Tuesday, March 31, 2015

ரவி( Vijaya Raghavan)

எங்கள் வீட்டில் கடைக்குட்டி இவன் தான். என்னை விட இரண்டே வயது இளையவன். என்னுடன் சேர்ந்து பயங்கரமாக லூட்டியடிப்பான். எப்போதும் துருதுருவென ஏதாவது கலாட்டா செய்துகொண்டு வீட்டில் அடி வாங்குவது எங்களுக்கு வழக்கம். 

அதிலும் எனக்கு மூத்தவள் லத்துவை (லதா Hemalatha Manohar ) சீண்டிக்கொண்டே இருப்பதில் எனக்கு எப்போதும் கம்பெனி கொடுப்பான்.... தென்னூர் வண்டி ஸ்டாண்டு வழியாக அக்காவை கூட்டிக்கொண்டு அம்மா, பேலஸ் அல்லது ஜுபிடரில் 'நினைத்ததை முடிப்பவன்' பார்க்க போகும்போது நாங்களிருவரும் கெஞ்சிக்கொண்டேபின்னால் போவதுண்டு. நிச்சயம் எங்களை கூட்டிப்போக மாட்டார்களென்பதால் அடுத்து அவர்களை கடுப்பேத்த வேண்டுமே! 'லத்தூஊஊஊ...' என பின்னாலிருந்து சத்தம் போடுவோம். 'பொது இடத்துல பொம்பளப்புள்ள பேரைச்சொல்லி கூப்பிடாதேன்னு எத்தனை தடவ சொல்றது?' என நடுரோட்டில் அடி விழும்.

மார்கழி மாதம் காலை 4 மணிக்கு அம்மா எங்களை எழுப்பியவுடன் குளித்து விட்டு திருப்பாவையில் அன்றைய பாசுரம் படித்துவிட்டு, பட்டாபிராம் பிள்ளைத்தெரு பெருமாள் கோவில் சக்கரைப்பொங்கல் வாங்க ஓடுவோம். வந்தவுடன் படிக்க உட்கார வேண்டும் என்பது நியதி. லத்து படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கமுள்ளவள். நடுவே அப்படியே தூங்கிப்போய் விடுவாள். அதற்காகத்தானே நானும் ரவியும் காத்திருப்போம். மெதுவாக சத்தம் போடாமல் அவள் பக்கம் நகர்ந்து அவளது புத்தகத்தையெல்லாம் மூடிவைத்து விட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் அவளையும் பெட்சீட்டால் தலை வரை போத்தி விட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி படித்துக்கொண்டிருப்போம். அடுத்த சில நிமிடங்களில், எழுந்து வரும் அம்மாவிடம்'ரெய்யே...சதுவ்வே! (எழுந்திருடி...படிடி)' என அடி விழும்.

தென்னூர் அக்ரஹாரம், ஈ.பி. தாண்டி வாமடம் வழியாக ஃபோர்ட் ஸ்டேஷனுக்குள் புகுந்து ஸ்கூல் போவோம்(செயின்ட் ஜோசப்). கல்லோ, மாங்கொட்டையோ அல்லது நாம்போட்டிருக்கும் செறுப்பை காலால் ரோட்டில் உதைத்தவாறே நடந்து போவது வழக்கம். போகும் வழியில் ரோட்டில் போகும் எல்லோரையும் சத்தாய்த்துக்கொண்டே போவோம். 'ஏய்யா! பாத்திமா ஸ்கூல் எங்க இருக்கு?' என கேட்கும் கிராமத்து பெருசுகளுக்கு எதிர் திசையை காட்டி விடுவோம்.

தென்னூர் அமிருதீன் ஆஸ்பத்திரி எதிரே உள்ள பரோட்டா கடையில் சாப்பிட எங்களுக்கு ரொம்ப நாள் ஆசை. கையில் காசு இருக்காது. ஒரு நாள் கொஞ்சம் காசு சேர்த்து இருவரும் புரோட்டா சாப்பிடப்போனோம். ஒரு புரோட்டா 15 காசு. சர்வர் ஆளுக்கு 2 புரோட்டா வைத்து மேலே குருமாவை ஊற்ற, புரோட்டாவை நன்றாக பிசைந்து ரசித்து சாப்பிட்டோம். 'இன்னங்கொஞ்சம் குருமா உத்துப்பா' என ஆர்டர் வேறு. 60 காசு பத்திரமாக இருக்கிறதாவென கால்சராய் பாக்கெட்டையும் அப்பப்ப தொட்டுப்பார்த்துக்கொண்டோம். சாப்பிட்டவுடன் கையலம்ப எழும்போது தான் கவனித்தோம், கல்லாவின் அருகே ஒருபோர்டில்..’1.04.1973 முதல் பரோட்டா ஒன்றின் விலை 20 காசு.’ என எழுதியிருக்க, 'ஆஹா.. மாட்னா அடிப்பானுங்களே!' ஒரே பயம்... ரவி சொன்னான் ' கெஞ்சல்லாம் வேண்டாம்டா... சண்டை போடற மாதிரி ட்ரை பண்ணுவோம்'. உடனே குரலை உயர்த்தி ..'என்னங்க இது? வெலைய ஏத்திட்டு...முன் கூட்டியே சொல்லலாம்ல? போர்டும் சரியா தெரீலயே!' என சத்தம் போட்டோம்(உள்ளுக்குள் உதறல்..)… ‘ டேய்.. பசங்களா! வெலயெல்லாம் ஏத்தி ஒரு வாரமாவுது..சரி.. இருக்கறத குடுத்துட்டு ஓடுங்கடா' என அவன் விரட்டியும் ' 'அதெப்பிடிங்க?...' என சும்மாவே கத்துவது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தது மறக்க முடியாது.


கோலி, பம்பரம், கில்லி தாண்டு என எல்லாவற்றிலும் என்னுடனிருந்தவன். கல்லூரி படிக்கும்போதும் என்னுடன் சேர்ந்து சுற்றியவன். திருச்சி மன்னார்புரம் அரசு குடியிருப்பு காலனியில் நாங்கள் வசித்தபோது ஒருமுறை பால்கனியில் உட்கார்ந்துகொண்டு முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்தான். 'படிக்கறப்போ எதுக்கு முகம் பார்த்துக்கிட்டு படிக்கனும்?' என அம்மா அதட்டிவிட்டு அந்தப்பக்கம் போனதும், மெதுவாக என்னைக்கூப்பிட்டு அவன் கண்ணாடியை காட்டியபோது தான் தெரிந்தது, அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்புற ப்ளாக்கின் ஜன்னலிலிருந்து ஒரு பையனும் பக்கத்து பில்டிங் ஜன்னலிலிருந்து ஒரு பெண்ணும் சைகையால் பேசிக்கொண்டிருந்தது. மறுநாள் 'அப்பிடி என்னடா ரெண்டு பேரும் விழுந்து விழுந்து பால்கனியில் படிக்கறீங்க' வெனஅம்மாவும். கேட்டு விட்டுப்போனார்கள்.

இருவரும் சில வருடங்கள் பம்பாயிலும் சேர்ந்து வேலையிலிருந்தோம். மதிய உணவு இடைவேளையில் மிட்டல் கோர்ட் வாசலில்பாவ் பாஜி, திருநெல்வேலி அண்ணாச்சி கடையின் மசால் தோசை சாப்பிட்ட நாட்கள் பல. நான் பஹ்ரைன் வந்த ஓரிரு வருடங்களில் அவனும் இந்தப்பக்கம் வந்துவிட்டான். தற்போது மஸ்கட்டில் வங்கியொன்றில் வேலை. நடுவே அவன் பஹ்ரைனிலும் வங்கியொன்றில் 5 வருடங்கள் இருந்துவிட்டுப்போனது மறுக்க முடியாது. எங்களை மாதிரி எங்கள் பையன்களும் சேர்த்து செஸ், ஃபுட்பால் என சேர்ந்து விளையாடியவர்கள். இருந்தாலும் நாங்கள் கலக்கிய மாதிரி பையன்கள் லூட்டியெல்லாம் அடித்தமாதிரி தெரியவில்லை

இன்று 52 ஆவது பிறந்த நாள் காணும் என் தம்பி ரவி( Vijaya Raghavan)க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

Thursday, March 19, 2015

சுஜாதாவின் Spoonerism

நேற்று எங்கள் விற்பனை மேலாளர் ஆசாம் தம்மாம் (சவுதி) வழியாக தன் சொந்த ஊரான ட்ரிபோலி(லெபனான்) போய் வந்தபின் கண்களில் நீர் வழிய எனக்கு கை கொடுக்கும்போது யோசித்தேன்..என்னாச்சு இவனுக்கு, இவ்வளவு கரிசனம்மென்று. பயங்கர ஜலதோஷமாம்.
பொதுவாக லெபனான், சவுதி மற்றும் ஐரோப்பா நகரங்களுக்கு போகும்போது சில மணி நேரங்கள் விமான நிலையங்களில் காத்திருந்தால் போதும். 'விஸ்க்'கென்று நம் முதுகில் தும்முபவர்களும், வரிசையில் நிற்கும்போது நமக்கு முன்னால் நிற்பவர் திடீரென 'ப்ர்றிக்ஸூ..' என நம் பக்கம் திரும்பி தும்முவதும், இரண்டு வரிசைக்கு அந்தப் பக்கம் நிற்கும் உயரமான பேர்வழியொருவர் திடீரென 'ஆ...ஆக்ச்சே' என பெருஞ்சப்தத்துடன் தும்மி பலரை திரும்பிப்பார்க்க வைத்தும், சிலர் கைக்குட்டை இல்லாமல் தும்மித்தொலைத்து காற்றில் ஈரத்துளிகளைத்தெளித்து புறங்கையால் வாயைத்துடைத்து, ஹலோவென நமக்கும் கைகொடுத்து வஞ்சனையில்லாமல் வைரஸ் கிருமிகளை தாரை வார்த்துக்கொடுத்துவிடுவார்கள். ஆசாம், தான் கொள்முதல் செய்துகொண்டு வந்து கிருமிகளை எனக்குக்கொடுத்துவிட்டான் போலும்.
விளைவு? இரவெல்லாம் மூக்கிலும் கண்ணிலும் வெந்நீராக கொட்டி, கீச் கீச் தொண்டையுடன், படுக்கும் முன் கிராம்பை வாய்க்குள் போட்டுக்கொண்டும், உப்பு கலந்த வெந்நீரால் தொண்டையில் காக்கிள் செய்தும் பலனில்லை. காலை எழும்போது இருமல், சளி மற்றும் ஃப்ளூ...ஆபிஸுக்கு போன் போட்டு லீவு சொல்லி டாக்டரைப்பார்க்க கிளம்பினேன்.
தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கான ஆபிஸ் மருத்துவக்காப்புறுதி இருந்தாலும் இது மாதிரி ஜலதோஷத்திற்கு நான் முழுமையாக நம்புவது அரசின் ஆரம்ப சுகாதார மையங்கள் தான். நகரின் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அந்தந்த பகுதி மக்களுக்கென இயங்கும் ஹெல்த் சென்டர்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு நடத்துபவை. சின்னப்பையன்கள் மண்டை உடைந்து தையல் போடுவது, கால் சுளுக்கிய மாமாக்களுக்கு மாவுக்கட்டு போடுவது, ஆஸ்துமாவிற்கான நெபுலைஸர் கொடுப்பது, கண்டதைத்தின்று வயிற்று வலி, நெஞ்செரிச்சல், காஸ்ட்ரிக் பிரச்சனை, எக்ஸ்ரே, கண், பல், கர்ப்பிணிப்பெண்களுக்கான செக்கப் என சகல சிகிச்சைக்கும் மருந்துகளுடன் வெறும் மூன்று தினார்கள் (ரூ. 480) மட்டுமே. நச்சென மருந்து கொடுத்து இரண்டே நாளில் நம்மை சரிப்படுத்தும் சிறந்த மருத்துவர்கள். நோய் கொஞ்சம் பெரியதாக இருந்தாலோ, ஈ.சி.ஜி ரிப்போர்ட் மாறுபாடுகள் காண்பித்தாலோ அவர்களே ஆம்புலன்ஸில் அரசு பெரியாஸ்பத்திரிக்கு நம்மை ராஜமரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள். சிகிச்சை இலவசம்..
வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தூரத்தில் ஷேக் சபா அரசு மையத்தில் கூட்டம் அதிகமில்லை. டோக்கன் எந்திரத்தில் பட்டனை அழுத்தி டோக்கன் எடுத்து மூன்று தினார்கள் கட்டியதும் ரூம் நம்பர் 4 போகச்சொன்னார்கள். அடுத்தவர் முகத்துக்கு நேரே எப்படி இருமக்கூடாது, புகை பிடித்தால் எப்படி இறப்போம், சர்க்கரை நோயாளி எப்படி அவதிப்படுவார் என அங்கங்கே படங்கள் சுவற்றில்.. உள்ளூர் அரபி பெண்மணிகள் தங்கள் பிலிப்பினோ பணிப்பெண்ணுடன் அறை எண் முன் அமர்ந்திருந்தார்கள். அடுத்த 5 நிமிடத்தில் 'சீத்தாபதி சரிதர்' என மைக்கில் என் பெயரை அரபிப்பெண் டாக்டர் கூப்பிட, உள்ளே போனேன். ' நேத்திலயிருந்து மூக்குல ஜலமா கொட்டுது.. தொண்டை சரியில்ல.' என சொன்னதும் வாயை ஆவென திறக்கச்சொல்லி மரக்குச்சியை நாக்கில் வைத்து அழுத்தி 'அக்கு' என இரும வைத்து, ஜுரமாவென பார்த்து, ஒரு வாரத்திற்கு பெனடால், அமாக்ஸிஸிலின், செட்டிரிஸைன் மற்றும் மூக்கில் விட சொட்டு மருந்து எல்லாவற்றையும் கொடுத்து ' நீ ரெண்டே நாள்ல நல்லாயிடுவே ராசா'வென வாழ்த்திக்கொண்டே, அந்தப்பக்கமிருந்த மைக்கை திருப்பி 'அப்துல்லா கமீஸ்' என அடுத்த நோயாளியைக்கூப்பிட்டார்.
மனைவி உஷா சூடான இட்லி மற்றும் கத்தரிக்காய் கொத்ஸுவை எதிரே வைக்க தொண்டைக்கு இதமாக இறங்கியது. சுலைமானி எனப்படும் கருப்புத்தேநீர் குடித்தபின் மாத்திரைகளை உள்ளே தள்ளி கைப்பேசியில் ஆபிஸ் ஈமெயில் பார்த்துவிட்டு டி.வி பார்க்க உட்கார்ந்தேன். முக்கியமான அரசியல் தலைவர்கள் பற்றிய விசாரனை காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு.. நாங்களும் அதைத்தானே செய்தோம்.. வேவு பார்க்கவில்லையென அருன் ஜேட்லி கூறியும் பாராளுமன்றத்தில் கூச்சல்.
டி.வியை அனைத்துவிட்டு இரண்டு மாதம் விடுப்பில் தேர்வுக்குப்படிக்க வந்திருக்கும் பெரியவனுடன் சிறிது நேரம் அரட்டை. மனைவி சூடாக சூப் கொடுத்தார். மதியம் 12 மணிக்கு கேரளா மோட்டா சிவப்பரிசி வடித்த கஞ்சியில் உப்பு போட்டு உஷா கொடுத்த கஞ்சி ஜலதோஷத்திற்கு அருமையாக இருந்தது. ஏதாவது ஒவியம் வரையலாம் என உட்கார்ந்தால் மேலும் தலை வலிக்க அதை விடுத்து புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். பிறகு ரசம் சாதம்...
மதியம் பழைய குமுதம் விகடன்களைப்புரட்டி சில மணி நேரம் போனது. ஐந்து மணிக்கு நாதஸ்வரம், தெய்வமகள் பார்த்து விட்டு, ஊருக்கு போன் போட்டு அண்ணா, அக்காவுடன் பேசியதும், சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்'இல் spoonerism பற்றிய சுவாரசியமும் நகைச்சுவை கலந்த கட்டுரையை படித்தேன். வரிக்கு வரி காப்பி பேஸ்ட் செய்து உங்களுக்காகவும் இதோ:
"வில்லியம் ஆர்ச்சிபால்டு ஸ்பூனர் எனும் பாதிரியார் (1984-1930) பேசும்போது பல தவறுகள் செய்வாராம். Take a shower என்பதற்கு shake a tower என்பாராம். இதை 'ஸ்லிப் ஆஃப் தி ஸ்லாங்'..ஸாரி, 'ஸ்லிப் ஆஃப் தி டங்' என்பார்கள். இதற்கு ஆங்கிலத்தில் பல உதாரணங்கள் உண்டு. I came by the down train என்பதற்கு பதில் I came by the town drain என்பது ஓர் அடிக்கடி உதாரணம்.
இந்த ஸ்பூனரிசம் (spoonerism) தமிழில் இருக்கிறது என்று ஹ்யூமர் க்ளப் சீதாராமன் இரண்டு உதாரணங்கள் கொடுத்தார். 'வண்ண உடை'என்பதை 'உண்ண வடை' என்று சொல்வது, 'தம்பி கடை' என்பது 'கம்பி தடை' என்பது ஸ்பூனரிசம் தான்.
வாசகர்கள் ஸ்பூனரிசம் என்று தலைப்பிட்டு எழுதி அனுப்பியதில் எனக்குத் பிடித்தவை:
நாவல் காய் - காவல் நாய்
கண்ட உடன் - உண்ட கடன்
நஷ்டமான கடை - கஷ்டமான நடை
திறந்த மனம் - மறந்த தினம்
தேசம் நாடு - நாசம் தேடு
கரைத்துக்குடித்து - குறைத்துக்கடித்து
கண்ணன் அடித்தான் - அண்ணன் கடித்தான்
நான் தாயாகப்போகிறேன் என்றாள் - தான் நாயகப்போகிறேன் என்றாள்
கடல் உப்பு - உடல் கப்பு
முரசு சத்தம் - சரசு முத்தம்
வசந்த் சொன்ன இந்த உதாரணத்தை சீதாராமன் ரசித்திருக்க மாட்டார். 'பாஸ்! மக்கள் குடிக்க கஞ்சியில்லாமல் தவிக்கிறார்கள்' என்று ஒரு சொற்பொழிவாளர் பேசியபோது, ஏன் சிரித்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை."
கட்டுரையின் அடுத்த பாராவை எழுதினால் என்னை எல்லோரும் அடிக்க வந்துவிடுவார்களென்பதால் எழுதவில்லை. ஆனால் நிறைய நேரம் வாய்விட்டு சிரித்தபடி மாத்திரைகளைப்போட்டுக்கொண்டு, உப்புநீரில் வாயை கொப்பளித்துவிட்டு, இந்தப்பதிவையும் எழுதிவிட்டு... இதோ தூங்கப்போகனும்.. ஆக இன்னிக்கு எடுத்த லீவு அருமையாகப்போனது. சூப், கஞ்சி மற்றும், ரசம் சாதம் கொடுத்த மனைவி Usharani Sridhar க்கும், வாய்விட்டு சிரிக்க வைத்த சுஜாதாவுக்கும் நன்றி....

