Thursday, July 26, 2012

தெனமும் தென்னூர்

காலை ஒரு 6 மணிக்கு தென்னூர் அம்ருதீன் ஹோச்பிடல் ஸ்டாப்பில் இறங்கினேன். முன் தினம் இரவு 12 மணி வரை வியாபாரம் செய்த களைப்பில் நடை வண்டிக்காரர்கள் வண்டிக்கு கீழே தூங்கிக் கொண்டிருந்தர்கள்.வண்டிக்கு மேல் பெரிய வெள்ளை துணி மூடி இருந்ததையும் மீறி பலாப்பழ வாசனை மூக்கில் நுழைந்தது. அம்ருதீன் பில்டிங் வாசலில்  பிச்சைக்காரர்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தர்கள். எதிரில் பள்ளிவாசல் பக்கத்தில் உள்ள டீக்கடையில் 'இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' என்ற நாகூர் ஹனிபாவின் கணீர் குரலை ரசித்துக்கொண்டு நாலைந்து பேர் டீக்குடித் துக்கொண்டிருந்தார்கள். டீக்கடை சித்திக்பாய் டீ வடிகட்டி துணியை திருப்பி அந்த தூளை குப்பையில் கொட்டி விட்டு புதிதாய் டீத்தூளை போட்டு விட்டு மேலே மூடியை திறந்து பாய்லரில் மேலும் கரித்துண்டுகளை போட்டு பிறகு கீழ்ப்பக்கம் இருந்த பிடியை இழுத்து சாம்பலை வெளியே கொட்டினார். எத்தனை கூட்டம் இருந்தாலும் மேற் சொன்ன காரியங்களை அரை மணிக்கு ஒரு முறை தவறாமல் செய்து விடுவார். அதற்கு பக்கத்து முட்டைக்கடை வாசலில் அப்போது தான் ஒரு பையன்,ஆள் உயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த 30 tray முட்டைகளை சைக்கிள் கேர்ரியரில் இருந்து  இறக்கி கடைக்கு உள்ளே வைத்துக் கொண்டிருந்தான்.எதிர்ப்புறம் வயலூரில் இருந்து வந்த பஸ்ஸை விட்டு வாழக்காய் மற்றும் வாழை இலை கட்டு இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. காய்கறிகள் தானாகவே ஆள் துணை இன்றி  வந்திறங்கியதை வியப்புடன் சிறுவன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான்.பகலில் ஒரு இடத்தை பார்ப்பதை விட அதி காலையில் அங்கு நடந்து சென்று போகும்போது நிறைய விஷயங்களை பார்க்க முடியும்.

