Thursday, March 19, 2015

நல்லார் ஒருவர் உளரேல்....




கடந்த டிசம்பர் மாதம் 4 நாட்கள் விடுப்பில் பஹ்ரைனிலிருந்து சென்னை சென்றதும் தொலைபேசியில் இவரை அழைத்தேன். " வந்துட்டீங்களா? நாளைக்கு ஸ்கூலுக்கு நீங்க அவசியம் வரனும். அப்படியே திருத்தணி கோவில் தரிசணத்த முடிச்சுடலாம்' என அன்புடன் இவர் அழைக்க மறுநாள் மனைவி,குழந்தைகள், மாமனார்,மாமியார் சகிதம் திருத்தணி கிளம்பினேன்.

திருத்தணி போய்ச்சேரும் முன் இரண்டு மூன்று முறை போன் செய்து 'எங்கிருக்கீங்க' என விசாரித்தார். 'பையனை கேட் கிட்ட நிக்க வச்சிருக்கேன். உங்க வண்டி என்னா கலரு?' என மறுபடியும் போன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நேபாலிப்பையன் ஒருவன் வண்டியை கை காட்டி நிறுத்த அந்த பெரிய வளாகத்தினுள் நுழைந்தோம்.

திருத்தணிக்கு ஏழெட்டு கி.மீ.க்கு முன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறைய மரங்களடர்ந்த பல ஏக்கர் நிலத்தில் இரண்டு மாடி அடுக்குக்கட்டிடம் தான் அந்த பள்ளிக்கூடம்.

'வித்யா க்ஷஏத்ரா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்' போர்டைத்தான்டி உள்ளே வண்டியை நிறுத்தினோம். 'சார் மாடில இருக்கார்' என பள்ளி தாளாளர் சொல்ல இரண்டாவது தளத்துக்கு படிகளிலேறினோம்.

வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க குழந்தைகள் படிக்கும் சத்தம். தமிழ், ஆங்கிலம், கணித வகுப்புக்கள்.அறிவியல் சோதனைக்கூடம் தாண்டி இரண்டாவது மாடி ஏறியும் அவரைக்காணோம். ' என்னங்க.. சார் எங்க?' என நாங்கள் கேட்க ' அந்த ரூமுக்குள்ள இருக்காரு' என நே.பையன் கை காட்ட கதவைத்தள்ளியபடி உள்ளே நுழைந்தால் இவர் கட்டிலில் படுத்திருந்தார்.

வலது கை, காலில் பெரிய மாவுக்கட்டு.. இரண்டு நாள் தாடியுடன் படுத்திருந்தார் திரு.செல்வராஜ் அவர்கள். அப்பள்ளியின் சேர்மன் மற்றும் சொந்தக்காரர். ' என்ன சார்... போன்ல ஒன்னுமே சொல்லலையே... இப்படி அடிபட்டுக்கிடக்கறீங்க. என்னாச்சு ?'என அன்புடன் கடிந்து கொண்டேன். அவரை அப்போது தான் முதன்முதலில் பார்க்கிறேன். அதுவரை அவருடன் போனில் தான் பேசியிருக்கிறேன். 'இருக்கட்டும்ங்க...மொத மொத நம்மள பாக்க வர்றீங்க.. கோவிலுக்கு வேற போவோனும். கை,கால் முறிவு இதெல்லாம் சொல்லனுமா?' என மீசையை நீவிவிட்டவாறே சிரித்தார்.

சில நாட்களுக்கு முன் பள்ளியின் மேல்மாடி கட்டிட வேலைகளை பார்வையிடும்போது தவறி கீழே விழுந்துவிட்டாராம்.
'நல்ல வேள மணல் மேலே விழுந்தேங்க... கொஞ்சந்தள்ளி கம்பி நட்டிருந்தது. அது மேல விழுந்திருந்தா இந்நேரம் பாலூத்தியிருப்பாங்க எனக்கு.. எல்லாம் அந்த திருத்தணி முருகன் காப்பாத்தினது' என அவர் சொல்ல அவரது மனைவி உள்ளே நுழைந்தார்.

'அவருக்கு எல்லாமே ஜோக் தாங்க' .... கணவனை பெருமையுடன் பார்த்தார்.

'மெட்ராஸ்ல வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம். ஆனா இங்கிருந்தே புத்தூருக்கு ட்ரீட்மென்ட்டுக்கு அடிக்கடி போக வசதியா இருக்கு' என சொன்ன அவர் என் பெரியவனை பார்த்து ' வாப்பா பிரசாந்து... நீ நம்ம ஃப்ரெண்டாச்சே... இப்பிடி வா... பக்கத்துல ஒக்காரு' என ஆசையாய் அவனை தன் பக்கம் இழுத்து அவன் கைகளை தன் வசப்படுத்திக்கொண்டார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதே பெரியவன் தான்.
'நீயென்ன அப்பிடி பாக்கறே.. நீயும் நம்ம ஃப்ரெண்டு தான்' என சின்னவனையும் அவர் பக்கம் இழுக்க சின்னவன் வெட்கத்துடன் என்னைப்பார்த்தான்.