வெங்கடாச்சாரி செல்லப்பா...



'ஹாய்..ஐ அம் செல்லப்பா...' ன்னு காதில் விழுந்தா பொதுவாக எல்லோருக்கும் 'காதலிக்க நேரமில்லை' நாகேஷ் ஞாபகம் தான் வரும். பஹ்ரைனில் மட்டும் அப்படிக்கிடையாது. இங்கயும் ஒரு செல்லப்பா இருக்கார். இவருக்கும் கிட்டத்தட்ட நாகேஷ் மாதிரியான உடலமைப்பு...ஆனால் நல்ல உயரம். எனது சி.ஏ. நண்பர். ஒரு வங்கியில் வைஸ் பிரெஸிடென்ட்டாக இருக்கிறார். மஸ்கட்டிலிருந்தபோது என் தம்பி Jani Vijay Raghavan க்கும் நல்ல நண்பர்.

சில பேருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அதுவும் திருச்சி பற்றியென்றால் சொல்லவே வேண்டாம். செல்லப்பா மேற்படி ஆசாமி...

பொங்கல் தினத்தன்று போன் செய்து 'உங்க வீட்டுக்கு இப்ப கிளம்பி வரலமா?' என செல்லப்பா கேட்டதும் குதூகலம் எனக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் அவர் நம்ம வீட்டில் ஆஜர். பெண்ணின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு நம்மை அழைக்க மனைவி ஜெயலட்சுமி (Jayalakshmi Chellappa) யுடன் வந்திருந்தார்.

கும்பகோணத்துக்காரரான இவர் திருச்சியைப்பற்றி சகலமும் தெரிந்தவர். தனது சி.ஏ.படிக்கும் பருவத்தில் நிறைய நாட்களை திருச்சியில் அனுபவித்திருக்கிறார். நண்பர் ( Vijayaraghavan Krishnan) விஜிக்கு நெருங்கிய உறவு.

ஶ்ரீரங்கத்தில் எல்லா தெருக்களும் அவருக்கு அத்துப்படி. உத்திர வீதி, சித்திர வீதி, அடையவளைஞ்சான் தெரு என எல்லா தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடிய நாட்களை சிலாகித்துக்கொண்டிருந்தார். எதிரே கின்னத்தில் வைக்கப்பட்ட சக்கரைப் பொங்கலில் இருந்து ஒரு விள்ளல் மட்டும்..மனுஷன் ரொம்ப ஸ்ட்ராங்...இனிப்பு அதிகம் எடுத்துக்கறதில்லையாம். டீ, காபி ப்டாதாம். அந்த ஒரு மணி நேரம் ஏகத்துக்கும் பேசினோம்.

ஶ்ரீரங்கத்தின் அந்தக்கால எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்கள், காரைக்குடியில் எங்களுக்குத்தெரிந்த ராகவா அய்யங்கார் பாத்திரங்கடை, ஶ்ரீரங்கத்து வீட்டுச்சுவர்களில் கிரிக்கெட் பந்து பட்ட அடையாளங்கள் என நிறைய அலசினோம். திருச்சியில் ராபர்ட் க்ளைவ், மாலிக் கபூர், உல்லுக கான், முகமது பின் துக்ளக், சந்தா சாகிப் போன்றோர் மண்டைகளையும் அவ்வப்போது உருட்டினோம்.

ரிலீஸ் ஆகும் முன்பே டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் காஸெட்டில் 'காக்கிசட்டை' பார்த்தது, பிஷப் ஹீபர் ஸ்கூலில் சி.ஏ. பரிட்சை எழுதும் நாட்கள், கடைசி பரீட்சை (காஸ்டிங்) முடிந்த அன்றே படம் பார்க்க ஓடுவது என அவர் தனது திருச்சி நாட்களை எடுத்து விட நானும் ஆட்டோகிராஃப் திறந்தேன்....ரிஸல்ட் அன்று டென்ஷனை மறக்க ப்ளாஸாவில் நூன் ஷோவுக்கு '5 man army', மதியம் மாரிஸில் 'சகாதேவன் மகாதேவன்' பார்த்துவிட்டு, மாலையில் சின்னக்கடை வீதி சி.ஏ. சாப்டரில் ரிஸல்ட் பார்த்தவுடன் ()அந்த ஏரியாவை விட்டே ஓடி, 'என்னாச்சு ரிசல்ட்?' எனக்கேட்டு எதிரே வரும் நண்பர்களிடம் 'அக்ரிகேட்ல போயிடுச்சு' எனப்புளுகி, கவலையை மறக்க மறுபடியும் சோனாமீனாவில் 'கன்னி ராசி' மாதிரி ஏதோ ஒரு படம் நைட் ஷோ..

திருச்சில உங்களுக்கு லால்குடி வி.கே.வி.யத்தெரியுமா, அப்பறம் அந்த ஜீயபுரத்துல இருந்து ரமேஷ் வருவானே...அவனத்தெரியுமா.. அவங்க மாமா வீடு கீழப்புலிவார் ரோடு..என காமன் ஃப்ரெண்ட்ஸ் பற்றி விஜாரிப்புகள்...

மனசுக்குள் 30,35 வருடங்கள் முந்தின ஃப்ளாஷ்பேக் ஓட ஆரம்பித்தது....
சாயங்காலம் 5 மணிக்கு மேல் குளித்துவிட்டு ஜோதி டெய்லரிடம் தைத்த டபுள் நெட் பாண்ட்டுக்குள் சட்டையை இன் பண்ணி, ரோலிங் கோம்பில் சிகையை கோதி வாரி, ஜிப் வைத்த ஆங்க்கிள் ஷூ அணிந்து, மன்னார்புரம்/காஜாமலை நால்ரோட்டில் பஸ் பிடித்து, சோஃபீஸ் கார்னரில் இறங்கி, ஹோலி க்ராஸ் பெண்கள் கல்லூரி வழியாக நடந்து, பஸ்ஸுக்கு நிற்கும் அத்தனை பெண்களும் ஏதோ நம்மைத்தான் பார்க்கிறார்களென நாமே முடிவு செய்து கொண்டு, மைக்கேல் ஐஸ்க்ரீம் பார்லர் போன்ற 'அவுட் டேட்டட் 'ஸ்தலங்களை தவிர்த்து, சிங்காரத்தோப்பு 'ஸீ கிங்'கில் போனியெம், ஆபா (abba) பாடல்களுக்கு புரியாமல் தலையசைத்து, வெனில்லா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு, 'தைலா'வை க்ராஸ் செய்து செயின்ட் மாரிஸ் தோப்பு வழியே கிலேதார் ஸ்ட்ரீட் மான்ஷனில் நண்பர்களை மானாவாரியாக அழைத்துக்கொண்டு, முருகன் டாக்கீஸ் (சாது மிரண்டால்) எதிரே டீ சொல்லி, டீ வரும்வரை கண்ணாடி பாட்டிலிலிருந்து பிஸ்கட் எடுத்து சாப்பிட்டு, பாபு ரோடு வழியாக சின்னக்கடை வீதியில் நுழைந்து மேலும் கீழும் இரண்டு மூன்று முறை உலாத்தி, மலைவாசல் முன் பிள்ளையாருக்கு லைட்டாக தோ.கரணம் போட்டு, கோபால் புக் டெப்போ பக்கத்தில் எல்.ஜி நன்னாரி சர்பத் அல்லது சிந்தாமணி வாசலில் இஞ்சி எலுமிச்சை சேர்த்துப்பிழிந்த கரும்புச்சாறு அல்லது நந்தி கோவில் தெரு ஐயங்கார் பேக்கரியில் காபி குடித்துவிட்டு, பக்கத்துக்கோயிலின் நெற்றி நிறைய குங்குமத்துடன் 88A ( கே.கே. நகர்) பஸ் பிடித்து, உட்கார இடமிருந்தும் உட்காராமல் கம்பியில் முதுகைச்சாய்த்து நின்றுகொண்டு, எட்டாக மடித்த டிக்கெட்டை மோதிரத்துக்குள் செருகிக்கொண்டு, 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு' பாட்டு கேட்டு, இறங்குவதற்கு ஒரு நிறுத்தத்திற்கு முன்பே பி. அன்ட்.டி ஸ்டாப்பில் ஃபுட்போர்டுக்கு மாறி, இறங்கும் ஸ்டாப்பிற்கு சில அடிகள் முன்பே ஓடும் வண்டியிலிருந்து ஸ்டைலாக இறங்கி, யாரும் நம்மை பார்த்தார்களாவென ஊர்ஜிதம் செய்து புளகாங்கிதமடைந்து, வீடு போய்ச்சேர்ந்து 'சித்ரஹார்' ல் ஜாக்கி ஷ்ராஃப் மீனாட்சி சேஷாத்திரி ஜோடி ( தூ மேரா ஜானு ஹை) பாடல் மற்றும் ஃபரூக் ஷேக்-திப்தி நவல் படம் பார்த்து, சாப்ட்டு பத்து பதினோரு மணிக்கு மேல் எதிர்காலம் பற்றிய லேசான பயத்துடன் புத்தகங்கள் சகிதம் படிக்க உட்கார்ந்து, அடுத்த சில நிமிடங்களில் கொட்டாவி விட்டு, சடுதியில் உறங்கிப்போன நாட்கள் பல..

திடுதிப்பென வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அளவலாவி அந்தக்கால திருச்சி நாட்களை நிறைவு கூர்ந்த நண்பன் செல்லப்பாவிற்கு நன்றிகள்...