கொஞ்சம் முன்னே நடந்தால் ஜெனரல் பஜார் தெரு ஆரம்பம்.அதற்கு முன்னால் உள்ள சந்தில் நுழைந்தால் பென்ஷனர் தெரு. பென்சன் கார தெருவு என்று தான் சொல்வார்கள். தெருவின் இருபுறம் உள்ள சாக்கடையில் ஆங்கங்கே சிறுவர்கள் காலைக்கடன்களை கழித்துக் கொண்டிருக்க,கினிகினிஎன்று மணியடித்தபடி பால்கார கருப்பாண்டி வந்து கொண்டிருந்தான். பள்ளி வாசலில் இருந்து சிலர் தொழுகை முடிந்து சிறிது நேரம் பேசி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தர்கள். இரவு பீடி சுற்றும் வேலை முடிந்து மறுபடியும் ஆரம்பிக்க பெண்கள் பெண்கள் மெதுவாக எழுந்து வாசலுக்கு தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். அந்த காலை வேளையில் மெல்லிய இனிய புகையிலை மற்றும் பீடி இலையின் நறுமணம் காற்றில் மிதந்து கொண்டிருக்க, பெண்கள் குடத்துடன் குழாயடி நோக்கி நடக்க, கீரை விற்கும் பெண்மணியின் குரல் தெரு முழுதும் கேட்டது. புட்டு இடியாப்பம் விற்கும் கிழவி கூடையுடன் தெருவில் மெதுவாக நடக்க, உப்பு... வெள்ள உப்பு...என்று உப்பு மூட்டையை சைக்கிளில் தள்ளியபடி வயதான கிழவர் வந்து கொண்டிருந்தார். செக்கு இழுக்கும் மாடுகள் மெதுவாக சுற்ற எண்ணையின் நறுமனத்துக்கு நடுவே புன்னாக்குகளை கூடையில் ஒரு தாத்தா கொட்டிக்கொண்டிருந்தார். அவர் மனைவி வீட்டு வாசலில் அம்மியில் மிளகாய் சட்னி அரைத்துக்கொண்டிருக்க உள்ளே இட்லி வெந்து கொண்டிருந்தது. சைக்கிள் கடை பாஷா கடை திறக்க பெரிய த்ரௌசெர் அணிந்தபடி கிளம்பினார். கார் ஹாரன் ரிப்பேர் செய்யும் பாய் மெதுவாக இரண்டு கட்டைகுச்சிகளை கக்கத்தில் வைத்தபடி மடித்துக்கட்டிய வேட்டிக்கு நடுவில் விளங்காத இரண்டு கால்களை  தள்ளியபடி வெளியே வந்தார். பொன்மலை ரயில்வே கூட்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஹப்பீஸ் பாய் சைக்கிள்ளை வெளியே இறக்கியபின் வாயிலிருந்து சிறிது எச்சிலை விரலில் எடுத்து சக்கரத்தின் காற்றடிக்கும் ஓட்டையில் வைத்து காற்று வெளியே வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த வீடு எங்களுடையது. அந்த தெருவில் உள்ளவர்களில் நாங்கள் மட்டும் இஸ்லாமியரல்லாதவர்கள். SSLC பரீட்சைக்கு படித்துக்கொண்டு வாசல் திண்ணையில் தூங்கிக்கொண்டிருக்கும் என் அண்ணனை பாபுவை காலை 4 மணிக்கு எழுப்புவது பக்கத்து வீட்டு ஹபீஸ் பாய் தான்.பிறகுதான் தன் பெண் அப்ரோசை எழுப்புவார். எங்கள் வீட்டு திண்ணையின் இடது புறம் எங்கள் தத்தா படுக்க சரியாக இருக்கும். அவர் ஊரில் இல்லாதலால் அண்ணன் பாபு அங்கு படிக்கும்  இடமாகிவிட்டது.அடுத்த ரூமில் நான், என் தம்பி ரவி, அக்கா லத்து(லதா) மற்றும் மல்லி(மல்லிகா) எல்லோரும் படிப்போம்... அல்லது படிக்க உட்காருவோம். பாதி நேரம் பேச்சு, அரட்டை, சண்டை மற்றும் சிரிப்பும் கும்மாளம் தான். ரேய்....என்று எங்கள் அப்பா அதடடினால் மீண்டும் படிப்போம். முக்கால்வாசி நேரம் பிறரை கிண்டல் செய்வது, எங்கள் தாத்தாவைப்போல் பேசுவது, அவரது நடை உடை பாவனைகளை அப்படியே செய்து காட்டுவது.. முந்தைய வாரம் பார்த்த சினிமாவப்பற்றி பேசுவோம். அதற்கு அடுத்து ஒரு சாமி அறை மற்றும் பிறகு மிகப்பெரிய ஹால். அதையே சமையல் அறையாகவும் பாவிப்போம். குறும்பு செய்தால் எங்கள் அம்மா அடிக்க வரும்போது இங்கும் அங்கும் ஓடிகுதிக்க அத்தனை பெரிய ஹால் வசதியாக இருக்கும். சில சமயம் பெரிய பெரிச்சாளி அந்த ஹாலுக்குள் வந்து விட்டால் எங்கள் அப்பா ஹால் கதவை மூடிவிட்டு கட்டையால் அதை அடிக்கும்போது ஒரே சத்தத்துடன் நாங்களும் குதிப்போம். நடுவில் பெரிச்சாளியுடன் சேர்ந்து எங்களுக்கும் அடி கிடைக்கும்.எங்கள் அப்பாவைப்பற்றி இப்போது தான்  சொல்கிறேன். அந்த தெருவில் எல்லோருக்கும் எங்கள் அப்பாவைத்தெரியும். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டின் ஆடிட்டர் என்பதால் எல்லோருக்கும் நிறைய மரியாதை உண்டு. அனால் அவர் அக்கம்பக்கத்துக்காரர்களுடன் அதிகம் பேச மாட்டார். எங்கள் அம்மா தான் எல்லோருடனும் சகஜமாக பேசுவார்கள். எங்கள் வீட்டு கேசரி மற்றும் எந்த பலகாரமும் பக்கத்துக்கு போகாமல் இருக்காது. பக்கத்து வீட்டு பிரியாணி, நோம்பு கஞ்சி மற்றும் கறிக்குழம்பு எங்கள் வீட்டுக்கு வந்து விடும். அந்த தெருவின் எந்த ஒரு கல்யாணம்,பெண் சடங்கு, பையன்களின் சுன்னத் கல்யாணம் எல்லாமே நாங்கள் இல்லாமல் நடக்காது. எங்கள் அப்பா கூச்ச சுபாவம் கொண்டதனால் அவருக்கு தனியாக சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும்.  