Monday, February 21, 2022

ஜம்புநாதன் சார்...

கையில் இரண்டு பெட்டிகளுடன் தாதர் ஸ்டேஷனில் ரயில் மாறி வெஸ்டர்ன் ரயில்வே பம்பாய் சென்ட்ரலில் ப்ளாட்ஃபார்ம் நெ. ஒன்றில் காத்திருந்த ரயிலில் ஏறி அமரவும் ரயில் மெதுவாக நகரத்துடங்கியது. சுற்றிலும் வெள்ளை ஜிப்பா, பெருத்த சரீரமுள்ள, பான்பராக் குட்கா ஆசாமிகள். குஜராத்திகள். பே லாக் (2 லட்சம்), த்ரன் லாக் (3 லட்சம்) என வளவளவென வியாபாரம் பற்றி பேச்சு. என்னுடைய இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்திருந்த ஆசாமி சற்றும் கவலையின்றி என்னை இன்னும் நெறுக்கி, கொல்லென இருமும்போது என்னையும் சேர்த்து உலுக்கி நகர்த்தினார். வாப்பி, வல்சாட், நவ்சாரி என ஸ்டேஷன்களில் மக்கள் ஏற ஏற, பக்கத்து ஆசாமி என் முதுகுக்கு பின்னால் சரிந்து தூங்க, நான் சீட் நுனியில்.

தூக்கம் வரவில்லை. மனசும் சரியில்லை. பங்குச்சந்தை சரிவால் வேலை போய் இரண்டு மாதங்கள் பம்பாய் முலுண்டில் அண்ணன் வீட்டில் ஜாகை. மனைவி பிரசவத்திற்கு போயிருந்த நேரத்தில் இந்த புதிய வேலை கிடைத்து, 8 வருட பம்பாய் வாழ்க்கையை விட்டு குஜராத் பக்கம் போகிறேன்.
கம்பெனியின் தலைமை அலுவலகம் பம்பாய் வொர்லி பகுதியில். ஆருயிர் பால்ய நண்பன் கணபதி

