Thursday, August 25, 2016

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்...


23 வயதில்... இன்டர்வியூ அழைப்புக்கடிதம், மார்க் ஷீட்டுக்கள் அடங்கிய கவரை கக்கத்தில் வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி மெஸ்ஸில் டிபனை முடித்துக்கொண்டு, நந்தனம் பஸ் பிடித்து ஒரு கம்பெனி எம்.டி. முன் அசால்ட்டாக கவரை திறந்தால் கவர் காலி! 'சார்! இந்த பேப்பரெல்லாம் எங்கியோ விழுந்துடுச்சு போல..' சொல்லும்போதே அழுகை. ' கம்பெனியின் கணக்கு வழக்குகளை இந்த லக்ஷ்ணத்தில் தான் பாத்துப்பியா?' மாதிரியான எம்.டியின் பார்வை. திரும்ப பைக்ராஃப்ட்ஸ் ரோட்டுக்கு பஸ்ஸில் வந்திறங்கி பார்த்தால் சைடோஜி மெஸ் அருகே ரோட்டில் ஆங்காங்கே கிழிந்த காகிதங்கள், with reference to your application போன்ற அரைகுறை வாசகங்களோடு. இதுதான் என் முதல் இன்டர்வியூ.
ஹைதராபாத்தில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ப்ராகா டூல்ஸ் கம்பெனி இன்டர்வியூ. சென்ட்ரல் ஸ்டேஷனில் பர்த் என்று சொல்லி எழுபது ரூபாயை வாங்கிக்கொண்டு ஒரு பெட்டியில் உட்காரவைத்துவிட்டு போர்ட்டர் மறைந்தான். பித்ரகுண்டாவில் TTE நள்ளிரவு 2 மணிக்கு இறக்கமே இல்லாமல் டிரெயினை விட்டு இறங்கச்சொல்ல, கெஞ்சி அழுது, தூங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் காலருகே சீட்டின் நுனியில் உட்கார்ந்து மீதி இரவைக் கழித்தேன். இரண்டே காலியிடங்களுக்கு நாங்கள் 80 பேர். கொலைப்பசி. மதியம் இரண்டரை வரை சாப்பாடு இல்லை. டிஃபென்ஸ் காண்டீனில் குருமா வாசனை. மூன்று மணி வாக்கில் பியூன் வந்து தேர்வான இரண்டு பேர் மட்டும் காண்டீனுக்கு போகலாம், மற்றவர்கள் காஷியரிடம் ரயில் கட்டணத்தை பெற்று திரும்பிச்செல்லலாமென அறிவித்தான்.
மத்தியப்பிரதேசம் இந்தோர் நகரிலிருந்து தேவாஸ் என்ற ஊருக்கு ஒரு மணி நேர பஸ் பிரயாணம். புழுதி படித்த செம்மண் சாலை தாண்டி H&R Johnson எனப்படும் பிரபல டைல்ஸ் கம்பெனியின் ஃபாக்டரி மானேஜரின் அறை. ICWA படித்திருந்த மலையாளி சேட்டன். பின் கழுத்து வரை தூக்கி படிய வாரிய முடி, கம்பளிப்பூச்சி மீசையின் ஊடே எட்டிப்பார்க்கும் பான்பராக் காவிப்பற்கள், டேபிள் முழுவதையும் பெருவாரியாக ஆக்கிரமித்திருந்தார். அத்தனை பெரிய சரீரத்தை துக்குனூன்டு சஃபாரி உடைக்குள் திணித்திருந்தார். 'இந்த இன்டர்வியூவுக்கு இன்று காலை எத்தனை மணி நேரம் படித்தாய்' என தன் சென்னித்தலா மூக்கை நீவியபடி கேட்டார். (இன்டர்வியூவுக்கா! படிக்கற காலத்திலேயே நாங்க புக்க தொடமாட்டோமேய்யா!) ஆறு மணி நேரம் படித்திருக்க வேண்டுமாம். சூடாக சாய் கொடுத்து நிறைய அறிவுரைகளோடு அனுப்பி வைத்தார்.
பம்பாய் நாரிமன் பாய்ன்ட் மித்தல் கோர்ட்.. சீயட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கம்பெனி பெங்காலி மானேஜரின் எதிரே அமர்ந்தவுடன், 'உன் கழுத்தில் டை இல்லியே! You have come to meet senior officials.. don't you know?' என முகம் சுளித்தவர், யாரோ கூப்பிடுகிறார்களென எழுந்து அந்தப்பக்கம் போய், அடுத்த ஒரே நிமிடத்தில் வந்து அமர்ந்தவர் என்னைப்பார்த்ததும் கொஞ்சம் ஆடிப்போய் விட்டார். காரணம் அப்போது என் கழுத்தில் டை இருந்தது. மனுஷன் லேசாக குழம்பிப்போன மாதிரியிருந்தது. பாண்ட்டில் சுருட்டி வைத்திருந்த டை அது. அடுத்த அரை மணியில் அந்த கட்டிடத்தின் கீழே ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் பாவ் பாஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் பூரிபாஜியுடன் நின்று கொண்டிருந்த என்னை சட்டென பார்த்து அறண்டு போனார். காரணம் இப்போது என் கழுத்தில் டை இல்லை! அவரிடம் வேலை கிடைத்திருக்க சாத்தியமே இல்லை.
இந்தோரில் 60 வயது கம்பெனி செக்ரடரி, கன்னடம் பேசும் தமிழ்க்கார ஆனந்த ராவ் தனது க்ளையன்ட்டுக்காக என்னை அவர் வீட்டில் வைத்து இன்டர்வியூ செய்ய ஆரம்பித்தார். சிகரெட்டை வெளியே எடுத்து டப்பாவில் தட்டி உதடுகளில் சொறுகி பத்த வைத்து, பக்க வாட்டில் மேகக்கூட்டங்களாக புகையை அலட்சியமாக ஊதிக்கொண்டே அவர் என்னைப்பார்த்த அதே நேரத்தில், என் கண்கள் அந்தப்பக்கம் கமகம சிந்தால் சோப்பு வாசனையுடன் காபி கொண்டு வந்த அவரது மகள் மீது. துவைத்து பிழிந்து காயப்போட்டு அனுப்பினார் என்னை.
எத்தனை அவமானங்கள், ஏளனப்பேச்சுக்கள், பதில் சொல்ல முடியாத கேள்விகள்..! 'நீ எங்க கூட ரொம்ப நாள் இருப்பேன்னு என்ன நிச்சயம்?' ( நீ மொதல்ல இங்க ரொம்ப நாள் இருப்பியா என கேட்கத்தோனும்).
பம்பாயில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் கம்பெனி.. சாரங்கபாணி (60) என்கிற சீனியர் வைஸ் பிரெசிடென்ட் எதிரே நான்..
'என்ன மாதிரி வேலை செய்வாய்?'
'பத்ரிக்கு ஒத்தாசையா இருப்பன் சார்'
'அதாரு பத்ரி?'
'உங்களுக்கு கீழே இருக்கற அசிஸ்டன்ட் மானேஜர் சார்.. பயோடேட்டாவ அவர் மூலமாத்தானே கொடுத்தேன்!'.
அடுத்த வாரம் பத்ரியே வேலை தேடிக்கொண்டிருந்தான்.
பம்பாய் போன்ற நகரங்களில் நேர்முகத்தேர்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென திருச்சியிலிருந்து சென்ற எனக்கு யார் சொல்லித்தருவது? அந்த அரை மணி நேரத்தில் நமது திறமை, அறிவுத்திறன், நேர்மை, ஒழுங்கீனம் எல்லாவற்றையும் மதிப்பிட முடியுமா! அநேகமாக எல்லா இன்டர்வியூக்களிலும் என்னுடைய சொதப்பல்கள், திணறல்கள் மற்றும் இம்மச்சூரிட்டி அப்பட்டமாக தெரிந்திருக்கும் என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. 24 வயது பையனிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்!
எட்டு வருடங்கள் சின்ன பதவிகளில் இருந்த எனக்கு அடுத்து உதவி மேலாளர், சீஃப் அக்கவுன்டன்ட் போன்ற பதவிக்கான இன்டர்வியூக்கள் மிகவும் கடினமாக இருந்தது உண்மை.
