திருச்சி புத்தூர் அக்ரஹாரம் ஸ்ரீனிவாசன் எனது தம்பி விஜயராகவனின்
பள்ளித்தோழன் (நேஷனல் ஹை ஸ்கூல்).. பாதி நேரம் என் தம்பி புத்தூரில் தான்
இருப்பான். புத்தூர் போஸ்ட் ஆபிசுக்கு அடுத்த திருப்பத்தில் உள்ளே போனால் சிறியதாக
ஒரு ரோடு.. இருபுறம் சுமார் 50 குடித்தனங்கள். ஸ்ரீனிவாசன் வீடு இரண்டு பெரிய தின்னைகளுடன் கூடியது. 70 களில் என நினைக்கிறேன்... காலை 6 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு போனால் ஏராளமான சைக்கிள்கள். அவனது தாத்தா
கிராம முன்சீப்பு என்று ஞாபகம்... ஜாதி சான்றிதழ், குடியிருக்கும் முகவரிச்சான்றிதழ் என்று அவர்
தன் கைப்பட எழுதி கொடுப்பார். தினமும் கூட்டமாக ஜனங்கள் வீட்டு வாசலில்
காத்திருப்பார்கள். சரியாக 7 மணிக்கு அவர் குளித்து
முடித்து வெளியே வருவார். உதவியாளர் நம்மை ஒவ்வொருவராக அழைத்து வித்தியாசமான
தமிழில் எழுதிய சான்றிதழ் பெற்று நமக்கு
கொடுப்பார். அதற்க்கு நாம் கொடுக்கும் சுமார் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கு அவரே ஸ்டாம்ப்
கொடுத்து விடுவார். எக்ஸ்ட்ரா எதுவும் வெட்டவெண்டியதில்லை
அமைதியான இடம். ஆனால் ஒரே ஒரு தொந்திரவு மட்டும் அங்கே உண்டு. அந்த தெருவின்
இரு புற சுவர்களிலும் எப்போதும் கரிய வண்ணத்தில் கிறுக்கல்கள்.அதுவும் குறிப்பிட்ட
ஜாதியை குறி வைத்து.. " கடவுள்
இல்லை.. இல்லவே இல்லை... கடவுளை நம்புகிறவன் முட்டாள்.. " போன்ற வாசகங்கள்.
ஸ்ரீனிவாசன் சொல்வான். 'பக்கத்துல உறையூர்ல
இருந்து 7,8 பேர் கூட ஒருத்தன் வருவான். எப்ப
வருவானுங்கன்னே தெரியாது. ராத்திரி 12 மணிக்கு நாம அசந்து தூங்கரச்சே.... இல்லன்னா
காலைல 4 மணிக்கு முன்ன வந்து கண்டத எழுதிட்டு
ஒடீடுவானுங்க நாம போய் தட்டி கேட்டா
அடிக்க வருவான்"
'அவனுங்களுக்கு ஒரு
நாள் வச்சிருக்கோம்' என்பான். ஒருநாள்
வந்தது. திடகார்த்தமான ஆக்ராஹாரத்து இளைஞர்கள் 7,8 பேர் மொட்டை மாடியில் முதல் நாள் இரவு ஒளிந்து கொண்டார்கள். சிலர் திண்ணையை
ஒட்டியுள்ள சந்தில் ஒளிந்து கொள்ள அன்று இரவு 2 மணிக்கு ஒரு கூட்டம் வந்து மீண்டும்
சுவர்களில் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்த நிமிடம் மாடியில் இருந்து சரமாரியாக
கற்கள் வீசப்பட்டன. கூட்டம் நிலை குலைந்தது. சந்தில் ஒளிந்திருந்தவர்கள் வெளிய வந்து அவர்களை
நையப்புடைத்தார்கள். கல்லடி பட்ட கூட்டம் அலறிக்கொண்டு ஓடியது..
அதற்குப்பின் அந்த சுவர்களில் எந்த இழிவு வாசகங்களும் இல்லாமல் வெறும் 'நாமிருவர்.. நமக்கு இருவர்'...'அளவான குடும்பம்.. வளமான
வாழ்வு'.மட்டும் தான். 'இந்த ஆக்ரஹாரத்துல எல்லோரும் ஏராளமான நிலம் வைத்திருப்பவர்கள்.
இந்த இளைஞர்கள் வயலில் இறங்கி 8 மணி நேரம் செய்ய முடியும். பயந்து கொண்டு இருந்தது
எல்லாம் அந்தக்காலம்' என்று சொல்லும்
ஸ்ரீனிவாசனின் முகத்தில் பெருமிதம்.
நேஷனல் கல்லூரியில் தம்பி விஜயராகவனுடன் B.com முடித்தவுடன் ஸ்ரீனிவாசன் சிறிதுகாலம் வேலை தேடிக்கொண்டிருந்தான். தம்பி MBA முடித்து டாட்டா குழுமத்தில் சில வருடங்கள் இருந்து பின்
மஸ்கட்டில் 14 வருடம், அதற்குப்பின் கடந்த 5
வருடங்களாக பஹ்ரைனில் வங்கியில் பணி. அவ்வப்போது ஸ்ரீனிவாசனைப்பற்றி பேசுவோம்.
வருடமொருமுறை அவன் திருச்சி போகும்போது ஸ்ரீனிவாசனை போய்ப்பார்ப்பான்.
2 வருடங்கள்
முன்பு நானும் ஸ்ரீனிவாசனை பார்த்தேன். மத்திய அரசுப்பணி. கண்டோன்மென்ட் அருகில் அகில இந்திய
வானொலியில் 25 வருடங்களாக இருக்கிறான்.
