Thursday, November 21, 2013

ஆவேரெஜ்…


திருச்சி பெரிய மார்க்கெட் வளைவில் ஆரம்பித்து அப்பாய் மளிகை, பார்மசிகள், இரும்புக்கடைகள், மிட்டாய் கடைகள், வங்கிகள், ஜானகிராம், பாட்டா செருப்புக்கடை,.. கடைசியில் கிருஷ்ணா ரெடிமேட்சில் முடியும் பெரிய கடை வீதியில் உள்ளது எங்கள் ஆபிஸ்.   ஜாபர்ஷா தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் கீழே போட்டோ பிரேம் கடை. முதல் மாடியில் பில்டிங் ஓனர் வீடு. இரண்டாவது தளத்தில் எங்கள் ஆபீஸ். சய்யத் & செல்வகுமார், சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் இல் தான் நான் CA படிக்க ஆர்டிகில்ஸ் சேர்ந்தேன். ஆடிட்டர் குமாரராஜ்க்கு அப்போது 30 வயதுக்குள் இருக்கும். CA பாஸ் செய்தவுடன் அந்த ஆபீசை துடங்கினார். சில வருடங்கள் கழித்து என்னை தனது முதல் ஆர்டிகிள்ட் கிளேர்க்காக சேர்த்துக்கொண்டார்.   
தெலுங்குக்காரர். ஆளும் பார்க்க தெலுங்கு பட ஹீரோ மாதிரி இருப்பார். எப்போதும் முழுக்கை சட்டை, பெரிய பெல்பாட்டம் பேன்ட், ஷூ, நீளமான தலைமுடி, கூலிங் கிளாஸ், விரல்களுக்கிடையே சிகரெட் என்று பந்தாவுடன் விஜய்பாபு மாதிரி வலம் வருவார். எனக்கு தூரத்து உறவுஎன் அப்பா கோ-ஆபரேடிவ் டிபார்ட்மெண்டில் தணிக்கை துறை அதிகாரி. லஞ்சம் வாங்காமல் இருந்தது பெரிதில்லை. வரும் லஞ்சங்களை உதறிதள்ளி அதனால் கெட்ட பெயர் வாங்கி, நிறைய இடங்களுக்கு பந்தாடப்பட்டு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலேயே ஓய்வு பெற்றவர். ஆடிட்டரிடம் என்னை சேர்ப்பதற்கு  பிரீமியம் ரூபாய் 3000 கொடுக்க என்  அம்மாவின் நகையை அடகு வைத்து அந்த ரூபாய் நோட்டுக்களின் நம்பரை பேப்பரில் குறித்துக்கொண்டு (அவரும் ஆட்டீட்டராயிற்றே) குமாரராஜிடம் கொடுத்து என்னை CA  சேர்த்தார். .  