ஆனால் இந்த இன்டர்வியூ மிகவும் வித்தியாசமானது. பம்பாய் கொலாபா பகுதியில் தாஜ் ஹோட்டல். மேலே போய் ஒரு ஸுய்ட் (suite) கதவை தட்ட, அரபி உடையிலிருந்த பஹ்ரைன் கம்பெனி சேர்மன் கதவை திறந்தார். ஏழெட்டு நிமிடங்கள் கரிக்குலம் விட்டேயை பொறுமையாக படித்தார். 'ஆக்ச்சுவல்லி..86ல நா பாம்பேக்கு வந்தவுன்ன..' என ஆரம்பித்த என்னை தடுத்து, உன் அப்பா என்ன செய்கிறார்.. எத்தனை பெரிய குடும்பம் உங்களுடையது.. உன் சகோதரர்கள் என்ன செய்கிறார்கள்.. மாதாமாதம் அப்பாவிற்கு பணம் அனுப்புகிறாயா' போன்ற கேள்விகள் அவர் கேட்க.. 'ஓ..மாசம் அஞ்சாந்தேதி கன்ரா பாங்க்ல டிராஃப்ட் எடுத்து பக்கத்துலயே ஹெட் போஸ்டாபிஸ் போ..' மீண்டும் என்னை பேசவிடாமல் தடுத்து .. 'அதெல்லாம் இருக்கட்டும் .. எட்டு வருட அனுபவமும் சீ.ஏ. படிப்பும் எனக்கு பெரியதல்ல. 6 மாதத்தில் வேலை கற்றுக்கொள். பொய் பேசக்கூடாது, நேர்மை அவசியம். உன்னை ரெக்கமன்ட் செய்தவர் நல்ல மாதிரியாக சொல்லியிருக்கிறார்' என்றார். கொஞ்சம் பேச்சைக்குறைக்கனும் என சொல்லுவாரென எதிர்பார்த்தேன்.
'வந்து.. சார்! ஃபேமிலி விசா வேணும், பின்ன.. ஃபர்னிஷ்டு வீடு கொடுக்கனும்.. ஏன்னு கேட்டாக்க, வைஃப் தனியா ஒன்ற வயசுப்பையன வச்சுகிட்டு காரைக்குடி பக்கம்'...
மறுபடியும் கட் செய்தார் என்னை..(முகம் செவந்திடுச்சு) ...
'இந்தா..என் செக்ரட்டரி நாயரின் கார்டு. உனக்கு வேண்டியதை எல்லாம் அவரிடம் கேட்டுக்கொள். அப்ப கிளம்பறயா!' என முடித்துக்கொண்டார். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் மாதிரி நான் பில்டப் கொடுக்க அவரும் தே.சீனிவாசன் மாதிரித்தான் இருந்தார்.
அடுத்த வாரம் பஹ்ரைனுக்கு ஃப்ளைட் டிக்கெட் அனுப்பினார்கள். அது தான் என் கடைசி இன்டர்வியூ. அப்புறம் இந்த 22 வருடத்தில் நான் வேறு வேலை தேடவில்லை.

என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!

கைல ஒரு பைசா இல்லாமெ சாயங்காலம் சைக்கிள்ள மெயின்கார்டு கேட் பக்கம் போனா நந்தி கோயில் தெரு ஐயங்கார் பேக்கரில விஜிடபிள் பஃப்ஸ், நேசே காஃபி பாரில் டீ வாங்கிக்கொடுக்கும் டவுன் நண்பர்கள்..
அப்பா கையில் காசில்லாத நேரத்தில் புத்தகங்கள் வாங்க பணம் கொடுக்கும், அவசர ஆத்திரத்திற்கு உதவும் ஆத்ம நண்பர்கள்..
ஃபைனல் பரிட்சைக்கு முன் இன்டர்னல் ஆடிட்டர் போன்ற வேலைகளுக்கு இன்டர்வியூ போகும்போது, சிக்பேட் பஸ் ஸ்டாண்டு வந்து நம்மை கூட்டிச்சென்று தம் பாச்சிலர்ஸ் லாட்ஜில் தங்க வைத்து, மெஸ் சாப்பாட்டுடன், பிரிகேடியர் ரோட்டில் 'ஸ்டோன் வாஷ்' சட்டை வாங்கித்தந்து திரும்ப அண்ணா பேருந்தில் உட்கார வைத்து திருச்சி அனுப்பும் 'ஆமாவா' நண்பர்கள்..
அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் (AAO) பதவிக்கு இன்ஷூரன்ஸ் பரிட்சை எழுத மதுரை போனால் மாலை சினிமா கூட்டிப்போய், நைட்டுக்கடை பரோட்டா வாங்கி கொடுத்து, 'மாப்ள! இது திருச்சி இல்ல.. மதுர..அவள அப்பிடி பாக்காத..கொண்டேபுடுவாங்கடி' என எச்சரித்து, தான் மட்டும் பக்கவாட்டில் சைட் அடிக்கும் லோக்கல் நண்பர்கள்...
தன் குஜிலித்தெரு வீட்டு மாடியில் கீத்துக்கொட்டாய் போட்டு, சி.ஏ. பரிட்சைக்கு கம்பைண்ட் ஸ்டடீஸ் படிக்க அழைத்து, பாதி நேரம் சிம்லா ஸ்பெஷல், கைதியின் டயரி பற்றி பேசி, 'டேய் என் பேண்ட் ஒன்னு டைட்டாயிடுச்சு.. போட்டுப்பாரு மாப்ள!' என அர்த்தராத்திரியில் 'ட்ரயல்' பார்த்து மறுநாள் காலை டீயும் டிபனும் கொடுத்தனுப்பும் ஃபாமிலி டைப் நண்பர்கள்...
காஜாமலை காலனி வீட்டில் 'ஹோல்டிங் கம்பெனி அக்கவுன்ட்ஸ்' படிக்க நாம் போகும்போது, நம் அவசர தேவை கடனுக்கு பணம் கொடுக்க, ஈவியார் காலேஜ் பொருளாதார பேராசிரியரான அப்பாவிடம் புக்கு வாங்க பணம் வாங்கி நம்மிடம் ரொட்டேஷன் விடும் ஃபைனான்சியர் நண்பர்கள்..
'ஜெர்மணியா போறீங்க..டஸ்ஸெல்டார்ஃபா? அங்கதான் என் அக்கா ராஜி இருக்கா.. ஏர்போர்ட் வருவா.. அவாளோடயே நீங்க தங்கிக்கலாம்' என சொன்ன கையோடு தங்கைக்கு வாட்ஸப்பும் அடிபொளி நண்பர்கள்...
'உஷா! ரெண்டாவதும் பையனா? எங்க! ஜிதாஹ்வ்ஸ் மெடர்னிடி வார்டா? நேனு வண்ட்டி அன்னம், சாறு, ரசம் பம்பிஸ்தானு! ' என கரிசனமுடன் போன் செய்த பஹ்ரைன் நண்பர்கள்...
'ஶ்ரீதரா! அது நெஞ்சுவலி இல்ல.. ஆசிட் ரிஃப்ளக்ஸ் தான். சாயங்காலம் ஹமாத் டவுன் ஷேக் கலிஃபா ஹெல்த் சென்டர் வா! 'நெக்ஸியம்' மும் 'காவிஸ்கான்'னும் தற்ரேன்.. பாபாவ வேண்டிக்கோ' என ஆறுதல் சொல்லும் டாக்டர் நண்பர்கள்..
'நங்கநல்லூர் நம்மாழ்வார் கெஸ்ட் ஹவுஸ்ல ரூம் போட்டாச்சு! ஏர்போர்ட்டுக்கு கார் வந்துரும்.. நீங்க கல்யாணத்துக்கு ரெண்டுநா முன்னயே வந்து வ்ரதம் ஜாதகாதியில இருந்து பாணிக்ரஹனம் வரை இருக்கனும்' என அழைப்பு விடும் ஆக்டிவ் நண்பர்கள்..
86இல் பாம்பாயில் வேலை வாங்கிக்கொடுத்து, தன் அறையிலும் தங்க வைத்து, கைச்செலவுக்கும் அப்பப்போ பணம் கொடுத்து 'ஶ்ரீதரா! சேவ் பண்ண கத்துக்கோ.. கடனையும் திருப்பித்தரனும்னு ஞாபகம் வச்சுக்கோ.. அசர்டிவ்னஸ் பத்தாதுடா உனக்கு' என உரிமையோடு உபதேசம் செய்து, அடுத்தடுத்த வேலை எல்லாம் வாங்கித்தந்து (பஹ்ரைன் உட்பட), சென்ற வருடம் ஒருநாள் தோளில் கை போட்டு 'ஶ்ரீதரா! பாத்துக்க இது தான் வீணை பாலச்சந்தர் வீடு' என காட்டியபடியே இந்திராணியம்மாள் தெரு வழியாக 'மவுண்ட்பேட்டன் மணி ஐயர் காண்டீன்' கூட்டிப்போய் நெய்ப்பொங்கல், காசி அல்வா வாங்கித்தரும் 36 வருட பால்ய நண்பன்.. (பேரை கண்டுபிடிச்சிருப்பீங்களே!)..