பாபி,யாதோங்கி பராத் படங்கள் அந்த சமயத்தில் நன்றாக ஓடியவை. பக்கத்து வீட்டு  பாத்திமாக்கா,மும்தாஜக்கா,ரஹ்மத்தி,கவ்ஹர் மற்றும் பாரூக் எங்கள் உடன் பிறவா சகோதர சகோதரிகள். அவர்களுடன் தான் நிறைய ஹிந்தி படங்கள் பார்ப்போம். கெயிட்டி தியேட்டர் மற்றும் அருணா தியேட்டர் நாங்கள் அடிக்கடி போகுமிடங்கள் .அவர்களது வீட்டிலும் சதா விவிதபாரதியில் ஹிந்தி பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கும். அவர்களது அம்மாவுக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். மிகவும் சிவப்பாக வஹிதா ரஹ்மான், நிருபா ராய் மாதிரி ஹிந்தி நடிகை போல் இருப்பார்கள்.கண் பார்வை மங்கலாக பாதிதான் தெரிந்தாலும் எந்த சிரமமும் இல்லாமல் பாதி உருது மற்றும் தமிழ் கலந்து பேசுவார்கள். எப்போது போனாலும் ஏதாவது சாப்பிட கொடுப்பார்கள். நான்  மற்றும் என் தம்பி ரவி அவர்களுடன் மிக சரளமாக உருது பேசுவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரம் அவர்கள் வீட்டில் நிறைய நண்பர்கள்,உறவினர்கள் வருவார்கள். எல்லோருமே எங்களுக்கும் பரிச்சயமானவர்கள்தான். அவர்கள் வீட்டில் பஷீர் மாமா, காதர் மாமா,மகபூப் மாமா எல்லோரும் எங்களிடத்தில் மிகவும் பரிவாக இருப்பார்கள். அதற்கு அடுத்த வீடு முபாரக் பேக்கரி வீட்டுக்காரர்கள். முபாரக் பேக்கரி 2 தெரு தள்ளி பட்டாபிராம் பிள்ளை தெருவில் உள்ள கடை. கடையின் சைடு புறம் கதவு  வழியாக உள்ளே ரொட்டி சுடுவது நன்றாக தெரியும். உடல் முழுக்க வேர்க்க வேர்க்க பெரிய மைதா மாவு மலையை பிசைந்து நீல வாக்கில் உருட்டி பிறகு கத்தி கொண்டு சிறு பாகங்களாக வெட்டி தகர தட்டுக்களில் பரப்பி வைத்து சூடான அடுப்பில் இரவு வைத்து மூடிவிட்டு மறுநாள் காலை திறந்து இனிய வாசனையுடன் கூடிய ரொட்டிகளை வெளிய எடுப்பார்கள். சில சமயம் வெண்ணெய் பிஸ்கோத்துகள் மற்றும் கேக் செய்வார்கள். கடைக்கு வெளியே நின்று நாங்கள் வேடிக்கை பார்ப்பதை பார்த்து, எங்கள் கையில் ஒரு சிட்டு கேக் துண்டை கொடுப்பார்கள்.கேக் செய்து முடித்து, தகர தட்டில் மிஞ்சிய சிறு துகள் மற்றும் துண்டுகளை தனியாக வைத்து குறைந்த விலைக்கு விற்பார்கள். 10 பைசா கொடுத்தால் ஒரு கை நிறைய கேக் துகள்கள் சூடாக கிடைக்கும். முழு கேக் 25 பைசா கொடுத்து வாங்குவதை விட 5 அல்லது 10 பைசாக்கு நிய\நிறைய கேக் தூள் கிடைப்பதால் அதை  வாங்கி ரசித்து சாப்பிடுவோம். முபாரக் பேக்கரி வீட்டுக்கு அடுத்த படியாக பள்ளிவாசல். பாதி நேரம் பள்ளிவாசல் முன்புதான் விளையாடிக்கொண்டிருப்போம். உள்ளே தொழுகை மண்டபம் எதிரே உள்ள பெரிய தண்ணீர் குளம் முன்பாக எல்லோரும் ஒரு கல் மேல் அமர்ந்து கொண்டு தங்கள் கால் கைகளை கழுவுவார்கள். அந்த தண்ணீர் தொட்டியில் ஆமை மற்றும் நீர்க்கோழி வளர்ப்பார்கள். மாலை பாங்கு ஓதும் வரை அங்கே விளையாடுவோம். பிறகு 7 மணிக்கு சில தாய்மார்கள் சிறு குழந்தைகளுடன் பள்ளிவாசல் முன்பு வந்து நின்றபின் வயதான ஒருவர் வந்து குழந்தைகள் முன் மந்திரம் ஓதி முகத்தில் மெல்ல வாயால் காற்றை ஊதும்போது நாங்களும் போய் நிற்போம்.பிறகு தான் வீட்டுக்கு திரும்புவோம். ஏதாவது திருமணம் நடந்தால் பள்ளி வாசலுக்கு மாப்பிள்ளை வரும்போது நாங்கள் முன்பே அங்கு தலையில் கைக்குட்டையுடன் ஆஜர். தொழுகை முடிந்து பாத்தியா ஓதியபின் சாக்லேட்களை வாரி எங்கள் மேல் தூக்கி எறியும்போது விழுந்து புரண்டு எடுப்போம். பொதுவாக ராஜா தியேட்டர் பக்கம் இருக்கும் கடையில் இருந்து தான் பழைய ஒப்பன் கார் பாராத்துக்கு வரும். மாப்பிள்ளை முகத்தை பூக்களால் மூடி காரில் அமர வைத்துக்கொண்டிருக்கும்போது நாங்கள் டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் தாவி ஏறி உட்கார்ந்து விடுவோம்.  அந்த தெருவெங்கும் இரண்டு மூன்று நாட்களுக்கு 'மெ ஷாயர் தோ நஹி' மற்றும் 'ஜூட் போலே கவ்வா காட்டே' போன்ற ஹிந்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். பராத் முடிந்ததும் ஒரு சிறிய கோழிக்குஞ்சை அந்த கார் டிரைவருக்கு பணத்துடம் கொடுத்து அனுப்புவார்கள்.
பள்ளிவாசலுக்கு பின்னால் மிகப்பெரிய தோப்பு ஒன்று உண்டு.
                                                       தோப்பில் ஓணான் அடிப்பது பற்றி பிறகு.........


