சிபாரிசால் அங்கே க்ரூப் ஃபைனான்ஸ் கன்ட்ரோலராக இருந்த ஜம்புநாதன் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால் இன்டர்வியூவில் எந்த கேள்வியும் கேட்காமல் வேலை கிடைத்தது.
ஜம்புநாதனும் திருச்சிக்காரர். தென்னூர் சுப்பையா ஸ்கூல் தாண்டி ஹிந்தி பிரச்சார சபா எதிரே உள்ள அக்ரஹாரத்தில் அவருக்கு வீடு. அவரது மைத்துனர் சங்கர் என் செயின்ட் ஜோசப் பள்ளித்தோழன். கோபால் புக் டெப்போ புத்தகக்கடையை மலைவாசல் எதிரே வைத்திருந்தவர்கள்.
ரயில் மூச்சிரைத்தபடி சூரத் ப்ளாட்ஃபாரத்தில் நுழைய, 'ச்சாய் .. ச்சாய்வாலா' என சத்தம். ஒரு கும்பல் தபதபவென வண்டியில் ஏறி நெருக்கித்தள்ள, குண்டு ஆசாமி வெகுண்டு எழுந்தான். இப்போது ஏறக்குறைய அவன் மடியில் உட்கார்ந்திருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்க்லேஷ்வர் ஸ்டேஷன் வர, முட்டித்தள்ளி நீந்தி பெட்டிகளோடு ப்ளாட்ஃபாரத்தில் குதித்து கம்பெனி காருக்காக காத்திருந்தேன். காற்றில் ஏதோ வாடை மற்றும் புகை. . மூக்கு நமநமவென அரித்தது. காரணம் அங்க்லேஷ்வரில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மருந்து, சாயம் மற்றும் ரசாயனக்கழிவுகள். சுகாதாரக்கேடு அதிகம். ஆஸ்த்துமா நோய் வருமாம்.
இந்த ஊர்ல எத்தினி நாள் இருப்பமோ என யோசிக்கும்போதே அம்பாசடர் கார் ஒன்று வந்து நின்றது. வாய் நிறைய பான்பராக்குடன் வந்த ஆசாமி மதராஸியான என்னை அடையாளம் கண்டு சதானந்த் ஹோட்டலில் இறக்கிவிட்டான். குளித்துவிட்டு டிபனை முடித்துக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிப்போகும் கைதி போல கம்பெனிக்கு அழைத்துப்போனார்கள்.
ஆன்ட்டிபயோடிக் மருந்துகளான அமாக்ஸிஸிலின், செஃபலாக்ஸின் தயாரிப்பவர்கள். கம்பெனியில் என்னைத்தவிர எல்லோருமே குஜராத்திகள். ஒருவரும் அடக்கமாகவோ பதவிசாகவோ பேசமாட்டார்கள். ஃபாக்டரியில் வேலை செய்யும் முக்காவாசிப்பேர் பரூச், படோதா பகுதியிலிருந்து தினமும் ரயிலில் அப்டௌன் செய்பவர்கள். பெண்கள் சதா நொறுக்குத்தீனி அசை போட்டுக்கொண்டிருக்க, ஆண்கள் நொடிக்கொரு முறை தாய் மற்றும் சகோதரியை குறிப்பிட்டு சொல்லும் ஹிந்தி கெட்டவார்த்தைகளை பிரயோகித்தார்கள். (நிற்க..! அது என்ன கெட்ட வார்த்தையாக இருக்கும் என இப்ப யோசிக்காமல் அடுத்த பாராவுக்கு போகவும்)
சிரிக்காதீர்கள்! கம்பெனி உள்ளே நுழையும்போதே 'ஏண்டா சாலே! ஆறுமாதமா பணம் தராமெ என்னடா கம்பெனி நடத்தறீங்க! என கர்ஜித்தவாரே நம்மிடம் வரும் முரட்டு சப்ளையர்கள்.. மணிக்கொருமுறை சாய் குடித்து குட்கா பொட்டலத்தை கிழித்து வாய்க்குள் போட்டு எச்சில் வழியாமலிருக்க தலையை தூக்கி பேசும் மானேஜர்கள்..படோதாவிலிருந்து வரும் கர்னாவதி எக்ஸ்பிரஸ் இன்று ஏன் லேட் என வெட்டிப்பேச்சு பேசும் மேத்தாக்கள், தேசாய்கள், படேல்கள்..
அவர்களுடன் மதிய உணவு சாப்பிடும்போது கவனிப்பேன்.. சீராக அடுக்கப்பட்ட, அப்பளம் போல ஒரே சைஸில் பத்து பன்னிரெண்டு சன்னமான சப்பாத்திகளை டிபன் பாக்ஸிலிருந்து மொத்தமாக எடுத்து அப்படியே முறுக்கி பிய்த்து, எண்ணெய் நிரம்பிய ஆலு சப்ஜியில் முக்கி எடுத்து சாப்பிடுவார்கள். பொதுவாக குஜராத்திகள் எல்லோரும் உணவுப்பிரியர்கள். காலை உணவு டோக்ளா சாபுதானா வகையரா. மதியமும் இரவும் ரோட்டி, எண்ணெய் சொட்ட சப்ஜிகள், கிச்சடி, நடுவே சமோசா, கச்சோரி, ஶ்ரீகண்ட், வேர்க்கடலை (பரூச் கா சிங்தானா பிரபலம்). இரவு பத்து மணிக்கு மேல் வெட வெட குளிரில் ஐஸ் க்ரீம் கடையில் கூட்டம் அம்மும். ஆண்கள் மேல் பாகம் பெருத்து ஒல்லியான கால்களில் முடிய, பெண்கள் எப்படி ஆரம்பித்தாலும் அகலமாகவே முடிவார்கள்.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான penicillin-Gயை (Pen-G) எங்கள் நிறுவனம் அரசாங்க அனுமதியுடன் இறக்குமதி செய்வார்கள். அது கிடைப்பதற்கரிய வஸ்து என்பதால் அரசாங்கம் கோட்டா விதித்திருத்தது. பென்ஜி எவ்வளவு உபயோகப்படுத்தினோம் என்ற கணக்கை தணிக்கை செய்ய food and drugs administration துறையிலிருந்து மாதமொரு முறை அதிகாரிகள் வந்துவிடுவார்கள். தவிர அவ்வப்போது விற்பனை வரி அலுவலகத்திலிருந்தும் வந்து நிற்பார்கள். ஃபாக்டரி அக்கவுண்ட்ஸ் இன் சார்ஜான நான் தான் அவர்களை சமாளிக்க வேண்டும். பொழுது விடிந்தால் பிரச்சனை தான்.
கம்பெனியிலிருந்து பத்தே நிமிடத்தில் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர அடியில் விசாலமான ஃப்ளாட். பெரிய பால்கனி. நான், மனைவி உஷா, இரண்டுமாத குழந்தை பிரஷாந்த் மற்றும் குறை பிரசவ குழந்தை சைஸில் இரண்டு பல்லிகள் அந்த ஃப்ளாட்டில் குடியிருந்தோம். மாலை ஆபிஸிலிருந்து வந்து ஃபளாட்டில் நுழையும்போது உஷா சோஃபா மீது ஏறி நின்று கொண்டிருப்பாள், அறை ஒரத்தில் தரையில் பல்லி நின்று கொண்டிருப்பதால். சிலசமயம் சுவற்றிலிருந்து ச்ச்ச்சப்ப்ப்பென சப்தத்துடன் பல்லி தரையில் குதிக்கும்போது உஷாவின் அலறல் தொடரும்.
காலை மாலை பான்பராக் அம்பாசடர் வந்துவிடும். நாங்கள் ஐந்து மானேஜர்கள் ஒரே பில்டிங்கில் வசித்தாலும் ஆபிசில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள். எதை கேட்டாலும் குதர்க்கமாகவே பதில் சொல்லும் ஸ்டோர்ஸ் மானேஜர் படேலுக்கு என்னை பிடிக்கவில்லை போலும்.
'என்னங்க படேல்சாப்.. ரெண்டு நாளா ஆபிஸ் வரலியே நீங்க?' வாஞ்சையோடு கேட்பேன்.
'அர்ரே! பீவி புக்கார் ஹெ.. (மனைவிக்கு உடம்பு சரியில்லை..')
அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும்.
'ஆமா.. உங்க வைஃப்க்கு தானே காய்ச்சல்.. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்க?'
'பின்னே நீயா லீவு எடுப்பே?'
இவன் பட்டேல் இல்லை.. பொட்டேல். சரியாக வாங்கி கட்டிக்கொண்டேன். அன்றிலிருந்து நான் அவனிடம் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.
கம்பெனியில் எல்லோருமே எகத்தாளமாக பதில் சொல்கிறார்களே! காலை எட்டு மணிக்கு ஃபாக்டரி உள்ளே நுழையும்போது இரும்பு பக்கெட்டில் எதையோ எடுத்துக்கொண்டு எதிரே வந்தான் ஆபிஸ்பாய் மஹிசூரி. பக்கெட்டிலிருந்து பக் பக்கென புகை வேறு. 'அதென்னப்பா?' எனக்கேட்ட என்னிடம் 'இது லிக்விட் நைட்ரஜன் சார். ஒரு கரண்டி மொண்டு உங்க உள்ளங்கைல வச்சாக்க அந்த ரசாயணம் கைய பொத்துக்கிட்டு சதை வழியா கீழே இறங்கும். ஊத்தீறவா?' என பக்கெட்டை பக்கத்தில் கொண்டு வந்தவனை தடுத்து 'ஏம்ப்பா.. மஹிசூரி! யாரு பெத்த புள்ளப்பா நீ! ராவுகாலத்தில் பொறந்தியா?' பதறிக்கொண்டு அந்தப்பக்கம் ஓடினேன்.
எப்படி இந்த கம்பெனியில் காலத்தள்ளுவது என யோசிப்பேன். அந்த ஊர் காற்றில் நஞ்சு.. அலுவலகத்தில் வேலைப்பளு.. சக சிப்பந்திகள் ஒத்துழைப்பு இல்லை. ஒரே ஒரு ஆறுதல். தலைமை அலுவலகத்தில் ஜம்புநாதன் சார் மட்டுமே பரிவாக பேசக்கூடியவர்.
மாதமொரு முறை ஜம்புநாதன் சார் ஃபாக்டரி விசிட்டுக்காக பம்பாயிலிருந்து வந்தால் ஆபீஸே அல்லோகலப்படும். பெனிசிலின்-G இருப்பு எவ்வளவு, எவ்வளவு கொள்முதல் செய்தோம், அந்த மாத உற்பத்தி எவ்வளவு என சில எண்களை பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே என்ன தில்லுமுல்லு நடந்திருக்கும் என சட்டென கணிப்பார். குறைந்தது இன்ன அளவு அமாக்ஸிஸிலின் உற்பத்தி செய்திருக்க வேண்டுமே. yield குறைய காரணமென்ன என கேள்வி கேட்டு ப்ரொடக்‌ஷன் மானேஜர் சிட்னிஸை நின்ன வாக்கிலேயே உச்சா போக வைப்பார். பதில் சொல்ல அக்கவுண்டன்ட்கள் லோட்டஸ் 123யில் தலையை விட்டு தேடுவார்கள்.
மாலை படு காஷுவலாக மானேஜர்களுடன் 'முஜே எக்ஸ்ட்ரா மஸ்கா!' என ஆர்டர் செய்து மூக்கில் ஜலம் வழிய ரசித்து பாவ் பாஜி சாப்பிடுவார். ஆபிஸை மறந்து கிண்டலடித்து அரட்டையடிப்பார். சிகரெட், குட்கா, மது போன்ற லாகிரி வஸ்துக்கள் கிடையா. டை கட்டும் வழக்கம் இல்லை. டிசைன் மற்றும் நிறமில்லா வெள்ளை அரைக்கை சட்டையை பாண்ட்டுக்குள் திணிக்காமல் எடுத்து விட்டிருப்பார். மெல்லிய சட்டைக்குள்ளிருந்து தொப்பையில்லா வயிற்றில் கருப்பு பெல்ட் தெரியும்.
திடீரென பார்த்தால் ஒரு வார லீவில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டிலுள்ள தன் வீட்டு வாசல் திறந்த வெளியில் ஈசி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அப்பவும் கையில் ஏதோ மானேஜ்மென்ட் புத்தகம். பக்கத்தில் காலி டபரா. அங்கேயும் அவரை விட்டு வைக்காமல் நான் ஆஜர். 'நானும் லீவு சார். ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். உங்களையும் அப்பிடியே பாத்துட்டு...' என ஏதோ சாக்கு. வந்ததே அவரை பார்க்கத்தான் என அவருக்கு தெரியுமோ இல்லையோ,
அருமையான
காபி நமக்கு உண்டு.
நிறைய முறை பம்பாயில் அவரது வீட்டிற்கு கணபதியுடன் போயிருக்கிறேன். அவர் மூலம் வேலைக்கு வந்தவன் என்பது கம்பெனியில் எல்லோருக்கும் தெரிந்தாலும், வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென கொஞ்சம் கண்டிப்புடன் எதிர்பார்ப்பவர்.
பம்பாய் 'தானே' பகுதியில் வீடு அவருக்கு. டானென்று காலை எட்டு மணிக்கு ப்ரீஃப் கேஸ் சகிதம் நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் தன் ஃபியட் கார் பின் இருக்கையில் ஏறுவார். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடனே டிரைவர் சஷ்டி கவசம், சஹஸ்ரநாமம் என காசெட்டை தட்டி விட, இவர் ஸ்லோகங்களை உச்சரித்தபடி எகனாமிக் டைம்ஸ், ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகள், இந்தியா டுடே, சுச்சேதா தலால், சுவாமிநாதன் அங்கலேஸாரியா அய்யர் கட்டுரைகள் என அவர் உலகமே தனி.
விக்ரோலி கொத்ரெஜ் பாய்ஸ் கம்பெனி தாண்டும்போது தண்ணீர் எடுத்து குடிப்பது என எல்லாம் டயத்திற்கு செய்வார். 'வனமாலி கதி சார்ங்கி சங்கி சக்ரீ ச நந்தகி' யின் போது பிரிமியர் பத்மினியிலிருந்து தலையை திருப்பி வெளியே பார்த்தால் வொர்லி சிக்னல் தாண்டும் என சத்தியம் செய்வேன். இது தினமும்..
கம்பெனி முதலாளிகள் காந்தி சகோதரர்கள் ஜம்புநாதன் சொல்வதை தெய்வ வாக்காக மதிப்பவர்கள். பம்பாயிலிருந்து அங்க்லேஷ்வர் பாங்க் மானேஜருக்கு ஒரே போன் காலில் பல லட்சங்களை இன்வாய்ஸ் பில் டிஸ்கௌண்ட் அக்கவுண்ட் மூலம் வரவு வைப்பார். அந்த அளவிற்கு அனுபவமும் இன்ஃப்ளுவென்ஸும் கொண்டவர்.
எப்படியோ ஒருநாள் கணபதி மூலம் எனக்கு பஹ்ரைன் வேலை கிடைத்து விசா வந்து விட்டது. மூன்று மாத நோட்டிஸ் கொடுத்து விட்டு பிறகு நீ போகலாமென ஆபிஸில் சொல்லிவிட விசனத்துடன் வந்து சீட்டில் அமர்ந்தேன். ஏதாவது பிரச்சனை செய்வது என அவர்கள் இருந்ததால் மாலை ஜம்புநாதனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். 'கம்பெனி விதிமுறைகள் அப்பிடியாச்சேப்பா!.. உன் காண்ட்ராக்ட்ல அப்பிடி போட்டிருந்தா என்ன செய்வே?' என அவர் கேட்க அழுகையே வந்துவிட்டது எனக்கு.
'உடனே ஜாயின் பண்ணலேன்னா பஹ்ரைன்ல விசா கான்சல் பண்ணிருவாங்க சார்' என நான் கெஞ்ச, அவர் 'இப்ப நான் உனக்காக தலையிடுவது சரியில்லப்பா. உன் காண்டிராக்ட் பிரகாரம் மூனு மாச நோட்டீஸ் நீ கொடுக்கனும்.. இல்லாட்டி 3 மாச சம்பளத்தை சரண்டர் பண்ணிட்டு கிளம்பிடு!. நீ அதை பண்ண மாட்டேன்னு நினைச்சிட்டிருப்பாங்க.. மூனு மாச சம்பளத்த பஹ்ரைன்ல சம்பாரிச்சுக்கலாமே! ' என அவர் சொல்ல மறு நாள் காலை லெட்டர் எழுதிக் கொடுத்தேன்.
அடுத்த சில மணி நேரத்தில் எனது 'த்யாக் பத்ர' விஷயம் ஹெட் ஆபிஸுக்கு போய், உடனே ஜம்புநாதனிடமிருந்து ஃபாக்டரி வொர்க்ஸ் மானேஜருக்கு டெலக்ஸ் வந்தது, திரைக்குப்பின்னால் நடந்தது யாருக்கும் தெரியாமல். ஆபிஸ் மீட்டிங் ரூமில் சமோசா, கச்சோரி, ஜிலேபி வாசனை. ஃபேர்வெல் பார்ட்டியாம். நாற்பது பேர் கூடி என்னை வாயார வாழ்த்த, நானும் இந்த மாதிரி ஒரு அருமையான ஆபிசை பார்த்ததே இல்லையென இரண்டு நிமிடம் புளுகி (இல்லாட்டி விசா போச்சே!) , சிலரின் உருவப்படத்தை (ஜம்புநாதன் உள்பட) கார்ட்டூனாக வரைந்து காட்டி, கைத்தட்டல் பெற்று, ஓரிரு நாளில் பம்பாய் வந்து, விமானம் ஏறும் முன் ஜம்புநாதனிடம் ஆசி பெற்று பஹ்ரைன் வந்திறங்கி 23 வருடங்கள் ஓடியது தெரியவில்லை.
பி.கு: ஜம்புநாதன் சாருக்கு இந்நேரம் 75 வயது பூர்த்தியாகியிருக்கும்.(10 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக புற்று நோய் வந்திராவிட்டால்)

வயிறு பெருகி வருமோ!

 1994.. பஹ்ரைன் ஸ்வாகத் உணவகம்...