இன்னும் எழுதிக்கொண்டே போக ஏராளமான நண்பர்கள், இந்தியா வரும்போதெல்லாம் வரவேற்று உபசரிக்கும் முகநூல் நண்பர்கள், அலுவலக நண்பர்கள், சீ.ஏ. நண்பர்கள்...
இப்படி நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள்..
என் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்!

பட உதவி: வடகாடு.இன்

படத்துக்குக்கதை

முன்கதை சுறுக்கம்:
இசக்கியின் மீன்பாடி வண்டியை சுயம்புலிங்கத்தின் வீட்டுத்தோட்டத்தில் யாரோ பார்த்து விட்டதாகவும், போலீஸ் மறுபடியும் இந்த வழக்கை தூசி தட்டி எடுக்கலாமென சுயம்புலிங்கம் வந்து சொல்லவும் கலவரமடைந்தான் இசக்கி. போலீஸ் அடித்தாலும் ஒன்றும் தெரியாதென சொல்லச்சொன்னான் சுயம்புலிங்கம். ஆனால் தினம் பயந்து பயந்து தன்னால் மன உலைச்சலுடன் இருக்க முடியாதென்பதால், இசக்கி போலீசிடம் உண்மையை ஒப்புக்கொள்ள முடிவெடுத்தான். அதாவது சம்பவத்தன்று பையனின் பிணத்தை சுயம்புலிங்கம் வீட்டிலிருந்து அகற்றி அந்த இடத்தில் இறந்த கன்றுக்குட்டியை புதைத்து விட்டு , சுயம்புலிங்கத்தின் உதவியுடன் பையனின் உடலை தன் மீன்பாடி வண்டியில் கொண்டு போய், போலீஸ் ஸ்டேஷன் கட்டப்படும் கட்டிட அஸ்திவாரத்தினுள் புதைத்த உண்மையை இசக்கி ஒப்புக்கொள்ள, அடுத்த சில நாட்களில் அந்த புதிய காவல் நிலையத்தை புல்டோசர் இடிக்க ஆரம்பித்தது.
இனி கதை...
காவல் நிலையத்தைச்சுற்றி ஒரே பத்திரிக்கையாளர்கள், டி.வி நிருபர்கள். கட்டுக்கடங்காத பொது மக்கள் கூட்டம் வேறு. சமாளிக்க போலீஸ் தடியடி தேவைப்பட்டது. புல்டோசர்கள் மும்முரமாக இயங்கி மண்ணைத்தோண்ட சுற்றிலும் நின்று கொண்டு மக்கள் ஆவலுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் சுயம்புலிங்கம் தன் தோளில் சாய்ந்து அழுதபடி நின்ற ராணியை சமாதானப்படுத்தினான் 'ஏட்டி, பயப்படாதெங்கென்! நமக்கு இப்ப கெரகம் புடிச்சி நிக்கி.. பாப்பம்..எல்லாஞ்சரியாயிடும்'. உடனே வெடித்தாள் ராணி 'அடப்போய்யா! கண்ணுக்குட்டிய போலீஸ் தோண்டி எடுத்தப்பவே ஒத்துக்கிடுங்கன்னு சொன்னேன்ல!. இப்ப மூனு வருசங்கழிச்சு திரும்ப ஒன்னொன்னா நோண்டி எடுக்கான். அந்த ஏறப்பாளி நாயி பொணத்த இப்ப வெளிய எடுத்தா உனக்கு செயிலுதா. கேபிள் டீவில என்ன தான் பாக்குறீயளோ! இதுக்கு வழியேதும் காங்கல?'
அந்தப்பக்கம் அழுதபடி பெண் ஐ.ஜி, கணவனின் கைகளை கெட்டியாக பற்றியபடி நிற்க, 'இல்லே..வோணா..அள்வாதெ.. நம்போ பையனுக்கூ ஒன்னும் ஆகாதுன்னு வேண்டிக்கோ' என சௌகார்பேட் தமிழில் மனைவியை சமாதானப்படுத்துகிறார் போலீஸ் கணவர்.
'அதெப்பிடி பொணத்த அஸ்திவாரத்துல போட்டான், இஞ்சினீருக்கு தெரியாமெ!' போன்ற விதவிதமான பேச்சுக்கள்..
திடீரென துர்நாற்றம் வீச, போலீஸ்காரர்கள் மூக்கை பொத்திக்கொள்கிறார்கள். குழியில் இருந்து மண்ணை அகற்றி அந்த மூட்டை மெல்ல வெளியே எடுக்கப்படுகிறது. ராணி கலவரத்தைடன் சுயம்புலிங்கத்தை பார்க்க, அவன் வழக்கம்போல கண்களால் அவளை சமாதானம் செய்கிறான். காமெரா அப்படியே சுற்றி... (ச்சே... இது கதையாச்சே! சினிமா கெடையாதே! சாரி..மறந்துடுச்சு)
மூட்டை பிரிக்கப்பட, உள்ளே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட இன்னொரு மூட்டை... பெண் ஐ.ஜி கண்களை மூடியபடி சாமியை வேண்ட, ஜிப்பாக்கணவர் கண்ணாடியை கழற்றி வெற்றுப்பார்வையுடன் பார்க்க, டீவி காமிராக்கள் லென்சை ஜூம் பண்ண, கூட்டத்தை சமாளிக்கும் போலீஸ் கூட ஆவலுடன் எட்டிப்பார்க்க, மெல்ல அந்த மூட்டையை புரட்ட..
.
.
.
.
.
.
.
.
.
.
இறந்த 'கன்றுக்குட்டி' ஒன்று 'ச்சொத்'தென வெளியே வந்து விழுந்தது.
'அடப்போங்கைய்யா உங்களுக்கு வேற சோலியே இல்லையா! ஒரு வாரமா ஊர்ல ஒரு ரேப்பு இல்ல.. அறுவா வெட்டு இல்ல..கெரசீன் ஊத்திக்கொளுத்தல.. ஏர்போர்ட்ல வச்சு அறையல..இங்கியாவது ஏதாவது நியூஸ் கெடைக்கும்னு பாத்தா..' என ஊடக நிருபர்கள் சலிப்புடன் நகர்ந்தார்கள்.
பெண் ஐ.ஜி திகிலடைந்தாலும் தன் பையனின் பிணம் இல்லையென்ற திருப்தி முகத்தில். ராணி ஆச்சரியத்துடன் சுயம்புலிங்கத்தை பார்க்க அவன் யாருக்கும் தெரியாமல் அவளைப்பார்த்து புன்னகைத்தான். இசக்கி நம்பமுடியாமல் சுயம்புவை பார்த்தான். பத்திரிக்கைகள் போலீசை கிழிகிழியென கிழித்து விமரிசித்தன.
'பேசாமெ, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியா தொந்திரவு கொடுத்ததே அந்த கண்ணுக்குட்டிதான்னு சொல்லி கேசை முடிக்கலாம்லா!' என யாரோ ஒரு அரசியல் ஞானி டீ.வி 'நேர்படப்பேசு' வில் சொல்லி செமத்தியாக தமிழிசையிடமும் விஜயதாரிணியிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
'ஏட்டி ராணி! நாஞ்சொல்லுதேன்! நமக்கு ஒன்னும் பயமில்ல .. இனி குறுக்க சாஞ்சு கெடக்காம்.. '
'அப்ப அந்த இசக்கிப்பய வாக்குமூலம் என்னாச்சு? என்னய்யா செஞ்தீரு அந்த பையனோட பொணத்த?'
'அத விடு புள்ள! பொறவு இசக்கி வாய தொறக்கான்னு நெனைச்சேன். அதான் ரெண்டாந்தடவையும் கண்ணுக்குட்டிய பொதச்சோம்ல!' சுயம்புலிங்கம் சாரத்தை அவிழ்த்து கட்டிக்கொண்டான்.
'பொதைக்கறதுக்கு இன்னும் எத்தினி கண்ணுக்குட்டி வச்சிருக்கீய? போவட்டு...பேசாமெ மாட்டுப்பண்ணை ஒன்னு தொறந்துடும்வே'..
பெண் ஐ.ஜியை அரசு கண்டித்து நீண்டகால விடுப்பில் போக உத்தரவிட அவர் அமெரிக்கா கிளம்பினார். கூடவே சௌகார்பேட்டும்...
