமூர்த்தி. பிரபல இன்ஃபோஸிஸின் நிறுவனர்.
சுமார் ஒரு மணி நேரம் பஹ்ரைன் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்களுடன் கலந்துரையாடினார்.. நிகழ்ச்சியை நடத்திய மூத்த சி.ஏ.திரு. குமார் கிருஷ்ணமூர்த்தி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன் மிகவும் உற்சாகமான எழுச்சியூட்டும் inspirational பதில்கள்.பிரமிக்க வைத்தார்..
நண்பர்கள் Meenakshi Sundaram Hariharan மற்றும் Uday Shanbhagக்கு நன்றி. இவரது ஓவியத்தை கரிக்கட்டியால் வரைந்து மேடையில் இவருக்கு அளிக்கும் வாய்ப்பை கொடுத்தவர்கள்.
மேடையில் அந்த ஓரிரு நிமிடங்களிலேயே ' ஓவியம் அருமை.. எப்படி இவ்வளவு நேர்த்தியா வரைஞ்சிங்க? இதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக்குடுத்தீங்கன்னா பத்திரமா ஊருக்கு கொண்டு போவேன்.' என சொல்லி ஓவியத்தின் நகலில் கையொப்பமிட்டுக்கொடுத்தார்.
இவரை கௌரவிக்கும் சில நிமிடங்கள் முன்பு தான் மனைவிக்கு கார் விபத்து என போன் வந்து, நிகழ்ச்சி முடிந்தபின் ஓடினேன்(அவருக்கு அடியேதுமில்லையென தெரிந்துகொண்ட பின்)
அவசரமாக மனைவியைக்காண காரை ஒட்டும்போது கூட இவரது சுவாரஸ்யமான பேச்சு தான் மனதில் ஓடியது.
எவ்வளவு பெரிய பூதாகாரமான பிரச்சினையாக இருந்தாலும் அதை எளிய முறையில் சந்திக்க அவர் கொடுத்த டிப்ஸ்..
how to eat a big elephant?
by cutting it into small pieces.

விபத்து

"உங்க வைஃப் உங்க நம்பருக்கு ட்ரை பண்ணிட்ருக்காங்க.. உங்க ஃபோன் சைலன்ட் மோட்ல இருக்கு போல... அவங்க கார் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சாம்"
முன் வரிசையில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் செமினார் ஒன்றிலிருந்தபோது நண்பர்ஓடி வந்து தன் போனை நீட்டினார். முன் வரிசையில் இருக்கக்காரணம் அடுத்து நான் மேடைக்குப் போக வேண்டும். சி.ஏ. சாப்டரின் தலைவர் நண்பர் Meenakshi Sundaram Hariharan வேறு எனக்கு சைகை காட்டி தயாராக இருக்கச்சொல்லிவிட்டார். அன்றைய பேச்சாளரை மேடையில் நான் கௌரவிக்க வேண்டும்.
மனைவி போனில் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாரென்றால் நிச்சயம் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என அர்த்தம.. ஒரு வேளை பாதி சுய நினைவில்....? ஐயோ..சுற்றியிருந்தவர்கள் பேச்சாளருக்கு கரவொலியெழுப்பிக்கொண்டிருக்க, தலையைக்குனிந்து மனைவிக்கு போன் செய்து கேட்டேன் 'are you injured?'.... அவள் ' not at all... but I'm on a highway with cops around me... actually what happened....' போனை அப்படியே கட் செய்து தலை நிமிரும்போது நிகழ்ச்சியை நடத்தும் Maheshkumar Narayan என் பெயரைச்சொல்லி அழைத்தார். ஓடிப்போய் மைக்கை பிடித்து ஓரிரு வார்த்தைகளுடன் பேச்சாளரை கௌரவித்து விட்டு, கரவொலி சப்தம் பின்னால் கேட்க, அநிச்சையாக லிஃப்ட்டை நோக்கி வெளியே ஓடினேன். மறுபடியும் மனைவிக்கு போன்.. வண்டியை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டே போனில் விபரங்கள் தெரிந்துகொண்டேன். ஒன்றும் பயமில்லை, கார் தான் ஒருவழியாகிவிட்டதென அவள் சொன்னாலும் அங்கு போய்ச்சேரும் வரை கொஞ்சம் பயம் தான்.
