Friday, April 19, 2013

கணபதி அக்ரஹாரம்


பால்ய நண்பன் கணபதி நான் திருச்சி வந்தது தெரிந்து சென்னையில் இருந்து டெலிபோன் செய்து தஞ்சாவூர் வந்துவிடும்படி சொன்னான்.உடனே பஸ் பிடித்து தஞ்சாவூர் கிளம்பினேன்
தஞ்சையில் இருந்து 15 கி.மி. தொலைவில் திருவையாறுக்கு அருகில் 'கணபதி அக்ரஹாரம்' என்றொரு சிறிய கிராமம்.
செல்போன் அலறியது “ஸ்ரீதரா! எங்கடா இருக்கே? நா அரியலூர் கிட்ட வந்துட்டேன்.. குமரேசன் டாக்ஸி வெச்சுண்டு அங்க வெயிட் பண்றான்."கணபதிக்கு எல்லாமே அப்டு டேட்டா இருக்கனும்.  
நான் தஞ்சாவூர் இறங்கி அய்யம்பேட்டை பஸ் பிடித்தேன். கூட்டம் குறைவு. 'ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊத கத்து அடிச்சிருச்சு' பாட்டு பஸ்ஸில் கேட்க இதமாக இருந்தது.( அவ்வளவு  சவுண்டு தேவையா?) கண்டக்டர் கத்தியது யாருக்குமே கேட்கவில்லை "யாருக்காவது சில்ற பாக்கியா?"  ம்ம்ஹும்..அநேகமாக எல்லோர் கையிலும் நோக்கியா.. கிராமத்து மக்கள் கைத்தொலைபேசியில்  பேசும் அழகே தனி.. "அளகேசா! ஆபரேசன் முடுஞ்சுதா? மயக்கங்குடுத்து தானே செஞ்சாக?..போன்ல பணத்த ஏத்தல. பொறவு பேசறேன்.." கிரெடிட் இல்லாதலால் மிகச்சுருக்கமாக பேசிய பெருசு கையில் சிறிய கருப்பான அழகிய நோக்கியா..SMS, CAMERA,GALLERY என்று சகட்டுமேனிக்கு அவர் பார்த்துக்கொண்டிருந்தது, ஐபோன் வைத்திருக்கும் எனக்கு கூச்சமாக இருந்தது.
மெயின் ரோட்டில் இறங்கி மஹாகணபதி கோவிலை  அடையும்போது நண்பன் கணபதி வந்து சேர்ந்திருந்தான். வீதிக்கு 50 வீடு வீதம் மொத்தம் 3 வீதி தான். சிவன் கோவில், பெருமாள் கோவில் மற்றும் மெயின் ரோட்டில் பெரிய மஹாகணபதி கோவில். திண்ணை, முத்தம், ரேழி, பட்டாசாலை, புழக்கடை சகிதத்துடன் நீண்ட வீடுகள். தினம் 8 மணி நேரம் மின் துண்டிப்பு இருப்பதற்கு அறிகுறியாய் பெருமாள் கோவிலில் இருந்து வருபவர்கள் எல்லோர் கையிலும் விசிறி..வெற்றுடம்பு..  ('உத்தமன் பேர்பாடி' ஜோக் நினைவுக்கு வந்தது).  அது அவர்களது சொந்த ஊர். கணபதியின் அப்பா G.K. ராமமூர்த்தி அங்கே நிலங்கள் வைத்திருந்தார். தானமாகவோ அடிமாட்டு விலைக்கோ நிலத்தை அங்கிருப்பவற்கு கொடுத்து விட்டு வீட்டை மட்டும் வைத்துகொண்டார். பிறகு திருச்சி பொன்மலை ரயில்வேயில் உத்தியோகம்  .. அவர் போன பின் கணபதிக்கு ஊரில் நல்ல மரியாதை. சில பேருக்கு பஹ்ரைனில் வேலை வாங்கி கொடுப்பதும், சிலருக்கு பண உதவி செய்வதும், குருக்கள் ஒருவரை காசி, கயா கூட்டிபோனதாலும், கோவிலுக்கு நிறைய நன்கொடை கொடுப்பதாலும், சென்ற வருடம் கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தியதாலும், அவனுக்கு அங்கே ராஜ மரியாதை.                 போனதும் தொண்டைக்கு இதமாக பானாகமும், நீர் மோரும் கொடுத்தார்கள். பிறகு நேரே மகா கணபதிக்கு வெகு அருகே அமர்ந்து பூஜை, முதல் மரியாதை சகிதம் அர்ச்சனை முடிந்து வெளியே வந்தோம். குருக்கள் வீடு பெருமாள் கோவில் தாண்டி நடக்கும் தூரம் தான். இரண்டு பொட்டலங்களில் 'மொதக்' (எண்ணையில் பொரித்த தேங்கா கொழுக்கட்டை)  கொடுத்தார்கள். வாசலில் பச்சை இளநீர் வெட்டி கொடுத்தார்கள். அங்கிருந்து நேராக சிவன் கோவில். குருக்களின் பையன் கார்த்திக் நம்மை வரவேற்று அர்ச்சனை செய்து தொன்னையில் சூடாக கோதுமை நெய்  உப்புமா கொடுத்தார். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்  முன் கார் டிக்கியில் ஒரு மூட்டை நிறைய உரித்த தேங்காய், முருங்கைக்காய் வைக்கப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரம் காரில் பயணம். அம்பாசிடர் கார் மிகவும் வசதியானது. பின் பக்கம் சம்மணமிட்டு உட்கார வசதி, முதல் 15 நிமிடம் முன்சீட்டில் இருந்த குமரேசனுடன் ஸ்டாலின்-அழகிரி பிரச்னை, கலைஞர் குடும்ப அரசியல், 16 மணி நேர மின் வெட்டு... விவாதித்து விட்டு,  கணபதியுடன், என் அம்மாவின் உடல் நிலை, கணபதியின் பஹ்ரைன் நண்பர்கள், அவன் மகன் விக்னேஷ் I .I .T. படிப்பு முடிந்து அமெரிக்கா செல்வது, நானும் கணபதியும் சேர்ந்து C .A  படித்த நாட்கள், அதே போல் தற்போது சென்னையில் அவனது இளைய மகனுடன் சேர்ந்து  C .A  படிக்கும் எனது மூத்த மகன் என்று நிறைய பேசினோம். வெளியே திருவையாறு, உமையாள்புரம், பாபநாசம் என்று ஒவ்வொரு ஊரும் இருட்டில் தெரிந்தது. கும்பகோணம் தாண்டியதும் 'ராஜு.. டிகாஷன் போட்ரு' என்று கணபதி போனில் அக்காவிடம் தெரிவித்து 10 நிமிடத்தில் கோவிந்தபுரம் வந்து சேர மணி இரவு 10 தாண்டியது. கோசாலை வந்து சேர்ந்தோம். .. மிக பிரம்மாண்டமான (வட நாட்டு கோவிலை நினைவு படுத்தும்) கோவில்  தாண்டி உள்ளே கணபதியின் அக்கா தங்கியிருக்கும்  காட்டேஜ் வந்தோம். மும்பை முலுண்ட் பகுதியில் அவர்கள் குடியிருந்தபோதே பல முறை அவர்கள் வீடு போயிருக்கின்றேன். காட்டேஜின் எதிரே கொட்டகையில் 500கும் மேலான பசு மாடுகள். மதுராவில் இருந்து நிறைய பசு மாடுகள் வந்து சேர்ந்தனவாம். பராமரிக்க பண உதவி மிகவும் தேவைப்படுகிறதாம்.  எங்களை வரவேற்று 5 நிமிடம் பேசியவுடன் சுடச்சுட ரவா தோசை தேங்கா சட்னி..பிறகு சூப்பரான பில்டர் காபி…அந்நேரத்தில் பசிக்கு அமிர்தமாக இருந்தது. சரியாக 10.30 க்கு அங்கிருந்து கிளம்பினோம்.               நேரே கும்பகோணம் பஸ் நிலையம். கணபதியிடம் விடை பெற்றுக்கொண்டேன். "புள்ளையார வேண்டிக்கோடா... எல்லாம் சரியாப்போய்டும்.. வருஷப்பிறப்புக்கு நாம மீட் பண்ணுவோம்னு எதிர்பாகவே இல்ல.."                                                              கணபதியுடன் இருந்த அந்த 5 மணி நேரம் போதும்.. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்த மாதிரி இருந்தது. கடந்த 33 வருட நட்பு, சேர்ந்து இருந்த 5 வருட பாம்பே வாழ்க்கை, தான் பஹ்ரைன் வந்து என்னையும் சேர்த்துகொண்டது, எங்களின்12 வருட பஹ்ரைன் நாட்கள்...    பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த  திருச்சி பஸ்ஸை நிறுத்தி ஏறி அமர்ந்தேன். கடந்த 15 நாட்களின் நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
82 வயதில் அம்மாவிற்கு திடீரென்று  (35, 40 வயது பெண்களுக்கு வரும்) உடல் உபாதை, கர்ப்பப்பை கட்டி, oncology ரிப்போர்ட், புற்று நோய், histrectomy, இத்யாதி ….     " இந்த வயசுக்கு சர்ஜரி ரொம்ப ரிஸ்க் தான் சார்.. ஆனா பாட்டி தைரியமா இருக்காங்க.. சான்சு எடுக்கலாம்.." என்று 10 நாட்கள் உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூக்கமில்லாமல் கூட இருந்து உதவிய என் அக்கா, அவளது கணவர் டாக்டர் மனோகர், கொஞ்சமும் பயமே இல்லாமல் சிரித்த  முகத்துடனே மரணத்தை எட்டிப்பார்த்து மறுவாழ்வு பெற்ற என் அம்மா... கடந்த 15 நாட்கள்  ATM,வங்கி, பார்மசி, ஆபரேசன் தியேட்டர், வார்டு,  என்று ஒரு புது உலகத்தில் இருந்து விட்டு, 16 வது நாள் வருஷபபிறப்பன்று அன்று பால்ய நண்பனுடன்  தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரம் மகா கணபதியை தரிசித்ததும்  உடம்பிலும் மனத்திலும்  ஒரு  புதிய சக்தி கிடைத்த மாதிரி இருந்தது.
மணி காலை 1.15.. பஸ் திருச்சி ஜமால் முகமது கல்லூரி டோல்கேட் ஸ்டாப்பில் நின்றதும் இறங்கினேன். வெளியே தூறல் நின்றிருந்தது (உள்ளேயும் தான்)
நாளை மறுபடியும் பஹ்ரைன் சென்று 10 நாளில்  திருச்சி வரவேண்டும்..அம்மாவிற்கு அடுத்து  ரேடியேஷன் தெரபி செய்ய வேண்டுமாம்..           ,