காலை 8
மணிக்கு சோம்பல் முறித்து படுக்கையில்
இருந்து எழலாமா வேண்டாமா என
யோசித்துக்கொண்டிருக்கும்போது,
ஹாலில் அப்பா சத்தமாக சிலோன்
ரேடியோ போட்டுவிடுவார். C.A . இன்டர்மீடியட் முடிந்து ஆர்டிகிள்சும் முடிந்து பைனலுக்கு படித்துக்கொண்டிருக்கும்
நேரம்..
சமையல்கட்டில்
அடுப்பில் இட்டிலி. அம்மா சட்டினி அரைத்துக்கொண்டிருந்தார்கள்.
சட்டினி என்றால் ஏதோ சுமீத்
மிக்சியில் என நினைக்க வேண்டாம்.
அம்மியில் தேங்கா சில்லு.. குழவியால்
இரு புறமும் மாறி மாறி
நச் நச்சென்று தேங்கா சில்லை சப்பையாக்கி
சர் சர்ரென்று அரைக்கும்போது பொட்டு கடலை, ப.
மிளகாய், புளி எல்லாம் கதறியபடி
விழுதாகி விடும்.செங்குத்தாக
குழவியை நிறுத்தி நொடியில் அதை நிர்வாணமாக்கி அம்மியில்
உள்ள சட்டினி விழுதை பாத்திரத்துக்கு
மாற்றி, தாளித்து சுருண்ட
கருவேப்பிலை சகிதம் கடுகு உ.பருப்பு கமகமவென
மனத்துடன் தேங்கா சட்டினி ரெடி.
ஒரு நாள் ப. மிளகாய்
என்றால் மறுநாள் வரமிளகாயில்
தேங்கா சட்டினி... மற்றொரு நாள் பச்சை
கொ.மல்லி போட்டு... இப்படி
தினமும் விதவிதமான சட்டினி வீட்டில்..
அதை சாப்பிடும் விதம் எங்கள் வீட்டில்
ஒவ்வொருவரும் ஒரு மாதிரி..
சன்னமாகவும்
இல்லாமல் திக்காகவும் இல்லாமல் அம்மா வார்க்கும் தோசையை
( சன்னமாக/திக்காக என்று தோசையை
சொன்னேன் .. அம்மாவை அல்ல)
அம்மாவுக்கு
அப்போது 55 வயதிருக்கும்.. அம்மியில் சட்டினி அரைக்க போதிய
பலமிருந்தது.
தோசைக்கு
வருவோம்..
என் தம்பி ரவி தோசையை
பக்கவாட்டில் இருந்து பிய்த்து சட்டினி
மேல் பரப்பி மடித்து வாயில்...
என் அக்கா இட்டிலி விள்ளலை
சட்டினி மேல் போட்டு உருட்டி
லேசாக பிசைந்து மறுபடியும் உருட்டி பிறகு வாயில்..(ஒரு கிண்ணம் சட்டினி
அவளுக்கு போதாது)
என் அப்பா ஏதோ 'இட்டிலிக்கும்
சட்டினிக்கும் சண்ட வந்துச்சாம்' போக்கில்
பேருக்கு தொட்டுக்கொண்டு ஒரு
fiduciary relation கொடுப்பார்.
முக்காவாசி
நேரம் அம்மா கடைசியாக சாப்பிடும்போது
அநேகமாக சட்டினி காலி... மிளகாய்
பொடி தான்.
ஹாலுக்கு
வருவோம்..
அப்பா அலமாரியில் பழைய
மர்பி ரேடியோ வைத்திருப்பார். அதற்க்கு
எர்த் கொடுக்க ஒரு சிறிய கண்ணாடி
கிளாசில் தண்ணீர் ஊற்றி ஒரு
ஒயரை நட்டு வைத்திருப்பார்.ரேடியோவில்
உருப்படியாக ஒரு ஒளிபரப்பை கேட்கமாட்டார். அதன்
முன் நின்றுகொண்டு மாறி மாறி எல்லா
ஒளிபரப்புகளையும் மாற்றி மாற்றி கேட்பார்.
நானும்
தம்பி ரவியும் ஹாலுக்கு வந்ததும்
சிலோன் ரேடியோவுக்கு மாற்றிவிடுவார்.
தம்பி ரவியைப்பற்றி ... திருச்சி நேஷனல் மாலை கல்லூரி..B
.Com மற்றும் ICWA வேறு.. நம்மைப்போல அவனும்
வெட்டி தான்....ஏன் என்று
ஒரு வார்த்தை அப்பா கேட்கமாட்டார்.அவர்
சட்டையில் வெறும் 10 ருபாய் இருந்தாலும் அதை
எடுத்துக்கொண்டு நானும் ரவியும் மன்னார்புரம்
வெங்கடேஸ்வரா தியேட்டரில் 'பலே பாண்டியா' போவோம்
(ரேய் ...ரேய்..ஒத்துரா.. என்று
அவர் கத்துவது தூரத்தில் கேட்கும்)
எங்கே விட்டேன்? ஹாங்... சிலோன் ரேடியோ...
இலங்கை
ஒலிபரப்பு வர்த்தக சேவை என
காலையில் தொடங்கி முழு நாளும்
(மாலையில் செய்திகள் வாசிப்பது செல்வராஜ், பொன்னருவி, jaroka,மற்றும் இரு விவிதபாரதி
தவிர) வீட்டில் ரேடியோதான் ..
'பிறந்த
நாள் ... இன்று பிறந்த நாள்..
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகளெல்லாம் மறந்த
நாள்'.... TMS இன் கணீர் குரல்..
அனேகம்பேருக்கு அது
எந்த படப்பாடல் என்று
தெரியாது.