என்பதுகளில் திருச்சியில் நாங்கள் அனுபவித்த மாதிரி வாழ்க்கையை வேறு யாரும் அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்..

7.83 ஹெர்ட்ஸ் (க.சுதாகர்)-REVIEW


'அறிவியல் புனைக்கதையில் தட்டுப்படும் இப்படியான இலக்கிய விசாரத்தை ஆங்கில ஸைஃபியில் கூடப்பார்த்தது இல்லை....சுஜாதா இருந்திருந்தால் ரசித்திருப்பார்'- இரா. முருகன்
ஏதோ ஹோட்டலின் உட்புறம். வெகு சிலர் உணவு அருந்திக்கொண்டிருக்க மூலையில் அமர்ந்து அவன் ஏதோ குடித்துக்கொண்டிருந்தான். அமைதியான முகம்..திடீரென அவன் கண்கள் விரிந்தன.சிரித்துப்பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினருகே நெருங்கினான்....கையில் ஃபோர்க் மற்றும் கத்தி.மிக அருகில் இருந்த
ஒருவனை பின் மண்டையில் தாக்கினான். அடுத்து இருவர் தரையில் சாய்த்தனர். பெண்கள் அலறி எழுந்தனர். கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து நிதானமாக சுட ஆரம்பித்தான். இரு நிமிடங்களில் கனத்த மவுனம். குப்புறக்கிடந்த சிறுமியின் உடலிலிருந்து கசியும் கருப்பான புது ரத்தத்தை ஈக்கள் மொய்க்கத்தொடங்கியிருந்தன..
இப்படிப்போகிறது... நண்பர் Sudhakar Kasturi யின் இரண்டாவது நாவலின் கதை. இவரது முதல் நாவல் 6174, வம்சி புக்ஸ் வெளியீடு. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினால் '2012ம் வருடத்தின் சிறந்த நாவல்' விருதினையும், கலகம் அமைப்பின் 'சிறந்த நாவல்-2012' விருதினையும் பெற்றது.
கதையிலிருந்து மேலும்.....
மேலே சொன்ன அமைதியான இளைஞனின் திடீர்த்தாக்குதல் ஸைஆப்ஸ்(psyops)இன் ஒரு வகையாம். அதாவது 'ஒரு மனிதனின் மனம் என்பதின் ஆளுமையை மற்றவர் முழுதும் எடுத்துக்கொண்டு அவர்கள் விரும்பியதை தொலைதூரத்திலிருந்தபடி நடத்திக்கொள்வது.
'நமக்கெல்லாம் அதிர்வெண் இருக்காம்..நாம அமைதியா இருக்கறச்சே 7.83 Hzல இருக்குமாம். ஆனா அது சீரா இருக்காதாம்.மூடுக்குத்தகுந்தமாதிரி மாறுமாம். ELF (extremely low frequency) மூலமா பெரிய நிலப்பரப்பில் அத்தனை மனிதர்களுடைய இயற்கை அதிர்வெண்ணை மாற்றிவிட முடியுமாம்.
பெயர் அறியாத மரத்தின் கிளையில் குத்திட்டு அமர்ந்து இரவில் அந்த ஓநாய்க்கூட்டத்தை காமிராவில் பதிவு செய்யும் பெண்...இறைச்சிக்காக ரத்தம் சொட்டச்சொட்ட சண்டையிடும் ஓநாய்கள்....
போலீஸ் என்கவுன்ட்டர்..
'தீப்பிடிக்காத துணிய இடுப்புக்குக்கீழே கட்டியிருக்கான்'..'ஆசனவாயில் முழுசா கொலோன் வரை சுருட்டிய ப்ளாஸ்டிக் உறையை சொருகியிருக்கான்'
பெங்களூர், மைசூர், ஜம்மு..., டெல்லி கன்னாட் ப்ளேஸ்...
ஆயுதமேந்திய வீர்ர்கள்...ஆயுதக்கிடங்கு...
காலாண்டாக்மைக்ரோ அசால்ட் துப்பாக்கிகள்...benelli CBM&2 மாடர்ன் துப்பாக்கி..
வனவிலங்கு மரபியல் துறை...
ஒன்றை ஒன்று தாக்கி ஏராளமாக இறக்கும் சில்கா ஏரி மீன்கள்...
விதவிதமான துப்பாக்கிகளின் பெயர்கள்... அதற்கு விளக்கங்கள்...
கதை முழுக்க சுதாகரின் வர்ணனை மற்றும் தமிழ் புகுந்து விளையாடுகிறது. சிம்பிளான ஆனால் அருமையான தமிழ் வார்த்தைகள். பொய்க்கூரையாம் ( false ceiling)...
சென்ற மாதம் நான் துருக்கி போய்வந்த பின் பயணக்கட்டுரைக்கு எழுத துருக்கியின் சரித்திரம் சம்மந்தப்பட்ட பழைய நிகழ்வுகளை கஷ்டப்பட்டு தேடித்தான் எழுதினேன். ஆனால் இக்கதையில் துருக்கியின் சரித்திரம் பற்றி (எர்ஜரம் நகரம்...அடாடர்க் பல்கலைக்கழகம்..) நிறைய தகவல்கள் எழுதி அசத்திவிட்டார் சுதாகர்..
அப்பப்பா.... அடுத்தடுத்து மாறும் காட்சிகள்..திருப்பங்கள்... பகீரென ஒர் இடம்...( விக்ரமும் போலீஸ்காரரும் மரங்களடர்ந்த பாதையில் நடந்தனர். பெரிய தொட்டிகள் இருக்கும் பகுதியை அடைந்தனர். மிகப் பெரிய தொட்டிகள். க்வாய் நதியின் நீர் சிறு கால்வாய்களில் வழியே அதில் நிரப்பப்பட்டிருந்தது. பச்சையான நீரலைகள் மெல்ல சலசலக்க பாசியும் மீனுமாக கலந்த ஒரு நாற்றம் புழுங்கிய காற்றில் அடர்ந்திருந்திருந்தது.
விக்ரம் சலசலப்பு கேட்டு திரும்பினார். பச்சை முதுகில் வெள்ளைத்திட்டுக்களோடு இருந்த பெரும் மீன்கள் பெருத்த சலசலப்புடன் நீரில் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அந்த பச்சை நீரிலும் அவை சண்டையிடக்காரணமான ஒன்று விக்ரமிற்கு ஒரு கணம் தன்னைத்தெளிவாக காட்டி கீழே ஆடியாடி வேகமாக ஆழத்தில் அமிழ்ந்தது.....மனிதனின் கை) ........போதுமா?
மொத்தம் 226 பக்க கதையில் கடைசி 60 பக்கங்களுக்கு கூடுதல் பாராட்டு தேவை. காரணம் அந்த 60 பக்கங்களை இரண்டு பாத்திரங்கள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்பவர்கள். ஒன்று ஓநாய்(கள்)...மற்றொரு பாத்திரம் 'வேதநாயகம்'..
'எலும்பு துருத்தும் ஃப்ரேமில், சுருங்கிய பளபளத்த தோல் போர்த்திய அந்தக்கிழவர்,அழுக்கு பனியனில் திருநெல்வேலி ஆரியபவனில் வாழை மட்டை கொண்டு டேபிள் துடைப்பவரைப்போல் இருப்பவ'ராம்.
திருநெல்வேலி இல்லாம சுதாகர் கதையா? சவத்தெளவு..
'ஏவுட்டீ ருக்மணி...எம்பைய எடுத்து வையி...பத்து நாளு இந்த எழவெடுத்தவனோட போயிட்டு வாறென்' போன்ற வட்டார வழக்குத்தமிழ் மூலம் திருநெல்வேலி மீதுள்ள உங்கள் அன்பை வெளிப்படுத்தி திருப்தி பட்டுக்கொண்டீர்கள் சுதா!
..ஓநாய்களைப்பற்றி சில இடங்களில் சுதாகர் கொடுக்கும் தகவல்கள் உண்மையிலேயே சிலிர்ப்பூட்டும்படியாக இருக்கின்றன. (ஓநாய்களுக்குள் சண்டை. பெண் ஓநாய்களுக்காகவும் இடத்தைக்கைப்பற்றவும் நடக்கும். புது தலைவனுக்கு முதல் வேலை, தனது மரபினை வளர்ப்பது. குட்டிகள் இருக்கும் வரை பெண் புணர்வுக்கு இணங்காது. எனவே புதுத்தலைவன், பழைய தலைவனின் குட்டிகளைக் கொன்று குவிக்கும். இது இயற்கையின் தேர்வு.)
இன்னொரு இடத்தில் ...'ஓநாய் அடிச்சா, முதல்ல தலைல கழுத்துலதான் கடிக்கும். பாரு... வயிறு இன்னும் முழுசாக்கிழியல. ஓநாயா இருந்தா, இந்த வயிறு இருக்கிற இடத்தில வெறும் ஓட்டை தான் இருக்கும . இருக்கறதுலயே கொடூரமான வலி வந்த சாவு ஓநாயி கொல்றதுல தான். மத்ததெல்லாம் இரைய கொன்னுட்டுத்திங்கும். ஆனா, இந்த சவத்தெளவு, தின்னுகிட்டே கொல்லும்'.
இதுக்கு மேல எழுதினா சுதாகர் என் மேல கேஸ் போட்ருவார். மதிப்புரை, விமரிசனம் எல்லாம் எழுதுவதை விட எனக்கு பிடித்த சில பகுதிகளை அப்படியே காப்பி செய்து காண்பித்தால் சுவாரசியமாக மற்றவர்கள் முழு கதையை படிக்கலாம்.
நிறைய இடங்கள், அத்தியாயங்கள் இரண்டு முறை படித்தால் தான் புரியும் அளவிற்கு அவ்வளவு டெக்னிகல் சமாசாரங்கள்...
'7.83 ஹெர்ட்ஸ்' கதைய அரக்க பரக்க படிக்காமெ, நிதானமா ஒவ்வொரு வரியையும்
ரசிச்சுப்படியுங்க... அது தான் எழுத்தாளர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்பது என் கருத்து...
70களில் ஒரு மதிய வேளையில், திருச்சி ஜங்ஷன் பகுதி ப்ளாசா தியேட்டரில் ஓமர் முக்தார் ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு (இடைவேளையில் முட்டைகோசு போண்டா, டீ சாப்ட்டு) வெளியே வரும்போது கிடைக்கும் திருப்தி.....7.83 ஹெர்ட்ஸ் படித்ததில்.

நல்லார் ஒருவர் உளரேல்....




கடந்த டிசம்பர் மாதம் 4 நாட்கள் விடுப்பில் பஹ்ரைனிலிருந்து சென்னை சென்றதும் தொலைபேசியில் இவரை அழைத்தேன். " வந்துட்டீங்களா? நாளைக்கு ஸ்கூலுக்கு நீங்க அவசியம் வரனும். அப்படியே திருத்தணி கோவில் தரிசணத்த முடிச்சுடலாம்' என அன்புடன் இவர் அழைக்க மறுநாள் மனைவி,குழந்தைகள், மாமனார்,மாமியார் சகிதம் திருத்தணி கிளம்பினேன்.

திருத்தணி போய்ச்சேரும் முன் இரண்டு மூன்று முறை போன் செய்து 'எங்கிருக்கீங்க' என விசாரித்தார். 'பையனை கேட் கிட்ட நிக்க வச்சிருக்கேன். உங்க வண்டி என்னா கலரு?' என மறுபடியும் போன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நேபாலிப்பையன் ஒருவன் வண்டியை கை காட்டி நிறுத்த அந்த பெரிய வளாகத்தினுள் நுழைந்தோம்.

திருத்தணிக்கு ஏழெட்டு கி.மீ.க்கு முன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறைய மரங்களடர்ந்த பல ஏக்கர் நிலத்தில் இரண்டு மாடி அடுக்குக்கட்டிடம் தான் அந்த பள்ளிக்கூடம்.

'வித்யா க்ஷஏத்ரா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்' போர்டைத்தான்டி உள்ளே வண்டியை நிறுத்தினோம். 'சார் மாடில இருக்கார்' என பள்ளி தாளாளர் சொல்ல இரண்டாவது தளத்துக்கு படிகளிலேறினோம்.

வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க குழந்தைகள் படிக்கும் சத்தம். தமிழ், ஆங்கிலம், கணித வகுப்புக்கள்.அறிவியல் சோதனைக்கூடம் தாண்டி இரண்டாவது மாடி ஏறியும் அவரைக்காணோம். ' என்னங்க.. சார் எங்க?' என நாங்கள் கேட்க ' அந்த ரூமுக்குள்ள இருக்காரு' என நே.பையன் கை காட்ட கதவைத்தள்ளியபடி உள்ளே நுழைந்தால் இவர் கட்டிலில் படுத்திருந்தார்.

வலது கை, காலில் பெரிய மாவுக்கட்டு.. இரண்டு நாள் தாடியுடன் படுத்திருந்தார் திரு.செல்வராஜ் அவர்கள். அப்பள்ளியின் சேர்மன் மற்றும் சொந்தக்காரர். ' என்ன சார்... போன்ல ஒன்னுமே சொல்லலையே... இப்படி அடிபட்டுக்கிடக்கறீங்க. என்னாச்சு ?'என அன்புடன் கடிந்து கொண்டேன். அவரை அப்போது தான் முதன்முதலில் பார்க்கிறேன். அதுவரை அவருடன் போனில் தான் பேசியிருக்கிறேன். 'இருக்கட்டும்ங்க...மொத மொத நம்மள பாக்க வர்றீங்க.. கோவிலுக்கு வேற போவோனும். கை,கால் முறிவு இதெல்லாம் சொல்லனுமா?' என மீசையை நீவிவிட்டவாறே சிரித்தார்.

சில நாட்களுக்கு முன் பள்ளியின் மேல்மாடி கட்டிட வேலைகளை பார்வையிடும்போது தவறி கீழே விழுந்துவிட்டாராம்.
'நல்ல வேள மணல் மேலே விழுந்தேங்க... கொஞ்சந்தள்ளி கம்பி நட்டிருந்தது. அது மேல விழுந்திருந்தா இந்நேரம் பாலூத்தியிருப்பாங்க எனக்கு.. எல்லாம் அந்த திருத்தணி முருகன் காப்பாத்தினது' என அவர் சொல்ல அவரது மனைவி உள்ளே நுழைந்தார்.