சவுதி போகும் நெடுஞ்சாலையை பிடித்து பதட்டமில்லாமல் ' ஓம் பூர்புவஸ்வஹ... தத் சவிதுர் வரேன்யம்....' காயத்ரி மந்திரத்தை முனுமுனுத்துக்கொண்டு நெடுஞ்சாலையின் இடது ஓர பிரிவுக்கு (fast lane) மாறி, டிப்பரை அழுத்தவும் முன்னாலே போய்க்கொண்டிருந்த வண்டிகள் சடாரென ஒதுங்கி வழி விட காலை 120க்கு அழுத்தினேன்.
அடுத்த பத்தே நிமிடங்கள்... தூரத்தில் போலிஸ் வண்டிகளின் மின்மினுக்கும் விளக்குகளுக்கு நடுவே மனைவியின் கார்... எமெர்ஜென்ஸி விளக்கை போட்டு வண்டியை சற்றுத்தள்ளி நிறுத்தி காரை நெருங்க, உஷா டிரைவர் இருக்கையில் வழக்கம்போல் குளுகுளு கண்ணாடியுடன்...பக்கத்தில் அவளது நண்பி.. அவருக்கு இன்னும்பெரிய குளுகுளு கண்ணாடி.. காயத்ரி மந்திரம் கப்பென நின்றது. அப்பாடா...யாருக்கும் அடியில்லை. காரின் முன்புறம் ஒரு பாதி உள்ளுக்குள் போய்விட்டிருந்தது. எதிரே இடி வாங்கிய மற்றொரு கார்.. அதன் பின்புறம்...சுத்தம்... மனோபாலா நினைவுக்கு வந்தார்.
அடுத்து விளக்குகள் மின்மினுக்க படகு போலிருந்த டாட்ஜ் சாலஞ்ஜரை நெருங்கினேன். உள்ளே இரண்டு போலீஸ்காரர்கள்..கண்ணாடியை இறக்கி எனது 'அஸ்ஸலாம் அலைக்கும்'க்கு பணிவாக 'வாலேக்கும் அசலாம்' சொல்லி கை கொடுத்தார்கள். 'எப்பிடி இருக்கீங்க?.. பாவம் நீங்க வர நேரமாகிவிட்டதோ!' என பதவிசாக விசாரித்தார்கள். மனைவி ஓட்டிய வண்டி என் பெயரில். அவர் எனது விசாவில் இருப்பதால் உள்ளூர்க்கார ஸ்பான்ஸர் ( அதாவது எங்கள் மனிதவள மேலாளர் ) அவ்விடத்திற்கு வந்து போலீஸ் ரிப்போர்ட் மற்றும் சில காகிதங்களில் கையொப்பமிடவேண்டுமாம். ஸ்பான்ஸர் வர முடியவில்லையென்றால் அவர் வரும் வரை மனைவி போலீஸ் காவலிலிருக்க வேண்டுமாம்.
நான் வரும்போதே ம.வ. மேலாளருக்கு தகவல் கொடுத்திருந்ததால் அவரும் உடனே வந்துவிட்டார். இதற்குள் மனோபாலா கார்க்காரர் என்னை நோக்கி வந்தார். தலையில் எம்பிராய்டரி துணித்தொப்பி, தேவர் மகன் நாசர் மீசை, அரபிகள் அணியும் வெள்ளை அங்கி.. பாகிஸ்தானியர் என சத்தியமாக முகம் சொன்னது. ' ப்ரதர்... பயப்படாதீங்க... உஷாவுக்கு அடி ஒன்றுமில்லை' என்றார். உஷாவா? ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன்.. அவரது வலது கை என் கைக்குள்.. ' உஷா மேல தப்பில்லை.. பச்சை விளக்கு இருக்குறப்பத்தான் அவங்க சிக்னலை நெருக்கினாங்க... ஆனா.. வண்டி சிக்னலை தாண்டும்போது மஞ்சள் வந்துருச்சு.. அவங்க தாண்டிப்போயிருக்கலாம். ஆனா ப்ரேக் போட்டு பாதியில் நிறுத்த, அதற்குள் சிவப்பு விளக்கு வந்து, பக்கவாட்டிலிருந்து திரும்பிய என் வண்டிய மோதிட்டாங்க. டிராஃபிக் விதிப்படி அவங்க மேல தப்பு தான்' என பொறுமையாக விளக்கமளித்தார்.