ஊருக்கு வெளியே மலைப்பகுதி.... பெண் ஐ.ஜி தன் கணவருடன் சுயம்புலிங்கத்தை மறுபடியும் தனியாக சந்திக்க வந்திருந்தார். கணவர் 'பெத்தெ புள்ளேயெ நாங்க சர்யா வள்க்கலே! உங்களெ ரொம்போவே கொட்மெ பட்த்தீட்டோம். இப்போ அம்ரீக்கா போறோம்' என்று சொல்ல, தொண்டையை கனைத்துக்கொண்டு...எச்சிலை விழுங்கி...மூக்கை கர்சீப்பால் துடைத்து...கண்களை கசக்கி...ஒருவழியாக சுயம்புலிங்கம் பேச ஆரம்பித்தான்..
'அய்யா.. நா.. (மறுபடியும் மூக்கை சிந்தி) அய்யா..நா..சின்ன ஆளு கேட்டியளா? .. எவ்ளவோ எடுத்து சொன்னோம். அவன் சின்ன வயசு பாத்தீயளா!'
'கொஞ்சம் சுறுக்கமா சொல்லுப்பா.. போன தபா ஃப்ளைட்டையே மிஸ் பண்ணிட்டோம்'
'இல்ல..சார்வாள்! நா என்ன சொல்லுதேன்னா..'
'இருக்கட்டும்பா.. நீ சொல்லப்போறது எல்லாம் டப்ஸ்மாஷ்ல வந்துடும்.. அத அமெரிக்காவுல பாத்துக்குவோம்'.
ஒரு வழியாக மறுபடியும் கேசை மூடி சுயம்புலிங்கத்தையும் இசக்கியையும் சந்தேகத்தின் பலன் கொடுத்து நிரபராதி என விடுவித்தார்கள்.
சுயம்புலிங்கம் வீட்டிற்கு இசக்கியும் அவன் மனைவியும் வருகிறார்கள். ராணி 'அந்த கேபிள் டீவி தொழிலை விட்ரும்யா.. வேற எதும் சோலி செய்யலாம்ல?' என கேட்க, சுயம்புலிங்கம் 'எலே இசக்கி! அந்த மீன்பாடி வண்டிய வித்துடு. புதுசா நமக்கு யார்லெ வேல குடுப்பா? நாம ரெண்டு பேருஞ்சேந்து என்ன செய்யலாம்.. சொல்லுலே!' என கேட்டான்.
இசக்கியின் மனைவி கணவனிடம் 'வயித்து பொளப்புக்கு எதாவது செய்யனுங்கேன். நீர் தான் உம்ம ஃப்ரெண்ட தலைல தூக்கி வச்சி ஆடுதீரே.. சொல்லும்! ' என்றதும், பொறி தட்டிய மாதிரி இசக்கி பிரகாசமானான். 'என்ன சொல்லுதே புள்ள! தலைல தூக்கி வச்சின்னா சொன்னே! ஆஹா.. ஐடியா கெடச்சி!' என குதித்து உடனே சுயம்புலிங்கம் காதில் ஏதோ சொல்ல, சுயம்பு அவனை இறுக்க கட்டிப்பிடித்துக்கொள்கிறான், ராணியே பொறாமைப்படும் அளவிற்கு.
மறுநாள் நெல்லை நகரின் மையப்பகுதியில் ஒரே கூட்டம். 'யாரோ ரெண்டு சாமியாரு பயளுவலாம். ஒரு சாமி செந்தில் மாதிரியும் இன்னொரு சாமி 'குணா' கமல் மாதிரியும் இருக்காவளாம். செந்தில் சாமி குணா சாமிய ஒத்த கட்டையால, ஒரே கையில ஒசத்திப் புடிக்கானாம். நம்மூருக்கு அதிசயமாவும் புதுசாவும் இருக்கே' என பரவலான பேச்சு. தட்டில் நிறைய நூறு ரூபா நோட்டுக்கள்.
இரவு.. படுக்கையறையில் சென்ட் அடித்த பனியனுடன், மீசையை நீவியபடி சுயம்புலிங்கம் ராணியை ஆசையுடன் நெறுங்க, அவள் ' யோவ்.. மீன்பாடி வண்டியையே ஒழுங்கா இழுக்க முடியாத கோட்டிப்பய இசக்கி, அதெப்பிடி ஒத்த கட்டையால உன்ன ஒசரத்துல தாங்கி புடிக்கான்? இதென்ன இடும்பு புடிச்ச சோலி... சொல்லும்'
'ஏட்டி..அதொன்னுமில்ல.. நாங்க ரெண்டு இரும்பு தட்டுல ஒக்காந்திடுதோம். நடுவில அந்த கட்டைக்குள்ள இரும்பு கம்பி. நம்ம ஶ்ரீதர் டிராஃப்கோ இத்தாலி போயிருந்தப்ப 'வாடிகன்'ற ஊர்ல இத பாத்தாவளாம். பஹ்ரைன் வுட்டு இந்தியா திரும்பி வந்தாக்க அவுகளும் இந்த தொழில் தான் செய்யனுங்காக.. காசு நெறைய கெடைக்கும்ல!' என்றான்.
'அடச்சீ.. இது தொழிலா.. பிச்சைய்யா!.. அது இருக்கட்டு.. பாரம் தாங்காமெ ரெண்டு பேரும் கீழ விழ மாட்டீயளா?'
'இல்லடி மூதி! கீழ உள்ள இரும்புத்தட்டுக்கு நாலு காலு இருக்கு. அத தரைல குழிய தோண்டி பொதைச்சிடுதோம்ல!'
'தரைல குழிய தோண்டறதுக்கும், பொதைக்கறதுக்கும் சொல்லியா தரனும் உனக்கு! அந்த குழியிலயும் கண்ணுக்குட்டி எதாச்சும் கெடக்கா?' என்றவளை மேலும் பேச விடாமல் லைட்டை(யும்) அனைத்தான் சுயம்புலிங்கம்.

பெரியப்பா

1970... ஏற்காட்டில் 5வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த
பெரியப்பா 'என்னடா! எங்க வீட்ல இருந்து படிக்கிறியா?' என கேட்க உடனே அப்பாவிடம் கெஞ்சி பெரியப்பாவுடன் கிளம்பி காஞ்சிபுரம் புனித அந்திரசனில் (St' Anderson) ஆறாப்பு சேர்ந்தேன்.
பெரியப்பா ஜாலியானவர். நம் மீது ரொம்ப அக் கரையுடையவர். ஆனால் கண்டிப்பு அதிகம். சுள்ளென கோபம் வரும். தாலுகா ஆபிஸில் ஜோலி. நேர்மையானவர். லஞ்சம் வாங்க மாட்டார். கஞ்சிவரம் வந்தவுடன் தான் அவரது கண்டிப்பு தெரியவந்தது. வகுப்பில் மூன்றாம் ராங்க் வாங்கினாலும் 'பளார்' தான். மாலை ஒரு மணி நேரம் விளையாட்டு, கைகால் அலம்பி படிக்க உட்கார வேண்டும் என எல்லாமே டயத்துக்கு நடக்க வேண்டும். ஏதோ விளையாட்டுக்காக தலையை ஆட்டப்போய் என்னை நிஜமாகவே கஞ்சிவரம் அனுப்பிய அம்மா அப்பாவை பிறகு திட்டினேன்.
ரசம் சாதம் துவையல் அல்லது தேங்கா சட்னி என தினமும் இரவு வெரைட்டியாக இருக்க வேண்டும் பெரியப்பாவுக்கு. துவையலில் உப்பு கூட இருந்தாலும் குறைவாக இருந்தாலும் ரகளை தான். இட்லி இன்னும் கொஞ்சம் வேகனும், உப்புமா அடிபுடிச்சிருச்சு, தோசை தீஞ்சுடுச்சு, மோர் புளிக்குதே, கடுகு பத்தாது.. ம்ஹும் இதி நாக்கு ஒத்து..இப்படி அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தி தட்டை சர்ரரென தள்ளி விடுவார் பெரியம்மா பக்கம். 'இப்புடு ஏமி பாவா செப்பேவு! யப்பா தேவுடா!' என பெரியம்மாவும் பதிலுக்கு சவுண்டு விட, கொஞ்சம் அறண்டு விடுவார். உடனே கோபம் ஜிவ்வென தலைக்கு ஏற, அடுத்த சில மணி நேரங்கள் சாப்பாடு, காபி எதுவும் வேண்டாம் என ஸ்ட்ரைக் செய்து, பெரியம்மா அவரிடம் கெஞ்சி, அழுது இரவு சாப்பிட வைப்பதற்குள் ஒரே சத்தம்.. ஆர்ப்பாட்டம்..ரெண்டு தடவை பாத்ரூம் போய் வந்துவிடுவேன்.