குறுகலான சூக் (souq) பகுதியில் மனாமா கிருஷ்ணங்கோயிலுக்கு எதிரே ஸ்வாகத் ரெஸ்டுரன்ட். மொட்டை மாடியில் தண்ணி தொட்டி மேலே ஏறுவது போல குறுகலான படிக்கட்டுகளில் ஏறினால் முதல் தளம். நாலைந்து குடும்பங்கள் பாவ்பாஜி, மிசால் பாவ் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கன்னட இளைஞன் நம் முன் வைக்கும் வடா பாவ், மசாலா சாய் 250 ஃபில்ஸ் (அப்போதைய இந்திய ரூபாயில் 25 ரூபாய்)
அதே பகுதியில் பிரம்மச்சாரி இளைஞர்கள் படையெடுக்கும் நம்பூதிரி மெஸ். சபரிமலைக்கு மாலை போட்டு காவி உடையில் வேட்டியை மடித்து கட்டி நிற்கும் கடை ஓனர் நம்பூதிரி. அரைத்துவிட்ட சாம்பார், முளகூட்டன், மோர் குழம்பு, கூட்டு, பொறியல் இத்யாதி. திவ்யமான சாப்பாடு. நம்பூதிரி ஒரு தினார் (100 ரூபாய்) வாங்கி சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொள்வார். வாசலில் 555 சிகரெட் பாக்கெட்டை கிழித்து சிகரெட்டுகள் மற்றும் வத்தி குச்சிகளை பரத்தி வைத்திருப்பார். அது இலவசம். குப் குப்பென்று புகை விட்டபடியே கிளம்பும் மக்கள்.
90களில் பஹ்ரைனில் ஒரே தமிழக உணவகம் என்று சொல்லக்கூடிய நஃபூரா ஹோட்டல். மங்கிய ஒளியில் கமகமவென சாம்பார், ரவா தோசை மணம் திருவல்லிக்கேணி சைடோஜியை நினைவூட்டும். கல்லாவில் லட்டு, ஜாங்கிரி, கொழுத்த குலாப் ஜாமூன், மிக்சர் பார்க்கும்போதே வாங்க ஆவல் எழும். எல்லா பழங்களையும் போட்டு பஞ்சாமிர்த சுவையுடன் பழ ஜாம்+ அடை வெள்ளியன்று மட்டும்.
மணாமாவில் மற்றொரு பகுதியில் 50 வருட குஜராத்தி ரெஸ்டாரன்ட். மராமத்து செய்யாமல் இன்னும் பழைய மேசை நாற்காலிகள். எண்ணெயில் புரண்டு படுக்கும் ஆலு சப்ஜி, கடி, பச்சை சட்னி வகைகள், கேரட்/சர்க்கரை/க.மாவு கலந்த ஏதோ ஒரு பதார்த், சன்னா மசாலா, உந்தியா, கேலாபாஜி.. நிமிடத்திற்கொரு தரம் கீ (ghee) சுடச்சுட ஃபுல்க்கா ரொட்டிகள் தட்டில் விழும். 'பினா கீ..' சொன்னால் சுக்கா ரோட்டி. 'ராத்திரிக்கி நானெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா மூனு சப்பாத்தி தான்' என பீற்றிக்கொள்ளும் ஆசாமிகள் கூட சத்தம் போடாமல் எட்டு ஒன்பது ரொட்டிகளை மொசுக்குவார்கள். 'பஸ் கரோ பையா!' என வெட்கத்துடன் பெண்கள் சொல்ல சொல்ல 'ஏக் ஔர் ரோட்டி லேலோ பெஹன்ஜி!' என கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார்கள். அடுத்து சூடான மூங்தால் கிச்சடி, அதன் மேல் மொண்டு ஊற்றப்படும் நெய். கடியுடன் கிச்சடி தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்க, சடுதியில் நமக்கு ட்ரைக்ளிசரைடு எகிறும். கல்லாவில் கச்சோரி, டோக்ளா, பாக்கர்வாடி, சேவ், தூத்பேடா, மலாய் பர்ஃபி, ஏலம் தூவிய மஞ்சள் வர்ண ஜிலேபி. பாவிகள்.. அநியாயத்துக்கு நம் பசியை மறுபடியும் தூண்டுவார்கள்.
மைசூர் ரெஸ்ட்ருவண்ட்..
இடிந்து விழுவது போல ஒரு பழைய கட்டிடத்தின் ஒரு மூலையில் இந்த உணவகம். தாடி வைத்த முதலாளி அஜய் மங்களூர்க்காரர் கல்லாவில். பக்கத்தில் சர்ச் மாஸ் முடிந்து வரும் கூட்டம் எல்லோருக்கும் தளும்ப தளும்ப சாம்பார் இட்லி, வடா சாம்பார். சீரகம் தெளித்து உளுந்து கலக்காத பச்சரிசி மாவில் வேகவைத்து செய்யப்பட்ட வெள்ளை நிற நீர் தோசை + தேங்காய் சட்னி ஓரிரு மணியில் கதம்.
அதே பகுதியில் சென்ட்ரல் கபே விருந்தாவன் என மேலும் இரண்டு உடுப்பி ஹோட்டல்கள். வறுத்த பிரெட் துண்டுகள் மிதக்க தக்காளி சூப், முந்திரி பாதாம் அரைத்துவிட்டு எல்லா பச்ச காய்கறிகளும் போட்ட பச்சைக்கலரில் விஜிடபிள் ஹரியாலி, தந்தூரி ரோட்டி, பட்டர் நான். எத்தினி ஐட்டம் செய்தாலும் கபளீகரம் செய்ய மக்கள் தயார்.
சற்றுத்தள்ளி ஆஷாஸ் எனப்படும் மற்றொரு ச்சாட் கடை. வடநாட்டு பையாஜி என்று அழைக்கப்படும் மாஸ்டருக்காகவே பாதி கூட்டம் அங்கே. பானி பூரி, பேல் பூரி, வடா பாவ், ரகடா பட்டீஸ் பறக்கும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேப்ஸிகம், தக்காளி, வெங்காயம் என எல்லா சமாச்சாரத்தையும் ப்ரெட்டுகளுக்கு நடுவே திணித்து எக்கச்சக்கமாக வெண்ணையை உட்புறம் வெளிப்புறம் தடவி தங்க நிறத்தில் பொறித்து அதை நாலஞ்சு துண்டங்களாக வெட்டி நம் முன் வைக்கப்படும் பாம்பே சாண்ட்விச்+ கெட்ச்சப் அடுத்த சில நிமிடங்களில் ஸ்வாஹா!
மேற்சொன்ன அனைத்து உணவகங்களும் 2000க்கு முன். பின்னர் கௌரி கிருஷ்ணா, சரவண, சங்கீதா பவன்கள் வந்து மினி டிபன் கோம்போ, கொத்து & சில்லி பரோட்டா என ட்ரெண்டை மாற்றி ஜனங்கள் வீட்டிலேயே பிரயோகிக்க ட்ரெட் மில் வாங்க ஆரம்பித்தார்கள்..
ஆச்சு... இப்ப 2020. கோவிட்-19 லாக் டவுன், சமூக இடைவெளி, பகுதி கடையடைப்பு என அரசாங்கம் செவ்வனே தன் பணியை செய்து மக்களை காக்கிறது. கடந்த சில மாதங்களாக மேற்சொன்ன உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாத நிலை. உட்கார்ந்து சாப்பிடும்போது தெரியும் ருசி பார்சல் டேக் அவேயில் இல்லை. அலுமினிய ஃபாய்லில் ஆறிய மசால் தோசை, சிவாஜியும் வாணிஶ்ரீயும் கட்டிப்பிடுத்துக்கிடப்பது போல இட்லிவடை பொட்டலம். முறுகல் இல்லாத பார்சல் ரவா.
திருச்சி ஆதிகுடியில் நீர் தெளித்த வாழை இலையை உதறி, நடுத்தண்டை க்றக்கென நசுக்கி மடித்த தோசை மேல் சாம்பார் விட்டு கெட்டி சட்னியுடன் சாப்பிட்டு முடித்தவுடன் இலையில் மிஞ்சிய சட்னி கலந்த சாம்பாரை வழித்து நக்கும் சுகம் எங்கே! திருவானைக்காவல் பார்த்த சாரதி விலாசில் ரவா தீர்ந்து போவதற்குள் அவசரமாக இரவு 8 மணிக்கு நுழைந்து சாப்பிட்டவுடன் அதே காரத்துடன் சாப்பிடும் காபி எங்கே! காசு கொடுக்க முடியாமல் ஹோட்டலில் மாவு ஆட்டும் சுகம் எங்கே! (கீழே ஓவியத்தில்)
வசந்த காலம் வருமோ! நிலை மாறுமோ! வயிறு பெருகி வருமோ!

ப்ரொபசர் வெல்லூர்

 திருச்சி மெயின் கார்ட் கேட்..