ஆடிட்டர் வீடு பக்கத்தில் சமஸ்பிரான் தெருவில். ராக்சி, வெலிங்க்டன் பின்புறம் சினிமா வளாகத்தை ஒட்டிய ஸ்டோர் வீடு. சுமார் 10 குடித்தனங்கள் அங்கே அவர்களிடம் வாடகைக்கு இருக்கிறார்கள்.  ஏதாவது 'குடியிருந்த கோவில்' மாதிரி பட வசனங்கள் அவர்கள் வீட்டு அடுக்களையில் கேட்கும். பண்டரிபாய் பேசும் 'என்ன கட்டிக்குடுத்த மறுவருசம் நீங்க ஒட்டிப்பிறந்த ரெட்டக்குழந்தைங்க.. உங்கள வெட்டிப்பிரிச்சு கட்டிக்காத்து வளத்த நான் விட்டுப்பிரிஞ்சு இனி வாழ முடியாதுப்பா ' என முழு நீள வசனம் கேட்கலாம்ஆடிட்டர் குமார்ராஜ் காலை 10.30 மணிக்கு கமகமவென சென்ட் போட்டு வருவார். உடனே இன்கம்டாக்ஸ் அலுவல் நிமித்தம் வெளியே கிளம்பி விடுவார். நான், அருண்மொழி, ரமேஷ்பாபு மூன்று பேர் மட்டும் ஆபிசில் இருப்போம். காலை முதல் மாலை வரை வெறும் அரட்டை தான். ரமேஷ் மதுரைக்காரன். அருண்மொழி பெரம்பலூர் பக்கம் செந்துரை. கொஞ்சம் கோபக்காரன். தப்பு செய்தால் தட்டி கேட்பான். பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் தலைவராக இருந்து எல்லோரையும் கதி கலங்க வைத்தவன். பி. எஸ்சி. யில் 80%க்கும் மேல் மார்க்கு வாங்கி CA  படிக்க வந்தவன். படு ஷார்ப்.  சப்ஜெக்டுகளில் டவுட் இருந்தால் ஒரு பேப்பரை எடுத்து "அது வந்து மாப்ள!" என ஆரம்பித்து   வட்டம் சதுரம் எல்லாம் வரைந்து எழுதி, விளக்கி  முடித்த கையேடு ஒரு வில்ஸ் பில்டரை பத்தவைப்பான். CA முடித்து பெங்களூரில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் இன்டெர்னல் ஆடிட்டராக சில வருடங்கள் இருந்துவிட்டு 15 வருடங்களுக்கு மேலாக தற்போது சிங்கப்பூரில் இருக்கிறான். 

மெதுவாக ஆடிட்டரின் நண்பர்கள் ஜெயப்பிரகாஷ், அய்யப்பன் என்று கூட்டமாக வருவார்கள். ஒரே அரட்டை.. சிரிப்பு. BE படித்திருந்தாலும் அவர்கள் சேர்ந்து சினிமா டிஸ்டிரிபியூஷன் தொழில் செய்பவர்கள். . எப்போதும் சினிமா பற்றி பேச்சு, விமரிசனம் தான். ஜெயப்ரகாஷ் திருச்சி REC யில் படித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் கணிதம் டியூஷன் எடுப்பவர். நடுநடுவே எங்களிடம் வந்து 'நீ என்னா எழுதறே? 'செக்கூஸ் issued but not presented'... என படிப்பார். அருண்மொழி பல்லை கடிப்பான். “செக்கூசாவது கக்கூஸாவது... அது cheques டா தடியா”.அய்யப்பனுக்கு உச்சந்தலை முழுக்க  வழுக்கை.. பக்கவாட்டில் மட்டும் சுருள் சுருளாக முடி... சுருக்க சொன்னால் 'ஆதினம்' போல் இருப்பார். 
நாங்கள் மூவரும் அவர்களை வேடிக்கை பார்த்தபடி வேலை(இருந்தால்) செய்வோம். ஜெயப்பிரகாஷுக்கும் அய்யப்பனுக்கும் அடிதடிதான் பாக்கி.  ஏன் பாக்கியராஜ் இன்ன படத்தில் அந்த வசனத்தை எழுதினார் என ஜெயப்ரகாஷ் புட்டு புட்டு வைக்க, அய்யப்பன், கல்லுக்குள் ஈரத்தில் கடைசி சீன் பாரதிராஜா எதை மனதில் வைத்து முடித்தார் என ஏதோ பாரதிராஜாவே இவர்களிடம் கேட்டு முடிவு செய்த மாதிரி விவாதிப்பார்கள்.  அந்த 7 நாட்கள் கடைசி சீன் பற்றி ஒருவாரம் டிஸ்கஷன்.  நடுவே ஒரே சண்டை, கத்தல்,வாக்குவாதம் நடக்கும்.