சின்ன பையனான என்னை தனம் பெரியம்மா அடிக்கடி சினிமா கூட்டிப்போவார்கள். வியட்நாம் வீடு, நவக்கிரகம், சங்கமம், பத்தாம் பசலி, என் அண்ணன், காவியத்தலைவி, எங்கள் தங்கம், கண்மலர் என எக்கச்சக்கமான படங்கள் பார்த்தேன். 10 வயதில் பார்த்த படங்கள். எம்.ஜி.ஆர் கட்டம் போட்ட கைதி உடையில் சிறையில் கல் உடைப்பது, சௌகார் ஜானகி வக்கீல் உடையில் வருவது, 'அனங்கன் அங்கதன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா' என சிவகுமாரும் குமாரி பத்மினியும் தக்காபுக்காவென ஆடும் காட்சிகள் எல்லாம் இப்போதும் மனதில் ஓடுகிறது.
அடுத்த வருடம் லீவுக்கு வந்தவுடன் ஏற்காடு புனித சூசையப்பரில் ஏழாம் வகுப்பு சேர்ந்து பெரியப்பாவிடமிருந்து தப்பித்தேன். பிறகு அவரை வருடமொரு முறை பார்ப்பதோடு சரி.
80களில் திருச்சிக்கு ஒரு முறை வந்திருந்தார் பெரியப்பா. தினமும் நான் Ganapathi Subramanianனுடன் சி.ஏ. பரிட்சைக்கு பொன்மலை ரெயில்வே ஒர்க்‌ஷாப்பில் படிப்பதுண்டு. காலை 11 மணிக்கு ரெயில்வே கேண்டினில் ரவா தோசை, உப்புமா, கேசரி, மைசூர் பாக் என எல்லா ஐட்டங்களும் இருபது பைசா தான். 'பெரியப்பா! ரெயில்வே கேண்டின் வற்ரீங்களா? அட்டகாசமா இருக்கும்' என சொன்னதும் கிளம்பி விட்டார். சைக்கிள் காரியரில் அவரை உட்காரவைத்து டோல்கேட் வழியாக இருபது நிமிடம் லொங்கு லொங்கென சைக்கிளை மிதித்து கிச்சடி, மைசூர் பாக், மிக்சர், காபி வாங்கிக்கொடுத்தேன். அன்று பார்த்து பலகாரங்கள் எல்லாமே இரட்டிப்பு ருசி. 'ரொம்ப நல்லா இருக்கு' என சொல்வாரென அவர் முகத்தை பார்த்தேன். எல்லாம் சாப்பிட்ட பின்.. 'ம்ஹூம்! ஒக்கட்டி கூட பாக லேதுரா' என என்னை வெறுப்பேற்றி, தட்டில் மீதியிருந்த மிக்சர் தூளை வாயில் போட்டுக்கொண்டு, உதட்டோரத்தில் ஒட்டியிருந்த சேமியாவை நாவால் இழுத்துக்கொண்டார்.
அன்னூரில் நடந்த என் மாமா பையன் பன்னீர் Pannirselvam Veeraகல்யாணத்தில், முதல் நாள் இரவே சமையல் கொட்டகையில் புகுந்த அவர், தட்டில் சூடாக ஜாங்கிரியுடன் ஜீராவை நக்கி சாப்பிட்ட படி 'ஹூம்.. கல்பதம் வரலையே ஜீராவுக்கு.....இதென்ன ஜாங்கிரி!' என சமையல்கார்ருக்கு டோஸ் விட்டார். எந்த பண்டமும் வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். வெரைட்டி அவசியம் அவருக்கு.
பணியில் நேர்மையுடனும் கறாராகவும் இருந்ததால் தாசில்தார் வரை தான் வந்து ரிடையர் ஆனார். ஃப்ளெக்சிபிளாக இருந்திருந்தால் கடைசி வருடம் டெபுடி கலெக்டராகியிருப்பார். பையன் மற்றும் பேரனுடன் ஆவடியில் செட்டிலானார். நேரத்திற்கு சாப்பாடு, ருசியில் குறைவில்லாத சமையல் என அவரது ராஜாங்கம் தொடர்ந்தது.
சில வருடங்கள் முன் மனைவி (தனம் பெரியம்மா) மற்றும் பையன் (50) இருவரும் அடுத்தடுத்து திடீரென காலமாகி விட, பேரன் ரவிபாலா (34) தான் தன் மனைவி மற்றும் அவனது அம்மாவுடன் தாத்தாவை பார்த்துக்கொண்டான். அதே கெத்துடன் பெரியப்பா இருந்தார். மூத்தவரான இவருக்கு கூட பிறந்த தம்பிகள் மூன்று பேர். என் அப்பா தான் கடைசி தம்பி.
தலை மயிரை நடு வகிடெடுத்து தூக்கி வாரி சீவி, நெற்றியில் பெரிய நாமம். ட்ரிம் செய்யப்பட்ட மீசை. அந்தக்கால சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரி நெஞ்சு வரை பாண்ட், சட்டையை இன் செய்து முழங்கை வரை மடித்து, தேவ் ஆனந்த் ஸ்டைலில் கழுத்து வரை பட்டன் போட்டு, சிவந்த மேனியுடன் பந்தாவாக வலம் வருவார்.
அவரது தம்பிகள் மூவரும் 80 தாண்டியவுடன் ஒவ்வொருவராக இறந்து விட்டார்கள். 5 வருடங்கள் முன் என் அப்பா 83 வயதில் இறந்தபோது சென்னையிலிருந்து மாருதி கார் முன்னிருக்கையில் அமர்ந்தவன்னம் திருச்சி வந்து காரியங்களில் கலந்துகொண்டார்.
சென்ற வருடம் என் சகோதரியின் மகள் திருமணத்திற்கு திருச்சி வந்திருந்தவர் (95) ஜம்மென்று மணமேடைக்கு வந்து வாழ்த்தினார். கையோடு கீழ்த்தளம் போய் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டி போட்டோ எடுத்துக்கொண்டார். நல்ல வேளை சாப்பாட்டை குறை சொல்லவில்லை. அடுத்த அரை மணியில் வழக்கம்போல கார் முன் இருக்கையிலிருந்து டாட்டா காட்டியபடி சென்னை கிளம்பினார். போற வழியில் வண்டியை அங்கங்கே நிறுத்தி டீ, காபி, பிஸ்கட், டிபன் என ஆசையாக வாங்கி சாப்பிட்டார். இந்த வயதிலும் அவரை அருமையாக கவனித்துக்கொள்ளும் பேரன் ரவிபாலாவை நாங்கள் பாராட்டினோம்.
சென்ற மாதக்கடைசியில் லேசாக மக்கர் பண்ண ஆரம்பித்தார். வாயை கட்ட முடியாமல் ஒரே கலாட்டா. பொறுமைசாலியான பேரன் ரவிபாலாவிற்கே டென்ஷன் அதிகமாகி acidity வந்துவிட்டது. மனநோய் மருத்துவர், தூக்க மருந்து என அவரை கட்டுப்படுத்த முயன்ற ரவிபாலா கடைசியில் 96 வயதான அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தான். அடுத்த சில நாட்களில் அங்கேயும் ஸ்ட்ரைக். சாப்பாடு பிடிக்கவில்லையாம். 'தம்பி ரவி பாலா! உனக்கு புண்ணியமாப்போகும். அவர் டேஸ்ட்டுக்கு எங்களால் சமைக்க முடியாது. உடனே பெரியவரை அழைச்சிட்டுப்போப்பா!' என அவர்கள் கெஞ்ச, கபாலி பாண்டிச்சேரியை விட்டு திரும்பவும் மலேஷியா வந்து சேர்ந்த மாதிரி வெற்றிகரமாக வீடு வந்து சேர்ந்தார்.
எனக்கு சாப்பிட அது வேண்டும்.. இது வேண்டுமென மறுபடியும் கட்டளைகள் பறக்க, ரவிபாலா கடைக்கு ஓடினான். பெரியப்பாவின் 'டோனி லீ' டான் ஆட்சி தொடர்ந்தது. இந்த வயதில் அவருக்கு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளுமாவென பயம் அவனுக்கு. பாவம் இன்னும் மூன்று வருடம் அவர் பத்திரமாக இருந்து நூறாண்டு காலம் வாழ்ந்து விடவேண்டும் என அவன் விரும்பியது நடக்கவில்லை.
தன் 34 வயதில் தந்தையை இழந்து அடுத்த 10 வருடங்கள் தாத்தாவை பார்த்துக்கொண்ட Ravibaala Haribabu ரவிபாலா! பாராட்டுக்கள் உனக்கு! இனி சகல சௌபாக்கியங்களுடன் உனது IT துறையில் நீ மேன்மையடைய வேண்டும்.