வீஈஈஈஈஈஈ என ஹாரன் ஒலி எழுப்பி அசுர வேகத்தில் நம்மை கடந்து போகும் திருச்சி-ஶ்ரீரங்கம்-திருச்சி (TST) டவுன் பஸ் காரனை சபித்தபடி, வலது பக்கம் திரும்பினால் தெப்பகுளம் போஸ்ட் ஆபீஸ். மைதா பசையால் கவர்களை ஒட்டி அவசரமாக தபால் பெட்டியில் போடும் மக்களை கடந்து, வாசலுக்கு வெளியே நடை பாதை வரை சேர் போட்டு சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து வந்து குவியும் வாடிக்கையாளர்களுக்கு 60 பைசாவிற்கு பழ ஐஸ்கிரீம், 40 பைசாவிற்கு சிரப் வழங்கும் மைக்கேல் ஐஸ்கிரீமை பார்லரை கடந்து, இந்தியா சைக்கிள் மார்ட், திருச்சி எக்ஸ்ரே கடைகளை தாண்டி, மட்டன்+மீன்+சாம்பார்+சிகரெட்+வெத்திலை+ஊதுபத்தி எல்லாவற்றையும் கலந்தடிச்சு ஒருவித ஆசுபத்திரி வாடையை காற்றில் பரப்பும் அசைவ உணவகத்தை கடந்து, ஜெகன்னாதன் புப் டெப்போ போர்டு போட்ட CA நண்பன் Aloysius இன் வீட்டை அடுத்து, படாரென கல் தடுக்கி குதித்து குடுகுடுவென நாலு ஸ்டெப் ஓடி, வலது பக்கம் சந்துக்குள் நுழைந்தால்...
பிரிட்டோ காலனி... இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தலா பத்து பதினைந்து மூங்கில் தட்டி போட்ட வீடுகள். ‘Jesus lives here’ மற்றும் ‘ஏசு அழைக்கிறார்’ வாசகங்களுடன் வாசலில் க்ரோட்டன்ஸ் செடி, லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், சுவேகா மொப்பெட்டுகள். நம்மை பார்த்தும் குரைக்காமல் ‘அடப்போப்பா நீ வேற!’ என அங்கலாய்த்து முகத்தை திருப்பிக்கொள்ளும் கருப்பு சடை நாய்கள். அங்கே வசிப்பவர்கள் எல்லோரும் செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் லெக்சரர், புரொஃபசர்கள். கல்லூரிக்கு சொந்தமான இடம். அதில் ஒன்று தான் ப்ரொபசர் வெல்லூர் வீடு.
‘நீ காஸ்டிங்க்கு (Costing) ரத்னம் காஸ்டிங் அட்வைஸரா படிக்கிறே?’ என யாரோ ஒரு பையன் கேட்க பதிலுக்கு இன்னொருத்தன் ‘இல்ல! நான் புரொபசர் வெல்லூர் சார் கிட்ட டியூஷன் போறேன்’ என்ற மேற்படி சம்பாஷனைகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் அந்த பையன்கள் CA அல்லது ICWA படிக்கிறான்கள் என்பதும் வெல்லூர் சாரிடம் படிக்கும் பையன் சீக்கிரம் பாஸ் செய்து விடுவான் என்பதும் பொதுவாக நடக்கக்கூடிய சமாச்சாரங்கள்.
ப்ரொபசர் வெல்லூர் சாரிடம் டியூஷன் படிக்க ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். பாட்ச் பாட்சாக கூட்டத்துடன் மாணவர்களை எடுக்காமல் வாசலில் ஏழெட்டு பேரை மட்டும் உக்காத்தி வைப்பார். உள்ளே குஸ்கா வாசனை. வெகு அக்கறையுடன் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக சொல்லிக் கொடுப்பார்.
நடு வயிற்றுக்கு மேல் வரை தொள தொளவென வெள்ளை பாண்ட். கருப்பு பெல்ட். அதற்கு மேலே இரும்புத்திரை சிவாஜி போல் முழங்கை வரை மடித்த வெள்ளை முழுக்கை சட்டை. பாண்ட் பாக்கெட்டில் அடிக்கடி கை விட்டு அங்கு மட்டும் கொஞ்சம் அழுக்கு. ஸ்டெப் கட் மற்றும் காக்கிச்சட்டை கமல் போல நாம் டைட் பாண்ட் போடும்போது அவர் பஃப் வைத்து சம்மர் க்ராப்பில் இந்த உடையில் படு ஸ்டைலாக அந்தக்கால பாப்பிசை பாடகர் போல இருப்பார்.
வெற்று சுவற்றை பார்த்தவன்னம் அவர் சேரில் உட்கார்ந்திருக்க அவர் முதுகை பார்த்தபடி பின்னால் மாணவர்கள். புதிதாக அவரிடம் டியூஷன் சேரும்போது ‘ஒரு தடவ மார்ஜினல் காஸ்டிங் சாப்டரை பாத்துட்டு வந்துடு’ என முன் கூட்டியே சொல்லி விடுவார். ‘பாத்துக்கலாம்.. சரி.. விலாவாரியாகத்தான் சொல்லிக் கொடுப்பாரே!’ என நாம் படிக்காமல் போனால் தொலைந்தோம். கையில் புத்தகம் கூட இல்லாமல், கணக்குகள் சரளமாக அவர் வாயிலிருந்து வர நாம் நோட்டில் எழுதிக்கொள்ள வேணும்.
‘சரி! நீயே கணக்கை போடு’ என மெல்ல புளியை கரைப்பார். நாம் தட்டுத்தடுமாறி குஸ்கா வாசனையை பிடித்துக்கொண்டே ஒருவழியாக முடித்தவுடன் நம் நோட்டை வாங்கி பார்ப்பார் என்று நினைத்தால் அதுவும் கிடையாது. ‘நீயே படி’ என்பார். எழுதியதை நாம் படிக்க, step-by-step ஆக விளக்கி நம்மையே திருத்தி எழுத வைப்பார், இன்னும் வெற்று சுவற்றை பார்த்தபடி.
அடுத்த நாலைந்து மாதங்கள் இதே கதை தான். பையன்கள் சி.ஏ. பரிட்சை பாஸ் செய்து அடுத்த பாட்ச் ஓடிக்கொண்டிருக்கும். பாஸ் செய்த பின்னும் அவருக்கு காசு கொடுக்காமல் இழுத்தடிக்கும் மாணவர்களைப்பற்றி கவலைப்பட மாட்டார். பிறகு நேரில் பார்த்தாலும் கேட்க மாட்டார்.
பின் குறிப்பு 1: தற்போது மைக்கேல் ஐஸ்க்ரீம் பார்லர் அங்கு உள்ளதா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். திருச்சி எக்ஸ்ரே உள்ளது. அசைவ உணவகம் போயிந்தி. பிரியாணி வாசனை மட்டும் உந்தி. பத்மா காபி போய் தற்போது போத்தீஸ். பிரிட்டோ காலனி இன்னும் உள்ளது என நினைக்கிறேன் புது வீடுகளுடன்.
பின் குறிப்பு 2: கோகுலாஷ்டமி குட்டி கிருஷ்ணன் படத்தையும் பதிவையும் பதித்த பின் சற்று நேரம் முன் நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் ‘ 90 வயது

ப்ரொபசர் வெல்லூர் இறந்து விட்டார் என’.

நடு வகிடு.. ரங்கு.. செம்பூர்

காலை 7 மணிக்கு விழித்து 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம். ஜன்னலுக்கு வெளியே மரங்கள், பறவைகள் சத்தம், இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. அப்ப 27, 28 வயதுதான் இருக்கும். மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம். அலுவலகத்தில் தினமும் நடக்கும் சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம் அது. இதெல்லாம் இயந்திர வாழ்க்கை பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? பம்பாயில் இயந்திர வாழ்க்கை என்பதெல்லாம் மற்ற மாநிலத்தவர்கள் நினைத்துக்கொள்வது தான்.

நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda நகரில் ஒரு தனி ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். எதிரே செம்பூர் முருகன் கோவில். பக்கத்தில் அங்கங்கே பால்கனியில் சிகரெட்டுடன் பாலக்காட்டு மாமாக்கள். எங்கள் வீட்டில் நண்பர்கள் பட்டாளம் எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன் 'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் காபியுடன் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.
யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். அவனுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம். எனக்கும் ஶ்ரீரங்கத்துக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் அங்கே குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். ரங்கு வீட்டில் எனக்கு தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் நுனுக்கி நுனுக்கி டைப் செய்து அனுப்புவதிலிருந்து அவரின் சிக்கனம் தெரியும். உதவி போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பழங்கால G.ராமநாதன், SM சுப்பையா நாயுடு,KV மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர் இசையில் எனக்கு மிகுந்த நாட்டம். நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிப்பாரு' .. 'ஒரு மைனா மைனா' (உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே 'டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தக்கனையான கருடாழ்வார் நாசி. படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு.
வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், விதவிதமான காலணிகளுக்கும் செலவழிப்பவன் நான். தினத்திக்கும் நானே இஸ்திரி போட்டு, செர்ரி ப்ளாசம் ஷூ பாலிஷ் போட்டு ஹிந்தி நடிகர்கள் நீலம் கோட்டாரி மற்றும் கோவிந்தாவை ரசிப்பவன் நான். மிடுக்காக உடை உடுத்தும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பேக்காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன திருச்சிக்காரனான எனக்கு திருச்சியிலேயே ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம். சொல்லித்தான் வைப்பமே!).
ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி, இடது வகிடை மாற்றி நடு வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'இளம் நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் தன் நடுவகிடை பார்த்து தாங்கொனா மகிழ்ச்சியுடன் புளகாங்கிதமடைந்தான்.
அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா கேம்பிரிட்ஜ் மற்றும் பாந்திரா லிங்கிங் ரோடு பகுதிகளில் ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,லீ ஜீன்ஸ் பாண்ட், கொவாடிஸ் என ஒரே ஷாப்பிங் spree தான். சிறிய சீப்பை பாண்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் எடுத்து மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான். அடுத்த சில நாட்களில் ரங்கு நெற்றியில் கேசம் புரள நடு வகிட்டுடன் ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான்.
அவ்வளவுதான்.. மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்து பையன் இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி

சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களையும் T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். எல்லா பெண்களும் தங்களையே பார்ப்பதாக ஒரு நினைப்பை அவர்களுக்குள் வெற்றிகரமாக விதைத்தேன். தலைக்கு எண்ணெய் வைப்பது? ம்ஹூம்.. ப்டாது.. அது பெருங்குற்றம். பாண்ட்டில் சீப்பு இல்லையென்றால் அது தெய்வ குத்தம். நொடிக்கொருதரம் தலையை சிலுப்பி சீப்பால் வாரனும். 'டேய் நாமளா இது! என எல்லோரும் சிலாகித்தார்கள். காதல் வருகிறதோ இல்லையோ காதல் நமக்கு வரனும் என்கிற ஏக்கம் வரனும் என தத்துவம் பேசி செம்பூர் நகர வீதியில் கட்டிங் சாய் குடித்து வெட்டியாக உலாவினோம். நட்ராஜ் தியேட்டரில் 'maine pyar kiya' படத்தில் பாக்யஸ்ரீ ஒரு சீனில் சல்மான் கானை நினைத்துக்கொண்டு தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல சிரித்ததை நண்பன் ரங்கு ரசிக்க,மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே தியேட்டரில் ஆஜர். வாழ்கை இப்படியே
இனிமையாக
போனது..
நான் CA. அவன் ACS கம்பெனி செக்ரட்டரி. பங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் பாப் கட்டுடன் கீச்சு கீச்சென நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து சுவைத்து 'so pungent yaar!' என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat தான். 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்கா போய் நம்மள படுத்தறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்: "அதுக்கு தாண்டா நாம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?'
சுனிதா ராவத் என்றொரு பெண். (அழகான பெயர்களுடன் சேர்ந்து சகிக்காத குடும்ப பெயர்கள் எதற்கு! ராவத், மித்தல், தொத்தல் என..) குட்டியூன்டாக வடிவானவளாக இருப்பாள். குட்டையாக, நல்ல பூசின மேனியுடன் ஊத்துக்குளி வெண்ணெயை நினைவுக்கு கொண்டு வருவதே வாடிக்கை அவளுக்கு. நொடிக்கொரு முறை தன் அதரங்களை ஈரப்படுத்தி சிலிர்ப்பூட்டுவாள் கிராதகி. நமக்கு தான் பாழும் மனசு! அவள் என்னிடம் வந்து பேசினால் தூரத்தில் தன் க்யூபிக்கிளில் இருந்து தலையை தூக்கி பார்ப்பவன் ரங்கு. டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் நளினமாக நடந்து நமக்கு மிக மிக அருகே வந்து விகல்பமின்றி நம் கண்களை நேரே பார்த்து 'where is underwriting file ? என்று அவள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே அவனுக்கு மதியம் மாவா ஐஸ்கிரீம் வாங்கித்தருவேன்.
ஆபீசுக்கு போகும்போதும் வாசனை திரவியங்கள் பூசி, branded சட்டை, checkered பாண்ட், சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட், மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி, மறக்காமல் நடு வகிடு என ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்குவை இப்படி நான் மாற்றியது ரொம்ப சந்தோஷம். ஸ்ரீரங்கம் போனால் தட்டில் சீடை காபியுடன் நல்ல வரவேற்பு.
அதுசரி .. இதெல்லாம் செய்து ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். அதான் இல்லை.... ஆனால் பம்பாயிலேயே ஆச்சாரமான ஒரு அய்யர் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரன் Sridharan Rajaraman உம் என் நண்பர் குழாம் தான். நம்ம ரங்குவுக்கு தான் பயமே போய்டுச்சே! தைரியமாக போய் பேசி மணம் முடித்தான். இப்ப இரண்டு பெண்கள். பாம்பேயில் மிகப்பெரிய MNC யில் உயர் பதவியில் இருக்கிறான்.
நான் பஹ்ரைன் வந்த பின் ரங்குவுடன் சில வருடங்கள் தொடர்பு இல்லையெனினும், பிறகு பம்பாய் சென்றபோது அவனை பிடித்து விட்டேன். அதே நடு வகிடு. என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான், பல வருடங்களுக்கு முன்பு அவன் சிகையழகை நான் மாற்றி நடு வகிடு எடுக்க வைத்ததை நினைத்து. சென்ற வாரம் கூட வெகுநேரம் பம்பாய் நாட்களைப்பற்றி கதைத்துக்கொண்டிருந்தோம். அதே இளமை...அதே கடும் உழைப்பு.. Executive VP & கம்பெனி செக்ரடரி. நாரிமன் பாய்ன்ட் பகுதியில் கடல் காட்சியுடன் அலுவலகம். பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூத்த அதிகாரிகளுக்கு நிதி சார்ந்த வகுப்புகள் எடுக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் ரங்குவின் கம்பெனி லா கட்டுரைகள் என பிரபலம்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடு வகிடு எடுத்து தலை சீவினா வாழ்க்கையில் இவ்வளவு உயர்வோமா?