9 comments:

  1. More episodes to continue on Tennur...

    ReplyDelete
  2. More episodes to continue on Tennur...

    ReplyDelete
  3. Hi, Ravi
    before posting your comment, you will asked to log in with your ID as below.

    ReplyDelete
  4. Hi, Ravi
    before posting your comment, you will asked to log in with your ID as below.

    ReplyDelete
  5. hi Sridhar, this is a very good effort to record all the nice things about our childhood. We never had a dull day despite odds. You were the architect of so many such 'adventures'. Each place (pensioners st, general bazaar, circuit house....) will require a few episodes, I am sure. Also Papu chetty st.

    Do you remember some of the marriages in pensioner st? our house & kitchen used to be busy for the marriage work, and we used to eat in Fatimakka's house during this time; a few marriages in 'fund office' school, and some right on the street itself... pandals fully covering, and biryani being made right there on the street.

    cant forget some of these...the street singer who used to sing 'pachai thanni velakeriya... (lathu's favourite), Thatha-related mischiefs, diwali/pongal in Papu Chetty st, babu's fainting in Roxy theatre (Patikkada Pattanama), "chekku veettu' pasanga who used to call Babu "Columbus..."

    ReplyDelete
    Replies
    1. Thanks for the tips Ravi...
      I think I have to post atleast 5,6 episodes in blog to cover all the incidents..
      good.... pl keep writing reviews..

      Delete
  6. Sridhar,
    I read this (first one) more than once. Every time, it brings more and more nostalgic memories of our childhood life. It is really great that you have made efforts to record even the minutest details.
    As Ravi has written, there are many other interesting tales to tell. Some of them : Paalkaara Karuppandi's action packed drama, his dialogue delivery, his short-lived "grand" marriage with a malayali girl, your St. Joseph's teachers Mr. Thomas and other (Name I don't recollect; He was in School Band: he used to sing as "Janna Ganna Manna" alongwith the National Anthem played on the speakers at the end of the day.
    Cover all these and let us have more and more journeys down the memory lane.

    Babu

    ReplyDelete
  7. Babu,
    thanks for the inputs
    I called Farook after speaking to you...

    ReplyDelete