எத்தனை சரவணா, சங்கீதா பவன்கள் வந்தாலும் திருச்சி ஆதிகுடி குடிகாபி கிளப்க்கு இணையாகுமா?
மேல புலிவர்ட் ரோட்டில் உள்ள ஆதிகுடி காபி கிளப் அந்த காலத்தில் இருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கி வரும் 'Going Concern'. சுமார் 10 பேருக்கும் குறைவான சிப்பந்திகளுடன் வெற்றிகரமாக இயங்கி வந்த நிறுவனம், தற்போது நிதி நிலையில் தள்ளடிக்கொண்டிருப்பதாக கேள்வி.கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மாமா சுமார் 70, 75 வயதை தாண்டினாலும், வாடிக்கையாளர்கள் தரும் 50 மற்றும் 100 ருபாய் நோட்டுக்களை அனாயசியமாக உள்ளே போட்டு, சாப்பிட்ட தொகை போக மீதியை அந்த பத்து நொடிகளில் மனக்கணக்கு போட்டு சில்லறை சகிதம் மேசையின் மேலே ஒரு கையில் வைக்கும் முன், மறு கையால் பில்லை ஆணியில் குத்துவார். அவர் குனிந்து செயல் பட்டுக்கொண்டிருந்தாலும் நடு நடுவே மூக்கு கண்ணாடிக்கு மேலே கண்களால் சாப்பாட்டு மேசைகளை நோட்டம்விட்டு 'ன்னங்' என்று மணியடித்து துடைக்கும் சிறுவனை கூப்பிடுவார்.
தரம்?... அவர்களுக்கென்று தனியே ஒரு தரம் மற்றும் சுவை உண்டு. 'kitchen ல cook ஐ மாத்திட்டாங்க போல ... சாம்பார் வேற மாதிரி இருக்கு' போன்ற பேச்சே இல்லை.
அந்த உணவு விடுதியின் சமையல்கார மாமாவை தற்காலத்து chief operating officer க்கு ஒப்பிடலாம். தனது சமையல் பணியை செவ்வனே செய்வதல்லாது,உணவருந்திக்கொண்டிருப்போரின் எண்ணிக்கையை வைத்து இரவுக்குள் எவ்வளவு பால் தேவைப்படும் என்பதை சில நிமிடங்களில் முடிவெடுத்து மேற்படி ஆர்டர் செய்யும் கலை IIM சென்று படித்தாலும் வருமா என்பது சந்தேகம் தான்.
விடுதிக்கு வருகை தரும் அன்பர்கள் பெருவாரியோர் வெளியூர்காரர்கள் மற்றும் மிதக்கும் ஜனத்தொகையே!(floating population ஐ வேறு எப்படி சொல்வதாம்?)
மாலை 4 மணியில் இருந்து ஹோட்டலுக்கு வெளியே ஒரு கும்பல் நின்று கொண்டு போண்டா, பஜ்ஜி வகையறாக்களுடன் காபி குடிக்கும்.
ஹோட்டலுக்கு உள்ளே மற்றொரு கும்பல் நெய்ரோஸ்ட்,ஆனியன் ரவா,மாவு சாதா,காசி அல்வா, கேசரி என்று ஒரு கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
சிற்றுண்டி சாலைக்கு போகுமுன், நாம் சென்று இருக்கையில் அமர்ந்த பின் நம்மை முதலில் வரவேற்பது வாழை இலையின் வாசனை தான்.
நம் முன்னே இலையை வைத்த பின் நாம் இலையின் நடுவில் உள்ள தண்டை 'பர்ர்ர்ரக்....பர்ர்ர்ரக்' என்று கையால் அமிழ்த்தி இலையை சீராக்கி பெருமிதமுடன் நீரை தெளித்து சர்வர் வருமுன் மேலே உள்ள மரப்பலகையில் உள்ள பதார்த்தங்களை படித்து, எதை சாப்பிடுவது என்று அந்த 1 நிமிடத்தில் முடிவு செய்வது இன்றைய காலத்தில் நடவாத ஒன்று.
பஹ்ரைன் சங்கீதா பவனில் முதலில் மெனுவை வாங்கியவுடன் க்விக் லஞ்ச் என்பது யாது,அதிலுள்ள இன்னபிற பதார்த்தங்கள் யாவை,அதற்க்கும் executive லஞ்சுக்கும் என்ன வித்தியாசம் என இல்லத்தரசியுடன் ஒரு சிறிய பட்டிமன்றம் நடந்தேரிய பிறகு 'நார்த் இந்தியன் கோம்போ' ஆர்டர் செய்வது இன்றைய காலம்.
கண்கள் மெதுவாக பக்கத்து மேசையை நோட்டமிடும். அவனைப்பாரு! சும்மா குச்சி மாதிரி இருக்கான்...ஒரு முழு plate கோபி மஞ்சூரியன் சாப்பிர்றான்... அட! அதுதான் ஸ்பெஷல் falooda வா? 'அந்த மாமியைப்பாரு ... இப்பத்தான் ஒரு புல் மீல்ஸ் ஆச்சு... அடுத்து falooda சாப்பிடறாங்க' போன்ற ஆச்சரியங்களுக்கு ஆடிகுடியில் இடமில்லை........
முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் திருப்திக்காகவும், நிறுவனத்தின் பெயருக்காகவும் இயங்கிவரும் விடுதி அது. வியாபார நோக்கம் மற்றும் லாபம் இரண்டாம்பட்சமே..