Monday, June 3, 2013

நீலவானம்…….
திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் பகுதி.. சிறியதும் பெரியதுமான கடைகளுக்கு நடுவே விஸ்வநாதன் ஆஸ்பத்திரி. .காரை விட்டு இறங்கி அம்மாவுடன் உள்ளே நுழைந்தேன். புறத்தே  இருந்து பார்க்க ஏதோ மருந்தகம் போல இருந்தாலும், உள்ளே நுழைந்தால் மிக பிரம்மாண்டமான கட்டிடம். ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் தனித்தனியே வார்டுகள். குறுகலான வழிப்பாதைகளின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக ஆஸ்பத்திரி சிப்பந்திகள் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
பிளாஸ்டிக் வயர் கூடையில் பிளாஸ்க்கில் காபி, சில பேர் ஆப்பிள் பை, சிலர் ஹார்லிக்ஸ் பாட்டில் என்று விதவிதமாக நோயாளிகளை பார்க்க வந்த வன்னம் இருந்தனர்
கடைசியில் கதிர்வீச்சு பிரிவு. ரேடியேஷன் தெரபி கொடுக்குமிடம். சுமார் 10 அல்லது 15 பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். நானும் அம்மாவும் அங்கே போய் அமர்ந்தோம். நோயாளிகள் யார் மற்றும் கூட வந்த உறவினர்கள் யார் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. . எல்லோரும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்கள். அநேகமாக பாதி பேர் தலையில் முடியில்லாமல் அல்லது முடி உதிர்ந்த நிலையில் அல்லது பாதி முடி உதிர்ந்தது தெரியாமலிருக்க சிரம் மழித்து இருந்தனர். சிலர் சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போட்டிருந்தனர். யாருடைய முகத்திலும் ஒரு சலனமும் இல்லை.கவலையும் இருப்பதாக தெரியவில்லைமரணத்தின் வாயிலை நெருங்கி மறுபடியும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்குபவர்கள்.   
இஸ்லாமிய பெண்மணியொருவர் தன மகளுடன் வந்திருந்தார். வந்த 5 நிமிடங்களில் தன உடலை பக்க வாட்டில் சாய்த்து மகளின் மடியில் தலை வைத்து படுத்து விட்டார். தாயின் வலி மகளின்    முகத்தில்...மொட்டையுடன் மற்றொரு இளம்பெண்  கணவனுடன் வந்திருந்தார். அவருக்கு எங்கே புற்று நோய் என தெரியவில்லை. ஆனால் திடீரென்று கால்கள் இரண்டையும் தூக்கி முன் சீட்டில் நீட்டி வைத்து தலையை பின்னே சாய்த்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் ஸ்ரமப்படுகிறார் என்பது நிச்சயம்.   எனக்கு பக்கத்தில் கோவில் குருக்கள் ஒருவர் அமர்ந்திருந்தார். கழுத்துப்புறம்  கருமையாகவும் வாயில் சமீபத்தில் விட்டொழித்த  வெற்றிலை புகையிலை காவி.... அவருக்கு தொண்டையில் புற்று நோய் வந்திருக்கலாம். எல்லோரும் நொடிக்கொருதரம் பையில் இருந்து  பாட்டில் எடுத்து தண்ணீர் குடிக்கிறார்கள்.
'புத்து நோய் தொத்து நோய் இல்ல கண்ணு' என்ற 'நீலவானம்' பட வசனம் நினைவுக்கு வந்ததால் நானும் தைரியமாக அவர்களுடன்  அமர்ந்திருந்தேன்.
கலைஞர் கருணாநிதி காப்புறுதி திட்டம் என போர்டு வைக்கபட்டிருந்தது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு  அவர்களே பாரத்தை பூர்த்தி செய்து  அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்து பணம் கிடைக்க உதவுகிறார்கள்.  ஒரு மட்டும் தெரிகிறது. அது பணத்திற்காக நடத்தப்படும் மருத்துவமனை அல்லமிகவும் தரம் வாய்ந்த மெஷின்களை வரவழைத்து முறையான சிகிச்சை அளிக்கிறார்கள்.  பணியாளர் ஒருவர் கூட வெட்டியாக கதையளந்துகொண்டு  அங்கங்கே நிற்கவில்லை. ஏதோ ஒரு அவசர வேலை நிமித்தம் ஓடிகொண்டே இருக்கிறார்கள்.