'அவருக்கு எல்லாமே ஜோக் தாங்க' .... கணவனை பெருமையுடன் பார்த்தார்.

'மெட்ராஸ்ல வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம். ஆனா இங்கிருந்தே புத்தூருக்கு ட்ரீட்மென்ட்டுக்கு அடிக்கடி போக வசதியா இருக்கு' என சொன்ன அவர் என் பெரியவனை பார்த்து ' வாப்பா பிரசாந்து... நீ நம்ம ஃப்ரெண்டாச்சே... இப்பிடி வா... பக்கத்துல ஒக்காரு' என ஆசையாய் அவனை தன் பக்கம் இழுத்து அவன் கைகளை தன் வசப்படுத்திக்கொண்டார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதே பெரியவன் தான்.
'நீயென்ன அப்பிடி பாக்கறே.. நீயும் நம்ம ஃப்ரெண்டு தான்' என சின்னவனையும் அவர் பக்கம் இழுக்க சின்னவன் வெட்கத்துடன் என்னைப்பார்த்தான்.

' சப்கோ பூச்சோ க்யா மாங்தா... சாய் பானி தோ' என நேபாலிப்பையனிடம் அவர் தமிழ் பேசுவதுபோல சரளமாக ஹிந்தியில் சொல்லும் முன் தட்டு நிறைய பிஸ்கட்டுடன் நுழைந்தான் சூட்டிகையான நே.பையன்.

'பஹ்ரைன்ல இருக்கீங்க...தமிழ்ல ரொம்ப ஆர்வமாமே.. ரொம்ப சந்தோஷம். நான் தமிழ்ப்புலவர்ங்க' என்றவரை மரியாதையுடன் பார்த்தேன்.

'அதோ அந்த அலமாரி முழுக்க தமிழ் புத்தகங்கள் தான். நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன் சார். இப்ப அடிபட்டு படுத்தே இருக்கறதால படிக்க நெறைய டயம் கெடைக்கிது' என அவர் சொல்ல அலமாரியை பார்த்தேன். நிறைய தமிழ் உரைநடை, இலக்கிய, இலக்கணப்புத்தகங்கள். ஆஹா... இவ்வளவு புத்தகங்களா!

LIFCO ஆங்கிலம் தமிழ் பேரகராதி..
கலிங்கத்துப்பரணி(புலியூர்க்கேசிகன் தெளிவுரை)
ஔவையார் அருளிச்செய்த 'ஔவைக்குறள்'
ராஜாஜியின் 'ராமாயணம்'
முனைவர் கதிர்முருகுவின் 'நந்திக்கலம்பகம்'
புலவர் இரா.வடிவேலனின் 'நன்னூல்'
திரிகடுகம்
ஏலாதி
ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் 'கார் நாற்பது களவழி நாற்பது'
சிறுபஞ்சமூலம்
பாண்டியன் பரிசு (கமலா முருகன்)

'உங்க தொழிலெல்லாம் எப்பிடீங்க போவுது?'என அவர் மாமனார் பக்கம் திரும்ப, நான் எழுந்து மெல்ல சில புத்தகங்களைப்புரட்டினேன்..

17ஆம் நூற்றாண்டில் அழகிய மணவாளதாசர் என அழைக்கப்பட்ட பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக்கூறுவர். 'அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்' எனும் பழமொழியும் உண்டாம். திருமலை நாயக்க மன்னரின் அவையில் அலுவலராக இருந்த அவர் இயற்றிய அந்தாதி ஒன்றைப்படித்தேன்....

"திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றன்னையால்
தருவேங் கடத்துத் தரைமே னடந்தன; தாழ்பிறப்பின்
உருவேங் கடத்துக் குளத்தே யிருந்தன; வுற்றழைக்க
வருவேங் கடத்தும்பி யஞ்சலென் றோடின மால்கழலே"

'ஹலோ! என்ன புத்தகத்துல மூழ்கிட்டீங்க?'...கேட்டுக்கொண்டே மாமனார் பாத்ரூம் எங்கேயென்று விசாரித்தார்.

' அப்பப்ப புள்ளைங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பெடுக்கறேன். சேர்மனா எனக்கு வேறென்ன வேலைங்க... கெட்டிக்கார பசங்க.. நாம சொல்லித்தர்றது சரியா தப்பானு கண்டுபிடிச்சிடுவானுங்க...
நாம சொல்லித்தரலைன்னா நமக்கு ஒன்னுந்தெரியாதுன்னு வேற நெனைச்சிடுவானுங்க பசங்க'...மீசைக்குப்பின் பற்கள் தெரிய சிரித்தவாறே கண்ணடித்தார் திரு. செல்வராஜ் அவர்கள்.

சாந்தமான முகம். அடக்கம், பணிவு, மரியாதையுடன் ஏதோ நெடுநாள் பழகிய மாதிரி தோழமையுடன் பேசும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.பள்ளியின் தலைமை ஆசிரியரை கூப்பிட்டு என்னை அறிமுகப்படுத்தினார்.

' டேய் தம்பி... டிரைவர்க்கோ புலாவ்..காப்பி தேதோ' என அவர் நேபாலிப்பையனை விரட்ட அடுத்த சில நிமிடங்களில் உள்ளே வந்த எங்கள் டிரைவரையும் வரவேற்று காபி கொடுத்து உபசரித்தார்.

' நான் ஒரு பொறுக்கிங்க... அதாவது தமிழ்ல சுவாரசியமான தகவல் எல்லாத்தையைம் பொறுக்கீருவேங்க' என்றவர் கண்கள் முழுக்க நகைச்சுவை....ஆர்வம்..

'எனக்கு இலக்கணம் பிடிக்கும்... தலக்கணம் பிடிக்காது' என சொல்லி பெரியவன் முதுகில் தட்டி சத்தமாக சிரித்தார்.

'ரயில்ல போறப்ப கூட கடலை வாங்கி சாப்பட்டப்புறம் அந்த பேப்பர தூக்கிப்போடாம அதுல இருக்கற செய்திய படிச்சித்தான் அமேசான் காடுகள் எழுபது லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்' என்றவரை பொறாமையோடு பார்த்தேன்.

உலக நடப்பைத்தெரிந்துகொள்ள விரும்புவது..மற்றும் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அவரது பேச்சில் தெரிந்தது. நகைச்சுவை உணர்வு வேறு... நம்மைச்சுற்றி இவ்வளவு நல்ல மனிதர்களா!

கம்பெனிகளுக்கு செக்யூரிடி கார்டுகள்(guards) சப்ளை செய்யும் செக்யூரிடி சர்வீஸ் கம்பெனியும் வைத்திருக்கிறாராம். இதற்கு முன் காவல் துறையிலோ ராணுவத்திலோ இருந்தவரென பெரியவன் சொல்லியிருந்தான். அவரது மீசையும் சொன்னது.

'உடம்புக்கு முடியாமப்போச்சு..இல்லன்னா பக்கத்துல ஜி. ஆர்.டி. ரெசிடென்ஸிக்கு சாப்பிட உங்களை கூட்டிக்கிட்டு போயிருக்கலா'மென வருந்தினார்.

விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து நாங்கள் கிளம்பும் முன் அவர் திருத்தணி கோவில் எக்ஸிகியூடிவ் அலுவலருக்கு போன் போட்டு நாங்கள் தரிசனத்திற்கு வருவதை தெரியப்படுத்தி, என்னிடம் 'சிறப்பு தரிசண டிக்கெட்டெல்லாம் வாங்காதீங்க... உங்கள உள்ளே விடச்சொல்லியிருக்கேன். அர்ச்சர்களுக்கு மட்டும் தாராளமா குடுங்க' என்று சொல்லியனுப்பினார். நல்ல மனசு ..

'போகும்போது சாட்சி ஸ்கந்தன் தியாண மண்டபம் பாத்துடுங்க'... கைகூப்பி வணங்கி எங்களை அனுப்பி வைத்தார்.

படிக்கட்டுகளில் மீண்டும் கீழே இறங்கி வரும் போது வகுப்பறைகளில் குழந்தைகளின் 'மாட்டுக்கு இருப்பது வால்... மரத்தை அறுப்பது வாள்' சத்தம் கேட்டது.

கோவில் தரிசனம் முடிந்து மாலை நாங்கள் சென்னை வந்ததும் அவரிடமிருந்து போன். ' சாரிங்க... விருந்தாளியா வந்திருந்த உங்க கிட்ட காலைல அங்க வெச்சி கேக்க வேணாம்னு இப்ப போன் பண்றேன்...சின்ன வேண்டுகோள்' ...தயங்கியபடி கேட்டார்.

' சொல்லுங்க சார் இதுல என்ன இருக்கு?' என்ற என்னிடம் ' ஒன்னுமில்ல... கரூர்ல என் பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேரும் டாக்டரா ப்ராக்டிஸ் பண்றாங்கன்னு சொன்னேனில்லியா.. அவங்க என் பேரனோட ரெண்டு நாள் சென்னைக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க.. அந்த மாஸ்டர் பெட்ரூம் பாத்ரூம்ல ஃப்ளெஷ் சரியா வேலை செய்யல... தம்பி பிரசாந்துக்குத்தெரியும்... நீங்க பிசியா இருப்பீங்க.. உங்கள தொந்தரவு செய்ய வேணாம்னு பாக்கறேன். நாங்களே ரிப்பேர் செஞ்சிக்கிடவான்னு உங்க கிட்டே ஒரு வார்த்தை கேட்கலாம்னு....'

என்ன சொல்வது?
காலையில் அவரது அறையில் இருந்த புத்தகங்களொன்றில் படித்த செய்யுள் ஒன்று நினைவுக்கு வந்தது.

'நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை'

(நெல்லுக்கு இறைத்த நீரானது வாய்க்கால் வழியே ஓடும்போது கசிந்து ஊறி அருகே இருக்கும் புற்களுக்கும் பயனாகும். அதுபோல நல்லவர் ஒருவர் இருப்பின் அவருக்காக பெய்யும் மழை எல்லார்க்கும் பயன் தரும்)

துருக்கியும் ஜீன்ஸ் ரௌடிகளும்....



நடு இரவில் ஒரு பெண் தனியாக ரௌடிகளிடம் மாட்டிக்கொண்டவுடன் அந்த பத்து ஜீன்ஸ் ரௌடிகளும் உள்ளங்கையை பிசைந்தபடி காமவெறியுடன் வட்டமாக அவளை சுற்றி சுற்றி நடக்கும் தமிழ் சினிமா கதை தான் துருக்கி நாட்டுக்கும். 11இலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை சுலைமான்களும், ஆட்டோமான்களும், சுல்தான்களும் தமிழ் ஜீன்ஸ் ரௌடிகள் போல துருக்கியை சுற்றி சுற்றி வந்து தாக்கி, ஆண்டு, மாண்டபின் 1923இல் முஸ்தஃபா கெமால் அட்டாடர்க் நாட்டின் முதல் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அடுத்த 15 வருடங்களில் அவர் துருக்கியை புதிய பாதையில் கொண்டு சென்றார். புதிய அரசியல் சாசனம், சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள், துருக்கிய மொழியை அரசு மொழியாக்கியது, மதசார்புள்ள துறைகளை பின்னுக்குத்தள்ளி, வங்கிகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள், நெசவாலைகள, கப்பல் கட்டுதல், மோடார் வாகன பாகங்கள், இரும்பாலைகள், நாட்டின் புதிய செலாவனியாக 'துருக்கிய லிரா' என ஏகப்பட்ட சீர்திருத்தங்கள்...

1938இல் கெமால் இறந்தவுடன் காளான்கள் போல் நிறைய அரசியல் கட்சிகள் உதயமாயின. மாறி மாறி வந்த நிலையற்ற ஜனநாயக மற்றும் இராணுவ ஆட்சிகள் மறுபடியும் ஜீன்ஸ் ரவுடிகள் போல் வட்டமடிக்க நடுவில் மாட்டிக்கொண்ட துருக்கியின் பொருளாதாரம் ஓரளவு சிதைந்தாலும், கடந்த சில வருடங்களில் முஸ்தஃபா கெமாலின் தொலைநோக்கு திட்டத்தால் துணிமணிகள் ஏற்றுமதி, விவசாயம் மற்றும் வணிகம் மூலம் நாட்டிற்கு பெருமளவு வருவாய்... வளரும் பொருளாதாரத்துடன் இன்று அது ஒரு வளர்ந்த நாடு...

(அது சரி... நீ துருக்கி போனதே ஆபிஸ் வேலையா 3 நாளும் அடுத்த 3 நாள் பெஞ்சாதியோட ஊர் சுத்தத்தானே? அதப்பத்தி எழுதாமெ இராணுவ ஆட்சி, ஜீன்ஸ் ரௌடிங்க, பொருளாதாரம், புண்ணாக்கு... இதெல்லாம் எங்களுக்கு தேவையா?)

சாரிங்க... அட்டாடர்க் விமான தளத்தில் தரையிறங்க சிக்னல் கிடைக்காத்தால் விமானம் இஸ்தான்புல் மேலே அரை மணி நேரம் சுற்றும்போது கவனித்தேன்.. மலைச்சரிவுகளில் கட்டிடங்கள், கருங்கடலும் மத்தியத்தரைக்கடலும் இஸ்தான்புல்லை அழகாகப்பிரித்து நடுவே பாஸ்பரஸ் (Bosphorus) எனப்படும் ஜலசந்தி... அந்தப்பக்கம் ஐரோப்பா இந்தப்பக்கம் ஆசியா. கிரீஸ், பல்கேரியா, ரஷ்யா, சிரியா, இரான், இராக் போன்ற நாடுகள் சூழ்ந்த அழகான நாடு.

விமான தளத்தில் ஆண் பெண் எல்லோர் கையிலும் சதா புகைந்துகொண்டிருக்கும் சிகரெட். பாஸ்போர்ட் கன்ட்ரோல் இளைஞன் என்னை கேவலமாக பார்த்தான். ஆங்கிலம் பேச மாட்டானாம். ' visa page..where?' சிடுசிடுவெனக்கேட்டு பாஸ்போர்ட்டை திருப்பி என்னிடமே கொடுக்க நான் உதவினேன். கூட வந்திருந்த எங்கள் சேல்ஸ் மானேஜர் ஆசாம் சிரித்தான். அவன் ஐடியாக்கள் விற்பனை செய்வதில் புலி. எங்கள் கம்பெனியில் மிக முக்கியமானவன். அரபி, ஃப்ரெஞஃச் பேசுவான். லெபனீஸ் நாட்டுக்காரன். சிரித்துக்கொண்டே ' நாட்டில் பாதி பேர் எதையோ பறிகொடுத்த மாதிரித்தான் இருப்பார்கள் ஶ்ரீதர்... சிடுமூஞ்சிகள்.. வேலைப்பளு அதிகம். சம்பளம் குறைவு. சேமிப்பு இல்லை. நிறைய வரி கட்டுகிறார்கள். திரும்ப வீட்டுக்கு போறப்ப ரோட்டோர கடைல சாப்ட்டு குடிச்சிட்டு வீட்டுக்குப்போவார்கள்'.

எங்கள் நிறுவனம் விநியோகிக்கும் உணவுப்பொருள்களில் முக்கியமானது 'ரெயின்போ' என்ற பிராண்டுடன் நெதர்லாந்தில் தாயாரிக்கப்படும் 'எவாப்ரேட்டட் மில்க் 'மற்றும் பால் பவுடர். வருடாந்திர விநியோகஸ்தர்கள் கூட்டம் இவ்வருடம் இஸ்தான்புல் நகரில்.

சாதாரண பவர்பாயின்ட்டில் பத்து பதினைந்து பக்கத்துக்கு அட்டாச் செய்து இமெயிலில் அனுப்ப வேண்டிய சமாசாரம் இது. இருந்தாலும் நம்மை வருடாவருடம் வரவழைத்து, பணத்தை வாரியிறைத்து ஊரைக்கூட்டி 'டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மீட்' என்ற பெயரில் கொண்டாடி ஊருக்கு அனுப்புவார்கள். ஒரு மணி நேரம் மீட்டிங்.. இடைவேளையில் சாப்பாடு. திரும்ப மீட்டிங். காபி ப்ரேக். மாலையில் துருக்கிய நடனங்கள்...ஊரை சுற்றுக்காட்டி பாஸ்பரஸ் கடலில் படகுச்சவாரி (boat cruiise)...

ஶ்ரீதர்... நீங்க என்ன 'தண்ணி' சாப்பிடுவீங்கவென கேட்ட பாகிஸ்தானியரிடம் எனக்கு தண்ணியே போதுமென சொன்னதும் பழச்சாறு வைத்தார்கள். மிகப் பெரியதட்டின் நடுவே சின்ன இட்லி சைஸில் ஏதோ ஒரு வஸ்து. இரண்டு விரல்களில் ஒரே முறை வழித்து நக்கி சாப்பிடும் பதார்த்தத்தை முள்கரண்டியால் குத்தி குத்தி முக்காமணிநேரம் சாப்பிட்டோம். இந்தோனேசியர், அரபு நாட்டவர், ஜெர்மானியர், இந்தியர், பாகிஸ்தானியர், மொராக்கன்.... நிறைய பேசினோம் ( வியாபாரத்தை தவிர), தேவையில்லாமல் சிரித்தோம். நிறைய கை குலுக்கினோம். 'போன முறையை விட கொஞ்சம் இளைச்சிருக்கியே' எனப்புளுகினோம். ஒரே நேரத்தில் இந்தப்பக்கம் இரண்டு பேர் பேசுவதைக்கேட்டு அந்தப்பக்கம் இரண்டு பேருக்கு பதில் சொன்னோம். அவன் மொதல்ல ஹலோ சொல்லட்டுமென சிலபேருக்காக காத்திருந்தோம். சினிமா போஸ்டர் ஒட்டும் மைதா பசை மாதிரியான டெசர்ட்டை எல்லோரையும்போல கவனத்துடன் பாதி மிச்சம் வைத்து, பெர்ரியர் வாட்டர் குடித்து, மடியிலிருந்த வெள்ளைதுண்டால் லேசாக உதட்டில்(நம் உதட்டில் தான்) ஒற்றியெடுத்து, 'அடுத்த முறை சைப்ரஸ்ல வச்சுக்கலாமே'யென ஐடியா கொடுத்து விடை பெற்றுக்கொண்டோம்.

ஆபிஸ் வேலை முடிந்த மூன்றாம் நாள் சின்னவனும் மனைவியும் வந்திறங்கினார்கள். அடுத்த இரண்டு நாட்கள் பஸ், 'taksi', மெட்ரா ரயில், ட்ராம்வே என ஊர் சுற்றினோம். எங்கு பார்த்தாலும் கிருத்தவ தேவாலயங்கள், மசூதிகள், அருங்காட்சியகங்கள், சாப்பாட்டுக்கடைகள்.. க்ராண்டு பஜார் ( டெல்லி பாலிகா பஜார் மாதிரி) எனப்படும் மிகப்பெரிய சந்தைக்குள் நுழைய முடியாத கூட்டம். டர்க்கிஷ் டிலைட் எனப்படும் அல்வா மற்றும் சர்க்கரைப்பாகு சொட்டச்சொட்ட இனிப்பு வகைகள். உலகத்தரம் வாய்ந்த லெதர் ஜாக்கெட்டுகள் அங்கே பிரசித்தம். 250 டாலர்கள் சொன்னான். 'என்னப்பா இந்த விலை சொல்றே' என கேட்டபோது ' இது சாஃப்ட் லெதர். சும்மா இல்ல.. 6 baby lambs skin இல் செய்ததாக்கும்' என அவன் சொல்ல மனைவி ஐயோ பாவமென பயந்து வெளியே ஓட... ' ஹலோ.. நரி, நாய்த்தோலில் செய்ததும் இருக்கு.. விலையும் குறைவு..' எனக்கூவினான். உடனே ட்ராம் பிடித்து sultanahmet என்ற இடத்தில் அசல் லெதர் மாதிரியே fabric இல் செய்த அதே மாடல் ஜாக்கெட்டை 40 டாலர்களில் வாங்கினேன்.

அயாசோஃபியா என்ற புராதன தேவாலயம் பிறகு மசூதியாக்கப்பட்டதாம். இன்னும் உள்ளே மேரியின் படங்கள்... மிக பிரம்மாண்டமாக இருந்தது. பக்கத்தில் blue mosque..கிரேக்க ரோமானிய கலை நுனுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. 'கலாட்டா டவர்' படிகளில் ஏறி மேலிருந்து முழு நகரத்தை பார்க்க முடிந்தது. சரிவான தெருக்களில் நிறைய நடந்தோம்.

'நாம சாயங்காலம் சுல்தானியா போலாமா? அது துருக்கிய நடனங்கள் மற்றும்
பெல்லி டான்சிங்' கலந்தது என ஆசாம் சொன்னவுடன், 'பெல்லி டான்சிங்கா? அது நாம துபாய் டெசர்ட் ட்ரைவ்ல பாத்ததாச்சே! வேண்டா'மென சொல்லிவிட்டேன். கிட்டத்தட்ட 'பொன்மேனி.. உருகுதே' சில்க் ஸ்மிதா நடனம் தான். ஒரே வித்தியாசம்...சில்க்கை கொஞ்சம் பின் பக்கம் சரிந்தமாதிரி ஆடவிட்டு வயிற்றில் குதிரைவண்டி சாட்டைக்குச்சியை வைத்து கீழே விழாமல் ஆடவேண்டும். இதுக்கு 90 யூரோக்களா? வேணாம்ப்பா....
'க்கும்... ஏற்கனவே அந்த கணறாவியெல்லாம் பாத்தாச்சு... அதானால தானே இப்ப வேணாங்கறீங்க' என மனைவி முனுமுனுக்க ஆயிரத்தில் ஒருவன் ராம்தாஸின் 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிக புத்திசாலிகள்...ஆனால் வாய் தான் காது வரை' வசனம் ஞாபகம் வந்தது. அதற்குள் சின்னவன் 'this place is..lame' என அதே படத்தின் அடிமை "நம்ம சொந்த ஊருக்கு போறது எப்போ?" டைப்பில் சலித்துக்கொண்டான்.

அநேகமாக எல்லோரும் பார்ட் டைம் வேலை செய்கிறார்களாம். நாம் தங்கியிருந்த ஹோட்டல் சிப்பந்திகள் டாக்ஸி பிடித்துத்தருவது, ஊர் சுற்றிக்காட்ட டூரிங், மசாஜ், ஹேர் ப்ளான்ட்டிங் என எல்லாவற்றுக்கும் ஆள் பிடிப்பதில் கமிஷன் பெறுகிறார்கள். Concierge பகுதி அன்பரிடம் ஹேர் ப்ளான்ட்டிங் பற்றிக்கேட்டேன். உந்தலைக்கு என்னா கொறச்சலென கேட்டார். ' இல்ல.. HAHK படத்தில் லேசாக முன் மண்டை முடி கொட்டியவுடன் சல்மான் அதைத்தானே செய்தார்.' நாளைக்கு சொல்றேன் தம்பி... அதொன்னுமில்ல... பின் மண்டையிலிருந்து கத்தையா முடியப்புடுங்கி முன் மண்டைல ஒல்வொரு முடியா ஊசியால குத்தி நடுவாங்க.. லோகல் அனஸ்தீசியா கொடுத்துட்டு...எனக்கு 1000 முடி புடுங்கி நட்டு வைக்க செலவு 1000 யூரோ ( ரூபாய் என்பதாயிரம்) என அவர் சொல்லும்போதே அவர் தலையை கவனித்தேன். முதல் நாள் இரவு மண்ணில் தூவிய மல்லி விதைகள் மறு நாள் ஆங்காங்கே முளை விட்டமாதிரி கொடூரமாக இருக்க எனக்கு ஒரு மயிரும் (தலை முடியைச்சொன்னேன்) வேணாமென முடிவு செய்தேன்.

முந்தாநாள் மதியம் செக்கவுட் செய்து, பெட்டியை க்ளோக் ரூமில் போட்டு இரவு 9 மணி வரை இன்னும் ஷாப்பிங் செய்து நடு இரவு ஒரு மணி ஃப்ளைட் பிடித்து காலை 8 மணிக்கு பஹ்ரைன் வந்து சேர்ந்தோம்.
வளர்ந்த நாடாக இருந்தும் சேமிப்பு குறைவான வருவாயுடன் அந்த மக்கள் பாவம். நிறைய அடி வாங்கிய நாடு... ஜீன்ஸ் ரவுடிகள் சுற்றி சுற்றி ( யப்பா.... மறுபடியும் ஜீட்ஸ் ரவுடியா.. வுட்ருப்பா...).

சிரியன் பார்டர் விவசாயி குழந்தைகள் உள்ளூர் ரோட்டில் பிச்சை எடுக்க, அவர்களின் இரத்தசோகை வெளுப்பு தாய்மார்கள் நவீன உடை, முழங்கால் ஷூ அணிந்து பொது இடங்களில் 50 லிராவுக்கு ( ரூ 1300) தங்கள் உடலை விற்க பேரம் பேசும் அவலம் இன்னும் மனதில்....

சனிகலு பப்பு....


'ஒரேய் ஶ்ரீதர்.. அங்கிடிக்கி போய் சனிகலு பப்பு தீஸ்குன்னி ராரா...வெட்டியா ரோட்ல வெள்ளாண்டுட்ருந்தின்னா மளிகைக்கடை தான் வெப்பே'... அம்மா சத்தம்போட்டவுடன் சட்னிக்கு பொட்டுக்கடலை வாங்க கணேசன் கடைக்கு ஓடினேன். 

அப்ப ஆறாங்கிளாஸோ ஏளாங்கிளாஸோ...ட்ர்ர்ரும்...ட்ர்ர்ரும் என வண்டியை ஸ்டார்ட் செய்து ஸ்டியரிங் வீல் சுற்றுவது மாதிரி கையை சுற்றி உதட்டிலிருந்து எச்சி தெறிக்க ட்ர்ர்ர்ரென கத்தியபடியே தர்கா வழியாக ஓடினேன்.

தென்னூர் ஜெனரல் பஜார் தெருவைத்தாண்டி பட்டாபிராம் பிள்ளைத்தெருவும் மூலைக்கொல்லைத்தெருவும் சந்திக்கும் இடத்தில் தான் கணேசன் மளிகைக்கடை. அன்று பெரிய மார்க்கெட்டிலிருந்து சாமான்கள் வாங்கிக்கொண்டு வருவதால் கடை திறக்க லேட்டாகும்.

கடையை ஒட்டி மூலையில் டீக்கடை பாய் டீ வடிகட்டியை மடக்கி தூளை எறிந்துவிட்டு புதியதாக டீத்தூளைப்போட்டு, பாய்லர் கீழேயுள்ள பிடியை உலுக்கி சாம்பலை வெளியே எடுத்துவிட்டு மேலிருந்து கொஞ்சம்
கட்டைக்கரிகளைப்போட்டார்.

பக்கத்தில் முபாரக் பேக்கரியில் வெண்ணை பிஸ்கட் வாசனை. தேங்காப்பூத்தூள், வெண்ணெயில் முக்கியெடுக்கப்பட்ட பன், இருபத்தஞ்சு பைசாவிற்கு முந்திரி,தேங்காய் போட்ட ப்ரௌன் கலர் கேக் திங்க ஆசை தான். காசில்லை. பத்து பைசாவிற்கு அதே கேக்கின் தூள் கிடைக்கும்.

ஐந்து வீடு தள்ளி பழைய மூங்கித்தட்டி போட்ட வீடு தான் திருச்சி லோகநாதனின் பூர்விக வீடாம்.

அவசரமாக சைக்கிளில் பொன்மலை ரயில்வே 'வரக் ஷாப்'புக்கு ஒடும் அஃபீஸ் பாய், பெரிய கம்மாளத்தெருவில் நகை கிலிட் ஷாப் வைத்திருக்கும் ரஹமத்தியின் அப்பா, ராமகிருஷ்ணா டாக்கீஸ் எதிரே 'நைட்டுக்கடை' நடத்தும் மலையாளி பாலஷ்ணன், சைக்கிள் கடை பாபு என நடுத்தர மக்கள்
அவசரமாக ஓடும் காலை வேளை..