வண்டிகள் மோதிக்கொண்டவுடன் பாகிஸ்தானிய அன்பர் உஷாவிடம் ஓடி வந்து, ' முதலில் உங்களிருவருக்கும் அடி ஏதுமில்லையே,,, குடிக்க தண்ணீர் வேண்டுமா.. என பரிவாக விசாரித்தாராம். பிறகு வந்து சேர்ந்த போலீஸ்காரர்களும் ' உங்களுக்கு அடியேதும் பட்டிருந்தால் ஆம்புலன்ஸை கூப்பிடவா?' என விசாரித்து, உங்கள் கணவர் வரும்வரை நாங்கள் காத்திருக்கிறோம்... அதுவரை வண்டியை அந்தப் பக்கம் இருக்கும் எமர்ஜென்ஸி பார்க்கான மஞ்சள் பகுதியில் நிறுத்திக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டாராம்.
போலீஸ் காட்டிய காகிதங்களில் சில கையொப்பங்கள்...முடிந்தவுடன், நாளை மறுநாள் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் வந்து அபராதம் கட்டி விட்டுப்போகச்சொன்னார்கள். சென்ற மாதம் முதல் போக்குவரத்து விதிமுறைகளுக்கான கெடுபிடிகள் அதிகரித்து அபராத்தொகையையும் கூட்டிவிட்டார்கள். சுமார் 200 தினார்கள் (ரூ.32 ஆயிரம்) கொண்டு வரவேண்டுமாம். அபராதம் எவ்வளவு என்பது பிறகு தான் தெரியுமாம். உங்க மனைவி வண்டியை நடுவில் நிறுத்தியதால் சிவப்பு விளக்கை கடந்த படம் காமிராவில் பதிவாகியுள்ளது என எங்களுக்கு விளக்கினார்கள். வண்டியை நிறுத்தாமல் போயிருந்தால் சிவப்பு விளக்கு வருமுன் கடந்திருக்கலாம். ஆனால் அந்த ஓரிரு நொடிகளில் எதுவும் நடக்கலாம். வேகமாக வரும் மற்றொரு வண்டி மீது மோதியிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அதற்கு வண்டியை நிறுத்தியதே மேல் எனச்சொல்லி, மறுபடியும் கை கொடுத்துவிட்டு, மற்றொரு
விபத்துப்பகுதிக்கு சைரன் ஒலியெழுப்பியவன்னம் கிளம்பிப்போனார்கள்.
அப்பளம் மாதிரி நொறுங்கிய தன் வண்டியைப்பற்றிக்கவலைப்படாமல் தன் வண்டி மீது மோதிய பெண்களை அந்த நேரத்திலும் கவனித்து, விசாரித்து நான் வரும்வரை பொறுமையுடன் காத்திருந்த பாகிஸ்தானிய அன்பருக்கு என் நன்றியைத்தெரிவித்தேன். 'அர்ரே... விடுங்க ஜனாப்...இந்த காடி, பைஸா, தௌலத்..இதெல்லாம் மறுபடியும் கரீத் சக்தா ஹெ (சம்பாரிச்சுக்கலாம்)... உயிர் திரும்ப கிடைக்குமா.. எல்லாம் அவர் கருணை! '... ஆகாசத்தை நோக்கி கையை தூக்கிக்காட்டி, உருதுவில் சொல்லி தன் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு, தன் காரை இழுத்துச்செல்லும் டோவர் பின்னால் நண்பரின் வண்டியில் போய்விட்டார். சர்ரென்று வந்து பக்கத்தில் வண்டியை நிறுத்தி மற்றொரு பஹ்ரைனி அன்பர் தண்ணீர் போத்தலுடன் ஓடி வந்து ' யாருக்கும் அடிகிடி இல்லையே' என விசாரித்துவிட்டுப்போனார்.