சுமார் 11 மணியளவில் நாங்கள் மூவரும் காபி குடிக்க கிளம்புவோம். கீழே இறங்கினால் 10க்கு 10 சதுர அடியில் ஒரு காபி கடை. சரியான கூட்டம். அந்த ஏரியாவே  போண்டா வாசனை தூக்கும். வெற்றுடம்புடன் பூணூல், காசி துண்டு சகிதம் மணி அய்யர். .. நொடிக்கொருதரம் துண்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து தோளில்  போட்டுக்கொள்வார். சிறிய டம்ளரில் டிகாஷனை எடுத்து 3 டபராவில் ஒரே அளவாக கொட்டி, சூடான பாலை கலக்கி டபரா மேல் ஊற்றி நுரையுடன் அவர் கொடுக்கும் கள்ளிசொட்டு காபி தேவாமிர்தமானது. எட்டில் ஒரு பகுதியாக கிழிக்கப்பட்ட தினத்தந்தி பேப்பரில் சுற்றிய போண்டாவுடன் காபியை குடித்து விட்டு மேலே ஆபிசுக்கு போவோம்.

ஆபிஸ் அங்கே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது.   காச் மூச்சென்று சத்தம். "ஒடம்புல ஒண்ணுமே இல்லாம பாரதிராஜா எப்பிடி  கார்த்திக்,ராதாவ  மலர் படுக்கைல போட்டு அந்த சீன எடுக்கலாம்?" என ஐயப்பன் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான் . "அட  கசு மாலமே.. .. பாரதிராஜாவே ஒன்னும் போட்டுக்கலையா?" என காதருகில் வந்து கேட்ட அருண்மொழியை 'சும்மா இருடா' என  நான் அதட்ட, மறுநிமிடம்  சிரிப்பை அடக்க முடியாமல் அருண்மொழி " எலேய் இவனுங்களுக்கு பொண்டாட்டி புள்ளைங்களே கெடயாதா. பொழுதன்னைக்கும் அந்த பாழாப் போன சினிமா பேச்சு தானா?" என  அங்கலாய்த்துக்கொண்டான் . அடுத்த சில மாதங்களில் 'காதல் ஓவியம்' விநியோக உரிமை எடுத்து ,படம் ஊத்திக்கிட்டவுடன் எல்லோரும் குடியில் மூழ்கினார்கள்.

மணி மதியம் 12 ஆனதும் 'ஸ்ரீதர்! மோர் சொல்லுங்க' என அந்த கூட்டம் சொன்னதும் பால்கனிக்கு ஓடி அங்கிருந்து கை தட்டி சைகை மூலம் எதிர் ஹோட்டலுக்கு ஆர்டர் கொடுத்த சில நிமிடங்களில் கருவேப்பிலை மணக்க ஜில்லென மோர் வந்ததுநீர்மோர் குடித்தபின் ஒருவழியாக அந்த சினிமா கும்பல் போனதும் லஞ்சு டப்பாவை திறந்தோம்.

4 மணிக்கு ஆடிட்டர்  கமகம சென்டுடன் அவசரமாக வந்தார். St ' Joseph 's   மற்றும் உருமு தனலக்ஷ்மி கல்லூரிகளில் B.Com  மாலை வகுப்பு பாடம் எடுக்க அவசரமாக ஓடினார். "அவ்வள அவசரத்திலும் சென்ட்டு போட்டுக்காம போக மாட்டாரு தொர ... பொண்ணுங்களுக்கு இல்ல கிளாஸ்  எடுக்கறார்" என்ற  அருண்மொழியின்  கமெண்ட்  அவருக்கு  கேட்டிருக்க வாய்ப்பில்லை. .

எப்படியோ ஜமால் முகமது காலேஜ் ப்ரொபசர் சுபான்கானிடம் அக்கவுன்ட்ஸ் மற்றும் செயின்ட் ஜோஸெப்ஸ் குப்புசாமியிடம் மேத்ஸ் டியூஷன் போய் இன்டர்மிடியட் பாஸ் செய்து பாம்பே பக்கம் போய் விட்டேன். அடுத்த சில வருடங்களில் ஃபைனல் பாஸ் செய்து நான் அருண்மொழி எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் சிதறிவிட்டோம்.