சரோஜினி.. என்று அழைத்ததும் அம்மா எழுந்து உள்ளே சென்றார்கள். அவர்கள் கொடுக்கும் உடைக்கு மாறிக்கொண்டு சிறிய கட்டிலில் படுக்கசொல்கிறார்கள். கட்டிலுக்கு கீழே வெளிச்சமான பல்ப். பிறகு வயிற்றுக்கு  மேலே x -ரே போன்ற மெஷின் வைத்து சுவிட்சை ஆன் செய்து விட்டு பணியாளர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியே ஓடி வந்து விடுகிறார்கள். சும்மார் 10 நிமிடம் கழித்து புடவைக்கு மாற்றிக்கொண்டு அதே மலர்ந்த முகத்துடன் அம்மா வெளியே வருகிறார்கள்.
காரில் போகும் வழியில் அவசியம் இளநீர் அருந்த வேண்டுமாம். நிறைய நீராகாரம் சாப்பிட வேண்டுமாம்.  தலை முடி உதிர்தல், தோல் கறுத்துப்போதல், வாந்தி போன்ற நிறைய side  effects  இருந்தாலும் chemo  தெரபி  மற்றும்  ரேடியேஷன் தெரபி  முடிந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடலாம்  .
 கடந்த 3 மாதங்களாக ஆஸ்பத்திரி, டாக்டர்கள், ஸ்கேன், ultra  சவுண்ட், கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி என்று  அம்மா அலைந்துகொண்டிருந்தாலும் தன்னம்பிக்கை, தைர்யம், பாசிடிவ் மனப்பான்மை போன்றவைகளினால் மரணத்தை  இன்னும் சில வருடங்கள் தள்ளி போட்டிருக்கிறார்கள்.
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பூங்கோதை, அவரது கணவர் டாக்டர் செந்தில், டாக்டர் ரவி அய்யங்கார், anasthetist , radiologist   சற்றும் முகம் சுளிக்காத செவிலியர்கள், நாங்கள் வெளி நாடுகளில் இருந்தாலும் மாமியாரை (தாய் போல பார்த்துக்கொண்ட) என் மைத்துனர் டாக்டர் மனோகர், முழுக்க  முழுக்க  உடனிருந்து இரவு பகல் பாராமல் தாயை பார்த்துக்கொண்ட என் சகோதரி லதா மனோகர்  என்னுடன் மருத்துவ செலவனைத்தையும் பகிர்ந்து கொண்ட என் சகோதரர்கள் ரவி (மஸ்கட்) மற்றும் பாபு (பாம்பே), எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி உஷா மற்றும் உறவினர்கள் இவர்கள் அனைவரும்  தெய்வத்திற்கு நிகரானவர்கள்... 5 வருடங்கள் முன்பு இதே புற்று நோயினால் தன் மூத்த மகளை (என் அக்கா) இழந்து, 2 வருடங்கள் முன்பு கணவனையும் இழந்து, மரணத்தை தொட்டுப்பார்த்த என் அன்னையை மீட்டவர்கள்... 
என்னுடன் முகநூல் தொடர்புடைய பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்...! நீங்கள் 40 வயதை கடந்தவரா? ஆம் எனில் வருடம் ஒரு முறை அவசியம்  pap  smear, biopsy, mammography  போன்ற சோதனைகளை செய்து விடுங்கள். கணவர் முகநூலில் பிஸியாக இருந்தால் தங்கை, மைத்துனி என்று யாரையாவது துணைக்கு அழைத்துக்கொள்ளவும். நேரம் கிடைத்தால் 'நீலவானம்' திரைப்படமும் பாருங்கள்...
அடுத்த 10 நாட்களில் பூரண குணமடைந்து அம்மா  (82 வயது ) பஹ்ரைன் வரவிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment