ஃபிரான்ஸும் ஸ்பெயினும் உரசிக்கொள்ளுமிடத்தில் உள்ள அழகிய பெர்பியான் (Perpignan) நகருக்கு அலுவல் நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அந்நகரம் பிரான்ஸில் இருந்தாலும் பாரிஸ் வெகு தொலைவு. ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து இரண்டே மணி நேர பஸ் பிரயாணம் தான். கூடவே மனைவி
Usharani Sridhar .
நாங்கள் தங்கிய மெர்க்யூர் விடுதி முழுக்க பெண்களால் இயக்கப்படுவதால் அங்கங்கே பளிச்சென மலர் கொத்துகள், வண்ண விளக்குகள், சுவர்களில் பிங்க் வர்ணம். வரவேற்பறை பெண்கள் பகுதி நேர சிப்பந்திகளாம். கல்லூரியில் படிக்கும் கீர்த்தி சுரேஷ்கள். மலர்ந்த முகம், இனிமையான பேச்சு. சின்ன குழந்தைகள் பென்சிலை செங்குத்தாக இறுக்கி பிடித்து முட்டை முட்டையாக எழுதுவது போல ஃப்ரெஞ்ச் மொழியில் அவர்கள் எழுதுவதை ரசித்தேன் (கூட இருந்த உஷாவும்தான்).
பெர்பியான் கிட்டத்தட்ட கரூர் மாதிரி. எக்கச்சக்கமாக பணம் புழங்கும் சிறிய வியாபார நகரம். உலகின் மற்ற பாகங்களுக்கு பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்கிறார்கள். எங்கும் பச்சை பசேலென ஊரே அழகு. நகருக்குள் விபத்தே ஏற்பட முடியாத அளவு நூற்றுக்கணக்கில் சிக்னல்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் வளைந்து வளைந்து செல்லும் குறுகிய சாலைகள். வாகனங்கள் நாற்பது கி.மீ வேகத்தில் அசைந்து மெதுவாக செல்வது மறக்க முடியாத அனுபவம். பஹ்ரைனில் அதிகம் போனியாகாத சிட்ரோயென், ஓபல், ரிநோ மற்றும் வோக்ஸ்வேகன் கார்கள் இங்கே ரோடு முழுக்க.
பல்வேறு உணவுப்பொருட்களை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பஹ்ரைன் சந்தை, அரசாங்கம், ராணுவம் மற்றும் அமெரிக்க கடற்படைக்கு விநியோகிக்கிறது எங்கள் நிறுவனம். நாங்கள் இறக்குமதி செய்யும் நெதர்லாந்து பால் பவுடர், பாகிஸ்தானிய/இந்திய பாசுமதி அரிசி, மலேஷிய உணவு எண்ணெய், இந்திய மற்றும் ஜெர்மானிய சர்க்கரை, எகிப்திய பாலாடைக்கட்டி (cheese) போன்ற பொருட்கள் இங்கு அதிகம் பாவிக்கப்படுகின்றன. அதனால் நிறைய food exhibition களுக்கும், புதிய தரமான உணவுப்பொருட்களை ஆ(பீ)ராய்ந்து தேடியும் நான் செய்யும் பயணங்களில் இதுவொன்று.
நான்கு நாட்களில் வேலை முடிந்து பெர்பியானிலிருந்து பார்சிலோனாவிற்கு இரண்டு மணி நேர பஸ் பயணம். சீராக வெண்ணை போன்ற சாலையில் பஸ் ஊர்வது போல இருந்தாலும் சுமார் 120 கி.மீ வேகமே தெரியவில்லை. இது போல நெடுந்தொலைவு பயணமென்றால் உறவினர்கள் நண்பர்கள் பற்றி மனைவியுடன் பேசிக்கொண்டு போவதால் பயணக்களைப்பு தெரிவதில்லை. அதிலும் குடும்ப அரசியல் பேச்சென்றால் போதும், பஸ்ஸாக இருந்தாலும் உஷா சம்மனங்கால் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவாள். மாலை இருள் மெல்ல சூழ, தூரத்தில் மங்கியதோர் நிலவினிலே பார்ஸிலோனாவை கண்டேன்.
ஐரோப்பாவின் பார்சிலோனா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கால் பந்தாட்டமும் ஒலிம்பிக் போட்டியும் தான். எஸ்பானியா (ஸ்பெயின்) நாட்டின் முக்கிய நகரமான பார்சிலோனா சமீபத்தில் தன்னாட்சி பெற்ற காட்டலூனியாவின் தலைநகரமாகும். ஐரோப்பியாவின் பெரிய விமானநிலையங்களில் பார்சிலோனா ஒன்றாம்.
ஸ்டெஃபி க்ராஃப் சாயலில் செம்பட்டை கேசத்துடனிருந்த விடுதிப்பெண் எங்களுக்கு அறையை ஒதுக்க, இரவு 7 மணிக்கு பெட்டியை போட்டு விட்டு மனைவி கெட்டிலில் போட்டுக்கொடுத்த பச்சை தேநீர் மற்றும் பஹ்ரைனிலிருந்து கொண்டு சென்ற க்ராய்ஸ்ஸோன் பசியை ஓரளவு அடக்க, விடுதியை விட்டு வெளியே வந்து காலாற தெருவில் நடந்தோம்.
நிறைய சர்தார்ஜிகளை பார்க்க முடிந்தது. பஞ்சாபி கவுரின் சிறிய கடை (convenient store)
உள்ளே நுழைந்து சாப்பிட பக்ஷ்ணம் தேடினோம். Ready to eat பஞ்சாபி கறி, புலாவ் என டெட்ராபேக் உணவு பொட்டலத்தை கொதிக்கும் நீரில் அப்படியே போட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து சாப்பிட்டால், மறுநாள் dரிப் ஏற்றும் அளவிற்கு வயிறு உபாதை வருவது சாத்தியம்.
வளைகுடா நாடுகள் போல இல்லாமல் ஐரோப்பிய விடுதிகளில் எப்போதும் சிறிய அறைகள் தாம். அறையில் கெட்டில், காபி, டீ, சர்க்கரைப்பைகள் இலவசம். ஆனால் பக்கத்தில் சிறிய ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள சீமைச்சாராயம், பீர், வறுகடலை, பிஸ்கோத்து வகையாக்கள் எல்லாம் தொட்டு பார்த்தாலே காசு. அழகான சிறிய குளியலறை. நான்கு பக்கமும் கண்ணாடி. ச்சீ! நமக்கே வெட்கமாக இருந்தது. கழிவறையில் டிஷ்யூ பேப்பர் தான். அரை லிட்டர் காலி பாட்டில்கள் ஏழெட்டை மனைவி எதனால் பெட்டியில் வைத்திருந்தாள் என இப்போது புரிந்தது.
பார்சிலோனாவை சுற்றிப்பார்க்க மொத்தம் இரண்டே நாட்கள் இருந்தன. பொதுவாக டூர் ஏஜென்ட் போன்றவர்கள் மூலம் நான் ஊரை சுற்றிப்பார்ப்பதில்லை. செலவு அதிகம். நாமே உள்ளூர் வரைபடம் மற்றும் கைப்கேசியில் கூகிள் மேப் வைத்துக்கொண்டு டாக்சி, மெட்ரோ ரயில் அல்லது ‘ஹாப் இன் ஹாப் ஆஃப்’ என சுற்றிக்கொண்டிருக்கும் சைட் சீயிங் ரெட் பஸ்களை வேண்டுமிடத்தில் பிடித்து மொத்தம் 18 ஸ்தலங்களில் நமக்கு பிடித்த இடங்களில் மட்டும் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் அதே பஸ் பிடித்து திரும்பி வந்து விட்டோம்.
நகரில் அங்கங்கே பஸ்ஸிலோ ரயிலிலோ மாலிலோ உணவகங்களிலோ அகஸ்மாத்தாக பேசிக்கொண்டிருக்கும் கணவன் மனைவியர் திடீரென மூடு வந்து பச்ச்ச்சக்கென உதடுகளை கவ்வி உறிஞ்சி.. யப்பா! பார்க்கும் நமக்கே உதடு வலித்தது. லைட்டா பொறாமையும் கூட. எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஒரு ஜோடி மட்டும் இன்னும் ‘லிப்லாக்’கில் இருக்க அந்த பெண் அவனை விடுவிக்க முயல ‘நம்மவர்’ விடுவதாக இல்லை.
கேடலூனியா அரண்மனை, சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் (கதீட்ரல்), உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட மைதானம் (camp nuo), ஒலிம்பிக் ஸ்டேடியம் என ஒரே நாளில் நிறைய இடங்களை சுற்றிப்பார்த்தோம்.
மறுநாள் விலா டி’கார்ஸியா என்ற பகுதிக்கு டாக்சி பிடித்து ‘ஸ்வாகதம்’ இந்திய உணவு விடுதி வந்தோம். குல்ஷன் குரோவர் சாயலிலிலிருந்த லூதியான்வி மேலாளர் ‘ஹாஞ்சி நமஷ்கார்’ என வரவேற்றார். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலோர் எஸ்பானியரே. நாங்கள் வாலன்ஸியா ஆரஞ்சு பழச்சாறு, லார்டு நெல்சன் புதினா எலுமிச்சை தேநீருடன் வெறும் பருப்பு சாதம் மட்டுமே சாப்பிட முடிந்தது. மீதி ஐட்டங்கள்?.. ஏற்கனவே சொன்னமாதிரி மறுநாள் dரிப் தான். அந்தப்பக்கம் ஒரு டியூனிசிய தாத்தா தந்தூரி சிக்கனையும் காந்தா பஜியாவையும் கபளீகரம் செய்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, மேலே உதித் நாராயணும் அல்கா யக்னிக்கும் கால் கால் என கத்திக்கொண்டிருந்தார்கள்.
மாலை ‘லா ரம்லா’ (Las Ramblas) தெருவுக்கு வந்த போது பிரமிப்படைந்தேன். தெருவின் இருபுறமும் ஏராளமான கடைகள். தெருவின் நடுவே ப்ளாட்ஃபாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓவியர்கள். கரிக்கட்டி (charcoal), பென்சில், மார்க்கர் கொண்டு விதவிதமாக வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். சுமார் 5 யூரோக்களுக்கு நம் உருவப்படத்தை சில நிமிடங்களில் வரையும் காரிகேச்சரிஸ்ட்டுகள். ஒருவர் கருப்பான பொடியை ப்ரஷ்ஷில் தொட்டு பேப்பரில் பதித்தவுடன் கை விரல்களால் பூசி பூசி வடிவமைத்த ஓவியம் பிரமிப்பாக இருந்தது.
கடைசியாக ஒருவரிடம் போனோம். அவர் எங்களை எதிரே நிற்க வைத்து, கையில் வைத்திருந்த கருப்பு வெள்ளை தாளை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி சில நிமிடங்களில் எங்கள் இருவரின் நிழற்படத்தை அற்புதமாக வெட்டி வடிவமைத்து கொடுத்தார் (படம் பார்க்க!)
அதே தெருவில் ISKCON கோயில் இருப்பது கேள்விப்பட்டு இடத்தை விஜாரித்தோம். பத்து கட்டிடங்கள் தள்ளி பிளாசா ரியால் (Royal Plaza square)இல் கோயில் இருப்பதாக பங்காலி இளைஞன் சொன்னான். பிளாசா ரியால் மிகப்பெரிய சதுர வளாகம். கீழ் தளத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இருட்டான சாராய மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகள், கண்ணாடி குவளையில் மொந்தை மொந்தையாக சாராயம் பருகும் லெபனீய பெருசுகள், அலட்சியமாக ஹெனிக்கன் பியர் கேனை திறந்து வாயில் கவிழ்த்து நுரையைத்துடைக்கும் அரேபிய இளைஞர்கள்.. பின்னால் ஈனசுரத்தில் ஜியார்ஜ் மைக்கலின் ‘கேர்லெஸ் விஸ்பர்’. அங்குமிங்கும் ஓடும் துக்குனியூண்டு அரை நிஜார் பிலிப்பினோ பணிப்பெண்கள்.
மேலே முதல் தளத்தில் உள்ள வீடுகள் ஒன்றில் கோயிலாம். படிகளில் ஒரே இருட்டு. தட்டுத்தடுமாறி படியில் ஏறி இரும்பு கேட் ஒன்றின் முன் நின்றோம். அருகே அழைப்பு மணி மாதிரி தெரிந்தது. இருட்டில் தடவி மணியை அழுத்த ஒரு நிமிடம் கழித்து கர்ரர்ர்ரென இரும்பு கேட் திறந்தது. பயந்துகொண்டே கேட் கதவை திறந்து உள்ளே கால் எடுத்து வைக்.. ‘தொபக்’கென் பள்ளம். நல்ல வேளை.. கீழே விழவில்லை. ‘இதி ஒத்து மனக்கு.. பயங்கா உந்தி’ என உஷா தயங்க, நான் அவளை இழுத்துக்கொண்டு இருட்டில் முன்னேற, வெளிச்சமில்லா தாழ்வாரத்தில் மிகப்பெரிய கனமான மரக்கதவு. சக்தி முழுவதையும் திரட்டி க்ற்ற்றீச்சென கதவை தள்ள உள்ளே இஸ்கான் பிரபு ஒருவர் கருப்பு சால்வையை போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியார் ஜப்பானிய கோவில் உள்ளே நுழையும்போது முக்காடு போட்டு குத்த வைத்து உட்கார்ந்து கண்களை உருட்டிபடி ‘தோஷிகா, கிமோகா’ என ரகசிய வார்த்தைகள் சொல்லும் தெற்றுப்பல் நம்பியார் நினைவுக்கு வந்தார்.
‘என்ன ப்ரபுஜி! கோயிலுக்குள்ளே வருவதற்கு இவ்வளவு கட்டுப்பாடா? பாஆஆன்னு கதவை திறந்து வைக்கலாமே!’ என நான் கேட்க முக்காடை விலக்கிய நம்பியார் பிரபு அமைதியாக சொன்னது: ‘இது அமைதியான ஊர்னு நினைக்காதீங்க பிரபு!. ஐரோப்பா முன்ன மாதிரி இல்ல. அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா ன்னு எல்லா நாட்டுக்காரனும் இங்க இருக்கான். அரபி, பிரெஞ்சு, எஸ்பானிய, கேடலான் மொழி சகஜமா பேசுவானுங்க. தீவிரவாதி யாருன்னே கண்டு புடிக்க முடியாது. கல்லூரி பேராசிரியரா இருப்பான். கால்நடை மருத்துவராவும் இருப்பான். திடீர்னு தாக்குதல் நடத்துவான். இடுப்புல வெடிகுண்டு பெல்ட்டோட கூட்டத்துல புகுந்து துப்பாக்கில சுடுவது, போலிஸ் புடிக்க வந்தா வெடிகுண்டை ட்ரிக்கர் பண்ணி தானே அபீட் ஆயிருவான். தற்கொலை அவங்களுக்கு தக்காளி சோறு மாதிரி. அவங்களுக்கு அமைதியை குலைச்சி அப்பாவி மக்களை கொல்லனும். உங்கள சிசி டீவில பாத்தாவுட்டுத்தான் கதவ தொறந்தோம். ஹரே கிருஷ்ணா!’
அவர் சொன்னது முற்றிலும் சரி என்பது அடுத்த சில நாட்களில் பஹ்ரைன் வந்ததும் தெரிந்தது. கோயில் இருக்கும் அதே ‘லா ரம்லா’ பகுதியில், அந்த ஓவியர்கள் தங்கள் பிழைப்புக்காக தம் படைப்புக்களை விற்றுக்கொண்டிருந்த அதே தெருவில், உஷாவை நிற்க வைத்து அவளது ஓவியத்தை வடித்த அதே இடத்தில் தீவிரவாதி ஒருவன் படு வேகத்தில் ரினோ (Renault) வேனை கூட்டத்தினர் மீது மோதி சுமார் 100 பேரை காயப்படுத்தி, 14 பேரை அநியாயமாக கொன்ற பின், நிதானமாக நடந்து போய் மற்றொரு ஃபோர்டு காரை திறந்து காரோட்டியை கத்தியால் குத்தி கொன்று, இறந்த உடலோடு காரை ஓட்டிச்சென்று ஒரு போலீஸ் செக் போஸ்ட்டை இடித்து விட்டு மறைந்து, அடுத்த நான்கு நாட்களில் போலீசாரால் சுடப்பட்டு இறந்தானாம்.
இறந்த 14 பேரில் தன் பெற்றோருடன் 6 வயது சிறுவனும். அதே நேரத்தில் அவனது 5 வயது தங்கை வேறு பகுதியில் பாட்டு வகுப்பு முடிந்து மற்றொரு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாளாம்..
ஹரே கிருஷ்ணா!