நான் வந்து அடுத்த பத்தே நிமிடங்களில் மேலே சொன்னதெல்லாம் நடந்து முடிய, உஷா தன் தோழியுடன் வண்டியை எடுத்துக் கொண்டு போனார். அடுத்த பதினைந்தே நிமிடங்களில் நான் மீண்டும் எங்கள் சி.ஏ. செமினாருக்குத்திரும்பிய போது, நிகழ்ச்சி முடிந்திருந்து மதிய உணவில் கலந்துகொண்டேன்.
கிரிக்கட் மேட்சில் பாகிஸ்தான் தோற்றுவிட்டால் டீவியை போட்டு அவர்கள் உடைப்பதை ஊடகங்கள் தான் பெரிதாகக்காட்டுகின்றன. ஆனால் இங்குள்ள பாகிஸ்தானியர்கள் அதிகம் இந்திய-பாக் அரசியல் பேசுவதில்லை. நம்மிடம் சகோதரர்கள் போல் பழகுகிறார்கள்.அரபு நாடுகளில் உள்நாட்டுக்கலவரங்கள் நடக்கும்போது நமக்கு ஆபத்து என பயந்தாலும், உண்மையில் அவர்களது கோபம் இந்தியர்கள் மீதல்ல. வளைகுடா நாடுகளிலேயே பஹ்ரைனிகள் தான் மிகவும் மரியாதை தெரிந்தவர்களாம். அந்த பாகிஸ்தானியரும் பஹ்ரைனி போலீஸ்காரர்களும் பாராட்டுக்குறியவர்கள்.
அது சரி.. நான் கௌரவித்த அந்த நபர் யார்? நான் வரைந்த அவரது உருவப் படத்தை என்னிடமிருந்து மேடையில் பெற்றுக்கொண்ட அவர், உலகப்புகழ் வாய்ந்த ஒரு நிறுவனத்தின் நிறுவனர். உலகின் தலைசிறந்த 12 தொழிலதிபர்களில் ஒருவர், இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்... அமெரிக்காவையே வியந்து பார்க்க வைத்தவர்..அவரது ஓவியம் நாளை மறுநாள்..

Monday, June 1, 2015

ஜெர்மனி...

ஒன்றரை வருடம் முன்பு பணி நிமித்தம் ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. நம் பஹ்ரைன் நண்பர் ஷ்யாமின் மனைவி பத்மாவின் சகோதரி ராஜி அங்கே வசிப்பதால் உடனே ஜெர்மனிக்கு போன் போட்டு நான் வருவதையும் சொல்லி விட்டார் பத்மா.
ஜெர்மனியின் டஸ்ஸெல்டார்ஃப் (dusseldorf) விமான நிலையத்தில் இறங்கினேன். நினைவிருக்கிறதா? சென்ற வாரம் அந்த நகரை நோக்கிப்பறந்த விமானத்தின் விமானிதான், தானும் தற்கொலை செய்து கொண்டு 149 சக பயணிகளையும் அநியாயமாக கொன்றான்.
சென்னை, பம்பாய் விமான நிலையங்களைப்போல் பிரம்மாண்டமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாக இருந்தது டஸ்ஸெல்டார்ஃப் விமான நிலையம்.. பாஸ்போர்ட் கன்ட்ரோல் சோதனையில் 'என்ன விஷயமா இங்க வந்தீங்க?' போன்ற சம்பிரதாயமான கேள்விகளுக்குப்பின் பெட்டிகளை எடுக்க ட்ராலியை தேடினேன். அதற்கு 2 யுரோக்கள் என்பதால் இஷ்டத்திற்கு அங்கங்கே ட்ராலிகளை பார்க்க முடியவில்லை. வெளியே வந்து டாக்ஸி பிடித்து கொலோன் (cologne) நகரில் நான் தங்கும் விடுதியின் விலாசத்தை ஓட்டுனர் GPSஇல் பதித்து திரை யில் தோன்றிய சாலை வரைபடம் பார்த்து வண்டி ஓட்டினார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலான பயணம் அது. புதிய இடம். ஜெர்மன் பாஷை தெரியாது. துருக்கிய நாட்டு கிருத்துவனான ஓட்டுனருக்கு ஓரளவு தான் ஆங்கிலம் தெரிந்தது. . வழி நெடுகிலும் மரங்களும், ஆலைகளும் தான். ஜெர்மனி தாதுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும் முன்னனி. பணக்கார நாடுகள் வரிசையில் ஐரோப்பாவில் முதலிடமும் உலகளவில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறதாம். மாலை சுமார் 6 மணிக்கு விடுதி போய்ச்சேர்ந்தேன்.