அந்தப்பக்கம் ரோட்டோரத்தில் தரையில் சாக்கு விரித்து 70 வயது கிழவி வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, மாங்கா பத்தை, கூரு கூராக நெலக்கடலை, எலந்தப்பழம், மக்காச்சோளம் விற்கிறாள். அஞ்சு பத்து பைசாவிற்கு எதுன்னாலும் கிடைக்கும். ஒரு நாள் அந்த கிழவி கடையில் வாங்கித்தின்பதை நிறுத்தி விட்டேன். காரணம், அன்று அவள் எழுந்து பாபு சைக்கிள் கடையெல்லாம் தாண்டிப்போய் அந்தப்பக்கம் சாக்கடையான்ட நின்னு .. முடித்துவிட்டு திரும்ப கடைக்கு வந்ததும் காலில் பட்டிருந்த ஈரத்துளிகளை அலட்சியமாக கையால் துடைத்து 'உனக்கு என்னாய்யா வேணு' மென கேட்டதும் நான் 'அய்யய்யே! அம்மா!' வென வீட்டுக்கு ஓடி நடந்ததைச்சொல்லி முடிப்பதற்குள் பொளேரென அறை... 'யாரைக்கேட்டு இத்தினி நாள் அங்க வாங்கித்தின்னே?... சொன்ன பேச்சை கேக்கலைன்னா நீ மளிகைக் கடை தான் வெப்பே ' (மறுபடியும் மளிகைக்கடை சாபம்!)

கணேசன் வந்துவிட்டான். சுருட்டை த்தலைமுடி முழுவதும் வழியும் எண்ணெய்..தூக்கி வாரி நெற்றியில் சுருளாக முடி. பெரிய தொப்பை. ஸ்டான்டை மடக்கி சைக்கிளை மூட்டையோடு பின்னுக்கிழுத்து நிறுத்தி சீட்டுக்கடியிலிருந்து சைக்கிள் டியூபை விடுவித்து அரிசி மூட்டை, எண்ணெய் டின்களை இறக்கினான்.

கடையின் சங்கிலி, பூட்டைத்திறந்து மரப்பலகையை மடித்து திண்ணை மாதிரி ஆக்கினான். ஒன்று முதல் எட்டு வரை நம்பர் எழுதிய மரப்பலகைக்கதவுகள் ஒவ்வொன்றாக சாய்த்து வெளியே எடுத்து, உள்ளுக்குள் தள்ளப்பட்டிருந்த மூன்று பெரிய எண்ணை ட்ரம்களை வெளியே திண்ணைக்குத்தள்ளி புதிய கடலெண்ணையை நிறப்பும்போது கமகமவென வாசனை.

உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றைப்பிடித்து கடைக்குள் ஏறி பச்சை அன்டர்வேர் தெறிய உள்ளே பள்ளத்தில் குதிக்கும்போது பெருச்சாளி ஒன்று கடைக்கு வெளியே பாய்ந்து ஒட, கீழே குனிந்து எலிப்பொறியை வெளியே எடுத்தான். அதற்குள்ளேயும் ஒரு எலி. காலி சாக்கு ஒன்றுக்குள் எலிப்பொறியை விட்டு மாட்டிய எலியை அடுத்த நிமிடம் துணி துவைக்கிற மாதிரி ரோட்டில் சாத்தி குப்பைத்தொட்டிக்குள் கடாசிவிட்டுத்திரும்ப வரும்போது நாலைந்து பெண்கள் கடைக்கு வெளியே காத்திருந்தார்கள்.

எதிரே ஜான் கடையில் காய்கறி மற்றும் ரசூல் மட்டன் ஸ்டாலில் 'கோஷ்' வாங்கிக்கொண்டு வந்த பெண்கள் ஒவ்வொருவராக...
' காக்கிலோ பச்சரிசி குடுங்க'..
'புள்ளைக்கி வவுத்த வலி.. நாலனாக்கு 'பேர் சொல்லாதது' குடுங்க'
' நாலு தேங்கா சில்லு.. எட்டனாக்கு கசகசா.. நூறு அஸ்கா'
'ண்ணே! ரெண்டு தேன் மிட்டாய்'...
கணேசன் இயந்திரம்போல் இயங்க ஆரம்பித்தான். உடனே ரெண்டு தேங்காய்களை உடைத்து தண்ணீரை தூக்குச்சட்டிக்குள் பிடித்து(வீட்டுக்கு), அரிவாள் மாதிரி உள்ள கத்தியில் தேங்கா சில்லு கீறி எடுத்தான்.

பக்கத்து அலமாரயில் மைதீன் பீடி, ஹாட்டின் பீடி, சிஸர்ஸ், பர்க்ளேஸ் சிகரெட், தபால் கார்டு, இன்லாண்டு லெட்டர், புத்தகத்தினுள் ஸ்டாம்ப், பத்திரத்தாள்... இந்தப்பக்கம் கருப்பான தகர டப்பாக்களில் கல்கண்டு, ஏலக்காய், முந்திரி, லவங்கம் பட்டை, மாவு சோடா....

கணேசன் கடையில் சீட்டு சேமிப்பு திட்டமுமுண்டு. அவ்வப்போது நாம் கட்டும் ஒவ்வொரு 20 பைசாவுக்கும் சீட்டு அட்டையின் கட்டங்களில் மரக்கட்டையால் இங்க் தொட்டு 'x'குறி வைக்கப்படும். அட்டையின் பின்புறம் 'கார்டு தொலைந்தால் கம்பெனி பொறுப்பல்ல', 'கட்டிய பணத்திற்கு பொருள் மட்டுமே கிட்டும். பணம் திரும்பப்பெற இயலாது' போன்ற 'கம்பெனி' விதிகள்'. கடைசி வாசகம் வித்தியாசமானது.... 'காசு பணம் உள்ளவர்கள் மட்டுமே கடவுள்... கடவுளாக மதிக்கப்படுவார்கள்'

அது சரி... நான் சனிகலு பப்பு தானே வாங்க அங்க வந்தேன்? சாமானை வாங்கிக்கொண்டு பொட்டலத்தைத்திறந்து கொஞ்சம் பொட்டுக்கடலையை வாயில் போட்டுக்கொண்டு வீடு திரும்பும்போது வழியில் நண்பர்கள் 9 குழி கோலி விளையாடிக்கொண்டிருக்க, நானும்... நாலு கோலிகளை சற்றுத்தள்ளி நின்றுகொண்டு 9 குழிக்குள் நாம் போட..'கீ காடி, மே நிப்பு, ஆக்கர் கடசீ என மற்றவர்கள் சொல்லும் கோலிகுண்டுகளை குறிபார்த்து அடித்தால் சீராக வெட்டிய சிகரெட் அட்டைகள் கிடைக்கும். மல்லிகைபுரம் பையன்கள் காசு வைத்து விளையாடுவதால் அவன்களோடு விளையாட முடியாது. நாம் விளையாடும்போது அவர்களை சேர்த்துக்கொள்ளாவிட்டால் 'வோய்யவொ- - -' என திட்டிவிட்டுப்போவான்கள்.

திடீரென வீட்டு ஞாபகம் வர... 'ஆஹா இன்னிக்கி இருக்கு'...இட்லிக்கு சட்னி அரைக்க சனிகலு பப்புக்காக இவ்வளவு நேரம் அம்மா காத்திருந்தார்கள்..
'ஒக்க பப்பு தீசேக்கி எந்த்தரா சேப்பு?' ..தொபேல் தொபேலென அடி. மறுபடியும் ' நீ மளிகைக்கடை வைக்கத்தான் லாயக்' சாபம்...

அதுசரி...மளிகைக்கடையென்ன அவ்வளவு மட்டமான தொழிலா? அப்பாய் மளிகையில் கல்யாணத்திற்கே சாமான் வாங்குவார்கள். இந்த மளிகைக்கடை சாபம் அடுத்த சில வருடங்கள் கிடைத்தது.

ஆச்சு...45 வருடங்கள் கழித்து இன்று யோசித்தால் அந்த சாபம் பலித்துவிட்டமாதிரி தான் இருக்கு சார்!.

ஐ.டி.சி, லீவர் போல எங்களுடையது உணவுப்பொருட்கள் நிறுவனங்களடங்கிய குழுமம். பல்வேறு நாடுகளிலிருந்து அரிசி, சர்க்கரை, எண்ணெய், பால் பவுடர், சீஸ்,பதப்படுத்தப்பட்ட இறைச்சி,பாஸ்தா என நூற்றுக்கும் மேலான உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து குளிர்ப்பதன அறைகளில் வைத்து, மினரல் வாட்டர், ஐஸ்க்ரீம், பழச்சாறு, பதப்படுத்திய (long life) பால், தக்காளி விழுது போன்றவற்றை எங்கள் ஆலையில் தயாரித்து இந்த சிறிய முத்துத்தீவின் மக்களுக்கும், அங்காடிகளுக்கும், அரசாங்கத்துக்கும், உள்நாட்டு இராணுவம் மற்றும் குவெய்த், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்திற்கும் வினியோகிக்கிறோம்.

மூலைக்கொல்லைத்தெரு மளிகைக்கடை கணேசனுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

அவன் பச்சை அட்ராயர் வேட்டி சகிதம் செய்யும் வேலையை நான் டை, சூட் அணிந்து செய்கிறேன்.

அவன் சைக்கிளில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கடையில் இறக்கும் மளிகைப்பொருட்களை நான் கன்டெய்னர்களில் விமானம் மற்றும் கப்பலில்..

அவன் கடை மாதிரி இங்கும் பெருச்சாளிகளுண்டு. ஆனால் அவை(வர்)களை பிடிக்கத்தான் இங்கு எலிப்பொறி இல்லை.

கணேசனைப்போல ஓடியாடி இங்கும் உழைக்கனுங்கோ... இல்லாகாட்டி பப்பு வேகாது...சனிகலு பப்பு.

மவுண்ட்பேட்டன் மணி ஐயர் காண்டீன்...


காலை 6 மணிக்கு எழுந்து தி.நகரிலிருந்து ஆட்டோ பிடித்து மயிலாப்பூரில் கணபதி வீடு போய்ச்சேர்வதற்குள் அவனிடமிருந்து போன். ஹைதராபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு ஓடி வந்துவிட்டான். நேராக கடற்கரைக்கு கூட்டிப்போனான். ஒரு மணி நேரம் வாக்கிங்.
ஸ்வச் பாரத் எஃபெக்ட் பீச்சில் தெரிந்தது. பள்ளிக்குழந்தைகள் பீச்சை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஏவியெம் சரவணன் அங்கு வருவாரென கேள்விப்பட்டதால் வெள்ளைச்சட்டையணிந்தவர்களையெல்லாம் உற்றுப்பார்த்துக்கொண்டே நடந்தேன். அங்கே இளநீர், அருகம்புல் சாற்றை விட அல்லோவிரா ஜூசுக்கு நல்ல டிமான்டு போலும்.
முதல் நாள் தண்ணியடித்துவிட்டு சிமென்டு தரையில் படித்தவர்கள் Z வடிவத்தில் தூங்கிக்கொண்டிருக்க, மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு காவி உடையில் ஒரு பெருசு செல்போனை காதில் வைத்துக்கொண்டு புன்னாகவராளி ராகத்துப்பாடல் ஏதோ கேட்டுக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்.
திரும்ப மயிலாப்பூர் சிவசாமி சாலை வந்தோம். 'தம்பி அடுத்த லெஃப்ட் எடுப்பா'வென கணபதி சொல்ல டிரைவர் இந்திராணியம்மாள் தெருவுக்குள் நுழைந்து ஶ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா முன் வண்டியை நிறுத்த கணபதி 'ஶ்ரீதரா இந்த சபா காண்டீன்ல டிபனை முடுச்சுக்கலான்டா..இங்க டேஸ்ட் பண்ணிப்பாரு'...டேஸ்ட்டா அது..
'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் அநேக நமஸ்காரம்' போர்டு எங்களை வரவேற்றது. உள்ளே சுமார் 150 பேர் உட்காரலாம். வடை சாம்பார் வாசனை சும்மா தூக்கியது. இன்றைய ஸ்மெஷல் சாக்லேட் தோசையாம். கமக ம வாசனை நெய்ப்பொங்கலிலிருந்து சர்வ ஜாக்ரதையாக மிளகுக்கூட்டங்களை விலக்கி, முந்திரியை ஆதரவுடன் சேர்த்து ஒரு விள்ளலை ஆசையுடன் எடுத்து, அடையாள அணிவகுப்பு மாதிரி வரிசையாக நின்ற ரெட் சட்னி, தே.சட்னி, சாம்பாரில் முக்கி எப்போது வாயில் போட்டேனென தெரியவில்லை... தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பற்களில் மாட்டிய முந்திரியை மென்று, டிஷ்யூ பேப்பரில் வழியும் மூக்கை துடைத்துக்கொண்டு மூக்கு மேல் சரிந்திருந்த கண்ணாடியை சற்று மேலே தூக்கி சுற்றிலும் பார்த்தால் ஈரம் சொட்டும் தலையுடன் ஆங்காங்கே கணவன் மனைவிகள் நெய் ரோஸ்ட்டை பெட்சீட் மாதிரி மடித்து கெட்டிச்சட்னியை மேலே கொட்ட, இந்தப்பக்கம் சின்னப்பையன் ஒருவன் பூரியை ஆள்காட்டி விரலால் குத்தி வெளியே வரும் ஆவியை வாயால் ஊவென ஊதினான்.
கணபதிக்கு மதுரம்னா இஷ்டமாச்சே. இன்றைக்கு காசி அல்வா, அசோக் அல்வா, சூர்யகலா, சந்த்ரகலா. மால்புவா, ஒப்புட்டு...அஞ்சு பாக்கெட் அசோகா அல்வா வீட்டுக்கு டேக் -அவே சொன்னான். டபரா டம்ளரை இரண்டு முறை மட்டுமே சுற்றி சக்கரை முழுவதும் கரைவதற்க்குள் மடக்கென்ன காபியை வாய்க்குள் கவிழ்க்க நாக்கில் காரசட்னியின் சுவையும் காபியின் சிக்கரியும் ஜுகல்பந்தி நடத்தின..மவுண்ட்பேட்டன் மணி ஐயர் வாழ்க.
சாயங்காலம் மறுபடியும் மியூசிக் அகாடமி போய் மூன்றாம் தளத்தில் அமர்ந்து .., உமையாள்புரம்+கார்த்திக்+ சிக்கில் கச்சேரியை ரசித்து 8.30க்கு கீழே வந்து பூரன்போளி, ராகி இடியாப்பம், தட்டு இட்லி, புளிப்பொங்கல் சாப்பிடதை விரிவாக எழுத ஆசை தான்.. மணி இப்பவே இரவு 12.. ஒரு மணிக்கு ஷார்ஜா ஃப்ளைட் செக்கின் செய்யனுமே..
இரவு வணக்கங்கள்...