' சப்கோ பூச்சோ க்யா மாங்தா... சாய் பானி தோ' என நேபாலிப்பையனிடம் அவர் தமிழ் பேசுவதுபோல சரளமாக ஹிந்தியில் சொல்லும் முன் தட்டு நிறைய பிஸ்கட்டுடன் நுழைந்தான் சூட்டிகையான நே.பையன்.

'பஹ்ரைன்ல இருக்கீங்க...தமிழ்ல ரொம்ப ஆர்வமாமே.. ரொம்ப சந்தோஷம். நான் தமிழ்ப்புலவர்ங்க' என்றவரை மரியாதையுடன் பார்த்தேன்.

'அதோ அந்த அலமாரி முழுக்க தமிழ் புத்தகங்கள் தான். நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன் சார். இப்ப அடிபட்டு படுத்தே இருக்கறதால படிக்க நெறைய டயம் கெடைக்கிது' என அவர் சொல்ல அலமாரியை பார்த்தேன். நிறைய தமிழ் உரைநடை, இலக்கிய, இலக்கணப்புத்தகங்கள். ஆஹா... இவ்வளவு புத்தகங்களா!

LIFCO ஆங்கிலம் தமிழ் பேரகராதி..
கலிங்கத்துப்பரணி(புலியூர்க்கேசிகன் தெளிவுரை)
ஔவையார் அருளிச்செய்த 'ஔவைக்குறள்'
ராஜாஜியின் 'ராமாயணம்'
முனைவர் கதிர்முருகுவின் 'நந்திக்கலம்பகம்'
புலவர் இரா.வடிவேலனின் 'நன்னூல்'
திரிகடுகம்
ஏலாதி
ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் 'கார் நாற்பது களவழி நாற்பது'
சிறுபஞ்சமூலம்
பாண்டியன் பரிசு (கமலா முருகன்)

'உங்க தொழிலெல்லாம் எப்பிடீங்க போவுது?'என அவர் மாமனார் பக்கம் திரும்ப, நான் எழுந்து மெல்ல சில புத்தகங்களைப்புரட்டினேன்..

17ஆம் நூற்றாண்டில் அழகிய மணவாளதாசர் என அழைக்கப்பட்ட பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக்கூறுவர். 'அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்' எனும் பழமொழியும் உண்டாம். திருமலை நாயக்க மன்னரின் அவையில் அலுவலராக இருந்த அவர் இயற்றிய அந்தாதி ஒன்றைப்படித்தேன்....

"திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றன்னையால்
தருவேங் கடத்துத் தரைமே னடந்தன; தாழ்பிறப்பின்
உருவேங் கடத்துக் குளத்தே யிருந்தன; வுற்றழைக்க
வருவேங் கடத்தும்பி யஞ்சலென் றோடின மால்கழலே"

'ஹலோ! என்ன புத்தகத்துல மூழ்கிட்டீங்க?'...கேட்டுக்கொண்டே மாமனார் பாத்ரூம் எங்கேயென்று விசாரித்தார்.

' அப்பப்ப புள்ளைங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பெடுக்கறேன். சேர்மனா எனக்கு வேறென்ன வேலைங்க... கெட்டிக்கார பசங்க.. நாம சொல்லித்தர்றது சரியா தப்பானு கண்டுபிடிச்சிடுவானுங்க...
நாம சொல்லித்தரலைன்னா நமக்கு ஒன்னுந்தெரியாதுன்னு வேற நெனைச்சிடுவானுங்க பசங்க'...மீசைக்குப்பின் பற்கள் தெரிய சிரித்தவாறே கண்ணடித்தார் திரு. செல்வராஜ் அவர்கள்.

சாந்தமான முகம். அடக்கம், பணிவு, மரியாதையுடன் ஏதோ நெடுநாள் பழகிய மாதிரி தோழமையுடன் பேசும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.பள்ளியின் தலைமை ஆசிரியரை கூப்பிட்டு என்னை அறிமுகப்படுத்தினார்.

' டேய் தம்பி... டிரைவர்க்கோ புலாவ்..காப்பி தேதோ' என அவர் நேபாலிப்பையனை விரட்ட அடுத்த சில நிமிடங்களில் உள்ளே வந்த எங்கள் டிரைவரையும் வரவேற்று காபி கொடுத்து உபசரித்தார்.