மழிக்கப்படாத 2 நாள் தாடியுடன் அதே மலர்ந்த முகம். மாதம் சுமார் 75000 ரூபாய்க்கு
மேல் சம்பளம். மத்தியக்கிழக்கு நாட்டில் அல்லாடிக்கொண்டிருக்கும் நமக்கு
ஸ்ரீனிவாசனை பார்க்க பொறாமை தான். ஆருயிர் நண்பன் என்பதால் சந்தோசம் கூட.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போகுமுன் ஸ்ரீநிவாசனுக்கு ஒரு போன் செய்து விட்டு போனால்
போதும். அவனது சகோதரர் ரமேஷ் குருக்கள் நம்மை பெருமாள் கிட்டக்க தரிசனம் கிடைக்க
வைப்பார். சாமிக்கு சார்த்திய பெரிய மாலை மற்றும் பிரசாதம் எல்லாம் கொடுத்து கூட
இருந்து வழியனுப்பி வைப்பார்.
இறந்து போன என் அப்பாவின் பேரிலிருந்து BSNL டெலிபோன் லைனை என் அம்மா
பேருக்கு மாற்ற சென்ற வருடம் திருச்சியில் முயற்சி செய்தேன். BSNL பெண் மேலாளர் ஒருவரை பார்த்தேன். கூட 81 வயது அம்மா. Legal
heir certificate அது இது என்று ஒரு லிஸ்ட்டே கேட்டார். அப்பாவின் death certificate ,
PAN கார்டு (81 வயசு பெண்மணிக்கு ) ரேஷன் கார்டு எல்லாம் காண்பித்தும் உடனே
அட்டெஸ்ட் செய்து கொண்டுவரும்படி சொன்னார். மணி நாலு அப்போது. ஆபிஸ் மூடுமுன் உடனே
எங்கே அட்டெஸ்ட் செய்வது?
சடாரென்று ஸ்ரீனிவாசன் நினைவு வந்தது. ஆனால் அவனது தொலைபேசி எண் இல்லை.. குறுஞ்செய்தி
மூலம் பஹ்ரைனிலிருந்து தம்பி விஜயராகவன் நமது ஸ்ரீனிவாசனின் கைப்பேசி எண்னை எனக்கு அனுப்ப, அடுத்த 15 நிமிடங்களில் நான்
அம்மாவுடன் ஆட்டோவில் அகில இந்திய வானொலி வளாகம் போய் சேர்ந்தேன். அதே மலர்ந்த
முகத்துடன் ஸ்ரீனிவாசன் நம்மை வரவேற்றான். மாடியில் நிலைய இயக்குனர்
அலுவலகத்துக்கு போனோம். 'சார்... நான் சொன்னேனில்ல.. ' என்ற ஸ்ரீனிவாசனை பேச விடாமல் எல்லா தஸ்தாவெஜுக்களிலும் கையொப்பமிட்டார் நிலைய
இயக்குனர். தலை முடியும் மீசையும் சென்ற வாரமிட்ட கருப்பு வர்ணம் லேசாக போய் நரை
தெரிந்தது. 'தகுதி அடிப்படையா.. ஜாதி
அடிப்படையா' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள
செல்ல வேண்டும் என்று அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார். ஸ்ரீநிவாசனுக்கு
அங்கே நல்ல மரியாதை என்பது தெரிந்தது. அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம்.
அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் BSNL
அலுவலகம் போகும்
அவசரம் எங்களுக்கு. இருந்தாலும் ஸ்ரீனிவாசனை உடனே விட்டுப்போக மனமில்லை.
வந்த வேலை சுருக்க முடிந்த திருப்தி எனக்கு. மிகவும் வேண்டிய நண்பர்களுடன்
நான் பேசும்போது லேசாக எமோஷனல் ஆகி விடுவேன் அதன் வெளிப்பாடாக அவர்கள் தோளில் கை வைத்தோ, கைகளை பிடித்துக்கொண்டோ
பேசுவேன்.
'விஜைய்ய கேட்டதா சொல்லுங்க ஸ்ரீதர்' என்ற ஸ்ரீனிவாசனிடம்
'ரொம்ப சந்தோஷம் ஸ்ரீனிவாசன்.. உங்க வேலை, உள்ளூரில் அலுவலகம் எல்லாம்
பார்க்க சந்தோஷமா இருக்கு... இன்னம் அப்பிடியே இருக்கீங்க.. தலைல கூட ஜாஸ்தி நரை
இல்ல' என்றேன்.. மிக
அடக்கத்துடன் ஸ்ரீனிவாசன் முறுவலித்தான்.
'ஞாபகம் இருக்கா? புத்தூர்ல உங்க அக்ரஹாரம்
சுவத்தில கிறுக்கினவங்கள கல்லால் அடிச்சி விரட்டுனத பத்தி நீங்க சொன்னது இன்னம்
அப்படியே ஞாபகம் இருக்கு' என்று சொல்லி சத்தமாக சிரித்தேன்.
ஸ்ரீனிவாசன் மிரட்சியுடன் இன்னும் கொஞ்சம் என் முகத்துக்கு மிக அருகில்
வந்து ' சத்தம் போடாதீங்க
ஸ்ரீதர்..கல்லடி வாங்கிட்டு ஒடுனவர்(ன்) தான் அந்த ஸ்டேஷன் டைரக்டர் செங் 'கல்' வராயன்' என்றான்.
பி.கு: சரியான தலைப்புடன் தான் இதை எழுதினேன் என நினைக்கிறேன்.
No comments:
Post a Comment