சென்ற வாரம் நாலைந்து நாட்கள் பெரியப்பாவுக்கு சரியாக சாப்பாடு இறங்கவில்லை. படுத்தே இருந்தார். காபி மட்டும் ஒரு வாய் சாப்பிட்டார். தினமும் அரை மணி நேரம் காலாற நடப்பது நின்று விட, பேச்சு குறைந்து, நாடியும் மெல்ல இறங்க, கோவிந்த ராஜுலு என்கிற என் பெரியப்பா 97ஐ எட்ட இன்னும் 3 மாதங்கள் பாக்கி இருக்க, அதிக அவஸ்தைப்படாமல் கண்ணை மூடினார்.
பெரிய்ய்ய்யப்பாடா...

அய்யம்பிள்ளை

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் திருச்சியில் நான்,Ganapathi Subramanian மற்றும் இந்த நண்பன் மூவரும் ஒரே பார்ட்னர்ஷிப் firm இல் ஆர்டிகிள்ஸ் செய்தோம். கணபதி தான் இவனை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தியவன்.
மாநிறம்.. ஆறடி உயரம்.. பெரிய்ய்ய்யய பெல்பாட்டம் பாண்ட், ஒருதலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்..சதா ஜோக்கடித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் வேலை செய்பவன்.
கரூர், சேத்தியாதோப்பு, புதுக்கோட்டை, காரைக்குடி என பல இடங்களில் இவனுடன் ஆடிட் போகும்போதெல்லாம் ஆடிட், வயிறார சாப்பாடு, நைட் ஷோ சினிமா என இவனுடன் இனிமையாக கழித்த பொழுதுகள் பல.
நிறைய சுவாரசியமான சம்பவங்களை பாங்க்
ஆடிட்டில் நாங்கள் கண்டதுண்டு. ஒருவர் அக்ரிகல்ச்சர் லோன் அப்ளை செய்வார். அவருக்கு மூன்று பேர் கியாரண்டி கொடுப்பார்கள். அடுத்த அப்ளிகேஷனை பார்த்தால் கியாரண்டி கொடுத்தவர் லோன் கேட்க, மீதி மூன்று நண்பர்கள் கியாரண்டி. இப்படி ஒரே குடும்பத்தவர்கள் லோன் வாங்குவது தெரிய வந்தது. சில வியாபாரங்களின் முதலீடுகளுக்கு பார்ட்னர்கள் தங்கள் source காண்பிப்பதற்காக சுமார் 25 உறவினர்களிடமிருந்து தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக லோன் வாங்கியதாக கணக்கு காண்பிப்பதை பார்ப்போம். SIDCO லோனுக்கு இல்லாத கம்பெனிக்கு, வாங்காத மெஷினுக்கு டெப்ரிசியேஷன் ஸ்டேட்மென்ட் பார்த்து மலைத்துப்போவோம்.
சேலம் அருகே ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் இவன். விவசாய குடும்பம். அப்பா ஏதோ உடையார். ஆனால் நிச்சயம் முயற்சி உடையார். அதனால் தான் பையனை சி.ஏ.ஆக்கினார். திருச்சி முருகன் தியேட்டர் அருகே ஒரு மேன்ஷனில் தங்கிக்கொண்டு சி. ஏ. படித்துக்கொண்டிருந்த இவன் படிப்பில் சூரன். குறிப்பாக Accountancy மற்றும் taxation சப்ஜெக்ட்டிகளில் fundamental இல் இவனை அடிச்சுக்க முடியாது. நிறைய எனக்கு சொல்லித்தந்திருக்கிறான். பின்னர் ஆண்டார் தெருவுக்கு ஜாகையை மாற்றிக்கொண்டவுடன் அங்கே அவனுடைய அறையில் கம்பைன்ட் ஸ்டடீஸ் சில மாதங்கள் செய்தோம்.
திருச்சியில் பிஷப் ஹீபர் ஸ்கூலில் சி.ஏ. பரிட்சை நடக்கும். திருச்சி, சென்னை போன்ற சென்டர்களில் எழுதினால் பாஸ் செய்வது கஷ்டம் என்று ஆராய்ச்சி செய்து சேலம், பெங்களூர் போன்ற சென்டர்களில் எழுதினால் பாஸ் செய்வது சுலபம் என முடிவெடுத்து நிறைய நண்பர்கள் பரிட்சை சமயத்தில் திருச்சியை விட்டு கிளம்பிவிடுவார்கள். இவனும் சேலம் போனான் என நினைக்கிறேன்.
நான் ஆற அமர சி.ஏ பாஸ் செய்ய முடிவெடுத்தபோது (மெய்யாலுமே 😃) இவன் சட்டு புட்டென கணபதியுடன் பாஸ் செய்தவன். கையோடு சேலத்தில் உடனே பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தான்.
கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக அபுதாபியில் தனது சொந்த ஆடிட் firm நடத்திக் கொண்டிருக்கும் இவனை வேலை நிமித்தம் நான் அபுதாபி போகும்போதெல்லாம் பார்ப்பதுண்டு. தனக்குக்கீழ் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நல்ல சம்பளமும் கொடுத்துக்கொண்டு வெற்றிகரமாக இயங்குகிறான்.
சென்ற வருடம் நான் இரண்டு நாட்கள் அபுதாபி போயிருந்தபோது இவனிடமிருந்து போன் 'வீட்டுக்கு வற்ரியா மாப்ள!' என. 'இல்லப்பா! ஒரே ஜலதோஷம்..ஹோட்டல்லயே தால் ரைஸ் சாப்ட்டுக்கறேன்' என்று சொன்ன என்னை இடைமறித்து, 'வீட்டுக்கு போய்ட்டிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியா இரு.. உன் ஜலதோஷத்தை சரி பண்றேன்' என்று சொல்லிவிட்டான். மனைவி ஊருக்கு போயிருந்ததால் வீட்டில் தனது அசிஸ்டென்ட்களுடன் தங்கியிருந்தான்.
அபுதாபி நகருக்கு வெளியே 'யஷ் தீவு' என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். காரில் என்னை ஏற்றிக்கொண்டவுடன் வீட்டிற்கு போன் செய்து 'ஹலோ! சேகர்.. குக்கர்ல ரைஸ் வச்சிட்டு புளிய கறைங்க!' என்றான். . நல்ல டிராஃபிக். அடுத்த அரை மணியில் போன் வந்தது.
'சார் புளி ஊறிடுச்சு'.
'சின்ன சைனீஸ் பூண்டு தோலோட நசுக்குங்க, பின்ன அதை புளித்தண்ணில போட்டு கேஸை பத்த வைங்க'
'ஆச்சு சார்'
'மிளகு பத்து பதினைஞ்சு, சீரகம் ஒரு ஸ்பூன் நல்லா தட்டி போடுங்க'
அபுதாபி நகரில் நுழைந்தோம். போன்..
'சார் புளி கொதிக்குது'
'மல்லி கட்டு ஃப்ரிட்ஜில இருக்கு.. அதுல காவாசிய தண்ணில கழுவிட்டு பொடியா நறுக்கி போடுங்க.. அப்பறம் 'மேளம்' ரசப்பொடி ஒரு ஸ்பூன், 'ஈஸ்ட்மேன்' மொளகாப்பொடி அரை ஸ்பூன், அரை ஸ்பூன் மஞ்சத்தூள், நாலு வர மிளகாய் எல்லாம் போடுங்க'
'சார்! மொளகாப்பொடி போட்டதுக்கப்பறம் கூட வர மொளகாயா'
'ஆமா'
'பத்தி பதினைஞ்சு மிளகு வேற போடச்சொல்லியிருக்கீங்களே!
'சொல்றத செய்ங்க'
'ஆச்சு சார்'
'கருவேப்பிலை குச்சியோட மூனு செடி அப்பிடியே போடுங்க'
'அது உள்ளாற போகாமெ நிக்குமே'
'நிக்கட்டும்.. காரை பார்க் பண்ணிட்டிருக்கேன்.. அரை ஸ்பூன் எண்ணையில கடுகு, உ. பருப்பு தாளிச்சு போடுங்க. மேல திரும்பவும் பெருங்காயம் போடுங்க. உப்பு நான் வந்து போட்டுக்கறேன்'
'இன்னும் எவ்ளோ நேரம் கொதிக்கனும் சார்'
'நா வற்ர வரைக்கும்'
அவன் வீட்டில் நுழையும்போது எனக்கு ஜலதோஷம் மூக்கிலும் கண்ணிலும் ஜலமாக கொட்டியது. பெரிய தட்டில் சூடான சாதத்தை போட்டு வைத்திருந்த அசிஸ்டென்ட் மண்டயிட்டவாறே ரசத்தை மண்டியோடு தட்டில் கொட்டினான்.