' நான் ஒரு பொறுக்கிங்க... அதாவது தமிழ்ல சுவாரசியமான தகவல் எல்லாத்தையைம் பொறுக்கீருவேங்க' என்றவர் கண்கள் முழுக்க நகைச்சுவை....ஆர்வம்..

'எனக்கு இலக்கணம் பிடிக்கும்... தலக்கணம் பிடிக்காது' என சொல்லி பெரியவன் முதுகில் தட்டி சத்தமாக சிரித்தார்.

'ரயில்ல போறப்ப கூட கடலை வாங்கி சாப்பட்டப்புறம் அந்த பேப்பர தூக்கிப்போடாம அதுல இருக்கற செய்திய படிச்சித்தான் அமேசான் காடுகள் எழுபது லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்' என்றவரை பொறாமையோடு பார்த்தேன்.

உலக நடப்பைத்தெரிந்துகொள்ள விரும்புவது..மற்றும் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அவரது பேச்சில் தெரிந்தது. நகைச்சுவை உணர்வு வேறு... நம்மைச்சுற்றி இவ்வளவு நல்ல மனிதர்களா!

கம்பெனிகளுக்கு செக்யூரிடி கார்டுகள்(guards) சப்ளை செய்யும் செக்யூரிடி சர்வீஸ் கம்பெனியும் வைத்திருக்கிறாராம். இதற்கு முன் காவல் துறையிலோ ராணுவத்திலோ இருந்தவரென பெரியவன் சொல்லியிருந்தான். அவரது மீசையும் சொன்னது.

'உடம்புக்கு முடியாமப்போச்சு..இல்லன்னா பக்கத்துல ஜி. ஆர்.டி. ரெசிடென்ஸிக்கு சாப்பிட உங்களை கூட்டிக்கிட்டு போயிருக்கலா'மென வருந்தினார்.

விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து நாங்கள் கிளம்பும் முன் அவர் திருத்தணி கோவில் எக்ஸிகியூடிவ் அலுவலருக்கு போன் போட்டு நாங்கள் தரிசனத்திற்கு வருவதை தெரியப்படுத்தி, என்னிடம் 'சிறப்பு தரிசண டிக்கெட்டெல்லாம் வாங்காதீங்க... உங்கள உள்ளே விடச்சொல்லியிருக்கேன். அர்ச்சர்களுக்கு மட்டும் தாராளமா குடுங்க' என்று சொல்லியனுப்பினார். நல்ல மனசு ..

'போகும்போது சாட்சி ஸ்கந்தன் தியாண மண்டபம் பாத்துடுங்க'... கைகூப்பி வணங்கி எங்களை அனுப்பி வைத்தார்.

படிக்கட்டுகளில் மீண்டும் கீழே இறங்கி வரும் போது வகுப்பறைகளில் குழந்தைகளின் 'மாட்டுக்கு இருப்பது வால்... மரத்தை அறுப்பது வாள்' சத்தம் கேட்டது.

கோவில் தரிசனம் முடிந்து மாலை நாங்கள் சென்னை வந்ததும் அவரிடமிருந்து போன். ' சாரிங்க... விருந்தாளியா வந்திருந்த உங்க கிட்ட காலைல அங்க வெச்சி கேக்க வேணாம்னு இப்ப போன் பண்றேன்...சின்ன வேண்டுகோள்' ...தயங்கியபடி கேட்டார்.

' சொல்லுங்க சார் இதுல என்ன இருக்கு?' என்ற என்னிடம் ' ஒன்னுமில்ல... கரூர்ல என் பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரும் டாக்டரா ப்ராக்டிஸ் பண்றாங்கன்னு சொன்னேனில்லியா.. அவங்க என் பேரனோட ரெண்டு நாள் சென்னைக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க.. அந்த மாஸ்டர் பெட்ரூம் பாத்ரூம்ல ஃப்ளெஷ் சரியா வேலை செய்யல... தம்பி பிரசாந்துக்குத்தெரியும்... நீங்க பிசியா இருப்பீங்க.. உங்கள தொந்தரவு செய்ய வேணாம்னு பாக்கறேன். நாங்களே ரிப்பேர் செஞ்சிக்கிடவான்னு உங்க கிட்டே ஒரு வார்த்தை கேட்கலாம்னு....'

என்ன சொல்வது?
காலையில் அவரது அறையில் இருந்த புத்தகங்களொன்றில் படித்த செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்தது.

'நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை'

(நெல்லுக்கு இறைத்த நீரானது வாய்க்கால் வழியே ஓடும்போது கசிந்து ஊறி அருகே இருக்கும் புற்களுக்கும் பயனாகும். அதுபோல நல்லவர் ஒருவர் இருப்பின் அவருக்காக பெய்யும் மழை எல்லார்க்கும் பயன் தரும்)

No comments:

Post a Comment