 1981. ஜிலுஜிலுவென காற்றுடன் மரங்களடர்ந்த திருச்சி பொன்மலை ரயில்வே காலனி. இரவு உணவு முடித்து நிறைய குடும்பங்கள் வீட்டுக்கு வெளியே ஈசி சேரில். நானும் கணபதியும் அவனது வீட்டு மூங்கில் தட்டி போட்ட திண்ணையில் உட்கார்ந்து கனமான அக்கவுண்ட்ஸ் புத்தகங்களுடன் பேசிக் கொண்டும் நடுநடுவே படித்துக் கொண்டிருப்போம். சுமார் 11 மணி வாக்கில் ‘அம்பீ!’ என அழைத்த படி அவனது அம்மா இரண்டு டம்ளர்களில் போர்ன்விட்டா ஆற்றிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். அம்பீ என்பது நம்ம கணபதி தான். இந்த தடவையாவது சிஏ பரீட்சைல பாஸ் முடிச்சிட்டீங்கன்னா நல்லா இருக்கும். எவ்ளோ படிச்சாலும் அந்த சீஏ பரிட்சைல மட்டும் ஏன் மார்க் போட மனசு வரமாட்டேங்குது அவங்களுக்கு என காலி டம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே போவார்கள்.

அப்பாவிடம் கணபதிக்கு எப்போதுமே பயம் கலந்த மரியாதை. சுருக்கமாக ஓரிரு வார்த்தை மட்டும் அவரிடம் பேசுவான். அம்மாவிடம் தான் எல்லோரும் உரிமையாக பேசிக் கொண்டும் கேலி செய்து கொண்டும் இருப்பார்கள். அப்பா கண்டிப்பானவர் என்பதால் அம்மாவிடமிருந்து நிறைய சலுகைகள் உண்டு.
பெரியவன் அண்ணா ரமணி RECயில் BE முடித்து BHELல் வேலை, மன்னி குழந்தைகளுடனும் கடைசிஅக்கா வாணியும் இருக்கும் அந்த வீட்டில் மூத்த பெண்கள் 3 பேருக்கு திருமணமாகி பம்பாய், சென்னை என செட்டிலாகி விட, அப்பாவும் ரிடையர் ஆனார்.
‘அம்பீ! அந்த நாடார் கடைக்கி செத்த போய்ட்டு வரியா’ என அம்மா கேட்க, பெயர் தெரியாத தன் ரோஸ் கலர் சைக்கிள் ஸ்டாண்டை படீரென உதைத்து கிளம்புவான் அம்பி. அந்த சமயத்தில் நான் எதிரே இருந்தால் வாடா என என்னையும் இழுத்துக்கொண்டு விசுக் விசுக் என பெடலை அழுத்துவான். ஆர்மரி கேட் எதிரே டீ குடித்துவிட்டு சாவகாசமாக கொஞ்சம் பேசிவிட்டு பொன்மலை அடிவாரத்திலிருக்கும் நாடார் கடைக்கு போவோம்.
வீட்டு நிர்வாகம் எல்லாம் அம்மாவினுடையது. அம்பி.. அம்பி.. என ஒரு நாளைக்கு நூறு தடவை கூப்பிடுவது வழக்கம். வாணிக்கு விமரிசையாக திருமணம் முடித்து அவர்களும் சென்னை பக்கம் போய்விட, கணபதியும் சீஏ பாஸ் செய்து பம்பாய் பக்கம் வந்து விட்டான். கூடவே நானும். அடுத்த சில வருடங்களில் (1989)அவனுக்கு பஹ்ரைனில் வேலை கிடைத்து இந்தப்பக்கம் வந்து விட, வழக்கம் போல அடுத்த சில வருடங்களில் நானும்.
1991ல் கணபதியின் அப்பா இறந்துவிட அறுபதே வயதில் தனித்து விடப்பட்ட அம்மா. ராணிப்பேட்டையில் பெரிய பையன் ரமணியுடனும், மற்றும் பெங்களூர், சென்னை என மகள்களுடனும் வசிக்கத்தொடங்கினார். 2001இல் குழந்தைகளின் மேற்படிப்பு (IIT coaching), அம்மாவின் தனிமை போன்றவைகளை மனதில் கொண்டு பஹ்ரைனை விட்டு கிளம்பினான் கணபதி. பஹ்ரைனை மட்டுமல்ல, கொழிக்கும் சம்பளத்துடனான வேலை, நிஸ்ஸான் கார், கம்பெனி ஃப்ளாட், வேலையாட்கள், என்னைப்போன்ற நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குறிக்கோளுடன் மயிலாப்பூரில் செட்டில் ஆனான் அம்பி. அம்மாவிற்கும் ஒரே சந்தோஷம். சென்னை, ராணிப்பேட்டை என மாறி மாறி இருக்க ஆரம்பித்தார்கள்.
பேரன் பேத்திகள் ஒவ்வொருவராக வளர்ந்து அவர்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பாட்டியின் ஆசீர்வாதத்தோடு நடந்தேறின. ஆயிற்று அடுத்த அடுத்த இருபது வருடங்கள். வாழ்க்கையில் பெரியதாக ஆசைகள் எதுவும் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் நலனுக்காகவே தன்னை முழுவதும் அற்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலிருக்கும் எந்தெந்த பேரன் பேத்தியிடம் என்ன விஷயங்கள் பேசினால் சுவாரசியமாக இருக்கும் போன்ற சூட்சுமங்களை தெரிந்து கொண்டு அவர்களுடன் மணிக்கணக்காக சம்பாஷனை செய்வார்.
அவ்வப்போது தனக்கு பிடித்த சில டிவி நிகழ்ச்சிகள் பார்க்கும் போது மட்டும் ஐபிஎல் மேட்ச் பார்க்கும் பேரனிடம் செல்லமாக சண்டை. ஐ.ஐ.டி விடுமுறையில் பாட்டி.. பாட்டி என பின்னால் சுற்றும் பேரன் விக்னேஷ் (கணபதியின் மூத்த பையன்) Vignesh Ganapathi Subramanian அமெரிக்காவில் டாக்டரேட் படித்து ஆப்பிள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து அவனது திருமணத்தையும் முன்னின்று நடந்தி மகிழ்ந்தார். கணபதியின் மனைவி துர்கா இவரை தன் அம்மாவைப்போல பார்த்துக்கொண்டார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக எனக்கு அவர்களது குடும்பத்துடன் பழக்கம் என்பதால் என்னிடம் தனி பாசம் உண்டு. உஷாவிடம் அவ்வப்போது குழந்தைகள் நலம் விசாரிப்பார். சென்னை செல்லும் போதெல்லாம் நான் அவருடன் சில நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். சென்ற மாதம் அவரது பிறந்த நாளன்று இரவு 9 மணிக்கு பஹ்ரைனிலிருந்து போன் செய்து அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
‘ஆச்சு.. அம்மா 90 டச் பண்ணிட்டாங்க. இப்பவும் ஆக்டிவா இருக்காங்க. இப்பிடியே இருக்கனும்!’ என கணபதி சொல்லும்போதே ‘அவர் ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழ நானும் உஷாவும் வேண்டிக் கொண்டோம். எந்தவித உடல் பாதிப்பும் இல்லாமல் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டும், நன்றாக பேசிக் கொண்டும், எல்லா உணவு வகைகளையும் மிக குறைந்த அளவோடு உண்டும், கண்பார்வை மங்காமல், ஆரோக்கியமான கை கால்களுடன் இயங்கிக்கொண்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக மட்டும் கொஞ்சம் அசதியாக இருப்பதால் கடைசி பெண் வாணி துணைக்கு இருக்க வேண்டியதாயிற்று.
அப்படியும் முந்தாநாள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் மூச்சு விட சற்று சிரமம் இருப்பதாக சொல்லி, கணபதியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் அப்படியே சாய்ந்து விட்டார்.
நாள் முழுவதும் உட்கார்ந்து ராமஜெயம் எழுதி எழுதி முடிக்கப்பட்டு அறையில் கிடக்கும் நோட்டு புத்தகங்களும், தினமும் போடும் தினசரியின் குறுக்கெழுத்து (crossword) பக்கங்களும் அம்மா இன்னும் நம்முடனே இருப்பதை காட்டுகின்றன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பேரன் பேத்திகளின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் பாட்டியிடம் தங்களுக்கிருந்த அன்பின் ஆழத்தை காட்டும்..
‘She spoke like one of us! Our moms seemed outdated!’
‘The story teller, the diplomat, the best chef, the defender, the coolest, the patient and adorable Paati, we did not expect to lose you!’
‘She was so cute with her wiggly belly and arms. She was peaceful when she left just as how she lived!’
‘She is such a spirited person who had knowledge about the current trend more than our parents’
‘She has touched many of our lives and we will miss her’
கடந்த வருடம் விக்னேஷின் தம்பி ஹேரம்ப குமாருடன்

பாட்டியின் சம்பாஷணை:
‘நீ சி.ஏ பாஸ் பண்ணினதுக்கப்பறம் தான் நான் சாகனும்பா’
‘அப்பன்னா இப்போதைக்கி நீ சாக மாட்டே பாட்டி! கவலைப்படாத’
சீஏ பரிட்சை எவ்வளவு கஷ்டமானது என்பதை அப்போது நகைச்சுவையுடன் சொன்ன ஹேரம்பா கடந்த ஜனவரி மாதம் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆனான். பாட்டியும் தான் சொன்னபடியே...