சிவகுமார் மாமா...




'ஶ்ரீதரா..சிவகுமார் மாமாவ மறக்காம பாத்துட்டுப்போ... உன்ன அடிக்கடி விஜாரிக்கிறார்' என Ganapathi Subramanian சொல்லவும் உடனே கிளம்பினேன். மாமா வீடு நான் தங்கியிருந்த வாசன் தெருவை அடுத்து முப்பாத்தம்மன் கோவிலுக்கு வெகு சமீபத்தில் ராமச்சந்திரா தெருவென நினைக்கிறேன். தொலைபேசியில் ஆனந்தி மாமிக்குத்தெரிவித்து விட்டு அடுத்த 10 நிமிடத்தில் அவர்கள் வீட்டில் நான்.
'வாப்பா ஶ்ரீதர்... எப்பிடிப்பா இருக்கே...' சிவகுமார் மாமா ஆனந்தி மாமியின் அதே வாஞ்சையான பேச்சு.... மாமி அதே மாதிரி தான் இருக்க மாமா (81) மட்டும் கொஞ்சம் களைத்திருந்த மாதிரி இருந்தது.
படிப்பை முடித்தவுடனேயே பஹ்ரைன் வந்து gulf air இல் சேர்ந்து நாற்பது வருடங்கள் ஆகி ரெவன்யூ அக்கவுன்ட்ஸின் தலைமைப்பதவியிலிருந்தவர் மாமா.
தினமும் மாலை மற்றும் வெள்ளியன்று அவரைப்பார்க்க அவரது உம்-அல்-ஹாசம் ஃப்ளாட்டுக்கு ஜனங்கள் வந்துகொண்டே இருப்பது வழக்கம். கணபதி தான் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியவன். கஜ்ரியா எலெக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் தலைவர் லால்ஜி கஜ்ரியா, கேவல்ராம் க்ரூப் சேர்மன், அமெரிக்கன் எம்பஸியின் பாகிஸ்தான்காரர் குப்தாஜி என பஹ்ரைனின் முக்கிய புள்ளிகள் அவரது நணபர்கள். பக்கத்து ஃப்ளாட்டில் கல்ஃப் டெய்லி நியூஸ் எடிட்டர் சோமன் பேபி...எஸ்.வி.சேகர் டிராமா போன்ற ஏதாவது நிகழ்ச்சிக்கு மாமா தலைமை தாங்கினால், உடனே மாமாவின் போட்டோவை சோமன் பேபி பேப்பரில் போட்டு விடுவார். கீழ் தளத்தில் டாக்டர் மாலா...
உஷா மற்றும் குழந்தைகளை மாமா மாமி விசாரித்து விட்டு பஹ்ரைன் நாட்களை நானும் மாமாவும் கொஞ்சநேரம் அசைபோட்டோம் கின்னத்தில் குலாப்ஜாமூனோடு.
மாமாவின் நகைச்சுவைக்காகவே அவரைச்சுற்றி எப்போதும் ஒரு பட்டாளம் இருக்கும். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரே ஜோக் ... சிரிப்பு மயம் தான். ஒரே நேரத்தில் அடுக்கடுக்காக 10, 15 ஜோக்குகள் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்பவர்.கோபமே வராது. எப்போதும் சாந்தமான மலர்ந்த முகம். ரொம்ப பாசிடிவ். மாமாவின் பலமே மாமி தான். மாமிக்கு ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருந்தது.
அப்போது Gopala Sundaram மாமாவும் பஹ்ரைனில் இருந்தார். தம்பி.. தம்பி என அவரை சிவகுமார் மாமா ஆசையோடு அழைப்பது வழக்கம். கோ.சு.மாமா வழங்கிய ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாமா கடைசியில் அவரை வாழ்த்திப்பேசும்போது 'இதுவரை நம்மை எல்லோரையும் விசா,டிக்கட் இல்லாமல் அனுமனுடன் லங்கா கூட்டிச்சென்ற தம்பி கோபாலசுந்தரத்திற்கு நன்றி' என முடிக்க ஒரே கரகோஷம்.
அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது மாமாவின் பழைய ஹாஸ்யத்தை அவரிடம் தேடினேன். 1995இல் ரிடையர் ஆகி கடந்த 20 வருடங்கள் சென்னையில்..
மாமா பஹ்ரைன் விட்டுக்கிளம்பும் முன் அவரது சென்டாஃப் பார்ட்டிக்கு தடபுடலான ஏற்பாடுகள். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், டிராமா, மாமாவின் ஓவியத்தை நான் வரைந்து மேடையில் அவருக்களித்தது, இந்தியன் அம்பாசடர் சிறப்பு விருந்தினர்...என எல்லாம் முடிந்து கடைசியில் மாமாவின் உரை..சுமார் 20 நிமிடங்கள் வரிசையாக ஜோக்குகள்... அழுகையினூடே எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் மாமா..( 'என்னடா சோகமா இருக்கே?..'
'கிரிக்கெட் விளையாடறேன் மாமா..'
'அதான் உன்ன வெளையாட்ல சேத்திக்கிட்டாங்களே! அப்பறமென்ன சோகம்? உன்ன விக்கெட் கீப்பரா ஆக்கலையா?'
'இல்ல மாமா என்னய தான் விக்கெட்டா நிக்க வெச்சிருக்கா')
அந்த ஹாஸ்ய உணர்வு இப்போதில்லையா? மாமா கண்களில் ஆசையுடன் தனது பழைய நண்பர்களை ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருக்க,
ஜோக்குகள் சொல்லும் மாமாவை மட்டும் நான் தேடினேன்.
கிளம்பும் முன் மறக்காமல் மாமா மாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 19 வருடங்கள் முன் நான் வரைந்த அவரது ஓவியம் ஹாலை அலங்கரித்துக்கொண்டிருந்தது. கிளம்ப மனசில்லை எனக்கு.. ஏதோ ஒரு உறுத்தல். பஹ்ரைனில் எங்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த மாமா இப்ப இல்லியா? விடை பெற்றுக்கொண்டு மாமா மாமியிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வாசல் பால்கனி வழியாக படியிறங்கும் முன் மறுபடியும் தயக்கம்...
'மாமா.. உங்க கிட்ட ஒன்னு கேக்க...' நான் முடிக்கவில்லை...
'அந்த சேரை இழுத்துப்போட்டு இப்பிடி உக்காருப்பா'... மாமாவுடன் மாமியும் சேர்ந்து கொள்ள.. "மாமா... நீங்க முந்தி சொன்ன ஜோக்கெல்லாம் ஞாபகமிருக்கா? இப்பவும் நாங்க அந்த ஜோக்கெல்லாம் மத்தவங்களுக்கு சொல்லிகிட்டிருக்கோம்... என்ன.. ஒன்னு...நீங்க சொல்ற ஸ்டைலே தனி.."
மாமி உடனே..., 'அந்த சர்க்கஸ் ஜோக் சொல்லுங்க' என எடுத்துக்கொடுக்க மாமா கண்களில் ஒரு மின்னல் கீற்று...பிரகாசம்.. தொண்டையை சரிசெய்து நெஞ்சை நிமிர்த்தி சடசடவென பெய்யும் மழை மாதிரி ஆரம்பித்தார்...
1. வேலையே கிடைக்காத ஒருத்தன் ஒரு சர்க்கஸ் மேனேஜரான்ட போயி 'சார் எனக்கு வேல ஒன்னுங்கெடைக்கல.. எதாவது வேல போட்டுக்கொடுங்க.. நான் பி. காம்' னானாம்.
'இந்தாப்பா.. நம்ப கரடிக்கி ரெண்டு நாளா வயறு சரியில்ல... நீயி கரடி வேஷம் போடறியாப்பா?' என சொல்லி அவனுக்கு கரடி வேஷம் போட்டு கூண்டுக்குள்ளாற தள்ளினாங்களாம். சிங்கம் ஒன்னு அவன பாத்து ஒடி வர, 'அய்யய்யோ இப்ப நா என்ன பண்றது சார்' ன்னு இவன் கத்த, கிட்ட வந்த சிங்கம் 'பயப்படாதப்பா.. நான் எம்.காம்'னுச்சாம்.
2. சினிமா டைரக்டர் கிட்ட ஒருத்தன் போய் 'சார் நீங்க எந்த ரோல் வேணும்னாலும் குடுங்க.. நா நடிக்கிறே' ன்னு கேட்டானாம். 'சரிப்பா கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும் பரவால்லியா? அந்த புலிக்கூண்ட தொறந்து விட்ருவோம்..அது உன்ன தொறத்தும்.. நீ நேரா ஒடி அந்த மரத்து மேல ஏறி அங்கயிருக்கற துப்பாக்கி எடுத்து சுடனும்... என்ன புரிஞ்சுதா' ன்னு கேட்க, அவன் பதிலுக்கு ' எனக்கு புரியறதிருக்கட்டும்.. அந்த புலிக்கு மொத புரிய வைங்க'ன்னானாம்.
3. பக்கத்து ஃளாட்ல இருந்து தொபேல்.. தொபேல்னு சத்தம்..பையன போட்டு அடியோ அடின்னு அடிக்கறார் அந்த ஃப்ளாட்டுக்காரர். இந்த ஃளாட் காரர் ஓடிப்போய் ' என்ன சார் என்னாச்சு? பையன போட்டு இந்த அடி அடிக்கறீங்க?'
அதுக்கு அவர் 'பின்ன என்ன சார்.. மாசம் மூவாயிர்ரூவா ஃபீஸ் கட்டறேன். மூனுக்கும் சன்னுக்கும் வித்தியாசம் தெரியல இவனுக்கு'
'உங்களுக்குத்தான் சார் சன்னுக்கும் சன்னுக்கும் வித்தியாசம் தெரியல.. இது எங்காத்துப்பையன்'
4. வேல வெட்டியில்லாத ஒருத்தன் ஒரு சரக்கஸ் கம்பெனி போனானாம். 'தம்பி உனக்கு ஜோக்கர் வேல. தெனமும் நீ 20 இட்லி, 10 தோசை, 15 பூரி சாப்டனும். எல்லாரும் கை தட்டுவாங்க..'
'சரிங்க சார் நா நல்லா சாப்டுவேன்'
' தம்பி.. ஆனா ஒரு நாளைக்கி 3 ஷோ பரவால்லியா'
' இருக்கட்டும் சார்.. அதுக்கென்ன இப்ப?'
'மாசம்பூராவும் ஷோ இருக்கும் பரவால்லியா?'
'இருக்கட்டும் சார்'
'ஞாய்த்துக்கெழம மட்டும் 5 ஷோ..சாப்டுவியா?'
'சாப்டுவேன் சார்..ஒரு சின்ன ரிக்வஸ்ட் சார்'
'என்னப்பா?'
' மத்தியானம் ஒரு மணிக்கி ஒரு 10 நிமிசம் வீட்டுக்கும்போவனும்'
'எதுக்குப்பா?'
'வீட்ல சுறுக்க சாப்ட்டு வந்துடறேன்'
அப்பாடா..அதே பழைய சிவகுமார் மாமாவ பாத்துட்டேன்...ஆயிரம் பிறை கண்ட அவர் பல்லாண்டு வாழ்க...