1991ல் ஒருமுறை திருச்சி வரும்போது ஆடிட்டரை பார்க்கலாம் என்று போனேன். அதே ஆபீஸ். நிறைய சின்ன பையன்கள் ஆர்டிகில்ஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். நம்மை பார்த்ததும் 'வாங்க.. ஸ்ரீதர்' என வரவேற்றார். அடுத்து எல்லா பசங்களையும் பார்த்து 'இவரு தாங்க ஸ்ரீதர்.. நம்ம பர்ஸ்ட் ஆர்டிகில்ட் க்ளார்க்…CA பாஸ் பண்ணிட்டு பாம்பெல வேல’ என ஒரு இன்ட்ரொ கொடுத்தார்எனக்கு ஒரே பெருமிதம். அடுத்து என்ன சொல்லப்போறார் என ஆவலாய் அவரை பார்த்த என் தலையில் இடி விழுந்தது.

"இவரெல்லாம் ரொம்ப ஆவரேஜ் தான்.. இவரே CA பாஸ் பண்றப்ப உங்களுக்கெல்லாம் என்ன கவல" என அவர் தன் ஸ்டூடண்ட்ஸை பார்த்து கேட்க அத்தனை பேரும் (ஒன்றிரண்டு பெண்கள் உள்பட) எல்லோரும் என்னை தீர்க்கமாக பார்த்தார்கள். தலை முதல் வரை கால் வரை கூசி குறுகி அங்கே உட்கார முடியாமல் நெளிந்தேன். அதில் ஒரு பையன் (நேமி குமார்) பிறகு all india 3rd ராங்க் வாங்கினவன். விடை பெற்றுக்கொண்டு முகம் சிறுத்து அவமானத்துடன் வெளியே வந்தேன். ரோட்டில் எனக்கு எதிரே தெரிந்தவர்கள் சிலர் 'என்னப்பா எங்க இருக்க' என கேட்டது கூட காதில் விழவில்லை. "ச்சே... எதுக்கு ஆடிட்டர பார்க்க வந்தோம்னு இருந்தது.

சோகமாக வந்து கொண்டிருந்த என் முகம் திடீரென பளிச்சென ஆனது. கமகமவென பக்கோடா வாசனை... மணி அய்யர் கடை…அதே கூட்டம். அதே பழைய மேசையின் பின்னால் நின்றுகொண்டு அவர் டோக்கன் கொடுத்துக்கொண்டிருக்க அவரது பையன் காபி கலக்கிக்கொண்டிருந்தான்.   . 'வாங்க தம்பி.. ரொம்ப நாளாச்சு.. இப்ப எங்கே ஜோலி?" என விசாரித்தார். நான் தற்போது பாம்பேயில் இருப்பாதாகவும் பாஸ் செய்து விட்டதாக சொன்னதும் " ரொம்ப கஷ்டப்பட்டு உங்கப்பா படிக்க வெச்சார்ரொம்ப சந்தோஷம்ப்பா.. டேய் சீனு! தம்பி நம்ம ஆடிட்டர் ஆபீஸ்ல இருந்தார். இப்ப இவரும் ஆடிட்டர் ஆயிட்டார்." என தன் பையனிடம் சொல்லியவாறே நல்ல காபி ஒன்னும் கொடுத்தார்மணி அய்யரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பும்போது மனசு லேசானது போன்ற உணர்வு.

சைக்கிளை தள்ளி ஏறி உட்கார்ந்து பெடலை மிதிக்கும்போது நம்மை தாண்டி ஆட்டோவில் ஆடிட்டர் குமார்ராஜ் போய்க்கொண்டிருந்தார். ஆட்டோ பின்னால் சென்ட்டு வாசனை காற்றில்...