ஈகிள்ஸ்டார் ஶ்ரீதர்

 பஹ்ரைன் மனமா சைடு கிருஷ்ணங்கோயில் பக்கம் சாயரச்ச ஏழெட்டு மணி வாக்குல நீங்க போனாக்கா ‘என்ன சார் !’ ன்னு ராகமா கேட்டுட்டு சாமி பிரசாதத்தோட வெளிய வந்திட்ருப்பார்.

பூஜையெல்லாம் பண்ணி வைக்கிற ரொம்ப பிரபலமான வாத்தியார் சுந்தர் வீட்டு ஐயப்ப பூஜைல இரண்டாவது வரிசை ஆர்மோனிய பெட்டிக்காரர் பக்கத்துல ‘பால் மணக்குது..’ன்னு உச்ச ஸ்தாயியில பஜனை பாடிட்ருப்பார்.
வருஷப்பிறப்பன்னிக்கி ஷ்யாம் வீட்ல சண்டி ஹோமம், பூர்ண ஆஹுதிக்கு முன்ன ருத்ரம், சமகம்னு முன் வரிசைல உக்காந்துட்டு சத்தமா மந்திரம் சொல்லிட்ருந்தாலும் தூரத்துல என்னிய பாத்தாவுட்டு கண்லயே நமஸ்காரம் சொல்லுவாரு.
‘என்ன பண்ணினாங்க தெரியுமா! டீமானிடைசேஷன் வரப்போறத பத்தி மோடி வெறும் நாலு பேருக்கு மாத்தரம் தான் சொல்லி வெச்சிருந்தார் தெரியும்ல! ’னு இவர் அஞ்சாவது ஆளா நம்ம கிட்ட சொல்வார்.
‘அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்! என்ன காமெடி தெர்யுமா? எலக்சனுக்கு முன்னாடி தனியா அவன உள்ள கூப்ட்டு, ‘தபார்! பாஞ்சு சீட்டு தான் தருவோம். கூட்டணி வேணும்னா சொல்லு. இத்தன கோடி வாங்கிக்கோ! இல்லன்னா உம்மேட்டரை வெளிய உட்ருவோம்னு மெரட்டிட்டாங்க’ ன்னு அரசியல் நியூசை புட்டு புட்டு வைப்பார்.
‘ட்ரம்ப் இந்த தடவை ஷ்யூரா வந்திருவான் சார். நம்மாளுங்க அவன் வரக் கூடாதுன்னு வெளியேதான் சொல்லுவான், ஆனா அவனுக்கு தான் குத்துவான்’ ன்னு அமெரிக்க அரசியலையும் பிரிச்சி மேய்வாப்ள.
‘இப்பசத்திக்கு தினார்-டாலர் pegging போய்ட்டு தான் இருக்கும் சார். அவவன் எக்கச்சக்கமா பணம் போட்டு இன்வெஸ்ட் பண்ணியிருப்பான் இல்லியா! தினாரை கீழ போக உடுவானா’ன்னு வளைகுடா பொருளாதாரத்தையும் அலசுவாரு.
‘சா

ர்! நியூஸ் அப்பிடி தான் குடுப்பான். ஆனா கார்த்தி சிதம்பரத்தோட டீல் போட்ருப்பானுங்க. சும்மா காமெடி சார்’ ஜூனியர்விகடன் ஆந்தையார விட சுடச்சுட தகவல் கொடுப்பாரு.
‘உங்களுக்கு ஈகிள்ஸ்டார் ஶ்ரீதரை தெரியுமா’ன்னு பஹ்ரைன்ல யார்ட்டயாவது கேட்டு, அவர் இல்ல தெரியாதுன்னா அந்த ஆளு நேத்துதான் இந்த ஊருக்கு புதுசா வந்தவரா இருக்கும். அதே ஆள நாளைக்கே கேட்டா நல்லா தெரியுமேம்பார்.
‘என்ன சார்! உக்காந்து பேசலாமா? புதுசா சில ப்ராடக்ட்ஸ் வந்திருக்கு. டாலர் டெபாசிட். 2.5% இன்ட்ரஸ்ட் தறோம். 100% கேபிடல் கேரண்டீடு சார். ருப்பீ இன்னம் டெப்ரிஷ்யேட் ஆகும். உங்களுக்கு மூனு வருசத்துல நல்ல ரிட்டர்ன் கெடைக்கும். நம்ம வாச்சா போட்ருக்கான்’ன்னு தன்னோட மார்க்கெட்டிங் உத்தியால க்ளையண்ட் புடிச்சிடுவாரு.
பஹ்ரைன்ல பாங்க், இன்சூரன்ஸ் கம்பெனில நல்ல உயர் பதவில இருக்கற ஹை நெட்வொர்த் இன்டிவிஜுவல்ஸ் அல்லாரும் இவரோட க்ளையண்ட்ங்க.
காலை ஒன்பது மணியிலர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் ஆபிஸ் வேலையா ஓடி உழைக்கிறவரு. தெனமும் கிருஷ்ணன் கோயில் சாமிய சேவிச்சிட்டு ராத்திரி ஒன்பது மணிக்கு மேல வீட்டுக்கு வந்துட்டும் அரை மணி நேரம் பூஜை, அப்பறம் சாப்பாடு. அது முடிஞ்சி தூக்கமா? இல்ல.. அதுக்கப்பறமேட்டு தந்தி டீவி, ரங்கராஜ் பாண்டே, நேர்பட பேசு, சூப்பர் சிங்கர், ரஜினி படம் எல்லாம் பாக்கனுமே!
வருசத்துக்கு ரெண்டு அல்லது மூனு தபா அமெரிக்கா பறந்துடுவாரு. கொறஞ்சது நாலஞ்சு தடவ மெட்ராசு போயிடுவாரு. ஆள்வார்பேட்டை ஆண்டவரு. ஆறேழு மாசம் இங்கயே இருந்து NRI ஸ்டேட்டசை விடாம பாத்துப்பாரு.
கிரிக்கெட் மேட்ச், ப்ளேயருங்க ரெக்கார்டு, வேர்ல்ட் கப்பு நியூஸ் எல்லமே வெரல் நுனில.
பாஸ்கி, கிரேசி மோகன், மாது பாலாஜி எல்லாரோடயும் சின்ன வயசுலர்ந்து ரோட்ல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சதுல இருந்து இப்பவும் சேப்பாக்கம் ஸ்டேடியத்துல பாஸ்கி தோள்ல கை போட்டு மேட்ச் பார்த்துட்ருப்பாரு.
ஒரு வாரமா டிவி பாக்காதவங்க அல்லது பேப்பர் படிக்காதவங்க இவரோட அரை மண்ணேரம் பேசனாக்க போதும். துருக்கி எர்டோகன் ஆட்சியிலிருந்து குஷ்பு பாஜக சேர்ந்ததின் அரசியல் பிண்ணனி வரை பிரிச்சி மேஞ்சடுவாரு.
நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள்.. னு எப்பவுமே அரட்டை தான்.
அவங்க மனைவி ஜெயந்தி எப்பவும் சாந்தமும் அமைதியே உருவானவங்க. அவங்களுக்கு மதுரை. தமிழ்நாட்டு நியூஸ அவங்களும் எப்பவும் அப்டுடேட்டா வச்சிருப்பாய்ங்க. ஆனா கணவரப்போல ஆர்ப்பாட்டமில்லாம கூலா இருப்பாங்க. இங்க ஏதோ ஒரு பார்ட்டில நாங்க எல்லோரும் சேர்ந்து உட்காந்து சாப்டுட்டு இருக்கறப்ப, ஏதோ ஒரு வஸ்துவை கொண்டுவந்து வைக்க, ஜெயந்தி அதை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டாங்க. அப்பறம் யாரோ வந்து ‘ஐயய்யோ! அது சிக்கனா இருக்கப்போகுது. செக் பண்ணீங்களான்னு விசாரிக்க, ஃபுல் காண்டாகி சாமி வந்த மாதிரி ஆடி வாஷ்ரூம் பக்கம் ஓடுனாங்களான்னு நீங்க நெனைக்கலாம். ஆனால் அவங்க ‘என்னன்னு தெரியாம சாப்பிட்டாச்சு. அது உள்ளாறயும் போயாச்சு. இப்ப தெரிஞ்சி குதிச்சி என்ன பிரயோஜனம்!’னு சொல்லி கூலாக ஒரு டம்ளர் தண்ணிய குடிச்சிட்டு நடந்தாங்க. அவ்ளோ நிதானம்!
ஒரே பையன் விக்னேஷ். அப்பாவ விட பத்தடி கூட பாய்ற அளவுக்கு கலகலப்பானவன். அமெரிக்கால படிக்கிறான்.
96ல இவரு பேச்சிலரா பஹ்ரைன் வந்தாரு. மாமனாருக்கு சீர் செலவே வைக்கல. மாதாமாதம் எக்கச்சக்கமா பிசினஸ் புடிச்சி ஆபிசில் அன்பளிப்பு அல்லது பரிசா கொடுத்த ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின்,பீரோன்னு வீடு முழுக்க சாமான்கள் வச்சிருப்பாரு.
மகாப்பெரியவா பக்தர். ஆன்மிகத்தில ஈடுபாடு ஜாஸ்தி, இறைநம்பிக்கை தான் இந்த நாட்ட நல்ல முறைல வழிநடத்தும்னு நம்பறவர். எனது நெருங்கிய இனிய நண்பர்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Sridhar Kalyanaraman

கேப்டன் நீரஜ் ராஜகோபால்

 பஹ்ரைன் கல்ஃப் ஏர் விமானத்தில் இந்தியாவோ அல்லது ஐரோப்பா பகுதி பிரயாணம் செய்ய ஏறும்போது முதலில் நான் தேடுவது காக்பிட்டில் அன்றைய விமான ஓட்டி என் நண்பர்


கேப்டன்.நீராஜ் இருக்கிறாரா என.