வரவேற்பறையில் ஸ்டெஃபி கிராஃப் மாதிரி பெண்ணொருத்தி இருந்தாள். ' நீங்க தான் சீத்தாபதி ஸ்ரீதரா?' என வரவேற்று ஓரிரு நிமிடங்களில் அறையை எனக்கு ஒதுக்கி கொடுத்தாள். 'பெட்டிய மேல அனுப்சிடுங்க' என்ற என்னை வினோதமாக பார்த்து 'பெட்டிய நீங்களே தான் அண்ணே எடுத்துக்கனும்' என புன்னகையுடன் சொல்ல நானே லிஃப்ட்டில் கொண்டு சென்றேன்.
பயணத்திற்கு சில நாட்கள் முன் வலையில் (booking.com) புகுந்து ஜெர்மானிய விடுதிகள் அறை ஒன்றை புக் செய்த மறு நிமிடம் 'டொய்ங்' என்று கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்துவிட்டது 'உன் க்ரெடிட் கார்டில் இத்தினி பைசா ஸ்வாஹா' என. 'நோ ரீஃபன்டு' வேறெயாம். பொதுவாக ஐரோப்பா விடுதிகளில் அறை வாடகை மிக அதிகம்.அதே காசுக்கு வளைகுடா நாடுகளில் நான்கு நட்சத்திர விடுதியில் தங்கலாம்.
பால்கனியுடன் கூடிய சிறிய அறை. உள்ளே நுழைந்ததும் ஒரு சிங்க், குளிர்சாதனப்பெட்டி, இஸ்திரி பெட்டி, மற்றும் மேசை நாற்காலி. மேசையின் மேல் ஒரு வரைப்படம். அதில் 'திடீர்னு இங்க நெருப்பு பத்திக்கிச்சுன்னா எந்தப் பக்கம் ஓடனும், படிக்கட்டு எங்க இருக்கு, இப்ப நீ எங்க இருக்க..' போன்ற விபரங்கள்.
அதுசரி...படுக்கை எங்கேயென தேடியபோதுதான் கவனித்தேன், அறையின் மூலையில் ஐந்தே படிகள் கொண்ட மர ஏணியில் ஏறி பரண் மேல் படுக்கையாம். படு செங்குத்தாக இருந்த அந்த ஏணியில் எவ்வளவு சாக்கிரதையாக ஏறினாலும் (இறங்கினாலும்) சறுக்கி தாடை உடைய நிறைய சாத்தியங்கள். கைப்பேசியை முடுக்கி வைஃபை தொடர்புகொள்ள வைஃபையை ஆன் செய்தபோது கவனித்தேன், அவளிடமிருந்து நான்கு மிஸ்டு கால்கள், 'போய்ச்சேர்ந்தியா'...'சாப்ட்டியா' போன்ற குறுஞ்செய்திகள். உடனே அவளிடம் வைபரில் 'நா ஜாக்கிரதையாத்தான் இருக்கேன்'னு நாலைந்து முறை பதில் சொல்லிவிட்டு விடுதியை விட்டு வெளியே வந்தேன்.