'உறவு என்ற வானத்திலே நாம்
பறவையாகலாம்... உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்களாகலாம்' என்று நாம் மூவர்
படத்தில் TMS ஜெய் சங்கருக்கு பாடியிருப்பார் ..
'மாத்தளையிலிருந்து
அக்கா, அக்கக்கா... நுவரெலியாவிலிருந்து அப்பா, அப்பப்பா, வவுனியாவிலிருந்து
மதனி', என்று விதவிதமான உறவுக்காரர்கள்
விரும்பிக்கேட்ட பாடல்கள்..
சிலோன்
ரேடியோவில் மட்டும் தான் சில
பாடல்களை கேட்க முடியும். விவிதபாரதிக்காரர்களுக்கு
அப்படி ஒரு பாட்டு இருப்பதே
தெரியாதென நினைக்கிறேன்...
உதாரணத்திற்கு
சில:
1)முத்தமா....
கை முத்தமா... (TMS சுசிலா... படம்: விளக்கேற்றி வைத்தவள்)
2)இல் வாழ்வினிலே ஒளி ஏற்றும்
தீபமாய் (பராசக்தி: TS பகவதி, MH ஹுசைன்)
3)குளிர்ந்திடும்
ஓடையெல்லாம் தேனருவி கண்டதனால்.. (TMS... படம்
நினைவிலில்லை)
4)ஜிகு ஜிகு
ஜிகு ஜீயாலக்கடி ஜியாலோ (காத்தவராயன்: சந்திரபாபு,
ஜிக்கி)
5) ஒ வெண்ணிலா ..ஒ வெண்ணிலா …வண்ண
பூச்சூடவா ..வெண்ணிலா (ராணி சம்யுக்தா : TMS )
6) கொக்கர
கொக்கரகோ சேவலே... (TMS , ஜிக்கி... 'இரும்புத்திரை' என்று நினைக்கிறேன் )
விவிதபாரதிக்காரர்களுக்கு
ஒரு நாள் விட்டு ஒரு
முறை மன்னாதி மன்னன் சுசிலாவின் 'கண்கள் இரண்டும் இன்று
உன்னைக்கண்டு' போட்டுவிடவேண்டும்..
'நீயா'
படம் சூப்பர் ஹிட் ஆனதே நம்
KS .ராஜாவினால்தான்...
'நீங்க
யாரு' என்று ராஜாவே கேட்பார்
பதிலுக்கு ஏதோ படத்திலிருந்து 'ராஜா'
என்று வசனம் வரும்.
லலிதாவின்
பாட்டுக்கு பாட்டு... அடக்கமான ஆண் குரலில் அப்துல்
ஹமீது.
'வருவேன்
நான் உனது மாளிகையின் வாசலுக்கே....
ஏனோ அவசரமோ' ..பாடலில்
'ஏனோ' வுக்கு பதில் 'ஏதோ'
என்று சொல்லி விட்டதால் போட்டியிலிருந்து
விலக்கப்படுகிறீர்கள் ... தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?
(மனுஷனுக்கு பழைய பாடல்கள் அத்துப்படி)
மதியத்தில்
'ஹிந்திபாடல்கள்'.. என்று அறிவித்தவுடன் ஷம்மி
கபூர், ராஜ் கபூர்.பாடல்கள்..
ஜாபான்..(ஜப்பான் அல்ல) லே கை தில்….
குடியா .. ஜா..பானுக்கி..பாகல் முஜே கர்தியா..
பிறகு விளையாட்டு செய்திகள்..(மாத்தளை திடலில் கைப்பந்துப்போட்டி..)
அடுத்து
வருவது,.. நித்தி கனகரத்தினம் ...பொப்பிசைப்பாடல்கள்...
சின்ன மாமியே
உன் சின்ன மகளெங்கே
. .பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க சென்றாளோ.. .
(நம்ம ஊர் 'நித்தி' சின்ன
மகளை நிஜமாகவே தேடுவார்….வேணாம் வம்பு சார்...) ..
பாட்டி
வடை நரி பாடல்... (கடைசியில் இது இலங்கைக்காகம்
என சொல்லி வடையோடு காகம்
பறந்துவிடும்) . ,
ராஜேஸ்வரி
சண்முகமோ சச்சிதானந்தமோ .. , புவனசுந்தரி,
என்ற விதவிதமான அறிவிப்பாளர்கள்.. . .
பொங்கும்
பூம்புனல்... மறுபடியும் பழைய பாடல்கள்...
இரவு
10 மணிக்கு 'இரவின் மடியில்'....
அன்னை இல்லம்... மடிமீது தலை வைத்து
விடியும் வரை தூக்கமோ...
இதயக்கமலம்...
மலர்கள் நனைந்தன பனியாலே...
போலீஸ்காரன் மகள்...
பொன்னென்பேன்.. சிறு பூவென்பேன்...
கற்பகம்
... உன்னைக்காணாத கண்ணும்
கண்ணல்ல ...
மாறியது
நெஞ்சம் ...மாற்றியது யாரோ ( ப.
பா)
ஜானகியின்
'தூக்கமுன் கண்களை
தழுவட்டுமே' ....
ஆயிற்று....
30 வருடங்கள்...
சட்டினியும்
சிலோன் ரேடியோவும்
இன்னும் மறக்க முடியவில்லை...
ரேடியோவை
விடுங்கள்... போய் விட்டது.. ஆனால்
அந்த சட்டினி இன்னமும் திருச்சி
போனால் அம்மாவிடம் கிடைக்கிறது.. அதே சுவை... அதைவிட
மிகுந்த அன்புடன்..
.