ஆருயிர் நண்பன்



ஆருயிர் நண்பன்.. பால்ய சிநேகிதன். சென்ற வாரம் சென்னையில் ஒரு நாள் முழுவதும் அவனுடன் தான். காலை மெரினா வாக், சிற்றுண்டி, மதியவேளை உணவு மற்றும் இரவு உணவு என ஏதாவது ஒரு சபா கான்டீனில்...
1981இல் திருச்சியில் ஆரம்பித்த நட்பு ..
நற்குணங்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவன்..பெரியவர்களை மதித்தல் (எல்லாம் நீங்க சொல்லி குடுத்தது தானே மாமா!)..
முன்பின் தெரியாதவர்களையும் தன் ஜோசிய அறிவால் வசீகரப்படுத்துதல் ( you seem to be very focussed sir! என்ன ராசி/நட்சத்திரம் நீங்க? நெனைச்சேன்..கைய குடுங்க ஸார்...அமோகமா இருக்கு உங்க ஜாதகம்)...
ஒருவரை மற்றவர்க்கு அறிமுகப்படுத்தும்போது அவன் பிரயோகிக்கும் flattering உத்தி ( இவன் வீட்டுல காய் நறுக்கறத பாத்திருக்கீயா இவளே? அய்யோ! ஒரொரு பீன்சும் அளந்தா அரை இன்ச்சு கரெக்டா இருக்கும்)...
ஒருவர் செய்யும் சுமாரான வேலையையும் பார்த்து ( ச்சமத்துடா நீ.. கெளப்பற..)...
ஆபிஸில் பாஸ் கிட்டியே...'அது ஒண்ணுமில்ல ஸார்.. உங்க கிட்ட ஒரு பயம் கலந்த மரியாத.. நன்னா திட்டிடுங்கோ ஸார் என்னை'
இருங்க...இருங்க..அவசரப்படாதீங்க.. அவன் வெறும் முகஸ்திதிக்கு சொல்றதா நினைக்க வேண்டாம். அலுவலகத்திலோ, நட்பு வட்டத்திலோ சிலரிடம் bluntஆகவும் பேசக்கூடியவன்.
தனது குழந்தைகளைப்பற்றி எப்போதும் பெருமையாக பேசி நம்மை கொல்பவர்களிடம்…("தப்பா எடுத்துக்காதீங்க.. இதைவிட அருமையா சில குழந்தைங்க பண்றாங்க)..
எவ்வளவு நெருக்கமானவர்களிடமும் ( சில சமயம் உனக்கு அஸர்டிவ்நெஸ் போதாதுடா ஸ்ரீதர்)...
ஹோட்டலில் (அரே யார்.. துமாரா தால் மெ நமக் நஹீ யார்)..
அலுவலகத்தில் (don't take me for granted.. understand?)
அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டான். நாங்கள் படிக்கும் காலத்தில் அவனது பேட்டையான திருச்சி பொன்மலை ரயில்வே காலனி சர்ச் பகுதியில் அழிச்சாட்டியம் செய்த ஆங்கிலோ இந்தியனை 'எவன்டா அந்த ஆப்ப' என அவன் கால்களுக்கிடையில் சைக்கிளை விட்டுத்தூக்கியவன்(விவேக் மாதிரி).
'நான் பிறவியில் ஊமை.. உதவி செய்யவும்' என கழுத்தில் போர்டு மாட்டி, ஆர்மரி கேட் அருகே CA பரிட்சைக்கு படித்துக்கொண்டிருந்த
எங்களிருவரை அணுகிய ஒருவன் சட்டைக்காலரை கணபதி கோத்துப்பிடித்து 'உனக்கு பேச்சு வராதா? அடிங்...எங்க பேசுடா..' என ஒரு அறை விட 'சார் உட்ருங்க' வென அந்த 'பிறவி ஊமை' கத்தினான்.
பணியில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் ஏதாவது 'பாண்டுரங்க விட்டலா' என பஜனை பாடலை முணுமுணுத்தவாறே வேலையை முடித்துவிடுவான்.
12 வருடங்கள் பஹ்ரைனில் ஒரு குறுநில மன்னன் மாதிரி வலம் வந்தான். ஊருக்கு போனால் ஏர்போர்ட்டுக்கு வழியனுப்ப ஆறேழு பேர்..திரும்ப வரும்போது ரிஸீவ் பண்ண ஆறேழு பேர்.
மலையாளி, யூபி பையா, பங்களாதேஷி, பாகிஸ்தானி, பலுச்சி, சிறிலங்கன் என அவசர உதவிக்கு ஓடிவர ஏகப்பட்ட ஆட்கள் அவனுக்கு.
பஹ்ரைன் விட்டுப்போய் சென்னையில் ஒரு பிரபல சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த
14 வருடங்கள்...
ஆபீஸ் தான் கோவில். பாஸ் தான் மூலவர். எப்போதும் அவர் புகழ் பாடுவான் (சும்மா இல்ல..மனதார). அவனுக்கு ரோல்மாடல் அவர்தான்.( பாஸ் எனக்கும் நண்பர்.. அவரை பற்றி தனிப்பதிவே போடலாம்)
'கணபதி! ஏர்போர்ட் கிட்ட இருக்கேன். வண்டி நின்னு போச்சு' என பாஸின் போன் வந்த மறுநிமிடம் போன் கால்கள் பறக்கும். மயிலாப்பூரிலிருந்து கபாலி, ஆறுமுகம் எல்லோரையும் அங்கே விரட்டி, பின்னால் தானும் தண்ணீர் பாட்டிலோடு (குடி தண்ணீர்தான்) அங்கே ஓடுவான்.
எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதில் excel செய்து திறம்பட முடிப்பவன். பொய், சால்சாப்பு கிடையாது. பாஸை தனியாக வீட்டில் காலை வேளை சந்திக்கும்போதோ அல்லது அவருடன் மெரினா வாக் போகும்போதோ நிறைய காரியங்களை முடிக்கும் கில்லாடி. அவசியமென்றால் அவர் வீட்டு பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கிக்கொண்டு போய் அவனே மாட்டுக்கு கொடுப்பதும் சில சமயம் நடக்கும். 'ஶ்ரீதரா..வேற யாருடா நம்பள இப்பிடி நல்லா பாத்துக்கறா?..'
நிறுவனத்திற்கு ஆடிட் மட்டுமல்லாது IT துறையில் நிறைய வருமானமும் லாபமும் ஈட்டித்தருகிறான் என்ற நல்ல பெயர் வேறு. வேறு வேலை தேடவே முடியாது. பொழுதன்னைக்கும் கஷ்டப்படும் யாருக்காவது வேலை போட்டுத்தருவது.. கோவில் பணிகளுக்கு நன்கொடை தாராளமாக கொடுப்பது..
endless லிஸ்ட் சார்..
வாழ்க்கையில் நான் ஏறும் ஒவ்வொரு படியும் கணபதி போட்டது. எனது குடும்பத்திற்கும் நிறைய உதவிகள்... கடந்த 28 வருடங்களில் நான் இதுவரை செய்த/செய்துகொண்டிருக்கும் (பஹ்ரைன் உட்பட) வேலை ஐந்தும் கணபதி மூலம் கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தில் பார்ட்னர் ஆகும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ள, இன்று பிறந்த நாள் காணும் ஸ்நேகிதன் கணபதி, வாழ்க்கையில் மேலும் மேலும் சிறந்தோங்கி, அவனது குலதெய்வமான தஞ்சை கணபதி அக்ரஹாரம் மஹாகணபதியின் அருள் பெற வேண்டுகிறேன்.. அவனது இக்கரிக்கட்டி ஓவியத்துடன்...

மியூசிக் அகாடமி

தி. நகரிலிருந்து கிளம்பி மனைவியுடன் கொஞ்சம் ஷாப்பிங் செய்துவிட்டு, Durga Ganapathi Subramanianஐயும் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக மியூசிக் அகாடமி போய்சேர கொஞ்சம் லேட்டாகி விட்டது. நல்ல கூட்டம்.. டிக்கெட் வாங்குமிடத்திலும் கொஞ்சம் கூட்டம்.
'இசையோடு சுருதி சேரு.. மிரின்டாவோடு கலாட்டா சேரு' அஸினைத்தாண்டி, கியூவில் நின்று டிக்கெட் வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரம் வெயிட் செய்து ஒரு வழியாக இருக்கையில் அமர்த்தும் எதிரே
.
.
.
.
.
.
.
.
வாழையிலை போட்டார்கள்.
ஹி..ஹி..மொத சாப்பாடு..அப்பறம் தான் கச்சேரி..
கொண்டித்தோப்பு மின்ட் பத்மநாபன் கேட்டரிங்காம். சாம்பார், ரசம், தயிர் போன்ற அன்றாட சமாச்சாரங்கள் தவிர தே.சாதம், மோர்க்குழம்பு போண்டா, கோஸ் வேர்க்கடலை கூட்டு, செள செள தயிர் பச்சடி, கோவக்காய் ரோஸ்ட், மரவள்ளிக்கிழங்கு குச்சி சிப்ஸ், சேனை மிளகுக்குழம்பு, கேரட் கீர், பச்சைமிளகாய் தொக்கு... கடைசியில் பிஸ்தா கேக்..
ஆஹா.., சாப்பிட ஐந்து விரலும், கடைசியில் மோர் குடிக்க இடமும் பத்தாதுங்க. இலையில் மிச்சமிருந்த சேனை முளகுக்குழம்பை அப்படியே விட மனமில்லாமல், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு... ஒரு ஸ்வைப்...வாயைத்துடைத்துக்கொண்டேன். இருநூறு ரூபாய்க்கு சாப்பாடு தேவாமிர்தம். திரும்ப திரும்ப கேட்டு பறிமாரினார்கள்.
அந்தப்பக்கம் இதே ஐட்டங்கள் கோம்போவுடன் வட்டமேசை மாநாடு.
மெல்ல ஹாலுக்குள் நுழைந்தோம். பரூர் அனந்தகிருஷ்ணன் வயலின், தஞ்சை ப்ரவீன் மிருதங்கம், ராமானுஜம் மோர்சிங் சகிதம் பரத் சுந்தரின் கோம்போ அருமை..
கிரி டிரேடர்ஸில் சுந்தர காண்டம் புத்தகங்கள் நம் பஹ்ரைன் நண்பர் Pillai Iyengar Sundararajan னுக்காக வாங்க அங்கிருந்து கிளம்பினோம்.
நாளை Ganapathi Subramanian னுடன் திரும்ப மியூசிக் அகாடமி வருவதாக ப்ளான் இப்போதைக்கு.
நாளை...கடம் கார்த்திக்+சஞ்சீவ் +உமையாள்புரம்+சிக்கில்=சக்கரை பொங்கல் சார்...
உமையாள்புரம் சிவராமன் அவர்களைத்தவிர மற்றவர்கள் பஹ்ரைன் வந்திருக்கிறார்கள்.
நாளை கச்சேரியைப்பற்றி விஸ்தாரமான அறிவுத்திறனுடன் ஸ்னிப்பெட்ஸ் எழுத நான் ஒன்றும் கைப்புள்ள.. Rajagopalan Venkatraman அல்ல..
அவர் உள்ளே நிரவல் பற்றி எழுதினால் நான் வெளியே வறுவல் பற்றித்தான் எழுத முடியும்...

திருத்தணி..

திருத்தணி முருகன் தரிசனம் மதியம் 3 மணிக்கு முடிந்து பக்கத்தில் ஜியார்டி ரெசிடென்ஸி போகும்போது நல்ல பசி. ஹோட்டல் சிப்பந்திகள் பேயறைந்த மாதிரி தெரிந்தார்கள். தென்னிந்திய மற்றும் வட இந்திய தாலி கொண்டு வந்து எங்கள் முன் வைத்து பாதி சாப்பிட்டவுடன் ரோஸ்மில்க் வைத்தார்கள். அது வெல்கம் ட்ரிங்க்காம்.
அங்கிருந்து கிளம்ப 4 மணியாகிவிட்டது. கார் டிரைவருக்கு பக்கத்தில் முன்னிருக்கையில் நான். பின்னால் உஷா மற்றும் அவளது பெற்றோர். அதற்குப்பின்னால் பிரஷாந்த் மற்றும் ப்ரணவ்.
அடுத்த பத்து நிமிடங்களில் திருத்தணி விட்டு ஊருக்கு வெளியே சத்திய சாட்சி கந்தன் தியான மண்டபம் சென்றடைந்தோம்.
ஏற்கனவே வயிறு ஃபுல்.. இனி தியானமாவென யோசித்து வண்டியிலிருந்து இறங்கலாமா வேண்டாமா என தயங்கி தூரத்தில் 'செறுப்பு வைக்குமிடம்' போர்டை பார்த்தோம். அதற்கு பக்கத்தில் ' இங்கு பாம்புகள் நடமாட்டமுண்டு.ஜாக்கிரதை' போர்டு. பக்கத்தில் யார் செறுப்பை விடுவார்கள்? போர்டை விட அதிலுள்ள பாம்புப்படம் பார்க்க இன்னும் பயமாக இருந்தது. காருக்குள்ளிருந்த என் மாமனார் தன்னையறியாமல் காலை குனிந்து பார்த்துக்கொண்டார். காரை விட்டுறங்காமல் அப்படியே கிளம்பினோம்.
அடுத்த இரண்டு மணிநேரம் சென்னை போய்ச்சேரும் வரை ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஏராளமான கடைகளையும் கடைகளின் பெயர்களையும் ரசித்துப்பார்த்தபடி சென்றேன்.
ஒண்டிக்குப்பம் மணவாளநகர் (திருவள்ளூர்) நெறுங்கும்போது 'பாலச்சித்தர் தமிழ் மருந்துக்கடை' வாசலில் யோகி ஒருவர் பாக்கெட்டில் பீடிக்கட்டுடன்..
அரண்வாயல்குப்பம்- 'ஆண்டவர் சைக்கிள் ஒர்க்ஸ் அன்டு பஞ்சர் கடை' க்காரர் டாஸ்மாக் நோக்கி ஒடிக்கொண்டிருந்தார்.
'ப்ளாட்டுகள் விற்பனைக்கு'..ஊருக்கு வெளியே.. ப்ளாட் போட்டு சுற்றிலும் கேட் அமைத்து குழந்தைகள் விளையாடும் சீஸா, ஊஞ்சல்... ..இவர்களை நம்பலாமா? சப்தகிரி என்க்ளே..வ்...நம் பணத்தை சாப்பிட்டு 'ஏவ்' தானா?
உக்கோட்டை தாபா சென்டர்- பெயர்ப்பலகை முழுக்க சிகப்புக்கலரில் நெறுப்பு படம். அவ்வளவு ஸ்பைஸியாம்.
அடுத்து ஜமீன்கோட்டுப்புரம் வரை எங்களை முந்தவிடாமல் ஒரு லாரி. லாரிக்குப்பின்னால்' இருக்கும்வரை ரத்த தானம், இறந்ததும் உடல் தானம்' வாசகம்( மொத வழிய விடுங்கப்பா)
கீழமணம்பேடு.. 'தருன் சிக்கன் & மட்டன் சென்டர்' வாசலில் 'பீப் பகோடா' ரெடி. பீப்ன்னா என்ன? Beef ஆம்.
'ஆண்டாள் கைராசி துணிக்கடை' போர்டில் கரினா கபூர் பாதி உடையில்..
'அம்பேத்கார் இரவு பாடசாலை' பூட்டப்பட்டிருந்தது. (மாலை மணி 7)
அடுத்த ஒரு கி.மீ தூரம் வழிநெடுகிலும் 'தேவன் ஒருவரே' போஸ்டர்கள் ( அவர் ரெண்டு பேர்னு யார் சொன்னது?)
'வள்ளலார் ஃபெர்டிலைஸ் சென்டர்' (குழந்தையின்மைக்கு இங்கு முழுமையான தீர்வு).. அடப்பாவிங்களா.! அதுக்கு வள்ளலார் எதுக்கு? பக்கத்திலேயே 'வேலைக்கு ஆட்கள் தேவை' போர்
டு வேற...
வேப்பஞ்சாவடி பொது வியாபாரிகள் சங்கம்.. 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில் சிரித்தவாறு ஒரு பெண்..
மதுரவாயல் ரோட்டில் நிறைய ஆட்டோமொபைல் கடைகளுக்கு நடுவே 'பெரியநாயகி பாடி கட்டும் மையம்' (அட.. லாரிக்குங்க)
நெல்சன் மாணிக்கம் ரோடு.. 'வள்ளுவர் இயல்பாடைகள்'.. அதாவது கேஷுவல் டிரெஸ்ஸாம்..(வள்ளுவர் பொருத்தமானவர்)
மங்கை ஆர்த்தே(?)பீடிக் மையம்.. ( இவர்களே காலை ஒடித்துவிட்டார்கள்)
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு மையம்..(குழந்தைகளை எப்படி ஒருங்கிணைப்பது)
ஒரு வழியாக தி.நகர் வந்து சேர மணி 8...
இரவு வணக்கங்கள்..