கொலோன் நகரின் ஆளரவமற்ற சாலையின் இரு புறமும் மஞ்சள் நிற இலைகளுடன் மரங்கள். மரத்திலிருந்து உதிர்ந்த இலைச்சறுகுகள் ரோட்டில். கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. தூரத்தில் ஒரு கியாஸ்க் (kiosk) தெரிய, அங்கே போனேன். செம்பட்டை முடியுடன் லெதர் ஜீன்ஸ்/ஜாக்கெட்டுடன் இருந்த நடுத்தர வயதுப்பெண் எது கேட்டாலும் 'நே' (இல்லை) என பதில். நான் கேட்ட டெலிபோன் சிப் இல்லையா அல்லது அவளுக்கு நான் கேட்டது புரியவில்லையாவென தெரியவில்லை. தேங்க்யூ சொன்னது தான் தாமதம், உடனே முறுவலித்து, அடுத்த நொடி பக்கத்தில் சாம்பல் ட்ரேயில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை தன் உதடுகளால் கவ்வி, பக்பக்கென ரெண்டிழுப்பு இழுத்து, கீழுதட்டை சுழித்து அசோகன் மாதிரி பக்கவாட்டில் புகையை ஊதித்தள்ளி உடையை சரிசெய்துகொண்டாள் அந்த யுவதி. 'நீ எந்த ஊரு' எனவும் என்னை விஜாரித்தாள். அவளுக்கு கூடமாட உதவி செய்ய இருபது வயது மதிக்கத்தக்க சிவந்த இளைஞனும் பக்கத்தில் இருந்தான். அவளுக்கு தம்பியாம். சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் வாயிலும் சிகரெட். நல்ல வூரு!..
கொஞ்ச தூரம் போய் ஒரு அங்காடியில் பழங்கள், யோகர்ட், கிரீப், பான் கேக் போன்றவை வாங்கிய பின் பெரிய வட்ட வடிவ பன் ஒன்று சாப்பிட ஆசையாக இருக்கவே, 'அந்த பன்ல சீஸ் இருக்கா' வென கேட்டேன். 'ஓ இருக்கே... கூடவே பன்றி இறைச்சியும் இருக்கு' என்றார் பெரியவர். 'டூத் பேஸ்ட்ல உப்பா'? ...வெளியே வந்துவிட்டேன்.
திரும்பவும் விடுதிக்கு வரும்போது அந்த சாலைமுழுவதும் பளிச்சென விளக்குகள். வரிசையாக கடைகள் மெதுவாக திறக்க ஆரம்பிக்க ஜெர்மனியின் இரவு வாழ்க்கை ஆரம்பமாகிக்கொண்டிருந்தது. 'அப்போதேகெ' எனப்படும் மருந்தகங்கள், சின்ன சின்ன உணவு மற்றும் சாராயவிடுதிகள்.. லெபனீஸ் துரித உணவகங்கள், சுற்றும் இரும்புக்கம்பியில் சொருகப்பட்டு நெறுப்பில் சுடப்படும்
சிக்கன் கிரில்லர்கள், கபாப் கடைகள், ரோட்டில் மேசையை விரித்து புகை மண்டலத்தின் நடுவே அங்கங்கே பெரிய மொந்தையில் நுரையுடன் பியர் (beer) பருகும் ஜெர்மன் பெருசுகள்..பக்கத்தில் சன்னமான கிளாசில் சிகப்பு வொய்ன் பருகும் கனமான ஆன்ட்டிகள், அடுத்து ஜிகுஜிகு விளக்குகளுடன் 'ஸெக்ஸ் ஷாப்' என்ற பெயர்ப்பலகையில் அவ்வூர்ப்பெண்டிரின் 'ஷேம் ஷேம் பப்பி ஷேம் படங்கள், சின்னச்சின்ன டாக்ஸிகள், ரோட்டோரத்தில் வறுத்த செஸ்ட்நட் விற்கும் வண்டிகள்...சப்தமின்றி திடீரென குறுக்கே ஓடும் ட்ராம்கள், பாதாள ரயில் நிலையங்கள்...