மாதமொரு முறை சந்திக்கும்போது கூட அந்த மாதம் அவர் உலகின் எந்த பகுதி பறப்பார் என டூட்டி அட்டவனை பார்த்து சொல்வார். ச்சே! நாம் பெங்களூரோ துபாயோ பறக்கும்போது அவர் நம் பைலட்டாக வரக்கூடாதா என விரும்புவேன். நண்பர் என்பதால் அந்த காக்பிட் உள்ளே நம்மை கூட்டிச்சென்று காண்பிப்பார் என ஒரு குழந்தைத்தனமான ஆசை எனக்கு எப்போதும் உண்டு.
அரைக்கை வெள்ளை சட்டையுடன் கழுத்தில் டை, ஸ்டைலாக பைலட் தொப்பி, குறுந்தாடி, பைலட் பிரேம்நாத் போல தொப்பை இல்லாத ஆஜானுபாகு உடல் வாகு என அழகாக இருப்பார் நீரஜ். மற்ற நாட்களில் வீட்டில் அவரை பார்க்கும்போது ஜீன்ஸ் மற்றும் ஜிப்பாவில் சாந்தமா இருக்கும் இவரா அவ்வளவு பெரிய ராட்சத விமானத்தை ரன்வேயிலிருந்து சீராக மேலே எடுப்பதும், லாகவமாக ஓட்டி விமானத்தை கீழே இறக்குபவரா என வியப்பேன்.
விடியற்காலை கிளம்பி நாலைந்து மணி நேரம் துருக்கி நோக்கி பறந்து அன்று மாலை பஹ்ரைன் திரும்பி எங்கள் மாதாந்திர நிகழ்ச்சியில் புத்துணர்வுடன் கலந்து கொள்ளும் இவரை பார்க்க வியப்பு மேலிடும். ஏழெட்டு மணி நேரம் லண்டன் பறந்து அன்று நள்ளிரவோ மறுநாள் விடிகாலையோ நாஷ்டா துண்ண வீடு வந்து சேர்வார். 24 மணி நேரத்தில் எப்போது தூக்கம், எப்போது சாப்பாடு, எப்போது தன் மனைவி குழந்தைகளுடன்(2) செலவிடுவது எப்போது குடும்பத்துடன் ஹோட்டலில் சாப்பிடலாம் என துல்லியமாக திட்டம் செய்து மாறி மாறி வரும் காலச்சக்கரத்தை இலகுவாக மேற்கொள்ளக்கூடியவர். அப்படியும் வேலைப்பளு காரணமாக சில சமயம் அதிக மணி நேரங்கள் பறக்க வேண்டி வருமாம்.
15 ஆண்டுகள் மற்றும் 15000 மணி நேரத்திற்கும் மேல் வணிக விமானங்கள் ஓட்டிய அனுபவம் பெற்றவர். சில மாதங்கள் முன் டேபிள்டாப் ஓடுபாதையில் (காலிகட்) இருந்து சரிந்து விபத்துக்குள்ளான அந்த விமானத்தை இவரே சுமார் 20 முறை அதே ரன்வேயில் இயக்கியிருக்கிறாராம். ‘’அவசர நிலை ஏற்பட்டால் ஒரு கேப்டனுக்கு முதலில் தோன்றுவது மக்களை எப்படி காப்பாற்றலாம் என்றுதான். அவர் எடுத்த முடிவு சரியா, தவறா என்று பின்னர் விவாதங்கள் நடந்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்'' என்கிறார் கேப்டன் நீரஜ்.
‘மணிக்கணக்கா பறக்கறீங்களே! அப்பல்லாம் உங்க மனநலை எப்பிடி இருக்கும் நீரஜ்!’ என வெள்ளந்தியாக கேட்கும் என்னிடம் ‘பழகிப்போச்சு ஶ்ரீதர்! நீங்க கார் ஓட்ற மாதிரியும் டிராயிங் வரையிற மாதிரி தான் நாங்களும் அனிச்சையாக விமானத்தை ஓட்டுவோம். ஆனா ரொம்ப கூடுதல் கவனத்தோட’ என சர்வ சாதாரணமாக சொல்லி பூரியை பிய்த்து சன்னாவில் முக்கி வாயில் தள்ளுகிறார்.
நெடுநெடுவென ஆறடி உயரம்.. எங்கள் நண்பர்களின் மாதாந்திர கெர்யோக்கி நிகழ்ச்சியில் மைக் பிடித்து மேடையேறினால் அசத்தலாக பாடுவார். SPB, ரஃபி சார் மற்றும் கிஷோர்தா பாடல்கள் அல்லது மனைவி பவித்ராவுடன் நல்ல கன்னட டூயட் பாட்டு பாடுவார். பவித்ராவும் கன்னடம், ஹிந்தி, தமிழ் என
அருமையாக
பாடக்கூடியவர். அம்மாவிடமே ஒட்டிக்கொள்ளும் இரண்டு வயது மகள் அழுதால் சட்டென குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே மற்றொரு கையில் மைக்குடன் பாடுவார் பவித்ரா. நீரஜ் ஸ்மியூலில் தனிப்பாடல்கள் பாடி மற்றவர்களுக்கும் அழைப்பு விடுவார். பஹ்ரைன் க்ரௌவுன் ப்ளாசா ஹோட்டலிலும் மாதாந்திர கெர்யோக்கி நிகழ்ச்சியில் பாடக்கூடியவர். தம் பிடித்து உச்ச ஸ்தாயியிலும், மாறும் வித்தியாசமான ஸ்கேல்களையும் அசால்டாடாக பாடக்கூடியவர் நீரஜ். இவரது அப்பா சினிமா பிண்ணனிப்பாடகர். சென்ற வருடம் பஹ்ரைன் வந்திருந்தபோது எங்கள் நண்பர்கள் மத்தியில் பாடினார். யப்பா! என்ன குரல்வளம்! என்னா எனர்ஜி! கிஷோர் குமார் பாடல்களை அசாத்தியமாக பாடிய இவர் ஒரு பேங்கர். ‘டெல்லி கிஷோர் குமார்’ என டெல்லியில் பிரபலமாம்.
சென்னை பறக்கும்போதெல்லாம் விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி ரோட்டில் ஏதோ ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நள்றிரவு இறக்கி விடப்பட்டு ஐந்தாறு மணி நேரங்கள் தூங்கி மறுபடியும் விமான நிலையம் செல்ல வண்டி வந்து விடுமாம். அரக்க பறக்க, சென்னையிலிருக்கும் அப்பா அம்மாவிற்கு போன் போட்டு பேசக்கூட நேரமில்லாமல் ஓடுவாராம் நீரஜ்.
அதுசரி அப்பா அம்மா என்றேனே! இருவரும் நமக்கு தெரிந்த பிரபலங்கள் தான். அப்பா திரு.KS. ராஜகோபால் (Raju Satnagari) இளையராஜா அவர்களின் இசையில் பாடிய பிண்ணனிப்பாடகர். அம்மா பிரபல செய்தி அறிவிப்பாளர் திருமதி. சந்தியா ராஜகோபால் அவர்கள்.
நேரில் பார்க்கும்போதெல்லாம் முகநூலில் எனது ஓவியத்தையும் பதிவுகளையும் ரசித்து பாராட்டும் கேப்டன் நீரஜ்! இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
ப்ரோ..! நீரஜ் ராஜகோபால்

பஞ்சநதீஸ்வரன் வெங்கடேசன் பஞ்சாபகேசன் ஐயர்..

சட்டென CA படிப்பை முடித்த பட்டய கணக்காளன். பஞ்சு எனத்தான் சுருக்கமாக அவனை விளிப்போம். காரணம் சொல்லத்தேவையில்லை.

என் நெருங்கிய நண்பர்களில் ஒருவன்..
பஹ்ரைனில் ஒரு பெரிய குழுமத்தின் அக தணிக்கையாளர் (Internal Auditor) பதவியில் இருப்பவன். இவனது முகத்தையும் அதில் தெரியும் குறும்பு புன்னகையையும் பார்த்த மாத்திரத்தில் நீங்கள் சொல்லிவிடலாம் இவனுக்கு பூர்வீகம் தஞ்சையோ திருச்சியோ என. திருச்சி ஆண்டார் தெரு பையன். ஈஆர் மேநிலைப்பள்ளி மாணவன். சரியான அரட்டை பேர்வழி. நண்பர்கள் மத்தியில் கலகலவென சிரித்து லூட்டியடிப்பவன்.
பஹ்ரைனில் சாம்பியன் நகைச்சுவை பேச்சாளர்களில் ஒருவன் பஞ்சு. ICAB (Indian Chartered Accountants Bahrain) Toastmasters Clubஇன் அங்கத்தினர்களில் ஒருவன். சங்கத்தின் தலைவராகவும் இருந்தவன். இவனது நகைச்சுவை பேச்சைக் கேட்கவே அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்வர். அனைந்து டோஸ்ட்மாஸ்டர் சங்கங்களின் வருடாந்திர பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்காமல் இறங்க மாட்டான் பஞ்சு.
பஹ்ரைன் விமானநிலையத்தில் கூடுதல் சாமான்கள் (extra baggage) மற்றும் லபான் (தயிர்) கொண்டு செல்வதில் உள்ள கெடுபிடிகளை எவ்வாறு கையாண்டான் என்பதனைப்பற்றிய இவனது நகைச்சுவைப்பேச்சு முதல் பரிசை தட்டிச்சென்றதுடன் இன்றும் இவனை ‘Laban boy Panchu’ எனவே அழைக்கிறோம்.
பிள்ளை பிராயத்தில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டில் சம்மர் க்ராப் செய்துகொள்ள அப்பாவினால் சலூனுக்கு விரட்டப்பட்ட அனுபவத்தை இவன் விலாவரியாக பேசப்பேச விலா