அடுத்த பதினைந்து நிமிடம் மிளகு கார மணத்துடன் சுடச்சுட ரச சாதத்தை ஏதோ ஒரு தொவையலுடன், எதிரே பாண்டியராஜன் படம் பார்த்துக்கொண்டே நண்பனுடன் சாப்பிட்டு முடித்தேன்.. அதுவும் இரண்டு ரவுண்டு ரசஞ்சாதம்.
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஹோட்டலில் இறக்கி விட்ட நண்பனை கட்டி பிடித்து 'ரசஞ்சாதம் செம்ம மாப்ள!' என விடை பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் காலை எழும்போது ஜலதோஷம் இருந்த இடம் தெரியவில்லை..
என் வயது தான் இவனுக்கு. தாத்தாவாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது.
அய்யம்பிள்ளை! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்ளே!

மகாதேவன்

'கொலைமா மதயானையை நம்பலாம்...
கொல்லும் வேங்கை புலியையும் நம்பலாம்..
ஆனா... ஸ்வாமி....யம்மா...
சேலை கட்டிய மாதரை நம்பினா..
தந்தனா பாட்டு பாடனும்
துந்தனா தாளம் போடனும்..'
சந்திரபாபு, ரத்னமாலா பாடும் இந்த மகாதேவி பட நகைச்சுவைப்பாடலை நண்பன்
இடம்: கொவான்டி ரோடு..செம்பூர் ஸ்டேஷனிலிருந்து பத்து கட்டிடங்களை அடுத்து 'திருமூர்த்தி' யில் இருந்த எங்கள் ஃப்ளாட்.. இது 1989 இல்..
மகாதேவன் உபயத்தில், ஒரே மாதத்தில் சுமார் ஐம்பது தடவைக்கு மேல் கேட்டு ரசித்திருப்போம்.
கத்தார் வேலையை விட்டு விட்டு அப்போது தான் பம்பாய்க்கு வந்தவன் மகாதேவன். பெட்டியில் ஷாம்ப்பூ, சாக்ஸ், சென்ட், நெயில் கட்டர், Fa சோப்பு.. நண்பன் சந்துரு (Balasubramaniam Chandrasekaran ) மூலம் அறிமுகமாகி என்னுடன் சேர்ந்துகொண்டான். சந்துருவும் தக்கலை பத்து (பத்மநாபன்)வுக்கும் பக்கத்து ரோட்டில் ஜாகை. நண்பன் கணபதிக்கும் (Ganapathi Subramanian) மகாதேவனுடன் நல்ல பழக்கம். கத்தார் சூட்கேசை திறந்து சுமார் ஐம்பது, அறுபது கேசட்டுகளை வெளியே எடுத்த மகாதேவனை வியப்புடன் பார்ப்பேன். நிறைய சந்திரபாபு பாடல்கள் வைத்திருந்தான். மாலை ஆபிஸ் முடிந்து அறைக்கு வந்ததும் கேசட் போட்டால் இரவு பன்னிரண்டு மணி வரை ஓடும். கலைக்கோயில், இதயக்கமலம், காட்டுரோஜா என எக்கச்சக்கமான படப்பாடல்கள்.
சராசரிக்கும் சற்றே குறைவான உருவம், முன் வழுக்கை ஆரம்பம், அளவான மீசை, கொஞ்சம் மென்மையான வசீகரமான கீச்சுக்குரல், தொந்தி தொப்பை என்றில்லாமல் சிக்கென சிறிய உடலமைப்பு. உரக்க சிரிக்காமலே ஜோக் அடிப்பது, ஆரவாரமில்லாமல் அமைதியாக பேசினாலும் மணிக்கணக்கில் அரட்டை, 'வெர்ச்சுவலி' என்கிற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பவன். காசு விஷயத்தில் கெட்டியாக இல்லை.. 'இருப்பா! நாங்குடுக்கறேன்!' என்ற தாராள மனசு, பெண்களுக்கு அதிக மரியாதை, அலுவலகத்தில் பாஸுடன் நல்ல உறவு, சலிக்காமல் மாலை லேட்டாக உட்கார்ந்து வேலையை முடிக்கும் நேர்த்தி..அவன் ஒரு இளம் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்.. சி.ஏ.வுக்குப்பிறகு வேறெந்த ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட படிப்புகள் படிப்பதிலும் பிரயோஜனமில்லை என நம்புபவன். என்னை விட 3 வயது பெரியவன். கூடப் பிறந்தவர்கள் ஏழு பேர். மற்றொரு சகோதரர் ஒருவரும் சி.ஏ.
ஞாயிறன்று காலை 7 மணிக்கு அவசரமாக ஆட்டோ பிடித்து காட்கோபர் பகுதியில் நவீன நீச்சல் குளம் ஒன்றில் நாங்கள் நீச்சல் பழகும்போது எங்களுடன் வந்து நீச்சல் சொல்லிக்கொடுப்பான். இரண்டு மணி நேரம் தண்ணீரில் கொட்டமடித்த பின் அங்கேயே கான்டீனில், தண்ணீர் சொட்டச்சொட்ட ஜட்டியுடன் சூடாக இட்லி சாப்பிட்டு பத்து மணிக்கு மேல் அறைக்கு திரும்புவோம்.
வேலையில் சேர்ந்து இரண்டு மூன்று வருடங்களே ஆனதால் நிறைய சம்பாதித்து தாராளமாக செலவு செய்ய வேண்டுமென்ற வேட்கை எல்லோருக்கும். காந்திவிலியிலிருக்கும் மகாதேவனின் மாமா பையன் ஒருவன், தனது அலுவலக கணக்கு வழக்குகள் சுமார் 10 வருடங்களாக எழுதப்படாமல் இருந்து இன்கம்டாக்ஸில் இருந்து நோட்டிஸ் வந்துவிட்டதாகவும், அந்த assignmentஐ மகாதேவன் பார்ட் டைம் தொழிலாக எடுத்துக்கொள்ளவும் கெஞ்ச, ஒப்புக்கொண்டான். துணைக்கு நாங்கள் மூன்று பேர்.
ஒரு சனியன்று மாலை சான்டாக்ரூஸ் ஏர்போர்ட் அருகே LB Couriers என்ற கம்பெனி எம்.டி முன் மகாதேவன், நான், சந்துரு, பத்து நால்வரையும் மாமா பையன் உட்கார்த்தி வைக்க, டீயை உறிஞ்சியபடி மகாதேவன் "அடுத்த நாலைந்து வார இறுதிகளில் வந்து வேலை செய்வோம். அக்கவுன்ட்ஸ் ரிஜிஸ்தர்கள் நாங்களே எழுதி, பாலன்ஸ் ஷீட் வரை டைப் செய்து கொடுத்துவிடுவோம். நேரே ஆடிட்டர் கிட்ட நீங்க குடுத்துரலாம். எங்களுக்கு ரூ. எட்டாயிரம் ரூபாய் ஆவும்" என தீர்க்கமாக சொன்னபோது 'எட்டாயிரமா?' என நாங்கள் கத்தி விட்டோம். இன்ப அதிர்ச்சி! 'சும்மா இருங்கடா' என அதட்டிய மகாதேவன் அவர் பக்கம் திரும்பி 'உடனே எங்களுக்கு வேண்டியது ஃபைல் மற்றும் வவுச்சர்' என்றதும் 'என்னாது?' என வடிவேலு கணக்கா எம்.டி. கேட்டார். 'அதெல்லாம் ஒன்னுமேயில்லயே... அதோ அந்த ரூம் முழுக்க உள்ள பேப்பர்கள் தான் பத்து வருஷ ரெக்கார்டுகள்' என காந்தி கை காட்ட எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. 'லேடி அசிஸ்டென்ட் கொடுப்பாங்களா?' எனக்கேட்ட என்னையும் பத்துவையும் காந்திக்கு தெரியாமல் முறைத்தான் மகாதேவன்.
அடுத்த நாள் மகாதேவன் செய்த காரியத்தை பார்த்து பிரமித்துப்போனோம். விசாலமாக இருந்த எம்.டி யின் அறையை உடனே ஒழித்து கொடுக்கச்சொன்னான். எட்டாயிரத்துக்கு என்னென்ன வாங்கலாம் என ப்ளான் செய்துகொண்டிருந்த எங்களை கிட்ட அழைத்து, வெறுந்தரையை வருஷவாரியாக பத்து கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் வருட எண்களை பேப்பரில் எழுதி வைக்கச்சொன்னான். 'இன்னும் நாலைந்து மணி நேரத்துல பக்கத்து ரூம்ல இருக்கற அத்தனை ரெக்கார்டுகளை இங்க கொண்டாந்து வருஷம் வாரியாக தரையில் பிரித்து வைக்கனும்' என எங்களுக்கு கட்டளையிட்டான். 'மணி இப்பவே பன்னண்டு.. பக்கத்துல கலினாவுல தாலி சாப்ட்டு வந்துடலாமா' என்ற எங்களை அதட்டி வேலையை முடுக்கினான். இரவு ஏழு வாக்கில் ஒரு வழியாக அத்தனை ரெக்கார்டுகளையும் பத்து வருடங்களாக பிரித்து, தரை முழுக்க பரப்பி, அறையை பூட்டி சாவியை வாங்கிக்கொண்டு 'வாங்கடா.. சாப்புடப்போலாம்!' என அவன் கூப்பிட்டபோது மாமா பையன் கண் கலங்கியபடியே காந்திவிலி டிரெயினை பிடிக்க ஓடினான். இப்பவே பாதி வேலை முடித்த மாதிரி.