திரும்ப விடுதி வந்தவுடன் கொண்டு வந்த பக்ஷ்ணங்களை சாப்பிட்டு முடித்ததும் நல்ல உறக்கம். மறு நாள் காலை தான் கவனித்தேன், கழிவறையில் தண்ணீர்க்குழாயே இல்லை. மூலையில் பேப்பர் ரோல் மட்டுமே இருந்தது. அய்யிய்யே! இதெல்லாம் நமக்கு பழக்கமில்லையே! கையில் நகம் வேறு வெட்டவில்லை. அப்போது தான் மனைவி ஞாபகம் வந்தது, இது மாதிரி ஐரோப்பிய நகரங்களுக்கு போகும்போது எதற்காக அவள் முதல் நாளே நாலைந்து தண்ணீர் பாட்டில்கள் (குறிப்பாக ஒரு லிட்டர் பாட்டில்கள்) வாங்கி விடுவாளென்று. சரி..கழிவறையையே பயன்படுத்தாமல் ஓரிரண்டு நாள் சமாளிக்கலாமாவென யோசித்து, அதுவும் கஷ்டமென்பதால் அந்த ஐடியாவையும் 'துடைத்து எறிந்தேன்'. விடுதியின் இலவச காலை உணவு சாப்பிட்டு டாக்சி பிடித்து ஆபிஸ் வேலையாக ஓடி அடுத்த நான்கு நாட்களும் போனதே தெரியவில்லை.
அன்று மாலை பத்மாவின் சகோதரி ராஜி போன் செய்து தன் பையன் அனூப்புடன் விடுதிக்கு வந்துவிட்டார். வரவேற்பில் நான் பணம் கட்டி முடிக்கும் முன் ராஜியும், அனூப்பும் என் பெட்டிகளை அவர்களே எடுத்து காரில் வைக்க, மிகவும் சங்கோஜமாகிப்போனது எனக்கு.
நேராக டஸ்ஸெல்டார்ஃப் பயணம். நெடுஞ்சாலையில் மற்ற கார்களை சர்சர்ரென்று முந்தி, தன் சிறிய பென்ஸ் காரை அநாயசமாக 120க்கு மேல் ராஜி ஓட்ட, பின்னாலிருந்த அனூப் ஜெர்மன் பாஷையில் அம்மாவுடன் சம்சாரித்துக்கொண்டு வந்தான். உலகின் எந்த நாட்டில் வசித்தாலும் பிள்ளைகள் எதாவது கேட்கும்போது அம்மாவின் பதில் 'முதல்லே நீ ஒழுங்கா படி' தான் போலும். அன்றே என் மனைவியும் பையனும் பஹ்ரைனிலிருந்து வந்திறங்க அவர்களை அழைத்துக்கொண்டு மற்றொரு விடுதில் எங்களை இறக்கி விட்டு ராஜி விடை பெற்றுக்கொண்டார்.
மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அவரது இனிமையான பாலக்காட்டுத்தமிழை மிகவும் ரசித்தோம். பரதம் மற்றும் பாட்டு கற்றுக்கொடுக்கும் டீச்சர் வேறு. பையன் அனூப் அப்பாவின் கார்பன் காப்பி. பெண்ணுக்கு கலியாணம் முடித்து அவள் இந்தியாவில் இருக்கிறாளாம். அவளையும் உடனே ஸ்கைப்பில் கூப்பிட்டுக்காட்டி எங்களை அறிமுகப்படுத்திய ராஜி ஒரு சகலகலாவல்லி. அவரது உதவியை மறக்க முடியாது.
அடுத்த இரு நாட்கள் கொலோன் கதீட்ரல், ரைன் நதியில் படகு சவாரி, டஸ்ஸெல்டார்ஃப் நகர சுற்றுலா என நிறைய சுற்றினோம். இந்தியர்கள் கொண்டாடும் துர்கா பூஜா வைபவம் பார்த்தோம். ராஜி வீட்டில் இரவு உணவு.. அவர்களது வீடு மிக அருமை. மூன்று தளங்கள். குடியிருந்த கோவில் எம்ஜிஆரை பார்க்கப்போவது போல படிக்கட்டில் இறங்கி தரையின் கீழ் ஒரு தளம். பின் பக்க தோட்டத்தில் ஆப்பிள் மரம் என வித்தியாசமான வீடு.
ஜெர்மனியில் எல்லா சௌகரியங்களுடன் இருக்கிறார்களாம். குழந்தைகளின் இலவச பள்ளி, கல்லூரி படிப்பு, வேலை வாய்ப்பு, இலவச மருத்துவம், குறைந்த வட்டியில் வீடு என அரசாங்கத்தின் நிறைய சலுகைகள்.