எலும்பு நோக சிரித்தோம். ‘பஞ்சநதீஸ்வரன் வெங்கடேசன் பஞ்சாபகேசன் ஐயர்’ என்கிற இவனது பெரிய்யய்யய் பெயரை படிக்க முடியாமல் தடுமாறிய உள்ளூர் அரபி மக்கள் மட்டுமல்ல நம் வட இந்தியர்களைப்பற்றியும் மற்றொரு போட்டியில் இவன் பேச உருண்டு புரண்டு சிரித்தவர்கள் பலர். பாஸ்போர்ட்டில் இவன் பெயரை ப்ரிண்ட் செய்ய முடியாமல் திணறிய தூதரகம், ஆஸ்பத்திரியில் இவன் பெயரை உச்சரிக்க முடியாமல் தடுமாறிய பெண் என இவனால் அவஸ்தை பட்டவர்கள் பலர்.
பஹ்ரைன் பாலைவனப்பகுதியில் குளிர்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைத்து நிறைய குடும்பங்களுக்கு இரவு வாடகைக்கு விடுவார்கள். குழந்தைகளுடன் நிறைய குடும்பங்கள் அங்கு தங்கி ஆடல் பாடல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தி மகழ்வார்கள். இது பொதுவாக எல்லா அரபு நாடுகளிலும் உண்டு. இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பஞ்சு எங்களுடன் கலந்து கொண்டாலே கிரிக்கெட் ஆட்டம்,பாட்டு என செம்ம ரகளை தான். மனைவி நித்யாவும் பையனும் இவனைப்போலவே செம்ம அரட்டை தான்.
இனிய பிறந்தநாள் காணும் பஞ்சநதீஸ்வரன் வெங்கடேசன் பஞ்சாபகேசன் ஐயர் என்கிற பஞ்சு! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

மஹாலய பித்ரு ஸ்ரார்த்தம்

 ‘ஶ்ரீதரா! நாளைக்கி தேதி 6, மஹாலயா அமாவாசை.. மறந்துடாத!’ என கணபதி சென்னையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப, பெங்களூரில் பித்ருக்களுக்கு எங்கே தர்ப்பணம் செய்வது என விஜாரிக்க ஆரம்பித்தேன்.

சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம். கருட புராணம் மற்றும் விஷ்ணு புராணத்தில் மகாளய பட்சத்தின் மகாத்மியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் நம் மூதாதையர் நம்மை ஆசிர்வதிக்கவே பிதுர் லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வருவர் என்று நம்பப்படுகிறது. அச்சமயம் அவர்களுக்கு திதி தர்ப்பணம் அளித்து வணங்கி மரியாதை செலுத்தினால் அவர்களது ஆசீர்வாதம் கிட்டுவதோடு தோஷங்கள், தடைகள், நோய்கள் நீங்கி நன்மைகள் நடக்குமாம்.
சி.வி.ராமன் நகரில் எங்கள் கட்டிடத்திற்கு எதிரே சிவன் கோவில்.. பிரம்மாண்டமான சிவன் சிலை உண்டு. அங்கே குருக்கள் ஒருவரிடம் கேட்டேன். சுத்தமான சுந்தரத்தெலுங்கில் மாட்லாடின அவர், பக்கத்தில் HAL மார்க்கெட் ரகவேந்திரா மடம் மற்றும் ஹலசூர் ஏரி அருகே மஹா கணபதி ஆலயத்திலும் செய்கிறார்கள் என தகவல் அளிக்க, காலை 8 மணிக்கு ஹலசூர் கிளம்பினேன். துணைக்கு மனைவி உஷாராணி. ஒரே மழை வேறு.
பெங்களூர் பற்றி கொஞ்சம். பெங்களூர் ரோடுகள் முழுக்க பள்ளங்கள். தவிர, ரோட்டில் வண்டி ஓட்டும்போது நொடிக்கொரு தரம் பாம்.. பாம்.. கீ.. கீ… என ஹார்ன் அடிக்கனும் என காலையிலேயே சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள் போலும். பெங்களூர் வாசிகள் சதா சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எந்த சாகர் ஹோட்டலில் நுழைந்தாலும் பொடி தூவிய மசால் தோசை, உ.வடை, சௌசௌ பாத் & காரா பாத் (உப்புமா கேசரி), காபி என வட்ட மேசையை சுற்றி நின்றுகொண்டே மொஸ்க்குகிறார்கள். திண்டி இல்லாத நேரத்தில் பாம்.. பாம் என ஹார்ன் அடித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பறந்தால் அவன் பெங்களூர்க்காரன்.
மாறி மாறி காங்கிரசும் பாஜகவும் ஆட்சி செய்தும் பெங்களூரில் பாலங்கள் பற்றாக்குறை, சீரான சாலைகள் இல்லை, சரியான உள்கட்டமைக்கப்பட்ட நகரமாக இல்லாமல் பழைய ஏரிகளை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டிடங்கள். மார்வாடி, பஞ்சாபி, பிகாரி என எங்கு பார்த்தாலும் லெக்கீஸ் மற்றும் 3/4 பேண்ட் அணிந்த வட இந்தியர்கள். கூடவே சங்கிலியுடன் நாய் குட்டிகள். பாம்பே லஸ்ஸி, குல்ஃபி, தெருவுக்கு பத்து பேக்கரிகள், ஹாட் சிப்ஸ் கடைகள், கம்பியில் சுற்றும் செக்கச்செவேல் என சிக்கன் கிரில்லர்கள். பானி பூரி விற்றால் அடுத்த சில வருடங்களில் ஹோரமாவு பகுதியில் நிலம் வாங்கி விடலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நம் இஷ்டத்திற்கு எந்த மொழி பேசினாலும் அதே மொழியில் பதிலளிக்கிறார்கள் பெங்களூர்வாசிகள். phone மாடி, type மாடி, check மாடி, enquire மாடி என சுலபமாக நாம் கன்னடம் பேசலாம், மாடியை சேர்த்துக்கொண்டு.
ஹலசூர் ஏரி அருகே கார் நிறுத்தத்தில் காரை போட்டு விட்டு சாலையை கடந்து லேக் வ்யூ மஹாகணபதி கோயில் வந்தடைந்தோம். நல்ல கூட்டம். அரிசி மாவு, எள், புஷ்பம், பலம், மஞ்சள் குங்குமம் என 180 ரூபாய்க்கு ஒரு கூடை வாங்கி, கோவிலருகே மேடையில் உட்கார்ந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரிசி மாவில் நீர் விட்டு பிசைந்து எள் தெளித்து மஞ்சள் குங்குமம் தூவிய பிண்டங்களை வாழையிலையில் வைத்து வரிசையில் சேர்ந்துகொண்டோம். ‘மொத்தம் எத்தினி உருண்டைங்கோ என யாரோ கன்னட தமிழில் கேட்க, மற்றவர் மூனு பெருசு, மூனு சின்னது என விளக்க ‘ஆமாவா?’ என ஏக காலத்தில் மூன்று பேர் கத்தி அரிசி மாவை பிசைய ஆரம்பித்தார்கள். பிஸ்லேரி பாட்டிலில் தண்ணீர் பிடித்து ஒருவருக்கொருவர் தண்ணீர் பாட்டிலை பகிர்ந்து கொண்டு பிண்டங்கள் செய்ய, யாரோ ஒருவர் படாரென தண்ணீரை மாவில் கொட்டி தோசைக்கு மாவு கரைத்த மாதிரி… அசடு வழிந்தார்.
மொத்தம் 4 அந்தணர்கள் பெரிய மேடைகளில் அமர்ந்து மந்திரங்கள் சொல்ல, வரிசையில் வந்தவர்கள் ஒவ்வொருவராக எதிரே அவர் முன் உட்கார்ந்து சுமார் பத்து நிமிடங்களில் பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தி தம் கடமை முடித்து வெளியேறினார்கள். அடுத்து எங்களது முறை. எங்களுக்கு முன்னே இருந்த ஒருவர் மந்திரத்தை கவனிக்காமல் வரிசையில் உள்ள மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டும், தன் கடிகாரத்தை பார்த்துக்கொண்டும், வாத்தியார் ‘இங்க கவனிங்க.. கோத்ரம் சொல்லுங்கோ.. அப்பா இருக்காரா?’ என கேட்க, மேற்படி ஆசாமி ‘ம்..? என்னது?’ என விட்டேத்தியாக கேட்க, சூரீர் என வந்ததே கோபம் வாத்தியாருக்கு. ‘ நீங்கள்ளாம் எதுக்கு பித்ரு கார்யம் பண்ண வரனும்? பவித்ரத்த அந்த விரல்ல போடச்சொன்னா சுண்டு விரல்ல மாட்டி, பணம் கட்டுன ரசீதையும் பிண்டத்துக்குள்ள வச்சி உருட்டி, தாத்தா பேரே தெரீல..எங்கர்ந்து கொள்ளு பாட்டன் பேரு தெரீயப்போவுது’ என்றவுடன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவரசமாக தாத்தா, பாட்டி பேரெல்லாம் சொல்லி பார்த்துக்கொண்டேன்.
‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’ என கணபதியை வணங்கிய பின் ஆசமனம் செய்து பவித்ரம் தரித்து ‘சுக்லாம்பரதம் விஷ்ணும்….’ என கடகடவென மந்திரங்கள் சொல்லி, ‘ஏ ஷாம் ந மாதா.. ந பிதா.. ந ப்ராதா.. ந சபாந்தவஹா’ என முன்னோர்களை நினைத்து கூடவே மந்திரம் சொல்லச்சொல்லி, பிண்டங்களில் ஜலம் தெளித்து, எள் இரைத்து முடித்து வைத்தார்.
கோவிலுக்கு வெளியே வந்து எதிரே ஏரியில் பிண்டங்களை கரைத்தோம். முனிசிபாலடி சிப்பந்திகள் நின்றுகொண்டு பிண்டங்களை மட்டும் நீரில் போடச்சொல்லி, மற்ற வாழையிலை, புஷ்பங்களை தனியாக ஒரு தொட்டியில் போடச்சொன்னர்கள்.
திருப்திகரமாக திதி தர்ப்பணம் முடிந்து எதிரே ஷாந்தி சாகரில் தோசை காபி வெட்டி விட்டு கன்னட ‘ராகி முத்தே’ (நம்மூர் களி) செய்யும் குக்கர் வங்க இந்திரா நகர் பக்கம் வண்டியை செலுத்தினோம்.
வருடந்தோறும் முன்னோர்களை மறவாது இக்கடமை ஆற்ற, வழிகாட்டலுடன் என்னை அறிவுறுத்தும் பால்ய நண்பன் கணபதிக்கு கோடானு கோடி நன்றி..