அடுத்த சில வாரங்களில் ஒவ்வொரு கட்டத்திலிருந்தும் பாங்க் ஸ்டேட்மென்ட்ஸ், டெபாசிட் ஸ்லிப்கள், செக் கவுன்ட்டர்ஃபாயில்கள் என தேடி எடுத்து, அழகாக ஃபைல் செய்து, கிடைக்காத ரெக்கார்டுகளை வங்கியிலிருந்து வரவழைத்து, பரிவர்த்தனைகளை ரிஜிஸ்டர்களில் எழுதி, பாங்க் ரிகன்ஸிலியேஷன்களையும் எங்களை வைத்து முடித்தான். 'டாலி ஆகலையே! ஒரு பாஞ்சு ரூபா இடிக்கிதே!' என்று தலையை சொரிந்து கொண்டே வந்த எங்களை 'விடுறா! வர்ச்சுவலி படுத்தாதெ! சன்ரியில போட்டுட்டு அடுத்த வருஷத்த ஆரம்பி' என விரட்டினான். எங்க ஆபிஸ்ல கூட இப்பிடி வேலை செஞ்சதில்லை. சும்மாவா! எட்டாயிரம் வருதில்ல!
சொன்னபடி ஐந்தாவது வாரத்தில் Profit & Loss a/c மற்றும் Balance Sheetகளை பத்து வருடங்களுக்கு சமர்ப்பித்து, கிடைத்த எட்டாயிரத்தை சரிசமமாக பிரித்து ஆளுக்கு ரூ.இரண்டாயிரம் கையில் கொடுத்தபோது அவனை கட்டிப்பிடித்துக்கொண்டோம். 'எங்களை விட உனக்கு வேலை ஜாஸ்தி, நீ அதிகமா எடுத்துக்கோ' என்ற எங்கள் கோரிக்கையை 'வர்ச்சுவலி' நிராகரித்தான்.
ஒருநாள் லைகா குழுமத்தில் வேலை கிடைத்து குஜராத்தில் அங்கலேஷ்வர் என்கிற இன்டஸ்ட்ரியல் நகரத்தில் ஃபாக்டரி அக்கவுன்ட்ஸ் மானேஜராக சேர்ந்தான். அப்போது நான் வேலையிலிருந்து கொண்டே சி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி இரவு ரயில் ஏறி பம்பாய் வந்து விடுவான். இஷ்டத்திற்கு எங்களுடன் பம்பாய் முழுவதும் சுற்றியவன். நான் சி.ஏ. பாஸ் செய்த செய்தி கேட்டு மதியத்திற்கு மேல் கிளம்பி பம்பாய் வந்து அன்றிரவே கரோடியா நகரில் தன் செலவில் ட்ரீட் கொடுத்தான்.
லைக்கா ஃபாக்டரியில் அவனுக்கு நல்ல பெயர். சக அலுவலர்களால் 'ஐயர் சாப்' என்று அன்புடன் அழைக்கப்படும் மகாதேவன் அடுத்து பக்கத்தில் பரூச்சில் வேறு வேலை கிடைத்து மாறினான். குஜராத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான GNFC (குஜராத் நர்மதா ஃபெர்டிலைசர்ஸ் கம்பெனி) யின் வைஸ் பிரெசிடென்ட் (ஃபைனான்ஸ்) மதராசி ஒருவர் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலானான். மனைவி டாக்டர். உமா படோதா யுனிவர்சிட்டியில் ப்ரொஃபஸர்.
சாப்பிட ஒருநாள் அழைத்திருந்தான். சப்பாத்தியுடன் கூடிய தென்னிந்திய சாப்பாடு. மனைவி குஜராத்திலேயே பிறந்து வளர்ந்த பெண். அவ்வப்போது பிராமண பாஷை எட்டிப்பார்த்தாலும் கணவனிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார். 'நமக்கு ஹிந்தி வர்ச்சுவலி வராது' என சிரித்தான் மகாதேவன்.
அடுத்த ஓரிரு வருடங்களில் நான் பஹ்ரைன் வந்துவிட, மகாதேவனுடன் அதிக தொடர்பு இல்லாமல் போனாலும் பஹ்ரைனில் இருக்கும் அவனது அண்ணன் Hariharan Viswanathanஹரியுடன் எனக்கு நல்ல நட்பு. கணபதிக்கும் ஹரி அண்ணா நல்ல நண்பர். எப்போதாவது ஈமெயிலில் மகாதேவனுடன் தொடர்பு இருந்தது. 'பொறந்தாலும், ஆம்பிளையா பொறக்கக்கூடாது' போன்ற சந்திரபாபு பாடல் கேட்கும்போது 'வர்ச்சுவலி' மகாதேவன் நினைவு தான் வரும்.
ஆறு மாதங்களுக்கு முன், பல வருடங்களுக்குப்பிறகு, மகாதேவனின் போன் நம்பரை சந்துரு கொடுக்க உடனே தொடர்பு கொண்டேன். மிகவும் சந்தோஷப்பட்டான். இரவு தொலைபேசியில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். INOX எனும் பன்னாட்டு நிறுவனத்தின் படோதா ஃபாக்டரியின் ஜெனரல் மானேஜர். நல்ல பதவி. ஃபேஸ்புக் அறவே பிடிக்காதாம். 'வெர்ச்சுவலி' டயமே இல்லையாம். ஆஹா அந்த 'வெர்ச்சுவலி'யை இப்பவும் கேட்க இனிமையாக இருந்தது. இன்றும் சந்திரபாபு பாடல்கள் கேட்பதுண்டாம். மகள் அமெரிக்காவில் படிக்கிறாளாம். அடுத்த மாத விடுமுறைக்கு இந்தியா போகும்போது இருவரும் அவசியம் சந்திக்கலாம் எனவும் முடிவானது.
பி.கு: மகாதேவனின் உடலை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க ஒரு மணி நேரமானது. நுங்கம்பாக்கம் சம்பவத்தினால் மன அமைதியின்றி தவித்த எனக்கு அடுத்த 10 நாட்களில் கிடைத்த அதிர்ச்சி செய்தி இது. 72 வயது மூத்த சகோதரர் மற்றும் நண்பர்களுடன் படோதா அருகில் நர்மதா ஆற்றின் 'சக்ரதீர்த் ghaat' டில் புனித நீராடும்போது, நண்பனை காப்பாற்ற நீரில் குதித்த, நீச்சல் தெரிந்த, எங்களுக்கு முன்பு நீச்சல் கற்றுக்கொடுத்த, bold personalityயான, அதிகம் பேசாத, மென்மையான, குஜராத்தி சக அலுவலர்களால் அன்போடு 'ஐயர் சாப்' என விளிக்கப்படும், 58 வயதே நிரம்பிய, எங்கள் ஆருயிர் தோழன் மகாதேவன் அந்த நண்பனுடன் சுழலில் சிக்கி சடுதியில் மறைந்தான். அந்த சில நிமிடங்களில் என்னென்ன நினைத்தானோ!
இரண்டு நாட்களாக கணபதியுடனும் சந்துருவுடனும் வெகுநேரம் மகாதேவனுடைய இறப்பைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நீச்சல் தெரிந்தவர்கள் எல்லோரும் மூச்சு பிடித்து டைவ் அடித்து தண்ணீருக்குள் போக முடியுமா? அதற்கென ப்ரத்யேக பயிற்சியெல்லாம் உண்டே! அதிலும் நர்மதா போன்ற மகாநதிகளில்! சொல்வது நமக்கு சுலபம். அந்த நேரத்தில் நண்பனையோ சகோதரனையோ காப்பாற்ற நாமும் அப்படித்தான் செய்திருப்போமோ என்னவோ!
'ஒன்னுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது...' மகாதேவனுக்கு பிடித்த சந்திரபாபு பாடல் இனி எனக்கு பிடிக்காது. அவனுக்கும்!