மறுநாள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிக் (Zurich) நகருக்கு பயணம். மற்ற நாடுகள் போலில்லாமல் விமான நிலையத்தில் குடியேற்றம் பகுதி வரை ராஜி கூடவே இருந்தார். எங்கே போனாலும் வீச்சு வீச்சென ஜெர்மன் பாஷையில் பொளந்து கட்டும் அவரை வியப்புடன் பார்த்து விடைபெற்றுக்கொண்டோம். 'இந்த நாட்டில் நாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம். அரசாங்கமும் மக்களை நல்லா பாத்துக்கறாங்க, வேளைப்பளு அதிகமில்லை.' என ஜெர்மனிக்கு புகழாரம்.
சென்ற வாரம் சக பிரயாணிகள் 149 பேருடன் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் மோதிய அந்த விமானி ஓட்டிய லுஃப்தான்ஸாவின் அதே 'ஜெர்மன் விங்ஸ்' விமானத்தில் தான் நாங்களும் பறந்தோம். விமானம் விழுந்து நொருங்கிய அதே ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே எங்களது ஸ்விட்சர்லாந்து பயணம். பின்னால் இப்படி ஒரு துர்சம்பவம் நடக்குமென அப்போது எதிர் பார்த்தோமா?
உலகப்புகழ் வாய்ந்த ஜெர்மன் சர்க்கரை, நாங்கள் பஹ்ரைனில் விநியோகிக்க இறக்குமதி செய்யும் பொருட்களில் ஒன்று. தரகு நிறுவனம் மூலம் இறக்குமதி செய்கிறோம். துபாயில் அலுவலகம் வைத்துக்கொண்டு அடிக்கடி ஜெர்மனி பயணம் செய்யும் அதன் ஜெர்மானிய இயக்குநரிடம் ' நீங்க பேசாம துபாய்ல செட்டில் ஆகலாமே' எனக்கேட்டதற்கு பட்டென அவர் சொன்ன பதில்: 'அடப்போய்யா.. வளைகுடா நாட்ல என்ன இருக்கு? நீங்க வரி கட்டாமெ சம்பாரிச்சு சேத்து வெச்சு என்ன பண்ணுவீங்கன்னு எனக்குத்தெரியாதா? லாரி டிரைவர் ராஜாக்கண்ணு கணக்கா 4 சக்கர வாகனம் ( 4 wheel drive) வாங்கி ஓட்டுவீங்க. வாழ்நாள் முழுக்க உங்க புள்ளைங்களுக்காக கஷ்டப்பட்டு காசு சேத்து வெச்சு ஊருக்கு அனுப்புவீங்க. இந்தியாவுல வீடு, நெலம் வாங்குவீங்க..பேங்க்ல காசு போடுவீங்க. 60 வயசுல ரிட்டையர் ஆகி இந்தியா போனதும் செலவுக்கு பேங்க் பேலன்ஸை தொட மனசு வராது உங்களுக்கு. குழந்தைகளுக்கு மட்டும் ஆடம்பரமா கல்யாணம் பண்ணிட்டு திரும்பவும் மத்த செலவுக்கு காசில்லைன்னு புலம்புவீங்க..நீங்க செஞ்சதையெல்லாம் நாளைக்கி உங்க புள்ளையும் செய்வான். நாங்க அப்பிடி இல்ல. இன்னிக்கி செத்தா நாளைக்கி பீர் இல்ல. சம்பாதிக்கும்போது அவசியத்துக்கு மட்டும் செலவு செய்வோம். அதிகம் சேமிக்க முடியாம அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டுவோம். ஆனா ரிடையர் ஆனதுக்கப்பறம் சாகற வரைக்கும் திரும்ப அரசாங்கம் தான் எங்களை பாத்துக்கும்.'
அது சரி.. அப்போ அந்த விமானிக்கு என்ன பிரச்சனை? அப்படியே இருந்தாலும் தன்னுடைய மன உளைச்சலுக்கு மற்ற அப்பாவி 149 பயணிகளை கொன்றவனுக்கு மன்னிப்பே கிடையாது.